World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : மலேசியா

Continuing media silence on the fate of flight MH17

MH17 விமானத்தின் கதியைக் குறித்து ஊடகங்களின் மவுனம் தொடர்கிறது

By Stefan Steinberg
29 August 2014

Back to screen version

ஒருசில விதிவிலக்குகளைத் தவிர, சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர் உக்ரேனில் வெடித்து சிதறிய மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமானத்தின் கதியைக் குறித்து சர்வதேச ஊடகங்கள் ஒரு மவுனப்போர்வையைப் போர்த்தியுள்ளன.

ஜூலை 17இல் அந்த விமான நொறுங்கியதற்குப் பின்னர் உடனடியாக, முன்னணி அமெரிக்க அதிகாரிகள், வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி முன்னிலையில் இருக்க, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் பிரிவுகளோடு சேர்ந்து, கிழக்கு உக்ரேனில் செயல்பட்டுவரும் ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளால் செலுத்தப்பட்ட ஒரு ரஷ்ய ஏவுகணையாலேயே அந்த பயணிகள் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டினார்கள். முற்றிலும் அடித்தளமற்ற அந்த குற்றச்சாட்டுக்கள், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்த தடைகளை நியாயப்படுத்துவதற்காக ஒரு வெறித்தனமான அரசியல் சூழலை உருவாக்க அப்போது பயன்படுத்தப்பட்டு இருந்தன.

அந்த விபத்திற்குப் பின்னரிலிருந்து, அதனோடு சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியிடுவதை மேற்கத்திய அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதித்துள்ளனர். அத்தகைய விசாரணைகளை மேற்கொண்டு வரும் தோச் புலனாய்வாளர்கள் இம்மாத தொடக்கத்தில், “ஒருசில வாரங்களில்" ஒரு பூர்வாங்க அறிக்கை வெளியிடப்படுமென்று அறிவித்திருந்தார்கள். இப்போது, இம்மாதம் முடிய ஒருசில நாட்களே இருக்கின்ற நிலையில், அதுபோன்ற எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கருப்புப்பெட்டி மற்றும் அவர்களிடம் இருக்கும் இதர ஆதாரங்களிலிருந்து டச் அதிகாரிகளுக்கு ஏற்கனவே பரந்த தரவுகள் கிடைத்துள்ளன என்று பயங்கரவாதத்திற்கு எதிரான டச் ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்ற உண்மைக்கு இடையே இது இவ்வாறு உள்ளது.

அந்த விபத்தின் மீது மவுனம் இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள ஒரு கட்டுரை ஜேர்மன் இதழான Der Spiegelஇல் சமீபத்தில் வெளியானது.

அந்த வெடிப்பிற்காக ரஷ்யாவைக் குற்றஞ்சாட்ட அமெரிக்க தலைமையிலான பிரச்சார நடவடிக்கையில் குறிப்பாக அந்த இதழ் ஒரு கீழ்தரமான பாத்திரம் வகித்துள்ளது. Der Spiegel அதன் ஜூலை 28ஆம் தேதி பதிப்பின் அட்டையில் "புட்டினை இப்போதே நிறுத்துக!" என்ற சிவப்புநிறக் கொட்டை எழுத்துக்களோடு, MH17இல் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்களைப் பிரசுரித்திருந்தது. அதன் சமீபத்திய பதிப்பில், அப்பத்திரிகை ஜேர்மன் இராணுவத்தின் நிலையைக் குறித்து நீலிக்கண்ணீர் வடித்தும், இராணுவத்தை அதிகளவில் அனுப்புவது குறித்து வாதிட்டும் ஜேர்மன் இராணுவவாதத்தின் பதாகையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது.

இருந்தபோதினும், அந்த விபத்து குறித்து புலனாய்வாளர்களின் மர்மமான மவுனம்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், அப்பத்திரிகை வாஷிங்டன் மற்றும் புருசெல்ஸால் முன்வைக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வாதங்களின் மீது சந்தேகத்தை எழுப்ப அங்கே நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்று குறைபட்சமாக குறிப்பிடவும் மற்றும் ஓரளவிற்கு பின்வாங்கவும் முயல்கிறது. அக்கட்டுரை ஒரு முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் குழுவால் ஜூலை இறுதியில் பராக் ஒபாமாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. விஐபி'கள் என்று அறியப்படும் அக்குழு, அக்கடிதத்தில், அந்த விமானவெடிப்பைப் பயன்படுத்தி ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சித்தமைக்காக வெளியுறவுத்துறை செயலர் கெர்ரியைக் குற்றஞ்சாட்டியதோடு, இரசாயன ஆயுத தாக்குதல்களுக்கு சிரியா தான் பொறுப்பு என்ற வாதங்கள் போன்ற ஒபாமா நிர்வாகத்தின் ஏனைய அப்பட்டமான தூண்டுதல்களையும் நினைவுபடுத்தி இருந்தது. அந்த விஐபி'களின் கடிதத்தில் இருந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஒபாமா நிர்வாகம் எந்தவொரு விடையிறுப்பும் காட்டவில்லை.

அதன் பின்னர் Spiegel கட்டுரை மலேசிய செய்தித்தாள் New Straits Timesஇன் செய்திகளை மேற்கோளிட்டு நகர்கிறது, அது அந்த வெடிப்பிற்கு உக்ரேனைப் பொறுப்பாக்கி குற்றஞ்சாட்டுகிறது, ஒரு இதழாளர் எழுதியிருந்ததை அக்கட்டுரை மேற்கோளிட்டிருந்தது: “உலகின் மிக நவீன மற்றும் தொலைதூரத்தையும் உளவுபார்க்கும் தகைமைகளோடு மேற்பார்வையிட்டு வருவதாக அறியப்படும் ஒரு நாடு, அதன் கொள்கை முடிவுகளை நியாயப்படுத்த தெளிவற்ற யூடியூப் வீடியோக்களை மேற்கோளிடுவதில் மூழ்கி இருப்பதென்பது கேலிக்கூத்தாக இருக்கிறது."

அந்த வெடிப்பு சம்பவத்தின் விபரங்கள் குறித்து டச் அதிகாரிகளிடம் ஏற்கனவே கணிசமான தகவல்கள் இருக்கின்றன என்பதோடு அவற்றை அவர்கள் ஜேர்மனில் உள்ள அவர்களது சம-அந்தஸ்து அதிகாரிகளோடு சந்தேகத்திற்கிடமின்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட Spiegel கட்டுரை, அந்த கருப்பு பெட்டி பதிவுகள் இதுவரையில் முழுமையாக திறக்கப்படாமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று எச்சரித்தது. அந்த பெட்டியிலிருந்து ஆதாரங்களை வெளியிடாமல் நிறுத்தி வைப்பதற்கு அங்கே ஏற்புடைய சட்ட அடித்தளங்கள் இருப்பதாக சமீபத்தில் அந்த டச் புலனாய்வு குழு அறிவித்திருந்தது.

MH17இன் கதியைக் குறித்த பிரச்சினையை ஊடகங்கள் எழுப்பத் தவறியிருப்பதானது, திங்களன்று, அந்த விமானத்தின் கருப்புப்பெட்டி தகவல்கள் ஏன் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்று கேள்வி எழுப்ப ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வைத் தூண்டிவிட்டிருந்தது. ரஷ்யாவைத் தவிர, “மற்ற அனைவரும் அந்த புலனாய்வில் ஆர்வம் இழந்திருப்பதாக தெரிகிறது," என லாவ்ரோவ் தெரிவித்தார்.

அருகிலிருந்த தினெப்ரொபெட்றோவ்ஸ்க் விமானநிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையில் நடந்த உரையாடல்களின் பதிவுகளை ஏன் உக்ரேன் இதுவரையில் வழங்கவில்லை என்றும் லாவ்ரோவ் கேள்வி எழுப்பினார். MH17 விமான ஓட்டிக்கும் உக்ரேனிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையிலான உரையாடல் பதிவுகளை வெளியிட இதுவரையில் கியேவ் உறுதியாக மறுத்து வருகிறது.

சர்வதேச பயணிகள் விமானச்சேவை கழகம், ஐக்கிய நாடுகள் விமானச்சேவை நிறுவனம் ஆகியவற்றை ரஷ்யா தொடர்பு கொண்டிருப்பதாகவும், அந்த வெடிப்பு குறித்து அதன் சொந்த தகவல்களை வழங்க அது தயாராக இருப்பதை அவற்றிற்கு அறிவித்திருப்பதாகவும் குறிப்பிட்ட லாவ்ரோவ், ஆனால் "இதுவரையில் அத்தரப்பில் எதுவும் வெளிப்படையாக இருப்பதாக தெரியவில்லை" என்றும் குறிப்பிட்டார்.

லாவ்ரோவ் இறுதியாக இவ்வாறு முடித்தார்: “பெப்ரவரியில் கியேவ் மக்களுக்கு எதிரான இரகசிய தாக்குதல், மே மாதம் ஒடெஸ்சா மற்றும் மரியுபோலில் நடந்த படுகொலைகள், மற்றும் ஏனையவை உட்பட, பல உக்ரேனிய துயரங்கள் மீதான புலனாய்வுகளில் ஏற்கனவே நடந்ததைப் போல MH17 வெடிப்பு விசாரணையில் மோசடி செய்ய நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை," என்றார்.

ரஷ்யா உடனான ஒரு மோதலுக்கு நிலைமைகளை உருவாக்க, MH17 வெடிப்பைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா வகித்த முன்னணி பாத்திரத்தை மனதில் கொண்டு, வாஷிங்டனில் உள்ள நிர்வாகமும் மற்றும் அமெரிக்க உளவுத்துறை சேவைகளும் டச் அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கின்றன என்பதோடு, ஜூலை 17இல் உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மையை மூடிமறைக்கும் முயற்சிகளில் அவர்கள் உடந்தையாய் இருக்கிறார்கள் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இருக்க முடியாது.