World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈரான்

Iran makes sweeping concessions to US in nuclear “framework” deal

அணுசக்தி "கட்டமைப்பு" உடன்படிக்கையில் ஈரான் அமெரிக்காவிற்கு பெரும் விட்டுக்கொடுப்புகளை அளிக்கிறது

By Keith Jones
3 April 2015

Back to screen version

ஐ.நா பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் அத்துடன் ஜேர்மனியும் சேர்ந்த P-6 எனப்படுவதும் மற்றும் ஈரானும், ஈரானிய படைத்துறைசாரா அணுசக்தி திட்டத்தை "வழக்கமானதாக" ஆக்கும் ஓர் உடன்படிக்கைக்குரிய "வரையறைகளை" இறுதி செய்துவிட்டதாக வியாழனன்று அறிவித்தன.

எட்டு நாட்கள் சூடான பேரம்பேசல்களுக்கு பின்னர், அப்போது அமெரிக்கா இரண்டு முறை பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக அச்சுறுத்தியிருந்த நிலையில், நேற்று எட்டப்பட்ட அந்த உடன்படிக்கை ஜூன் 30க்கு முன்னர் ஓர் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு அடித்தளங்களை அமைக்கும்.

ஓர் இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டால், மத்திய கிழக்கில் அமெரிக்காவினது செயல்பாடுகளுடன் ஈரானை இன்னும் நெருக்கமாக வரிசையில் கொண்டு வருவதற்கான அதன் முயற்சிகளுடன் சேர்ந்து, அமெரிக்க-ஈரானிய உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும். அதே நேரத்தில் ஈரான் மீது கடுமையான தடைகளை நிறுத்துகின்ற அந்த உடன்படிக்கை, எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க ஆதரவிலான போர் முனைவை மீண்டும் தொடங்குவதற்குரிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.

அந்த உடன்படிக்கையில் வரையறைகளை விவரிக்கின்ற அமெரிக்க விபரக்குறிப்புகளின் முதல் பத்தி, “நடைமுறைபடுத்துவதற்கான முக்கிய விபரங்கள் இன்னும் பேச்சுவார்த்தைகளில் இருப்பதாகவும், அனைத்தும் ஒப்புக்கொள்ளப்படும் வரையில் எதுவும் ஒப்புக்கொண்டதாக ஆகாது,” என்றும் குறிப்பிடுகிறது. அந்த நான்கு பக்கங்களைத் தொடர்ந்து, ஈரானின் மதகுருமார்கள்-முதலாளிமார்கள் ஆட்சியின் பாகத்தில் பெரும் விட்டுக்கொடுப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அவற்றில் உள்ளடங்குபவை:

* சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் (IAEA) மிகவும் நுட்பமான சோதனைகளுக்கு எப்போது வேண்டுமாயினும் உட்படுமாறு கீழ்படிய செய்கிறது. IAEA ஆய்வாளர்கள் நிலையான "சந்தேகத்திற்குரியமாக" கருதும் எந்தவொரு ஈரானிய ஆலைக்குள்ளோ அல்லது அமைப்பிற்குள்ளோ நுழைய அவர்கள் வரம்பில்லா அதிகாரம் கொண்டிருப்பார்கள்.

* ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தகைமையை மற்றும் அதன் செறிவூட்டப்பட்ட யுரேனிய சேமிப்புகிடங்குகளைப் பெருமளவிற்குக் குறைக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, ஈரான் அதன் 19,000 அணுபிளப்பான்களில் (centrifuges) வெறும் 5,060ஐ மட்டுமே செயல்படுத்த அனுமதிக்கப்படும் என்பதோடு, அவ்வாறு செயல்படுத்தப்படுபவையும் "முதல் தலைமுறையினதாக", அதாவது வெகு வெகு மெதுவாக செயல்படக்கூடியவையாக இருக்க வேண்டும்.

* ஈரானின் படைத்துறைசாரா அணுசக்தி உள்கட்டமைப்பின் பெரும்பாலானவற்றை அகற்றிவிட வேண்டும். ஈரானின் Arak கனநீர் ஆராய்ச்சி அணுஉலையில் உள்ள கனரக அணுஉலைக்கூடத்தின் மையப்பகுதி "அழிக்கப்பட வேண்டும் அல்லது அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்", அத்துடன் ஆயுதங்கள் தயாரிக்க உகந்த புளூட்டோனிய உற்பத்தியைத் தடுக்கும் பொருட்டு, அந்த அமைப்பு மீள்வடிவு செய்யப்பட்டு, மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டும்.

2011இல் இருந்து ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதியாக குறைத்துள்ளதும் மற்றும் உலக வங்கியியல் அமைப்புமுறையிலிருந்து அதை வெளியே நிறுத்தி உறைய செய்துள்ளதுமான, தண்டிக்கும் வகையிலான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் "தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்"—அதாவது நிரந்தரமாக நீக்கப்படாது. அனைத்தினும் மேலாக, அந்த உடன்படிக்கையில் உடனடியாக ஏற்புடைய அனைத்து பகுதிகளின் மீதும் ஈரான் சிறப்பாக நடந்து கொண்டால் மட்டுமே, அவர்களின் அந்த தற்காலிக தடையாணை நிறுத்தம் தொடங்கப்பெறும்.

அந்த உடன்படிக்கையின் ஏதேனும் ஒரு அம்சத்திற்கு ஈரான் இணங்காமல் இருப்பதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எப்போதேனும் அறிவித்தால், அந்த "தடைகள் மீண்டும் அதன் பழைய இடத்திற்கு கொண்டு வரப்படும்.”

ஈரான் அணுசக்தி பிரச்சினை மீது ஐநா பாதுகாப்பு அவை தீர்மானங்கள் நீக்கப்படுவதற்கு முன்னால், தெஹ்ரான் முன்பினும் கூடுதலாக கடினமான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். மேலே விவரிக்கப்பட்ட "முக்கிய அணுசக்தி நடவடிக்கைகளை" ஈரான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல, மாறாக அது அதன் அணுசக்தி திட்டத்தின் "சாத்தியமான இராணுவ பக்கங்கள் (PMD) குறித்த IAEA இன் கவலையும்" போக்க வேண்டும். ஈராக்கிடம் பாரிய பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதை சதாம் ஹூசைன் நிரூபிக்க வேண்டுமென கோரி, இதே சாதனத்தைத் தான் அமெரிக்கா அவருக்கு எதிராக பயன்படுத்தியது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சர்வதேச அமைப்பான IAEAஐ திருப்திப்படுத்தும் வகையில் PMD பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும் கூட, தண்டிக்கும் வகையிலான அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகளை விட, ஈரானை இலக்கில் வைக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள், யதார்த்ததில், திரும்பப் பெறப்படாது. “நுட்பமான தொழில்நுட்பங்களை" ஈரான் அணுகுவதை தடுக்கும் மற்றும் தண்டிக்கும் முறைமைகளின் ஒரு தொகுப்பை வழங்கும், "ஐநா பாதுகாப்பு அவை தீர்மானங்களில் உள்ள மைய வகைமுறைகள்", ஐநா பாதுகாப்பு அவையின் ஒரு புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என்பதற்கும் தெஹ்ரான் ஒப்புக் கொண்டுள்ளது.

இறுதி அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் நடைமுறைப்படுத்துவது குறித்து P-6 அதிகாரங்களின் ஏதேனும் ஒரு மனக்குறையை, இனிமேல் வரையறுக்கப்பட உள்ள "சர்ச்சைக்குரிய தீர்மான நிகழ்முறை" தீர்க்க தவறினால், அந்த உடன்படிக்கை வரையறைகளின் கீழ், முந்தைய ஐநா தடையாணைகள் மீண்டும் விதிக்கப்படுவதற்கு பாதையைத் திறந்துவிடும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் பெடிரிகா மொஹிரினி மற்றும் ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி ஜாவித் ஜரீப்பால் நேற்றைய உடன்படிக்கை சுவிட்சர்லாந்தின் லோசானில் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதினும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வேகமாக மைய அரங்கை வியாபித்துக் கொண்டார்.

வியாழனன்று மதியத்திற்கு முன்னதாக ஒரு வெள்ளை மாளிகை அமர்வில் தோன்றிய ஒபாமா, அந்த உடன்படிக்கையை அமெரிக்காவிற்கான ஒரு பெரும் இராஜாங்க வெற்றியாக மெச்சினார், அதேவேளையில் அவர் "வரலாற்றின் மிக கடுமையான தடையாணைகளைக்" கொண்டு ஈரான் அடிபணிய செய்யப்பட்டதாக பெருமைபட்டுக் கொண்டார்.

அந்த "வரையறைகள்" (parameters) அமெரிக்கா ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் இறுதி உடன்பாடாக மாற்றப்படவில்லை என்றால், அல்லது ஈரான் இறுதி உடன்படிக்கையின் ஏதேனும்வொரு அம்சத்தை மீறுகிறதென்றால், அவருக்கேனும் சரி அல்லது எந்தவொரு எதிர்கால அமெரிக்க ஜனாதிபதிக்கேனும் சரி, "எல்லா சாத்தியக்கூறுகளும்" மேசையின் மேல் வைக்கபட்டிருக்கும் என்பதை அவர் அடிக்கோடிட்டார். “எல்லா சாத்தியக்கூறுகளும் மேசையின் மேல்" என்பது முழு போர் உள்ளடங்கிய தண்டிக்கும் வகையிலான நடவடிக்கை என்பதற்கு அமெரிக்காவின் விருப்பத்திற்குரிய வழக்குச்சொல்லாகும்.

ஈரானுக்கு இடமளிப்பதை எதிர்க்கும் அரசியல் ஸ்தாபக பிரிவுகளிடையே பேசுகையில்—இதில் தோற்றப்பாட்டளவில் ஒட்டுமொத்த குடியரசு கட்சியும் மற்றும் அவரது சொந்த ஜனநாயக கட்சியின் பெரும்பாலானவர்களும் உள்ளடங்குகின்றனர் என்ற நிலையில்—ஒரே யதார்த்தமான மாற்றீடு "மத்திய கிழக்கில் மற்றொரு போராக" இருக்குமென ஒபாமா வாதிட்டார்.

வாஷிங்டனின் பாரம்பரிய மத்தியகிழக்கு கூட்டாளிகளுக்கு, குறிப்பாக இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவிற்கு, மறுஉத்திரவாதம் அளிக்க ஒபாமா பெரும் முயற்சி செய்தார். கேம்ப் டேவிட்டில் நடக்கும் ஓர் உச்சிமாநாட்டிற்கு சவூதி தலைமையிலான வளைகுடா கூட்டு-ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளதாக தெரிவித்த அவர், பின்னர் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகுவை தொலைபேசியில் அழைத்து பேசினார். “இஸ்ரேலின் பாதுகாப்பு மீதான நமது ஒத்துழைப்பு மற்றும் ஈரானின் நிலைகுலைக்கும் கொள்கைகள் குறித்த நமது கவலைகள் என்று வரும் போது, அங்கே (நம்மிடையே) சிறிதும் விட்டுக்கொடுப்பு இருக்காது" என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிட்டன.

ஈரானிய அரசாங்கமும் வெற்றியென வாதிட்டு வருகிறது. வெளியுறவுத்துறை மந்திரி ஜரீஃப் கூறுகையில், ஈரானியர்கள் "ஒருபோதும் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார்கள்" என்பதை அந்த உடன்படிக்கை எடுத்துக்காட்டி இருப்பதாக தெரிவித்தார். ஈரானிய பொருளாதாரம் மீதான தடையாணைகளின் பேரழிவூட்டும் தாக்கத்தின் கீழ் ஊசலாடிக் கொண்டிருக்கையில், தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சவாலைக் குறித்து பீதியுற்று, ஈரானிய முதலாளித்துவ வர்க்கம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதியத்துடன் ஒரு சமரசத்திற்கு வர பெரும் பிரயத்தனம் செய்து வருகிறது.

அமெரிக்க ஆளும் மேற்தட்டும் மற்றும் அவர்களது பெருநிறுவன ஊடங்களும் ஈரானின் அச்சுறுத்தலான "ஆக்ரோஷம்" குறித்தும் மற்றும் அது சர்வதேச சட்டத்தை மதிக்க தவறிவிட்டதாகவும் பேசுகின்றன. என்னவொரு போலித்தனம்!

1979 புரட்சியில் அமெரிக்க ஆதரவிலான ஷா கொடுங்கோல் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பின்னர், அமெரிக்கா தான் ஈரானுக்கு எதிராக ஒரு சளைக்காத பிரச்சாரத்தை நடத்தியுள்ளது. ஈரான்-ஈராக் போரின் போது ஈராக்கிற்கு ஆதரவு மற்றும் ஆயுதம் வழங்கியமை, தசாப்தகாலமாக நீண்ட பொருளாதார தடை, இராணுவ தாக்குதல் குறித்த எண்ணிக்கையில்லா அச்சுறுத்தல்கள், மற்றும் இஸ்ரேலின் ஒத்துழைப்புடன் இணையவழி போர்முறை உள்ளடங்கிய ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான ஒரு மறைமுக போர், ஈரானிய விஞ்ஞானிகளின் படுகொலை ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தின் சமாதான குணாம்சத்தை வாஷிங்டனுக்கு திருப்திகரமாக எடுத்துக்காட்ட வேண்டுமென அமெரிக்கா திரும்ப திரும்ப ஈரானைப் போரைக் கொண்டு அச்சுறுத்துகின்ற அதேவேளையில், இஸ்ரேலின் அணுஆயுத தளவாடங்களைக் குறித்து அது கண்மூடிக் கொள்கிறது.

ஈரானுடன் ஒரு சமரசத்திற்கு வரும் ஒபாமாவின் முயற்சி, வாஷிங்டனின் பாரம்பரிய மத்தியகிழக்கு கூட்டாளிகளைக் கோபமூட்டி உள்ளதுடன், அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்தாபகங்களுக்குள்ளும் அது கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.

சவூதி எண்ணெய் ஷேக்குகளைப் போலவே, இஸ்ரேலின் நெத்தெனியாகுவும், ஈரானிய-அமெரிக்க சமரசம் அவரது அரசின் பிராந்திய செல்வாக்கை பலவீனப்படுத்துமென அஞ்சுகிறார். அவர் அந்த உடன்படிக்கைக்கு எதிராக அணிதிரள்வதில் நேற்று சிறிதும் நேரத்தை விட்டுவைக்கவில்லை. “இந்த உடன்படிக்கை ஈரானின் அணுசக்தி திட்டத்தைச் சட்டப்பூர்வமாக்கும், ஈரானிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும், மத்திய கிழக்கு மற்றும் அதைக் கடந்தும் எங்கெங்கிலும் ஈரானின் ஆக்ரோஷத்தை மற்றும் பயங்கரவாதத்தை அதிகரிக்கும்" என்று நெத்தெனியாகு அறிவித்தார்.

குடியரசு கட்சி தலைமையும் உடனடியாக அந்த உடன்படிக்கையைக் கண்டித்தது. இலினியோஸ் செனட்டர் மார்க் கிர்க் கூறுகையில், “நெவில் சேம்பர்லின் அடோல்ஃப் ஹிட்லரிடம் இருந்து ஒரு நல்ல உடன்படிக்கையைப் பெற்றுள்ளதாக" அறிவித்தார், அதேவேளையில் அர்கான்சாஸ் செனட்டர் டோம் காட்டன் நேற்றைய உடன்படிக்கையைக் குறித்து கூறுகையில், “ஈரானை அணுஆயுத பாதையில் கொண்டு செல்லும் அபாயகரமான விட்டுக்கொடுப்புகளின் ஒரு பட்டியலாக" அதை அர்த்தப்படுத்தினார். 47 செனட்டர்கள் கையெழுத்திட்ட ஒரு "பகிரங்க கடிதத்தை" காட்டன் ஈரானுக்கு எழுதினார். ஒபாமா நிர்வாகத்தால் செய்து கொள்ளப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையும் காங்கிரஸால் அல்லது ஒரு எதிர்கால ஜனாதிபதியால் மறுத்தளிக்கப்படுமென அக்கடிதம் வாதிட்டது.

வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் கமிட்டியின் தலைவரான குடியரசு கட்சி செனட்டர் பாப் கார்கர் கூறுகையில், ஈரானுடனான எந்தவொரு இறுதி உடன்படிக்கையும் நடைமுறைக்கு வருவதற்கு காங்கிரஸின் ஒப்புதலைக் கோரக்கூடிய சட்டமசோதாவை அவர் கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

ஒபாமாவும் அவரது உள்நாட்டு விமர்சகர்களும் அதே அடிப்படை மூலோபாய இலட்சியத்தை, அதாவது மத்திய கிழக்கு மற்றும் ஒட்டுமொத்த பூமண்டலத்தின் மீதும் அமெரிக்க மேலாதிக்கத்தைக் கொண்டு வரும் நோக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஈரானைப் பொறுத்த வரையில், அந்த நோக்கத்தைப் பின்தொடர்வதில் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்களில் தான் அவர்கள் வேறுபட்டுள்ளனர்.

மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட அமெரிக்க போர்கள் மத்திய கிழக்கைச் சின்னாபின்னமாக்கி உள்ள நிலைமைகளின் கீழ் மற்றும், அங்கே ஏற்கனவே ஈராக்கிய இஸ்லாமிக் அரசுக்கான எதிர்ப்பில் ஒரு மறைமுகமான வாஷிங்டன்-தெஹ்ரான் கூட்டணி நிலவுகிற நிலைமைகளின் கீழ், அப்பிராந்தியத்தை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் மறுஸ்திரப்படுத்த உதவுவதில் ஈரானிய ஆட்சியையும் பட்டியலில் சேர்த்து கொள்ள முடியுமென ஒபாமா கணக்கிடுகிறார்.

இதனினும் கூடுதல் முக்கியமாக, வாஷிங்டனின் மூலோபாய சுற்றுவட்டத்திற்குள் இந்த எண்ணெய் வளம்மிக்க நாட்டைக் கொண்டு வர முடிந்தால், அது அதன் மிக முக்கிய மற்றும் பலம்வாய்ந்த விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் கரங்களைப் பெரிதும் பலப்படுத்துமென ஈரான் உடன்படிக்கையின் ஆதரவாளர்கள் கணக்கிடுகிறார்கள்.