World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Iran nuclear deal: US prepares for new wars

ஈரான் அணுஆயுத உடன்படிக்கை: அமெரிக்கா புதிய போர்களுக்கு தயாரிப்பு செய்கிறது

Peter Symonds
6 April 2015

Back to screen version

அமெரிக்கா மற்றும் அதன் பேரம்பேசும் பங்காளிகளால் கடந்த வியாழனன்று ஈரானுடன் எட்டப்பட்ட கட்டமைப்பு அணுசக்தி உடன்படிக்கை, இப்போதும் தடைகளை முகங்கொடுக்கிறது என்றபோதினும், அமெரிக்க வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மூலோபாய திருப்பத்தைக் குறிக்கிறது.

அமெரிக்க ஆதரவிலான ஷாவை பதவியிலிருந்து வெளியேற்றிய 1979 ஈரானிய புரட்சிக்குப் பிந்தைய ஒட்டுமொத்த காலமும்—அதாவது 36 ஆண்டுகளாக—வாஷிங்டன் ஈரானிய ஆட்சிக்கு விரோதமாக மூர்க்கமான நிலைப்பாட்டைப் பேணி வந்துள்ளது. இதுவே அப்பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் அமெரிக்க கொள்கையில் ஒரு நிலையான அம்சமாக இருந்தது. இப்போது வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானுக்கு இடையே ஒரு பரந்த சமரசத்திற்கான சாத்தியக்கூறைக் கொண்டுள்ள ஓர் உடன்பாட்டை அமெரிக்கா எட்டியுள்ளது.

உள்நாட்டில் அரசியல்/இராணுவ ஸ்தாபகத்தின் எதிர்ப்பையும் மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க கூட்டாளிகளிடமிருந்து எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஒபாமா, "மத்திய கிழக்கில் மற்றொரு போருக்கு" ஒரே மாற்றீடாக அந்த உடன்படிக்கை கொண்டு வரப்பட்டிருப்பதாக எடுத்துரைத்தார். ஆனால் ஈரானுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான இராஜாங்க முயற்சிகளுக்கு, சமாதானத்தை நோக்கிய ஒரு திருப்பத்தோடு எந்த சம்பந்தமும் கிடையாது. அதற்கு மாறாக, மிகவும் பலம் வாய்ந்த அதன் விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அது போருக்கு தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அவை மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டிற்கு முட்டுக்கொடுப்பதை நோக்கமாக கொண்டவையாகும்.

மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான அதன் திட்டங்களின் பாகமாக, 2002 இல் புஷ் நிர்வாகம் ஈராக் மற்றும் வட கொரியாவுடன் சேர்ந்து ஈரானை "துஷ்டர்களின் அச்சின்" பாகமாக அறிவித்து, அதனை இலக்கில் வைத்தது. 2003 ஈராக் படையெடுப்புக்குப் பிந்தைய வெளிப்படையான வெற்றி பெருமிதத்தோடு, “யார் வேண்டுமானாலும் பாக்தாத்திற்கு செல்ல முடியும். ஆனால் தைரியமானவர்கள் தெஹ்ரானுக்கு தான் செல்வார்கள்,” என்று பரவலாக செய்திகளில் குறிப்பிடப்பட்ட இந்த கருத்தை கூறி, நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி உள்ளே ஒளிந்து கொண்டிருந்த உள்நோக்கத்தை வெளிப்படுத்தி காட்டினார்.

ஈராக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு ஒரு புதைகுழிக்குள் சிக்கிக் கொண்ட போதும் கூட, தெஹ்ரானுக்கு எதிராக அழுத்தமளிக்கவும் மற்றும் ஆத்திரமூட்டுவதற்கும் போலிக்காரணமாக ஈரானின் அணுசக்தி திட்டங்களை புஷ் நிர்வாகம் கைப்பற்றி இருந்தது. இது அமெரிக்க இராணுவ தாக்குதல்களுக்கான முன்கூட்டிய தயாரிப்புகளில் 2007 இல் உச்சநிலையை அடைந்தது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அவர் மேற்பார்வையிட்டிருந்த இராணுவ சீரழிவுகளின் மீது அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் எழுந்த விமர்சனங்களுக்கு இடையே, புஷ், ஈரானுடனான ஒரு முழு அளவிலான போரிலிருந்து பின் வாங்கினார். மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத்தைச் சிக்க வைத்ததுடன், சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கை, குறிப்பாக ஆசியாவில், புஷ் எதிர்க்க தவறிவிட்டதாக 2008 தேர்தல் பிரச்சாரத்தின் போது பராக் ஒபாமா அறிவித்தார்.

அமெரிக்க "முன்னெடுப்பு" அல்லது ஆசியாவில் "மறுசமநிலைப்படுத்தல்" என்று அறியப்பட்டதைக் கொண்டு, சீனாவையும் மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தையும், அவசியமானால் போரின் மூலமாகவேனும், அமெரிக்காவிற்கு அடிபணிய வைக்கும் நோக்கில், ஒபாமா நிர்வாகம் 2009க்கு மத்தியில் இருந்து ஓர் ஆக்ரோஷமான இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயத்தை நடத்தியுள்ளது.

அதே நேரத்தில், ஒபாமா ஈரானை நோக்கி "ஆசை காட்டிக் கொண்டே ஓட்டிச் செல்லும்" அணுகுமுறையைத் (carrot and stick approach) தொடங்கினார்—அதாவது அணுசக்தி மீதான விட்டுக்கொடுப்பற்ற நிலைபாட்டுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாணும் சாத்தியக்கூறை காட்டிக் கொண்டே, அதேவேளையில் தெஹ்ரான் மீது பொருளாதார தடைகளை வேகமாக தீவிரப்படுத்தியதோடு, இராணுவ தாக்குதல்களின் அச்சுறுத்தலையும் பேணி வந்தது.

அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கம் என்பது கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ரஷ்யா வழியாக சீனா வரைக்கும் நீண்ட பரந்த யுரேஷிய பெருநிலப்பரப்பில் அமெரிக்கா மேலாதிக்கம் பெறுவதைச் சார்ந்துள்ளது என்ற அவரது வலியுறுத்தலின் போக்கில் ஒரு வாஷிங்டன்-தெஹ்ரான் அச்சை நீண்டகாலமாக அறிவுறுத்தி வந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி (Zbigniew Brzezinski), குறிப்பிடத்தக்க வகையில், ஒபாமாவின் பிரதான வெளிநாட்டு கொள்கை ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார். ஈரான் மூலோபாயரீதியில், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணை கண்டத்தின் குறுக்குசந்திப்பில் அமைந்துள்ளது.

2008க்குப் பின்னரில் இருந்து ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ உடைவும் மற்றும் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்களும் வாஷிங்டனின் திட்டங்களில் ஒரு புதிய அவசரத்தை மற்றும் அடாவடித்தனத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆகஸ்ட்-செப்டம்பர் 2013இல், அமெரிக்கா சிரிசாவுடன் போரின் விளம்பிற்கு மிக நெருக்கமாக வந்தது. அந்த போர் நோக்கங்கள் குறித்து அமெரிக்க ஆளும் மேற்தட்டில் நிலவிய பிளவுகள், நாடாளுமன்ற ஆதரவைப் பெறுவதில் பிரிட்டிஷ் அரசாங்கம் தோல்வி அடைந்தமை, ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து வந்த தீவிரமான எதிர்ப்புகளுக்கு இடையே அது கடைசி நிமிடத்தில் தான் பின்வாங்க தள்ளப்பட்டது. சிரியாவில் இராணுவ தலையீடு என்பது ஈரானுடன் போருக்கு இட்டுச் செல்லுமென தெஹ்ரான் வாஷிங்டனுக்கு எச்சரித்திருந்தது.

ஒபாமா நிர்வாகம் ஓர் ஆக்ரோஷமான இருமுனை மூலோபாயத்தை ஏற்று அந்த தோல்விக்கு விடையிறுப்பு காட்டியது. 2013 இறுதியில் வாஷிங்டனின் பகிரங்கமான உக்ரேனிய தலையீட்டில் வெளிப்படையாக மாறியிருந்த, மாஸ்கோவுடனான ஒரு மோதலை நோக்கி நகர்ந்த அதேவேளையில், ஒபாமா ஏற்கனவே இரகசியமாக அடியில் நடந்து வந்த ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியது.

அவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி உடன் செப்டம்பர் 2013 ஐநா ஆண்டு கூட்டத்தின் போது தொலைபேசியில் பேசினார்—அது மூன்று தசாப்தங்களுக்கு அதிகமான காலத்தில் அமெரிக்க மற்றும் ஈரானிய அரசாங்கத்திற்கு இடையே நடந்த, பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்ட முதல் உரையாடலாக இருந்தது. நவம்பர் 2013 இல் ஓர் இடைக்கால அணுசக்தி உடன்படிக்கை எட்டப்பட்டதுடன், பெப்ரவரி 2014 இல் கியேவில் பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் உச்சநிலையை அடைந்த வாஷிங்டனின் இரகசிய உக்ரேனிய உபாயங்கள் அப்போது தீவிரமடைந்திருந்த போதினும் கூட, ஜனவரி 2014 இறுதியில் இறுதியாக அந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

எந்த உடன்பாடும் வாஷிங்டனின் வரையறைகளின் மீது தான் இருக்குமென்பதை ஒபாமா நிர்வாகம் தொடக்கத்திலிருந்தே ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் தெளிவுபடுத்தி இருந்தது. நிஜமான இறுதிகெடுவை வெகுவாக கடந்து நீடித்த ஒரு நீண்டகால நிகழ்முறையே இதன் விளைவாகும், அதில் ஈரானின் முதலாளிமார்கள்-மதகுருமார்களின் ஆட்சி ஒவ்வொரு பிரச்சினையின் போதும் பெரும் விட்டுக்கொடுப்புகளைச் செய்துள்ளது.

ஒரு கௌரவ நடவடிக்கையாக தெஹ்ரான் பெயரளவிற்கு ஓர் அணுசக்தி திட்டத்தை தக்க வைத்து கொள்ள அமெரிக்கா விட்டுக்கொடுத்துள்ள அதேவேளையில், ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களோ அந்நாட்டின் யுரேனிய செறிவூட்டும் தகைமையைப் பெரிதும் குறைத்துக் கொள்ளவும், இப்போதிருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்புகளை அகற்றிவிடவும், மற்றும் எப்போது வேண்டுமாயினும் விருப்பப்படி நடைமுறைபடுத்தக்கூடிய மிக பலவந்தமான சோதனை முறையை அனுமதிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மறுபுறம் அமெரிக்கா எதற்கும் கட்டுப்படவில்லை—ஈரான் அதன் பல்வேறு பணிகளைப் பூர்த்தி செய்ததும், சர்வதேச தடையாணைகளைத் "தற்காலிகமாக நீக்குவதை" மட்டும் வழங்குகிறது. அனைத்திற்கும் மேலாக, தடையாணைகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் ஈரான் "இணக்கமாக இல்லை" என்று கூறப்படும் போது "திரும்ப நடைமுறைக்குக் கொண்டு வரும்" வகையில், தயாராக வைத்திருக்கப்படும். அதனொரு விளைவாக, ஐநா பாதுகாப்பு அவையில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவைப் பெற வேண்டிய அவசியமில்லாமல் முடமாக்கும் தடையாணைகளை மீண்டும்-திணிக்க அமெரிக்காவிற்கு சுதந்திரமான அதிகாரம் கிடைக்கிறது.

அந்த உடன்படிக்கை ஈரானிய ஆளும் வட்டாரங்களில் பிளவுகளைத் தூண்டியுள்ளது. ஆனால் உடனடியான தடையாணைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மட்டுமல்ல, மாறாக நீண்டகாலமாக இருந்துவரும் அமெரிக்க பொருளாதார தடைகளை நீக்குவதற்கும் ஓர் உடன்படிக்கை அவசியமென ரௌஹானியால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் மேலோங்கிய கன்னை வலியுறுத்துகிறது. ஜனாதிபதிகள் ஹஷெமி ரஃப்சன்ஜனி மற்றும் மொஹம்மத் கடாமியின் சீர்திருத்த அரசாங்கங்கள் என்றழைக்கப்பட்டதில் ஒரு முன்னணி பிரபலமாக இருந்த ரௌஹானி, ஈரானை ஒரு மலிவு உழைப்பு தளமாக திறந்துவிடும் பெரும் சந்தைசார் மறுசீரமைப்புகளோடு வாஷிங்டனுடன் ஓர் உடன்படிக்கைக்கு அழுத்தம் அளித்தவராவார். ஈரானிய முதலாளித்துவ வர்க்கம் இன்னும் கூடுதலாக வாஷிங்டனுக்கு நெருக்கமாக அணிசேர்ந்ததும், அது ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும்.

அடுத்த மூன்று மாதங்களில் அந்த உடன்படிக்கை இறுதி செய்யப்படுமா என்பது நிச்சயமின்றி உள்ளது. ஒபாமா நிர்வாகம் காங்கிரஸில் குடியரசு கட்சியினரிடம் இருந்தும், அத்துடன் இராணுவ/உளவுத்துறை எந்திரத்தின் பிரிவுகளிடமிருந்தும், அத்துடன் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கூட்டாளிகளிடமிருந்தும், குறிப்பாக இஸ்ரேலிடமிருந்தும் மற்றும் குறைந்தளவில் பகிரங்கமாக சவூதி அரேபியா, வளைகுடா அரசுகள் மற்றும் எகிப்திடமிருந்தும் கடும் எதிர்ப்பை முகங்கொடுத்து வருகிறது.

குறைந்தபட்சம் ஒருதசாப்தமாக செய்ததைப் போலவே, ஈரானிய அணுசக்தி குண்டுகளால் நிகழக்கூடிய அபாயம் குறித்து இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகு தொடர்ந்து எச்சரித்து வருகின்ற அதேவேளையில், தெஹ்ரானை நோக்கிய வாஷிங்டனின் ஒரு திருப்பம் அவர்களது சொந்த முக்கியத்துவத்தையும், அவ்விதத்தில் அமெரிக்காவிடம் இருந்து அவர்களின் பேரம்பேசும் அதிகாரத்தையும் குறைத்து விடுமோ என இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டாளிகள் உள்ளார்ந்து கவலை கொள்கின்றன. ஈரானிய எதிர்விரோதிகள் அவர்களது சொந்த இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள முனைகின்ற நிலையில், மத்திய கிழக்கை ஸ்திரப்படுத்துவதிலிருந்து வெகுதூரம் விலகி, ஓர் உடன்படிக்கையின் இறுதிவடிவமானது பதட்டங்களையே பெரிதும் தூண்டிவிடக்கூடும்.

ஒரு பரந்த வரலாற்று அர்த்தத்தில், அந்த உடன்படிக்கை காகிதத்தில் எழுதப்பட்டுள்ள அளவிற்கு மதிப்புடையதல்ல. அந்த உடன்படிக்கை நிலைமைக்கு உகந்ததாக இல்லாமல் போனால் அல்லது அவ்வாறு போகும் போதும், கடந்த காலத்தில் பல முறைகள் நடந்துள்ளதைப் போல, அமெரிக்கா அதை கிழித்தெறியும். தனது WMD திட்டங்களைக் கைவிடுவதாக 2003இல் ஓர் உடன்படிக்கை செய்து கொண்ட மௌம்மர் கடாபியின் லிபிய ஆட்சி, 2011 இல் தன்னைதானே ஆட்சி மாற்றத்திற்கான ஒரு நேட்டோ தலைமையிலான போரின் இலக்கில் காண வேண்டியிருந்தது. அதன் சொந்த பொருளாதார வீழ்ச்சிக்கு இடையே, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பிரதான விரோதிகளை விலையாக கொடுத்து உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் பொறுப்பற்ற முனைவில் எங்கேயும் நிற்க போவதில்லை.