World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French officials debunk NATO warnings of Russian invasion of Ukraine

உக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு குறித்த நேட்டோ எச்சரிக்கைகளின் பொய்களைப் பிரெஞ்சு அதிகாரிகள் வெளியிடுகின்றனர்

By Stéphane Hugues
14 April 2015

Back to screen version

நேட்டோவிற்கு வாஷிங்டனால் பெரிதும் நேரடியாக அனுப்பப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க அச்சுறுத்தி வருகிறது என்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாதங்கள் பொய்களாகும், அவை பிரெஞ்சு உளவுத்துறை அமைப்புகளுக்குக் கிடைத்த விபரமான உளவுத்தகவல்களோடு முரண்பட்டிருந்தன.

இது இராணுவ உளவுத்துறை இயக்குனர் ஜெனரல் கிறிஸ்தோப் கோமார் இனால் பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் வழங்கப்பட்டு, தேசிய சட்டமன்ற வலைத் தளத்தில் கிடைக்கும், பகிரங்க சாட்சியத்தில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. பல வாரங்களாக, கோமார்டினது சாட்சியம் பிரெஞ்சு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களால் பெரும் அக்கறையோடு மூடிமறைக்கப்பட்டது. ஆனாலும் அந்த செய்தி, ரஷ்ய அரசு ஊடக நிறுவனங்களான Russia Today மற்றும் Sputnik News ஆல் சமீபத்தில் வெளியிடப்பட்ட போது உடைத்துக் கொண்டது.

எட்வார்ட் ஸ்னொவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்ட NSA உளவுவேலையைப் போன்று, மக்கள் மீதான பாரிய மின்னணு கண்காணிப்பை சட்டபூர்வமாக்கும் பிரான்சின் கடுமையான புதிய உளவுபார்ப்பு சட்டமசோதாவை விவாதிக்கையில், கோமார், தேசிய சட்டமன்றத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுத படைகள் மீதான கமிஷனின் விசாரணை ஒன்றில் பேசினார். குறிப்பாக அவரது இராணுவ உளவுத்துறை இயக்ககத்தின் (DRM) வரவு-செலவு திட்டத்தை அதிகரிப்பதற்காக அவர் வாதிட்டுக் கொண்டிருந்தார்.

நேட்டோ உடனான தொடர்புகள் மீது பிரதிநிதி Frédéric Lefebvre இன் கேள்விக்கு விடையிறுத்து கோமார் கூறுகையில், “அமெரிக்க உளவுத்துறை அங்கே மேலதிகாரத்துடன் உள்ளது என்பதே நேட்டோவின் நிஜமான பிரச்சினையாகும், அதேயிடத்தில் பிரெஞ்சு உளவுத்துறை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது—இதிலிருந்துதான் நேட்டோ தளபதிகளுக்கு பிரெஞ்சு மூலமாக போதிய உளவுத்தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் வருகிறது,” என்றார்.

உக்ரேன் மீது உடனே நிகழவிருந்த ரஷ்ய படையெடுப்பு குறித்த நேட்டோவின் எச்சரிக்கைகள், DRM இன் உளவுத்தகவல்களோடு முரண்பட்ட பொய்கள் என்பதை கோமார் மழுப்பலாக தெரிவித்தார். அவர் கூறினார், “உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்குமென நேட்டோ அறிவித்திருந்தது, அதேயிடத்தில் நமது உளவுத்தகவல்களின்படி, அந்த உத்தேச கருத்தை ஆதரிக்க ஒன்றும் இருக்கவில்லை—உண்மையில் ரஷ்யர்கள் கட்டளை மையங்களையோ அல்லது சங்கிலித்தொடர் போன்ற வினியோக அமைப்புகளையோ, குறிப்பாக ஓர் இராணுவ படையெடுப்பை அனுமதிக்கும் இராணுவ மருத்துவமனைகளையோ நிலைநிறுத்தி இருக்கவில்லை என்பதோடு, சேமிப்புகிடக்குகளைக் கூட நகர்த்தி இருக்கவில்லை என்பதை நாம் கண்டுணர்ந்தோம்”.

அதற்கடுத்து நடந்த சம்பவங்கள் நாம் சரியாக இருந்ததை நிரூபித்தன, ஏனெனில் சில ரஷ்ய சிப்பாய்கள் உண்மையில் உக்ரேனில் காணப்பட்டார்கள் என்றாலும், அது படையெடுப்பு முயற்சி என்பதை விட உக்ரேனிய ஜனாதிபதி பொறோஷென்கோ மீது அழுத்தத்தை உண்டாக்கும் நோக்கில், ஒரு கூடுதல் தந்திரமாக இருந்தது,” இதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஏனைய ஐரோப்பிய நாடுகள் உடனான கூட்டு-ஒத்துழைப்பு மீது, பிரதிநிதி Edith Gueugneau ஆல் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு கோமார் பதில் அளிக்கையில், “மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளுடன் கூட்டு-ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது. பல்வேறு அம்சங்களை விவாதிப்பதற்காக நேட்டோ நாடுகளுடன் வழக்கமாக ஒருங்கிணையும் ஒரு விவாதக்குழு உட்பட, இரண்டு விவாதக்குழுக்களில் DRM பங்குபற்றுகிறது,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “இத்தகைய இரண்டு விவாதக்குழுக்களில் ஒன்றில், யாரோ நமது கரங்களை உக்ரேன் மீது ஓங்குமாறு செய்ய முயன்றார் என நான் நினைக்கிறேன். இது திடமான மற்றும் உள்ளது உள்ளவாறே வழங்கும் உளவுத்துறையைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது: இந்த நிலைப்பாட்டில் இருந்து, நிலைமையைக் குறித்த ஒரு மதிப்பீட்டைச் செய்வதற்கும் மற்றும் அதன் கண்ணோட்டத்தை வாதிடுவதற்கும் அணுமதிக்கும் வகையில் பிரான்ஸ் ஆதாரவளங்களைக் கொண்டுள்ளது,” என்றார்.

கோமார் இனது கருத்துக்களில் இருந்த நாசூக்கான மூடிமறைப்புக்கு இடையிலும், அவற்றின் தாக்கங்கள் மலைப்பூட்டுவதாக உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் சட்டமன்ற பிரதிநிதிகள் உக்ரேன் குறித்து கோமார் இடம் கேள்வி எழுப்புவதில் அலட்சியம் காட்டியதுடன், உக்ரேன் மீது "நமது கரங்களை ஓங்குமாறு செய்ய" யார் முயற்சித்தது என்பதையோ, அவர்கள் என்ன கொள்கைகளை அறிவுறுத்துகிறார்கள் என்பதையோ கேட்கவில்லை.

இருந்தபோதினும், பெரிதும் வாஷிங்டனால் நேட்டோவிற்கு வழங்கப்பட்ட பொய்யான உளவுத்தகவல்கள், உக்ரேன் மீது உடனே நிகழவிருந்த ஒரு ரஷ்ய படையெடுப்புக்காக நேட்டோவை ஆயத்தப்படுத்த —அதாவது, ரஷ்யாவை நோக்கிய உயர் எச்சரிக்கையின் மீது ஐரோப்பா எங்கிலும் நேட்டோ இராணுவ படைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு பிரதான இராணுவ கட்டமைப்புக்கு— அழுத்தமளிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதுபோன்றவொரு குற்றகரமான பொறுப்பற்ற கொள்கையால் உலக மக்களுக்கு முன்னிறுத்தப்பட்ட அபாயம் கணக்கிட இயலாததாகும், இது நேட்டோ மற்றும் அணுஆயுதமேந்திய ரஷ்யாவிற்கு இடையே முழுமையான போராக வெடிக்கும் அபாயத்தை உயர்த்துகிறது.

பிரான்சின் சிந்தனைக்குழாமான சர்வதேச மற்றும் மூலோபாய உறவுகளுக்கான பயிலகத்தின் (IRIS) கிழக்கு ஐரோப்பிய விவகாரங்களுக்கான ஒரு வல்லுனர் பிலிப் மீகோவால், கோமார் இன் வலியுறுத்தல்கள் ஆதரிக்கப்பட்டன. “பிரான்ஸை முட்டாளாக்க முடியாது. பிரான்ஸ் அதன் சொந்த உளவுத்தகவல் ஆதாரங்களைக் கொண்டுள்ளது, மேலும் உக்ரேனிய நெருக்கடிக்கு என்ன விளக்கம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்,” என்று மீகோ Sputnik News தெரிவித்தார்.

கோமார் மற்றும் மீகோவின் கருத்துக்கள், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் முனைவின் மோசடியான குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது. கியேவில் மேற்கு-ஆதரவு, பாசிச-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி உக்ரேனில் உள்நாட்டு போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்ற பின்னர், ஒபாமா நிர்வாகமும், பெண்டகனும், ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுக்களும் உலக ஒழுங்கமைப்புக்கு ஓர் உடனடி அச்சுறுத்தலாக ரஷ்யாவைக் கண்டிக்கும் மிரட்சியூட்டும் பிரச்சாரத்தை சுழற்றிவிட்டுள்ளன.

முற்றிலும் ரஷ்யாவின் எல்லையோரங்களை ஒட்டி —முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகள், போலாந்து, பல்கேரியா மற்றும் கருங்கடல் பகுதிகளில்— ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நேட்டோ இராணுவ ஒத்திகைகளுக்கு தலைமை தாங்கவும், மற்றும் உலக நிதியியல் அமைப்புமுறையிலிருந்து ரஷ்யாவை பெரிதும் வெட்டிவிடுவதற்கான ஒரு தடையாணை உந்துதலைத் தொடங்கவும் வாஷிங்டன் அதை பயன்படுத்தியது.

அடியிலிருக்கும் இந்த பிரச்சாரம் மோசடியானது என்பது பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு நன்கு தெரியும், ஆனாலும் அவை அதை ஆதரித்ததுடன், அவற்றின் சொந்த நோக்கங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அரசாங்கம், இராண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஜேர்மன் இராணுவ தடைகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்க உக்ரேனிய நெருக்கடியை சுரண்டிக் கொண்டது. பேர்லின் இப்போது அதன் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கில் எட்டு பில்லியன் யூரோவை சேர்த்துள்ளதுடன், மேர்க்கெல் ஓர் ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்க பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டுடன் வேலை செய்து வருகிறார்.

பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் வழங்கப்பட்ட பகிரங்கமான சாட்சியம் குறித்த ஒரு செய்தி ரஷ்ய ஊடகத்தில் வெளியானது என்ற உண்மையே, பிரெஞ்சு ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் போலித்தனத்தையும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர் முனைவில் அவை பங்கெடுத்திருப்பதையும் அடிக்கோடிடுகிறது. கோமார் இன் கருத்துக்கள் தேசிய சட்டமன்ற நடவடிக்கைகளிலிருந்தே நீக்கப்பட்டன. அந்த அரசாங்கமோ அல்லது எந்தவொரு பிரதான பிரெஞ்சு செய்தி ஊடகமோ அவற்றை குறித்தோ, அல்லது அந்த விவகாரத்தில், கோமார் இன் சாட்சியம் மீதான ரஷ்ய ஊடகங்களின் செய்திகளையோ கூட வெளியிடவில்லை.

இரண்டாம் உலக போர் முடிந்ததற்கு பின்னர் அல்லது பனிப்போர் காலத்திய மிகவும் பதட்டமான அணுஆயுத விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாடுகளுக்கு பின்னர், சர்வதேச தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வரும் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது.

உலக மக்களின் முதுகுக்குப் பின்னால், பொய்களின் அடிப்படையில் நேட்டோ உலகை அணுஆயுத போரின் விளிம்பிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஈராக் பாரிய பேரழிவு ஆயுதங்களைக் (WMD) கொண்டிருந்தது என்ற பொய்யான வாதங்களின் அடிப்படையில், ஈராக்கில் அதன் போரைத் தொடங்கிய புஷ் நிர்வாகம் ஏற்றுக்கொண்டதை போன்ற அதே வகையான குற்றகரமான உத்திகளை நேட்டோ அரசாங்கங்களும் கூட்டாக ஏற்றுள்ளன. அதன் விளைவாக ஏற்பட்ட படையெடுப்பு மற்றும் உள்நாட்டு போரில் மில்லியனுக்கும் அதிகமானவர்களின் வாழ்வு விலையாக கொடுக்கப்பட்ட போதினும், நேட்டோ மற்றும் ரஷ்யா இடையிலான முழுமையான போரிலிருந்து விளையக்கூடிய பாதிப்புகளின் திகைப்பூட்டும் எண்ணிக்கையோ அதையே குறைத்துவிடக்கூடும்.

ரஷ்யா உடனான போர் அச்சுறுத்தல், நேட்டோவிற்குள் இருக்கும் ஏகாதிபத்திய சக்திகளிடையிலான பதட்டங்களையும் தீவிரப்படுத்துகிறது. உக்ரேனில் வாஷிங்டனின் பாத்திரம் குறித்து கோமார் மற்றும் மீகோவின் கடுமையான கருத்துக்கள், உக்ரேனிய உள்நாட்டு போரில் ஒரு தற்காலிக சமாதான உடன்படிக்கையை மத்தியஸ்தம் செய்வதற்கான மின்ஸ்க் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, பெப்ரவரியில் ஹோலாண்டின் சிறிய எச்சரிக்கையைப் பின்தொடர்ந்து வந்தன. நேட்டோவும் ரஷ்யாவும் தங்களைத்தாங்களே ஒரு "முழு" போரில் காணக்கூடுமென அவர் எச்சரித்திருந்தார். அந்நேரத்தில், ஒப்பீட்டளவில் ரஷ்யாவை நோக்கி ஆக்ரோஷ மனோபாவத்தை குறைவாக கொண்டிருந்த ஐரோப்பிய சக்திகளுக்கும், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் வெளியுறவு கொள்கை வல்லுனர்களுக்கும் இடையேயான கசப்பான எதிர் குற்றச்சாட்டுக்கள் மேலெழுந்திருந்தன.

புதிய அமெரிக்க பாதுகாப்பிற்கான மையம் எனும் சிந்தனைக்குழாமின் ரோபர்ட் காப்லன், “ஐரோப்பிய சமாதானப்படுத்தலுடன் அமெரிக்கா பொறுமை இழந்துவிடும்" என்று தலைப்பிட்ட ஒரு சமீபத்திய கருத்துரையில், ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பாவின் இராணுவ ஆக்ரோஷமின்மையைக் குறித்து அதை கண்டித்தார்.

ஐரோப்பா அதன் கொள்கைகளைத் திருத்தி கொள்ளவில்லை என்றால் அமெரிக்க வெளியுறவு கொள்கை மேற்தட்டின் கருத்துக்கள் அதற்கு எதிராக தீர்க்கமானகரமான ரீதியில் மாறக்கூடுமென அச்சுறுத்தி காப்லன் எழுதுகையில், “அமெரிக்க பாதுகாப்பு குடை எப்போதும் மேலே தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்காது. திரு. புட்டினைக் கையாள்வதில் பராக் ஒபாமா தீர்மானகரமாக இல்லை என்ற கருத்து, அமெரிக்க கருத்தோட்டத்தின் ஒரு படிப்படியான மாற்றத்தைக் குறைத்து எடுத்துரைப்பதைக் காட்டிலும், அமெரிக்க ஜனாதிபதியின் சொந்த வெளியுறவு கொள்கையைக் குறைத்து எடுத்துரைக்கும். அமெரிக்கா அதனைப் பாதுகாக்காத ஒரு கண்டத்தை, எதற்காக அது பாதுகாக்க வேண்டும்?” என்று எழுதினார்