World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Danger mounts of US/NATO war with Russia

ரஷ்யா உடனான அமெரிக்க/நேட்டோ போர் அபாயம் அதிகரிக்கிறது

Patrick Martin
13 August 2015

Back to screen version

ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் வடக்கு அட்லாண்டிக் கூட்டுழைப்பு அமைப்பின் [நேட்டோ] முன்னாள் உயர்மட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு சிந்தனை குழாம், ஐரோப்பிய தலைமை வலையமைப்பால் (European Leadership Network – ELN) வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கை, நேட்டோவும் ரஷ்யாவும் இவ்வாண்டு நடத்திய இராணுவ ஒத்திகைகள், அவ்விரு தரப்பிற்கும் இடையே போர் வெடிப்பதை மிகவும் சாத்தியமாக்கி இருப்பதாக காண்கிறது.

படுமோசமான ஒன்றிற்கு தயாரிப்பு செய்தல்" (Preparing for the Worst) என்ற தலைப்பின் கீழ், அந்த அறிக்கை, ரஷ்யா மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை ஒட்டிய இராணுவ ஒத்திகைகளின் வேகமும் மற்றும் அதிகரித்துவரும் அளவும், தடுப்புமுறைக்கு "சமிக்ஞை காட்டும்" புள்ளியிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதென்றும், ஓர் இராணுவ மோதல் அபாயத்தை அதிகரிப்பதில் அவை சுதந்திரமான ஒரு காரணியாக மாறிவிட்டன என்றும் எச்சரிக்கிறது.  

ரஷ்யா நேட்டோவுடன் ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. நேட்டோ ரஷ்யாவுடன் ஒரு சாத்தியமான மோதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது,” என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது. “அவ்விரு தரப்பைச் சார்ந்த தலைவர்களும் போருக்குள் இறங்க முடிவெடுத்துவிட்டார்கள் என்றோ அல்லது அவ்விரு தரப்பினருக்கும் இடையே ஓர் இராணுவ மோதல் தவிர்க்கவியலாதது என்றோ நாங்கள் கூறவில்லை, ஆனால் ஒத்திகைகளின் தோற்றவடிவம் மாறியிருப்பது உண்மையாகும். அது ஐரோப்பாவில் நடப்பு பதட்ட சூழலை நீடித்திருப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது,” என்று அது குறிப்பிட்டது.  

இந்தாண்டு முறையே ரஷ்யா மற்றும் நேட்டோ நடத்திய இரண்டு மிகப்பெரிய இராணுவ ஒத்திகைகளைக் குறித்த ஒரு பகுப்பாய்வை அந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது: ஒன்று வடக்கு ரஷ்யாவில் தொடங்கி, தெற்குநோக்கி விரிவாக்கப்பட்ட 80,000 துருப்புகளைக் கொண்ட ரஷ்யாவின் மார்ச் மாத "சீற்றமிகு ஒத்திகை"; மற்றது, பால்டிக் கடல் கடற்படை வாகனங்களிலும், லித்துவேனியா, லாட்வியா, எஸ்தோனியா மற்றும் போலாந்தில் செயல்பட்டுவரும் தரைப்படை துருப்புகளிலும் பிரிந்திருந்த 15,000 துருப்புகளோடு, ஒட்டுமொத்த பகுதி மீதும் போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்த நிலையில், ஜூனில் நேட்டோ நடத்திய கூட்டு பாதுகாப்பு ஒத்திகைகள்.

இந்த முரண்பாடு உள்ளார்ந்தரீதியில் சமமாக இல்லை. ரஷ்யாவின் சொந்த பகுதியில் நடந்துவரும் ரஷ்ய இராணுவ ஒத்திகைகளை, அமெரிக்கா, கனடா மற்றும் ஏனைய துருப்புகளை உள்ளடக்கி அதுவும் அவற்றின் நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் (ரஷ்ய எல்லையிலிருந்து ஒருசில மைல்கள் தூரத்தில்) அவற்றைப் பயன்படுத்திய இராணுவ ஒத்திகைகளோடு ELN ஒப்பிடுகிறது. வட அமெரிக்காவில் நடக்கும் நிலையான மற்றும் பாரியளவிலான அமெரிக்க இராணுவ ஒத்திகைகளைக் குறித்து அங்கே எந்த பரிசீலனையும் இருக்கவில்லை. அதற்கும் மேலாக, பெண்டகனின் உலகந்தழுவிய நடவடிக்கைகளை ELN ஒரு காரணியாகவே எடுக்கவில்லை. அது ரஷ்யா உட்பட வேறெந்த நாட்டினது நடவடிக்கைகளையே விஞ்சிவிடுமளவிற்கு நடந்து வருகிறது

ரஷ்யா ஓராண்டு சேவை நிபந்தனை கொண்ட கட்டாய இராணுவ சேவையைக் கொண்டிருப்பதாலும் மற்றும் ஒப்பீட்டளவில் எளிய செயல்பாடுகளைப் நடத்துவதாலும் தான் அதன் ஒத்திகைகள் பிரதானமாக மிகப் பெரியளவில் இருப்பதாக ELN ஆய்வே ஒப்புக் கொள்கிறது. கடல்வழி மற்றும் வான்வழி துணைப்படை துருப்புகள் போன்ற உயர்சிறப்பு திறன்சார் துருப்புகளைப் பொறுத்த வரையில், நேட்டோ மற்றும் ரஷ்யாவினால் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை ஏறத்தாழ சமமாக இருந்தன.

2014 இல் 162 ஒத்திகைகளுடன் அமெரிக்க-நேட்டோ படைகளின் மிக வேகமான தீவிரப்படுத்தல், ஐரோப்பாவில் நேட்டோ அங்கத்துவ நாடுகள் அவையாகவே நடத்திய கூடுதல் 40 ஒத்திகைகளுடன் சேர்ந்து, நிஜத்தில் திட்டமிடப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. குறிப்பாக எஸ்தோனிய-ரஷ்ய எல்லையோர நகரம் நார்வாவில் பெப்ரவரி 24 அன்று நடத்தப்பட்ட நேட்டோ நடவடிக்கையின் ஆத்திரமூட்டும் குணாம்சத்தை அது குறிப்பிடுகிறது. “அமெரிக்க இராணுவத்தின் இரண்டாம்நிலை குதிரைப்படைப்பிரிவிலிருந்து வந்த குண்டு துளைக்காத இராணுவ வாகனங்களின் பிரசன்னமும், அத்துடன் எஸ்தோனியாவின் சுதந்திரதின கொண்டாட்ட இராணுவ அணிவகுப்பில் பிரிட்டிஷ், டச், ஸ்பானிஷ், லித்துவேனிய மற்றும் லாட்விய துருப்புகளின் பிரசன்னமும்" அதில் உள்ளடங்கி இருந்தது.

இந்த ELN ஓர் ஏகாதிபத்திய சிந்தனை குழாமாகும். அது நேட்டோ-ரஷ்ய இடைமுகப்பில் (interface) நெகடு அதிகரித்துவரும் பதட்டங்களை மாஸ்கோவின் தரப்பிலிருந்து வரும் "அபாயகரமான அடாவடித்தனம்" என்று குற்றஞ்சாட்டுகிறது, அதேவேளையில் இரண்டு தரப்பின் இராணுவ நடவடிக்கைகளின் வேகம் கருதிப்பார்க்காத விளைவுகளைக் கொண்டு வரக்கூடுமென்ற கவலையையும் வெளிப்படுத்துகிறது. “தங்களால் சம்பவங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று நினைத்த தலைவர்களுக்கு வரலாற்றில் நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன, சம்பவங்களின் உந்துவிசைகள் அவற்றின் சொந்த வேகத்தையும் இயக்கத்தையும் தமது கட்டுப்பாட்டில் எடுக்கும் ஒரு பண்பைக் கொண்டவையாகும்,” என்று அக்குழுவின் தலைவர் இயான் கீர்ன்ஸ் கூறினார்.     

கடந்த நவம்பரில் வழங்கப்பட்ட அதே குழுவின் அறிக்கை ஒன்று, நேட்டோ மற்றும் ரஷ்யாவின் போர் விமானங்களும் மற்றும் கடற்படை வாகனங்களும் சம்பந்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நெருக்கமான-எதிரெதிர் சம்பவங்களை எடுத்துக்காட்டியதுடன், அவற்றில் ஏதேனும் ஒன்றே கூட ஒரு மிகப்பெரிய சர்வதேச சம்பவத்தை உருவாக்கி இருக்கும் அல்லது ஓர் இராணுவ பரிமாற்றத்தைத் தூண்டிவிட்டிருக்கும் என்று குறிப்பிட்டது.

ரஷ்ய எல்லையோரங்களில் ஏகாதிபத்திய கூட்டணி அதன் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற எந்தவொரு கருத்தையும் நேட்டோ செய்தி தொடர்பாளர் கார்மென் ரோமெரோ திட்டவட்டமாக நிராகரித்தார். “அறிக்கைகள் குறிப்பிடுவதைப் போல, நோட்டோ இராணுவ ஒத்திகைகள் ஐரோப்பாவில் போரை மிகவும் சாத்தியமானதாக ஆக்கவில்லை,” என்று அப்பெண்மணி தெரிவித்தார். “அவை துல்லியமாக நேரெதிர் விளைவுகளை கொண்டிருக்கும் நோக்கத்தால் நடத்தப்படுகின்றன: அதாவது அதிகரித்துவரும் ரஷ்ய ஆக்ரோஷத்திற்கு விடையிறுப்பாக ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டை அதிகரிப்பதற்காக நடத்தப்படுகின்றன,” என்றார்

பெப்ரவரி 2014 இல், ரஷ்ய-ஆதரவிலான ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை வெளியேற்றி, கியேவில் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடிபணிந்த ஒரு தீவிர-வலது, அதிதீவிர-தேசியவாத ஆட்சியை நிறுவுதற்கான அமெரிக்க-ஆதரவிலான அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியோடு உக்ரேன் நெருக்கடி வெடித்த போதிலிருந்து, உலக சோசலிச வலைத் தளம் கூறிவரும் எச்சரிக்கைகளுக்கே இந்த ELN அறிக்கை பலம் சேர்க்கிறது. இந்த நெருக்கடியின் புறநிலை தர்க்கம், தவிர்க்கவியலாமல், மொத்த மனிதயினத்திற்கே பேரழிவுகரமான விளைவுகளோடு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா என இரண்டு பிரதான அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையே ஓர் இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்கிறது.

இந்த நெருக்கடியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் ஈவிரக்கமற்ற பாத்திரம் வகிக்கிறது. வெளியுறவுத்துறை நவ-பழமைவாத அதிகாரி விக்டோரியா நூலாந்து பிரதான பாத்திரம் வகித்த நிலையில், யானுகோவிச்சை பதவியிலிருந்து கீழே கொண்டு வரவும் மற்றும் வாஷிங்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலையாட்டிகளைக் கொண்டு, அதாவது பிரதம மந்திரி அர்செனி யாட்சென்யுக் (நூலாந்தின் வார்த்தைகளில் யாட்ஸ்” - செல்ல நாய்குட்டிகள்) மற்றும் சாக்லெட் நிறுவன பில்லியனரும் நீண்டகால பெரும் செல்வந்தருமான ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ ஆகியோரைக் கொண்டு யானுகோவிச்சை பிரதியீடு செய்ய, அமெரிக்கா தான் பாசிச-தலைமையிலான பிரச்சாரத்தை ஒழுங்கமைத்து ஊக்குவித்தது

ரஷ்யாவிலிருந்தே அதை துண்டாடுவதற்கான மற்றும் அதன் மக்கள், பிராந்தியம் மற்றும் ஆதாரவளங்களை ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே பங்கிட்டுக் கொள்வதற்கான நிலைமைகளை உருவாக்க, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனிய நெருக்கடியைச் சூழ்ச்சியுடன் கையாண்டு வருகின்றன என்பது அப்போதிருந்து மிகவும் வெளிப்படையாகியுள்ளது. இது தான், இராணுவ படை பலத்தின் பின்புலத்துடன், பொருளாதார தடையாணைகள் மற்றும் இராஜாங்கரீதியிலான ஆத்திரமூட்டல்களின் நீண்டகால ஏகாதிபத்திய மூலோபாய பிரச்சாரத்தின் நோக்கமாக உள்ளது.        

ரஷ்யாவிற்கு எதிரான பிரச்சாரம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகரித்துவரும் இராணுவவாத முன்னோக்கினது ஒரேயொரு அம்சம் மட்டுமே. கடந்த வாரம் ஜனாதிபதி ஒபாமா அவரே ஒப்புக்கொண்டதைப் போல, அங்கே வாஷிங்டனில் ஒரு சக்திவாய்ந்த கன்னை உள்ளது, அது பலவந்தமாக ஈரானுடனான போருக்கு அழுத்தமளித்து வருகிறது. ஒபாமா அதனுடன் வெறுமனே தந்திரோபாய கருத்துவேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளார், ரஷ்யா மற்றும் சீனா உடன் வரவிருக்கின்ற உலகளாவிய மோதல்களில் ஈரானிய ஆட்சியை அமெரிக்க தரப்பில் கொண்டு வர முடியுமா என்று அவர் பரிசோதித்து பார்க்க விரும்புகிறார்.    

பகுப்பாய்வின் இறுதியாக, சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும் என்ற அதன் அறிக்கையில் கடந்த ஆண்டே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அறிவித்ததைப் போல, “ஒரு புதிய உலகப் போருக்கான அபாயமானது, உலகளாவிய பொருளாதார அபிவிருத்திக்கும் மற்றும் உற்பத்தி சாதனங்களின் தனிச்சொத்துடைமை வேரூன்றியுள்ள எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் அது பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளிலிருந்து எழுகிறது. யுரேஷிய நிலப்பரப்பில், இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளால் பல தசாப்தங்களுக்கு அதனால் கைக்கெட்டாததாக இருந்த பகுதிகளில், மேலாதிக்கம் பெறுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் இது மிகக் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது.”

நா...கு. விளங்கப்படுத்தியதைப் போல, உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் வரலாற்றுரீதியிலான மற்றும் புவிசார் அரசியல்ரீதியிலான மூலக்காரணம், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவுகட்டி சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லையென்றால், ஏகாதிபத்திய உலக போர் தவிர்க்கவியலாதது என்பதையே குறிக்கிறது. போருக்கு உந்திசக்தியாக இருக்கும் அதே முரண்பாடுகளே சோசலிச புரட்சிக்கான புறநிலை தூண்டுதலை வழங்குகின்றன. அது நான்காம் அகிலத்தை உலக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக கட்டியெழுப்புவதை மத்திய அரசியல் பணியாக்குகிறது.