World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek parliament debates new round of austerity measures

கிரேக்க நாடாளுமன்றம் புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளை விவாதிக்கிறது

By Christoph Dreier and Chris Marsden
14 August 2015

Back to screen version

கிரேக்க நாடாளுமன்றம் கடுமையான ஒரு புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகள் மீது விவாதத்தைத் தொடர உள்ளது. அவை அனேகமாக வெள்ளியன்று காலை நிறைவேற்றப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது

ஐரோப்பிய அமைப்புகளுக்கும் சிரிசா அரசாங்கத்திற்கு இடையிலான புதிய "புரிந்துணர்வு ஒப்பந்தம்" மீதான இந்த விவாதம், கூடுதல் சிக்கன நடவடிக்கை மீது நடத்தப்பட்ட ஒரு வெகுஜன வாக்கெடுப்பில் மிகப்பெருமளவில் "வேண்டாமென்ற" வாக்குகள் கிடைத்து வெறும் ஒரு மாதத்திற்குப் பின்னர் வருகிறது.

மிகப்பெரும்பான்மையினரால் கூடுதல் வெட்டுக்கள் நிராகரிக்கப்பட்டதை சிரிசா தலைமையிலான அரசாங்கம், ஐரோப்பிய வங்கிகளுடன் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஓர் உடன்படிக்கையைப் பாதுகாக்க நகர்ந்ததன் மூலமாக விடையிறுத்தது.  

அந்த முன்மொழியப்பட்ட உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்காக, பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் பகிரங்கமாகவே, சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான புதிய ஜனநாயகம், PASOK மற்றும் To Potami ஆகிய எதிர்கட்சிகளது ஆதரவின் மீது தங்கியுள்ளார். சிரிசாவிற்குள் "இடது அரங்கின்" பிரிவுகளும், அத்துடன் சிப்ராஸின் கூட்டணி பங்காளிகளும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாசிச கோல்டன் டௌன் ஆகியவையும் அந்த முன்மொழிவுக்கு எதிராக அவை வாக்களிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளன

வியாழனன்று அந்த சட்டமசோதா சுமார் ஒன்பது மணி நேரம் குழுவிவாதங்களுக்குள் விவாதிக்கப்பட்டதால், பிரதான நாடாளுமன்ற விவாதம் காலையில் ஆரம்பிக்கையிலேயே தாமதப்பட்டது. அரசாங்கத்திற்கு இடது அரங்கம் (Left Platform) அதன் விசுவாசத்தைக் காட்டிவருகின்ற நிலையில், அது முன்னாள் எரிசக்தித்துறை மந்திரி பானஜியோடிஸ் லவாஷானிஸ் இன் கீழ், எதிர்ப்பு நாடகம் ஒன்றை நடத்தியது. சிப்ராஸிற்கு மூடுதிரை வழங்குவதிலும் மற்றும் சிரிசா தலைமையிலான அரசாங்கத்தை சிக்கன நடவடிக்கையை எதிர்க்கும் ஒரு இயங்குமுறையாக சித்தரித்துக் காட்டுவதிலும் இடது அரங்கம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளதுடன், தொடர்ந்து வகித்தும் வருகிறது என்ற நிலையில், இந்த எதிர்ப்பு ஓர் அரசியல் மோசடியாகும்.

அந்த விவாதத்திற்கு முன்னதாக லவாஷானிஸ் அறிவிக்கையில், பன்னிரெண்டு ஏனைய சிரிசா அங்கத்தவர்களோடு சேர்ந்து ஒரு பகிரங்க அறிக்கையில் "அந்த புதிய புரிந்துணர்வுக்கு எதிராக" ஒரு நாடுதழுவிய இயக்கத்தைக் கட்டமைக்க அவர் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். சிரிசாவின் அந்த பன்னிரெண்டு அங்கத்தவர்களும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் கிடையாது. “அரசாங்கம் மற்றும் சிரிசாவின் பாதையிலிருந்து வேறுபட்ட வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்க" லவாஷானிஸ் தெளிவாக முடிவு செய்துவிட்டார் என்று கூறி சிப்ராஸ் தலைமை விடையிறுத்தது.  

செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு கட்சி மாநாட்டுக்கு முன்னரே வெளியேற்றங்கள் செய்வது குறித்தும் மற்றும் முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவது குறித்தும் அங்கே இப்போது பேச்சு உள்ளது. அத்தகைய தேர்தல்கள் சிரிசாவிற்கும் மற்றும் ஒன்று அல்லது அதற்கு அதிகமான எதிர் கட்சிகளுக்கும் இடையே ஏதோ விதமான தேசிய கூட்டணி அமைக்க இட்டுச் செல்லும்.    

சிரிசா அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முறைமைகள் முந்தைய அரசாங்கங்களால் திணிக்கப்பட்ட தாக்குதல்களை எல்லாம் கடந்து செல்கிறது. ஓர் ஆழ்ந்த மந்தநிலைமை சூழலில், நாடாளுமன்றமானது சிறு விவசாயிகளையும் மற்றும் வறிய வீட்டு உரிமையாளர்களையும் கடுமையாக பாதிக்கும் வகையில் சமூக வெட்டுக்கள் மற்றும் வரி உயர்வுகளைத் தீவிரப்படுத்தும் ஒரு சட்டமசோதாவை அனேகமாக நிறைவேற்றக்கூடும்.

அதிக கடன்பாக்கிகளுக்காக அரசு சொத்துக்களைத் தனியார்மயமாக்கவும் மற்றும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1சதவீதத்திற்கு அதிகமாக சேமிப்பதற்காக, ஏற்கனவே மிக குறைவாகவுள்ள ஓய்வூதியங்களை வெட்டவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.   

இது தொடக்கம் மட்டுமே ஆகும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிரேக்க அரசாங்கத்தின் மற்றும் நாடாளுமன்றத்தின் பணிகளுக்கான மிகவும் விரிவான குறிப்புரைகளுடன், இந்த "புரிந்துணர்வு ஒப்பந்தம்" 29 பக்க ஆவணமாக உள்ளது. பொருளாதாரத்தை கிரீஸே நடத்துவதன் மீது எந்தவித ஜனநாயகரீதியிலான கணக்கெடுப்பையும் அது முற்றிலுமாக நிராகரிப்பதுடன், அது அதன் செயல்பாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்துகிறது.

அந்த அதிகாரிகள் 2015, 2016, 2017 மற்றும் 2018 இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் முறையே -1.25, 0.5, 1.45 மற்றும் 3.5 சதவீதம் முதன்மை உபரி இலக்குகளை அனுமானித்து, அதற்கேற்ப ஒரு புதிய நிதிய போக்கைத் தொடர்வார்கள்,” என்று அந்த புரிந்துணர்வு குறிப்பிடுகிறது. இந்த அறிவுறுத்தல்கள், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டதை விட கூடுதலாக கடுமையான சிக்கன நடவடிக்கைகள் என்பதைக் குறிக்கின்றன.

ஆகவே ஏதென்ஸிற்கு வழமையாக விஜயம் செய்யும், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் (அனேகமாக) சர்வதேச நாணய நிதியத்தின் (“முக்கூட்டு”) அதிகாரிகளிடமிருந்து வெளியாகும் கூடுதல் கோரிக்கைகளை சிரிசா நிர்வாகம் விரைவிலேயே எதிர்கொள்ளும்

கிரேக்க புள்ளிவிபரங்கள் அமைப்பிடமிருந்து வந்த புள்ளிவிபரங்கள் துல்லியமானவையா என்பதன் மீது சர்ச்சை நிலவுகிறது. இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சற்றே பொருளாதார வளர்ச்சியை அது எடுத்துக்காட்டி இருந்தது. ஆனால் அவை அவ்வாறு இருந்தாலுமே கூட, ஓர் ஆழ்ந்த பின்னடைவில் சிக்கியுள்ள கிரீஸ், கூடுதல் வெட்டுக்களை மட்டுமே அதிகரிக்கும். ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்களே கூட, இந்தாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமும், அடுத்த ஆண்டு 1.3 சதவீதமும் வீழ்ச்சி இருக்குமென அனுமானித்தன.

கிரீஸின் கடனைப் பொறுத்த வரையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் மிகப்பெரிய சுமையை சுமத்துகிறது. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் நேர்மறையான புள்ளிவிபரங்களே கூட, அடுத்த ஆண்டு கடனுக்கும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான உயர்வு விகிதம் 201 சதவீதத்திற்கு இருக்குமென முன்கணிக்கிறது. 2009 இல், மீட்பு பொதிகள் என்றழைக்கப்பட்டவைகளுக்கு முன்னதாக, அந்த விகிதம் 130 சதவீதமாக இருந்தது.

எவ்வாறிருந்த போதினும் ஜேர்மன் அரசாங்கமோ கிரீஸிற்கு கடன்வழங்குனர்களிடமிருந்து, அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பிரதானமாக ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வங்கிகளிடமிருந்து எந்தவொரு குறைப்பையும், மீண்டும் மீண்டும் நிராகரிக்கிறது.

ஜேர்மன் துணை நிதி மந்திரி ஜென்ஸ் ஸ்பாஹ்ன், வானொலி சேவையான Deutschlandfunk இற்கு கூறுகையில், “தவணைமுறை கடன் நிவாரணத்தின் கீழ் நீங்கள் முதிர்வுகாலத்தை, அதாவது வட்டித்தொகைகள் செலுத்தாமல் இருப்பதற்கான காலத்தை அல்லது திருப்பிசெலுத்தும் காலத்தை நீடிப்பது குறித்தும் பேசலாம். அதுகுறித்து நாங்களுமே பேச முடியும், நாங்கள் எப்போதுமே அதை கூறி வருகிறோம்,” என்றார்.

அதேநேரத்தில் நிதி அமைச்சகமோ, கிரேக்க நாடாளுமன்றத்தில் "சம்மத" வாக்குகள் கிடைத்தாலும் கூட, அந்த உடன்படிக்கைக்கு உத்தரவாதமில்லை என்பதையே தெளிவுபடுத்தி உள்ளது. யூரோ மண்டல நிதி மந்திரிமார்கள் அந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க இன்று ஒன்றுகூடுவார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், அதன் பின்னர் பல நாடாளுமன்றங்கள் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டியிருக்கும். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் செவ்வாய் அல்லது புதனன்று ஒரு வாக்கெடுப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது.  

முக்கூட்டிடம் வாங்கிய பழைய கடன்களைத் திரும்ப செலுத்துவதற்கும் மற்றும் அரசு திவால்நிலைமையைத் தவிர்ப்பதற்குமாக 86 பில்லியன் யூரோ கடன்களை அந்நாட்டிற்கு வழங்கும் ஒரு புதிய கடன் திட்டம் கிடைக்குமென கிரேக்க அரசாங்கம் நம்பி வருகிறது.

ஜேர்மன் நிதிமந்திரி வொல்ஃப்காங் சொய்பிள (CDU) அவருக்கு இன்னும் அதிக "தெளிவுபடுத்தல்" அவசியப்படுவதாக புதனன்று அறிவித்தார். அந்த அமைச்சக நாளிதழ் ஒன்றின் கருத்துப்படி, சொய்பிள அதிக துல்லியமான தனியார்மயமாக்கல் மூலோபாயத்தைக் கோரி வருகிறார். அதிகமான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்குவதற்கு மாறாக மிகவும் தாமதமாக அக்டோபரில் அல்லது நவம்பரில் தொடங்குகின்றன என்று அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.   

ஆனால் சிரிசாவின் அடிபணிவுக்கு ஐரோப்பிய அரசாங்கங்களிடமிருந்து வரும் பொதுவான பிரதிபலிப்பு சாதகமானதாக உள்ளது. “மீளாய்வு நடவடிக்கையின் போது கிரேக்க அதிகாரிகளின் மிக சிறந்த ஒத்துழைப்பு, பல மாத பேரம்பேசல்களுக்குப் பின்னர் இந்த உடன்படிக்கையைச் சாத்தியமாக்கி இருப்பதாக" பாராட்டி ஐரோப்பிய அமைப்புகள் ஓர் அறிக்கை வெளியிட்டன.  

ஐரோப்பிய ஆணைக்குழு வெள்ளியன்று எந்த உடன்படிக்கையும் எட்டப்படாமல் போகுமானால்  எவ்விதமான நிலைமைக்கும் தயாரிப்பு செய்து வருகிறது என்று செய்தி தொடர்பாளர் அனிக்கா பிரைட்ஹார்ட் கருத்து தெரிவித்தார். இத்தகைய சூழலின் கீழ், ஓர் உடனடி திவால்நிலைமையைத் தடுப்பதற்காக, ஜேர்மனி கூறிய விதத்தில், ஐரோப்பிய நிதியியல் ஸ்திரப்பாட்டு இயங்குமுறையிலிருந்து ஒரு இணைப்பு கடன் சாத்தியமாகும் என்று பிரைட்ஹார்ட் தெரிவித்தார். இந்த மூன்றாம் கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் மொத்தத்தில் பங்கெடுக்க விரும்புமா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.    

ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் மீண்டுமொருமுறை ஏதேனும் ஒரு வடிவத்தில் கடன் மீட்சியை ஒப்புக்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி டெலியா வெல்குலைஸ்கு அழைப்புவிடுத்துள்ளார். அத்துடன் கோரப்பட்டு வருகின்ற சிக்கன நடவடிக்கைகளின் அளவு உத்தரவாதமின்றி இருப்பது குறித்தும் அது பொருளாதார பொறிவை மற்றும் சமூக கிளர்ச்சியைத் தூண்டிவிடக்கூடும் என்பதால் கவலை வெளியிட்டார்.