World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election results foreshadow political upheavals

இலங்கை தேர்தல் முடிவுகள் அரசியல் எழுச்சிகளை முன்னறிவிக்கின்றது

By K. Ratnayakeo
18 August 2015

Back to screen version

உள்ளூர் நேரம் நண்பகல் வரை, நேற்றைய இலங்கை பொதுத் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 13 இன் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (.தே..), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை (சுதந்திர முன்னணி) விட சற்றே முன்னிலையில் இருந்தாலும் ஆசன எண்ணிக்கையில் 45க்கு 43 என்ற வித்தியாத்தில் பின்தங்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஆறு ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இரண்டு இடங்களையும் மற்றும் சுதந்திர முன்னணி பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (.பி.டி.பி.) ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன.

பெறுபேறு அறிவித்தல்கள் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ் (AFP) செய்தியானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தோல்வியை ஒப்புக்கொண்டார் என்று காலையில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்ற இராஜபக்ஷ, பிரதமராக மறுபிரவேசம் செய்ய முயற்சி செய்து வந்தார்.

.எஃப்.பி. அறிக்கை உறுதி செய்யப்படாவிட்டாலும், வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் உள்ள சுதந்திர முன்னணியின் முகவர்களிடம் இருந்து இராஜபக்ஷ தகவல் பெறும் சாத்தியம் உள்ளது. .தே.. தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (UNFGG) 11 தேர்தல் மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தன்னுடைய கட்சி 8 மாவட்டங்களிலேயே வெற்றி பெற்றதாகவும் .எஃப்.பி.யிடம் இராஜபக்ஷ கூறியுள்ளார். மற்ற மூன்று மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. "பிரதமராக வருவதற்கான தனது கனவு" மங்கிப்போனது என இராஜபக்ஷ அந்த செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஒரு முழுமையான பாராளுமன்ற பெரும்பான்மைக்கு தேவைப்படும் 113 ஆசனங்களை எந்த கட்சியும் பெறாது என அவர் கூறினார்.

முழு தேர்தல் முடிவுகளும் வெளிவந்தால் மட்டுமே நிச்சயமாக எதையும் சொல்ல முடியும். .தே.. முன்னிலையில் இருந்தாலும் 113 ஆசனங்களை பெற முடியாவிட்டால், அது தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி உட்பட மற்ற கட்சிகளிடம் ஆதரவு தேட நிர்ப்பந்திக்கப்படும். அது சந்தேகத்திற்கிடமின்றி சுதந்திர முன்னணியில் அதிருப்தி கண்டவர்களை அல்லது "கட்சி தாவலுக்குத்" தயாராக இருப்பவர்களையும் ஈர்க்க முயற்சிக்கும்.

அத்தகையதொரு முடிவு பல மாதங்களாக கொழும்பில் நிலவி வரும் அரசியல் நெருக்கடியை உக்கிரமாக்கும். .தே.. போலவே, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியும் சிங்கள அதி-தீவிரவாத ஜாதிக ஹெல உறுமய (JHU), சுதந்திர முன்னணியில் அதிருப்தி கண்ட ஒரு குழுவினர், அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி போன்ற தீவின் முஸ்லீம் மற்றும் தமிழ் சிறுபான்மையினரை அடித்தளமாகக் கொண்ட கட்சிகளையும் உள்ளடக்கிக்கொண்டுள்ளது.

அது பாராளுமன்ற பெரும்பான்மைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் திரும்ப நிர்பந்திக்கப்பட்டால், .தே.. வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரப் பகிர்வுக்கான தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கையை கசப்புடன் எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமயவின் விரோதத்தை சந்திக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்புடன் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கு மூலம் நாட்டின் தமிழ் தட்டுக்களின் சிறப்புரிமைகளை விரிவாக்கிக்கொள்ள முயன்று வருகிறது.

அதிகாரத்திற்கு வருவதற்கான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட முயற்சியை ஜனாதிபதி சிறிசேன, சிறுபான்மை .தே.. அரசாங்கம், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா மற்றும் அதன் மூலோபாய கூட்டாளியான இந்தியாவும் தீவிரமாக எதிர்த்தன. .தே.. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினதும் ஆதரவுடன் வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு சமமான ஒன்றில் ஜனவரி தேர்தலில் இராஜபக்ஷவை சிறிசேன தோற்கடித்தார்.

இராஜபக்ஷ அகற்றப்பட்டமை, பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கை கீழறுத்து சீனாவிற்கு எதிரான யுத்தத்தை தயாரிக்கும் இலக்கிலான அமெரிக்கவின் "ஆசியாவில் முன்னிலை" என்ற பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சி முறைகள் சம்பந்தமாக அன்றி, அவர் பெய்ஜிங் உடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளுக்கு விரோதமாகவே வாஷிங்டன் அவரை எதிர்த்தது.

அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் இலங்கை தேர்தல் பற்றிய கனிசமான கருத்துக்கள் அமெரிக்க கவலைகளை பிரதிபலித்தன. “வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மீண்டும் வரும் எதிர்பார்ப்பு மங்கலாகவே உள்ளது" என  நியூயார்க் டைம்ஸ் தலைப்பிட்டிருந்தது. வாஷிங்டன் போஸ்ட், "இலங்கையின் புதிய அரசாங்கம் சீனாவிடம் இருந்து பிரிய முடியுமா?" என தலைப்பட்டிருந்தது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் தலைப்பு: "இராஜபக்ஷ இலங்கை தேர்தலில் மீண்டும் வரமுடியுமா?"; மற்றும் பைனான்சியல் டைம்ஸ், "இலங்கை தலைவர் தேர்தலில் மீண்டும் வர திட்டமிடுகிறார் " என தலைப்பட்டிருந்தது.

அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய மற்றும் தெற்காசிய கண்காணிப்பு அமைப்புக்களில் இருந்து உட்பட நூற்றுக்கணக்கான சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கையில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் ஜனநாயக சீர்திருத்தம் என்று அழைக்கப்படும் மற்றும் வன்முறையற்ற தேர்தலைப் பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டுக்கள் இந்த இரண்டு அமெரிக்க ஆதரவு அரசியல்வாதிகளின் பழைய குற்றங்களை மட்டுமன்றி அவர்கள் ஏற்கனவே அதிகாரத்தில் தொங்கிக்கொள்ள பயன்படுத்தி வரும் ஜனநாயக-விரோத வழிமுறைகளையும் மூடி மறைப்பதாகும்.

ஜனவரி தேர்தலில் போட்டியிடுவதற்காக இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்த சிறிசேன, சுதந்திர முன்னணியின் பிரதான பங்காளியான ஸ்ரீ..சு..யின் உறுப்பினரும் தலைவரும் ஆவார். சுதந்திர முன்னணி பெரும்பான்மையை வென்றால் கூட இராஜபக்ஷ பிரதமராவதை தடுக்க தனது ஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்துவதாக அவர் ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் பிரகடனம் செய்துள்ளார்.

தேர்தல் வெகு நெருக்கமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிந்ததால், சிறிசேன ஸ்ரீ..சு..யின் தலைமைப் பதவிகளில் இருந்த இராஜபக்ஷ ஆதரவாளர்களை அகற்ற நீதிமன்ற உத்தரவுகளின் ஆதரவுடன் நடவடிக்கை எடுத்தார். கடந்த வெள்ளியன்று அவர் ஸ்ரீ..சு.. மற்றும் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர்களாக இருந்த முறையே அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்தவையும் பதவி நீக்கினார். தேர்தல் முடிவடைந்த பின்னர், நேற்று, சிறிசேன ஸ்ரீ..சு..யின் மத்திய குழுவின் 56 உறுப்பினர்களில் 13 பேரை வெளியேற்றினார். அவர் ஆகஸ்ட் 24 வரை அவரது வெளிப்படையான அனுமதி இல்லாமல் மத்திய குழுவை கூட்டுவதை இருந்து தடுக்கும் நீதிமன்றம் உத்தரவையும் பெற்றார்.

ஸ்ரீ..சு..யினுள் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய சிறிசேனவின் ஜனநாயக விரோத சூழ்ச்சிகள், தன்னால் நியமிக்கப்பட்டவர்கள் தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு சரியான நபர்களை தேர்வு செய்வதை உறுதி செய்துகொள்வதை இலக்காகக் கொண்டதாகும். கட்சிகள் தேசிய ரீதியில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. தேர்தல் முடிவுகளின் இடைவெளி குறுகியதாக இருந்தால், அடுத்த அரசாங்கத்தை தீர்மானிப்பதில் இந்த நியமனங்கள் தீர்க்கமானவையாக இருக்கும்.

இதுவரையான முடிவுகளில் இருந்து, சுதந்திர முன்னணியானது குறிப்பாக தெற்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் கிராமப்புற மாவட்டங்களில் அதிக வாக்குகளைப் பெற்றது. இராஜபக்ஷ, 2009ல் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதாகப் பீதியை கிளறிவிடுட்டு, சிங்களப் பேரினவாத கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மோசமான தமிழர்-விரோத இனவாத பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்த பிற்போக்கு பிரச்சாரமானது ஜனநாயக உரிமைகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களில் இராஜபக்ஷ சாதனையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதை குறிக்கோளாகக் கொண்டிருந்தது. எனினும் அவரால், சிறிசேன மற்றும் .தே.. அரசாங்கத்தையிட்டும் அதன் வாக்குறுதிகள் மீறப்பட்டதையிட்டும் அதிகரித்து வரும் அதிருப்தியை சுரண்டிக்கொள்ள முடிந்தது. இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள், சீன முதலீடுகள் மற்றும் அரச ஆதரவில் இலாபம் பெற்ற புதிதாக வளர்ந்த செல்வந்த வணிக உயரடுக்குப் பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியினால் ஓரங்கட்டப்பட்ட மற்றும் வாஷிங்டனிடம் இருந்து அந்நியப்படுவதன் விளைவுகளையிட்டு அச்சம்கொண்ட இலங்கை ஆளும் வர்க்கத்தின் பகுதியினரால் அவர் கசப்புடன் வெறுக்கப்பட்டார். .தே.. அதன் அமெரிக்க-சார்பில் பிரசித்தி பெற்றதோடு அதன் தலைவர் விக்கிரமசிங்க, வாஷிங்டனுடன் நெருங்கிய உறவு கொண்டவராவார்.

.தே.. வணிக சார்பு கொள்கைகளை செயல்படுத்துவதில் நீண்ட பாரம்பரியம் கொண்ட, மற்றும் ஸ்ரீ..சு.. போலவே உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்க பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்துவதிலும் பேர் போன, இலங்கையில் மிகப் பழைய முதலாளித்துவக் கட்சியாகும். .தே.. 1977ல் திறந்த சந்தை மறுசீரமைப்பு, தனியார்மயமாக்கம் மற்றும் சமூக சேவைகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததுடன், 1980ல் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கு நூறாயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது.

எந்தக் கட்சி -.தே.. அல்லது ஸ்ரீ..சு..- இறுதியாக அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும், அது சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கன திட்டத்தை துரிதப்படுத்தும். அது தொழிலாளர்கள் இளைஞர்கள் மற்றும் வறியவர்களின் எதிர்ப்பை நசுக்க அடக்குமுறை நடவடிக்கைகளை பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை.

மூன்று தேர்தல் மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் சகல கட்சிகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயாதீன இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்ப இந்த தேர்தலில் போராடியது. வரவிருக்கும் நாட்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மற்றும் வாக்குகள் உட்பட தேர்தல் முடிவு பற்றி ஒரு மிகவும் விரிவான பகுப்பாய்வை நாம் வழங்குவோம்.