World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Efforts collapse to form Republican front to block neo-fascists in French regional elections

பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களில் நவ-பாசிசவாதிகளைத் தடுப்பதற்கான "குடியரசு முன்னணி" உருவாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன

By Alex Lantier
11 December 2015

Back to screen version

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் பிராந்திய தேர்தல்களது முதல் சுற்றில் நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் (FN) முன்னொருபோதும் இல்லாத அளவிலான வெற்றியை அடுத்து, அந்நாட்டின் 13 பிராந்தியங்களிலும் தேசிய முன்னணியை தடுப்பதற்கு ஏனைய சகல கட்சிகளைக் கொண்ட ஒரு பொதுவான "குடியரசு முன்னணியை" (Republican Front) உருவாக்கும் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தன. பிரான்சில் நவ-பாசிசவாத கட்சி அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கும் முதலாளித்துவ வர்க்க அரசியல் அமைப்பின் பாரம்பரிய இயங்குமுறைகள் செயலிழந்து வருகின்றன.

இந்த வாரயிறுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்புக்கு முன்னதாக, குடியரசு கட்சியின் (LR) பழமைவாத முன்னாள்-ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, இறுதியில், FN க்கு எதிரான வாக்குகளை ஒன்றுதிரட்ட, PS மற்றும் FN க்குப் பின்னால், அவரது கட்சி LR மூன்றாவது இடத்தைப் பிடித்த பிராந்தியங்களில் ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்காக ஒரு "குடியரசு முன்னணிக்கு" வாக்களிக்குமாறு அழைப்புவிடுக்காது என்று அறிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுக்குப் பின்னர், பிரான்சின் 13 பிராந்தியங்களில் 10 இல் PS, LR மற்றும் FN க்கு இடையே மும்முனை போட்டி எழுந்துள்ள நிலையில், எவ்வாறு எதிர்நடவடிக்கை எடுப்பது என்பதில் முதலாளித்துவ கட்சிகளுக்குள் பிளவுகள் கூர்மையடைந்து வருகின்றன.

திங்களன்று, சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ், FN வெற்றி பெறக்கூடிய மூன்று பிராந்தியங்களில் மட்டும், அதற்கு எதிராக LR தலைமையிலான வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அவரது கட்சி வாக்காளர்களுக்கு அழைப்புவிடுத்தார். தேசிய முன்னணியின் கட்சி தலைவர் மரீன் லு பென் தலைமையிலான வேட்பாளர்களைக் கொண்ட Nord-Pas de Calais பிராந்தியம், மரீன் லு பென்னின் அக்கா மகள் மரியோன் மரிஷால்-லு பென் (Marion Maréchal-Le Pen) தலைமை வகிக்கும் Provence-Alpes-Côte dAzur மற்றும் Alsace-Lorraine-Champagne-Ardenne ஆகியவை அம்மூன்று பிராந்தியங்களாகும். இந்த கடைசி பிராந்தியத்தில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் தலைவர் Jean-Pierre Masseret இத்தருணத்தில் வால்ஸிற்குக் கீழ்படிய மறுத்துள்ளார், அவர் தேசிய நிர்வாக சபையை எதிர்த்து, அவரது வேட்பாளர்களை தொடர்ந்து போட்டியில் நிறுத்த திட்டமிட்டுள்ளார்.

ஒரு "குடியரசு முன்னணிக்கான" அழைப்புகள் தோல்வி அடைந்துள்ளதற்கு, பரந்த அர்த்தத்தில், ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும், இராணுவவாதம், அகதிகள்-விரோத மனோபாவம் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் போக்கில், ஜனநாயக கோட்பாடுகளைக் கைத்துறந்திருப்பதும் காரணமாகும். சோசலிஸ்ட் கட்சி ஏற்கனவே பத்து பில்லியன் கணக்கான யூரோக்கள் சமூக வெட்டுக்களால்  மோசமாக மதிப்பிழந்து போயுள்ளது. ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடி நிலையை தோற்றுவிக்கும் ஓர் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற PS சூளுரைத்துள்ளதுடன் சேர்ந்து, பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகால நெருக்கடி நிலைமையின் கீழ், இப்போது, தேர்தல்கள் தோற்றப்பாட்டளவில் துப்பாக்கிமுனையில் நடந்து வருகின்றன.

இத்தகைய நிலைமைகளின் கீழ், குடியரசு கோட்பாடுகளை, அதாவது 1789 பிரெஞ்சு புரட்சியின் பாரம்பரியத்துடன் இணைந்த சமூக வெற்றிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தங்களுக்குப் பின்னால் அணிதிரளுமாறு வாக்காளர்களுக்கு சோசலிஸ்ட் கட்சியின் அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமாக முறையிடுவது, எந்தவிதத்திலும் பாரிய வாக்காளர்களை ஈர்க்கக் கூடியதாக இல்லை.

குடியரசு முன்னணியில் எந்த உள்ளடக்கமும் இல்லை என்பதால் அதில் அர்த்தமே இல்லை, என்று L Alsace பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் பசுமைக் கட்சி நிர்வாகி Danielle Auroi ஒப்புக்கொண்டார். அப்பேட்டியில் அப்பெண்மணி, அவர் கட்சியை அவரது கூட்டாளியான சோசலிஸ்ட் கட்சியின் சிக்கனத் திட்டங்களிலிருந்து தூர விலக்கி வைக்க முயன்றார். பாரிய மக்கள் அடுக்குகளுக்கு ஆதரவான கொள்கைகளைச் செயல்படுத்த இலாயக்கற்று இருக்கையில், ஒரு குடியரசு முன்னணி மீது நம்பிக்கைகளை ஊக்குவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, என்றார்.

உண்மையில், இரண்டாம் உலக போர் முடிவில் பாசிச விச்சி ஆட்சியின் பொறிவுடன் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்டிருந்த அரசியல் கருத்தொற்றுமையை ஆளும் வர்க்கம் இழந்து வருகிறது. இக்கருத்தொற்றுமை மட்டுப்பட்ட சமூக நல கொள்கைகளின் அவசியத்தை மட்டுமல்லாது, மாறாக பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு தொடக்க கால பிரான்ஸ் வரலாற்றில் ஆழ்ந்து வேரூன்றிய குடியரசு-விரோத முதலாளித்து அரசியல் வடிவங்களைக் குறைத்துக்காட்டவும் வலியுறுத்தியது.

ஆனால் இப்போது தீவிரவலது குட்டி-முதலாளித்து தேசியவாதம், அதன் முடியாட்சி வண்ணம் பூசப்பட்டவை உள்ளடங்கலாக, மீண்டும் பிரெஞ்சு அரசியல் வாழ்வில் ஒரு பிரதான காரணியாக எழுச்சி பெற்று வருகிறது. அரசியல் சஞ்சிகை Charles க்கு பரவலாக வெளியிடப்பட்ட ஜூனில் அளித்த பேட்டியில், மரியோன் மரிஷால்-லு பென், குடியரசுவாதத்திலிருந்து (Republicanism) விலகி இருக்க வலியுறுத்தியதுடன், முடியாட்சி ஆட்சி வடிவங்களுக்குச் சாத்தியமான ஆதரவைக் காட்டியிருந்தார்.

அவர் கூறுகையில், அதுவும் ஓர் அரசியல் ஆட்சி தான், குறிப்பிட்ட குடியரசுகளில் நிலவும் ஜனநாயகத்தை விட அதிகமான ஜனநாயகம் நிலவும் முடியாட்சிகளும் இருக்கின்றன. குடியரசின் இந்த ஆவேசம் எனக்குப் புரியவில்லை. என்னைப் பொறுத்த வரையில், குடியரசு என்பது பிரான்சுக்கு மேலானதில்லை, என்றார்.

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கில் அங்கே ஜனநாயகத்திற்கு எந்த ஆதரவு தளமும் இல்லை என்பது முன்பினும் தெளிவாகிறது, ஜனநாயக உரிமையின் பாதுகாப்பானது அனைத்து வெவ்வேறு கன்னைகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றுதிரட்டப்படும் தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது.

அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்கள் பெரிதும் அடுத்த தேர்தல் சுழற்சியின் மீது, அதாவது தெளிவாக 2017 இளவேனிற்கால ஜனாதிபதி தேர்தல் மீதும் மற்றும் மரீன் லு பென் வெற்றி பெற்று அதிகாரத்தைப் பெறும் சாத்தியக்கூறு மீதும் ஒருமுனைப்பட்டுள்ளன. பாரியளவில் மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததற்கு இடையிலும் தற்போது தேசிய முன்னணி சுமார் 30 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதால், லு பென்னுக்கு எதிரான ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் மீதமுள்ள தேசிய முன்னணிக்கு எதிரான வாக்காளர்களை யாரால் சிறந்த முறையில் அணித்திரட்ட முடியும் என்பதில் LR, PS மற்றும் அவற்றின் கூட்டாளிகளுக்கு இடையே கடுமையான போட்டி எழுந்துள்ளது.

ஆனால், "குடியரசு முன்னணி" மீதான விவாதத்தை போலவே, இத்தகைய மேலோட்டமான கணக்கீடுகள், இதற்கிடையில் ஆளும் வர்க்கம் பின்தொடர விரும்புகின்ற வலதுசாரி போக்கின் பாதிப்புகளை உதறிவிடுகின்றன. ஒன்றரை ஆண்டுகளில், 70 சதவீத FN-விரோத பெரும்பான்மை நீடித்திருக்குமா என்பது தெளிவாக தெரியாது. ஏனைய பிரதான ஐரோப்பிய சக்திகளுடன் இணங்கிய விதத்தில், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் சிரியாவில் போரையும், உள்நாட்டில்குறிப்பாக முஸ்லீம்களைக் குறிவைத்துபொலிஸ்-அரசு நடவடிக்கைகள் மற்றும் சிக்கனத் திட்டத்தையும் தீவிரப்படுத்த திட்டமிடுகிறது.

இத்தகைய கொள்கைகள் தேசிய முன்னணியின் கரங்களைப் பலப்படுத்தும் என்பது ஆளும் உயரடுக்கிற்கு நன்றாக தெரியும். ஆகவே, தேசிய முன்னணியின் அரசியல் நிகழ்ச்சிநிரலின் பெரும் பாகங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதோடு, பிரதான முதலாளித்துவ வர்க்க கட்சிகளும் மற்றும் அவற்றின் குட்டி முதலாளித்துவ விளிம்புகளும் தேசிய முன்னணியின் மேலெழுச்சியின் முன்னால் நிலை தடுமாறுகின்றன.

சோசலிஸ்ட் கட்சி, முற்றிலுமாக அது சிக்கனத் திட்ட நிகழ்ச்சிநிரலுக்குப் பொறுப்பேற்று இருப்பதால், கிரீஸில் சமூக-ஜனநாயக பசோக் (Pasok) கட்சி போலவே, அதன் பொறிவுக்கும், சிதைவுக்கும் இட்டுச் செல்லுமோ என்று அஞ்சுகிறது. சோசலிஸ்ட் கட்சி [Nord-Pas de Calais மற்றும் Provence-Alpes-Côte dAzur பிராந்தியங்களில் பின்வாங்கியமை] சோசலிஸ்ட் கட்சியினது அழிவின் தொடக்கம் என்று லு பென் கருத்துரைத்தார்.

குடியரசு கட்சியினரைப் (LR) பொறுத்த வரையில், வலதை நோக்கி முண்டியடித்து வரும் சோசலிஸ்ட் கட்சிக்கும் மற்றும் தேசிய முன்னணியின் உயர்வுக்கும் இடையே சிக்கியுள்ளது, அது அதன் பாரம்பரிய நிலைப்பாடான சோசலிஸ்ட் கட்சியை எதிர்க்கும் தலைமையாக காட்டிக் கொள்ள பெரும் பிரயத்தனத்துடன் முயல்கிறது.

லு பென்னுக்கு எதிராக PS உடன் ஒரு "குடியரசு முன்னணிக்கு" அழைப்புவிடுக்க அவர் மறுத்ததை நியாயப்படுத்தி, சார்க்கோசி விவரிக்கையில், நான் எதிர்கட்சி தலைவராக உள்ளேன். நாங்கள் தான் ஒரே மாற்றீடு என மக்களுக்கு விளங்கப்படுத்தும் ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடுவதே எனது பாத்திரம். அங்கே ஒரு மாற்றீடு உள்ளது, அவர்கள் மோசமான கூறுபாடுகளுக்கு திரும்ப வேண்டியதில்லை, அக்கூறுபாட்டைச் சேர்ந்த திருமதி லு பென், பிரான்சிற்கு என்ன அவசியப்படுகிறதோ அதற்கு முரண்பட்ட ஒரு பொருளாதார கொள்கையைக் கொண்டுள்ளார் என்பதை நான் அவர்களுக்கு விளங்க வைக்க முயன்று வருகிறேன், என்றார்.

அனைத்திற்கும் மேலாக, என்ன மேலோங்கி உள்ளதென்றால், இடது" கட்சிகள் என்றழைக்கப்படுவதன் முழு திவால்நிலைமை ஆகும், தொழிலாள வர்க்கத்தை சோசலிஸ்ட் கட்சியுடன் பிணைத்த இவற்றின் தசாப்த-கால கொள்கை, ஒரு பேரழிவை உண்டாக்கி உள்ளது.

சோசலிஸ்ட் கட்சி இணைப்பு பெற்ற இடது முன்னணியின் ஜோன்-லூக் மெலென்சோன், LR உடன் அரசியல் உறவுகளையும் அத்துடன் தேசிய முன்னணி வட்டங்களில் அவரது உறவுகளையும் காலமறிந்து அபிவிருத்தி செய்து வருகிறார், இவர் LR மற்றும் FN க்கு இடையே ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்க மறுத்து, ஒரு "குடியரசு முன்னணிக்கான" அழைப்புகளை நிராகரித்தார்.

அவர் அறிவிக்கையில், இடதுசாரி வாக்குகளுக்கு சாத்தியமில்லாத இடங்களில், நிச்சயமாக யாரையும் ஆமோதிப்பதை நான் தவிர்ப்பேன். ஒரு தனிப்பட்ட வாக்காளர் அவர் விருப்பம் போல வாக்களிப்பது என்பது அரசியல் இல்லை என்றாலும், தார்மீகரீதியில் மற்றும் தத்துவார்த்தரீதியில் ஏற்புடையதே. இதைவிட சிறந்த குறிக்கோள்கள் இருந்தால் அதற்காக அவரவரின் அரசியல் மனசாட்சியை மீறலாமா என்பதை அவரவரே கேட்டுக் கொள்ள வேண்டும். வலதா, தேசிய முன்னணியா? ஆனால் அதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா? அதைப் பிரகடனப்படுத்த வேண்டியது எங்களின் வேலையில்லை, என்றார்.

யதார்த்தத்தில், சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் விளிம்பிலுள்ள இடது முன்னணி போன்ற அதன் போலி-இடது சக்திகளும், தேசிய முன்னணிக்கோ அல்லது அதைவிட குடியரசு கட்சிக்கோ இனியும் ஒரு மாற்றீடாக இல்லை. அவர்களது பிற்போக்குத்தனமான கொள்கைகளும், சிக்கனத் திட்டங்கள் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை அவர்கள் ஒடுக்கியமையும் தான் தேசிய முன்னணியின் உயர்வுக்கு எண்ணெய் வார்த்துள்ளது.