World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Federal Reserve begins “dovish tightening” with first rate hike in nine years

ஒன்பது ஆண்டுகளில் முதல் வட்டிவிகித உயர்வுடன் பெடரல் ரிசர்வ் "மிதமான இறுக்கத்தைத்" தொடங்குகிறது

By Barry Grey
17 December 2015

Back to screen version

பரந்தளவில் எதிர்நோக்கப்பட்டிருந்தவாறு, புதனன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் நிர்வாகக் குழு, பெடரல் நிதி விகிதத்தில், அதாவது மத்திய வங்கியில் வங்கிகளது கையிருப்பின் அடிப்படையில் வழங்கப்படும் வைப்புப்பத்திர கடன்கள் மீதான வட்டிவிகிதத்தில், ஒரு கால் சதவீத புள்ளி உயர்வை அறிவித்தது. ஜூன் 2006 இல் வட்டிவிகித நிர்ணய வரம்பை பூஜ்ஜியத்தில் இருந்து 0.25 சதவீதத்திற்குள் வைக்க மாற்றிய பின்னர், டிசம்பர் 2008 நிதியியில் நெருக்கடி உச்சத்தை அடைந்த போதும் கூட அது அவ்வாறே வைக்கப்பட்டிருந்த நிலையில், பெடரலின் முதல் உயர்வாக இந்த வரம்பு விகிதம் 0.25 சதவீதத்தில் இருந்து 0.50 சதவீதத்திற்குள் வைக்க உயர்த்தப்பட்டுள்ளது.

பெடரலின் கொள்கையை வடிவமைக்கும் பெடரல் சுதந்திர சந்தை குழுவும் (FOMC) மற்றும் அதன் பெண் தலைவர் ஜெனெட் யெலெனும், அது மிகச் சிறிய உயர்வே என்று குணாம்சப்படுத்தவும், அடுத்தடுத்த உயர்வுகள் படிப்படியாக சிறுகசிறுக இருக்கும், மற்றும் காலவரையற்ற காலத்திற்கு பெடரல் வழமைக்கும் குறைவான விகிதத்தையே பேணும், அத்துடன் தொடர்ந்தும் ஒரு "இணக்கமான" நாணய கொள்கையைப் பின்தொடரும் என்று வலியுறுத்த பெரும் சிரமம் எடுத்துக்கொண்டனர்.

அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளின் பிரதிபலிப்பில் இருந்து நிதியியல் சந்தைகள் இதைத்தான் கேட்க விரும்பின என்பது வெளிப்படையாக இருந்தது. நீண்டகாலமாக சமிக்ஞை காட்டப்பட்டுவந்த, “மிதமான" (dovish) என்ற வலியுறுத்தலுடன், இந்த “மிதமான இறுக்குதல்" (dovish tightening) என்றழைக்கப்படுகிற இந்த மாற்றம், சகல மூன்று பிரதான குறியீடுகளிலும் விலை உயர்வைத் தூண்டிவிட்டது.

மதியம் 2 மணிக்கு FOMC அதன் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் 76 புள்ளிகள் உயர்ந்திருந்த டோவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு, யெலென் பத்திரிகையாளர் கூட்டத்தின் போது வீறுகொண்டு உயரத் தொடங்கி, அன்றைய வர்த்தக நாளில் 224 புள்ளிகள் (1.28 சதவீத) உயர்வுடன் நிறைவடைந்தது. ஸ்டாண்டர்டு & புவர்ஸ் 500 குறியீடு மற்றும் நாஸ்டாக் அதேபோன்ற போக்குகளைக் கொண்டிருந்தன, அவை முறையே 29 புள்ளிகள் (1.45 சதவீதம்) மற்றும் 75 புள்ளிகள் (1.52 சதவீதம்) உயர்ந்தன.

முந்தைய பெடரல் தலைவர் பென் பெர்னான்கி, "பணத்தைப் புழக்கத்தில்விடும் கொள்கை" என்றறியப்படும் அதன் பாரிய பத்திர-கொள்முதல் மற்றும் பணத்தை அச்சிடும் வேலைத்திட்டத்தை மத்திய வங்கி "குறைக்க" தொடங்குமென டிசம்பர் 2013 இல் சுட்டிக்காட்டியதன் மூலமாக, நாணய கொள்கையை வழமையாக்குவதை நோக்கி நகர்வதற்கான அவரது விருப்பத்தைச் சமிக்ஞைக் காட்டியதிலிருந்து, வங்கிகளும் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்களும் எந்தவிதமான வட்டிவிகித உயர்வுக்கும் எதிராக அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தன.

இரண்டாண்டுகளுக்குப் பின்னர் சிறிய மற்றும் சிறுகிசிறுக உயர்வுகளை ஏற்க அவை பொதுவாக தயாராகி இருந்தன என்பது, தோற்றப்பாட்டளவில் இலவச கடன்வழங்கல் முறை, எதிர்பாரா இலாபங்களை உருவாக்கி செல்வவளத்தை அடிமட்டத்திலிருந்து மிகவும் மேல்மட்டத்திற்கு கூடுதலாக திருப்பிவிட்டிருந்ததுடன், மீண்டுமொரு நிதியியல் அமைப்புமுறையைக் கவிழ்க்க அச்சுறுத்திய ஒரு புதிய கடன் கொடுக்கல்/வாங்கல் நெருக்கடியை உருவாக்கி இருந்ததன் அதிகரித்த சமிக்ஞைகளுடன் பிணைந்திருந்தது.

டிசம்பர் 16, 2008 இல் பெடரல் நிதி விகிதங்களை அண்மித்து-பூஜ்ஜிய அளவிற்கு வெட்டியதற்குப் பின்னரில் இருந்து, டோவ் 96 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது, எஸ்&பி 500 குறியீடு 124 சதவீத அளவும், நாஸ்டாக் 214 சதவீத அளவும் உயர்ந்துள்ளன. இக்காலக்கட்டத்தில் பெடரல் 3.5 ட்ரில்லியன் டாலரை வங்கியியல் அமைப்புமுறைக்குள் பாய்ச்சியுள்ளது, 400 மிகப்பெரிய பணக்கார அமெரிக்கர்களின் செல்வவளம் இரட்டிப்பாகி உள்ளது. இதற்கிடையே, கண்ணியமான சம்பளமளிக்கும் வேலைகள் அழிக்கப்பட்டு, பொருளாதாரம் எங்கிலும் கூலிகள் வெட்டுப்பட்டு தொழிலாள வர்க்க வாழ்க்கை நிலைமைகள் சிதைக்கப்பட்டுள்ளன.

ஆனால் எண்ணெய், எரிவாயு, உலோகங்கள் மற்றும் ஏனைய அடிப்படை பண்டங்களின் விலைவீழ்ச்சி, சரிந்துவரும் வர்த்தகம், உற்பத்தி பண்டங்களுக்கான தேவை குறைந்து வருவது ஆகியவற்றில் பிரதிபலிக்கும் உலகளாவிய நிஜமான பொருளாதார வளர்ச்சிக்குறைவு, இப்போது, அமெரிக்க பத்திரச் சந்தையை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கி, பெடரல், ஒபாமா நிர்வாகம் மற்றும் மத்திய வங்கிகளது மற்றும் ஐரோப்பிய-ஆசிய அரசாங்கங்களது கொள்கைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகையின் பொறிவை அச்சுறுத்துகிறது.

கடந்த வாரங்களில், அமெரிக்க உயர்-அபாய, உயர்-இலாபகர பெருமதியற்ற பத்திரச் சந்தையில் (junk bond market) அதிகரித்திருந்த நெருக்கடி, எரிசக்தித்துறையைச் சார்ந்த மூன்று நிறுவனங்களின் பெருமதியற்ற பத்திர நிதிகள் வெளியேறாமல் அடைக்கப்பட்டதில் உச்சத்தை அடைந்தது. அவற்றின் பொறிவு, எண்ணெய் விலைகள் பேரலுக்கு 40 டாலருக்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்ததால் மற்றும் வளர்ச்சிக்கு அதிகளவில் உதவும் நிறுவனங்களாலேயே பூர்த்தி செய்யவியலாதென வாடிக்கையாளர் கேட்பாணைகளைத் திருப்பியனுப்பியதன் ஓர் அலையால் தூண்டப்பட்டிருந்தது.

Third Avenue, Lucidus Capital Partners மற்றும் Stone Lion Capital இல் நிர்வகிக்கப்பட்ட நிதிகள் திரும்பப்பெறுதலுக்குத் தடைவிதித்தன, இது 1.3 ட்ரில்லியன் பெருமதியற்ற பத்திரச் சந்தையில் விற்றுத்தள்ளலைத் தூண்டியது. கடன் பெறுவதற்கான குறைந்த மதிப்பீட்டு விகிதங்கள் மற்றும் அதிக கடன் மட்டங்களைக் கொண்ட நிறுவனங்களது பத்திரங்களின் அடிப்படையில் அமைந்த இந்த உயர்-அபாய சந்தை, பெடரல் அண்மித்து பூஜ்ஜிய அளவிற்கு வட்டிவிகிதங்களைக் குறைத்ததற்குப் பின்னர் பிரமாண்டமாக விரிவடைந்ததுடன், அது நீண்டகால வட்டிவிகிதங்களைக் கீழே கொண்டு வர நிர்பந்திக்க ஏனைய முறைமைகளை எடுத்தது.

இத்தகைய கொள்கைகள், ஊக வணிகம் மற்றும் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலற்று, அவற்றின் விரிவாக்கத்திற்கே உதவின. தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் அதேபோன்ற நிதியியல் நடவடிக்கைகள் கொண்ட பத்திரச் சந்தைகளைப் பின்தொடரும் செலாவணி-வர்த்தக நிதி போன்றவை, வீட்டு அடமானக்கடன் குமிழி பொறிந்ததற்குப் பின்னர் அதிக இலாபமீட்டுவதற்கான புதிய வழிகளை முயற்சித்து, பெருமதியற்ற பத்திரங்களுக்குத் திரும்பியிருந்தன. Dealogic வழங்கும் தகவல்படி, அமெரிக்க பெருமதியற்ற பத்திர வெளியீடு 2013 இல் சாதனையளவிற்கு 361 பில்லியன் டாலரை எட்டியது, இது நிதியியல் நெருக்கடிக்கு முந்தைய ஆண்டுகளின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

கடந்த வாரம், பெருமதியற்ற பத்திர நிதிகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கை, 70 வாரங்களில் மிக அதிகமாக, 3.5 பில்லியனை எட்டியது. மேலும் இந்த நெருக்கடி பெருமதியற்ற பத்திரங்களுக்கும் அப்பாற்பட்டு பரவி வருகின்றன. மருந்து தயாரிப்புத்துறை, ஊடகத்துறை, தொலைதொடர்பு, செமிகண்டக்டர் மற்றும் சில்லரை விற்பனை தொழில்துறை நிறுவனங்களது பத்திரங்களின் விலைகள் சமீபத்திய மாதங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளன.

DoubleLine Capital நிறுவனத்தின் உலகளாவிய கடன் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் Bonnie Baha பின்வருமாறு கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் புதனன்று அவரை மேற்கோளிட்டது: “இது மொத்தத்தில் மீண்டும் 2008 நினைவுகளைத் திரும்ப கொண்டு வருகிறது, அது தான் இதை எரியூட்டிக் கொண்டிருக்கிறது. கடன் செலுத்தவியலா நிலைமைகள் அதிகரித்து வருகின்றன. அந்த பாதையில் எரிசக்தித்துறை முன்னணியில் இருக்கிறது என்றாலும் அது ஏனைய துறைகளுக்கும் பரவி வருகிறது. அது வெறுமனே எரிசக்தித்துறை அல்லது உலோகத்துறை மற்றும் சுரங்கத்துறை பிரச்சினை மட்டுமல்ல.”

செவ்வாயன்று ஒரு செய்தியில், அமெரிக்க நிதியியல் ஆராய்ச்சி அமைப்பு நிதித்துறைசாரா நிறுவனங்கள் மற்றும் வளர்ந்துவரும் சந்தை கடன்பெறுநர்களிடையே "அதிகரித்த மற்றும் உயர்ந்த கடன் அபாயங்கள்" இருப்பதைக் கண்டறிந்தது. கடன்வழங்கல் அளவைப் பாதிக்கும் ஒரு முக்கிய அதிர்வு "அமெரிக்க நிதியியல் ஸ்திரப்பாட்டையே அச்சுறுத்தக்கூடியதாக இருக்கும்" என்று அந்த அமைப்பு எச்சரித்தது.

பெருநிறுவன பத்திரங்களில் அதிகரித்துவரும் நெருக்கடி, பல தாமதப்படுத்தல்களுக்குப் பின்னர், வட்டிவிகிதங்களை உயர்த்தத் தொடங்குவதென்ற பெடரலின் தீர்மானத்தில் ஒரு பாத்திரம் வகித்ததை FOMC அறிக்கையின் வாசகங்கள் சுட்டிக்காட்டின. எதிர்கால வட்டிவிகித உயர்வுகளைக் குறித்து விவாதிக்கையில், அந்த அறிக்கை பெடரல் பல்வேறு காரணிகளோடு சேர்த்து "நிதியியல் மற்றும் சர்வதேச அபிவிருத்திகளையும்" கருத்தில் கொள்ளும் என்பதை சேர்த்திருந்தது. குறிப்பாக நிதியியல் அபிவிருத்திகளைக் குறித்த குறிப்பு, முந்தைய FOMC அறிக்கைகளை உதறிவிட்டது.

FOMC அறிக்கை பொதுவாக அமெரிக்க பொருளாதாரத்தைக் குறித்து உயர்ந்த மதிப்பீட்டை வழங்கிய நிலையில், யெலெனின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஏதேனும் இருந்ததென்றால், இன்னும் அதிக கடுமையே இருந்தது. வட்டிவிகிதங்களை உயர்த்தத் தொடங்கிய நகர்வானது அமெரிக்க பொருளாதார பலத்தின் மீதான மற்றும் பெரும் பின்னடைவிலிருந்து அது மீட்சி அடைகிறது என்பதன் மீதான நம்பிக்கையில் செய்யப்படுவதாக அறிவித்து அவர் தொடங்கினார்.

யெலெனும் சரி மற்றும் FOMC உம் சரி கிட்டத்தட்ட முழுமையாக, சமீபத்திய மாதங்களில், அமெரிக்க உற்பத்தித்துறை மற்றும் தொழில்துறையின் உற்பத்தி கூர்மையாக வளர்ச்சி குறைந்திருப்பதைக் கைவிட்டிருந்தனர், பெடரலின் நாணய இறுக்கம் எதிர்நோக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட டாலரின் செலாவணி விகித உயர்வால் உற்பத்தி வளர்ச்சிக்குறைவு அதிகரித்துள்ளது. டாலர் உயர்வானது கூடுதலாக அமெரிக்க ஏற்றுமதிகளைப் பாதிக்கிறது. இந்த வட்டிவிகிதங்களின் நிஜமான தொடக்கம் மேற்கொண்டும் டாலர் மதிப்பை உயர்த்தி, அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான தாக்கத்தை உயர்த்தக்கூடும்.

வினியோக நிர்வாக அமைப்பு (Institute for Supply Management) நவம்பரில் அமெரிக்க உற்பத்தித்துறை சுருங்கி, ஜூன் 2009 க்குப் பின்னர் அதன் மிகக் குறைந்தபட்ச மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்ததாக இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. கடந்த ஆறு மாதங்களில் மூன்று மாதங்கள் தொழில்துறை உற்பத்தி சுருங்கியது, மற்றும் செவ்வாயன்று வெளியான புள்ளிவிபரங்கள் நியூ யோர்க் மாநிலத்தின் ஆலை நடவடிக்கை அடுத்தடுத்த மாதங்களில் ஐந்தாவது முறையாக டிசம்பரில் வீழ்ச்சி அடைந்ததை எடுத்துக்காட்டின.

பெருமதியற்ற பத்திரங்களின் வீழ்ச்சி மற்றும் Third Avenue இன் பிரத்யேக கடன் நிதி (Focused Credit Fund) வெளியேறாதவாறு கடந்த வியாழனன்று அடைக்கப்பட்டமை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் யெலெனிடம் கேட்கப்பட்டது. அவர், Third Avenue தோல்வியை ஒருமுறை சம்பவமாக ஒதுக்கிவிட்டு, பெருமதியற்ற பத்திரங்கள் மீதான அழுத்தத்தைக் குறிப்பிட்டு பேசினார்.

கடுமையான எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் குறைந்த பணவீக்க விகிதம் ஆகியவை "தற்காலிக" சூழல்களே, அவை வரவிருக்கும் மாதங்களில் நீங்கிவிடும், பின்னர் இது பணவீக்க விகிதத்தை பெடரலின் 2 சதவீத இலக்கிற்கு நெருக்கமாக கொண்டு வரும் என்று புதனன்று FOMC அறிக்கையிலும் மற்றும் பத்திரிகைகளுக்கு யெலெனின் பொதுக் கருத்துக்களிலும் வலியுறுத்தப்பட்ட, அந்த பெடரலின் கருத்தை மற்றொரு செய்தியாளர் சவால்விடுத்தார். பெடரல் சுமார் இரண்டு ஆண்டுகளாக இதே மதிப்பீட்டைத் தான் கூறிவருகிறது, ஆனால் அது ஒருபோதும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லையே என்று அச்செய்தியாளர் குறிப்பிட்டார்.

யெலென் பதட்டத்திற்கு உள்ளானதாக தெரிந்தது, அவர் பெரிதும் அக்கேள்வியை மழுப்பினார். அவரால் ஒரு சமாதானமான பதிலைத் தர முடியாது ஏனென்றால் எண்ணெய் மற்றும் பண்டங்களின் விலை வீழ்ச்சி மற்றும் மிகக் குறைந்த பணவீக்கம் நீடித்திருப்பது ஆகியவை பொருளாதார மந்தநிலையின் மற்றும் வங்கியியல் அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியும் நிஜ பொருளாதாரத்தில் ஒரு நிஜமான மீட்சியைக் கொண்டு வர பெடரல் மற்றும் ஏனைய பிரதான மத்திய வங்கிகளால் முடியவில்லை என்ற யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.

வோல் ஸ்ட்ரீட் பொறிவின் ஏழாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னரும், தொடர்ந்து கொண்டிருக்கும் பணச்சுருக்க அச்சுறுத்தலானது, அமைப்புரீதியிலான நெருக்கடியின் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையிலேயே ஏற்பட்டிருக்கும் உடைவின் ஒரு வெளிப்பாடாகும், இதை யெலெனால் கூறவும் முடியாது, ஒப்புக்கொள்ளவும் முடியாது.