World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tamil People's Forum sets a new nationalist trap for Sri Lankan workers

தமிழ் மக்கள் பேரவை இலங்கை தொழிலார்களுக்கு புதிய தேசியவாத பொறிக்கிடங்கு

By V. Gnana
29 December 2015

Back to screen version

டிசம்பர் 19 தேதி வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை (பேரவை) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பு (கூட்டமைப்பு), அமெரிக்க ஆதரவு கொண்ட ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவின் மூலம் எப்பொழுதும் இல்லாதளவு மதிப்பிழக்கையில் தமிழ் தேசியவாதத்தின் வங்குரோத்து அரசியலுக்கு முகப்பூச்சு பூசும் ஒரு திவாலான சூழ்ச்சியாகும்.

பேரவையின் உருவாக்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள், ஏற்கனவே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளினதும், 2010ல் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளுமாவர். இவர்களுடன் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதவாதிகள், தொழில் வல்லுனர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களும் இணைந்திருக்கின்றனர். தமிழ் முதலாளித்துவத்தின் இந்த பிரதிநிதிகள் அனைவரும், சீனாவினை தனிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் ஆசியாவில் முன்னிலை மற்றும் அதனது இலங்கையில் வளைந்து கொடுக்கும் வாடிக்கை ஆட்சியினை அமைக்கும் முயற்சிகளின் மூலமும் பயன்பெறும் நோக்கம் கொண்டவர்கள்.

பேரவையின் ஸ்தாபகர்கள், தங்களுக்கு கூட்டமைப்புடன் அடிப்படையான அரசியல் வேறுபாடுகள் இல்லை என்பதை வலியுறுத்துகின்றனர். ஸ்தாபகர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த அமைப்பு, கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல. கூட்டமைப்புக்கு எதிரானது என்ற தோற்றப்பாட்டையும் கொடுப்பது அர்த்தமற்ற செயற்பாடு ஆகும் என்கிறார்.

ஏனைய பேரவை ஸ்தாபகர்கள் இந்தப் பேரவை அரசியல் கட்சியுமல்ல மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல என தெரிவிக்கிறார்கள்.

யதார்த்தத்தில் பேரவை, இன அடிப்படையில் இலங்கையில் தொழிலாளர்களை பிரிப்பதற்கான கூட்டமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஒரு புதிய அரசியல் மூடுதிரையினை வழங்குவதற்கு சேவை செய்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஐக்கியத்தினை எதிர்க்கும் சிங்கள முதலாளித்துவ கட்சிகளை போன்று கூட்டமைப்பு இனவாத அரசியலில் ஈடுபட்டுள்ளது.

முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களினது படுகொலைகளோடு தமிழீழ விடுதலைப் புலிகளினது முழுமையான இராணுவ தோல்வியுடன் 2009 இல் முடிவுக்கு வந்ததில் இருந்து கூட்டமைப்பின் அரசியல் சர்வதேச சமூகம் தலையிட்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கும் என்ற மந்திரத்தினை தொடர்ச்சியாக உரக்க ஒலிப்பதிலேயே தங்கியிருந்தது.

இந்த வருடத்தின் நிகழ்வுகள், கூட்டமைப்பின் அரசியல் தீர்வு, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கைகளுக்காக அல்ல பதிலாக தமிழ் முதலாளித்துவத்தினதும், மத்தியதர தட்டுகளினதும் சுயநலன்களை நோக்கி இருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்த்தலில் அமெரிக்க தலையீட்டினால் ஆரம்பிக்கப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில் சிறிசேனவின் வெற்றிக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி, பின்னர் ஆகஸ்ட் 17 ன் பாராளுமன்ற தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பகிரங்க ஆதரவு வழங்கி ஒரு புதிய அமெரிக்க சார்பு ஆட்சியினை அமைப்பதற்கு கூட்டமைப்பு அச்சாணியாக செயல்பட்டது.

அக்டோபரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உள்நாட்டு யுத்தத்தில் இராணுவமும், அரசாங்கமும் இழைத்த கொடுமையான போர்க் குற்றங்களை மூடிமறைத்து, வாஷிங்டனுடனும், கொழும்பில் இலங்கை அரசுடனும் இணைந்து இந்த தீர்மானத்தினை தயாரிப்பதற்கு கூட்டமைப்பு நேரடியாக பணியாற்றியது. இது கூட்டமைப்பின் முன்னைய கோரிக்கையான சர்வதேச விசாரணை, அக்கறையுடனானது அல்ல மாறாக அமெரிக்க நலன்களை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான அழுத்தம் கொடுக்கும் ஆயுதம் என்பதை துல்லியமாக்கியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொது மன்னிப்பு கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதிகளை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் உண்ணாவிரதத்தினை கைவிடும்படி வலியுறுத்தினர். ஜனாதிபதி சிறிசேன விரைவில் அனைவரையும் விடுதலை செய்ய உறுதியளித்திருக்கின்றார் என்ற வாக்குறுதியினையும் வழங்கினர். இன்னும் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன் அரசு இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என்று பலமுறையும் அறிவித்து விட்டது.

இந்த மாதம் நிறைவேற்றப்பட்ட சிக்கன வரவு-செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்து கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. தொழிலாளர்கள் மற்றும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் மீது தாக்குதல்களை முடுக்கி விடும் இந்த வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களின் பிரச்சினைகளை நிராகரித்த சம்பந்தனின் திமிர்த்தனமான பதில், "நீண்ட பயணமொன்றை பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவசரப்பட்டு அரசுடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது" என்பதாகும்.

ஜனவரியில் டசின் கணக்கான போலி வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த  சிறிசேனவின் ஆட்சியும், அவரது மூன்று மாத அரசாங்கமும் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து பாரிய தாக்குதல்களுக்கு தயாராகின்றது. நிறைவேற்றப்பட்ட சிக்கன வரவு- செலவு திட்டம் ஒரு ஆரம்பம் மட்டுமே.

யுத்தம் முடிந்து 6 வருடங்களாகியும் பரந்துபட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்படாதது ஒரு வெடிப்பு நிலையினை அடைந்துள்ளது. மீளக் குடியமர்வு தொடர்பாக யாழ்.மாவட்டத்தில் 9,700 ஏக்கர் நிலம், தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. 9,819 குடும்பங்கள் மீளக் குடியேறமுடியாத நிலையில் 31 நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். வடமாகாணத்தில் மட்டும் குறைந்தபட்சம் 6000 பட்டதாரிகளும், 30,000 க்கு மேற்பட்ட இளைஞர்களும் வேலையின்றி உள்ளனர்.

வடமாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம், போர் விதவைகள் உள்ளனர். யுத்தத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நகரமுடியாத நிலையில் 20,000 பேர் உள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக் குழுவில் 2500 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவசரகால சட்டத்தின் கீழ் 300 வரையானோர் சந்தேகத்தின் பேரில் விசாரணை இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சமூக நெருக்கடியானது, இந்த ஆட்சிக்கு நிபந்தனையற்று ஆதரவு வழங்கும் கூட்டமைப்பினை பலவீனப்படுத்தி இருக்கின்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் தமிழ் தேசியவாதத்திற்கு எதிரான அதிருப்தியினையும், எதிர்ப்பினையும் கட்டுப்படுத்த வேண்டி தமிழ் முதலாளித்துவம் ஒரு புதிய அமைப்பினை முன் தள்ளுகின்றது. பேரவையின் நோக்கம், தமிழ் தேசியவாதத்தில் இருந்து உடைத்துக்கொண்டு வெளியேறும் அரசியல் உணர்மையுள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்களை ஒரு சோசலிச முன்னோக்கின் பக்கம் திரும்புவதை தடை செய்வதாகும்.

பேரவை, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சர்வதேச சமூகத்தின் காத்திரமான வகிபங்குடன் மட்டுமே சாத்தியமாகும் என்று தெரிவிப்பதன் மூலம் கூட்டமைப்பின் வேலைத்திட்டத்தினையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. கூட்டமைப்பு நிபந்தனை இல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், இலங்கை அரசுடனும் சம்பந்தன் கூறுவது போல் காரியம் பார்ப்பது தவறு என்று குற்றம் சாட்டுகின்றது.

பேரவையின் தோற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், தமிழர்களுக்கு தேவைப்படுகின்ற விடயம் தமிழர்களின் நலன்கள் என்ற கோணத்திலிருந்து சர்வதேசத்தை அணுகுவதல்ல. மாறாக, கூட்டமைப்பின் செயற்பாடு எப்படி அமைந்திருக்கிறது என்றால், சர்வதேசம் விரும்பிய நிகழ்ச்சி நிரலை தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதைத்தான் செய்கிறது என்கிறார்.

பேரவையின் ஸ்தாபகத்திற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமை தாங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் கஜேந்திரகுமார், ஒன்று கூட்டமைப்பின் தலைமையை அவர் [விக்னேஸ்வரன்] எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வெளியில் வந்து தலைமையை எடுத்தால்தான் அது தமிழ் மக்களுக்கும் அவருடைய நிலைப்பாட்டுக்கும் விமோசனமாக அமையும். அதற்கு எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தினக்குரலில் அழைப்பு விடுத்தார்.

கூட்டமைப்புக்குள் விக்னேஸ்வரனுக்கும் சம்பந்தன், சுமந்திரன் தலைமைக்கும் இடையே இருக்கும் தந்திரோபாய முரண்பாடுகள் அமெரிக்க ஏகதிபத்தியத்துடனும், இலங்கை அரசுடனும் இருக்கும் அவர்களது உறவுகளை எப்படி நிர்வாகிப்பது என்பதை சுற்றியே உருவாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை உறுதிப்படுத்தி நிலைநிறுத்த பெரும் முயற்சிகள் செய்யும் அமெரிக்கா, கூட்டமைப்புக்குள் உருவாகும் ஒரு நெருக்கடியின் மூலம் அரசாங்கத்தினை பலவீனப்படுத்துவதை தவிர்க்க முழு முயற்சி செய்யும்.

விக்னேஸ்வரன் அரசுக்கெதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாக விமர்சனங்கள் செய்த போதும் அவர் தமிழ் முதலாளித்துவத்தின் வசதி படைத்த தட்டுக்களின் சார்பிலேயே பேசுகின்றார். முன்னாள் நீதிபதியாகிய இவர் வடக்கில் முதலமைச்சர் பதவியினை எடுக்கும் வரை கொழும்பு ஆட்சிகளின் பிரதிநிதியாக செயற்பட்டார்.

பேரவைக்கு தலைமை தாங்கி ஒரு நாள் கூட நிறைவு பெற முதல், டிசம்பர் 20ம் தேதி யாழ்ப்பாணத்தில் சிறிசேன தலைமையில் நடைபெற்ற கார்கில்ஸ் வங்கி கிளை திறப்பு நிகழ்வில் விக்னேஸ்வரன், இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுடன் சேர்ந்து பங்குபற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில் தான் சிங்கள மக்களுக்கு எதிரில்லை ஆனால் சிங்கள கட்டிட தொழிலாளர்கள் வடக்கில் தொழில் செய்வதுடன் உடன்படவில்லை என்றார்.

சர்வதேச சமூகம் என்னும் ஏகாதிபத்திய ஆட்சிகள் மற்றும் இந்திய முதலாளித்துவத்துடனான பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையின் இனப்பிளவுகளுக்கு தீர்வுகாணமுடியும் என்ற பேரவையின் கூற்றுக்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும், தமிழ் உழைக்கும் மக்களின் கண்களில் மண்ணை தூவும் ஒரு பிற்போக்கு வேலைத்திட்டமாகும்.