World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

NATO doubles combat forces in Eastern Europe

நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் போர் படைகளை இரட்டிப்பாக்குகிறது

By Johannes Stern
6 February 2015

Back to screen version

வியாழனன்று புருசெல்ஸின் நேட்டோ தலைமையகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், அவர்களது போர் படைகளை கிழக்கு ஐரோப்பாவில் இரட்டிப்பாக்குவதென்று நேட்டோ இராணுவ கூட்டணியின் பாதுகாப்பு மந்திரிகள் முடிவெடுத்தனர். ஏகாதிபத்திய சக்திகள், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அவற்றின் நலன்களுக்கு ரஷ்யா விட்டுக்கொடுப்புகளை வழங்குமாறு செய்யவும் மற்றும் அதை அடிபணிய செய்யவும் நிர்பந்திக்க அவர்களது துருப்புகளைக் குவித்து வருகின்றன.

தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் சிறப்பு படைகளை உள்ளடக்கிய நேட்டோவின் துரித எதிர்நடவடிக்கை படை (NRF), வரவிருக்கும் காலத்தில் 30,000 சிப்பாய்களை உள்ளடக்க உள்ளது. முன்னதாக 13,000மாக தீர்மானிக்கப்பட்ட அந்த துருப்புகளின் எண்ணிக்கை, இரண்டு மடங்கிற்கு அதிகமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதில் 5,000 சிப்பாய்கள் சிறப்பு அவசரகால துரித எதிர்நடவடிக்கை படை ஒன்றுக்காக ஓராண்டுக்குள் பயிற்சி அளிக்கப்படுவார்கள். இந்த தாக்குமுகப்பு, ஒரு நெருக்கடி சூழ்நிலையில் 48 மணி நேரத்திற்குள் நிலைநிறுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த NRF படையையும் ஒரு வாரத்திற்குள் நிலைநிறுத்தவும் தயாராக இருக்கும்.

இதற்கும் கூடுதலாக மூன்று பால்டிக் அரசுகளில், அத்துடன் போலாந்து, ரோமானியா மற்றும் பல்கேரியாவில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பிரிவுகள் என்றழைக்கப்படுவதை அமைக்கவும் நேட்டோ ஒப்புக் கொண்டது. நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் கூற்றின்படி, அந்த கட்டளைப் பிரிவுகள் "முக்கியமான பிரிவுகளாகும்" ஏனென்றால் அவை "திட்டமிடும், அவை பயிற்சிகளை ஒழுங்கமைக்கும். மேலும் தேசிய படைகளை நேட்டோ பாதுகாப்புகளோடு இணைவிப்பதற்கு அவை பிரதானமாக இருக்கும்.”

அதேநேரத்தில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் தலைமையகமாக சேவை செய்து வருகிற போலாந்தின் ஸ்டெட்டின் நகரில் உள்ள நேட்டோவின் வடகிழக்கு படைப்பிரிவுகள், மேற்கொண்டும் விரிவாக்கப்பட உள்ளன. இத்தகைய மையங்கள் தென்கிழக்கு ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப்பட உள்ளன.

இந்த நடவடிக்கைகள் நேரடியாக ரஷ்யாவை நோக்கமாக கொண்டவை என்பதற்கு ஸ்டொல்டென்பேர்க் சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவர் அவற்றை "பனிப்போருக்குப் பிந்தைய நேட்டோவின் மிகப்பெரிய பலமாக" வர்ணித்தார்.

ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், அவர் கூறுகையில், “எங்களின் சொந்த கூட்டு பாதுகாப்பை அதிகரிப்பது என்று வருகையில், ஒரு விரிவாக்கப்பட்ட நேட்டோ விடையிறுப்பு படையை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் மிகவும் தயாராக இருக்கும் படை, அதாவது ஒரு தாக்குமுகப்பு படையை ஸ்தாபிப்பதற்கும் நாங்கள் அனைத்தையும் செய்வோம் ... ஒருசில காலமாக ரஷ்யாவிடமிருந்து நாங்கள் எதை பார்த்து வருகிறோமோ அதற்கு ஒரு விடையிறுப்பாகும், மேலும் அது எங்களின் சர்வதேச கடமைப்பாட்டுக்கு முற்றிலும் பொருந்திய விதத்திலேயே உள்ளது. ஆகவே இது சர்வதேச சட்டத்தை மீறி, கிரிமியாவை இணைத்துக் கொண்டுள்ள ரஷ்யாவின் ஆக்ரோஷ நடவடிக்கைகளுக்கு ஒருவிதமாக நாங்கள் எடுத்துவரும் ஒரு விடையிறுப்பாகும்,” என்றார்.

சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலக போரில் தாக்கியழித்ததும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு மூர்க்கமான நிர்மூலமாக்கும் போரை நடத்தியதுமான ஜேர்மனி, நேட்டோ தாக்குதலில் ஒரு மைய பாத்திரம் வகித்து வருகிறது. “ஜேர்மனியர்கள் முன்நிற்கிறார்கள்!” என்று ஆத்திரமூட்டும் தலைப்பிட்டு Frankfurter Allgemeine Zeitung (FAZ) இன் இணைய பதிப்பில் வெளியான ஒரு கட்டுரை, மக்களின் முதுகுக்குப் பின்னால் கிழக்கு ஐரோப்பாவின் மீள்ஆயுத பெருக்கத்திற்கு பேர்லின் எவ்வாறு முன்னோக்கி அழுத்தம் அளித்து வருகிறது என்பதை ஆவணப்படுத்தியது.

ஜனவரியின் மத்தியில் இருந்து நேட்டோவின் தரைவழி படைகளுக்குத் தலைமை கொடுத்து வருகின்ற முன்ஸ்டரில் உள்ள ஜேர்மன்-டச் அதிரடிப்படை, இப்போது துரித எதிர்நடவடிக்கை படைக்கும் தலைமை ஏற்கும். அந்த தாக்குமுகப்பின் மையம் இவ்விதத்தில் 3,000 நபர்களுடன் டச் இராணுவத்தின் ஒரு வான்வழி படைப்பிரிவையும் சேர்த்துக் கொண்டிருக்கும். ஜேர்மன் இராணுவம் 900 சிப்பாய்களுடன் சாக்சோனியின் மரீன்பர்க்கிலிருந்து குண்டுகள் தரித்த ஒரு டாங்கு படைப்பிரிவை பங்களிப்பாக அளித்து வருகிறது. வேகமாக நிலைநிறுத்தக்கூடிய பீரங்கிப்படையை நோர்வேயும் அனுப்பும். அதற்கு கூடுதலாக படைவீரர்களின் தலைமையகத்தில் பல திறன் கொண்ட தேசிய படையிடமிருந்து 450 சிப்பாய்களும் அங்கே இருப்பார்கள்.

இதற்கு மேற்கொண்டும், ஜேர்மனி ஸ்டெட்டினில் உள்ள அதன் துருப்புகளின் படைப்பிரிவை இரட்டிப்பாக்கும், அதிலிருந்து 60,000 சிப்பாய்கள் ரஷ்யா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுகையில் அனுப்பப்படுவார்கள். அங்கே ஏற்கனவே நிலைநிறுப்பட்ட துருப்புகளுக்கு, இந்த கூடுதல் நபர்களுடன், ஒரு தீவிர நிலைமையில் மிக வேகமாக நடவடிக்கை எடுக்கும் தகைமை வழங்கப்பட உள்ளன.

ஏப்ரலில் ஜேர்மன் துணைப்படை துருப்பு பிரிவு ஒன்று, கடந்த ஆண்டிலிருந்து கிழக்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க பிரிவுகளைப் பலப்படுத்தும். அவை போலாந்தில், பின்னர் லித்துவேனியா மற்றும் லாட்வியாவில் நிலைநிறுத்தப்பட உள்ளன. செப்டம்பரில் இருந்து, ஜேர்மன் விமானப்படை மீண்டுமொரு முறை பால்டிக் கடற்பகுதியில் வான்வழி உளவுவேலைகளில் பங்கெடுக்கும். ஜேர்மனி கடந்த ஆண்டு ஏற்கனவே பால்டிக்கிற்கு Eurofighterகளை அனுப்பியது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவை தற்காலிகமாக அகற்றிக் கொள்ளப்பட்டன.

அந்த கட்டுரையின் ஆசிரியர் தோமஸ் குட்ஸ்ச்கெர், ஜேர்மன் இராணுவத்துடன் ஒரு இதழாளராக முன்னர் வேலை செய்துள்ளதால் அவர் அந்த இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவராவார். அவர் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் திட்டங்கள் எந்தளவிற்கு முன்னோக்கி சென்றுள்ளன என்பதன் ஒரு யோசனையையும் வழங்குகிறார். அவர் புருசெல்ஸில் நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட நேட்டோ துரித எதிர்நடவடிக்கை படையை முன்னெடுத்து செல்லும் இராணுவ கருத்தியல் திட்டத்தை சித்தரித்தார்.

நேட்டோவின் உயர்மட்ட தளபதி துரித விடையிறுப்பு படைக்கு சமிக்ஞை அளிப்பார். பின்னர் அந்த படைகளின் பகுதிகள் ஒரு கூட்டு இடத்தில் சந்திக்கின்றன. அங்கே இருந்து, அவை நிலைநிறுத்தும் மண்டலத்திற்கு கொண்டு வரப்படும். இது வாக்களிப்பதை எளிமைப்படுத்துவதுடன், வடக்கு அட்லாண்டிக் கவுன்சிலில் அத்துடன் தலைநகரங்களிலும் அரசியல் கலந்தாய்வுகளைச் சுலபமாக்குகிறது. ஜேர்மனியில், நாடாளுமன்றம் கூட வேண்டும். வெளிப்படையான அபாயம் ஏற்படும் போது, துருப்புகளை அனுப்ப ஜேர்மன் அரசாங்கம் ஒருமனதாக முடிவெடுக்கலாம். இதனால் நாடாளுமன்றம் ஒரு முன்தேதியிட்ட உரிமையைப் பெறுகிறது,” என்று அவர் எழுதினார்.

அந்த கட்டுரை ஆயுததளவாட கையாளுகையில் ஜேர்மனி இராணுவத்திற்கு உள்ள சிரமங்களைச் சித்தரிக்கிறது. அதன் ஆப்கானிஸ்தான் நடவடிக்கைக்குப் பின்னர் அது "துருப்புகள் மற்றும் கனரக ஆயுதங்களை ஆயத்தப்படுத்துவதில் அது அனுபவம்" பெற்றுள்ள போதினும், தற்போது "அனைத்தும் மிக விரைவாக செய்யப்பட வேண்டியுள்ளது, அத்துடன் பின்வரும் புதிய கேள்விகளும் முன்னுக்கு வருகின்றன: டாங்கிகளைக் கொண்டு செல்வதற்கு இரயில்வே நிறுவனத்திடம் போதிய கிடைமட்ட சரக்கு வாகனங்கள் உள்ளதா? அல்லது அதேநேரத்திற்குள் ஒரு கப்பலில் ஏற்றி இறக்குவது எளிதாக இருக்குமா? அதிதுரித எதிர்நடவடிக்கை போர்படை விமானம் அவசியமாகும் போது, அது அமெரிக்கர்களிடம் மட்டுமே உள்ளது. கோடையில், ஒரு பிரதான ஆயத்த ஒத்திகை, இரண்டாவது நேட்டோ பரிசோதனை, திட்டமிடப்பட்டுள்ளது."

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் (கிறிஸ்துவ ஜனநாயக சங்கம், CDU) நேட்டோவினது முடிவுகளை "ஒற்றுமை மற்றும் தீர்மானத்தன்மையின் அறிகுறியாக" குறிப்பிட்டதுடன், "நேட்டோவினது உள்பலத்திற்கு அவசியமானதும்" என்றார். Süddeutsche Zeitung உடனான ஒரு பேட்டியில், அப்பெண்மணி ஜேர்மன் தலைமையிலான துரித விடையிறுப்பு படையைப் பாராட்டினார், அது "ஒருசில நாட்களுக்குள் ஆயத்தப்படுத்துவதற்கு தகைமை கொண்டது" என்று கூறியதுடன், ஜேர்மனி ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கைக்குத் திரும்புவதைப் பாராட்டினார்.

கடந்த ஆண்டுகளில் ஜேர்மனி "உக்ரேன்-ரஷ்யா மோதலில் அத்துடன் ஆபிரிக்காவில், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிக் அரசு என்றழைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் என பிரதான நெருக்கடி சூழ்நிலைகள் அனைத்திலும் அண்மித்தளவிற்கு பொறுப்புணர்வை ஏற்றுள்ளது. நேட்டோவின் உள்பாதுகாப்புக்கு எங்களின் பிரதான பங்களிப்பிலும் இதே தான் நீடிக்கிறது. நாங்கள் இராஜாங்கரீதியிலும் சரி இராணுவரீதியிலும் சரி மேற்கின் நடவடிக்கைகளில் மேலாளுமை செலுத்தி உள்ளோம். அது தான் கடமைப்பாடு," என்றார்.

யதார்த்தத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினது மற்றும் மேற்கினது வெளியுறவு கொள்கை "பொறுப்பு" என்பது மட்டுமல்ல, ஆனால் அது மூர்க்கமாகவும் மற்றும் அபாயகரமாகவும் உள்ளது. ஜனாதிபதி கௌவ்க், வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையர் மற்றும் வொன் டெர் லெயனும் 2014இன் தொடக்கத்தில், முனீச் பாதுகாப்பு மாநாட்டில் வெளியுறவு கொள்கை மீதான ஜேர்மனியின் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்தனர்.

அதற்கு வெகுசில வாரங்களுக்குப் பின்னர், உக்ரேனில் மேற்கத்திய ஆதரவிலான அரசாங்கத்தை நிறுவ மற்றும் ரஷ்யாவைச் சுற்றி வளைக்க, அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளால் ஆதரிக்கப்பட்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை பேர்லினும் வாஷிங்டனும் ஒழுங்கமைத்தன. ஓராண்டிற்குப் பின்னர், மேற்கால் தூண்டிவிடப்பட்ட உக்ரேனிய மோதல் ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் ஒரு பகிரங்க போராக தீவிரமடைய அச்சுறுத்துகின்றது.

நேட்டோவின் கூட்டத்திற்கு சமாந்தரமாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, கிழக்கு உக்ரேனிய மக்களுக்கு எதிராக ஒரு மூர்க்கமான உள்நாட்டு போரை நடத்தி வருகின்ற கியேவ் ஆட்சிக்கு அவரது ஆதரவு மீது மறுஉத்தரவாதம் அளிக்க கியேவுக்கு வந்தடைந்தார். ரஷ்ய டாங்கிகளும் போர்விமானங்களும் எல்லையைக் கடந்து வந்தால் அமெரிக்கா அதன் கண்களை மூடிக் கொண்டிருக்காது என்று கெர்ரி உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவுக்கு தெரிவித்தார்.

கிழக்கில் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக உக்ரேனிய அரசாங்கங்களின் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து ரஷ்யா அமெரிக்காவிற்கு ஓர் எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா கியேவிற்கு உயிர்பறிக்கும் ஆயுதங்களை வழங்கும் என்ற இந்த வார தொடக்கத்தில் வெளியான அறிவிப்பு, "அமெரிக்க-ரஷ்ய உறவுகளைப் பிரமாண்டமாக பாதிக்கும்" என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அலெக்சாண்டர் லுகாஷிவிச் தெரிவித்தார்.