World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The international significance of the Sri Lankan presidential election

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச முக்கியத்துவம்

By Wije Dias
7 January 2015

Back to screen version

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், இரு முக்கியமான அம்சங்களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது.

முதலாவதாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அகற்றுவதற்காக தேர்தலில் திரைக்குப் பின்னால் வாஷிங்டன் தலையீடு செய்துள்ளமை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திம் ஆசியா மற்றும் உலகம் முழுவதும் அதன் நோக்கங்களை முன்னெடுப்பதில் உள்ள ஈவிரக்கமற்ற மற்றும் பொறுப்பற்ற தன்மை பற்றிய ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்களின் இடையே, தனது போட்டியாளர்களுக்கு எதிராக போருக்கு தயாராகின்ற நிலையில், அமெரிக்கா இடைஞ்சல்களை பொறுத்துக்கொள்ளாது.

இரண்டாவதாக, சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் அதன் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவும், இலங்கையில் மட்டுமன்றி ஆசியா மற்றும் சர்வதேசம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கான பணியை அட்டவணையிட்டுள்ளனர். அனைத்து எதிர்க் கட்சிகளும் இராஜபக்ஷவின் முதலாளித்துவ போட்டியாளரான மைத்திரிபால சிறிசேனவை "ஜனநாயக மாற்றீடாக" ஊக்குவிக்கின்ற நிலையில், சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, தொழிலாள வர்க்கம் சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க போராடுவதன் மூலமே போர் ஆபத்தை எதிர்க்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, தேர்தலானது அரசியல் நெருக்கடிகளின் விளைவாக இருந்தது. இராஜபக்ஷ, தான் மூன்றாம் முறையாக தேர்தலில் நிற்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இது, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையில் ஆன தனது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ்-அரச வழிமுறைகள் மீது வளர்ந்து வரும் எதிர்ப்பு, அதேபோல், 2009ல் முடிவுக்கு வந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான  நீண்டகால இனவாத யுத்தத்தில் இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக தனது அரசாங்கத்தை குறிவைத்து முன்னெடுக்கப்படும் அமெரிக்கத் தலைமையிலான "மனித உரிமைகள்" பிரச்சாரத்தினதும் மத்தியில், தனது ஆட்சியை பலப்படுத்தக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும்.

இராஜபக்ஷ தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்கா அதன் அரசியல் பொறியை அமைத்திருந்தது. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீலசுக) பொதுச் செயலாளரும் சுகாதார அமைச்சருமான சிறிசேன, அரசாங்கத்திலிருந்து விலகி, அமெரிக்க சார்பு எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் (யூஎன்பீ) இணைந்து கொண்டதோடு தான் "எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக" போட்டியிடுவதாக அறிவித்தார். வெளிப்படையாக இந்த சதித் திட்டம் வாரங்கள் அல்லது மாதங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு அதில் வாஷிங்டனின் கைரேகைகள் பதிந்துள்ளன. ஸ்ரீலசுக உள்ளே குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ள, மற்றும் கிளின்டன் மன்றத்தின் வழியாக நெருக்கமாக வாஷிங்டன் மற்றும் வெள்ளை மாளிகையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்த நடவடிக்கையில் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார்.

தேர்தலில் அமெரிக்கத் தலையீடானது சீனாவை கீழறுப்பதை மற்றும் அதை இராணுவ ரீதியாக சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி ஒபாமாவின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையை துரிதப்படுத்துவதுடன் பிணைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களுக்கான வாய்ப்பைக் கொண்டு வரும் ஒரு சர்வதேச யுத்தக் குற்ற விசாரணையை முன்வைத்து இராஜபக்ஷவை அச்சுறுத்தி வருகிறது. புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்தை உச்சகட்டம் வரை ஆதரித்த வாஷிங்டன், பெய்ஜிங்கிடம் இருந்து இராஜபக்ஷவை தூர விலக நெருக்கும் நெம்புகோலாக, உலகம் முழுவதும் பலமுறை செய்தது போல், "மனித உரிமைகள்" பதாகையை வஞ்சத்தனமாக சுரண்டிக்கொள்கின்றது.

எவ்வாறெனினும், 2014, உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அதோடு இணைந்த பூகோள-அரசியல் பதட்ட நிலைமைகள் தீவிரமாகியிருப்பதை குறித்தது. உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் வளர்ந்துவரும் ஒரு மோதலை தூண்டிவிட்ட அமெரிக்கா, மத்திய கிழக்கில் புதிய போர்களைத் தொடுத்துள்ளதோடு ஆசியா முழுவதும் சீனாவின் மீது அழுத்தத்தை அதிகரித்து, ஆபத்தான வெடிப்பு புள்ளிகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் அனைத்து புள்ளிகளும் பரந்த பிராந்திய மற்றும் உலக போர்களை வெடிக்கச்செய்யும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. புனையப்பட்ட ஊடுருவல் (hacking) குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடகொரியா மீது முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட ஆத்திரமூட்டல், அதே போல், இலங்கை தேர்தலில் அமெரிக்காவின் உறுதிகுலைக்கும் தலையீட்டுனேயே இந்த ஆண்டு தொடங்கியுள்ளது.

ஒபாமா நிர்வாகத்தால் இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்க இனியும் நேரம் செலவிட முடியாது, அதனால் ஆட்சி மாற்றம் செய்ய அது முடிவு செய்துள்ளது. வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி இணை ஆசிரியராக செயற்பட்டு, 2009ல் வெளிவந்த ஒரு செனட் அறிக்கை, "அமெரிக்கா இலங்கையை இழக்க முடியாது" என்று அறிவித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவுக்கு எதிராக இந்திய-பசிபிக் முழுவதும் அமெரிக்கா வியத்தகு முறையில் இராணுவத்தை கட்டியெழுப்பியுள்ளதோடு கூட்டணிகளை வலுப்படுத்தி வந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, ஆசியாவில் பிரிட்டிஷ் உயர் கட்டளையகம் இலங்கையிலேயே அமைந்திருந்தது என்ற உண்மையின் மூலம், இலங்கையின் மூலோபாய மதிப்பு நிரூபணம் ஆகிறது. பென்டகனின் போர்த் திட்டிமிடலாளர்களைப் பொறுத்தவரையில், இலங்கை வழிக்கு வரவேண்டிய காலம் தாமதித்துள்ளது.

இராஜபக்ஷ வெற்றிபெற்றாலும் சிறிசேன வெற்றிபெற்றாலும் தேர்தலில் அமெரிக்கத் தலையீடானது, அனைத்து பக்கங்களிலும் பெரிதும் ஊழல், வாக்கு மோசடி மற்றும் வன்முறை மூலம் மூழ்கிப் போயுள்ள ஒரு தேர்தலில் கொழும்பு அரசியல் நெருக்கடியை தீவிரமாக்கும். நாளை வாக்களிப்புக்கு அசாதாரணமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 71,000 பொலிஸ் மற்றும் 5,000 துணை இராணுவ விசேட அதிரடிப்படை பொலிஸ் அணிதிரட்டலும் இதில் அடங்கும். முழு இராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் போலீஸ் மா அதிபரின் கீழ் அவசரத் தேவைக்குப் பயன்படுத்தப்பட உள்ளன.

இராஜபக்ஷ தான் தேர்தலில் தோல்வியடைந்தால் அமைதியாக அதிகாரத்தை கையளிப்பதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸிடம் கூறியுள்ள போதும், அவரை ஆதரிக்கும் அவரது கூட்டணியும் அல்லது இராணுவமும் அப்படியே செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 2010ல் கடைசி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், உடனடியாக தனது பிரதான போட்டியாளரான சரத் பொன்சேகாவைக் கைது செய்த இராஜபக்ஷ, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை சிறையில் அடைத்தார்.

2015ல், எவ்வாறெனினும், இராஜபக்ஷ ஒரு பெரிய சக்தியை எதிர்கொள்வார். இராஜபக்ஷ நேர்மையான முறையில் வெற்றி பெற்றாலும் கூட, அதிகாரத்தில் தொடர்வதற்கான அவரது எந்த முயற்சியும், அமெரிக்க ஆதரவுடனான ஒரு "வண்ணப் புரட்சி," வாய்ப்பை எதிர்கொள்ளும். அதற்குரிய அனைத்து அறிகுறிகளும் காணப்படுகின்றன. பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டது போல், சர்வதேச செய்தி ஊடகங்கள், குறிப்பாக பிரிட்டனில் உள்ளவை, ஏற்கனவே "ஜனநாயக" சிறிசேனவை ஊக்குவிப்பதோடு ஒரு "தேர்தல் திருட்டு," பற்றியும் சமிக்ஞை செய்கின்றன. இலங்கையில், அனைத்து முக்கிய எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து, ஆளும் கூட்டணியின் பிரிவுகள், சர்வதேச காற்று வீசும் பக்கத்தை கண்டுணர்ந்து எதிர் தரப்புக்கு மாறியுள்ளன. பல்கலைக்கழக கல்விமான்கள், கலைஞர்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுமாக முழு மத்தியதர வர்க்க தாராளவாத குழுவினரும் சிறிசேனவைச் சூழ்ந்துகொண்டுள்ளனர்.

நவ சம சமாஜக் கட்சி (NSSP), ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) ஆகிய போலி இடது அமைப்புக்கள் மிகவும் தீய பங்கை வகிக்கின்றன. இந்த முற்றிலும் பிற்போக்கான அணிக்கு ஒரு ஜனநாயக முகத்தை வரையும் பணியை அவர்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிறிசேன ஒரு மாதம் முன்பு வரை இராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்ததோடு அதன் குற்றங்கள் அனைத்திலும் பங்கு வகித்துள்ளார். அனைத்து பிரதான எதிர்க் கட்சிகளும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரித்ததோடு இராணுவத்தின் அட்டூழியங்களையும் நியாயப்படுத்தின. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க இராணுவவாதத்தை ஆதரிக்கும் நிகழ்ச்சி நிரல் மீதான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு, இராஜபக்ஷ பயன்படுத்தும் அதே பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்த இந்த அமைப்புகள் எவ்வித தயக்கமும் காட்டப்போவதில்லை.

இங்குதான் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவம் உள்ளது. தேர்தலில் யார் வென்றாலும் போர் அச்சுறுத்தல் அதிகரிக்கும் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் ஆழப்படுத்தப்படும் என தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எச்சரிப்பதோடு ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டப் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். ஒரு புரட்சிகர தலைமைத்துவம் இன்மை, அண்மைய துன்பகரமான அனுபவங்களை தொழிலாள வர்க்கத்திற்கு, குறிப்பாக எகிப்தில், கொடுத்துள்ளது. எகிப்தில் 2011ல் முபாரக் சர்வாதிகாரத்திற்கு எதிரான சமூக எழுச்சி ஒரு தொடர் முதலாளித்துவ ஆட்சிகளின் பின்னால் இழுபட்டுச் சென்று ஒரு புதிய அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கை தேர்தலானது தேசியவாதம் மற்றும் முதலாளித்துவ தேசிய அரசை அடித்தளமாகக் கொண்ட அனைத்து முன்னோக்குகளதும் முழுமையான வங்குரோத்தை அம்பலப்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் அறிவித்தவாறு: "ஏகாதிபத்திய போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமானது சர்வதேச அளவிலானதாக இருப்பது இன்றியமையாததாகும். எவ்வளவு பெரியதாக அல்லது சிறியதாக இருந்தாலும், ஒரு தேசத்தை அடிப்படையாகக் கொண்டு, ஏகாதிபத்தியத்தின் சூறையாடல் அல்லது உலக பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய நிறுவனங்களை எதிர்ப்பது சாத்தியமில்லை என்பது வெளிப்படையானதாகும். "

இலங்கை தேர்தலில் அமெரிக்கத் தலையீடானது போருக்கான ஏகாதிபத்திய உந்துதல் தீவிரப்படுத்தப்படும் போது பிராந்தியம் பூராவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கப் போவது என்ன என்பது பற்றிய ஒரு முன்னறிவிப்பாக இருக்கிறது. போர் மற்றும் சமூக அவலத்தின் தோற்றுவாயான இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கிவீசுவதை இலக்காகக் கொண்டு, முக்கிய ஏகாதிபத்திய மையங்கள் உட்பட, ஆசியாவிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தினால் மட்டுமே இதை எதிர்த்துப் போராட முடியும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த முன்னோக்குக்கே போராடுகின்றது. எமது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுப்பதோடு, எல்லாவற்றிற்கும் மேலாக வரவிருக்கும் அரசியல் போராட்டங்களுக்காக எமது கட்சியை கட்டியெழுப்புமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.