World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Le Pen at the Elysée Presidential Palace

எலிசே ஜனாதிபதி மாளிகையில் லு பென்

Alex Lantier
10 January 2015

Back to screen version

சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) மீதான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) தலைவரான மரின் லு பென்னை, எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்க பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மேற்கொண்ட முடிவானது, பிரெஞ்சு அரசியலில் நீண்டகால தாக்கங்களைக் கொண்ட ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது.

1972 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதலாகவே, இருபதாம் நூற்றாண்டிலான ஐரோப்பிய பாசிசத்தின் மோசமான குற்றங்களுடன் நெருக்கமாக தொடர்புபட்டு அடையாளம் காணப்படுகின்ற ஒரு கட்சியானது, பிரெஞ்சு அரசியல் வாழ்க்கையின் ஒரு அங்கீகரிப்புடைய, இன்னும் சொன்னால் தவிர்க்கமுடியாத, ஒரு பாகத்தின் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நேற்று காலை எலிசே இல் இருந்து செல்லும்போது, லு பென், இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த தேசிய அளவிலான ஒரு விவாதத்தைத் தொடக்கி வைக்க ஹாலண்ட் உறுதியளித்திருப்பதாகக் கூறினார். இது பிரான்சின் ஐந்து மில்லியன் முஸ்லீம்களை அவதூறு செய்யும் விதமான பிரச்சாரம் அதிகரிக்கப்படுவதற்கான முன்னறிவிப்பாக இருக்கிறது. ஏற்கனவே, வியாழனன்று லு பென், சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கான பதிலிறுப்பாக, 1981 இல் பிரான்சில் ஒழிக்கப்பட்டு விட்ட மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தார்.

வலது-சாரி மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியமும் (UMP) FN ஊக்குவித்து, ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியும் UMPயும் ஞாயிறன்று அழைத்திருக்கும் தேசிய ஒற்றுமைக்கான பேரணியில் அக்கட்சியையும் இணைப்பதற்கு ஆதரவாக நெருக்குதலளித்துக் கொண்டிருக்கிறது. UMP தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய நிக்கோலோ சார்க்கோசி வியாழனன்று ஹாலண்டைச் சந்தித்துப் பேசியிருந்ததன் பின்னர், UMP இன் அரசியல் கமிட்டி, பேரணியில் பங்கேற்க FN அனுமதிக்கப்பட வேண்டும் என்ற லு பென்னின் கோரிக்கைகளை எதிரொலித்தது.

இது ஏகமனதான முடிவு: தேசிய ஒற்றுமைக்கான ஒரு அணிவகுப்பு ஊர்வலத்தில் இருந்து தேசிய முன்னணி விலக்கி வைக்கப்படுவதென்பது ஏற்க முடியாதது என்று UMP இன் பொதுச் செயலரான Laurent Wauquiez அறிவித்தார்.

Wauquiez இன் கூற்றுகள் உணர்த்தும் விடயங்கள் திகைப்பூட்டத் தக்கவையாகும். பல தசாப்தங்களாக, தேசிய முன்னணி (FN) ஆனது UMP மற்றும் PS ஆகிய இரு கட்சிகளாலுமே தேசிய அரங்கில் தீண்டத்தகாத ஒன்று போலவே அணுகப்பட்டு வந்திருந்தது. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நாஜி ஜேர்மனியுடன் ஒத்துழைப்பாக பிரான்சை ஆட்சி செய்த பாசிச விச்சி ஆட்சி, மற்றும் அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் காலனியாதிக்கத்தை மிகவும் வெறித்தனமாக ஆதரித்து நின்றவர்களான இரகசிய ஆயுதபாணி அமைப்பு (Organisation Armée Secrète-OAS) ஆகியவற்றின் வம்சாவளியாகவே இக்கட்சி புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. பிரான்சில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது குண்டர்களைக் கொண்டு தாக்கியமை மற்றும் 1954-1962 அல்ஜீரியப் போரில் சித்திரவதை மற்றும் பயங்கரவாதக் குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட குற்றவியல்தனமான வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததை ஆதரித்தமை ஆகிய காரணங்களுக்காய் இக்கட்சி பரவலாய் வெறுக்கப்பட்டதாய் இருந்தது

FN இன் ஸ்தாபகரான ஜோன்-மரி லு பென், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான தனது அரசியல் வாழ்க்கையை, பாசிச Action Française செய்தித்தாளை விற்பவராகவும், ஒரு பராட்ரூப் தளபதியாக அல்ஜீரிய சுதந்திரப் போராளிகளை சித்திரவதை செய்வதை மேற்பார்வை செய்பவராகவும் தொடங்கினார். FNக்கு உள்ளே முன்னாள் நாஜி மற்றும் விச்சி ஒத்துழைப்பாளர்களது  - இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் விச்சி அரசாங்கத்தின் தொழிலாளர் துறை அமைச்சரான Marcel Déat இன் தேசிய மக்கள் பேரணி (National Popular Rally) இளைஞர் தலைவராக சேவை செய்தவரும், குற்றம் ஊர்ஜிதமான ஒரு நாஜி ஒத்துழைப்புவாதியுமான Roland Gaucher போன்ற மனிதர்களும் இதில் அடக்கம் - பரந்த காரியாளர் படையை அவர் நம்பியிருந்தார்

செல்வம் கொழித்த ஆதரவாளர்களின் ஒரு அடுக்கிடம் இருந்தான நிதி ஆதரவு லு பென்னுக்கு எப்போதும் கிடைத்து வந்தது, அத்துடன் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் போன்ற மனிதர்களிடம் இருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு கிட்டியது. 1980களின் பிற்பகுதியில், சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான மித்திரோன் - அவரும் முன்னாள் விச்சி ஆட்சிக்கால நிர்வாகியாக இருந்தவர் தான் - மக்கள் வெறுப்பைச் சம்பாதித்த தனது சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு பின்னரும் கூட வலது-சாரி வாக்குகளை பிளவுபடுத்துவதன் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு ஊடகங்களில் FN க்கு இடம் கிடைப்பதை ஊக்குவித்தார்.

பாசிசத்திற்கும், பாரிய படுகொலைகளுக்கும் லு பென் வக்காலத்து வாங்கிய காரணத்தால் - யூதப் படுகொலையை வரலாற்றின் விவரத் தரவு (detail) என்று சிறுமைப்படுத்தியதும் இதில் அடங்கும் - ஆளும் உயரடுக்கு ஆரம்பத்தில் பிரதான அரசியல் நீரோட்டத்தில் FN சேர்க்காமலிருந்தது. அதற்குப் பதிலாய், வேலைநிறுத்த இயக்கங்களையும் போர் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்களையும் ஒடுக்குவதற்கு இது PS மற்றும் அதன் போலி-இடது சுற்று வட்டங்களையே - இவற்றில் பல கணிசமான வாக்குகளைப் பெற்றன - நம்பியிருந்தது.

FN ஊக்குவிப்பதை நோக்கிய தற்போதைய திருப்பமென்பது, ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சியின் ஒரு ஆழமான நெருக்கடியின் அடையாளமாக இருக்கிறது. பொருளாதாரச் சரிவு, சர்வதேச மோதல்கள் மற்றும் அதிகரித்துச் செல்லும் வர்க்கப் பதட்டங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டு அவற்றுக்கு எந்தத் தீர்வையும் தன்னால் காண முடியாத நிலையில் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது பாசிச ஆட்சியின் வழிமுறைகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அது FN மற்றும் பாசிசத்தை அங்கீகரிக்கச் செய்யவும் அத்துடன் ஒரு போலிஸ் அரசை ஸ்தாபகம் செய்வதில் சாத்தியமான அளவுக்கு முன்னேறிச் செல்லவும் சார்லி ஹெப்டோ மீதான பயங்கரவாதத் தாக்குதலை கெட்டியாக பற்றிக் கொண்டு விட்டிருக்கிறது.

குறிப்பாக 2012 ஜனாதிபதித் தேர்தலில் PS இன் வெற்றிக்குப் பின்னர் FN இன் அதிர்ஷ்டங்கள் வானளாவச் சென்றிருக்கின்றன. ஜோன்-மரி லு பென்னின் இடத்தில் அவரது மகள் மரின் அமர்த்தப்பட்டதன் மூலமும் FN பகுதியாக அனுகூலமடைந்திருக்கிறது. மரின் லு பென் பாசிசத்தின் குற்றங்களது விடயத்தில் திட்டமிட்டு அமைதி காத்ததால் அவரை மக்களுக்கு விளம்பரம் செய்வதற்கு ஊடகங்களுக்கு வசதியாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் மிகப் பெரும் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்த ஜனாதிபதியாக ஹாலண்ட் ஆகியிருக்கும் நிலையில், PS மதிப்பிழப்பின் மீது தான் FN பெருமளவு சார்ந்திருக்கிறது.

தனக்கு முன் ஆட்சியிலிருந்த பழமைவாத நிக்கோலோ சார்க்கோசியிடம் இருந்து பிசிறில்லாதவொரு கைமாற்றத்தில், ஹாலண்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டநிரலை ஒட்டுமொத்தமாக கையிலெடுத்து, தொழிலாள-வர்க்க வாழ்க்கைத் தரங்களை நாசமாக்கியிருக்கிறார். மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவெங்கிலும் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் நடத்தப்படுகின்ற பொறுப்பற்ற நேட்டோ போர் முனைப்புகளிலும் சார்க்கோசியின் பயணப்பாதையையே இவரும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

பிரான்சின் அரசியல் சமநிலை தீர்க்கமாக சிதறடிக்கப்பட்டிருக்கிறது. புலம்பெயர் தொழிலாள வர்க்கம் அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து முழுமையாக அந்நியப்படுத்தப்பட்டு, புலம்பெயர்ந்த இளைஞர்களில் மிகவும் நோக்குநிலை தவறியதும் பின்தங்கியதுமான பிரிவுகள் அல்கெய்தாவை நோக்கி ஈர்க்கப்படுவதற்கு கதவு திறந்து விட்டிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில், பிரெஞ்சு மக்களின் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், PS இன் சிக்கன நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டிருக்கும் பெருமளவு நிர்க்கதியான சமூகச் சூழலால் ஆவேசமுற்று, தங்களுக்கு கிடைத்த ஒரே உகந்த மாற்றீடு மரின் லு பென் தான் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

இந்த நிலைமைகளின் கீழ், எப்படி 1933 இல் அடோல்ஃப் ஹிட்லரிடம் மார்ஷல் போல் வோன் ஹின்டன்பேர்க் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன்பாக, ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் அவரைக் கொண்டு விளையாடியதோ, அதேபோலவே பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்தமும் லு பென்னைக் கொண்டு விளையாடத் தொடங்கியிருக்கிறது. பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முன்னணி மூலோபாயவாதிகள் பிரான்சின் முஸ்லீம் மக்களுடனான வன்முறையான மோதலை தவிர்க்கமுடியாததாகக் காணத் தலைப்படுகின்றனர்.

பிரெஞ்சு மக்களில் இருக்கும் முஸ்லீம்கள், எங்களை குழப்பத்திற்கும் உள்நாட்டுப் போருக்கும் அழைத்துச் செல்லக் கூடிய ஒரு சூழல் குறித்து பத்திரிகையாளரான Eric Zemmour -இவர் அதி-வலது மற்றும் போலி-இடது வட்டாரங்களுடன் விரிவான தொடர்புகளுள்ளவர்- இத்தாலியின் Corriere della Sera பத்திரிகையிடம் சென்ற மாதத்தில் பேசியபோது தெரிவித்தார். பிரான்சில் இருந்து மில்லியன்கணக்கான முஸ்லீம்களை அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி விட ஆலோசனையளிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, இது இப்போதைக்கு நடைமுறை சாத்தியமற்றது என்று பதிலளித்த Zemmour, ஆனாலும் வரலாறு ஆச்சரியமூட்டக் கூடியது என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.    

ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நெருக்கடியும் சரி தொழிலாள வர்க்கத்தில் அரசியல் தலைமையின் நெருக்கடியும் சரி இரண்டுமே அசாதாரண மட்டத்திற்கு தீவிரமாகியிருப்பதன் எச்சரிக்கையே இத்தகைய கருத்துக்கள் ஆகும். சோசலிசத்துக்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதே அதிமுக்கியமான அரசியல் கடமையாக இருக்கிறது என்ற உரிய பொருத்தமான முடிவை, பிரான்சிலும், உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எடுத்தாக வேண்டியது கட்டாயமாகும்.