World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Charlie Hebdo and the specter of Vichy: From Laval to Hollande

சார்லி ஹெப்டோவும் விச்சி கோரக்காட்சியும்: லவால் முதல் ஹாலண்ட் வரை

Joseph Kishore and Alex Lantier
16 January 2015

Back to screen version

அரசினால் இனவாதப் பிரச்சாரம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டமை, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் பாசிச தேசிய முன்னணியின் (FN) தலைவரான மரி லு பென்னை எலிசே மாளிகைக்கு விவாதிக்க அழைத்தமை, மற்றும் சார்லி ஹெப்டோ பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் FN இன் மறுஎழுச்சி என பிரான்சில் கடந்த வாரத்தின் நிகழ்வுகளானவை, விச்சி (Vichy) ஆட்சியின் காலகட்டம் என்ற பிரெஞ்சு வரலாற்றின் ஒரு முந்தைய சகாப்தத்தினை துயரமாக எதிரொலிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது.

1940 ஜூன் மாதத்தில், நாஜி ஜேர்மனியானது பிரான்சின் மீது படையெடுத்து இரண்டு மாதங்கள் கூட ஆகும் முன்பே, அது பிரெஞ்சு இராணுவப் படைகளை தோற்கடித்து தற்காப்பின்றி இருந்த பாரிஸில் வெற்றிகரமாக நுழைந்தது. ஜூன் 22 அன்று, பிரான்சும் ஜேர்மனியும் ஒரு போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டு நாட்டை, பாரிஸை மையமாகக் கொண்ட நாஜி-ஆக்கிரமிப்பிலான வடக்கு மற்றும் மேற்காகவும், தெற்கில் விச்சியை (Vichy) மையமாகக் கொண்ட உத்தியோகபூர்வமாய் ஆக்கிரமிக்கப்படாவிட்டாலும் ஒத்துழைப்புவாத ஆட்சியாகவும் பிரிக்கப்பட்டது.  

பிரெஞ்சு வணிகத்தினதும், இராணுவத்தினதும் பிரதிநிதிகள் மிகத் துரிதமாய் சரணடைந்ததென்பது, பிரான்ஸ் ஆக்கிரமிக்கப்படுவதுதான் 70 ஆண்டுகளுக்கு முன்பாக பிராங்கோ - பிரஷ்யப் போரின் போதான ஒரு முடிவைப் பிரதிபலிக்கும் விதமாக தாயகத்தில் சமூக எதிர்ப்பைக் கையாளுவதற்கு மிகச் சிறந்த வழி என்ற ஒரு முடிவில் இருந்து விளைந்தது. நாஜி ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களது பிரெஞ்சு ஒத்துழைப்புவாதிகளுமாய் இணைந்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு மிருகத்தனமான போரை நடத்தினர். குறிப்பாக சமூகப் பிற்போக்குத்தனத்தின் மற்றும் ஏகாதிபத்தியப் போரின் சோசலிச எதிரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு நச்சுத்தனமான பிரச்சாரத்துடன் சேர்த்து, விச்சி ஆட்சியானது ஜேர்மன் பாசிஸ்டுகளின் இனவாத மற்றும் யூத-விரோத பிரச்சாரத்தில் முழுமையாகப் பங்கேற்றது என்பதோடு, பத்தாயிரக்கணக்கிலான யூதர்களை வதை முகாம்களுக்கு அனுப்பவும் உதவியது.

அரசின் தலைவர் ஆக இருந்த மார்ஷல் பிலிப் பெத்தான் மற்றும் முதலில் அமைச்சர் குழுவின் துணைத் தலைவராகவும் பின்னர் அரசாங்கத்தின் தலைவராகவும் சேவை செய்த பியர் லவால் இருவரும் தான் விச்சி ஆட்சியின் இரண்டு பிரதான நபர்களாக இருந்தனர். பிரெஞ்சு ஆளும் வர்க்கம் மற்றும் இராணுவத்தின் பிற்போக்குத்தனமான, குடியரசுவாத-விரோத பாரம்பரியங்களின் உருவடிவமாக பெத்தான் இருந்தார். வேர்டன் (Verdun) யுத்தத்தில் பிரெஞ்சுப் படைகளுக்கு தலைமை கொடுத்ததற்காகவும் முதலாம் உலகப் போரின் சமயத்தில் போர்-எதிர்ப்புக் கலகங்களை நசுக்கியதற்காகவும் பாராட்டுப் பெற்றிருந்த அவர் ஒரு மூர்க்கமான யூத-எதிர்ப்பாளராக, ஸ்பெயினின் பாசிச சர்வாதிகாரியான பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சியுடன் ஒன்றிணைந்தவராக இருந்தார்.

பிரெஞ்சு இடதின் ஊழலின் அவதாரமாக லவால் இருந்தார். இவரது அரசியல் வாழ்க்கையானது சோசலிஸ்ட் கட்சியில் இருந்து நாஜிக்களுடன் ஒத்துழைக்கும் நிலைக்கு எளிதாக உருமாற்றம் கண்டிருந்தது. 1930களின் பெருமந்த நிலையின்போது பழமைவாத அரசாங்கங்கள் எழுவதற்கு முன்பாய் 1920களின் இடதுகளின் சங்க (Cartel of the Left) அரசாங்கத்தில் அவர் இணைந்தார். நாடாளுமன்றத்தை விட்டு விலகிய அவர் தொழிலாள வர்க்கப் போராட்டம் ஒரு எழுச்சியை சந்தித்திருந்த நிலைக்கு மத்தியில் வலதுநோக்கி வெகுதூரம் நகர்ந்து, இறுதியாக தன்னை ஒரு தலைமை பாசிச ஒத்துழைப்புவாதியாக இருத்திக்கொண்டார். லவாலின் (Laval) பெயரை முன்னிருந்து பின்னோக்கி வாசித்தாலும் பின்னிருந்து முன்னோக்கி வாசித்தாலும் ஒன்று தான், இது அவரது முதுகெலும்பற்ற சந்தர்ப்பவாதத்தின் ஒரு பொருத்தமான வெளிப்பாடுதான் என்று அந்த சமயத்தில் குறிப்பிடப்படுவதுண்டு.

போரைத் தொடர்ந்து, லவால் விசாரணைக்கு ஆளாகி சுட்டுக் கொல்லப்பட்டார். பெத்தானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரது முதிர்ந்த வயது காரணமாக அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உண்மையில், நாஜி ஒத்துழைப்புவாதிகளில் வெகு குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே விச்சி அரசாங்கத்தில் அவர்கள் வகித்த பாத்திரத்திற்காய் பொறுப்பாளிகள் ஆக்கப்பட்டனர். இதற்கு மிக எளிய காரணம், பிரெஞ்சு அரசியல் அமைப்பின் மிகப் பெரும் பகுதி இதில் சம்பந்தப்பட்டதாக இருந்தது என்பதே.

லாவலின் உதாரணமானது, முன்னாள் விச்சி ஆட்சியின் நிர்வாகியாக இருந்த பிரான்சுவா மித்திரோனினால், 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் பயிற்றுவிக்கப்பட்ட, இன்னுமொரு கோட்பாடற்ற சூழ்ச்சிக்காரரான ஹாலண்ட் என்பவரின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதாக இருக்கிறது. சோசலிஸ்ட் கட்சியானது 1970களில் மித்திரோனின் ஒரு தேர்தல் வாகனமாக மறுஉருவாக்கம் செய்யப்பட்டது, இப்போது அது இடதுகளின் பாகம்போல ஊக்குவிக்கப்படுகிறது.

கடந்த 35 ஆண்டுகளாக, பிரெஞ்சு இடது என்பதாக பொருத்தமற்று அழைக்கப்பட்டு வந்த ஒன்றானது, கீழ்நோக்கி ஒரு நெடிய சுற்றுப்பாதையில் பயணித்து, அதன் உச்சமாக இப்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் அவரது பிரதமர் மானுவல் வால்ஸ் (எல்லாவற்றையும் விட ரோமாக்களுக்கு எதிரான சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பும் பிரச்சாரத்தின் மூலமாகவே அறியப்படுபவராக இருக்கும் ஒரு மனிதர்) ஆகியோரிடம் வந்து நிற்கிறது. ஹாலண்ட், அவரது வலது-சாரிக் கொள்கைகளின் காரணத்தால், உரியவிதத்தில் போருக்குப் பிந்தைய பிரெஞ்சு வரலாற்றின் மிகவும் அவப்பெயர் சம்பாதித்த ஜனாதிபதியாக ஆகியிருக்கிறார். சென்ற நவம்பரிலான கருத்துக்கணிப்பில் ஹாலண்டுக்கான ஆதரவு 12 சதவீதத்திற்கு கீழிறங்கி விட்டிருந்தது. இது, அல்கொய்தாவுடன் தொடர்புபட்ட ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு) இப்போது பிரான்சில் இருக்கக் கூடிய ஏற்றுக்கொள்ளும் சதவீதமான 16 சதவீதத்தையும் விட குறைவாகும்.

சார்லி ஹெப்டோ மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து பதிலளிக்கப்படாத கேள்விகள் இன்னும் ஏராளமாய் இருக்க, பிரெஞ்சு அரசாங்கமோ பிரெஞ்சு அரசியலை இன்னும் அதிகமாய் வலது நோக்கித் தள்ளி, ஜனநாயக உரிமைகள் மீது நீண்டகால விளைவுகளைக் கொண்ட தாக்குதல்களை அமுலாக்கவும், அதேநேரத்தில் உலகத்தை ஏகாதிபத்திய மறுபங்கீடு செய்வதில் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கும் ஒரு பங்கு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அட்டூழியத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் தீர்மானத்துடன் இருக்கிற்து என்பது முற்றிலும் தெளிவாகி விட்டிருக்கிறது.

இந்த நகர்வுக்கான அரசியல் கட்டுமானத்தை உருவாக்குவதற்காக, மிகவும் பிற்போக்கான சமூக மற்றும் அரசியல் பிரிவுகள் மீண்டும் அணிதிரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விச்சியின் யூத-விரோத பரப்புரையின் இடத்தில், இப்போதைக்கேனும், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் பிரதியீடு செய்யப்பட்டிருக்கிறது, என்றபோதிலும் இந்தத் திட்டத்தில் சார்லி ஹெப்டோ ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த பத்திரிகை வெளியிட்டு வந்திருக்கும் மற்றும் புதனன்று அரசு-நிதியாதாரத்துடனான ஒரு வெளியீட்டில் மறுபடியும் அது வெளியிட்டிருக்கிற கேலிச்சித்திரங்கள், முஸ்லீம்-விரோத இனவாதம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுவதன் ஒரு பகுதியாகும்.

இந்த அழுகிப்போகும் அரசியல் நடவடிக்கையில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி உட்பட பிரான்சில் இடது என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற நடுத்தர வர்க்க பிலிஸ்தீன்கள் மற்றும் சுய-திருப்தி காணும் சந்தர்ப்பவாதிகளது ஒரு சீரழிந்துபோன கூட்டத்தினர் குறிப்பாக நேரடிப் பங்குபற்றுபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் நீண்டகாலமாக சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிப்பவர்களாக இருந்து வந்ததுடன், ஹாலண்டுக்கு விளம்பரம் செய்தவர்கள் மற்றும் சார்லி ஹெப்டோவுடனே கூட நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் ஆவர்.

இதன் மிக நேரடியான அரசியல் அனுகூலத்தைப் பெறுவது பாசிச தேசிய முன்னணியும் மரின் லு பென்னும் தான். தேசிய ஒற்றுமை என்ற பதாகையின் கீழ் சென்ற வாரத்தில் இவர் ஹாலண்டினால் எலிசே மாளிகைக்கு சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தார். மரின் லு பென்னின் தந்தையும் FN இன் ஸ்தாபகருமான ஜோன்-மரி லு பென், இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸை நாஜிக்கள் ஆக்கிரமித்திருந்ததை தொடர்ந்து புகழ்ந்து வந்திருந்தவராக இருந்தார் என்பதோடு, யூதப்படுகொலையை வரலாற்றின் வெறும் ஒரு சிறிய விபரம் மட்டுமே என்று அழைத்தவருமாவார்.

மாற்றப்பட வேண்டிய விடயங்களை மாற்றிக் கொண்டிருக்கும் ஹாலண்ட் மற்றும் லு பென் இன் சங்கமமானது, லவால் மற்றும் பெத்தான் சங்கமத்தை மறுஉருவாக்கம் செய்து கொண்டிருக்கிறது. இந்தப் புதிய கூட்டணியில் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் அதிகமானவை சம்பந்தப்பட்டுள்ளன. பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் முக்கிய குணாம்சம் மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறது. அரசியல் நெருக்கடி ஆழமடைகின்றதானதொரு காலகட்டத்தில், ஒருசமயத்தில் நாஜி-ஜேர்மனியின் அருகருகே நின்று அது ஈடுபட்டிருந்த அத்தனை அழுக்குமிக்க நடைமுறைகளது புதிய வடிவங்களையும் இப்போது மறுஉருவாக்கம் செய்து கொண்டிருக்கிறது. விச்சியின் துர்நாற்றம் எலிசே மாளிகைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது