World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

2015 and the rising tide of war

2015ஆம் ஆண்டும், அதிகரித்துவரும் போர் அலையும்

Bill Van Auken
23 January 2015

Back to screen version

செவ்வாயன்று இரவு அவரது நாட்டின் நிலைமை தொடர்பான உரையில் ஜனாதிபதி பராக் ஒபாமா, புதிய நூற்றாண்டின் ஒன்றரை தசாப்தத்தில் குறுக்கீடில்லா போரின் 13க்கும் அதிகமான ஆண்டுகளில் அமெரிக்கா "புதிய பக்கத்தைத் திறந்துள்ளதாகவும்", ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் அதன் தலையீடுகளில் இருந்து "விலையுயர்ந்த படிப்பினைகளைப்" பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.  

அமெரிக்க பொருளாதாரத்தின் மீதிருந்த "நெருக்கடி நிழல் அகன்றுவிட்டதாகவும், அதற்காக அதன் "ஆர்ப்பரிக்கும் தொழில்துறைக்கு" நன்றி கூற வேண்டுமென்றும், “மீட்சி" “அதிகளவிலான மக்களின் வாழ்வைத்" தொட்டுவிட்டதுடன், ஊதியங்கள் "இறுதியில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதுடன்" சேர்ந்து, அமெரிக்கா "பின்னடைவிலிருந்து எழுச்சி பெற்றுள்ளதாகவும்"  ஏமாற்றுத்தனமானதும் பொய்யானதுமான ஜனாதிபதியின்   இந்த வலியுறுத்தல் எதார்த்தநிலையை போன்றே உள்ளது.

யுத்த போக்கிலிருந்து பின்வாங்குவது பற்றிய ஒபாமாவின் பழகி சலித்துபோன வாதங்கள், அவரது அந்த சொந்த உரையிலேயே பின்தொடர்ந்து வந்த கூற்றுகளால் பொய்யாக்கப்பட்டது. அதில் ஈராக் மற்றும் சிரியாவில் வெள்ளை மாளிகை ஐந்து மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய புதிய போரை உள்ளடக்கிய, முடிவில்லாமல் இராணுவ படைகளைப் பிரயோகிப்பதற்கு அங்கீகாரம் (AUMF) வழங்குவதை நிறைவேற்றுமாறு காங்கிரஸிற்கு விடுத்த அழைப்பு உள்ளடங்கி இருந்தது.   

தண்டனையிலிருந்து முழு விலக்கீட்டு உரிமையுடன் தங்களைத்தாங்களே பாதுகாத்துக் கொண்டுள்ள புஷ் நிர்வாகத்தின் போது சித்திரவதை திட்டங்களைச் செயல்படுத்தி வந்த அமெரிக்க உளவுத்துறை முகமைகள் இனி சித்தரவதையில் ஈடுபடாது என்று அமெரிக்க ஜனாதிபதி போலியான வாதத்தை அளித்தார். சில மூச்சு அவகாசத்திலேயே, அவர் "பயங்கரவாத செவ்வாய்கிழமைகள்" என்றறியப்படும் வெள்ளை மாளிகை அமர்வுகளில் "படுகொலை பட்டியல்களின்" மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட டிரோன் ஏவுகணை தாக்குதல்களை "முறையான கட்டுப்பாடுடன்" பிரயோகிப்பதை முன் கொண்டு வந்தார். இத்தகைய இலக்கில் வைக்கப்பட்ட படுகொலைகள் மீதான ஒரு சமீபத்திய ஆய்வு, பாகிஸ்தானில் 41 தனிநபர்களைப் படுகொலை செய்யும் முயற்சியின் போக்கில், அமெரிக்க டிரோன்கள் 1,147 மக்களைக் கொன்றதை எடுத்துக்காட்டி இருந்தது.

அவருக்கு முன்னர் இருந்த ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷின் வார்த்தைஜாலங்களையே எதிரொலித்து, “நம்பிக்கை மற்றும் மாற்றத்திற்கான" முன்னாள் பாதுகாவலர் அறிவித்தார்: “அமெரிக்காவிற்கும் மற்றும் நமது கூட்டாளிகளுக்கும் நேரடியான அச்சுறுத்தலை முன்வைக்கும் பயங்கரவாதிகளை அழிக்க, நான் பதவியேற்றதிலிருந்து நாம் சளைக்காமல் செய்துள்ளதைப் போல, நாம் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதைத் தொடர்வோம், அவர்களது வலையமைப்புகளை அழிப்போம், ஏகமனதாக செயல்படுவதற்குரிய உரிமையை நாம் கொண்டிருக்கிறோம்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த பூமியில் சர்வதேச சட்டத்தை தூக்கிவீசிவிட்டு, எந்தவொரு இடத்திலும், யார் மீதும் தாக்குதல்களைத் தொடுக்கும் உரிமையை, தொடர்ந்து வலியுறுத்துகிறது!  

"9/11க்குப் பின்னர் முதல் முறையாக, ஆப்கானிஸ்தானில் நமது போர் நடவடிக்கை முடிந்துவிட்டது" என்ற  ஒவ்வொருவரிடமிருந்தும் கரகோசம் பெற்ற ஒபாமாவின் ஆரம்ப வரிகளே ஒரு அப்பட்டமான பொய்யாகும். அந்நாட்டில் இன்னமும் சுமார் 15,000 துருப்புகள் இருக்கின்ற நிலையில், சிறப்பு நடவடிக்கை படைகள் காபூலில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தேடல் மற்றும் அழித்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மூத்த அமெரிக்க தளபதி, அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைப்புகளின் "நடவடிக்கையை நீடிப்பதைத்" தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாக அறிவித்தார். 

கட்டவிழ்ந்துவரும் உலக நிலைமையின் உள்ளடக்கத்தில், புதிய பக்கத்தைத் திறந்திருப்பதைக் குறித்த ஒபாமாவின் வாதம் ஒரு புதிய சமாதான காலக்கட்டத்தை நோக்கி திறந்திருப்பதை அறிவுறுத்தவில்லை, மாறாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு பிரளயகரமான உலக போருக்குள் மனிதயினத்தை மூழ்கடித்த அதேவிதமான ஆழமடைந்துவரும் உலகளாவிய பதட்டங்களை நோக்கிய பின்னணியை அறிவுறுத்துகிறது.

உண்மையில் ஒவ்வொரு கண்டத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புதிய உலக போரைத் தூண்டிவிட அச்சுறுத்துகிற பொறுப்பற்ற இராணுவவாத தலையீடுகளில் ஈடுபட்டுள்ளது. 2015இன் முதல் மூன்று வாரங்கள் இத்தகைய அச்சுறுத்தல்களின் ஒரு தீவிரப்பாட்டை மட்டுமே கண்டுள்ளது.

அமெரிக்க ஆதரவுடனான கியேவ் ஆட்சியின் படைகளுக்கும் உக்ரேனின் கிழக்கில் உள்ள அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மரணகதியிலான சண்டை மீண்டும் தொடங்கியுள்ள நிலைமைகளின் கீழ், பெண்டகன் பாசிய போராளிகள் குழுக்கள் மேலாளுமை செலுத்தும் ஒரு படையான புதிய தேசிய பாதுகாப்புப்படைக்கு ஆலோசனை வழங்கவும், பயிற்சிகள் வழங்கவும் அந்நாட்டிற்கு அமெரிக்க துருப்புகளை அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. ஏப்ரலில் இருந்து சுமார் 5,000 உயிர்களைப் பறித்துள்ள அந்த மோதலுக்கு ஒரு சமாதானமான தீர்வைப் பரிந்துரைத்த ரஷ்யாவின் பரிந்துரையை, ஒரு "ரஷ்ய ஆக்கிரமிப்பு திட்டம்" என்று கூறி அதை ஒபாமா நிர்வாகம் நிராகரித்துள்ளது.

“ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பொருளாதாரம் சீரழிந்து போய்விட்டது" என்று பெருமையடித்துக் கொண்டே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவினால் ரஷ்யா மீது திணிக்கப்பட்ட தடையாணைகளால் உண்டாக்கப்பட்ட பேரழிவுகள் மீது அவர் குரூர திருப்திப்பட்டுக் கொண்டார். 

ரஷ்யா மீது ஒரு முடிவான புவிசார் அரசியல் தோல்வியைச் சுமத்துவதற்காக உக்ரேனில் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே இருக்குமாறு வைத்திருக்க வாஷிங்டன் தீர்மானகரமாக உள்ளது. அணுஆயுத போர் அபாயம் ஏற்பட்டாலும் கூட, இதை அது யுரேஷிய பெருநிலத்தின் மீது அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாக பார்க்கிறது.

ஆசியாவில், சோனி நிறுவனத்தின்  மீது வடகொரியா இணைய ஊடுறுவல் செய்ததென்ற அதன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் வட கொரியாவுடன், அதேவேளையில் சீனாவுடனான ஒரு மோதல் முயற்சியில், வேண்டுமென்றே பதட்டங்களைத் தூண்டிவிட்டு வருகிறது. பேச்சுவார்த்தைக்கு வந்த வட கொரியாவின் அழைப்பை அமெரிக்க அரசுத்துறை மறுத்தளித்து, இந்த இளவேனிற்காலத்தில் தென் கொரியாவுடன் கூட்டு இராணுவ ஒத்திகைகளுடன் முன்னோக்கி செல்வதன் மூலமாக, கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களை அதிகரித்து வருகிறது.  

போர் முனைவுக்கு தலையேற்று வருகின்ற அதேவேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனித்து இல்லை. சிறிய ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் சொந்த நலன்களை வலியுறுத்தி வருகின்றன. ஜேர்மனி மற்றும் ஜப்பான் இரண்டுமே பகிரங்கமாக இராணுவவாதத்தைப் புதுப்பிப்பதற்கு ஆதரவாக அவற்றின் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சமரசவாத பாசாங்குத்தனங்களைத் துறந்து வருகின்றன. பிரான்ஸோ மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் அதைக் கடந்தும் ஏகாதிபத்திய தலையீடுகளைத் தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்த பாரீசில் நடந்த சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்களைக் கைப்பற்றி வருகிறது. கனடிய துருப்புகள் ஈராக்கில் துப்பாக்கி சண்டைகளில் ஈடுபட்டுள்ளன, அதேவேளையில் ஆஸ்திரேலியாவோ தன்னைத்தானே வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" ஒரு ஆக்ரோஷமான கூட்டாளியாக அர்பணித்துள்ளது.  

சிரியா மற்றும் ஈராக்கில் "பயங்கரவாதத்திற்கு" எதிரான ஒரு போராட்டத்தை நடத்தி வருவதாக ஒபாமா கூறிக் கொள்கின்ற அதேவேளையில், மத்திய கிழக்கில் பிரதான அமெரிக்க கூட்டாளியான இஸ்ரேல்—முன்னர் வாஷிங்டனே செய்ததைப் போல—சிரியாவில் அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட அமைப்புக்கு உதவியும், ஆயுதபாணியாக்கியும் வருகிறது, அதனோடு ஒரு பிராந்தியம் தழுவிய போரைத் தூண்டிவிடும் நோக்கில் ஆத்திரமூட்டும் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.

1914 மற்றும் 1939ஐ போலவே, இந்த உலகந்தழுவிய இராணுவவாத எழுச்சியை உந்துச் சென்று கொண்டிருப்பது உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த, நீடித்த மற்றும் முறைப்பட்ட நெருக்கடியாகும், இந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும் அதன் போட்டியாளர்களது விலையில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள உந்தப்படுகிறது.

ரஷ்ய புரட்சியின் இணை-தலைவர் லியோன் டிரொட்ஸ்கி, போரும் அகிலமும் என்ற அவரது காலத்தால் அழியா அறிக்கையில், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், விவரித்ததைப் போல, போருக்கான அடிப்படை காரணம் உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளில் தங்கியுள்ளது, அனைத்திற்கும் மேலாக முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயப்பட்ட இயல்பிற்கும் மற்றும் முதலாளித்துவமும் உற்பத்தி சாதனங்களிகளின் மீதான தனியார் சொத்துடைமையும் அது வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளில் தங்கியுள்ளது.

டிரொட்ஸ்கி எழுதினார், 1914இல் வெடித்த உலக போரானது "அதன் சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளால் அழிக்கப்பட்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையின் வரலாற்றில் மிகவும் பிரமாண்டமான நிலைமுறிவாகும். தான் முதலாளித்துவ சமூகத்தை வழிநடத்தவும், அதன் பெயரை கூறிக்கொள்வதற்கும் மற்றும் அந்த  சமூகத்தை சுரண்டுவதையும் தனது கடமை எனக்கூறிக்கொண்டதன்", "வரலாற்று திவால்நிலைமையை" அது எடுத்துக்காட்டியது.   

“முதலாளித்துவம், அதன் அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில், அதன் தீர்க்கவியலாத முரண்பாடுகளைத் தீர்க்க முயலும் அணுகுமுறையே" போர் ஆகும் என்றபோதினும், டிரொட்ஸ்கி தொடர்ந்து கூறுகையில், தொழிலாளர் வர்க்கம் "அதன் சொந்த அணுகுமுறையை, சோசலிச புரட்சியெனும் அணுகுமுறையைக்" கொண்டு அதை எதிர்க்க வேண்டியுள்ளது என்றார்.

இந்த வரிகள் எழுதப்பட்டு ஒரு நூறு ஆண்டுகள் ஆன பின்னர், முதலாளித்துவ அமைப்புமுறை ஒரு அணுஆயுத மூன்றாம் உலக போர் எனும் இன்னும் பெரும் பேரழிவுகரமான அச்சுறுத்தலுடன் மனிதயினத்தை எதிர்கொள்கிறது, இது 1914இல் டிரொட்ஸ்கியால் வரையப்பட்ட மாற்றீட்டை இன்னும் அதிக சக்தியோடும், அவசரத்துடனும் பிரயோகிக்க வேண்டியுள்ளது. பூகோளமயப்பட்ட முதலாளித்துவத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்ற பேரழிவிலிருந்து வெளியே வருவதற்கு, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரே வழியாக உள்ளது.