World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza’s fraudulent capital controls

சிரிசாவின் மோசடியான மூலதன கட்டுப்பாடுகள்

By Nick Beams
30 June 2015

Back to screen version

கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது அனேகமாக ஏதோவிதத்தில் சலித்துபோன ஒரு பழமொழியாக இருக்கலாம். ஆனால், மூலதன கட்டுப்பாடுகளைத் திணிக்கவும் மற்றும் அந்நாட்டின் வங்கியியல் அமைப்புமுறையை மூடுவதற்கும் சிரிசா தலைமையிலான கிரேக்க அரசாங்கம் எடுத்த முடிவை, அந்த பழமொழியை விட வேறெதுவும் அந்தளவிற்கு துல்லியமாக உவமைப்படுத்திக் காட்டாது.

வங்கிகள், நிதியியல் அமைப்புமுறை மற்றும் பிரதான கிரேக்க நிறுவனங்களை ஆகக்குறைந்தது தேசியமயமாக்க தொடங்குவதை ஒருபுறம் விட்டுவிட்டு, இந்நடவடிக்கை, பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்காக எடுக்கப்பட்டதல்ல. இது கிரேக்க வங்கிகளுக்கு ஐரோப்பிய மத்திய வங்கி அதன் நிதிகளை நிறுத்துவதாக வாரயிறுதியில் அறிவித்த முடிவுக்கு விடையிறுப்பாக கொண்டு வரப்பட்டது. அந்த வங்கிகள் இந்த வாரம் திறந்திருந்திருந்தால், அதன் விளைவாக, அவை பண வெளியோட்டத்தை அனுபவித்திருப்பது மட்டுமல்லாது, அது வேகமாக அவற்றை நொடிந்து போக செய்திருக்கும்.

செல்வசெழிப்பான கிரேக்கர்களிடம், அத்துடன் பெருநிறுவன மற்றும் நிதியியல் நலன்களிடம் உள்ள பில்லியன் கணக்கான யூரோக்கள் ஏற்கனவே அந்நாட்டை விட்டு வெளியேறி, இப்போது ஐரோப்பா மற்றும் ஏனைய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுவிட்டன. இந்த பணக்குவியலுக்கு சொந்தக்காரர்கள், யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேறும் மற்றும் ட்ராக்மாவிற்குத் திரும்பும் ஒரு நிலைமைக்கு தேவையான தயாரிப்புகளைச் செய்துவிட்டனர். அது அவ்வாறே நடந்தால், அந்த பணத்தைத் திரும்ப கொடுத்து, நிலங்கள், நிறுவனங்கள் மற்றும் உல்லாசத்திற்கான நிதிய சொத்துக்களை வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனென்றால் ஏதேனும் விதத்தில் ஒரு தேசிய செலாவணிக்கு திரும்புதலை தொடர்ந்து யூரோவுடன் ஒப்பிடுகையில் ஒரு மிகப்பெரும் மதிப்பிறக்கம் நிகழும்.

இந்த சாத்தியமான நிதியியல் கொள்ளையடித்தலின் அளவு குறித்த சில கருத்துக்கள், ஜேர்மன் செய்தியிதழ் Der Spiegel வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட பொருளாதாரத்துறை எழுத்தாளர் வொல்ஃப்காங் முன்சௌவ் இன் ஒரு கருத்துரையில் வழங்கப்படுகிறது.

2010 இல், கிரேக்க நிதியியல் நெருக்கடி மேலெழுந்தபோது, அந்நாட்டின் வங்கியியல் அமைப்புமுறையில் இருந்த வைப்பீடுகள் (deposits) 300 பில்லியன் யூரோவிற்கு சற்று குறைவாக இருந்தன. கடந்த ஐந்தாண்டுகளில், அவை 175 பில்லியன் யூரோவிற்கு கீழ் குறைந்து போயுள்ளன. அந்த வீழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடந்தது.

யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸ் பலவந்தமாக வெளியேற்றப்படலாம் என்று தோன்றியபோது, அங்கே 2010 மற்றும் 2012க்கு இடையே 100 பில்லியன் யூரோவிற்கு அதிகமான ஒரு வீழ்ச்சி இருந்தது. ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய முக்கூட்டால் ஒழுங்கமைக்கப்பட்ட பிணையெடுப்பு திட்டத்திற்குள் கிரேக்க அரசாங்கம் நுழைந்ததும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் வைப்பீடுகளின் அளவு ஸ்திரப்பட்டது. மற்றொரு வெளியேற்றம், சிரிசா தலைமையிலான அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது.

பிணையெடுப்பு திட்டத்திற்கும் கிரேக்க பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதற்கு மாறாக, அது மிகவும் கவனமான ஒரு தந்திர நடவடிக்கையாகும். அந்நடவடிக்கையில், தனியார் நிதியியல் அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டியிருந்த கிரீஸின் கடன்கள், சர்வதேச நாணய நிதியத்திற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மாற்றப்பட்டன. வழங்கப்பட்ட 200 பில்லியன் யூரோவிற்கு அதிகமானதில், மதிப்பிடப்பட்ட விதத்தில் ஒவ்வொரு யூரோவிலிருந்தும் சரியாக 11 சென்டுகள் கிரேக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க ஒதுக்கப்பட்டது. மீதத் தொகை தனியாருக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளுக்கு கடனை திரும்ப செலுத்த சுழற்சிமுறை நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது.

கூலிகள் குறைவதற்கும், ஓய்வூதியங்கள் மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகள் வெட்டப்படுவதற்கும் இட்டுச் சென்ற சிக்கன திட்டங்களைத் திணித்ததன் மூலமாக, இவற்றிற்கு கிரேக்க மக்கள் தான் விலைகொடுக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். மந்தநிலை போன்ற நிலைமைகள் கொண்டு வரப்பட்டமை, கிரேக்க உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துபோனதைக் கண்டுள்ளது.

1930களின் பெருமந்தநிலைமை தொடங்கிய ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் இருந்த நிலைமையை விட, இந்த நெருக்கடி தொடங்கிய ஐந்தாண்டுகளில் கிரீஸின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பதையே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 2008 நெருக்கடிக்கு முன்னர் ஐரோப்பாவில் இருந்த சராசரி வளர்ச்சி விகிதமான ஆண்டுக்கு 2 சதவீதம் என்றளவில் கிரேக்க பொருளாதாரம் வளர்ந்தாலும் கூட, 2007 இல் அது இருந்த நிலைமைக்குத் திரும்ப 13 ஆண்டுகள் ஆகும்.

முக்கூட்டின் சிக்கன திட்டத்தை எதிர்ப்பதற்கும் மற்றும் கிரேக்க மக்களின் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதால் ஜனவரி 25 இல் சிரிசா அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னாலிருந்த உந்துசக்தி இந்த பொருளாதார மற்றும் சமூக பேரழிவே ஆகும்.

சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸூம் மற்றும் நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸூம் முன்னணி பாத்திங்கள் வகித்து வருவதுடன் சேர்ந்து, தொடக்கத்தில் இருந்தே, சிரிசா, நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்துவதை எதிர்த்தது. மார்க்சிசத்திற்கு எதிரான தங்களின் விரோதத்தில் போலி-இடதுகளால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அரசியல் நிலைப்பாடுகளையும் பிரதிபலித்துக் கொண்டு, வாரௌஃபாகிஸ் வலியுறுத்துகையில், ஒரு சோசலிச முன்னோக்கு முற்றிலும் யதார்த்தபூர்வமற்றது என்பது மட்டுமல்ல, அது சர்வாதிகாரத்திற்கும் ஏன் பாசிச ஆட்சி வடிவங்களுக்குமே கூட பாதையைத் திறந்துவிடுமென தெரிவித்தார்.

அதன் பதவிகளுக்கு உள்ளே இருந்தே பல்வேறு போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்ட சிரிசாவின் தலைமை, அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற குழுக்களுடன் அணிசேர்ந்து கொண்டு, கிரீஸை யூரோ மண்டலத்திற்குள் வைத்துக் கொண்டே, முக்கூட்டுடனான பேரம்பேசல்கள் மற்றும் தந்திரங்கள் மூலமாக கடன் நிவாரணத்தை மற்றும் இதர விட்டுக்கொடுப்புகளைப் பெற முடியுமென்ற பிரமையை ஊக்குவித்தது.

சிரிசா தலைமைக்குள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட கிரேக்க முதலாளித்துவத்தின் அடுக்குகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ அடுக்குகளின் நேரடியான பொருளாதார நலன்களைப் பிரதிபலித்த இந்த முன்னோக்கு, இரண்டு பொய்யான அனுமானங்களை அடித்தளமாக கொண்டிருந்தது.

முதலாவது என்னவென்றால், ஏதேனும் விதத்தில் யூரோ மண்டலத்திலிருந்து கிரேக்க வெளியேற்றமானது, ஜேர்மன் மற்றும் ஏனைய நிதியியல் நலன்களை நேரடியாக பாதித்து, முக்கூட்டு அம்முடிவிலிந்து பின்வாங்குவதற்கு அதை நிர்பந்திக்கும் அளவிலான ஒரு நிதியியல் கொந்தளிப்பை உண்டாக்கும் என்பது. இது முற்றிலும் ஓர் உண்மையை புறக்கணித்திருந்தது, அதாவது பிணையெடுப்பு நடவடிக்கைகள், பெரிதும் தனியாருக்கு சொந்தமான வங்கிகளை மற்றும் நிதியியல் அமைப்புகளை கிரேக்கம் வெளியேறினால் ஏற்படும் உடனடி பாதிப்பிலிருந்து விடுவித்திருந்தன என்பதை முற்றிலும் கவனத்தில் கொள்ளாதிருந்தது.

இரண்டாவதாக, அந்த அரசாங்கம் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வெவ்வேறு பிரிவுகளை ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்தி அதனை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளவும் மற்றும், கிரீஸின் ஒரு பொறிவையும் மற்றும் அதிலிருந்து அமெரிக்க நிதியியல் நலன்களுக்கு சாத்தியமாக கூடிய பாதகமான விளைவுகளைப் பார்க்க விருப்பமற்ற ஒமாபா நிர்வாகத்திடமிருந்து வரும் அழுத்தம் ஐரோப்பிய அரசுகளின் பாதையை மாற்ற நிர்ப்பந்திக்கலாம் என்றும் கருதியது.

ஆனால் இந்த மதிப்பீடு, மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தால் நீண்டகாலத்திற்கு முன்னரே ஸ்தாபிக்கப்பட்ட ஓர் அடிப்படை அரசியல் உண்மையை கைவிட்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முதலாளித்துவத்தினது பல்வேறு பிரிவுகள் அவை பிரதிநிதித்துவம் செய்யும் மூலதனத்தின் வெவ்வேறு பிரிவுகளது நலன்களை பிரதிபலிக்கையில், அவற்றிற்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட, அவை தொழிலாள வர்க்கத்திற்கு முகம்கொடுக்கவேண்டி வருகையில் ஒட்டுமொத்தமாக மூலதன நலன்களுக்காக போராடும் சக்திகளாகவே ஒன்றுசேரும். அவ்விதமாகவே அது திரும்பியது.

ஜேர்மன் அரசாங்கத்தின் பிடிவாதத்திற்கும் மற்றும் எஞ்சிய ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுக்களின் ஆதரவை அதனால் வெல்ல முடிந்ததற்கும் பின்னால் உள்ள உந்துசக்தி கிரீஸ் மீது தொடுக்கப்பட்டுள்ள போர், ஐரோப்பா எங்கிலுமான தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதலில் ஒரு கட்டம் மட்டுமே என்பதை உணர்ந்துகொண்டமையாலாகும், ஜேர்மன் அரசாங்கத்தின் பிடிவாதத்திற்கும் மற்றும் எஞ்சிய ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுக்களின் ஆதரவை அதனால் வெல்ல முடிந்ததற்கும் பின்னால் உள்ள உந்துசக்தியாகும். கிரீஸின் எந்தவொரு ஊசலாட்டமும் அக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளில் மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கும். இதைப் போலவே, ஐரோப்பாவின் எந்தவொரு பின்னடைவும் அமெரிக்காவில் ஒரு முக்கிய தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதை ஜனாதிபதி ஒபாமா அறிவார்.

அது பிரதிநிதித்துவம் செய்யும் சமூக சக்திகளின் கண்ணோட்டத்தின் அடிப்படையில், சிரிசாவின் முற்றிலும் தவறான மதிப்பீடு, அது பதவியேற்ற அந்த நாளிலிருந்தே அதன் நடவடிக்கைகளைத் தீர்மானித்தது. ஐரோப்பிய ஒன்றிய தலைமையில் "எங்களது சக கூட்டாளிகளுடன்" பேரம்பேசியதன் பலன் கண்ணுக்கெட்டியதூரம் வரையில் ஒன்றுமில்லை என்று முகத்தில் ஒவ்வொரு முறை அறை வாங்கிய பின்னர் அது அறிவித்த போதும், முக்கூட்டின் இணங்காமையைச் சந்திக்க அது எந்த தயாரிப்பும் செய்திருக்கவில்லை.

இதற்கிடையே மூலதனம் அந்நாட்டிலிருந்து தொடர்ந்து வெள்ளமென வெளியேறியது. முன்சௌவ் புள்ளிவிபரங்களின்படி, 2010 மற்றும் 2015க்கு இடையே வெளியேறிய பணத்திற்கு கூடுதலாக, ஜனவரியில் சிரிசா பதவியேற்றதற்குப் பின்னர் 50 பில்லியன் யூரோவிற்கு அதிகமான பணம் வெளியேறி இருந்தது.

வங்கி வைப்பீடுகளைச் சேர்ந்த இந்த தொகைகள், ஐயத்திற்கிடமின்றி கணிசமான அளவிற்கு மூலதன வெளியேற்றம் பற்றிய ஒரு குறைமதிப்பீடாகும். பெருநிறுவனங்களும் மற்றும் மிகப்பெரிய செல்வந்தர்களும் தேசிய எல்லைகளை தாண்டி பணப்பரிமாற்றம் செய்ய மற்றும் உத்தியோகபூர்வ வங்கியியல் அமைப்புமுறைக்கு வெளியே அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க பல இயங்குமுறைகளைக் கொண்டுள்ளனர்.

தொடக்கத்திலிருந்தே வெளிப்படையாக இருந்த இந்த நிலைமையை, மூலதன கட்டுப்பாடுகள் அல்லது இதர நடவடிக்கைகளைக் கொண்டு எதிர்கொள்ள சிரிசா-தலைமையிலான அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது உள்நாட்டு தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டவும் முயலவில்லை, அல்லது ஜேர்மனி மற்றும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களின் ஆதரவுக்கும் முறையிடவில்லை. அதற்கு மாறாக, அது பொருளாதாரத்தைச் சூறையாட கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கம் மிகுந்த அடுக்குகளை அனுமதித்ததுடன், அத்துடன் கிரீஸ் யூரோவிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு ஒரு தேசிய செலாவணிக்கு திரும்புவதாலோ அல்லது இரண்டும் சேர்ந்த ஒருவிதமான கலப்பு முறையினூடாக (hybrid system), அந்த தட்டினர் அதிலிருந்தும் இலாபமடைய அது அனுமதித்தது.

ஞாயிறன்று திட்டமிட்டப்பட்டுள்ள வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாமென" வாக்கிடுமாறு சிரிசா அழைப்புவிடுத்துள்ளது. ஆனால் இது நிதியியல் சர்வாதிகார திணிப்புக்கு எதிரான ஒரு போராட்டம் தொடங்குவதை நோக்கமாக கொண்டதல்ல. சிப்ராஸே தெளிவுபடுத்தியதைப் போல, “வேண்டாம்" என்ற வாக்கு கிரீஸை பேரம்பேசும் இடத்தில் பலப்படுத்தும் என்று கூறப்படுவதுடன், “பேரம்பேசல்கள்" என்றழைக்கப்படும் திவாலான பாதையே தொடரும். யதார்த்தத்தில் இது முக்கூட்டின் தீவிரமான கோரிக்கைகளுக்கு சிரிசா தன்னைத்தானே இணங்குவித்துக் கொள்வதற்குரிய நிகழ்முறையாகும்.

இந்த நோக்குநிலை அறியாமையின் விளைபொருளோ அல்லது கடந்த ஐந்து மாதங்களின் படிப்பினைகளைப் பெற தவறியதன் விளைபொருளோ அல்ல. இது சிரிசா மற்றும் அதன் தலைமையின் வர்க்க அடித்தளம் மற்றும் நோக்குநிலையின் ஒரு வெளிப்பாடாகும். நிதியியல் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு நிஜமான போராட்டம் புரட்சிகரமான தாக்கங்களைஅதாவது அடியிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெடிப்பைகொண்டிருக்கும் என்பது அந்த தலைமைக்கே தெரியும். ஏனைய எதையும் விட இந்த சாத்தியக்கூறை கருதித்தான் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

உலக சோசலிச வலைத் தளம் "வேண்டாம்" என வாக்களிக்குமாறு அறிவுறுத்துகிறது. ஆனால் அவ்வாறு செய்வது ஒரு புரட்சிகர முன்னோக்கின் அடித்தளத்திலாகும். அதாவது, நிதியியல் அமைப்புமுறை மற்றும் பிரதான கப்பல்துறை மற்றும் ஏனைய பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டை எடுத்து தொழிலாளர்களது அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக, அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தின் அடித்தளத்தில் இது இருக்க வேண்டும் என்பதை அது வலியுறுத்தி உள்ளது. அதுபோன்றவொரு முன்னோக்கு, நிதியியல் மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஐரோப்பாவெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுதிரட்டலின் அடிப்படையில் ஒரு சர்வதேச போராட்டத்தின் பாகமாக மட்டுமே யதார்த்தமாக்கப்பட முடியும்.