World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Syriza’s betrayal of the Greek working class

சிரிசா கிரேக்க தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுக்கின்றது

Alex Lantier
11 July 2015

Back to screen version

கிரீஸில் சிரிசா தலைமையிலான அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கோரிக்கைகள் மீதான ஞாயிற்றுகிழமை வாக்கெடுப்பில் வந்த பிரமாண்டமான "வேண்டாமெனும்" வாக்குகளை அசாதாரண வேகத்துடன் மறுத்தளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளை நிராகரிப்பதற்கு கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகரித்தளவில் வாக்களித்து வெறும் நான்கு நாட்களுக்குப் பின்னர், அந்த அரசாங்கம் இந்த வாரயிறுதியில் ஐரோப்பிய நிதி மந்திரிமார்கள் மற்றும் அரசாங்க தலைவர்கள் சந்திக்கும் கூட்டத்தில் பரிசீலிப்பதற்காக 13 பில்லியன் யூரோ மதிப்பிலான சிக்கன நடவடிக்கைகளுக்கான ஒரு முன்மொழிவை முன்வைத்துள்ளது. இந்த கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு பதிலீடாக 53 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு கிடைக்குமென கிரேக்க அரசாங்கம் நம்பி வருகிறது.

கிரேக்க நாடாளுமன்றத்தால் வெள்ளியன்று காலை பெரும்பான்மையாக ஒப்புதலைப் பெற்ற அந்த முன்மொழிவு, வெகுஜன வாக்கெடுப்பில் கிரேக்க வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட 9 பில்லியன் யூரோ சிக்கன பொதியை விட முன்பினும் அதிக கடுமையாக உள்ளது.

அதில் உள்ளடங்குபவை:

* ஓய்வூதிய வயதை படிப்படியாக 62 இல் இருந்து 67 ஆக உயர்த்தி, 2022 வாக்கில் அதனை 67 ஆக ஆக்குவது, அத்துடன் முன்கூட்டி ஓய்வு பெறுவது நிறுத்தப்படும்.

* வறிய ஓய்வூதியதாரர்களுக்கு பொதுநல மானிய உதவியில் வெட்டு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவுகளில் 50 சதவீத உயர்வு.

* பெரும்பாலான பண்டங்கள் மீதான மதிப்பு கூட்டு வரியில் சமூகளவில் பிற்போக்கான வரியை 23 சதவீதத்திற்கு உயர்த்துதல். இது கிரீஸில் உள்ள எண்ணற்ற, பெரும்பாலும் தொலைதூர மற்றும் வறிய தீவுகளுக்கும் பொருந்தும்.

* அரசாங்க தொழிலாளர்களுக்கான ஊதிய படிநிலையை "ஒரேமாதிரியாக" ஆக்குவதன் மூலமாக அரசுத்துறை ஊதிய வெட்டுக்களைத் திணித்தல், அத்துடன் சேர்ந்து தொழிலாள சட்டங்கள் மீதான மேலதிக தாக்குதல்கள்.

* பிராந்திய விமான நிலையங்கள் மற்றும் பிரேயுஸ், தெஸ்லலோனிகி, ஹெலினிகோன் துறைமுகங்கள் உட்பட தற்போது திட்டமிடப்பட்ட அனைத்து தனியார்மயமாக்கலையும் நிறைவேற்றுதல்.

* சிறு வியாபாரிகள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் சுய-தொழில்வழங்குனர்கள் மீதான வரிச்சுமையை உயர்த்துவதற்கு கடுமையான வரிவிதிப்பு சட்டங்களை அமுலாக்குவதுடன், விவசாயிகளுக்கான எரிபொருள் மானியங்களை வெட்டுதல்.

முற்றிலும் எரிச்சலூட்டும் விதமாக, சிரிசா தலைவரும் கிரேக்க பிரதம மந்திரியுமான அலெக்சிஸ் சிப்ராஸ் கிரேக்க மக்களின் விருப்பத்தை நேரடியாக மறுத்தளிப்பதை ஒரு ஜனநாயக வெற்றியாக காட்ட முயன்று வருகிறார். உண்மையில், வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுப்பதென்ற முடிவு "ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும், அது கிரிஸை, வங்கிகள் கொள்ளையடிப்பதற்கான ஜனநாயக முறையான மூடிமறைப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது" என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் ஆரம்ப மதிப்பீட்டையே இந்த ஒட்டுமொத்த விளைவும் உறுதிப்படுத்துகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு சிரிசா வெட்கமில்லாமல் சரணடைந்திருப்பது, ஜனவரியில் அது அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து அதன் ஒட்டுமொத்த போக்கின் தவிர்க்கவியலாத விளைபொருளாகும். ஆரம்பத்திலிருந்தே, அது ஐரோப்பிய ஒன்றிய கொள்கையில் ஒரு சிறிய திருத்தங்களுக்கு மேலதிகமாக வேறொன்றையும் கோரவில்லை. அது கிரீஸின் 300 பில்லியன் யூரோ கடனை மறுத்தளிக்க எந்தவொரு ஒருதலைபட்சமான நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதை உடனடியாக சூளுரைத்ததுடன், கிரேக்க வங்கிகளில் இருந்து மூலதன வெளியேற்றத்தைத் தடுக்கவும் அது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.

ஐரோப்பிய சிக்கன திட்டத்திற்கான பாரிய எதிர்ப்பிற்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடம் எந்தவொரு கோரிக்கைவிடுவதையும் சிரிசா நிராகரித்தது. அதற்கு மாறாக அந்த அரசாங்கம் தன்னைத்தானே பிரதான வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு, அத்துடன் ஒபாமா நிர்வாகத்திற்கு தயவுக்கு உகந்ததாக்கிக்கொள்ள முயன்றது. பேர்லின் தலைமையிலான ஐரோப்பிய அரசாங்கங்கள், சிரிசா தலைவரிடம் இருந்து பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதை அறிந்துகொண்டதால் மிகுந்த, அவமதிப்போடு சிப்ராஸைக் கையாண்டன.

ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸிற்கான நிதிகளை நிறுத்திய போது, சிரிசா தலைமையிலான அரசாங்கம் அதன் கடன்வழங்குனர்களுக்கு கடனைத் திருப்பி அளிக்க உள்ளூராட்சி அரசாங்கங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிடமிருந்து பில்லியன் கணக்கான யூரோ பண கையிருப்புகளை கொள்ளையடிக்க தொடங்கியது. இந்த நிதிகள் தீர்ந்துபோய், ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸிற்குக் கடன் வழங்குவதை நிறுத்த மற்றும் அதை யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற்ற அச்சுறுத்திய போது, சிப்ராஸ் வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தார். Daily Telegraph இன் Ambrose Evans-Pritchard ஆல் சிரிசாவின் உள்கட்சி விவாதங்களை அவர் மதிப்பிட்டதன் அடிப்படையில் குறிப்பிடப்பட்டபடி, சிப்ராஸ் "வேண்டும்" எனும் வாக்குகள் வெற்றி பெற்று, அவரை இராஜினாமா செய்யவும், புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கவும் அனுமதிக்கும் மற்றும் ஒரு புதிய அரசாங்கம் வந்து அந்த வெட்டுக்களைத் திணிக்கட்டும் என்று நினைத்தார்.

கிரேக்க மக்களால் வழங்கப்பட்ட பிரமாண்டமான "வேண்டாம்" எனும் வாக்குகளால் சிரிசா அதிர்ந்து போனது. அந்த புள்ளியில், இரண்டே இரண்டு மாற்றீடுகள் மட்டுமே சாத்தியமாக இருந்தன: கடந்த வாரம் வெடித்ததைப் போன்ற சிக்கன திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை பாரியளவில் ஒன்றுதிரட்டுவதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அந்த வாக்கெடுப்பைப் பயன்படுத்துவது, அல்லது அப்பட்டமாக மண்டியிடுவது. ஊகிக்கத்தக்கவாறே, சிரிசா மண்டியிடுவதைத் தேர்ந்தெடுத்தது.

ஐரோப்பிய வங்கிகள் மற்றும் அரசாங்களின் அச்சுறுத்தல்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன என்றாலும், சிரிசா கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படல் குறித்த அதன் பயத்தால் பெரிதும் பெரிதாக உந்தப்பட்டிருந்தது. அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக சிப்ராஸூம் மற்றும் அவரது அரசாங்க நிர்வாகிகளின் குழுவும் பாரிய ஆர்ப்பாட்டங்களையும் மற்றும் "வேண்டாம்" எனும் வாக்கெடுப்பை ஒரு பேரிடராகவும் கண்டனர்.

முன்மாதிரியில்லா இந்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன பொதியைத் திணிப்பதற்கான சிரிசாவின் நகர்வு தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் ஆழ்ந்த தோல்வியாகும். அது கிரேக்க மக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தயவில் மட்டும் நிறுத்தவில்லை, மாறாக சிரிசாவின் கோழைத்தனமான நடவடிக்கைகள் ஓரளவிற்கு "இடது" கொள்கைகள் என்றும் புரிந்து கொள்ளப்பட்டு, நவ-நாஜி கோல்டன் டௌன் கட்சி போன்ற மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகள் பலப்படுத்தக்கூடும்.

கிரீஸின் சம்பவங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பிரதான மூலோபாய அனுபவமாகும். அவை பின்நவீனத்துவ பள்ளியில் படித்துவந்த மற்றும் செழிப்பான மத்தியதர வர்க்கத்தின் மீது வேரூன்றிய, சிரிசா மற்றும் உலகெங்கிலும் உள்ள அதேபோன்ற போலி-இடது கட்சிகள் வகிக்கும் பாத்திரத்தைத் தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளன. இத்தகைய அமைப்புகளை வழிநடத்தும் பேராசிரியர்கள் மற்றும் நாடாளுமன்றவாதிகளைப் பொறுத்த வரையில், வர்க்க போராட்டம் மற்றும் மார்க்சிசத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதாம்.

உண்மையில், ஆளும் வர்க்கத்தின் மூர்க்கத்தனம், நிதி மூலதனத்தின் மேலாதிக்கம், தொழிலாளர்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் நலன்களுக்கு இடையே சமரசப்படுத்த முடியாத முரண்பாடு குறித்து மார்க்சிசத்தால் எடுத்துக்காட்டப்பட்ட முதலாளித்துவத்தின் யதார்த்தங்களை குறித்து தொழிலாள வர்க்கம் ஒரு கடுமையான கல்வியைப் பெற்று வருகிறது.

ஒரு போலி-இடது கட்சி அதிகாரத்திற்கு வந்தால் அது என்ன செய்யும் என்பதை தொழிலாள வர்க்கம்  காண்கின்றது. சிக்கன திட்டத்திற்கான ஐரோப்பிய மூலதனத்தின் கோரிக்கைகளுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக கோபத்திற்கும் இடையிலான மோதலை எதிர்கொண்டதும், சிரிசா வங்கிகளின் கரங்களுக்குள் புகுந்து கொண்டது.

சிக்கன திட்டத்திற்கான எதிர்ப்பானது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க முதலாளித்துவத்திற்கு எதிரான உடனடி நடவடிக்கைகளை, அதாவது கிரீஸ் கடன் தொகைகளை தள்ளுபடி செய்தல், செலாவணி கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தல், வங்கிகள் மற்றும் பிரதான தொழில்துறைகளைத் தொழிலாளர்களது கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குதல், ஐரோப்பிய மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து கூட்டு நடவடிக்கை மற்றும் ஆதரவிற்கு கோரிக்கைவிடுதல் ஆகியவை தேவையாகவுள்ளது. ஆனால் சிரிசாவின் வர்க்க குணாம்சம் மற்றும் நோக்குநிலை காரணமாக இந்த நடவடிக்கைகளில் எதுவுமே அதனால் எடுக்கப்படாது.

2013 இல் 1 மில்லியன் யூரோவை அவரது தனிப்பட்ட சேமிப்புகளாக அறிவித்த சிரிசாவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிமித்திரிஸ் சுக்கலாஸ் (Dimitris Tsoukalas), 500,000 யூரோவிற்கு அதிக மதிப்பில் பங்குகளைக் கொண்டுள்ள நிதி மந்திரி சக்காலாட்டோஸ் (Tsakalotos), ஜேபி மோர்கனில் 426,000 யூரோ முதலீடு செய்துள்ள பொருளாதார மந்திரி ஜியோர்ஜியோஸ் ஸ்ராதாகிஸ் (Giorgios Stathakis), 350,000 யூரோ சேமிப்பையும், பங்குகளையும் மற்றும் 11 நில/கட்டிடத்துறை சொத்துக்களையும் கொண்டுள்ள முன்னாள் சிரிசா தலைவர் அலேகோஸ் அலவானோஸ் (Alekos Alavanos), முன்னாள் நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் (இவரது மனைவியும் ஒரு மில்லியனர் ஆவார்) ஆகியோர் கிரேக்க ஆளும் உயரடுக்கின் ஏனைய நபர்களை போலவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடைவைக் கற்பனையும் செய்து பார்க்க முடியாதவர்களாவர் அல்லது சகித்துக் கொள்ளவும் முடியாதவர்களாவர். மேலும் கிரீஸ் யூரோவிலிருந்து வெளியேற்றப்பட்டால், அவர்களது சொத்துக்கள் பெரிதும் மதிப்பிழந்த தேசிய செலாவணிக்கு மாற்றப்படுகையில், அவர்கள் பெரும் செல்வவளத்தை இழக்க வேண்டியிருக்கும்.

தொழிலாள வர்க்கம் போராடுவதற்கு மறுத்ததன் விளைவே கிரீஸின் விளைபொருள் என்று யாரும் வாதிட முடியாது: தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டம் "வேண்டாமென்று" வாக்களித்தனர், இளைஞர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பெருமளவிலான பிரிவுகளை அவர்களுக்குப் பின்னால் ஒன்றுதிரட்டினர். கிரீஸில் தொழிலாள வர்க்கத்திற்கு இருந்த மத்தியமான தடை, சிரிசாவின் பிற்போக்குத்தனமான பாத்திரமாகும்.

ட்ரொட்ஸ்கி பின்வருமாறு அப்போது எழுதிய போது சிரிசாவிற்கு இன்று வக்காலத்துவாங்குபவர்களின் பாத்திரத்தை மிகச்சிறப்பாக வர்ணித்தார்: “தோல்விகளைத் தொடர்ச்சியான பிரபஞ்சத்திற்கு மேற்பட்ட  அபிவிருத்தியின் ஓர் அத்தியாவசிய சங்கிலியாக சமாதானப்படுத்திக்கொள்ள முயலும் இந்த கையாலாகாத தத்துவம், தோல்விகளுக்கு காரணமான வேலைத்திட்டங்கள், கட்சிகள், தனிமனிதவியல்புகள் போன்ற இத்தகைய திடமான காரணிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்துவதற்கு முற்றிலும் இலாயகற்று இருப்பதுடன், அவற்றை நிராகரிக்கிறது. இந்த விதிவசவாதம் மற்றும் சரணாகதி தத்துவம் புரட்சிகர நடவடிக்கையின் தத்துவமாக மார்க்சிசத்திற்கு எதிராக முற்றிலும் எதிர்திசையில் உள்ளது,” என்றார்.

ஸ்பெயினில் பெடெமோஸ், பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலென்சோனின் இடது முன்னணி, அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு, ஜேர்மனியில் இடது கட்சி என சிரிசாவிற்கு வக்காலத்துவாங்குபவர்களாக இன்று செயல்படும் அனைவரும் அவ்விதமாக தான் செய்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் பதவிக்கு வர வேண்டுமானால், அவர்கள் வேறுவிதமாக நடந்துகொள்ள மாட்டார்கள். இந்த குட்டி-முதலாளித்துவ குழுக்களின் ஒட்டுமொத்த கூட்டமும் தொழிலாள வர்க்கத்திற்கு பேரின்னல்களை தவிர வேறொன்றையும் கொண்டு வராது.

தொழிலாள வர்க்க முன்னோக்கு மற்றும் அரசியல் தலைமையின் நெருக்கடி குறித்த தீர்மானமே அடிப்படை பிரச்சினையாகும். அதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ், சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.