World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The way forward for the working class in Greece

கிரீஸில் தொழிலாள வர்க்கத்திற்கு முன்னால் உள்ள பாதை

Alex Lantier
16 June 2015

Back to screen version

கிரேக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையே வாரயிறுதியில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததுடன் சேர்ந்து, கிரேக்க நெருக்கடி —உண்மையில் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவே— ஒரு சிக்கலான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரீஸின் சிரிசா தலைமையிலான அரசாங்கம் இரண்டுமே, மேலதிக சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு பிரதியீடாக ஏதென்ஸிற்கு கடன்கள் வழங்க அனுமதிக்கும் ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கு அவற்றின் விருப்பத்தை அறிவித்துள்ளன. ஆனால் அதுபோன்றவொரு உடன்படிக்கையை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் வேகமாக மங்கி வருகின்றன.

ஏதென்ஸில் நேற்றைய பங்குச்சந்தை பொறிவு மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் வீழ்ச்சி ஆகியவை, கிரேக்க நிலைமையின் விளைவுகள் குறித்து நிதியியல் மேற்தட்டிற்குள் அதிகரித்துவரும் நிச்சயமற்றதன்மையை பிரதிபலிக்கின்றன. ஓர் உடன்படிக்கை உடனடியாக எட்டப்படவில்லை என்றால், அது கிரேக்க அரசு திவால்நிலைமை, கிரேக்கம் மற்றும் சர்வதேச வங்கிகளின் தோல்வி, யூரோ மண்டலத்திலிருந்து கிரேக்கம் வெளியேறுவது மற்றும் ஒரு தேசிய நாணயத்தின் மறுஅறிமுகம், மேலும் ஐரோப்பிய ஒன்றியமே கலைக்கப்படுவதற்குமே கூட இட்டுச் செல்லக்கூடும்.

அனைத்திற்கும் மேலாக, பைனான்சியல் டைம்ஸ் எழுதியதைப் போல, ஆளும் வர்க்கம் "பெரும் கூட்டங்களின்" “வன்முறை ஆர்ப்பாட்டங்களைக்" குறித்து —அதாவது, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நிகழ்ச்சிநிரலுக்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் ஒரு சவாலைக் குறித்து—அஞ்சுகிறது.

கிரீஸில் நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கோரிவரும் வேலைத்திட்டம் பேரழிவுகரமானதாகும். சராசரி கூலியில் 30இல் இருந்து 40 சதவீதம் வரையிலான வெட்டுக்கள், சொத்து வரி உயர்வுகள், மில்லியன் கணக்கானவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு மறுப்பு, பாரிய வேலைவாய்ப்பின்மையின் அதிகரிப்பு, பட்டினி மற்றும் வீடற்றநிலை போன்ற கடந்த ஆறு ஆண்டுகளின் தாக்குதலுக்கு அப்பாற்பட்டு, ஓய்வூதியங்களில் 20 சதவீத வெட்டு மற்றும் எரிபொருள் விலைகளில் உயர்வை நிதியியல் உயரடுக்கு கோரி வருகிறது.

கிரேக்க தொழிலாளர்களின் இந்த வறுமைக்குள் தள்ளப்படும் நிலைமையானது, ஜேர்மனியில் ஹார்ட்ஸ் IV சட்டங்களில் இருந்து தொடங்கி பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தெற்கு ஐரோப்பா எங்கிலுமான வெறுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கை திட்டங்கள் வரையில், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தாக்குதலின் மிக கோரமான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.  

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அது பதவிக்கு வந்த போது, பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் "முக்கூட்டு" எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒட்டுமொத்த சிக்கன நிகழ்ச்சிநிரலையும் அது ஆதரிப்பதை தெளிவுபடுத்தியது. சமூக வெட்டுக்களில் செய்யப்படும் பில்லியன் கணக்கான யூரோக்களை நியாயப்படுத்த, அந்த அரசாங்கம் சில குறைந்தபட்ச விட்டுக்கொடுப்புகளைக் கோரியது. 

ஆனால் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் முழுமையாக மண்டியிட கோரி வருகிறார்கள். கிரேக்க அரசு மற்றும் கிரேக்க வங்கிகளுக்கு கடன் வழங்குவதை வெட்ட ஐரோப்பிய ஒன்றியம் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், குண்டாந்தடியால் சிரிசாவை வழிக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியில் அவை திவால்நிலைமைக்கு தள்ளப்பட்டு வருவதுடன், இன்னும் மேலதிகமான கடுமையான விளைவுகள் சாத்தியமாக கூடும்.  

எவ்வாறு முன்னுக்கு செல்வது என்பதன் மீது உள்நாட்டு கருத்து முரண்பாடுகளால் அரசாங்கம் பிளவுபட்டு இருப்பதுடன் சேர்ந்து, ஐரோப்பிய "நிறுவனங்களின்" கடுமையான போக்கு, கிரீஸில் ஓர் அரசியல் நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளது. முற்றிலுமாக பெருந்திரளான மக்களின் உணர்வுகளை புறக்கணித்து விட முடியாது என்பது சிப்ராஸிற்கு நன்கு தெரியும். அதிகாரத்திற்கு வந்து வெறும் ஒருசில வாரங்களிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன உடன்படிக்கையை பேணுவதற்கு சூளுரைத்து கையெழுத்திட்டதன் மூலமாக, சிக்கன நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்ற சிரிசாவின் தேர்தல் வாக்குறுதிகளை உதறிவிடுவதற்கு எடுத்த முடிவு, அவரது அரசாங்கத்தின் மீதிருந்த நம்பகத்தன்மையை மிக மோசமாக கெடுத்துவிட்டது என்பதை அவர் அறிந்துள்ளார்.

முழுமையாக மண்டியிடுவது இப்போது பரந்த சமூக அமைதியின்மையை உண்டாக்குமோ என்று சிப்ராஸ் அஞ்சுகிறார், அவ்வாறான ஒன்றை அவரது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. மேலும் கடன்களை திரும்பசெலுத்துவதைக் கைவிடுவது மற்றும் நாணய கட்டுப்பாடுகளை திணிப்பது மற்றும் ஏனைய நடவடிக்கைகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், கிரீஸிற்கு உள்ளேயே உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் கணிசமான மற்றும் சக்திவாய்ந்த பிரிவுகள் யூரோ மண்டலத்திலிருந்து வெளியேறுவதற்கு உடன்பட தயாராக இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். எந்தவொரு விளைவும் —ஐரோப்பிய ஒன்றிய கட்டளையை ஏற்றுக்கொள்வதும் சரி அல்லது ஒரு கடன் திரும்பிசெலுத்தவியலா நிலைமையும் சரி— சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தும் என்பதையும், அவை கிரீஸில் ஓர் உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டு இராணுவம் தலையீடு செய்ய இட்டுச் செல்லும் என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.

இதனால், வெளியேறுவதற்கு அவருக்கு ஒரு வழியை வழங்கக்கூடிய ஒரு சமரசத்தை சிப்ராஸ் கோருகிறார். ஜேர்மனியால் வலியுறுத்தப்பட்ட கடுமையான போக்கு அனுமானிக்கவியலா மற்றும் சீர்செய்யவியலா விளைவுகளைக் கொண்டிருக்கும் என்றும், ஆகவே சிரிசா அதன் அரசியல் நம்பகத்தன்மையை பேணுவதற்கேற்ப அது பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மற்றும் கிரீஸில் முதலாளித்துவ ஆட்சியின் ஒரு கருவியாக அது சேவை செய்வதற்கு உதவியாக, சிரிசாவிற்கு ஏதேனும் வழங்குவதே மேல் என்றும் நம்புகின்ற ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்கு முறையீடு செய்வதை அவர் அவரது அடித்தளமாக்கி கொண்டிருக்கிறார்.

கிரேக்க முதலாளித்துவ வர்க்கம் மற்றும் செல்வம் மிகுந்த மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளை அதன் அடித்தளமாக கொண்டிருப்பதை பிரதிபலித்துவரும் சிரிசாவின் கொள்கை, பெரும்பாலும், சிக்கன திட்டத்தில் திருத்தம் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கட்டமைப்பிற்குள் எந்தவொரு விளைவும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலின் அடித்தளமாக இருப்பதை தீண்டாமல் இருக்கும், அதாவது முதலாளித்துவம் மற்றும் வங்கிகளின் பொருளாதார மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை தீண்டாமல் விலகியிருக்கும்.  

சிக்கன கொள்கையில் சிறந்தது ஒன்றைக் காண்பதல்ல தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அதிமுக்கிய அரசியல் பிரச்சினை, மாறாக காலங்கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக ஒழுங்கால் திணிக்கப்படும் முன்மாதிரியில்லாத பின்னோக்கி திரும்புதலைக் கடந்து செல்ல தகைமை கொண்ட, ஒரு சுயாதீனமான வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும். கிரீஸிற்குள், இதில் பின்வருபவை உள்ளடக்கப்பட வேண்டும்:

மொத்த கிரேக்க அரசு கடன்களின் ஒருதலைபட்சமான நிராகரிப்பு: கிரீஸின் பாரியளவிலான மற்றும் நடைமுறையில் சாத்தியமற்ற அரசு கடனே தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான சமூக உரிமைகளுக்கு முரண்பாடாக உள்ளது. அது "முக்கூட்டின்" நிதியியல் கொள்ளைக்காரர்களுக்கு, மிரட்டுவதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. கடனைத் திரும்ப செலுத்துவதற்கு அவசியப்படும் நிதிகளுக்குப் பிரதியீடாக, அவை கண்மூடித்தனமான வெட்டுகளை கோருகின்றன.

மூலதன கட்டுப்பாடுகளைத் திணித்தல்: கிரேக்க முதலாளிமார்கள் மற்றும் கிரீஸில் செயல்படும் பன்னாட்டு பெருநிறுவனங்கள் ஏற்கனவே கிரீஸில் இருந்து நிதிகளை வெளியேற்றி வருகின்றன. தீவிரமடைந்துவரும் மூலதன வெளியேற்றத்தால் அவை உழைக்கும் மக்களுக்கு சார்பான முனைவுகளுக்கு எதிராக அவர்களின் செல்வம் மற்றும் தனிச்சலுகைகளை பாதுகாக்க முயலும். தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட செல்வவளத்தால் உருவான இந்த மூலதனம், பலவந்தமாக கிரீஸிற்குள் தக்க வைக்கப்பட்டு, வேலைகள் மற்றும் சமூக சேவைகளுக்காக மக்களின் அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் வங்கிகள் தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே, அதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முடியும்.

• தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள் மற்றும் பிரதான தொழில்துறைகளின் தேசியமயமாக்கல்: பொருளாதாரம் மீதான உயர்ந்தபட்ச அதிகாரம், மக்களின் சமூக தேவைகளுக்கு அடிபணிய செய்யப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட அவை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வேலை வெட்டுக்கள் மற்றும் சமூக தாக்குதல்களை திரும்ப பெறுவதற்கு அவசியமான ஆதாரவளங்களை வழங்க உதவும்.

அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு ஒரு நேரடியான அழைப்பை விடுவது அவசியமாகும். கிரீஸ்ஸின் நெருக்கடிக்கு, கிரீஸின் எல்லைக்குள்ளே எந்த ஒரு தீர்வும் கிடையாது.

எழுச்சிபெற்றுவரும் மோதல், கிரீஸில் மட்டுமல்ல, ஐரோப்பா எங்கிலும் நிதி மூலதனத்தை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நிறுத்துகிறது. “கடந்த ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய கமிஷனின் மூலோபாயம், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து வரும் போட்டிகளுக்கு எதிராக ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக எல்லா ஐரோப்பிய நாடுகளின் உழைப்பு செலவுகளைக் குறைக்க வேண்டி இருந்தது,” என்று ஐரோப்பிய ஒன்றிய கமிஷனர் மரியா டாமானாக்கி, இரண்டாண்டுகளுக்கு முன்னர் சைப்ரஸின் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பை விவரிக்கையில் தெரிவித்தார். நிதி மூலதனத்தின் மூலோபாயம் என்னவென்றால், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை அடிமட்டத்திற்குக் கொண்டுவரும் போட்டாபோட்டியை திணிப்பதன் மூலமாக அதன் செல்வவளத்தை அதிகரிப்பதாகும்.

கிரேக்க தொழிலாளர்கள் மீதான தாக்குதல் அக்கண்டம் முழுவதிலுமான, உண்மையில் உலகம் முழுவதிலுமான தாக்குதலின் பாகமாக இருப்பதால், அதைப் போலவே இந்த தாக்குதலுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வு அவசியமாகும்.

கிரேக்க தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் முறையிடுவதன் மூலமாக மட்டுமே, கிரேக்க தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்க முடியும். யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாப்பதற்காக என்ற பெயரில் ஆளும் வர்க்கம் அவர்களிடம் கேட்கும் எல்லா தியாகங்களையும் ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். தங்களின் சொந்த நாடுகளின் சிக்கன கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் அணிதிரள்வதைப் போலவே, கிரேக்க தொழிலாளர்களைப் பாதுகாப்போம்! என்பதே அவர்களின் தாரகமந்திரமாக வேண்டும்.

அதுபோன்றவொரு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கு, சிரிசாவுடனும், கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் எல்லா கருவிகளுடனும் அரசியல்ரீதியில் உடைத்துக் கொள்வது அவசியமாகும். புரட்சிகர தலைமை மற்றும் அரசியல் முன்னோக்கின் கேள்வியே மிகஅவசரமான கேள்வியாக முன்நிற்கிறது.