World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek prime minister calls for referendum on EU austerity demands

கிரேக்க பிரதம மந்திரி ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கோரிக்கைகளின் மீது வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுக்கிறார்

By Robert Stevens and Alex Lantier
27 June 2015

Back to screen version

இன்று அதிகாலை, கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ், கிரேக்க அரசு திவால்நிலைமையைத் தடுப்பதற்காக கடன்களை நீடிப்பதற்கு பிரதியீடாக ஐரோப்பிய ஒன்றித்தால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பொதியை ஒப்புக்கொள்வதா அல்லது வேண்டாமா என்பதன் மீது கிரீஸில் ஜூலை 5 அன்று வெகுஜன வாக்கெடுப்பு நடத்த அழைப்புவிடுத்தார்.

புருசெல்ஸ் பேச்சுவார்த்தைகள், கடுமையான பரஸ்பர குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க அதிகாரிகளுக்கு இடையே மீண்டும் பொறிந்து போன பின்னர், சிப்ராஸின் இந்த பரிந்துரை வந்தது. சமூக வெட்டுகளில் ஏற்கனவே பில்லியன் கணக்கான யூரோக்களைத் திணிக்க ஒப்புக் கொண்டுள்ள கிரேக்க அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் கோரப்படும் ஆழமான ஓய்வூதிய வெட்டுக்கள் உட்பட புதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ள மறுத்தனர். கிரேக்க தொழில்துறை மந்திரி Dimitris Stratoulis, ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகள் கிரேக்க அரசாங்கத்தை "முற்றிலுமாக அவமானப்படுத்துவதாகவும்" மற்றும் அவை கிரேக்க மக்களை "அடிமைப்படுத்தி நிர்மூலமாக்குபவை" என்றும் குற்றஞ்சாட்டினார்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்து அவரது சிரிசா கட்சி வெற்றி பெற்ற இவ்வாண்டு ஜனவரி மாத கிரீஸ் தேர்தல்களின் முடிவுகளை, முழுமையாகவும் மற்றும் பகிரங்கமாகவும் கைவிடுவதற்கு சிப்ராஸிற்கு கட்டளையிடும் விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகள் உள்ளன. கடன் நெருக்கடியை தீர்க்க சிப்ராஸ் கூடுதல் அவகாசம் கோரிய போது, வியாழனன்று இரவு உணவு விருந்தில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் மற்றும் டச் பிரதம மந்திரி மார்க் ரூட்டேவும் சிப்ராஸை "வாயை மூடுமாறு" கூறியதாக செய்திகள் தெரிவித்தன.

ஏதென்ஸிற்கு திரும்புகையில், சிப்ராஸ் அவரது மந்திரிசபையுடன் ஓர் அவசர சந்திப்பை நடத்தினார். பின்னர் அவர், வெகுஜன வாக்கெடுப்பு குறித்து அறிவிக்க நள்ளிரவில் தேசிய தொலைக்காட்சியில் தோன்றினார். அந்த வெகுஜன வாக்கெடுப்பு குறித்து அவர் மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ திராஹி ஆகியோருடன் விவாதித்திருந்ததாக தெரிவித்தார்.

சிப்ராஸ் தெரிவித்தார், “ஐந்து மாதகால கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், நமது பங்காளிகள் துரதிருஷ்டவசமாக கிரேக்க ஜனநாயகம் மற்றும் கிரேக்க மக்களை நோக்கிய இறுதி எச்சரிக்கையாக ஒரு பரிந்துரையில் வந்து நிற்கின்றனர்.” ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸை "அவமரியாதை மற்றும் மிரட்டலுக்கு" உள்ளாக்கி இருப்பதாக தெரிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில், அதன் பரிந்துரைகள் "தெளிவாக ஐரோப்பிய சட்டவிதிகளையும், வேலை, சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமைகளையும் மீறுகின்றன,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஆனாலும் அவர், அத்தகைய பிற்போக்குத்தனமான பரிந்துரைகளை ஏற்கலாமா வேண்டாமா என்பதன் மீது கிரேக்க மக்களே வாக்களிக்கட்டும் என்பதை பரிந்துரைத்ததுடன், இதையொரு "ஜனநாயக நிகழ்முறையாக" குறிப்பிட்டார்.

அதன் முடிவு என்னவாக இருந்தாலும், அதை நான் மதிப்பேன்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

தொழிலாளர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை விலையாக கொடுத்து, வங்கிகள் கிரீஸைக் கொள்ளையடிப்பதற்கு ஒரு ஜனநாயக சட்டபூர்வ போர்வையை வழங்க, சிப்ராஸின் பரிந்துரை ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும்.

சிப்ராஸின் முன்மொழிவின்படி, மக்களை இன்னும் ஆழமான தரித்திர நிலைமைக்குள் தள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெட்டுக்களை ஏற்க வேண்டுமா, அல்லது "வேண்டாம்" என்று வாக்களித்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து கடன் வெட்டுக்கள், கிரேக்க அரசு திவால்நிலைமை, கிரேக்க வங்கியியல் அமைப்புமுறையின் பொறிவு ஆகியவற்றை முகங்கொடுப்பதா என்பதற்கு இடையே மக்கள் வாக்களிக்கலாம். உண்மையில், வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னரே, கிரீஸின் வங்கிகள் பொறிய தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

வியாழனன்று, ஜேர்மனியின் மத்திய வங்கியின் (Bundesbank) தலைவர் ஜென்ஸ் வைட்மான் கூறுகையில், கிரேக்க வங்கிகளுக்கு கடன் வழங்குவதை வெட்ட ஐரோப்பிய மத்திய வங்கி தயாராக இருக்க வேண்டும் என்றார். வங்கி வாடிக்கையாளர்கள் கிரேக்க வங்கிகளில் இருந்து தொடர்ந்து பணத்தை வெளியே எடுத்து வருகின்ற நிலையில், குறைந்தபட்சம் ஒரு வங்கிஆல்பா பேங்க்அது சனியன்று காலை இணையவழி பரிவர்த்தனை நடவடிக்கைகளை நிறுத்தி இருப்பதாக அறிவித்தது.

கிரேக்க அரசும் மற்றும் வங்கிகளும் யூரோ கடன்பெற முடியாதவாறு தடுக்கப்பட்டால், அதன் விளைவாக கிரீஸ் அதன் வங்கிகளுக்கு பிணையெடுப்பு வழங்கவும் மற்றும் நிதியியல் பொறிவைத் தடுக்கவும் ஒரு தேசிய நாணயத்தை மறுஅறிமுகம் செய்ய நிர்பந்திக்கப்பட்டால், அதனால் ஏற்படும் கிரேக்க செலாவணியின் மதிப்பிறக்கம் அனேகமாக அந்நாட்டையே பாழாக்கிவிடக்கூடும். கிரீஸ் போன்றவொரு நாட்டில் அதுபோன்றவொரு சம்பவத்திற்குப் பின்னர், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதே ஆண்டில் 40 இல் இருந்து 50 சதவீத பொறிவால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக 2011 இல் சுவிஸ் வங்கி UBS இன் ஆய்வு ஒன்று மதிப்பிட்டது.

யூரோவிலிருந்து கிரீஸ் வெளியேறுவதென்பது "சிவில் சமூக பொறிவுக்கும்", ஓர் இராணுவ சர்வாதிகாரம் ஆட்சிக்கு வருவதற்கும் இட்டுச் செல்லுமென இலண்டனை மையமாக கொண்ட ஒரு தனியார் முதலீட்டு நிறுவனம் Tosca Fund இன் தலைமை பொருளாதார நிபுணர் Sav Savouri அப்பட்டமாக முன்கணித்தார். “அவ்வாறு எங்கெல்லாம் நடந்ததோ அத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இராணுவம் அரசாங்கத்தின் பாத்திரத்தை எடுத்திருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

ஒரு வெகுஜன வாக்கெடுப்பு எவ்வாறு திரும்பும் என்பது தெளிவாக இல்லை. ஜூன் 16 அன்று Mega TV கருத்துக்கணிப்பு ஒன்று 56.2 சதவீதத்தினர் யூரோவுடன் தங்கியிருக்க விரும்புவதாகவும், 35.4 சதவீதத்தினர் யூரோவிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவளிப்பதாகவும் கண்டறிந்தது. ஆனால் ஜூனின் முதல் பாதியில் யூரோவிலிருந்து வெளியேறுவதற்கான ஆதரவு 10 சதவீதத்திற்கு அதிகரிப்பதுடன் சேர்ந்து, இந்த கருத்துக்கள் வேகமாக மாறுமென கருத்துக்கணிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

கிரீஸ் எதிர்கொண்டிருக்கும் நிலைமையானது சிரிசாவின் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கு மீது ஒரு நாசகரமான குற்றப்பத்திரிக்கையாகும். ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மீதான சிக்கன நடவடிக்கைக்கு நிலவும் ஆழ்ந்த எதிர்ப்பை ஒன்றுதிரட்டுவதற்கு முறையீடு செய்வதை மறுத்து, அதற்கு மாறாக ஏனைய ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஜேர்மனியால் கோரப்பட்ட சிக்கன கொள்கைகளை விமர்சித்து மென்மைப்படுத்துமென்று நம்பியதுடன், அது தொடர்ச்சியான வெட்டுக்களைத் திணிக்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காண்கிறது. இப்போது அது, கிரேக்க மக்களின் நெற்றிப்பொட்டில் குண்டு நிரப்பிய துப்பாக்கிக்கு சமமான ஒரு வெகுஜன வாக்கெடுப்பைப் பரிந்துரைக்கும் அளவிற்கு சுருங்கி போயுள்ளது.

அதன் பிற்போக்குத்தனமான தந்திரங்களுக்கு ஒரு போலித்தனமான ஜனநாயக போர்வையை வழங்குவதற்கு அப்பாற்பட்டு, சிப்ராஸின் வெகுஜன வாக்கெடுப்பு பரிந்துரையானது, அவரது கட்சியும் மற்றும் அவரது அரசாங்கமும் ஆழமாக பிளவுபட்டிருக்கின்றன என்பதையும் மற்றும் எவ்வாறு முன்னோக்கி நகர்வது என்பதில் அவை உடன்பட முடியவில்லை என்பதையும் மௌனமாக ஒப்புக் கொள்வதாக உள்ளது.

அவமதிக்கும் கோரிக்கைகள் என்று சிப்ராஸே எதை ஏற்றுக்கொள்கிறாரோ, அதற்கு மண்டியிடுவதற்கு சிரிசா தலைமையிலான அரசாங்கத்தின் பரந்த பிரிவுகளும் மற்றும் கிரேக்க ஆளும் வர்க்கமும் ஒட்டுமொத்தமாக அழுத்தமளித்து வருகின்றன. கிரீஸின் மத்திய வங்கி யூரோவிலேயே தங்கியிருப்பதற்கான ஓர் அழைப்பை விடுத்ததும், நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் வலியுறுத்துகையில், கிரீஸ் அதன் கடன்வழங்குனர்களின் "வித்தியாசமான கோரிக்கைகளைத்" திருப்திப்படுத்த அதனால் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருவதாகவும், யூரோ மண்டலத்திற்குள் தங்கியிருக்க தீர்மானகரமாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

ஏதென்ஸின் "பசுமையான வசதி மிக்க வடக்கு புறநகர்பகுதிகளில்" நடத்தப்பட்ட கட்சி கூட்டம் ஒன்றில் "பெரு வணிகர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்களின்" ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதாக பைனான்சியல் டைம்ஸ் சமீபத்தில் அறிவித்தது. இத்தகைய அடுக்குகளைப் பொறுத்த வரையில், “யூரோ இல்லாத வாழ்க்கையை ஏறத்தாழ கற்பனையும் செய்து பார்க்க முடியாது. அந்த ஒரே செலாவணி அவர்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கவும் மற்றும் ஐரோப்பாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்துக்களை மற்றும் ஆடம்பர பண்டங்களை வாங்கவும் அவர்களுக்கு சௌகரியத்தைக் கொடுத்தது,”4 என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

தொழிலாள வர்க்கத்திலிருந்து விலகி மற்றும் அதற்கு விரோதமாக உள்ள, இத்தகைய செல்வாக்குமிகுந்த மத்தியதட்டு கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக முக்கியஸ்தர்களை சிரிசா கொண்டிருக்கும் நிலையில், அதேபோன்ற மனோபாவங்கள் அந்த அமைப்புக்குள்ளேயேயும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

சிரிசாவின் இடது ப்ளாட்பார்ம் (Left Platform) கன்னை மற்றும் தீவிரவலது சுதந்திர கிரேக்கர்கள் (Anel) கட்சி உட்பட அரசாங்கத்தின் ஏனைய பிரிவுகள் யூரோவிலிருந்து கிரீஸ் வெளியேறுவதை விரும்புகின்றன. இடது ப்ளாட்பார்ம் இன் ஓர் அங்கத்தவரான கிரேக்க அபிவிருத்துத்துறை மந்திரி Panagiotis Lafazanis, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்படிக்கை மீது வெகுஜன வாக்கெடுப்பு பரிந்துரைக்கு "பலத்த குரலோடு வேண்டாமென" பதிலளிக்குமாறு கிரேக்கர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

கிரேக்க நிதியியல் பிரபுத்துவத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள், குறிப்பாக Anel உடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள கப்பல்துறை ஜாம்பவான்களும் அவர்களுக்குப் பின்னால் உள்ளனர். சர்வதேச சம்பாதியங்களின் மீது அவர்கள் பூஜ்ஜிய வரி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கிரேக்க அரசியலைமைப்பின் தனிவகைமுறைகளால் அவர்களின் சொத்துக்கள் இதுவரையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய திட்டங்களில், "கப்பல் தொழில்துறை மீது சிறப்பு வரி சலுகைகளைக் கைவிட்டு, வர்த்தக கப்பல் போக்குவரத்து மீது சிறந்த வரித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான" பரிந்துரைகள் உள்ளடங்கி உள்ளன.

அதுபோன்ற முறைகள் உலகின் மிகப்பெரிய வியாபார கப்பல்துறையை இன்னமும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கப்பல்துறை ஜாம்பவான்களின் செல்வவளத்தைக் குறைத்துவிடக்கூடும். அவர்களில் மிகப்பெரிய செல்வந்தரான Philip Niarchos இன் சொத்துக்கள் 2.5 பில்லின் டாலராக மதிப்பிடப்படுகின்றன. மேலும் ஏனைய நான்கு கப்பல்துறை முதலாளிமார்கள் ஒவ்வொருவரும் ஒரு பில்லியன் யூரோவிற்கு அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர்.

கிரேக்க ஆளும் வர்க்கத்திற்குள் இத்தகைய பிளவுகள், ஐரோப்பாவின் பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பிளவுகளை எதிரொலிக்கின்றன. பேர்லின் தலைமையிலான பேச்சுவார்த்தைகளில் கிரீஸை யூரோ மண்டலத்திற்குள் வைத்திருப்பதே அவர்களது நோக்கமென இதுவரையில் ஐரோப்பிய அதிகாரிகள் வலியுறுத்தி வந்த போதினும், கிரேக்கம் வெளியேறுவதன் மூலமாக யூரோ மண்டலத்தை உடைத்து விடுவதே சிறந்த மூலோபாயமாக இருக்கக்கூடுமென பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் வலியுறுத்தி உள்ளதாக நேற்று வெளியானது.

கிரீஸ் உடனான விவாதத்தை [பிரதம மந்திரி] மட்டத்தில் நடத்த அனுமதிப்பது அங்கேலா மேர்க்கெலுக்கு அறிவுப்பூர்வமாக இருக்குமாஎன கேமரூன் அதிசயித்தார், "அதை விட அதன் பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கு யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸை வெளியேற்றுவது சிறப்பாக இருக்குமென தெரிவித்ததாக" ஒரு இராஜாங்க குறிப்புரை கார்டியன் இதழுக்கு கசியவிடப்பட்டது.

முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக ஒழுங்கமைப்பு முற்றிலுமாக தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் எல்லா கன்னைகளிலிருந்தும் சுயாதீனமான கொள்கையை அமைப்பதே தொழிலாள வர்க்கத்திற்கு முன்னால் உள்ள ஒரே பாதையாகும். சிரிசா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சித் திட்டங்களுக்கு எதிரான புரட்சிகர போராட்டத்தில் கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதற்கு தயாரிப்பு செய்வதே அதிமுக்கிய பணியாகும்.