World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Campaign for International May Day wins warm response

இலங்கை: சர்வதேச மே தினத்துக்கான பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு

By our correspondents
24 April 2015

Back to screen version

2015 இணையவழி சர்வதேச மே தின கூட்டத்துக்கான போராட்டம் கொழும்பில்  உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றது. இங்கு சுமார் 12,000 மாணவர்கள் உள்ளனர்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் மே 3 அன்று நடக்கவுள்ள கூட்டத்திற்கு பிரச்சாரம் செய்கின்றன. உலக சோசலிச வலைத் தளம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றன. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கொழும்பில் மே 1 அன்று ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

மே தின கூட்டம் தொடர்பான அறிவிப்பின் நூற்றுக் கணக்கான சிங்கள பிரதிகளும் ஏனைய மார்க்சிய இலக்கியங்களும் ஆதரவாளர்களால் பல்கலைக்கழக வளாகத்தில் விநியோகிக்கப்பட்டன. பல மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களும் சோ.ச.க. குழுவுடன் பேசியதோடு, ஏகாதிபத்திய போருக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஒரு மொழிபெயர்ப்பாளரான ஐ.எச். மெகார், கூறியதாவது: "நான் மற்றொரு உலகளாவிய அழிவின் அச்சுறுத்தல் அதிகரிப்பது பற்றி மிகவும் கவலைப்படுவதனால் உங்கள் பிரச்சாரம் உடனடியாக என்னை ஈர்த்தது. உங்கள் கட்சி தவிர வேறு எந்த அரசியல் அமைப்போ அல்லது ஊடகமோ ஏகாதிபத்திய யுத்தத்தின் அச்சுறுத்தல் பற்றி பேசியது இல்லை.

"என் குழந்தை பருவம் முதல் உங்கள் கட்சியை அறிவேன். என் தந்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.-இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) ஆதரவாளராக இருந்தார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன் தொடக்கத்தில் இருந்தே சர்வதேசியவாதத்துக்காக போராடியது எனக்குத் தெரியும். போரை தேசியவாத அடிப்படையில் தடுக்க முடியாது என நான் உறுதியாக நம்புகிறேன். போர் ஒரு ஏகாதிபத்திய தலையீடாகும்."

சீனாவுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம், வாஷிங்டனின் கோபத்தை சம்பாதித்துக்கொண்ட மஹிந்த இராஜபக்ஷவை தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேன ஜனவரி 8 ம் திகதி ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டது பற்றியும் மெக்கார் பேசினார்.

"இலங்கையில் ஆட்சி மாற்றம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் நடத்தப்பட்டது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், ஒரு காலத்தில் ஏகாதிபத்திய-விரோதியாக காட்டிக் கொண்ட இந்தியா இப்போது ஏகாதிபத்தியத்துக்கு அடிவருடுகிறது. மக்கள் பிரதான அரசியல் கட்சிகளை வெறுக்கின்றனர். ஒரு மாற்றீடு உடனடி அவசியமாகும்."

போலி இடது குழுக்கள் இந்த ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்து பின்னர் சிறிசேனவின் தேசிய நிர்வாக சபையிலும் சேர்ந்து கொண்டதை மொழிபெயர்ப்பாளர் சுட்டிக்காட்டினார். "இடதுகள் எனக் கூறிக்கொண்ட நவ சம சமாஜக் கட்சி போன்ற இடது கட்சிகள் கூட முழுமையாக ஏகாதிபத்தியத்துக்குப் பின்னால் அணிவகுத்துள்ளன. தேசிய நிர்வாக சபையில் நவ சம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன முன்னிலையில் இருப்பது ஒரு உதாரணம் ஆகும்."

சங்க என்ற மாணவர் கூறுகையில்: "இதற்கு முன்பு, முன்னிலை சோசலிசக் கட்சி சார்ந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்மையில் மாணவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது என நான் நினைத்தேன். இப்போது நான் அவற்றின் ஒரே நோக்கம் ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் கொடுப்பதே என்று புரிந்து கொண்டேன். அவர்கள் நடப்பில் இருக்கும் அமைப்பை மாற்றுவதை பற்றி நினைப்பதே இல்லை. இந்த கட்சிகள் மற்றும் ஊடகங்கள் ஒருபோதும் உலகப் போர் அச்சுறுத்தல் பற்றி பேசுவதில்லை. நான் அத்தகைய ஆபத்தை பற்றி கேள்விப்படுவது இதுவே முதல் முறை.

"ஒரு இணையவழி மே தின கூட்டம் எனக்கு புதிய அனுபவமாகும். ஆளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற [முதலாளித்துவ] கட்சிகள் உட்பட, ஒவ்வொரு கட்சியும் மே தினத்தைக் கொண்டாடுவதால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த மே தினக் கூட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால் இது உண்மையிலேயே ஒரு புதிய அனுபவம்."

ஒரு முகாமைத்துவ மாணவனான சுபாஷ் கூறியதாவது: "இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் திவாலாகி விட்டன. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் சிலர் ஜே.வி.பி.யில் [மக்கள் விடுதலை முன்னணி] இருந்து பிரிந்து, தாம் உண்மையான புரட்சிகர புதிய கட்சியை தொடங்குவதாக தெரிவித்தனர். அவர்களுடைய புதிய முன்னிலை சோசலிசக் கட்சி அம்பலப்படுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. அவர்கள் சிறிசேன அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஆதரவளித்தனர். இந்த அரசாங்கம் இப்போது தான் 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாக உறுதியளித்தவற்றை செயல்படுத்தாத அதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்களை தாக்குகிறது.

"ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி, கியூபாவில் காஸ்ட்ரோ ஆட்சியை பெருமிதப்படுத்துகின்றன. நீங்கள் குறிப்பிட்டதைப் போல கியூப ஆட்சி இப்போது ஒபாமாவைத் தழுவிக் கொண்டுள்ளது. அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு பேச்சு எங்கே போய்விட்டது?"

"நான் உங்கள் பிரச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டுள்ளேன். உங்கள் கட்சி மட்டுமே உலகப் போருக்கான ஏகாதிபத்திய உந்துதல் பற்றிய பிரச்சினையை எழுப்பியுள்ளது. நீங்கள் சுட்டிக்காட்டியது போல், இந்த உலகப் பிரச்சினைக்கு ஒரு உலகளாவிய பதிலே உள்ளது. போரை நிறுத்தக் கூடிய ஒரே சர்வதேச சக்தியாக தொழிலாள வர்க்கத்தை நீங்கள் வலியுறுத்துவதை நான் பாராட்டுகிறேன்," என சுபாஷ் கூறினார்.

சுபாஷ் மே தின கூட்டத்துக்கு பதிவு செய்வதாகவும் மே 1 கூட்டத்தில் கலந்துகொள்வதாகவும் கூறியதோடு சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் நூலின் பிரதியையும் வாங்கினார்.

எச்.யு. பண்டார ஒரு கட்டிடம் கட்டும் தொழிலாளி ஆவர். அவர் விளக்கியதாவது: "என் வீடு பண்டாரவளையில் உள்ளது (இலங்கை மத்திய மலையகப் பகுதி). அனைத்து சாதாரண மக்களும், அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் புதிய வேலைத் திட்டங்களை பற்றி யோசிக்கத் தள்ளப்பட்டுள்ளனர். இராஜபக்ஷ ஆட்சியின் உறுப்பினர்கள் பொது பணிகளுக்கான ஒதுக்கீடுகளில் இருந்து தங்கள் கருவூலத்தை பெரிய அளவில் நிரப்பிக்கொண்டுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. எமது தீவை ஏகாதிபத்திய முகாமில் உறுதியாக வைப்பதற்காக அமெரிக்க சதி மூலமே சிறிசேன அதிகாரத்தில் வைக்கப்பட்டார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

"உலக போர் அச்சுறுத்தல் பற்றிய உங்கள் கலந்துரையாடலும் அது ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தால் மட்டுமே நிறுத்தப்பட முடியும் என்ற உங்கள் விளக்கமும் என்னை அதிகம் தூண்டியுள்ளன. எனக்கு 50 வயது. உங்களது மே தினக் கூட்டத்திற்கு வருகை தருவேன். இனையவழி மே தின கூட்டத்திலும் பங்குபெற எதிர்பார்க்கின்றேன்."