World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Evicted Colombo shanty dwellers face desperate situation

இலங்கை: வெளியேற்றப்பட்ட கொழும்பு குடிசைவாசிகள் அவநம்பிக்கையான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்

By Vilani Peiris
9 May 2015

Back to screen version

பல மில்லியன் டாலர் கட்டுமானச் சொத்து வளர்ச்சிக்கு இடமளிப்பதற்காக மத்திய கொழும்பின் கம்பனித்தெருவில் இருந்து 2013ல் வெளியேற்றப்பட்ட 580க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் இப்போது நம்பிக்கையற்ற நிலையை எதிர்கொள்கின்றன. புதிய வசிப்பிடங்கள் வழங்கப்படும் வரை வாடகைப் பணம் தருவதாக வாக்குறுதி தந்த பின்னர், குடிசைவாசிகளுக்கு போதுமான பணம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு புதிய வீடுகளும் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முன்னாள் அரசாங்கம், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான ஒரு தெற்காசிய வர்த்தக மையமாக கொழும்பு நகரை மாற்றும் தனது திட்டத்தின் பாகமாக, 2.4 ஹெக்டேர் நிலப்பரப்பை துப்புரவு செய்துகொள்வதன் பேரில் 2013ல் இவ்வளவு குடும்பங்களையும் வெளியேற்றியது. இந்த திட்டம் இராட்சத இந்திய நிறுவனமான டாட்டாவை (Tata) உள்ளடக்கியிருந்தது. டாட்டா, 429.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆடம்பர வீடுகளை கட்ட திட்டமிட்டிருந்தது.

இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் (யுடிஏ) ஏற்படுத்திக்கொண்ட கொண்ட உடன்பாட்டின் கீழ், நகரத்துக்குள் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 650 நிரந்தர வீடுகள் வழங்குவதற்காக நான்கு அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்டிக்கொடுக்க டாட்டா வாக்குறுதியளித்தது. மேலும், இந்த நிறுவனம் 30 மாத காலத்துக்கு 400 சதுர அடி வீட்டை வாடகைக்கு எடுக்க, ஒவ்வொரு இடம்பெயர்ந்த குடும்பத்திற்கும் மாதம் 15,000 ரூபாய் (112 டாலர்) செலுத்த ஒத்துக்கொண்டது.

இங்கு பெரும்பாலான குடும்பங்கள் 15 மாதங்களுக்கு மாதம் 15,000 ரூபாய் பெற்ற போதிலும், இந்த நிதியளிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒரு சிரேஷ்ட அதிகாரி, டாட்டா கொடுத்த பணம் 15 மாதங்களுக்கு மட்டுமே போதுமானது, மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்க பணம் இல்லை என சமீபத்தில் பிஸ்னஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு கூறினார். மேலும், வாக்குறுதியளிக்கப்பட்ட குடியிருப்பு அடுக்குமாடிகளுக்கான வேலைகள் தொடங்கப்படவில்லை.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தற்போதைய சிறுபான்மை அரசாங்கம், ஊழல் புரிந்த அதிகாரிகளல் நிதி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, இராஜபக்ஷ மற்றும் டாட்டா இடையேயான உடன்பாட்டை மீளாய்வு செய்யும்வரை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மார்ச் 9 அன்று, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அரசாங்கம் "இந்திய கூட்டு நிறுவனமான டாட்டாவின் வீட்டுத் திட்டத்தை ஆய்வுசெய்கின்றது என்று சௌத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்கு கூறினார். டாட்டா  250 மில்லியன் டாலர் முதலிடுவதாக கூறியது, ஆனால் 20 மில்லியன் டாலரே முதலிட்டு, எங்கள் நிலத்தை பயன்படுத்தி மற்றும் அதிக விலைக்கு எமக்கே மீண்டும் அதை விற்றது," என அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த டாட்டா, "எதேச்சதிகாரமான நடவடிக்கைகள்" இலங்கையில் எதிர்கால சர்வதேச முதலீடுகளை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையும் பாதுகாப்பு அமைச்சுக்குள் கொண்டுவரப்பட்டு, அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரர்களில் ஒருவருமான கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் கீழ் வைக்கப்பட்டன. "திட்டத்தின் முதன்மை குறிக்கோள், அப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைச் சூழலை வழங்குவதுமாகும்," என்று பாதுகாப்பு அமைச்சு போலியாகக் கூறிக்கொண்டது.

இராஜபக்ஷ அரசாங்கம் கொழும்பு நகரில் இருந்து 135,000 ஏழைக் குடும்பங்களை நீக்கத் திட்டமிட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் கம்பனித்தெரு, தெமட்டகொட, அப்பல் வத்த, இப்பாவத்த போன்ற இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு, இந்த வெளியேற்றங்களை எதிர்த்த எவரையும் அச்சுறுத்துவதற்காக பாதுகாப்பு படைகளை அணி திரட்டியது.

வெளியேற்றப்பட்ட பெரும்பாலான குடும்பங்களுக்கு நிரந்தரமான வீடுகள் வழங்கப்படவில்லை. சிலர் வெலிகொடவத்தையின் தொடலங்கவில் உள்ள நாகலகம தெருவில் அமைக்கப்பட்ட முகாமில் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாத, பலகை குடிசைகளை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். பல நூறு குடும்பங்களுக்கு 400 சதுர அடி சிறிய வீடுகள் மாடிக் குடியிருப்பில் வழங்கப்பட்டது. அவற்றுக்கு அவர்கள் 1,00,000 ரூபாவும் பின்னர் மாதம் ஒன்றுக்கு 3,900 ரூபாவும் செலுத்த நெருக்கப்பட்டனர்.

கம்பனித் தெருவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பலர், சமீபத்தில் தாம் இப்போது எதிர்கொண்டுள்ள நிலைமைகள் பற்றி உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்.

முச்சக்கர வண்டி ஓட்டும் இர்பான் கூறியதாவது: "எங்களது தற்போதைய இக்கட்டான நிலைமைக்கு முன்னாள் அரசாங்கமே முழு பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் வெளியேற்றப்பட முன்னர் நடைபெற்ற, பொது ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எங்களை அச்சுறுத்தியதனால் எமக்கு இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.

"நான் இப்போது மாகொலையில் வசிக்கிறேன். இங்கிருந்து 23 கிலோமீட்டர் தூரம். என் வேலையை செய்ய நான் 8 அல்லது 9 மணியளவில் இங்கே இருக்க வேண்டும். நள்ளிரவு வரை வேலை செய்ய வேண்டும். எமக்கு இங்கே ஒரு முகவரி இல்லாததால், என்னால் கொழும்பில் ஒரு பாடசாலையில் பிள்ளையை படிக்க வைக்க முடியாது. நாம் விரைவில் கொழும்பு திரும்ப காத்திருப்பதால், மாகொலயில் உள்ள பாடசாலையில் சேர்க்கவும் விரும்பவில்லை. "

மற்றொரு முச்சக்கர வண்டி சாரதி, "இப்போது [ஜனாதிபதி] மைத்திரிபாலவின் புதிய அரசாங்கத்தின் பின்னால் போவதைத் தவிர எமக்கு வேறுவழி கிடையாது. அவரது 100-நாள் திட்டம் முடிந்த பின் பார்ப்போம். எதுவும் நடக்கவில்லை எனில், நாம் அனைவரும் அங்கு போய் நிலத்தை மீண்டும் ஆக்கிரமிக்க வேண்டும்," என்றார்.

"வனாதமுல்ல, தெமட்டகொட குடியிருப்பாளர்களுக்கு கட்டப்பட்ட பல மாடி குடியிருப்புகளில் உள்ள பிரச்சனைகளை நாம் அனைவரும் அறிவோம். பொதுவாக எமது வீடுகளில் ஆறு முதல் ஏழு பேர் இருக்கிறார்கள். நாம் அப்படி ஒரு சிறிய வீட்டில் ஒரு சவப் பெட்டியை கூட வைப்பது எப்படி? எங்கள் குடும்பங்களுக்கு மேலதிக அத்தியாவசிய உணவுகளை வழங்கும் கோழிகள், ஆடு போன்றவற்றை எங்கே வைப்பது?. முட்டைகளையும் பாலையும் வாங்க எம்மால் முடியாது," என மற்றொரு குடியிருப்பாளர் விளக்கினார்.

ஜனாதிபதி சிறிசேன இராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து முழுமையாக இந்த வெளியேற்றத்தை ஆதரித்தார். நகர வாசிகளை வெளியேற்றும் அசல் திட்டத்தை, ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) அரசாங்கமே 1980ளில் தயாரித்தது. இராஜபக்ஷ அரசாங்கத்தையும் அதன் கொடூரமான நகர்ப்புற அபிவிருத்தி நடவடிக்கைகளையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, யூஎன்பீ பல்வேறு சட்ட முறையீடுகள் மூலம் இந்த வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை திசை திருப்பி விட்டது.

கம்பனித்தெரு குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேற மறுத்த போது, யூஎன்பீ பாராளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுஜீவ சேனசிங்க, அவர்களை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தினார். 2013 செப்டம்பரில், அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், "கொழும்பில் நடந்து வரும் அபிவிருத்தி திட்டங்களை எவரும் தடுக்கக் கூடாது, என்று அறிவித்ததார். சேனசிங்கவும் யூஎன்பீயும், நீதிமன்ற முடிவுக்கு கீழ்ப்படியுமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டனர்.

வெளியேற்றப்பட்ட தொழிலாளி அல்லது ஒரு ஏழை குடும்பமோ தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து தமது அவலநிலைக்கு எந்த சாதகமான பதிலையும் எதிர்பார்க்க முடியாது. சிறிசேனவின் 100 நாள் சீர்திருத்த திட்டம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.

தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் உட்பட மக்கள் மத்தியில் இராஜபக்ஷ சம்பந்தமாக நிலவிய அதிருப்திதயை சுரண்டிக்கொண்ட யூஎன்பீ, ஜனாதிபதி தேர்தலின் போது மோசடியாக சிறிசேனவை ஊக்குவித்தது. பதவியேற்றபின், சிறிசேன வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் நிலையை விசாரிக்க ஒரு அமைச்சர்கள் குழுவை நியமித்தார். இது பொதுத் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில், சிறிசேனவும் யூஎன்பீ தலைமையிலான அரசாங்கமும் காலத்தை கடத்துவதற்காக மேற்கொண்டுள்ள வஞ்சத்தனமான முயற்சியாகும்.

முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கத்தை போலவே, சிறிசேன-யூஎன்பி ஆட்சியும், சர்வதேச ரீதியில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி வருகின்ற நிலையில், வெளிநாட்டு முதலீட்டு வீழ்ச்சி பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதிகாரத்திற்கு யார் வந்தாலும், அவர்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் கோரும் முதலீட்டாளர்கள் சார்புக் கொள்கைகளை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்தும் திணிப்பர்.