World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France declares state of emergency after terrorist attacks kill 140 in Paris

பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களில் 140 பேர் கொல்லப்பட்டதும், பிரான்ஸ் அவசரகால நெருக்கடி நிலையை அறிவிக்கிறது

By Alex Lantier
14 November 2015

Back to screen version

நேற்றிரவு சுமார் 10 மணியளவில் தொடங்கிய ஒரேநேரத்தில் பல பயங்கரவாத தாக்குதல்களில் குறைந்தபட்சம் 140 பேர் கொல்லப்பட்டு, டஜன் கணக்கானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதுடன் சேர்ந்து குறைந்தபட்சம் 110 பேர் காயமடைந்த போது, நேற்று இரவு பாரீஸ் வீதிகள் இரத்தந்தோய்ந்த பயங்கர காட்சிகளால் நிரம்பின.

நள்ளிரவுக்கு சற்று முன்னதாக, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் பிரான்சின் எல்லைகள் மூடப்படுவதாகவும், 1955 சட்டத்தின் கீழ் முக்கிய ஜனநாயக உரிமைகளை களையும் அவசரகால நெருக்கடி நிலை கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்தார். பாரீஸின் பல்வேறு பகுதிகள் சனியன்று அதிகாலை மூடப்பட்டன, பாரீஸ்வாசிகளை வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர், அதனோடு தலைக்கு மேலே ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டன, நகரெங்கிலும் துணை இராணுவ பொலிஸ் மற்றும் இராணுவப் படைப்பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டன.

ஊடகங்களால் மேற்கோளிடப்பட்ட பெயர்வெளியிடாத உயர்மட்ட அதிகாரிகளின் கருத்துப்படி, அங்கே அடுத்தடுத்து ஒரேநேரத்தில், அனேகமாக ஒருங்கிணைக்கப்பட்ட, குறைந்தபட்சம் ஏழு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தன. இந்த தாக்குதல்களில் உள்ளடங்குபவை:

* பாரீஸின் 11வது மாவடத்தின் பற்றாக்லோன் (Bataclan) அரங்கில், கையெறி குண்டுகளோடு மூன்று அல்லது நான்கு துப்பாரிதாரிகளின் ஒரு குழு ஓர் அமெரிக்க இசைக்குழுவின் Eagles of Death Metal என்ற இசைநிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானவர்களைப் பிணைக்கைதிகளாக பிடித்தது. அந்த இடத்திலிருந்து தப்பி வர முடிந்த, இசைக்குழுவில் கலந்து கொண்டவர்களில் சிலரின் கருத்துப்படி, அந்த துப்பாக்கிதாரிகள் "அல்லாஹ் அக்பர்" என்று கூச்சலிட்டதாகவும் மற்றும் “இது எங்களின் சிரியா என்று கூச்சலிட்டதாகவும் தெரிவித்தனர். சனிக்கிழமை நள்ளிரவு 12:30 மணிக்கு சற்று பின்னர் RAID துணை இராணுவ பொலிஸ் படைப்பிரிவு அக்கட்டிடத்தை தாக்கியது, அதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட நிலையில் உள்ளே அவர்கள் பயங்கரமான காட்சிகளைக் கண்டதாக தெரிவித்தனர்.

* அந்நகரின் சற்று வடக்கே, நகர மையப்பகுதிக்கு அருகே, பத்தாயிரக் கணக்கான ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி கால்பந்தாட்ட போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த Stade de France மைதானத்திற்கு அருகே ஒரு சினிமா தியேட்டர் மற்றும் உணவுவிடுதிகளில் மூன்று குண்டுகள் வெடித்தன. அந்த குண்டுகளில் ஒன்று ஒரு தற்கொலை குண்டுதாரியால் வெடிக்க வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. ஆரம்ப செய்திகளின்படி, இந்த தாக்குதல்களில் அங்கே நான்கு பேர் கொல்லப்பட்டிருந்தனர் மற்றும் 50 பேர் காயமுற்றிருந்தனர், 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதும் அதில் உள்ளடங்கும். Stade de France மைதானத்தில் அந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த ஹோலாண்ட், குண்டு வெடித்ததும் உள்துறை அமைச்சகத்திற்கு விரைந்து சென்றார், இருந்தபோதினும் அந்த விளையாட்டு முடியும் வரையில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டது.

* பாரீஸின் 10வது மாவட்டத்தின் Bichat வீதியில், ஒரு கருப்பு நிற காரில் வந்த துப்பாக்கிதாரிகள் பல உணவுவிடுதிகளில் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர், அதில் அங்கே 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர், அவர்களில் 10 பேர் மோசமான நிலைமையில் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவுகளில் மக்கள் கூடும் இடமான அப்பகுதிக்கு அருகிலும் ஆங்காங்கே பல துப்பாக்கிச்சூடு நடந்தன.

* Avenue de la République க்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் இறந்தனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர், 11 பேர் ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.

* Charonne வீதியில் அங்கே 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமுற்றனர், அதில் 13 பேர் ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.

* Boulevard Beaumarchais இல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் காயமுற்றனர், அதில் மூன்று பேர் ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.

* Forum des Halles கடைப்பகுதி உட்பட பாரீஸின் நகர உள்பகுதியின் ஏனைய பல பகுதிகளில் இதர துப்பாக்கிச்சூடுகள் நடந்ததாக செய்திகள் தெரிவித்தன.

அன்றைய நாளுக்கு முன்னரே சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து அதிகாரிகள் அறிந்திருந்தனர். ஜேர்மன் தேசிய கால்பந்தாட்ட குழு தங்கியுள்ள ஹோட்டல் மொலிடருக்கு (Hotel Molitor) தொலைபேசியில் மதியம் ஒரு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனால் ஹோட்டலில் இருந்தவர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட்டு, தேடுவதற்கு முன்னரே பொலிஸ் நாடாவைக் கொண்டு மூடப்பட்டது, பின்னர் இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

நள்ளிரவில் மந்திரிமார் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஒரு சிறிய பொது உரையில், ஹோலாண்ட் அறிவிக்கையில், பாதுகாப்பு படைகளை முழுமையாக அனுப்புவதற்கும் இராணுவம் தலையீடு செய்யவும் அவர் உத்தரவிட்டிருப்பதாக அறிவித்தார்.

“இரண்டு முடிவுகள் எடுக்கப்படும்: அவசரகால நெருக்கடி நிலைக்கு உத்தரவிடப்படும், அதன் அர்த்தம் பல்வேறு இடங்கள் மூடப்படும் என்பதாகும், அடுத்தது குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்,” என்றவர் தெரிவித்தார்.

ஹோலாண்ட் தொடர்ந்து கூறினார்: “அவசரகால நெருக்கடி நிலை நாடு முழுவதற்கும் பொருந்தும். இரண்டாவது முடிவு எல்லைகளை மூடுவதற்கு நான் முடிவெடுத்துள்ளேன், அதன் மூலமாக இந்த குற்றங்களைச் செய்தவர்களைப் பிடிக்க முடியும். இந்த தாக்குதல் எங்கிருந்து வந்ததென்று எங்களுக்குத் தெரியும். நாம் பொறுமையையும் ஒற்றுமை உணர்வையும்  காட்ட வேண்டும், அதேவேளையில் நாம் ஐக்கியமாக இருக்கிறோம் என்பதையும் காட்ட வேண்டும்,” என்றார்.

“இந்த தாக்குதல் எங்கிருந்து வந்ததென்று" பிரெஞ்சு அதிகாரிகளுக்கு "தெரியும்" என்று ஹோலாண்ட் தெரிவித்திருந்த போதினும், இதை எழுதும் வரையில் எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் பல ஊடக செய்திகள், அந்த தாக்குதல்கள் சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டு வரும் மேற்கத்திய ஆதரவிலான சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுவின் அங்கத்தவர்களால் நடத்தப்பட்டதாக தெரிவித்தன.

முன்னாள் சிஐஏ இயக்குனர் ஜேம்ஸ் வூல்செ ABC News க்குத் தெரிவிக்கையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகள் ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசின்) உயர்மட்ட "நிர்வாகத்தை" கொன்றிருப்பதால், “நாம் போரில் இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்,” என்றார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் வேதனையைத் தாங்கியுள்ள அவர்களது குடும்பங்களின் ஆழ்ந்த துயரங்களுக்கும் வழங்கப்படும் ஆழ்ந்த அனுதாபங்கள், இத்துன்பத்தின் ஆதாரங்களை ஆராய்வதற்கான பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்துவிடவில்லை. அது தெரிவதைப் போல, இந்த தாக்குதல்கள் ISIS அல்லது அதுபோன்ற போராளிகள் குழுக்களின் ஐரோப்பிய அனுபவஸ்தர்களால் நடத்தப்பட்டிருந்தால், பாரீஸ் வீதிகளில் இந்த நூற்றுக் கணக்கானவர்களின் உயிரிழப்பும் மற்றும் காயங்களும், ஆத்திரமூட்டும் வகையில் புவிசார் அரசியல் முன்னெடுப்புகளுக்காக மத்திய கிழக்கில் தொடுக்கப்பட்டு, இப்போது கட்டுப்பாட்டை மீறி சுழன்று வருகின்ற ஏகாதிபத்திய போர்களில் பலியானவர்களாக இருப்பார்கள்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர், புஷ் நிர்வாகம் ஈராக்கில் ஒரு சட்டவிரோத படையெடுப்பைத் தொடங்கிய போது, பிரெஞ்சு அரசாங்கம், அப்போரிலிருந்து பெருக்கெடுக்கும் பேரழிவை முன்னுணர்ந்து, அதில் பங்கெடுக்க மறுத்தது. 2009 இல் பிரான்ஸ் நேட்டோ இராணுவ கட்டளையகத்தில் மீள்ஒருங்கிணைப்பு செய்யப்பட்டமை, மற்றும் அதைத் தொடர்ந்து 2011 மத்திய கிழக்கு போர்களில் அமெரிக்கா மற்றும் ஏனைய நேட்டோ சக்திகளுடன் இணைய அது முடிவெடுத்தமை, பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நிரூபிக்கிறது.

லிபியா மற்றும் சிரியா ஆட்சி மாற்றத்திற்கான பினாமி போர்களில் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆதரித்ததுடன், அத்தகைய போராளிகள் குழுக்களில் அவர்களது பிரஜைகளையே இணையுமாறு ஊக்கப்படுத்தின, அவர்கள் ஊடகங்களில் கடாபி மற்றும் அசாத்திற்கு எதிராக சண்டையிடும் "புரட்சியாளர்களாக" பரந்தளவில் காட்டப்பட்டனர். மத்திய கிழக்கின் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் கொரில்லா போர்முறைகளை நடத்த பயிற்சியளிக்கப்பட்ட இதே சக்திகள், இப்போது உள்நாட்டிற்குத் திரும்பி வருகின்றன. இது ஓர் அரசியல் சூழலை உருவாக்கி உள்ளது, அதில் பயங்கரவாதம் மலர்ந்து வேகமாக பரவுகிறது, அதன் விளைவாக பிரான்சின் உள்நாட்டிலேயே போர் வந்துள்ளது.

“இந்த அபாயம், அனேகமாக சிரியா அல்லது லிபியா, யேமன் ஆகிய இடங்களின் நடவடிக்கை அரங்கில் இரத்தஞ்சிந்திய, சிறிய அல்லது மிகப்பெரிய குழுக்களின் நபர்களிடமிருந்து வருகிறது, இவர்கள் நடவடிக்கையில் இறங்க உள்நாட்டிலேயே (பிரான்சிலேயே) ஆயுதங்களை பெறுகிறார்கள்,” என்று AFP க்கு பிரெஞ்சு வெளிநாட்டு உளவுத்துறையின் பயங்கரவாத-எதிர்ப்பு சேவைகளின் தலைவர் Yves Trotignon கருத்து தெரிவித்தார். “சாவதற்கும் தீர்மானமாக இருப்பவர்கள், இலக்குகளை ஆய்வு செய்து வைத்திருப்பவர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்கும் கோணத்தில் உறுதியாக இருப்பவர்களால் மிகப்பெரும் சேதங்களை ஏற்படுத்த முடியும். முன் அனுபவம் மிக்க பல ஜிஹாதிஸ்ட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்,” என்றார்.

ஜனவரியில் சார்லி ஹெப்டோ மீது கௌச்சி சகோதரர்கள் அவர்களின் மரணகதியிலான பயங்கரவாத தாக்குதலை நடத்தியதிலிருந்து, ஆளும் உயரடுக்கு சிரியா ஆட்சி மாற்றத்திற்கான போர் கொள்கையிலிருந்து விலகுவதன் மூலமாக அத்தகைய அபாயங்களுக்கு பிரதிபலிப்புக் காட்டவில்லை, மாறாக அரசின் ஜனநாயக-விரோத பொலிஸ் அதிகாரங்களைக் கட்டமைப்பதன் மூலமாக காட்டி வருகிறது.

ஹோலாண்ட் இன் அறிவிப்புக்குப் பின்னர், மீண்டும் மீண்டும் iTélé அறிவிப்பாளர்கள் பிரான்ஸ் போரில் நிற்கிறது என்றும், 1955 அவசரகால நெருக்கடி நிலைமையில் குறிக்கப்பட்ட எண்ணிறைந்த கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தனர். அச்சட்டம் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், எந்த நேரத்திலும் தனிநபர்களது வீடுகளை ஏதேச்சதிகார முறையில் சோதனையிடவும், பத்திரிகைகளை தணிக்கை செய்யவும், இராணுவ தீர்ப்பாயங்களைக் கொண்டு வரவும், தனிநபர்களை வழக்கு விசாரணையின்றி வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடவும், பொது இடங்களை மூடவும் மற்றும் தனிநபர் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும் பிரெஞ்சு அதிகாரிகளை அனுமதிக்கிறது.

கடந்த முறை 2005 இல் தான் அவசரகால நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது, அப்போது இரண்டு இளைஞர்கள் பொலிசுக்கு தப்பியோடுகையில் மின்சாரம் தாக்கி இறந்ததால் தூண்டிவிடப்பட்ட பாரிய நகர்புற கலகங்களுக்கு விடையிறுப்பாக அது கொண்டு வரப்பட்டது. ஆனால் கடைசியாக இந்த அதிகாரங்கள் அனைத்தும் பிரெஞ்சு அரசால் கொண்டு வரப்பட்டது அதன் சாசன பிரகடனத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் ஆகும், அப்போது அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனி ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை நசுக்குவதில் ஒரு முயற்சி தோல்வியடைந்ததும் அல்ஜீரியாவில் அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு வர அது பயன்படுத்தப்பட்டது.

இன்றைக்கு மதியத்திற்கு மேல் அங்கே பாரீஸில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருப்பதாக ஊடகங்கள் அறிவித்தன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அத்துடன் பாரீஸில் உள்ள சகல பொதுவிடங்களும் மூடப்பட்டுள்ளன, சில அரசியல் கட்சிகள் அடுத்த மாதங்களின் பிராந்திய தேர்தல்களுக்கான அவர்களது பிரச்சாரங்களைக் கூட நிறுத்தி உள்ளன.