World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

US jobs data underscore downbeat IMF assessment of world economy

அமெரிக்க வேலைகள் பற்றிய புள்ளிவிபரங்கள், உலக பொருளாதாரம் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டை ஐயுறவுடன் எடுத்துக்காட்டுகின்றது

By Nick Beams
3 October 2015

Back to screen version

கடந்த மாதம் அமெரிக்காவில் புதிய வேலைகள் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க குறைவானது, அடுத்த வார இறுதியில் பெரு நாட்டின் லிமா நகரத்தில் நடக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கியின் ஆண்டு கூட்டத்திற்கு முன்னதாக சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகார்டால் வழங்கப்பட்ட உலக பொருளாதாரம் தொடர்பான ஒரு ஐயுறவுடனான மதிப்பீட்டை எடுத்துக்காட்டுகின்றது.

செப்டம்பரில் வேலை உயர்வுகள் 142,000 என்றும், இது முன்அனுமானிக்கப்பட்ட 201,000 என்ற உயர்வைக் காட்டிலும் மிக குறைவு என்றும் அமெரிக்க தொழிலாளர் துறை அறிவித்தது. இது கடந்த 12 மாதங்களின் சராசரி உயர்வை விட சுமார் ஐந்தில்-இரண்டு பங்கு குறைவாகும். ஆகஸ்ட் மாத புள்ளிவிபரங்களும் 173,000 என்பதிலிருந்து 136,000 ஆக குறைத்து மறுதிருத்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆழமடைந்துவரும் உலகளாவிய மந்தநிலை போக்குகள் மற்றும் பண்டங்களின் விலைவீழ்ச்சி அமெரிக்க பொருளாதாரம் மீது ஏற்படுத்துகிற தாக்கம் சுரங்கத் தொழில்துறை புள்ளிவிபரங்களில் தென்பட்டன. அது 10,300 வேலைகளை நீக்கியிருந்ததை எடுத்துக்காட்டியது. உற்பத்தித்துறை வேலைவாய்ப்பும் அம்மாதத்தில் 9,000 ஆக குறைந்திருந்தது.

இந்த புள்ளிவிபரங்கள் குறிப்பிடத்தக்களவிற்கு முக்கியமானவை ஏனென்றால் அமெரிக்காவில் வேலைகளின் உயர்வு உலகளாவிய பொருளாதாரத்திற்கான ஒரு "பிரகாச புள்ளியாக" காட்டப்படுகிறது. ஜேபி மோர்கன் பொருளாதார நிபுணர் மைக்கேல் ஃபெரோலி பைனான்சியல் டைம்ஸிடம் பேசுகையில், “நாங்கள் ஏற்கனவே எமது மூன்றாம்-காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முன்கணிப்புகளைக் குறைத்திருந்தோம். ஆனால் நான்காம் காலாண்டு அதிகரிப்பு மீதும் மற்றும் வளர்ச்சி வேகம் ஆண்டு முடிவில் குறைந்து வருகிறதோ என்பது பற்றியும் கேள்விகளை எழுப்புகின்றது,” என்று தெரிவித்தார்.

இவ்வார தொடக்கத்தில் அமெரிக்க கவுன்சிலில் (Council of the Americas) ஆற்றிய ஓர் பிரதான உரையில், லகார்ட், சமீபத்திய ஆண்டுகளில் எது நடைமுறை சம்பிரதாய அழைப்பாக மாறியுள்ளதோ அவ்வாறு, உலக பொருளாதார மீட்சியைக் கொண்டு வர உதவியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கங்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அழைப்புவிடுப்பதற்கு மாறாக, உலகம் ஒரு "சிரமமான மற்றும் சிக்கலான நெருக்கடி தறுவாயில்" உள்ளது என்று எச்சரித்தார்.

அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள, சர்வதேச நாணய நிதியத்தின் உலகளாவிய வளர்ச்சி குறித்த உத்தேச கணிப்புகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் குறைந்த வளர்ச்சி இருக்கும், “2016இல் ஒரு மிதமான அதிகரிப்பு மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது" என்று முன்கணிக்கின்றது. இந்த கடைசி கருத்தை மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ளலாம், ஏனென்றால் கடந்த நான்காண்டுகளாக IMF அதன் முந்தைய முன்மதிப்பீடுகளைக் கீழ்நோக்கி மறுதிருத்தம் செய்து வந்துள்ளது.

லகார்ட் உலகளாவிய பொருளாதாரத்தில் இரண்டு பிரதான மாற்றங்கள், அதுவும் இரண்டுமே உடனடியான எதிர்மறை விளைவுகளோடு நடந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். ஒன்று முதலீடு-சார்ந்த பொருளாதாரமாக இருப்பதைக் குறைத்துக் கொள்வதை நோக்கிய சீனாவின் நகர்வு, இது பண்டங்களின் விலையைப் பாதித்து வருகிறது, அடுத்தது ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான அமெரிக்க பெடரல் ரிசர்வின் நகர்வு.

"அமெரிக்காவில் வட்டி விகிதங்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறும் மற்றும் சீனாவின் வளர்ச்சிகுறைவும், சந்தை ஏற்ற-இறக்கங்கள் அதிகரிப்பதிலும் மற்றும் ஸ்திரமின்மைப்படுத்துவதிலும் பங்களிக்கின்றன,” என்றவர் தெரிவித்தார். “உலகளாவிய வர்த்தக வளர்ச்சியில் ஒரு கூர்மையான சரிவு இருந்து வருகிறது. மேலும் பண்டங்களின் வேகமான விலைவீழ்ச்சி ஆதாரவளங்களை அடித்தளமாக கொண்ட பொருளாதாரங்களுக்குப் பிரச்சினைகளை முன்னிறுத்துகிறது.”  

லகார்ட் இதற்கு முந்தைய தருணங்களில், பூஜ்ஜியத்திற்கு அண்மித்த தற்போதைய வட்டிவிகிதங்களை பெடரல் வழமைப்படுத்தும் அதன் நகர்வை, குறைந்தபட்சம் எழுச்சிபெற்றுவரும் சந்தை பொருளாதாரங்களுக்கு பிரச்சினைகளை இது உண்டாக்கும் என்பதற்காகவாவது, தொடங்கக்கூடாதென வலியுறுத்தி வந்தார். மிகப்பெரிய எழுச்சிபெற்றுவரும் சந்தை பொருளாதாரங்களில் நிதித்துறை-சாரா நிறுவனங்களின் நிறுவனக் கடன் கடந்த தசாப்தத்தில் நான்கு மடங்குக்கு அதிகமாக அதிகரித்துள்ளதாகவும், அது 2004 இன் $4 ட்ரில்லியனிலிருந்து 2018 இல் $18 ட்ரில்லியனுக்கு உயருமென்றும், IMF புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அமெரிக்க வட்டி விகிதங்கள் மற்றும் டாலர் மதிப்பு உயர்வு செலாவணி தவறான கூட்டினை உண்டாக்கும். அது பெருநிறுவன திவால்நிலைக்கும் பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தேசிய அரசுகளுக்கும் இடையிலான ஒரு மோசமான சுழற்சிக்கும்இட்டுச்செல்லக்கூடும்,” என்றவர் எச்சரித்தார். அதாவது, பிரதான பெருநிறுவனங்கள் திவாலானால், அதுவொரு நாட்டின் வங்கியியல் அமைப்புமுறை மற்றும் இறுதியில் அதன் அரசாங்கம் இரண்டையுமே குழப்பத்திற்குள்ளாக்கும்.

அமெரிக்க வட்டி விகிதங்களின் உயர்வு அமெரிக்க டாலர் மதிப்பை மேற்கொண்டு உயர்த்தும் ஒரு சூழலை லகார்ட் குறிப்பிடுகிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், டாலர் அடிப்படையில் கடன் வாங்கியுள்ள நிறுவனங்கள் அமைந்துள்ள அந்தந்த நாடுகளின் நாணய மதிப்பு வீழ்ச்சி அடையும் என்பதால் அந்நிறுவனங்கள் அதிகரித்தளவில் நிஜமான கடன் சுமையை முகங்கொடுக்கும். இதில் சம்பந்தப்படும் பணமதிப்பு சிறிய தொகையல்ல.

நிதியியல் ஒட்டத்தின் தரவுகளைச் சேகரிக்கும் வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளுக்கான ஒரு தனியார் நிறுவனம் சர்வதேச நிதியியல் அமைப்பு (Institute of International Finance – IIF) தகவல்படி, நாணய மதிப்பு வீழ்ச்சி பிரேசிலில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3 சதவீதத்திற்கு சமமான அளவிற்கும் மற்றும் துருக்கியில் 6.2 சதவீத அளவிலும் பெருநிறுவன கடனை அதிகரித்துள்ளது.

உலக பொருளாதார மாற்றங்களை நிர்வகிப்பதில் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து "இப்போது நடவடிக்கை அவசியப்படுகிறது" மற்றும் "ஒவ்வொருவரிடமிருந்தும் சுயமுனைப்பான கொள்கை  நிர்வாகம் இப்போது முன்பினும் அதிக முக்கியமாகும்" என்று லகார்ட் தெரிவித்தார்.

எவ்வாறிருந்தபோதிலும், அத்தகைய "உயிரோட்டமான மேலாண்மை" மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது அறிவுறுத்தலைக் குறித்து ஆராய்ந்தால்.  அதேபோன்ற கடந்தகால வலியுறுத்தல்களை விட இந்த சமீபத்திய முறையீடும் இப்போது எந்த முன்னேற்றத்தையும் ஏன் உருவாக்கப் போவதில்லை என்பதை தான் தெளிவுபடுத்துகிறது.

நாணய கொள்கை மீதான எந்த முடிவிலும் ஏற்படும் வெளித்தாக்கங்களை கொண்ட அபாயங்கள்” (spillover risks) பற்றி ஒன்றிணைந்து செயற்படுமாறு லகார்ட் அழைப்புவிடுத்தார். இது, அமெரிக்க பெடரல் அதன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவெடுக்கையில் அதன் முடிவுகளின் உலகளாவிய தாக்கத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை நோக்கி உள்ளது. உண்மையில், பெடரல் சீனாவின் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் உலகளாவிய நிதியியல் கொந்தளிப்பை மேற்கோளிட்டு செப்டம்பரில் அதன் வட்டி விகிதங்களை மாற்றாமல் விடுத்த போது அது துல்லியமாக இதை தான் கணக்கில் எடுத்திருந்தது.

இந்த முடிவு சீன வளர்ச்சிக்குறைவின் தாக்கம் பற்றிய அச்சங்களின் காரணமாக அதிகரித்த நிதியியல் கொந்தளிப்புக்கு இட்டுச் சென்றது, மேலும் பெடரல் 0.25 சதவீதம் கூட வட்டி விகிதங்களை உயர்த்த முடியாமல் இருந்ததால், இந்த அதன் செயலிழந்ததன்மை முன்னர் கருதப்பட்டதையும் விட மிக ஆழமான நிதியியல் நிலைமையைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தது. அந்த முடிவுக்கு பெடரல் ரிசர்வுக்கு உள்ளேயிருந்தே மற்றும் நிதியியல் அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்பைச் சந்தித்தது.

ஐரோப்பாவில், நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க யூரோ பகுதியில் முடங்கிய கடன்களைக் (nonperforming loans) கையாள வேண்டிய அவசியமிருப்பதாக லகார்டு தெரிவித்தார். ஆனால், அத்தகைய அழைப்புகள், 2008 இல் உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்ததிலிருந்து ஏழு ஆண்டுகளில் ஏன் அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற காரணங்களால், ஒதுக்கித்தள்ளப்படுகின்றன. ஐரோப்பிய வங்கிகள் கருத்தில் கொண்டிருப்பதில் பிரதான ஒரு காரணியாக இருப்பது என்னவென்றால், அவர்கள் உண்மையில் தங்களின் புத்தகங்களில் உள்ள முடங்கிய கடன்கள் மற்றும் மீள்வாராக்கடன்களின் மட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கினால், பின் அவற்றின் நிதியியல் நிலைமை தான் பலவீனமடையும் என்றும் மற்றும் ஒப்பீட்டளவில் சக்திவாய்ந்த அமெரிக்க வங்கிகளை அவை மோசமான இடத்தில் நிறுத்தப்படுமென கருதுகின்றன. அவ்விதத்தில் அவை அவற்றின் நிஜமான நிலைமையை மூடிமறைக்க முனைந்துள்ளன.

நடவடிக்கைக்கான மூன்றாவது இடத்தில் இருப்பது என்னவென்றால், பெருநிறுவன ஊக்குவிசை மற்றும் அன்னிய கடன்களைக் கையாள எழுச்சிபெற்றுவரும் சந்தைகளில் "விவேகமான பரந்த கருவிகளைப்" (macroprudential tools) பிரயோகிப்பதாகும். இது அபாயகரமான நிதியியல் நடைமுறைகளைத் தடுக்கும் முயற்சியில் வங்கியியல் மற்றும் நிதியியல் ஆணையங்களால் நெறிமுறைகளை அதிகரிப்பதைக் குறிக்கிறது. முதலாவதாக அத்தகைய முறைமைகள் எல்லாம் மிகப்பெரியளவிலான நிதி நகர்வுகள் விடயத்தில் பயனற்றவை என்பதோடு, இரண்டாவதாக இப்போது எந்தவிதமான அதிகரித்த விவேகமான பரந்த நெறிமுறைகளும் பெரும்பாலும் நடந்துமுடிந்த பிறகு தடுக்க முயல்வதைப் போல தான் இருக்கும்.

சர்வதேச நிதியியல் அமைப்பின் புள்ளிவிபரங்கள்படி, எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் ஏற்கனவே ஒரு கடலளவிலான மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுடன், 1980களுக்குப் பின்னர் முதல்முறையாக ஒரு மூலதன வெளியேற்றத்தால் தாக்கப்பட உள்ளன என்பதை அது எடுத்துக்காட்டியது.

குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகரித்த வெளியேற்றத்துடன் சேர்ந்து, இவ்வாண்டின் நிகர மூலதன வெளியேற்றம் $540 பில்லியனாக இருக்கும், முன்னதாக 2014 இல் உள்வரவு $32 பில்லியனாக இருந்ததென அது தெரிவித்தது.

IIF இன் தலைமை பொருளாதார நிபுணர் சார்லஸ் கொலென்ஸ் தெரிவித்தார்: “ஏற்ற-இறக்கமான சந்தை நிலைமைகள் மற்றும் அபாயம் மீதான வெறுப்ப்பாலும் எழுச்சிபெற்றுவரும் சந்தைகளுக்கான ஓட்டம் கூர்மையாக பலவீனமடைந்துள்ளது. “எழுச்சிபெற்றுவரும் சந்தை கருத்துரு ஆலோசிக்கப்பட்டு வந்த … 1980களின் இறுதி காலப்பகுதிக்குப் பின்னர் முதல்முறையாக இப்போது நாம் ஒட்டுமொத்தமாக எதிர்மறை ஓட்டங்களைக் கணிக்கிறோம்.”

சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினைகளில் பல ஒன்றோடொன்று இணைந்த இயல்பில் இருக்கின்ற நிலையில் "திறமையான மற்றும் நுட்பமான" கொள்கை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் மற்றும் அதிரித்த சர்வதேச கூட்டுஒத்துழைப்பு முன்பினும் அதிக அவசரமாக மற்றும் அத்தியாவசியமாக இருப்பதாகவும்" வலியுறுத்தினார்.

இங்கேயும், சம்பவங்களின் போக்கு எதிர்திசையில் தான் நகர்ந்து வருகிறது. 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் ஜி-20 குழும நாடுகளின் முதல் கூட்டத்தில் ஓரளவிற்கு சர்வதேச ஒத்துழைப்பு இருந்தது. அதில் பங்குவகித்தவர்கள் 1930களைப் போல உலக பொருளாதாரம் மந்தநிலைமைக்குள் வீழ்வதை அனுமதிக்க கூடாதென்றும் மற்றும் அந்த தசாப்தத்தைக் குணாம்சப்படுத்திய பாதுகாப்புவாத முறைமைகளைத் தவிர்க்கவும் சூளுரைத்தனர். ஆனால் அந்த நடைமுறை பெரிதும் கைவிடப்பட்டுவிட்டது, ஏனெனில் ஒவ்வொரு பிரதான பொருளாதாரமும் உலகளாவிய சந்தைகளில் அதன் இடத்தை மேம்படுத்த முனைகின்ற நிலையில், அதிகரித்தளவில் வட்டி விகித வெட்டுக்கள் மற்றும் நாணய மதிப்பிறக்கத்தை அவை பிரயோகிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

மந்தநிலை போக்குகள் இறுக்கமாக பீடிக்கையில், இத்தகைய மோதல்கள் வரவிருக்கும் காலக்கட்டத்தில் நிச்சயமாக தீவிரமடைய உள்ளன. உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான ஜப்பான், இரண்டு அடுத்தடுத்த காலாண்டுகளில் எதிர்மறை வளர்ச்சியோடு, அதுவும் இரண்டாவது காலாண்டில் ஆண்டு விகிதம் 1.2 சதவீதத்திற்குச் சுருங்கியதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப மந்தநிலை என்றறியப்படும் ஒன்றின் விளிம்பில் உள்ளது. இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவின் செப்டம்பர் மாத உத்தியோகப்பூர்வ நுகர்வு கணக்கீட்டு குறியீடு (purchasing managers index) 49.8 க்கு வேகமாக மெதுவாகி வருகிறது. அதாவது 50க்கு குறைவாக இருக்கும் இந்த குறியீடு ஒரு சுருக்கத்தைக் குறிக்கும்.

அதேநாளில் பிரசுரிக்கப்பட்ட மற்றொரு உத்தியோகப்பூர்வமற்ற குறியீடு, சீன உற்பத்தி மார்ச் 2009க்குப் பிந்தைய அதன் மிகவும் மோசமான நிலைமைகளை முகங்கொடுத்து வருவதாக எடுத்துக்காட்டியது. சிறிய கார்களுக்கான தேவையை அதிகரிக்கும் ஒரு முயற்சியில் கடந்த மாதம் சீன அரசாங்கம் அவற்றின் விற்பனை வரிகளைப் பாதியாக குறைத்தது. ஆனால் நுகர்வோரது வறிய உணர்வு மற்றும் பொருளாதார நிச்சயமற்றத்தன்மைக்கு முன்னால் அந்நடவடிக்கை மிக குறைந்த தாக்கத்தையே கொண்டிருக்குமென பெரும்பாலான தொழில்துறை பார்வையாளர்கள் சந்தேகித்தார்கள்.

உற்பத்தி மற்றும் முதலீடு வீழ்ச்சியடைகையில், சீனா அதிகமாக சேவை-சார்ந்த பொருளாதாரமாக மாறும் என்பதே உத்தேச சூழலாக உள்ளது. ஆனால் இது நிறைவேறுமா என்பதில் அங்கே கணிசமான சந்தேகங்கள் உள்ளன. இந்தாண்டின் முதல் பாதியில் சீன வளர்ச்சியில் 20 சதவீதத்தை நிதியியல் சேவைகள் ஏற்றிருந்தன. இருந்தாலும், ஜூன் மற்றும் ஜூலை பங்குச்சந்தை நெருக்கடிக்குப் பின்னர் அந்த எண்ணிக்கை திரும்பவில்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏனைய சேவை துறைகளிலிருந்து கிடைக்கும் பங்களிப்பும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்தாண்டின் முதல்பாதியில் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, உணவக சேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 9 சதவீதமாக இருந்தன, அதற்கு முந்தைய ஆண்டு அது 14 சதவீதமாக இருந்தது. பைனான்சியல் டைம்ஸின் ஒரு கட்டுரை குறிப்பிடுகையில், நிதியியல் சேவைகளின் பங்களிப்பு குறைய தொடங்கி உள்ளது, “மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி சரிந்து முறியும் அளவிற்கு வரக்கூடுமென" குறிப்பிட்டது.

சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி கூட்டத்தின் இந்த விவாதங்களும் கலந்துரையாடல்களும், உலக பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்த வந்து கொண்டிருக்கும் மந்தநிலை போக்குகளை மாற்றுவதில் ஒன்று செய்யப் போவதில்லை. வேலைகள் குறித்த புள்ளிவிபரங்கள் காட்டியவாறு, அவை அமெரிக்காவின் நிஜமான பொருளாதாரத்தின் மீது இப்போது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன.