World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Syria and the drumbeat of world war

சிரியாவும், உலக போருக்கான போர்முரசும்

Bill Van Auken
8 October 2015

Back to screen version

காஸ்பியன் கடலில் 900 மைல்களுக்கும் அதிக தூரத்தில் நிறுத்தப்பட்ட போர்க்கப்பல்களிலிருந்து சுமார் 26 கப்பற்படை ஏவுகணைகளை வீசி, சிரியாவில் ரஷ்யா அதன் முதல் வார விமானதாக்குதல்களை நிறைவு செய்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டினதும் ஆளும் வட்டார விவாதங்களில் இன்னும் அதிக அபாயகரமான மோதல் குறித்த மற்றும் உலக போர் குறித்த, அச்சுறுத்தல்களின் மற்றும் எச்சரிக்கைகளின் தீவிர போர்முரசு மேலோங்கியுள்ளது.

சிரியாவில் குண்டுவீச பிரெஞ்சு போர்விமானங்களுக்கு உத்தரவிட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹலாண்ட், அந்நாட்டின் சம்பவங்கள் ஒரு "முழுப் போராக" வடிவெடுக்கக்கூடும், அதிலிருந்து ஐரோப்பாவே கூட "தப்பவியலாது" என்று புதனன்று ஐரோப்பிய சட்டவல்லுனர்களை எச்சரித்தார்.

ரஷ்ய போர்விமானங்கள் துருக்கிய வான்எல்லைக்குள் விலகி போயிருந்ததாக கூறப்படும் சம்பவங்களை பற்றிற்கொண்ட துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கையின் ஐந்தாவது ஷரத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், “துருக்கி மீதான ஒரு தாக்குதல் என்பது நேட்டோ மீதான ஒரு தாக்குதலாகும்,” என்று அறிவித்தார். அந்த ஷரத்து துருக்கி மீதான அல்லது வேறெந்தவொரு அங்கத்தவ அரசின் மீதான ஒரு தாக்குதலுக்கு எதிராக ஓர் ஆயுதமேந்திய விடையிறுப்புக்கு, அமெரிக்க தலைமையிலான இராணுவ கூட்டணியின் அங்கத்தவர்களைக் கடமைப்பாடு கொள்ளச் செய்கிறது.

சிரியாவை சூறையாடியுள்ள ISIS மற்றும் அல்-நுஸ்ரா முன்னணி போன்ற இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிரதான ஆதாரங்களில் ஒன்றான துருக்கிய அரசாங்கம், ஈராக்கில் உள்ள குர்திஷ் முகாம்கள் மீது குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியும் மற்றும் சிரிய எல்லைக்குள்ளே பறக்கும் சிரிய விமானங்களைச் சுட்டுவீழ்த்தியும், அதன் சொந்த அண்டைநாடுகளின் வான்எல்லைகளை அது வழமையாக மீறிவருகிறது.

உயர்மட்ட நேட்டோ அதிகாரிகளும், மாஸ்கோ மீதான போர்வெறியூட்டல் கண்டனங்களுக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார்கள். நேட்டோ பொது செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், துருக்கிய வான்எல்லைக்குள் குற்றகரமான ரஷ்ய ஊடுருவல் என்பது "ஒரு தற்செயலான சம்பவமாக தெரியவில்லை" என்று குற்றஞ்சாட்டினார். அவர் தொடர்ந்து, “சம்பவங்களும், எதிர்பாரா நிகழ்வுகளும் அபாயகரமான சூழலை உருவாக்கிவிடும். ஆகவே அதுபோல மீண்டும் ஏற்படாதவாறு உறுதிப்படுத்தி வைப்பது முக்கியமாகும்,” என்று எச்சரித்தார்.

செவ்வாயன்று வாஷிங்டனில் பேசுகையில், இத்தாலியின் நாப்லெஸின் நேட்டோ கூட்டு நேசப்படை கட்டளையகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள மார்க் ஃபேர்குஷன், ஆர்டிக் வட்டாரத்தில் தொடங்கி மத்திய தரைக்கடல் பகுதி வரையில் "எஃகு வளைவை" (arc of steel) கட்டமைத்து வருவதற்காக ரஷ்யாவை கண்டித்தார். வின்ஸ்டன் சேர்ச்சிலின் 1946 “இரும்புத்திரை" உரையிலிருந்து ஆழ்ந்து ஆராய்ந்து எடுக்கப்பட்ட இந்த சாராம்சம், சக்திகளின் நிஜமான உறவுகளைத் தலைகீழாக திருப்புகிறது. இது, 25 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் வாஷிங்டனும் நேட்டோ கூட்டணியும் தயவுதாட்சண்யமின்றி ரஷ்யாவைச் சுற்றிவளைத்ததை மூடிமறைக்கிறது.

ரஷ்யாவை நேட்டோ முகங்கொடுக்கும் "மிகவும் அபாயகரமான அச்சுறுத்தலாக" வர்ணித்து, அட்மிரல் ஃபேர்குஷன், நேட்டோ மாஸ்கோவை நோக்கி அதிகரித்தளவில் ஆக்ரோஷமான தோரணையை ஏற்க அழைப்புவிடுத்தார். “நிஜமான உலக நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கு உகந்தவிதத்தில்" இராணுவப் படைகளை நிலைநிறுத்தவும் மற்றும் கூட்டணியின் "போர் புரியும் திறன்களை" மெருகூட்டவும் அவர் பரிந்துரைத்தார்.

முன்னாள் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் கண்ணோட்டங்களும் ஐயத்திற்கிடமின்றி அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் அதன் பரந்த இராணுவ மற்றும் உளவுத்துறை கூட்டிணைப்பின் சக்திவாய்ந்த பிரிவுகளில் நிலவும் சிந்தனைகளையே பிரதிபலிக்கின்ற நிலையில், அவர்களும் ரஷ்யா உடனான மோதலுக்கு அழைப்புவிடுப்பதில் அழுத்தம் சேர்த்துள்ளனர்.

கார்ட்டர் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்புத்துறை செயலராக இருந்தவரும் நீண்டகால அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதியுமான Zbigniew Brzezinski, பைனான்சியல் டைம்ஸில் பிரசுரித்த கட்டுரை ஒன்றில், சிஐஏ-ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ரஷ்யா தாக்குவது "அமெரிக்க பதிலடியைக் தூண்டும்" என்று எழுதினார். வாஷிங்டனிலுள்ள ஏனையவர்களைப் போலவே, அவரும் இத்தகைய போராளிகள் குழுக்களில் மிக முக்கியமான ஒன்றாக சிரியாவில் அல் கொய்தாவுடன் இணைப்புகொண்ட அல்-நுஸ்ரா முன்னணி உள்ளது என்பதைக் குறிப்பிடாமல் தவிர்த்துக் கொண்டார்.

“சிரியாவில் ரஷ்ய கடற்படை மற்றும் விமானப்படையின் பிரசன்னம், அவர்களது தாய்நாட்டிலிருந்து புவியியல்ரீதியில் தனிமைப்பட்டு இருப்பதால் பலவீனமாக இருப்பதாகவும்", "அவர்கள் அமெரிக்காவை விடாது தூண்டினால், 'ஆயுதம்களைய' செய்யலாம் என்றும் Brzezinski ஆலோசனை வழங்கினார். புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில், அவர் "இராணுவரீதியில் துடைத்தழிக்கும்" ஒரு வழக்குமொழியைப் பயன்படுத்தியதற்கு அறிகுறியாக, "ஆயுதம்களைய செய்தல்" என்பதை மேற்கோளிட்டு காட்டியிருந்தார்.

அதேபோல, 2013 மத்தி வரையில் நேட்டோவிற்கான ஒபாமாவின் தூதராக இருந்த Ivo Daalder, Politicoக்கு கூறுகையில், “அங்கிருந்து அவர்களது இராணுவப் படைகளை நாம் வெளியேற்ற விரும்பினால், ஒப்பீட்டளவில் அனேகமாக நமது தரப்பிலிருந்து குறைந்த விலை கொடுத்தோ அல்லது விலை கொடுக்காமாலேயோ கூட அதை செய்துவிட முடியும். புட்டினின் விடையிறுப்பு என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வி. சூழ்நிலை வரும் போது நீங்கள் இதை கொண்டு விளையாட வேண்டியிருக்குமென நான் நினைக்கிறேன்,” என்றார்.

இதற்கிடையே சிரியா மாற்றத்திற்கான ஒபாமாவின் முன்னாள் சிறப்பு தூதர் ஃப்ரெட்ரிக் ஹோஃப், 1962 அக்டோபரில் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது நிகிடா குருஷேவின் நடவடிக்கைகளோடு புட்டினின் நடவடிக்கைகளை ஒப்பிட்டார், அந்நெருக்கடி உலகை அணுஆயுத போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்திருந்தது. “50 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு முன்னிருந்தவரைப் போலவே, இவரும் [புட்டின்] அமெரிக்க ஜனாதிபதியின் பாகத்தில் பலவீனத்தை உணர்கிறார். அவருக்கு முன்னிருந்தவரைப் போலவே, இவரும் அமெரிக்காவுடன் அற்பத்தனமாக நடந்துகொள்வது ஒரு ஆரோக்கியமான நகர்வல்ல என்பதைக் கண்டறியும் அபாயத்தில் இறங்குகிறார். ஆனால் அதுபோன்றவொரு அபாயம் எல்லா ஆபத்தான விவகாரங்களையும் உள்ளடக்கியுள்ளது,” என்றார்.

பைனான்சியல் டைம்ஸின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமை கட்டுரையாளர் Gideon Rachman, இத்தகைய சர்ச்சைகளின் அச்சுறுத்தலான விளைவுகளைத் தருவித்து, சிரியா சண்டையை 1930களின் ஸ்பானிஷ் உள்நாட்டு போருடன் ஒப்பிட்டார். அவர் எழுதினார்: “அதேபோன்றவொரு பினாமி போர்தான் சிரியாவில் இன்று நடந்து கொண்டிருக்கிறது—ரஷ்யா மற்றும் அமெரிக்கா இரண்டினது விமானப்படைகளும் அந்நாட்டின் இலக்குகள் மீது குண்டுவீசி வருகின்றன, அன்னியநாட்டு போராளிகள் உள்ளே பெருக்கெடுத்து வருகின்றனர்,” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்: “1930களில் ஸ்பெயினில் எதிரெதிர் தரப்புகளை ஆதரித்துவந்த அந்நாடுகள், 1940களில் நேரடியாக ஒன்றையொன்று தாக்கத் தொடங்கியிருந்தன. சிரியா சண்டை, ஈரானியர்களுக்கும் சவுதியர்களுக்கும் இடையிலான, அல்லது ரஷ்யர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையிலான ஒரு நேரடி மோதலுக்கே கூட இட்டுச் செல்லும் அபாயத்தை உதறிவிட முடியாது".

ரஷ்ய அரசையும் மற்றும் ரஷ்யாவின் எரிசக்தித்துறை பகாசுர நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற செல்வந்த தட்டுக்களின் ஆளும் வர்க்கத்தினது நலன்களையும் பாதுகாப்பதற்காக தொடங்கிய ரஷ்யாவின் தலையீடு, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான மற்றும் தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து மத்திய கிழக்கு வரைபடத்தைத் மாற்றி வரைவதற்கான, அமெரிக்காவின் திட்டங்களை நடைமுறையில் தடுத்துள்ளதால் இந்த அபாயம் நிலவுகிறது.

அம்மண்ணில் பினாமி படைகளை ஆதரித்து சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரும் பரிந்துரை, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே அப்போதைய இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹுவால் ரிச்சார்ட் பேர்ல், டக்ளஸ் ஃபெத் மற்றும் டேவிட் உர்ம்சர் உள்ளடங்கிய ஒரு ஆய்வு குழுவால் வரையப்பட்ட, "ஒரு தெளிவான முறிவு: அதிகார எல்லையைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய மூலோபாயம்" என்று தலைப்பிட்ட ஒரு ஆவணத்தில் முன்வைக்கப்பட்டது. அம்மூவரும் பின்னர் புஷ் நிர்வாகத்தில் உயர்மட்ட பதவிகளைப் பெற்றதுடன், ஈராக்கிற்கு எதிரான ஆக்ரோஷமான அமெரிக்க போரைத் தொடங்குவதற்கான சூழ்ச்சியிலும் பங்குபற்றினர்.

விக்கிலீக்ஸால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்று, ஆட்சி மாற்றத்திற்கான செயலூக்கமான அமெரிக்க திட்டமிடல், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்காவது சிரிய உள்நாட்டு போர் வெடிப்பில் சூறையாட இருந்ததை நிறுவிக்காட்டியது. டமாஸ்கஸில் உள்ள அமெரிக்க தூதரக தலைமையகத்திலிருந்து வந்திருந்த அந்த இரகசிய செய்தி, வாஷிங்டன் பாவித்துக்கொள்ளத்தகுந்த சிரிய அரசாங்கத்தின் "பலவீனங்களை" விவரித்திருந்தது. “எல்லைகடந்துவரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரசன்னத்தை" ஆதாயமாக்கி, வகுப்புவாத மோதலை ஏற்படுத்த, "ஈரானிய மேலாதிக்கம் குறித்து சுன்னி பிரிவினரிடையே அச்சங்களைத்" தூண்டிவிடுவதே அப்பட்டியலில் முதலில் இடம் பெற்றிருந்தது.

அமெரிக்க படையெடுப்பு மற்றும் வாஷிங்டனின் பிரித்தாளும் தந்திரங்களால் உருவாக்கப்பட்டிருந்த ஈராக்கின் வகுப்புவாத படுகொலைகளின் உச்சத்தில் 2006 இல் அந்த ஆவணம் எழுதப்பட்டிருந்த நிலையில், அத்தகைய பரிந்துரைகள் ஒரு இரத்த ஆறை ஓடச் செய்யுமென்பதை முழுமையாக அறிந்தே முன்வைக்கப்பட்டது. அண்மித்தளவிற்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், இக்கொள்கையின் கோரமான விளைபயன்களில் சுமார் 300,000 சிரியர்களின் மரணங்களும், கூடுதலாக 4 மில்லியன் பேர் அந்நாட்டை விட்டு விரட்டப்பட்டமையும் மற்றும் 7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்த்தப்பட்டமையும் உள்ளடங்குகின்றன.

அமெரிக்க இராணுவவாதத்தின் தீவிரப்பாட்டை நியாயப்படுத்த, எரிச்சலூட்டும்விதமாக சிரிய மக்களின் துன்பங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், வாஷிங்டன் அந்த எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கின் மீதும் ஒட்டுமொத்த பூமியின் மீதும் அதன் மேலாதிக்கத்தை திணிக்கும் அதன் முனைவை ரஷ்யா தடம் புரள செய்ய விட்டுவிடாது.

ரஷ்யாவுடனான போருக்கு இட்டுச்செல்லும் பாதை எவ்விதத்திலும் தற்செயலானதல்ல. டமாஸ்கஸில் ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அமெரிக்க தலையீடு, ஆரம்பத்திலிருந்தே, சிரிய அரசாங்கத்தின் பிரதான கூட்டாளிகளான ஈரான் மற்றும் ரஷ்யாவை நேரடியாக தாக்குவதற்கான தயாரிப்புடன், அவ்விரு நாடுகளையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாளும் மேலும் மேலும், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியில் வேரூன்றிய அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு, ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போரின் பேராபத்துடன் மனிதயினத்தை எதிர்கொள்கிறது.