World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

US, NATO step up threats to Russia over Syria

அமெரிக்காவும், நேட்டோவும் சிரியா விவகாரத்தில் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல்களை அதிகரிக்கின்றன

By Patrick Martin
7 October 2015

Back to screen version

சிரிய-துருக்கிய எல்லையோரத்தில் ரஷ்ய போர்விமானங்கள் நடவடிக்கை சம்பந்தப்பட்ட ஒரு தொடர் நிகழ்வுகளுக்குப் பின்னர், நேட்டோ தலைவர்கள், செவ்வாயன்று சிரியாவில் ரஷ்ய படைகளுக்கு எதிரான ஓர் இராணுவ விடையிறுப்புக் குறித்து பகிரங்கமாக அச்சுறுத்தினர்.

பல்வேறு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான ஓர் அரசு விஜயத்தில், புருசெல்ஸில் பேசுகையில், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ரஷ்ய போர்விமானங்கள் அவரது நாட்டின் வான்எல்லைகளை மீறியதாக வாதிட்டார். அவர் வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கையின் ஐந்தாவது ஷரத்தைக் குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும், “துருக்கி மீதான ஒரு தாக்குதல் என்பது நேட்டோ மீதான ஒரு தாக்குதல்,” என்றார். அந்த ஷரத்து துருக்கி போன்ற ஓர் அங்கத்துவ நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் நேட்டோவின் ஆயுத விடையிறுப்புக்கு அழைப்புவிடுக்கிறது.

புருசெல்ஸில் வேறொரிடத்தில் ஒரு நிகழ்ச்சியில் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் கூறுகையில், துருக்கிய விமானஎல்லைக்குள் ரஷ்ய ஊடுருவல் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் "ஒரு தற்செயலான சம்பவமாக தெரியவில்லை,” என்றார், சனியன்று நடந்த அந்த முதல் சம்பவத்தை குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியிருந்தவாறு நொடி நேர சம்பவங்களைப் போலன்றி, அவை நீண்டநேரம் நீடித்திருந்தன" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சம்பவங்களும் சரி, தற்செயலான நிகழ்வுகளும் சரி, அபாயகரமான சூழ்நிலைகளை உருவாக்கிவிடும்,” என்று ஸ்டொல்டென்பேர்க் தொடர்ந்தார். “ஆகவே இது மீண்டும் நடக்காமல் உறுதிப்படுத்தி வைக்க வேண்டியது முக்கியம்,” என்றார்.

அந்த சனிக்கிழமை சம்பவம் மட்டுமே இரண்டு தரப்பிலிருந்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: மத்தியதரை கடல்பகுதியை ஒட்டி, ரஷ்ய போர்விமானங்களுக்கான விமானத்தளம் அமைந்துள்ள லடாகியாவிலிருந்து 18 மைல்களுக்குள்ளாக ஹத்தாய் பிராந்தியத்தில் ஒரு ரஷ்ய போர்விமானம் துருக்கிய எல்லைக்குள் நுழைந்தது. அந்நடவடிக்கை மோசமான வானிலை காரணமாக கவனக்குறைவாக ஏற்பட்டதென்றும், வெறும் ஒருசில நொடிகள் மட்டுமே அது நீடித்ததென்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றஞ்சாட்டப்படும் இரண்டாவது சம்பவமும் ஹத்தாய் பிராந்தியத்திற்குள் நடந்த ஓர் ஊடுருவல் குறித்ததாகும், ஆனால் ரஷ்ய போர்விமானங்கள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்துடன் சண்டையிட்டு வரும் கிளர்ச்சி படைகள் வசமிருக்கும் சிரியாவின் வடமேற்கிலுள்ள இட்லிப் (Idlib) மாகாணத்தின் ஓர் இடத்தை குண்டுவீசி தாக்குவதில் ஈடுபட்டிருந்தன என்பது நீங்கலாக, அச்சம்பவம் குறித்து ஒருசில விபரங்களே வெளியாகியுள்ளன.

அவற்றின் எல்லை பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த எட்டு துருக்கிய F-16 விமானங்கள் மீது, தாக்குதல் நடத்துவதற்கான வெளிப்படையான தயாரிப்பில், நான்கரை நிமிடங்கள் அடையாளங்காண முடியாத MiG-29 போர்விமானம் ஒன்று ராடார்களைக் கொண்டு குறிவைத்ததாக திங்கட்கிழமையின் மூன்றாவது சம்பவத்தைக் குறித்து துருக்கிய அதிகாரிகள் வாதிட்டனர். சிரியா மற்றும் ரஷ்யா இரண்டுமே MiG-29 ரக விமானங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

சனிக்கிழமை விமான ஊடுருவல் சம்பவம், பிராச்சார நோக்கங்களுக்காக பாவிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். “சிரியாவில் ரஷ்ய விமானப்படை நடத்திவருகின்ற நடவடிக்கைகளின் நோக்கத்தை திரித்துக்காட்டுவதற்கான மேற்கின் தகவல் பிரச்சாரத்திற்குள் நேட்டோவை நுழைப்பதற்காக, துருக்கிய வான்எல்லைமீறல் சம்பவம் பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறது,” என்று ரஷ்யாவின் துணை வெளியுறவுத்துறை மந்திரி அலெக்சாண்டர் க்ருஷ்கோ Itar-Tass செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.

நேட்டோ பொது-செயலாளர் ஸ்டொல்டென்பேர்க் சிரியாவிற்குள் ரஷ்ய கப்பற்படை மற்றும் தரைப்படை, அத்துடன் போர்விமானங்களின் நகர்வை சுட்டிக்காட்டினார். “விமானப் படைகள், வான் பாதுகாப்பு தளவாடங்கள், அது மட்டுமின்றி அவர்கள் கொண்டுள்ள விமானத்தளங்களுடன் தொடர்புபட்ட தரைப்படை துருப்புகள் என சிரியாவிற்குள் கணிசமான அளவிற்கு ரஷ்ய படைகளின் ஆயத்தப்படுத்தலை நாங்கள் பார்த்துள்ளோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். மேலும் ஓர் அதிகரித்த கடற்படை பிரசன்னமும் நாங்கள் காண்கிறோம்,” என்று தெரிவித்தார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அதன் காணொளி காட்சி பகுப்பாய்வின் அடிப்படையில், திங்களன்று ரஷ்ய வலைத் தளம் lenta.ru குறிப்பிடுகையில், சிரியாவில் ரஷ்ய படைகளுக்கு அதிநவீன Krasukha-4 மின்னணு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டது. இது சிரியாவில் விமானத் தாக்குதல்கள் நடத்திவரும் அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளால் செயல்படுத்தப்படும் வான்வழி ராடார்கள் மற்றும் டிரோன்களை செயலிழக்கச் செய்யக்கூடியதாகும்.

சிரியாவிற்கு அருகிலுள்ள பகுதிகளில் குண்டுவீசுவதில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மற்றும் ரஷ்ய போர்விமானங்களுக்கு இடையே ஒரு நேரடி மோதலுக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் பொருட்டு, “மோதல் அபாய தவிர்ப்பு" என்றழைக்கப்படுவது குறித்து கூடுதலாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். துணை பாதுகாப்புத்துறை மந்திரி அனரோலி அன்ரோனோவ் கூறுகையில், அடுத்த சில நாட்களில் அங்கே பெண்டகனுடன் ஒரு இணையவழி காணொளி கலந்துரையாடல் நடக்குமென தெரிவித்தார்.

வியாழக்கிழமை புருசெல்ஸில் நடைபெறவுள்ள ஒரு நேட்டோ மந்திரிமார் கூட்டத்திற்கு முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர், ஸ்பெயினில் உள்ள Moron de la Frontera மற்றும் சிசிலியில் உள்ள Sigonella உட்பட மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவத்தளங்களில் தற்போது விஜயம் செய்து வருகிறார். இதற்கிடையே செவ்வாயன்று இத்தாலியில் இறங்கிய போது, அவர் எந்த குறிப்பிட்ட நடவடிக்கையையும் குறிப்பிடாமல், துருக்கிய வான்எல்லைமீறல்கள் "ரஷ்யா சார்ந்த நமது தோரணையை மேற்கொண்டு பலப்படுத்த செய்யுமென" எச்சரித்தார்.

ரஷ்யா அதன் விமானதாக்குதல்களுக்கு வேண்டுமென்றே சிஐஏ ஆல் பயிற்றுவிக்கப்பட்டு ஆயுதமேந்த செய்யப்பட்ட சிரிய கிளர்ச்சி குழுக்களை இலக்கில் வைக்கிறதென்று அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்திருப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது. சிஐஏ ஆதரிக்கும் குழு ஒன்றினது தலைமையிடம் மீது குண்டுவீசிய நடவடிக்கையைக் குறிப்பிட்டு, ஒரு பெயர் வெளியிடாத "மூத்த அமெரிக்க அதிகாரி" ஜேர்னலுக்குக் கூறுகையில், “முதல் நாளாக இருந்தால், நீங்கள் இதை முதல்முறை தவறு என்று கூறலாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது நாள் என்றால், அதன் உள்நோக்கம் குறித்து எந்த கேள்வியும் இருக்க முடியாது. அவர்கள் எதை தாக்குகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்,” என்றார்.

சிரியாவில் அல் கொய்தா இணைப்புகொண்ட அல்-நுஸ்ரா முன்னணி உட்பட இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் சிஐஏ-ஆதரவிலான படைகளில் உள்ளடக்கி உள்ளன என்ற உண்மையை ஒபாமா நிர்வாகமும் சரி அமெரிக்க ஊடகங்களும் சரி மூடிமறைக்க விரும்புகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உண்மையில் பிரச்சினை, "பயங்கரவாதிகளை" இலக்கில் வைத்திருப்பதாக தனிப்பட்டரீதியில் ரஷ்யாவின் கூறுவதற்கும், சிஐஏ-ஆதரிக்கும் குழுக்கள் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அரசாங்கம் கூறுவதற்கும் இடையே கிடையாது.

வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்கள் முன்னணி பிரிட்டிஷ் வணிக நாளிதழான பைனான்சியல் டைம்ஸில், Zbigniew Brzezinski ஆல் எழுதப்பட்டு ஞாயிறன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் வெளியாகின. இவர் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தில் (1977-1981) தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் மற்றும் ரஷ்யாவை பல கூறுபட்ட அரசுகளாக உடைத்ததன் மூலமாக யுரேஷியா மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க மூலோபாயத்தின் நீண்டகால ஆலோசகராகவும் இருந்தவராவார்.

மத்திய கிழக்கு மற்றும் உலகளவில் அமெரிக்க நம்பகத்தன்மை பணயத்தில் இருப்பதாக எச்சரித்து, Brzezinski அறிவித்தார், “துரிதமாக கட்டவிழ்ந்துவரும் இத்தகை சூழலில், அமெரிக்கா அப்பிராந்தியத்தில் அதன் பரந்துபட்ட பங்குகளைப் பாதுகாக்க வேண்டுமானால் அதற்குஒரேயொரு நிஜமான வாய்ப்பு தான் இருக்கிறது: அதாவது, அமெரிக்க உடைமைகளை நேரடியாக பாதிக்கும் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு மற்றும் விலகி இருக்குமாறு மாஸ்கோவிற்கு அதன் கோரிக்கையைத் தெரியப்படுத்தி விட வேண்டும்.”

"காலம் தாழ்த்தாத அமெரிக்க பதிலடி தான்" சிஐஏ-ஆதரிக்கும் குழுக்கள் மீதான ரஷ்ய தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக இருக்கும் என்றவர் வாதிட்டார். சிரியாவில் ரஷ்ய கடற்படை மற்றும் விமானப்படைகளின் பிரசன்னம் பலவீனமானது, அவை அவற்றின் சொந்தநாட்டிலிருந்து புவியியல்ரீதியில் தனிமைப்பட்டுள்ளன. அமெரிக்காவை அவை விடாது ஆத்திரமூட்டினால், அவற்றை "நிர்மூலமாக்கி" (disarmed) விடலாம்.

குறிப்பிடத்தக்க அளவிற்கு இரத்தஆறு இல்லாமல், எவ்வாறு 50 ரஷ்ய போர்விமானங்கள், அதற்கு ஆதரவாக உள்ள பல ஆயிரக் கணக்கான சிப்பாய்கள் மற்றும் அரை டஜன் கடற்படை வாகனங்களை "நிர்மூலமாக்க" (disarmed) முடியும் என்று Brzezinski கூறவில்லை.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் இவ்விதத்திலான எந்தவொரு நடவடிக்கையும், அதனோடு சேர்த்து, சாத்தியமான அளவிற்கு கணிப்பிடமுடியாத விளைவுகளோடு அந்த அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு பரந்த மோதல் அபாயத்தைக் கொண்டு வரும்.

சிரிய மோதலில் கூடுதலாக ஆக்ரோஷத்துடன் தலையீடு செய்ய ஒபாமா நிர்வாகம் தயாராகி வருகிறது என்பதற்கு ஒரு அறிகுறி, நியூ யோர்க் டைம்ஸின் ஒரு செய்தியிலிருந்து வருகிறது, அதாவது கிழக்கு சிரியாவில் ISIS கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்தின் தலைநகரான ரக்கா மீதான ஒரு தாக்குதலுக்காக 20,000 சிரிய குர்திஸ்தானியர்களுக்கும் 3,000 இலிருந்து 5,000 சிரிய அரபு கிளர்ச்சியாளர்களை கொண்ட ஒரு கூட்டு குழுவினருக்கு மீண்டும் நேரடியான ஆயுதம் வழங்கல்களுக்கு ஒபாமா ஒப்புதல் அளித்திருப்பதாக அது குறிப்பிட்டது.