World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Betrayal by National Union of Workers at Deeside estate in Sri Lanka

இலங்கை: டீசைட் தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் காட்டிக்கொடுப்பு

By M. Thevarajah
14 October 2015

Back to screen version

கிளனியூஜி தோட்டத்தின் டீசைட்  பிரிவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் (தொ.தே.ச.) அண்மைய நடவடிக்கை, தமது உரிமைகைளை பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாகத் தலையிடுவதற்கு தொழிற்சங்கங்கள் எந்தளவு விரோதமாக இருக்கின்றன என்பதை எடுத்துகாட்டுகின்றது. கிளனியூஜி தோட்ட நிர்வாகத்தினால் போலிக் குற்றச் சாட்டின் பேரில் வேலை நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்கள் தமது வேலையை மீண்டும் பெறுவதற்கு மன்னிப்பு கோர வேண்டிய காரணம் இல்லாதபோதும், தொழிற்சங்க அதிகாரத்துவம் அதற்கு வழிவகுத்தது. தொ.தே.ச. தலைவர் பி. திகாம்பரம், ஐக்கிய தேசியக் கட்சியினதும் (.தே..) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியனதும் (ஸ்ரீ.ல.சு.க.) ஐக்கிய அராங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஆவர்.

டீசைட் பிரிவைச் சேர்ந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவாளரான ஜி. வில்பிரட், என். நெஸ்ரூரியன், எஃப். பிராங்கிளின் ஆகிய மூவரே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் ஆகஸ்ட் 19 அன்று ஊதியமில்லாமல் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இதே போலிக் குற்றச் சாட்டில் இடைநிறுத்தப்பட்ட நான்கு ஏனைய  தொழிலாளர்கள்: எஸ். டக்லஸ்நியூமன், எஃப். அன்ரன் ஜூலியன், எஸ். பெனடிற், எஸ். ஜனரட்ணம் ஆகியோர் ஒரு மாதத்தின் பின்னர் கடந்த ஜூனில் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்.

தோட்ட மேற்பார்வையாளரை அடித்தனர் என்ற போலிக்குற்றச் சாட்டின் பேரில் மே 22 திகதி அவர்கள் வேலை நீக்கமும் வேலை இடை நிறுத்தமும் செய்யப்பட்டார்கள். நிர்வாகம் போலி விசாரணையை நடாத்தியது. 6 தொழிலாளர்கள் அத்தகைய சம்பவம் இடம் பெறவில்லை என சாட்சியம் அளித்தனர். மேற்பார்வையாளர் பி. ஏபிராகாமினால் செய்யப்பட்ட அதே போலி முறைப்பாட்டின் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இணக்க சபையில் விசாரணை நடத்தப்பட்டபோது, ஏபிரகாம் முறைப்பாட்டை விலக்கிக்கொள்ள விரும்பினாலும் நிர்வாகம் அதனை எதிர்த்தது எனத் தெரிவித்தார்.

நாளாந்தம் பறிக்கும் தேயிலை கொழுந்தின் அளவை 16 கிலோவிலிருந்து 18 கிலோவாக அதிகரிப்பதற்கு எதிராக பெப்ரவரியில் வேலை நிறுத்தம் செய்ததைத் தொடர்ந்தே தொழிலாளர்கள் பழிவாங்ககப்பட்டார்கள். கடந்த வருட நடுப்பகுதியில் இது அமுல் படுத்தப்பட்டிருந்தாலும் மேலதிக உற்பத்திக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை. வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் மேலதிக வேலைக்கான நிலுவையை கோரினர்.

தொ.தே.ச. அல்லது பெருந்தோட்டத் துறையின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்யாததோடு அவர்களை வேலைக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டன. தோட்ட நிர்வாகம் பறிக்கும் கொழுந்தின் அளவை பழைய நிலைக்கு குறைத்த பொழுதும், தொழிலாளர்களை பலவழிகளில் துன்பறுத்தியது. மார்ச் மாதம், வில்பிரட்டும் ஏனய தொழிலாளர்களும், தொழிலாளர்கள் மேல் குளவி தாக்குதல் சம்பந்தமாக மேற்பார்வையாளர் பி. ஏபிரகாமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இ.தொ.கா.வும் நிர்வாகமும் இணைந்து இந்த சம்பவத்தை பிரயோகித்து, ஏபிரகாமை பொய் முறைப்பாட்டை செய்யத் தூண்டின.

தொ.தே.ச. மஸ்கெலியக் கிளைத் தலைவர்கள், மீண்டும் வேலை பெறுவதன் பேரில், எதிர்காலத்தில் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என வாக்குறுதியளிக்கும் மன்னிப்புக் கடிதங்களை தொழிலாளர்களிடம் இருந்த பெற்று நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர். தொழிலாளர்கள் பிழை செய்யாத போதும் மன்னிப்புக்கோர வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நடவடிக்கையானது தொழிற் சங்கங்கள் தொழிலாளர்கள் நலனுக்காக அன்றி தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படுவதையே மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

அவர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டபோதும், இந்த கடிதத்தை பயன்படுத்தி, எந்த நேரத்திலும் அற்ப குற்றச்சாட்டுக்காக வேலை நீக்கம் செய்யப்படும் ஆபத்து இருப்பதுடன், எதிர்வரும் தொழிலாளர்களின் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக எச்சரிக்கவும் பயமுறுத்தப்படவும் கூடும்.

எவ்வாறெனினும், இந்த உடன்பாட்டுக்கு ஆழமான காரணங்கள் உள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) பெருந்தோட்டங்களில் அதன் அரசியல் போராட்டங்களின் பாகமாக, டீசைட்டில் நீண்ட காலமாக அரசியல் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளது. சோ.ச.க. பெப்பிரவரியில் இருந்தே விசாரணை, வழக்குகள் உட்பட தொழிலாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள் மற்றும் வேலைச் சுமைக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை மிக நெருக்கமாக அவதானித்து வந்துள்ளது. தேயிலை தொழிற்துறையில் உள்ள நெருக்கடி மற்றும் தொழிற் சங்கங்களின் உதவியுடன் தேயிலைக் கம்பனிகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதைப் பற்றி சோ.ச.க. தெளிவுபடுத்தி வந்துள்ளதுடன் இத்தகைய தாக்குதலுக்கு எதிராக சோசலிச வேலைத் திட்டத்தையும் முன்வைத்தது.

வேலைச் சுமையை அதிகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வகித்த போராளித் தொழிலாளர்களுக்கு எதிராக, தொழிற் சங்கங்களின் உதவியுடன் கிளனியூஜி நிர்வாகம் அடக்குமுறைகளை முன்னெடுப்பதையும் சோ.ச.க. உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக அம்பலப்படுத்தியது. வேலைச் சுமையை அதிகரிப்பதற்கு எதிரான தொழிலாளர்களின் எந்தவொரு விரோதத்தையும் நசுக்குவதற்காகவே இத்தகைய வேட்டையாடல் மேற்கொள்ளப்படுகின்றது என தெளிவுபடுத்தி, டீசைட் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதை எதிர்க்குமாறு ஏனய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் நாம் பிரச்சாரம் செய்தோம்.

சோ.ச.க. இந்த வேட்டையாடலுக்கு எதிராக ஜூலை 5 சாமிமலையில் பகிரங்க கூட்டத்தை நடத்தியது. எங்களுடைய பிரச்சாரத்தை தடுப்பதற்கு பொலிசாரின் உதவியுடன் தொ.தே.ச. பிரதேச தலைவர்கள் முயற்சித்த போதிலும் தோல்வியடைந்தார்கள். அதே இடத்தில் ஆகஸ்ட் 9 நடந்த எமது தேர்தல் பிரச்சாரக் கூட்டம், தொழிலாளர்களுக்கு எதிரான பரந்த தாக்குதலை தெளிவுபடுத்தவே அர்ப்பணிக்கப்பட்டது. டீசைட்டிலும் ஏனைய தோட்டங்களிலும் சோ.ச.க.யிற்கு ஆர்வமும் அக்கறையும் வளர்ச்சியடைந்தது.

தொழிலாளர் மத்தியில் சோ.ச.க.யின் செல்வாக்கு அதிகரிப்பது சம்பந்தமாக தொழிற்சங்க தலைவர்களும் நிர்வாகமும் கவனத்தில் எடுத்துள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் வேலைக்கு அமர்த்தும் உடன்பாட்டுக்கு வந்து, தொ.தே.சங்கத்தின் கைகளைப் பலப்படுத்தும் தீர்மானத்துக்கு நிர்வாகம் வந்துள்ளது.

புதிய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற் சங்கங்களின் அற்ப சம்பள உயர்வு கோரிக்கையை நிராகரித்த தோட்ட உரிமையாளர் சங்கம், கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிப்பது உட்பட கணிசமான உற்பத்தி திறன் அதிகரிப்பை வலியுறுத்துகின்றது. உலக சந்தையில் தேயிலையின் விலையும் ஏற்றுமதியின் அளவும் குறைந்துள்ளது என தோட்ட உரிமையாளர் சங்கம் மேற்கோள் காட்டுகின்றது. தொழிற்சங்கங்கள், வறிய மட்டத்திலான சம்பளத்தை அப்படியே பேணும் அதேவேளை, உயர்ந்த வேலை இலக்குகளை ஈவிரக்கமின்றி அமுல்படுத்துவதற்கு தேயிலைக் கம்பனிகளுக்கு உதவி செய்யும்.

முதலாளிகளுக்கு சார்பான தொழிற்சங்களின் வகிபாகத்தை எதிர்க்குமாறும் தமது ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான ஊதியத்துடனான வாழ்க்கை நிலைமை, சுகாதார சேவை மற்றும் வீட்டு உரிமையையும் காப்பதற்காகவும் சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடவும் அரசியல் ரீதியில் தயாராகுமாறு சோ.ச.க. தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.