World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Middle east tensions mount following breakdown of Camp David talks

காம் டேவிட்டின் பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டநிலை அதிகரிக்கின்றது

By Chris Marsden
27 July 2000

Back to screen version

காம் டேவிட், மேரிலாண்ட் (Maryland) இல் 2 கிழமைக்கு மேலாக நடந்த தீவிர பேச்சுவார்த்தையின் பின்னர் இஸ்ரேலிய பிரதமர் எகூட் பாரக் (Ehud Barak) ஆலும் பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத்தாலும் எதுவித உடன்பாட்டிற்கும் வரமுடியவில்லை.

யூலை 11ம் திகதி ஜனாதிபதி பில் கிளின்டனின் வற்புறுத்தலினால் இப்பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடப்பட்டது. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பல பிரச்சனைகளுக்கு இரு தரப்பினரும் உடன்பாடு காணப்படலாம் போல் தெரிந்தது. 90 வீதமான மேற்கு கரையும், காசா பிராந்தியத்தையும் எதிர்கால பாலஸ்தீன எல்லைகளுடன் சேர்த்துக் கொள்வதற்கான அடிப்படை உடன்பாடு காணப்பட்டது. மிகவும் நெருக்கமான யூத குடியேற்றங்கள் உள்ள பிராந்தியத்தை இஸ்ரேல் சேர்த்துக் கொள்வதற்கு யசீர் அரபாத் தனது ஒப்புதலை தெரிவித்துக் கொண்டார்.

1948லும் 1967லும் நடந்த போர்களினால் வெளியேறி இஸ்ரேலிற்கு வெளியே வாழும் 3.6 மில்லியன் பாலஸ்தீன அகதிகளில் கிட்டத்தட்ட 100.000 பேர் குடும்ப மறுஇணைப்பு திட்டத்தின் கீழ் நாட்டிற்கு திரும்பலாம் என பாரக் ஆல் வைக்கப்பட்ட பிரேரணையை யசீர் அரபாத் ஏற்றுக்கொண்டார். இதில் கணிசமான பகுதியினர் திரும்பி வருவதற்கு எதுவித உரிமை இல்லாததுடன், இவர்களுக்கு சர்வதேச நிதி உதவியினால் நஷ்ட ஈடும் வழங்கப்படலாம்.

பாலஸ்தீனர்கள் இந்நிலையை ஏற்றுக்கொள்வதற்கென நியாயமான நிதி ஊக்குவிப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் தனது பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான உரிமைகளின் தன்மை உட்பட பாலஸ்தீன அரசின் மிகவும் பிளவுபட்ட நிலையை எடுத்துக்காட்டுகிறது. குறைந்தது 15 பில்லியன் டாலர் மேலதிகமாக கிளின்டன் அரசாங்கம் அளிப்பதாக உறுதி கூறியதுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் கிட்டத்தட்ட 40 மில்லியன் டாலர் உதவிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிவித்தது.

பாரிய சலுகைகள் செய்வதற்கு அரபாத்திற்கு விருப்பம் இருந்தாலும் அமெரிக்க பின்னணியுடன் இஸ்ரேலால் முன்வைக்கப்பட்ட ஜெருசலமின் தலைவிதி சம்பந்தமான திட்டத்தினை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலத்தை தமது எதிர்கால பாலஸ்தீனத்தின் தலைநகரமாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 1967 போரில் இஸ்ரேல், கிழக்குப் பகுதியில் நகரத்தை ஜோர்டானிடமிருந்து (Jordan) கைப்பற்றியதுடன், இஸ்லாம், யூத இசம், கிறிஸ்தவம் போன்றவற்றின் தோற்ற நகரமான மதிலால் சூழப்பட்ட இப்பகுதியையும் இணைத்துக்கொண்டது.

ஜெருசலத்தின் பழைய நகரத்திலுள்ள சகல வழிபாட்டு இடங்களையும் இஸ்ரேல் தனது ஆட்சிகளை வைத்திருப்பதாகவும், அதேவேளை பாலஸ்தீனியர் ஜெருசலத்திலும் கிழக்குப் பகுதியிலுள்ள எல்லைப் பிரதேசங்கள் சிலவற்றையும், சில சமய வழிபாட்டு பகுதிகளில் ''பங்கிட்ட'' ஆட்சியை வைத்திருக்கலாம் எனவும் பராக் ஒரு பிரேரனையை வைத்தார். ஒட்டுமொத்தமாக ஆட்சி இஸ்ரேலியர்களின் கைகளிலேயே இருக்கும். ஓரு வெளிப்படையாகவே உத்தேசமற்ற அவமதிக்கும் முறையில் இஸ்ரேல் பிராந்தியத்தில் தேவையில்லாதபடி காலடிவைக்காது, பாலஸ்தீனியர்களுக்கு உரிய கிழக்கு ஜெருசலத்திற்கு யசீர் அரபாத் பிரயாணம் செய்யக்கூடியவாறு நிலத்தின் கீழான பாதையை அமைத்து தருவதாக இஸ்ரேல் உறுதி கூறியது.

கிழக்கு ஜெருசலத்தை முழுமையாக கைவிடும்படி இஸ்ரேலிடம் அரபாத் வற்புறுத்தியதுடன், இஸ்லாமிய சமய ஸ்தலங்களிலும், அதை சுற்றியுள்ள மக்கள் வதிவிடங்களிலும் பலஸ்தீனர்களின் ஆட்சி இருக்கவேண்டுமென்றார்.

இஸ்ரேலியர்களின் கோரிக்கை போல, இதற்கு முன்னர் சர்வதேச சட்டத்தில் ஒருபோதும் இருக்கவில்லை. அத்துடன் இஸ்ரேலியர்கள் ஜெருசலத்தைக் கைப்பற்றியது சட்டவிரோதமென ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது தற்போதும் நடைமுறையில் உள்ளது.

இஸ்ரேலிய தூதுக்குழுவை பேச்சுவார்த்தையை விட்டு வெளியேறுவதற்கு தயார் செய்ய பாரக் கூறியதை தொடர்ந்து கடந்த கிழமை பேச்சுவார்த்தை முற்றுமுழுதாக உடைந்து போயிற்று. இதைத்தொடர்ந்து பாலஸ்தீனியர்களை தாக்கி கிளின்டனுக்கு பகிரங்கக் கடிதமொன்றை பாரக் கையளித்தார். அதேவேளை கிளின்டன் பேச்சுவார்த்தை முறிவடைந்தது என அடுத்த நாள் அறிவித்ததுடன் ஓகினாவா (Okinawa) ஜப்பானில் நடக்கும் G8 கூட்டத்திற்கு செல்வதற்கு ஆயத்தமானார்.

அமெரிக்க அரசின் செயலாளரான மாடலின் ஆல்பிறைற் (Madelin Albrigh) தலைமையின் கீழ், கிளின்டனின் சமூகமளிக்காத நிலையில் பாரக்கும், அரபாத்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடாத்தினர். பேச்சுவார்த்தையில் எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஜூலை 25ல் பில் கிளின்டன் எதிர்கால ஜெருசலம் சம்பந்தமான பேச்சுவார்த்தை உடைந்து போயிற்று எனவும், "இஸ்ரேலியர்கள் தமது அடிப்படை நிலையிலிருந்து கூடியளவு இறங்கி வந்திருந்தனர்" எனக் கூறி பலஸ்தீனர்களையே இதற்கு குற்றம் சாட்டினார். ஆச்சரியப்படாத முறையில் பாரக்கும் அரபாத்தையே குற்றம் கூறினார்.

அரபாத் எதுவித விமர்சனமும் தெரிவிக்காது நேரடியாக அவரின் முக்கிய ஆரவாளரான எகிப்திய ஜனாதிபதி முபாராக்கிடம் பேச்சுவார்த்தைக்கு பறந்து சென்றார். இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சகலருக்கும் பேச்சுவார்த்தையின் முறிவு ஓர் பயங்கர அரசியல் நிலைமையை உருவாக்கியுள்ளது. பாரக், கிளின்டன், அரபாத் இணைந்து விடுத்த ஓர் அறிக்கையில் ''இரு தரப்பினரும் தொடர்ந்து கூடிய விரைவில் சகல நிரந்தரமான பிரச்சனைகளை ஓர் முடிவிற்கு கொண்டுவருவதற்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக'' தெரிவித்துள்ளனர்.

''தீர்வுகளுக்கான திட்டங்கள் உண்மையில் உள்ளன'' என பாலஸ்தீன உள்ளூர் மந்திரி சாஏப் எரிகாட் (Saeb Erkat) பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார். டெனிஸ் றோஸ் (Denis Ross) அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிரதிநிதி இப்பிராந்தியத்திற்கு பிரயாணம் செய்து, திரும்பவும் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகளை நோக்குவார். ஆனால் இதுவரை எதுவித திகதிகள் தொடர்பாகவும் உடன்பாடு காணப்படவில்லை

இது மிகவும் இலகுவாக நடைபெறக் கூடியதொன்றல்ல. இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் மிகவும் மயிரிழையில் உயிர்தப்பியே பாரக் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். பாரக் சமய அடிப்படைவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கு மிகவும் விசுவாசமானவர்களுக்கும் எதிராக இன்னுமோர் முறை தாக்குபிடிப்பது கேள்விக்குறியே. அத்துடன் எதிர்க்கட்சியான லிக்குட் கட்சி (Likud) அரசியல் தாக்குதலை தொடங்கியதுடன் துரிதமான தேர்தலையும் கோரியுள்ளது.

பாலஸ்தீன அரசை ஸ்திரப்படுத்த நடந்த பேச்சுவார்த்தையின் தோல்வி யசீர் அரபாத்தின் தலைமையை வலிமையிழக்கச் செய்துள்ளது. அரபாத், இஸ்ரேலுக்கு எதுவிதமான சலுகைகளையும் செய்யக்கூடாது என மேற்கு கரையிலும், காசா பிராந்தியத்திலும் பாரிய ஊர்வலங்கள் நடந்தன. செவ்வாயன்று நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இஸ்ரேலுக்கு எதிராக இன்ரிபாடா (Intipada) போராட்டத்தை மறுபடியும் தொடர்வதாக அழைப்பு விட்டனர். ''எமக்கு தெரிந்த ஒரேவழி எதிர்ப்பு போராட்டமே...... எமது உரிமைகளை பலாத்காரத்தின் மூலம் மட்டுமே காக்கமுடியும்'' என இஸ்லாமிய அடிப்படைவாதி காமாஸ் இயக்கத்தின் தலைவர் சயிக் அகமட் யசீன் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

அலக்சான்ரியா எகிப்திலும், பாலஸ்தீனத்திலும் மக்கள் கூட்டம் மரியாதையுடன் அரபாத்தை வரவேற்றன. ஏனெனில் ஜெருசலமை பிளவுபடுத்தும் இஸ்ரேலின் கோரிக்கைகளை நிராகரித்தபடியாலாகும். அதேவேளை இஸ்ரேலிய, பாலஸ்தீன பாதுகாப்பு படைகள் இத்தோல்வியை தொடர்ந்து பிரச்சனைகள் ஏதும் நடக்கக்கூடும் என தம்மை தயார் நிலையில் வைத்திருந்தனர். பராக் கூறுகையில் ''இப்பிராந்தியம் ஸ்திரமற்ற நிலையின் காலப்பகுதிக்கு அண்மிப்பதாக" அறிவித்தார். இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி எபிராம் செனா (Ephiram Sneh) கூறுகையில் தமது பாதுகாப்புப்படை பாலஸ்தீன பாதுகாப்புப்படையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களும் தயார் நிலையிலேயே உள்ளதாக அறிவித்தார்.

செப்டம்பர் 13 ம் திகதி சுதந்திர பாலஸ்தீன அரசினை பிரகடனப்படுத்துவதாக ஒருதலைப்பட்சமாக அரபாத் உறுதிமொழி வழங்கியுள்ளார். தற்பொழுது அப்படி செய்யப்பட்ட பிரகடனத்தில் இருந்து பின்வாங்குவது மிகவும் கடினமாகவுள்ளது. இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக மேற்குகரைப் பிரதேசத்தை இணைத்துக்கொள்ளும் தனது திட்டங்களை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. யசீர் அரபாத் தனது சுதந்திர பிரகடனத்தை தொடர்ந்து சென்றால் முழு மத்திய கிழக்கு பிராந்தியமுமே ஒரு போர் நிலைக்கு தள்ளும் நிலையும், திரும்பவும் இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே சண்டை எழுப்பக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதை பிரதிபலிக்கின்றது.

இது தொடர்பாக கிளின்டனின் நிர்வாகம் எதிர்நோக்கும் பிரச்சனை பார்க்கும்போது, அமெரிக்காவின் மத்திய கிழக்குக்கான அரசியல் ஆழுமை ஐரோப்பிய சக்திகளுடன் ஓர் சவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆரதவு கிடைத்தபின் அரபாத் சுதந்திரத்திற்கு அழைப்பு விட ஊக்குவிக்கப்பட்டுள்ளார்.

யூன் 20ல் பாலஸ்தீன மந்திரி சபையின் பிரதிநிதியான நாபில் சாத் (Nabil Shaath) கூறுகையில், இது ஒருதலைப்பட்சமான அழைப்பாக இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) பாலஸ்தீன அரசின் பிரகடனத்தை அங்கீகரிக்க பிரான்சின் தலைமை மூலமாக சாத்தியமாகும் என்றார். கடந்த வருட ஐரோப்பிய அறிக்கையில் "ஒரு வருடத்திற்குள் பலஸ்தீனர்கள் சுதந்திரத்தைப் பெறுவதற்கான உரிமை உண்டு எனவும், இதற்கு இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை கட்டாயம் தேவையில்லை" எனவும் கூறியுள்ளது. ஐரோப்பியக் கூட்டில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய சாத் பத்திரிகை மகாநாட்டில் தெரிவிக்கையில் ''அமைதிக்கான முடிவை தொடர்புபடுத்தாமலே ஐரோப்பியர்கள் அரசை (பாலஸ்தீனத்தை) ஏற்பதற்கு ஆயத்தமாகவுள்ளார்கள்'' என குறிப்பிட்டார்.

செப்டம்பர் 13க்கு முன்னர் அமெரிக்கா, அரபாத், பாரக் போன்றோர் இப்பிரச்சனைகளை தாண்டி ஏதாவது ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தாலும் இவை எந்தவிதத்திலும் பாலஸ்தீன மக்களின் ஜனநாயக, சமூக கோரிக்கைகளை தீர்க்கப்போவதில்லை.

அரபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலுடன் இணைந்து மேற்கு கரையிலும், காசா பிராந்தியத்திலும் ''சொந்த ஆட்சி'' யை நிறுவுவது என அறிவித்து 7 வருடத்தின் பின்னர் காம் டேவிட் பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது. பாலஸ்தீன ஆட்சியின் உருவாக்கம் தனியே அரபாத்தையும் அவரைச் சுற்றியுள்ள சிறு குழுக்களையுமே லாபமடைய வைத்துள்ளது. 28 மைல் தூரமும் 6 மைல் அகலமுமான காசா பிராந்தியத்தில் வாழத்தள்ளப்பட்டுள்ள 1 மில்லியனுக்கு அதிகமாகவுள்ள பாலஸ்தீனியர்களின் நிலைமை அகதி முகாம்களில் மிகவும் அழுக்கான நிலைமையை ஒத்ததாகவுள்ளது. இவர்களில் வறுமையிலும், 60 வீதம் வேலையில்லாத் திண்டாட்டத்திலும், நீர் வசதியின்மைக்கும் முகம்கொடுக்கும் நிலையிலும், அதைத்தொடர்ந்து அரபாத்தின் பொலிஸ்படைகளினதும், இஸ்ரேலின் இராணுவத்தினதும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியுள்ளனர்.

இவ்வளவு பிரச்சனைகளை எதிர்நோக்குவதோடு, 6000 பேரை கொண்ட 18 இஸ்ரேலிய குடியிருப்புக்களால் மிக வளமான விளைநிலம் கட்டுப்படுத்தப்படுவதையும், தனியார் நீர் விநியோகத்தினரால் சுத்தமான நீர் வழங்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியுள்ளது. இஸ்ரேலினுள் தொழிலுக்காக போவோர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையால் நாளாந்தம் ஏதோ தண்டனைக்குள்ளாவது போல் கடுமையான பாதுகாப்பு எல்லையை கடந்து செல்லவேண்டியுள்ளது. இதேபோல் கிழக்கு கரையோரத்தில் வாழும் பாலஸ்தீனியர்கள் 86% மான பிரதேசத்தில் கட்டிடம் ஏதும் கட்டமுடியாது இஸ்ரேலிய சட்டங்களால் தடுக்கப்பட்டு, அழுக்கான கவனிப்பாரற்ற நிலைமையில் வாழ்கின்றனர்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved