World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

The emergency regulations at work
Srilankan unions abruptly end two long-running strikes

அவசரகால சட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

ஸ்ரீலங்கா தொழிற்சங்கங்கள் நீண்டகால வேலைநிறுத்தங்கள் இரண்டினை தீடீரென முடிவிற்கு கொண்டுவந்துள்ளன.

By Dianne Sturgess
30 may 2000

Back to screen version

ஸ்ரீலங்கா தொழில் வழங்குனர்கள் தொழிற்சங்கங்கத் தலைமைகளின் உதவியுடன் அரசாங்கத்தின் பரந்த, புதிய அவசரகாலவிதிகளை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் தொழிற்சாலைகளிலுள்ள தொழில்முரண்பாடுகளை முடிவிற்கு கொண்டுவரவும், தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யவும் தொழிற்சாலைகளில் கடுமையான நிர்வாகங்களை கொண்டுவரவும் நிர்ப்பந்திக்கின்றனர்.

பொதுஜனமுன்ணனி அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தின் தோல்வியின் மத்தியில் வேலைநிறுத்தம், பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவற்றினை முற்றாகத்தடை செய்யும் அவசரகால விதிகளை பிரகடனப்படுத்தியுள்ளது.

இவ்விதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே International Gift Design Plant (IGDP) , ISIN Lanka என்ற இரு தொழிற்சாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலைநிறுத்தங்களை தொழிற்சங்கங்கள் உடனடியாக முடிவிற்கு கொண்டுவந்தன. இவ்விரு தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லங்கா சமஜமாஜ கட்சியுடன் இணைந்த அனைத்து இலங்கை வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தில் (ACMIWU) அங்கத்தவர்களாவார்.

தொழிலாளர்களை கலந்தாலோசிக்காமலே ACMIWU இன் தலைவர் ஸ்ரீவர்த்தன தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு வேலைநிறுத்தம் முடிவடைந்து விட்டதாக தொலைநகல் அனுப்பினார். பின்னர் தொழிலாளர்களின் எந்த ஒரு கோரிக்கையும் பூர்த்திசெய்யாத உடன்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகங்களுடன் இணைந்து திணித்துள்ளார். IGDP இல் உடன்பாட்டினை கைச்சாத்திடுகையில் தொழிலாளர் சங்கத்தின் கிளைப்பிரதிநிதிகள் சமூகமளிக்ககூட ஸ்ரீவர்த்தன அனுமதிக்கவில்லை.

ISIN இல் நிர்வாகத்தின் அனுமதியின்றி வேலை செய்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்ட 6 சகதொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தவேண்டும் என்ற கோரிக்கையில் 800 தொழிலாளர்கள் மார்ச் மாதம் 17ம் திகதியிலிருந்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றார்கள். இதைத்தவிர மேலதிக கொடுப்பனவை அதிகரிக்கவும், வருடாந்த விடுமுறையை 21 நாளாகக்கூட்டவும், வேலைநிறுத்தத்தின்போது தொழிலாளர்களை பயமுறுத்தவும், பணியச்செய்யவும் பயன்படுத்திய தொழிற்சாலை காவலாளர்களை பதவிநீக்கம் செய்யவும் கோரிக்க்ைகளை விடுத்திருந்தனர்.

நிர்வாகம் 26 தொழிலாளர்களை வீணான குற்றச்சாட்டின் பேரில் வேலைநீக்கம் செய்தது. மார்ச் 16ம் திகதி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வேலைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பதே இக்குற்றச்சாட்டாகும். இப்பிரச்சனைக்கு உரிய நேரத்தில் அவர்கள் தொழிற்சாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் 6 பேர் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை எல்லையை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரிலும், இன்னும் 6 பேர் அனுமதியில்லாமல் மேலதிக வேலை செய்த குற்றச்சாட்டின் பேரிலும், இன்னும் 4 தற்காலிய தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்படவில்லை. சக தொழிலாளர்களின் கருத்துப்படி இந்த 4 தற்காலிக தொழிலாளர்களும் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாலேயே வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அரசாங்கத்தின் இப்புதிய அவசரகால அதிகாரங்களை நிர்வாகம் பயன்படுத்துவதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அதில் "இத் தொழிற்சாலையில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மார்ச் 3ம் திகதியிடப்பட்ட இல.1.2000 என்ற அவசரகாலச்சட்டத்தின் மாதிரியான அத்தியாவசிய சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை" எனவும், "இவ்விதிகள் தொடர்பான முக்கிய நிபந்தனைகள் தொழிலாளர்களின் நலன் கருதி அறிவித்தல் பலகையில் இடப்பட்டுள்ளதாக" குறிப்பிடப்பட்டுள்ளது.

"முற்கூறப்பட்ட உங்கள் மீதான செயலுக்காக சட்டநடவடிக்கை எதுவும் எடுக்க உரிமை இல்லாததோடு, மேற்குறிப்பிட்டுள்ள சட்டத்தின்படி உங்களை உடனடியாக வேலையிலிருந்து வெளியேற்றவோ அல்லது முற்றாக நிறுத்தி வைக்கவோ அனுமதியுள்ளதுடன், இப்படியான உங்கள் செயல்கள் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமுமாகும்" என மேலும் குறிப்பிட்டுள்ளது. இத்தொழிற்சாலையின் முக்கிய உத்தியோகத்தரான மேஜர்.எஸ்.எம்.தனுவில ஆல் கையெழுத்திடப்பட்ட இக்கடிதத்தின் பிரதி ஒன்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவால் நியமிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளரான பிரிகேடியர்.சரத் முனசிங்க விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதைவிட நிர்வாகம் 11 விதிகளையும், 55உபவிதிகளையும் கொண்ட தனது சொந்த ஒழுங்குவிதிகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்கீழ் சுவரொட்டி ஒட்டுதல், பிரசுரம் விநியோகித்தல், நிதிசேகரித்தல், அனுமதியின்றி கூட்டம்கூடுதல் போன்றவற்றை தடைசெய்துள்ளதுடன், இதை மீறுவோர்மீது "கடுமையான","சிறிய" தண்டனைகள் விதிக்கப்படுமென தெரிவித்துள்ளது.

இராணுவத்தை விட்டோடியவர்களையும் உள்ளூர் அடியாட்களையும் கொண்ட தொழிற்சாலை காவலாளர்கள் பொலிசாரின் உதவியுடன் தொழிலாளர்களை பயமுறுத்திவருகின்றனர். தொழிற்சாலை பிரதான காவலாளியான மேஜர்.அசங்கா சேனதிபதி தனது 8 அடியாட்களுடன் சேர்ந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிகளை தொழிற்சாலையைவிட்டு துரத்தியுள்ளதுடன், வேலைநீக்கம் செய்யப்பட்ட பி.டி.எஸ்.ஜயசிங்கா என்பவரை தாக்கியுமுள்ளனர்.

பெரும்பாலான தொழிலாளிகள் பின்தங்கிய பிரதேசங்களான வடமத்திய மாகாணத்தை சேர்ந்த அனுராதபுரம், பொலநறுவை ,தென்மாகாணமான மாத்தறை போன்றவற்றிலிருந்தும் வந்தவர்களாவர். ISIN நிதி, வரிச்சலுகைகளை கொண்ட இந்தோனேசிய கூட்டு நூல் தயாரிக்கும் தொழிற்சாலையாகும்.

இதன் தொழிலாளர்கள் மாதம் 3000ரூபா சம்பளம் பெறுவதுடன், அண்மையிலுள்ள வீடுகளிலோ அல்லது மோசமான நிலையிலுள்ள தொழிற்சாலை விடுதிகளிலோ தங்கியுள்ளனர். தொழிற்சாலை நிலைமை மிகமோசமாக உள்ளது. தொழிற்சாலையினுள் மிக சத்தமாக உள்ளதாகவும், காற்றில் தூசிகளுடன் பருத்திதுகள்களும் சேர்ந்து தம்மை நோயாளராக்குவதாக தொழிலாளர்கள் முறையிட்டுள்ளார்கள். பாதுகாப்பிற்கு அணியும் முகமூடிகள் வழங்கப்படுவதில்லை.

தொழிலாளர்கள் வேலைக்குத் திருப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது தொடர்பாக ஆத்திரமுற்றுள்ளனர். "வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர் தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமடைந்து இருப்பதாகவும், நிர்வாக ஒழுங்கு விதிகளாலும், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட கடிதமும், அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால விதிகளால் தொழில் வழங்குனர் மேலும் பலமடைந்துள்ளதை காட்டுவதாக" வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"இவ்யுத்தம் இனிமேல் தேவையில்லை. அவர்கள் யுத்தபிரதேசத்தில் ஆட்சி செய்வதுபோல் தொழிலாளர் மீது தாக்குதல் செய்யப்போகிறார்கள். இன்று தொழிலாளர்கள் எதிர்நோக்கும் கடுமையான சட்டங்களுக்கு தொழிற்சங்கங்களே காரணம். ஸ்ரீவர்த்தன எங்களை சந்தித்து நாங்கள் எதிர்நோக்கும் அபாயங்கள் தொடர்பாக பேசப்போவதில்லை. அவர் தொழிலாளர்களை சந்திக்கப்போவதில்லை. நாங்கள் இத் தொழிற்சங்கத்தினை நம்பவில்லை." என இளம் தொழிலாளி ஒருவர் கூறினார்.

இன்னுமொரு தொழிலாளி "வேலை நிறுத்தத்தின் போது எமக்கு அயலவர்கள் உணவும் இருப்பிடமும் தந்து உதவினார்கள். தொழிற்சங்கத் தலைமையிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அவர்கள் ஒடுக்குமுறை சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அவர்கள் தொழில் வழங்குனர்களினதும், தொழில் ஆணையாளரினதும், அமைச்சரினதும் கருத்தினையே பிரதிபலிக்கின்றனர். ஸ்ரீவர்த்தன எங்களுக்கு அறிவிக்காமலே தொழில் வழங்குனர்களுடனும், அமைச்சரவையுடனும் இணங்கி இப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்துள்ளார். இப்படியான மோசமான முறையில் வேலைநிறுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டமையால் தொழிற்சங்கத்தலைவர்கள் தொழில் வழங்குனர்களிடமிருந்து கைலஞ்சம் பெற்றுள்ளார்களென தொழிலாளர்கள் சந்தேகப்படுகின்றனர்.

IGDP இலும் இதேமாதிரியான நிலைமையே காணப்படுகின்றது. சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வேலைநீக்கம் செய்யப்பட்ட 4 தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறு கோரி 214 தொழிலாளர்கள் மார்ச் மாதத்திலிருந்து வேலைநிறுத்தத்தில ஈடுபட்டிருந்தார்கள். மார்ச் 9ம் திகதி அவர்கள் வேலைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட போது தொழிற்சாலை நிர்வாகியான பிராங் அமரசிங்க "நீங்கள் மீண்டும் வேலைக்கு வந்தால் நாய்கள் போல் வேலை செய்ய வேண்டியிருக்குமென" குரைத்தான். வேலைக்கு திரும்பி 24 மணித்தியாலத்தின் பின்னர் 57 தொழிலாளர்களை ஆள்குறைப்பு செய்வதாக நிர்வாகம் அறிவித்தது. இது வேலைநிறுத்த காலகட்டத்தில் ஏற்பட்ட இழப்பை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்திலேயே என கூறப்பட்டது. இவ் இடைநிறுத்தப்பட்ட தொழிலாளிகள் வேலைநிறுத்த காலகட்டத்தில் மிக தீவிரமாக இயங்கியவர்களாவர். தொழிற்சாலையினுள் மதிய இடைவேளைக்கான நேரம் அரை மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளதுடன் உணவுக்காக வெளியே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பொலிசார் தொழிற்சாலைக்கு சென்று நான்கு பேருக்குமேல் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பயமுறுத்தியுள்ளனர்.

ஒருதொகை தொழிலாளர்கள் ACMIWU இல் இருந்து வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்டமைக்காக விலகியுள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்த இன்னுமொரு தொழிற்சங்கத்தை உருவாக்கியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி தொடர்பாக ஏற்கனவே சாதகமற்ற கருத்து நிலவிவருகின்றது. ஏனெனில் இவர்களது தொழிற்சங்கம் IGDP இன் இன்னொரு கிளையில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ளது. தொழிற்சங்க கிளை நிறுவும் கூட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட 57 பேர் தொடர்பாக எதுவும் கூறாததோடு தொழிலாளர்களை இனிமேல் வேலைநிறுத்தம் செய்ய வேண்டாமென கூறினர்.

இன்னுமொரு தொழிலாளி "மே 2ம் திகதி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எம்மை காட்டிக்கொடுப்பதற்காக எமது கிளை பிரதிநிதி கலந்துகொள்வதை ஸ்ரீவர்த்தன தடைசெய்தார். தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடவிரும்பவில்லை. தொழிற்சங்க தலைவர்கள் காட்டிக்கொடுக்காவிட்டால் நாம் இப்போதும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்போம். இவ் அவசரகால விதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே. அண்மையில் கைத்தொழில் அமைச்சர் இவ்விதிகள் தொழிலாளர்ளுக்கு எதிராக பிரயோகிக்கப்படமாட்டாது என கூறியிருந்தார். அப்படியானால் அவர்கள் ஏன் இன்னும் நீக்கவில்லை?" என குறிப்பிட்டார்.

ஏனைய தொழிலாளர்கள் களிமண் பாத்திரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை எவ்வாறு அத்தியாவசிய சேவையின் கீழ் வரமுடியுமென ஸ்ரீவர்த்தனாவிடம் கேட்டபோது, அதற்கு அவர் இத்தொழிற்சாலை மூலம் அந்நியச்செலாவணி பெறப்படுவதால் அத்தியாவசிய சேவையின் கீழ் உள்ளது, அதற்கு எதிராக போராடக்கூடாதென பதிலளித்தார்.

IGDP இல் 3800-4500 ரூபா வரை சம்பளம் வழங்கப்படுகின்றது. பின்தங்கிய கிராம புறங்களிலிருந்து கொழும்பு வரும் தொழிலாளர்கள் இதனூடாக தமது குடும்பங்களை பராமரிக்கின்றனர். தங்களது சொந்த செலவுகளை சமாளிக்க முடியாமலும், நீடித்த வேலை நிறுத்தம் காரணமாகவும் அவர்களால் தமது வாடகையைக் கூட செலுத்தமுடியாதுள்ளது.

ஒரு பெண் தொழிலாளி தொழிற்சங்கத்தைப் பற்றி பின்வருமாறு, "யுத்தத்தைக் காட்டி மக்களை அமைதிப்படுத்துவது என்பது அரசாங்கத்தினதும் முதலீட்டாளர்களினதும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே" என சரியாகக் கூறினார்.

 

 

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved