Vote “no” on the California recall. Vote John Christopher Burton for governor, for a socialist solution to the crisis
 

30 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

John Christopher Burton1. அக்டோபர் 7ம் தேதி திருப்பியழைத்தல் தேர்தலை புஷ் நிர்வாகத்திற்கும், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் போர் கொள்கைகள், சமுக பிற்போக்கு கொள்கைகள் ஆகியவற்றிற்கு சூடு கொடுக்கும் வாய்ப்பாக பயன்படுத்துமாறு கலிஃபோர்னிய உழைக்கும் மக்களுக்கு சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க) அழைப்பு விடுக்கின்றது. ஐனநாயக நெறிமுறைகளை கவிழ்ப்பதற்காக, பெரு நிறுவன உயர் செல்வந்தத்தட்டின் நலன்களுக்காக, குடியரசுக்கட்சி மேற்கொண்டுள்ள முயற்சியான கவர்னர் கிரே டேவிசை (Gray Davis) திருப்பியழைத்தல் வாக்கிற்கு ``வேண்டாம்`` என வாக்கிட்டு அதை முறியடிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதே நேரம் டேவிஸிற்கோ, துணை கவர்னர் புஸ்டமன்ட்க்கோ அல்லது ஜனநாயகக் கட்சியின் வேறு எந்தப் பிரதிநிதிக்குமோ நாங்கள் அரசியல் ஆதரவு கொடுக்கவில்லை. திருப்பியழைத்தல் வெற்றி பெறுமேயானால், இரண்டு பெரு முதலாளிகளின் கட்சிகளோடு தொடர்புடைய வேட்பாளர்களுக்கு பதிலாக, ஒரு சோசலிச மாற்று கொடுப்பதற்காக வாக்கெடுப்பில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் குடியுரிமை வழக்குரைஞரும், சோ.ச.க ஆதரவாளருமான, ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2. கலிஃபோர்னிய திருப்பியழைத்தல் தேர்தல், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் கொண்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள சமுக நெருக்கடி முன்னொருபோதும் இல்லாதளவு பரிணாமங்களை உடையது: ஒரு புறம் மாபெரும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை, திவாலாகிவிட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், பெரும் வானளாவிய வீட்டு வசதிச் செலவினங்கள், பெருகிவரும் வேலையின்மை, வறுமை, பெரும்பாலான மக்களின் சரிவுறும் வாழ்க்கை நிலைமைகளும் மறுபுறம் உலகில் பணக்கார நாட்டின் மிகப் பணக்கார மாநிலம், வியத்தகு அளவில் பெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளான (CEO) செல்வத்தட்டுக்கள், வங்கியாளர்கள், பில்லியனர்கள் ஆகியோரிடையே செல்வக்குவிப்பும் ஆகும். சிலிகன் பள்ளத்தாக்கின் ஒரு நபர், Oracle CEO, லாரி எல்லிசன் மட்டும் தனிப்பட்ட முறையில் 2000-ல் கொண்ட வருமானம் 58 பில்லியன் டாலர்கள் ஆகும். மாநில வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை ஈடு செய்ய இது ஒன்றே போதும்.

3. இந்த தனியார் செல்வத் திரட்சிக்கும், பரந்த பொது மக்களின் தேவைக்குமிடையே உள்ள கடுமையான முரண்பாடுகளின் முன்னர், திருப்பியழைத்தலின் இலக்கான டேவிஸ் தானும், அவருக்குப்பின் பதவியைப் பெறக்கூடும் ஜனநாயகக் கட்சியின் புஸ்டமன்டே, குடியரசுக் கட்சியின் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெக்கர், டொம் மக்களின்டக், பீட்டர் உபிரோத் ஆகிய ``பிரதான`` வேட்பாளர்கள் நெருக்கடியின் சுமை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் ஏற்றப்படவேண்டும் என்று ஒப்புக்கொள்கின்றனர். வரவு செலவுத்திட்ட வெட்டுக்கள், கட்டணங்கள், சுமத்தப்படவேண்டிய நுகர்வோர் வரிகள், இவற்றின் சரியான கலவையைப் பற்றி அவர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்; ஆனால் இவர்களில் எவருமே செல்வந்தரின் உடைமைகளிலும் வருமானங்களிலும் குறிப்பிடத்தக்க குறைப்பு வேண்டும் என்று முன்மொழிபவர்கள் அல்ல. இறுதி ஆய்வில், சாதாரண மக்களின் நலன்களைப் பாதுகாப்பது பற்றிய அவர்களின் வாயரற்றல் இருந்தபொழுதும், அவர்கள் அனைவரும் செல்வந்தத்தட்டினைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாப்பவர்கள்.

4. கலிஃபோர்னிய நெருக்கடி சாக்ரமென்டோவில் டேவிஸ் நிர்வாகத்தின் தோல்வியை விடவும் மேலானதொன்றைக் குறிக்கிறது. வோல்ட் ஸ்ரீட், ராட்சத ஆற்றல் நிறுவனங்கள், பெருநிறுவன உயர் செல்வந்ததட்டு ஆகியோரால், உத்திரவிடப்படும் டேவிஸின் கொள்கைகளை, வாஷிங்டனில் புஷ் நிர்வாகத்தின் ª£கள்கைகளிலிருந்தும், உலக அளவில் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியிலிருந்தும் பிரிக்க முடியாது. உலக முதலாளித்துவ அமைப்பின் மையத்திலேயே உள்ள இலாப அமைப்புமுறையின் தோல்வியை கலிஃபோர்னியாவில் உள்ள நெருக்கடி விளக்கிக் காட்டுகிறது. உழைக்கும் மக்களின் தேவை, மற்றும் சமுதாயம் முழுவதின் நலன்கள் ஆன வறுமையை ஒழித்தல், வேலை செய்ய முடிந்தோர் அனைவருக்கும் நல்ல வருமானத்தில் வேலை, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, வாங்க இயலக்கூடிய வசதியுள்ள வீடுகள், புதிய பள்ளிகள், கல்விக்கான கூடுதல் செலவுகள், பாதுகாப்பான ஓய்வு வாழ்வு, வயதானோருக்கு உடல் நல பாதுகாப்பு - இவையனைத்தும் தடையற்ற தனிநபர் செல்வக்குவிப்பை அடிப்படையாகக் கொண்ட கொண்ட பொருளாதாரத்தோடு இயைந்து இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

5. கிரே டேவிஸ் திருப்பியழைக்கப்பட்டு, புஸ்டமன்டோ, ஷ்வார்ஸ்நெக்கரோ அவருக்காக பதிலீடு செய்யப்பட்டாலும் கூட, உழைக்கும் மக்கள் மீதான புதிய தாக்குதல்கள் தொடர்வதற்கான அரங்குதான் அமைக்கப்படும். திருப்பியழைத்தல் முயற்சியில் தப்பினாலும், டேவிசினால் கூட, அவருடைய தீவிர வலதுசாரி எதிர் அணியால் திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து கணிசமான அளவு மாறுபட்ட பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்த முடியாது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு உகந்த முன்னேற்றகரமான தீர்வுகள் எவற்றையும், நிலவுகின்ற இந்த இருகட்சி அமைப்பு முறைக்குள்ளே சாதிக்க இயலாது. எனவே, திருப்பியழைத்தல் பிரச்சாரம், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி இரண்டிற்குமே எதிரான மற்றும் அவை இரண்டும் பாதுகாக்கின்ற இலாப அமைப்பு முறைக்கு எதிரான, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பரந்த அரசியல் இயக்கத்தை அமைப்பதற்கான திசையில், புறப்பாட்டுப் புள்ளியாக இருந்தாக வேண்டும். அத்தகைய இயக்கம், பெருநிறுவன செல்வந்தத் தட்டினரிடமிருந்து செல்வத்தை, மக்கள் தொகையினரில் பெரும்பான்மையரான தொழிலாள வர்க்கத்திற்கு மறுபங்கீடு செய்யப் போராடியாக வேண்டும், மற்றும் பொருளாதார வாழ்வை உண்மையான சமத்துவ, சோசலிச அஸ்திவாரங்களில் மறு ஒழுங்கு செய்வதற்காக கட்டாயம் போராட வேண்டும்.

6. இந்தத் திருப்பியழைத்தல் தேர்வை, சாக்ரமென்டோவிலும், வாஷிங்டனிலும் நிலைகொண்டிருக்கும் வலதுசாரி அரசியல் ஒருமித்த உணர்வின் மீதான வாக்கெடுப்பாக மாற்றுமாறு, சோ.ச.கவும் நம்முடைய வேட்பாளர் ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனும் கலிஃபோர்னிய உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதன் அர்த்தம், முக்கிய பிரச்சினைகளான வரவு செலவுத் திட்டங்களில் வெட்டு பற்றியவை, வாழ்க்கைத்தரத்தை, வேலைகளை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் மட்டுமன்றி ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தையும் கருத்திற்கொள்ள வேண்டும். ஈராக்கிலிருந்தும், ஆப்கானிஸ்தானத்திலிருந்தும், முழு மத்திய கிழக்குப் பகுதியிலிருந்தும் அமெரிக்கப் படைகள் உடனடியாகத் திரும்பப்பெறவேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. ஈராக்கில் நடத்தும் போர், மத்திய கிழக்கு, மத்திய ஆசியப் பகுதிகளை மேலாதிக்கம் செய்வதற்கு இயற்கை வளங்களையும் மூலோபாய நிலைகளையும் கைப்பற்றி, தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் முயற்சியாகும். இது ஒரு எண்ணெய், லாபம், அதிகாரம் இவற்றைக் கைப்பற்றுவதற்கான போராகும், பயங்கரவாதத்திலிருந்து அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவதற்கான போர் அல்ல.

7. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் தனது ஆதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ள, இராணுவ பலத்தை ஒரே வழியாகக் கருதும், பெருநிறுவன செல்வந்த தட்டின் ஒரு கன்னையை (பகுதியை) த்தான் புஷ், செனி அண்ட் கோ பிரதிநிதித்துவம் செய்கிறது. போர் தொடங்குவதற்கு முன் புஷ் கையாண்ட உத்திகளில் எப்படிப்பட்ட வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், ஜனநாயக கட்சியானது இப்பொழுது ஈராக்கில் தொடர்ந்திருக்கும் ஆக்கிரமிப்பையும் ஈராக்கிய மக்கள் மீதான இராணுவ ஆதிக்கத்தையும் ஆதரிக்கிறது. பசுமைக் கட்சிகள் பெயரளவிற்குப் போரை எதிர்த்தாலும், கலிஃபோர்னியத் தேர்தலில் அது தேவையற்றது என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க அரசாங்கம் ஆண்டு ஒன்றுக்கு 500 பில்லியன் டாலர்களை இராணுவச் செலவிற்காகக் கொட்டிக்கொண்டிருக்கும் நிலையில், ஈராக்கில் ஆக்கிரமிப்பைத் தொடர ஆண்டு ஒன்றுக்கு தொடக்கத்தில் 75 பில்லியன் டாலர்களை செலவழிக்கும்போது-- இந்த எண்ணிக்கை அனைத்து மாநிலங்களின் கூட்டுப் பற்றாக்குறைத் தொகையை விட அதிகமானது-- கலிஃபோர்னிய நிதி நெருக்கடி தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புவது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் தன்மையே ஆகும்.

8. வியட்நாம் அளவிலான துன்பியல் கதை வளர்ந்து கொண்டிருக்கிறது. தமது மகன்களும், மகள்களும் தேவையின்றிக் கொல்லப்படுவது மட்டுமின்றி, வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியும் தோன்றும் அளவிற்கு அமெரிக்க மக்கள் இந்தப் போரினால் பாதிக்கப்படுவர். 1960களைப் போலவே ``துப்பாக்கிகளும் வெண்ணெயும்`` என்ற கொள்கை தொடருவது முடியாமல் போய்விடும். 30 ஆண்டுகளுக்குமுன் வியட்நாம் போர் ``ஏழ்மையின் மீதான`` போரை நிறுத்தி அமெரிக்கப் பொருளாதாரத்தின் நீண்டகாலச் சரிவை இயங்க வைத்தது. இன்று, சமுக சீர்திருத்தங்கள் பற்றிய தாராளக் கொள்கைகள் எப்பொழுதோ கைவிடப்பட்ட நிலையில், புஷ்ஷின் போர்வெறி என்பது உள்நாட்டில் வேலைகள் மீதும், வாழ்க்கைத் தரத்தின் மீதும், சமுதாய பணிகள் மீதும் கூடுதலான தாக்குதல்களை அர்த்தப்படுத்தும். மொத்த இராணுவச் செலவினம் ஏற்கனவே ஒவ்வொரு அமெரிக்க ஆண், பெண், குழந்தை தலையிலும் 2000 டாலர்கள் என்ற அளவிற்குப் போய்விட்டது. பெருமளவு வளங்கள் எல்லைப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்கும், குற்றமற்ற மக்களைக் கொல்வதற்கும் வீணடிக்கப்படுகின்றன. இந்த வளங்கள் உள்நாட்டு சமுக தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

9. இராணுவவாதம், ஏகாதிபத்தியப்போர் என்ற கொள்கையானது, தவிர்க்க முடியாதவகையில் உள்நாட்டு அடக்குமுறையோடும், ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுவதோடும் இணைந்து செல்லும் நிலையை ஏற்படுத்தும். ``பயங்கரவாதத்தின் மீதான போர்`` என்று அழைக்கப்படும் இப்போரின் பெயரால், புஷ் நிர்வாகம் அரசியலமைப்பு உத்தரவாதங்களைக் குறைத்து, போலீஸ் அரசுக்கு சட்ட ரீதியான மற்றும் நிறுவனபூர்வமான கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு துறையில் பொதிந்துள்ள, அமெரிக்க தேசபக்த சட்டம், குவண்டானமோ கடூழியச் சிறை முகாம், இராணுவ நீதிமன்றங்கள், காலவரையற்ற கைதும் காவல் வைப்பும், விசாரணை இல்லாதவை அல்லது வழக்குரைஞர் இல்லாதவை, குடிமகன்கள் மற்றும் குடிமகன்கள் அல்லாதோர் வேறுபாடு ஆகியவற்றிற்கு அனைவரையும் உட்படுத்தியது அமெரிக்க வரலாற்றிலேயே ஜனநாயக உரிமைகள் மீதான கடும் விளைவுகளை ஏற்படுத்தும் தாக்குதல்களாகும்.

10. ஒரு தனிமனிதனின் தவறான நிர்வாகத்தால் விளைந்தது என்று கூறக்கூடிய ஒரு தனித்த விசேடமான சம்பவத்தை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதைவிட, கலிஃபோர்னிய பட்ஜெட் பற்றாக்குறையை, அமெரிக்க சமுதாயத்தின் பரந்த அளவிலான நெருக்கடியின் பகுதியாகக் கொள்ளவேண்டும். 38 பில்லியன் டாலர்கள் மாநில பற்றாக்குறை வரவு செலவுத்திட்டமானது, மத்திய அரசாங்கத்தின் 455 பில்லியனோடு, 500 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வர்த்தக சமநிலைப் பற்றாக்குறை, மற்றும் மகத்தான பெரு நிறுவன அமைப்புடைய அமெரிக்காவின் பொதுவான கடன் நிலையோடும் ஒப்பிடும்போது சிறிய அளவுடையதாகிறது. இந்த பாரிய ஸ்திரமின்மை இலாப அமைப்பு முறையின் வரலாற்று ரீதியான உடைவின் விளைபொருளாகும்.

11. என்ரோன் போன்ற சக்தி ஏகபோக உரிமை நிறுவனங்கள் மாநிலத்தைச் சூறையாடியது போன்ற தனித் தன்மைகொண்ட கலிஃபோர்னிய நெருக்கடி, அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரங்களைப் பாதிக்கும் பரந்த வழி வகைகளோடு கட்டுண்டிருக்கிறது. ஆகஸ்ட் 14-15 ல் வடகிழக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட இருட்டடிப்பில் இது தெளிவாக விளக்கிக்காட்டப்பட்டது, அது ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்தியது: அமெரிக்க மக்களுடைய நலன்களுக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் பயங்கரவாதக் குழுக்களாலோ அல்லது "போக்கிரி அரசுகளாலோ" அல்ல; அவை அராஜக இயல்புடைய இலாப அமைப்பு முறை மற்றும் மாபெரும் பெரு நிறுவனங்களை நடத்துபவர்களின் பங்கிற்கு தன் சொந்த செல்வத்தைப் பெருக்கும் சுயநலப் போக்கு இவற்றிலிருந்தே வருகின்றன.

12. தன்னுடைய பணியின் ஆரம்ப இடமாக, உழைக்கும் மக்களின் தேவைகளைத்தான் சோ.ச.க கொள்கின்றதே அன்றி, இலாப அமைப்பு முறையின் தேவைகளை அல்ல. கலிஃபோர்னிய மற்றும் ஒட்டு மொத்தமாக அமெரிக்க நெருக்கடியானது சமுதாயத்தின் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பில் புரட்சிகர மாற்றங்களை வேண்டி நிற்கிறது என மூடிமறைக்காமல் நாம் கூறுகின்றோம். சுமார் 250 மில்லியன் தொழிலாள வர்க்க அமெரிக்கர்களின் அடிப்படை தேவைகளை, தன்னுடைய பொருளாதார நலன்களைக் காக்கவும், செல்வத்தை அதிகரிக்கவும் உத்தரவாதம் செய்வதற்கு அரசியல் அதிகாரத்தை ஏகபோகம் கொள்ளும் ஒரு சிறிய கார்ப்பொரேட் மற்றும் நிதிய செல்வந்த தட்டிற்கு கீழ்ப்படுத்தப்படக்கூடாது.

ஜனநாயகமும் திருப்பியழைத்தல் பிரச்சாரமும்

13. நவம்பர் 2002ல், டேவிஸ் இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாரங்களுக்குள்ளேயே, ஒரு சிறிய தீவிர வலதுசாரிக்குழு, திருப்பியழைத்தல் முயற்சிக்காகக் கையெழுத்துக்களை சேகரிக்க ஆரம்பித்தது. குடியரசுக் கட்சியின் தேசிய சட்டமன்ற உறுப்பினர் Darrell Isa திருப்பியழைத்தல் முயற்சிக்காக தன்னுடைய 100 மில்லியன் டாலர்களுக்கும் கூடுதலான செல்வத்திலிருந்து, செலவு செய்யத்தள்ளப்படும் வரைக்கும் இந்த முயற்சிகளால் அதிக பலன் ஏற்படவில்லை. தன்னை டேவிசுக்குப்பின் பதவிக்கு வரப்போகிறவர் என்று அறிவித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான முழு நேர மனு கொடுப்போரை வாடகைக்கு அமர்த்தி, ஒரு கையெழுத்துக்கு 1 டாலர் என்ற அடிப்படையில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி, கிட்டத்தட்ட 3 மில்லியன் அளவு இறுதியாக செலவழித்தார். ஒரு திருப்பியழைத்தல் வாக்கெடுப்பை கட்டாயமாக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் தேவைப்பட்டதேயொழிய, மில்லியன் கணக்கில் வாக்காளர்கள் அல்ல.

14. நேரடி ஜனநாயக முறையாக வளராமல், திருப்பியழைத்தல் முயற்சி, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, செல்வந்த தனி மனிதர்களாலும் பெருநிறுவன நலன்களாலும் அரசியல்வாதிகள் ஊழல்மயமாவதை தடை செய்யும் வகையில் இயற்றப்பட்ட திருப்பி அழைக்கும் நடைமுறையின் உண்மையான நோக்கத்திற்கு முற்றிலும் ஏறுமாறான வழியில் வளர்ந்தது. 2003 திருப்பியழைத்தல் முயற்சி, தேர்தலின் முடிவுகளை விரும்பாத, ஏற்காத, அதி வலதுசாரி கோடீஸ்வரர், அதை மாற்றுவதற்காக தன் செலவில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு வாகனமாயிற்று. இந்த அரை அரசியற்சட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி, கலிஃபோர்னிய வாக்காளர்கள் 2002 தேர்தலில் தீவிர வலதுசாரியினரின் திட்டத்தை நிராகரித்த சில மாதங்களுக்குள்ளாகவே, பொதுக் கொள்கையில் புதிய தீவிர மாறுதல்களைக் கொண்டுவர தொடக்கப்பட்டது.

15. தொடர்ச்சியாக, பரந்த பொது எதிர்ப்பிற்கு எதிராக, பின்புறச்சதி மற்றும் பெரு நிதிவளங்கள் இவற்றின் வழிமுறைகளைப் பயன்படுத்தி, தங்கள் அரசியல் செயற்பட்டியலின் மூலம் நிர்பந்திக்கும் தீவிர வலதுசாரி சக்திகளால் எடுக்கப்படும் முயற்சியின் தொடர்ச்சியை கலிஃபோர்னியா திருப்பியழைத்தல் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அப்பட்டியலில் கிளின்டன் மீதான பதவி நீக்க விசாரணை சதி, 2000 ஜனாதிபதித் தேர்தல் திருட்டு, டெக்ஸாஸில் தொகுதித் திருத்தம் மூலம் காங்கிரசில் தம் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் ஆகியவை அடங்கியுள்ளன. மற்றவற்றைப் போலவே, திருப்பியழைத்தல் முயற்சியும் தனிமனிதர் செல்வக் குவிப்பு, பெருநிறுவன இலாபங்கள் இவற்றிற்கெதிரான தடைகள் அனைத்தையும் தகர்ப்பதேயாகும்; இந்த செயற்பட்டியலுக்கு பொதுமக்களுடைய ஆதரவு இல்லை என்ற அளவில் ஜனநாயகமுறைக்கு எதிரான தவறான வழிகளைப் பின்பற்றித்தான் திணிக்க முடியும்.

16. ஆயினும், அசாதாரண முறைகளால் அதிகாரத்தைக் கைப்பற்றும், வலதுசாரி முயற்சி, பதவிநீக்க குற்றவிசாரணை போலவே, எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பியழைத்தல் தேர்தலுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்ட உடனேயே, குடியரசுக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு, நடிகர் ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கர் போட்டியில் நுழைந்தவுடன் மிssணீ வே வெளியேற நேர்ந்தது. 2002ல் கட்சியின் கவர்னருக்கான வேட்பாளராக இருந்த, மற்றொரு வலதுசாரி குடியரசுக் கட்சிக்காரரான வில்லியம் சைமன், குறைந்த தேர்தல் எண்ணிக்கையை ஒட்டி விலகி, பொதுமக்களுடைய ஆதரவு தீவிர வலதுசாரியினரின் செயல்பட்டியலுக்கு இல்லை என்பதை நிரூபித்துக்காட்டினார்.

17. கலிஃபோர்னியாவின் தடுப்புக்கள் நிறைந்த தேர்தல் சட்ட முறைகளுக்கு திருப்பியழைத்தல் நடைமுறை மாற்று வழியை விடுக்கிறது. எனவேதான் கவர்னர் பதவியை பிரதியீடு செய்ய, நூற்றுக்கணக்கானவர்கள் தாங்கள் போட்டியிடப்போவதாக அறிவிக்க முடிந்தது. ஒருவேளை டேவிஸை திருப்பியழைக்கும் வாக்கில் அவர் தோற்றால்; 135 பேர் தங்கள் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறத் தகுதிபெறுவர்; சோ.ச.க வேட்பாளர் ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனும் இப்பட்டியலில் அடங்குவார். செய்தி ஊடகங்களும் அரசியல் செல்வந்த தட்டினரும், வாக்குச்சீட்டில் இத்தனை சாமானிய மனிதர்களா என்றும், பணமற்றவர்களும் உத்தியோக ரீதியான அங்கீகாரம் இல்லாதவர்களும் பங்குபெறுகிறார்கள் என்றும், தேர்தல் ஒரு "சர்க்கஸ்" போலாகிவிட்டது என்றெல்லாம் எள்ளி நகையாடினாலும், பொதுவாக தேக்கத்துடனும், ஊழலுடனும், பிரதிநிதித்துவமுறை சாராமலும் இருக்கும் தேர்தலைவிட, இதில் கூடுதலான, துல்லியமான அரசியல் பார்வைகள், சமுக அபிலாஷைகள் ஆகியவை வெளிப்பட வாய்ப்பாகிவிட்டது.

18. நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தில் அரசியல், பெரு நிறுவனப் பூசலாகத் தொடங்கிய திருப்பியழைத்தல் தேர்தல், டேவிசைத் துரத்துவதற்காக இதற்குப் பணத்தை இறைத்த குடியரசுக் கட்சியினருக்கும், அவர்களுடைய ஜனநாயக இலக்குகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்ததுடன், கூடுதலான பரந்த சமூக சக்திகள் தேர்தல் அரங்கில் நுழைய வாய்பாயிற்று. வேட்பாளர் எண்ணிக்கை பெருக்கத்தை, பல தனித்து நிற்பவர்களும் மூன்றாவது கட்சியினரும் நிறைந்து நின்றதை, செய்தி ஊடகம் விரோதப் பார்வையைக் கொண்டு பார்த்தது, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினருக்குள்ளே, இரு கட்சிகளின் அடிபணிந்த நீண்டகால அளவினதான அவர்களின் அரசியல் ஏகபோக உரிமையும் விரைவில் முடிவிற்கு வரலாம் என்ற அதிர்ச்சியையும் பயத்தையும் புலப்படுத்தியுள்ளது.

19. ஆகஸ்ட் 19ம் தேதி நடத்திய உரையில், முதல் முறையாக டேவிஸ் திருப்பியழைத்தல் முறையை, அதிகாரத்தைக் கைப்பற்ற ஜனநாயக விரோத முயற்சியாகக் குடியரசு கட்சி கையாளும் முறை என விவரித்தார். ஆனால் இந்த அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிராக உண்மையான போராட்டம் எதையும் செய்வதற்கு டேவிஸ் திராணியற்று இருக்கிறார். ஜனநாயக கட்சி, வலதுசாரி குடியரசு கட்சியின் கொள்கைகளை அனுசரித்து, தன் கொள்கைகளையும் மாற்றி அமைத்துக்கொண்டதற்கு தக்க சான்றாக இவருடைய ஆட்சியே உள்ளது. மாநில நிதி நெருக்கடிக்கான சுமையை உழைக்கும் மக்களின் முதுகில் ஏற்றுவதற்காக, சுகாதார நலத் திட்டங்களில் வெட்டு, கல்வி, சமூகப்பணிகளில் செலவினக்குறைப்பு, பிற்போக்கான வரிகள் கட்டணங்கள் என்ற போர்வையில் திணிப்பு ஆகியவற்றின் மூலம், நடவடிக்கைகளை இக்கட்சியும் முயற்சித்து வந்திருக்கிறது. இதன் விளைவாக, டேவிஸின் நிர்வாகம் மீதான மக்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வலதுசாரிகள் சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்பளித்து, திருப்பியழைத்தல் முயற்சி வடிவத்தைப் பெற்றது.

20. டேவிஸ் மீது ஏற்பட்டுள்ள பரிவுணர்வால் நாங்கள் இந்த திருப்பியழைத்தல் முறையை எதிர்க்கவில்லை, நியாயமான முறையில்தான் கலிஃபோர்னியா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களால் இவர் வெறுக்கப்படுகிறார். அவரைப் பாதுகாத்துக்கொள்ளவே திருப்பியழைத்தலை ``வலதுசாரிகளின் அதிகார கைப்பற்றும் முயற்சி`` என கண்டனம் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார். ஆனால், அவரோ மற்றய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களோ தேவையான முடிவுகளைப் பெற்றுக் கொள்ளத் தகுதி பெற்றிருக்கவில்லை; புஷ் நிர்வாகம் ஒரு சட்டவிரோதமான அரசாங்கம், குடியரசுக்கட்சி பாசிச சிந்தனையுடைய தீவிரவாதிகளின் ஆதிக்கத்திற்குட்பட்டு, ஜனநாயக உரிமைகள் விரோதச் சதியில் ஈடுபட்டுள்ள நிலையில் உள்ளனர். ஜனநாயக கட்சி இந்த சதியை தீவிரமாக எதிர்க்க முடியாது; ஏனென்றால் இறுதிப் பகுப்பாய்வுகளில் அதே ஆளும் செல்வத் தட்டின் போட்டிப் பகுதியாக உள்ளது.

21. இரண்டு கட்சிகளுமே குறுகிய சமுக அடித்தளத்தை ஆதாரமாக கொண்டவை; அவர்களுடைய வேட்பாளர்கள் எவருமே கணிசமான மக்கள் ஆதரவைக் கொண்டவர்கள் அல்லர். இருகட்சி முறையின் சீரழிந்த மற்றும் பிரதிநிதித்துவம் செய்யாத் தன்மை அரசியல் செயல்பாடுகள் வெடித்த அளவிலும், திருப்பியழைத்தல் தேர்தலில் வேட்பாளர்கள் பெருக்கத்தின் மூலமும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பழைய அரசியல் அமைப்பு முறை மீதான இந்த அரசியல் அதிர்வானது ஆழ்ந்த சமுக காரணங்களைக் கட்டாயமாக கொண்டுள்ளது.

கலிஃபோர்னிய நெருக்கடியின் பின்னணி

22. டசின் கணக்கிலான அமெரிக்க மாநிலங்களைத் திவாலாக்கும் வழிவகையுள்ள பொருளாதார நெருக்கடிக்குக் கடுமையான உதாரணமான கலிஃபோர்னிய வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை நெருக்கடியின் பின்புலத்திற்கு எதிராக திருப்பியழைத்தல் முயற்சி திறந்துவிடப்பட்டிருக்கிறது. பல மாதங்களாக கலிஃபோர்னிய அரசாங்கம், மாநிலச் சட்டமன்றத்தில் 38 பில்லியன் டாலர்கள் பற்றக்குறையை எவ்வாறு சமாளிப்பது என ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் இடையேயான பூசலையொட்டி செயலற்று இருந்தது. ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் சட்டமன்றத்தில் தங்கள் கொள்கையை செயலாக்க முடியாத குடியரசு கட்சியினர், எந்த நடவடிக்கையையும் தடுத்து, நெருக்கடியை நீடிக்கவும் திருப்பியழைத்தல் முயற்சிக்கு எண்ணெய் வார்க்கவும் முனைந்தனர்.

23. இரண்டு கட்சிகளும் தொழிலாளர் வர்க்கத்தின் இழப்பில் தங்கள் நெருக்கடியைத் தீர்க்க முயன்றன. ஜனநாயக கட்சி பொதுநலச் செலவினங்களில் வெட்டையும், வரிவிதிப்பை உயர்த்தவும் திட்டமிட்டனர் --கார் பதிவுக்கட்டணம் மும்மடங்காக்கப்பட்டு விற்பனை வரி உயர்வும் கருதப்பட்டது-- இவை பலமான தொழிலாளர் தலையில் விழும். குடியரசுக்கட்சியினர் எல்லா வரிவிதிப்பு அதிகரிப்பையும் எதிர்ப்பவர்களாக உணர்ச்சி ததும்பக் காட்டிக் கொண்டனர், அதேவேளை கூடுதலான பொதுப்பணிச் செலவீன வெட்டுக்களை கொண்டுவர விரும்பினர். இரண்டு கட்சிகளுமே ஆரம்பத்திலிருந்து பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும், செல்வந்தர்கள் இரு தரப்பையும் நெருக்கடியை தீர்க்க பணம் கொடுக்குமாறு வற்புறுத்தும் எந்த நடவடிக்கையையும் நிராகரித்தனர்.

24. 1978ல் 1978™ Proposition 13 என்ற, கடுமையான முறையில் சொத்து வரிக் குறைப்பை ஏற்படுத்திய வாக்கு முயற்சியைத் தொடர்ந்து, கால் நூற்றாண்டாகவே கலிஃபோர்னியாவில் பட்ஜெட் பற்றாக்குறை நெருக்கடி வளர்ந்துள்ளது. அதுவரை கலிஃபோர்னிய மாநில வருவாயில் சொத்துவரி பெரும் பங்கைக் கொண்டிருந்தது; இன்னும் பல மாநிலங்களில் அரசாங்கம் நடத்த அது அடிப்படையாக உள்ளது. Proposition 13, ஒரு வலதுசாரி முயற்சியின் விளைவாகும் - அந்நேரம் மட்டுமீறிய தீவிரமாகக் கருதப்பட்டதால் ரொனால்ட் றேகன் கூட அதனை அங்கீகரிக்க மறுத்துவிட்டார்; இது மறைமுகமாக கல்வி, பொது சுகாதார நலம், சமுதாயப்பணிகள் இவற்றின் மீது செலவினங்களைக் குறைக்க மறைமுகமாகக் கொண்டுவரப்பட்ட தாக்குதல் முயற்சியாகும்.

25. இந்த Proposition 13ன் வெற்றி, ``வரி செலுத்துவோரின் பெரும் அரசாங்கத்திற்கெதிரான கிளர்ச்சி`` என மக்கள் ஆதரவிற்காக விளம்பரப்படுத்தப்பட்டமை ஜனநாயகக் கட்சியின் தாராண்மைவாதத்தின் விளைவாகும் மற்றும் அனைத்துச் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்தி லாபமுறையை மட்டும் ஏற்ற அதன் கொள்கையின் முட்டுச் சந்தும் ஆகும். 1970களில் `தொழில் பணவீக்க மந்த நிலை` ஒரே நேரத்தில் விலையுயர்வும் பூச்சியம் அளவு பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்ட அளவில், வாழ்க்கைத் தொழில் கொண்ட நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியும் சிறுவணிக உரிமையாளர்களும் உட்பட, அமெரிக்கா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் கசக்கிப் பிழிதல் ஏற்பட்டது; கலிஃபோர்னியாவில் இதையொட்டி நிலைச்சான்று காட்டும் அளவில் சொத்துரிமை வரிகளில் கூடுதலான அளவு பெருக்கம் ஏற்பட்டது -சொத்துக்கள் மதிப்புக்களால் தூண்டிவிடப்பட்டது- இது செயல் நிறுத்தி வைக்கப்படுவதாலும் அல்லது உண்மை ஊதியக் குறைப்பினாலும் அல்லது நிரந்தர ஓய்வூதியம் பெறுவோரின் (இளைப்பாறியோர்) வருமான இழப்பினாலும் சரிக்கட்டப்பட்டது.

26. அப்பொழுது ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கவர்னராக இருந்த ஜெரி பிரௌன் இந்த நெருக்கடியை சமாளிக்க ஒரு முயற்சியும் முயலவில்லை; வலதுசாரி வாய்ச்சவடால் பேர்வழிகள், உயருகின்ற சொத்து வரிகளால் அச்சுறுத்தப்பட்ட மத்தியதர வகுப்பு வீட்டுரிமையாளர், ஓய்வூதியக்காரர்கள் போன்றோரின் நலனைக் காப்போர் என காட்டிக்கொள்ள வழிவகுத்தது. சொத்துவரி உயர்த்தப்படுவதற்கு செய்தி ஊடகமும், இரு பெரிய கட்சிகளின் அரசியல் ஸ்தாபனங்களும் எதிர்த்தபோதிலும், இது எளிதில் நிறைவேற்றப்பட்டது. இந்த Proposition 13 ன் முக்கிய நன்மை பெற்றவர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்களோ, போராடிக்கொண்டிருந்த வீட்டுரிமையாளர்களோ அல்லாமல் பெருஞ் சொத்துக்களை கொண்டிருந்த பெருநிறுவனங்களும், பெரும் செல்வம் படைத்தவர்களும் ஆகும்.

27. 1978 கலிஃபோர்னியாவில் ``வரி கிளர்ச்சி`` இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் றேகன் தேர்தலிலும் கொள்கையிலும் முன் உருப்படுத்திக் காட்டியது- மத்தியதர வகுப்பினரில் ஒரு பிரிவை, தொழிலாளரின் ஏழைப் பிரிவினருக்கெதிராக நிறுத்தி, அடுத்த 20 ஆண்டுகளில் சமூக நலப்பணித் திட்டங்கள் அனைத்தையும் அழித்ததோடு வலதுசாரி குடியரசுக் கட்சியின் அரசியல் அதிகாரத்தை கட்டி எழுப்ப உதவியது. இதே பாணியில்தான், தற்போதைய கலிஃபோர்னிய அரசியல் நெருக்கடி, தேசிய அளவிலான அரசியல் வெடிப்பை முன்நிழலிட்டுக் காட்டுகிறது, அது இரு பெரிய வர்த்தக கட்சிகளின் ஆதிக்கப்பிடியையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

28. 1978க்குப் பின்னர் சில ஆண்டுகள் பொதுமக்களின் வாக்குகளின் மூலம் பொதுக் கொள்கைகள் கலிஃபோர்னியாவில் மேற்கொள்ளப்பட்டன. சில, தீவிர வலதுசாரிகளாலும், பெருவர்த்தகத்தாலும் கொண்டுவரப்பட்டவை; அரசாங்கத்தின் வரிவிதிக்கும் அதிகாரங்களுக்கு புதிய தடைகளை ஏற்படுத்தின. மற்றையவை ஜனநாயகக் கட்சி அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவம் உட்பட, அதனுடன் இணைந்த குழுக்களால் கொண்டுவரப்பட்டவை, சுகாதாரப் பாதுகாப்பு, பொதுப்பள்ளிகள், மற்றய திட்டங்களுக்கு செலவழிப்பது குறிப்பிட்ட வரம்பிற்குள்தான் என அவை வரையறுத்தன. இதன் விளைவாக அரசாங்கத்தில் 80 சதவிகித வருமானமும் செலவும் வாக்காளர் ஆணையினாலும் மற்ற அரசியலமைப்பு திருத்தங்களாலும் கட்டுப்படுத்தப்பட்டு, சட்டமன்ற நடவடிக்கையின் அதிகாரவரம்பிற்கு அப்பால் உள்ளன. மாநில சட்டமன்றம், அனைத்து விருப்பச் செலவினங்களையும் ஒதுக்கினாலும், தற்போதைய பட்ஜெட் பற்றாக்குறை நெருக்கடியில், வசதிகள் குறைப்பு, வேலைகள் இழப்பு, சம்பளத்தில் வெட்டு போன்றவற்றால், அப்படியும் மாபெரும் பற்றாக்குறை நிலை காணப்படும்.

29. 1990களில் சில காலம், இந்த வரிகளுக்கும், செலவழிக்கும் ஆணைகளுக்கும் இடையேயான இயல்பான பூசல், பங்குச்சந்தை பூரிப்பால் விளைந்த வருவாயால், குறிப்பாக வட கலிஃபோர்னியாவில் கணினி மற்றும் மென்பொருள் தொழில்துறை வளர்ச்சியால் மறைக்கப்பட்டிருந்தது. கிரே டேவிஸ் முதலாவது பதவிக் காலத்தின்போது, 1999-ல் தொடங்கி வளர்ச்சியுற்ற மாநில வருவாய் ஆனது Proposition 13ன் தடைகளையும் அதேபோன்ற மற்ற நடவடிக்கைகளையும் மீறாமல், பொதுப்பணிகள் செலவைத் தக்கவைக்கவும் உயர்த்தவும் கூட செய்ய வைக்க முடிந்தது.

30. ஆனால் டேவிஸின் தேர்தலுக்கு முன்பே, பணப் பூரிப்பை கீழறுக்கும் சக்திகள் செயல்படத் தொடங்கிவிட்டன. 1997-98ன் ஆசியப் பொருளாதார நெருக்கடி, கலிஃபோர்னியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையைத் தாக்கியதைத் தொடர்ந்து, 2000ல் டாட்கொம் குமிழியின் சரிவையும் ஏற்படுத்தி சிலிகன் பள்ளத்தாக்கை அழித்து, 2001ல் மாநில மற்றும் தேசிய அளவில் பொருளாதாரப் பின்னடைவை ஆரம்பித்து வைத்ததில் முடித்தது. கலிஃபோர்னியாவைப் போல் வேறெங்கும் காகிதச் சொத்தின் முடிவு தீமை விளைவிக்கவில்லை. நாட்டின் பெரிய மாநிலத்தின் வருவாய் பெருமளவு வருமானத்திலும், மூலதன அதிகரிப்பின் மீதான வரிகளிலும் நம்பியிருந்ததால், மாநில வரவு செலவுத் திட்டம் விரைவில் பற்றாக்குறைக்குள் மூழ்கியது.

31. இந்த நெருக்கடி கலிஃபோர்னிய மக்களை முறையாகக் கொள்ளையடித்த பாரிய சக்தி நிறுவனங்களால், குறிப்பாக என்ரோன் போன்றவற்றால் அதிகப்படுத்தப்பட்டது. டேவிசுக்கு முந்தையவரான குடியரசுக்கட்சி கவர்னர் பீட் வில்சனால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் இயற்றப்பட்டு, டேவிசின் கீழ் தொடரப்பட்டு, சக்தி நிறுவனங்கள் சந்தையை தவறாகப் பயன்படுத்தி, பங்கு விலையை ஆகாய அளவுக்கு உயர்த்தி, லாபங்களை பில்லியன் கணக்கில் பெருக்கின. சக்தி நெருக்கடியினால் கலிஃபோர்னிய மக்கள் கொண்ட இழப்பு 40 பில்லியன் டாலர்களுக்கு மேலாகவும், அரசாங்கத்திற்கு மட்டும் 10 பில்லியன் டாலர்களாகவும் ஆயிற்று; இதையொட்டி உபரி வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறையில் தடுமாறி விழுந்தது.

32. மாநிலத்தின் நெருக்கடி புஷ் நிர்வாகத்தின் கொள்கையால் மேலும் உக்கிரமடைந்தது; இதையொட்டி, மாபெரும் பொருளாதார தாழ்விற்குப் பின்னர் சமூகச் செலவினங்கள் குறைக்கப்பட்டு, வேலைகள் இழப்பு, பொதுப்பணிக் குறைப்பு இவற்றைக் கொண்டு வந்தன. இந்த ஆண்டின் வரி வெட்டுச் சட்டம், 700 பில்லியன் டாலர்களை பண முதலைகளின் பெட்டியில் கொட்டியது (2001ல் ஏற்கனவே கொடுக்கப்பட்ட $1.6 டிரில்லியன் டாலர்களைத்தவிர), மாநில அரசுகளுக்கு மானியமாக 20 பில்லியன் டாலர்கள் அற்பத்தொகை அளிக்கப்பட்டது; கலிஃபோர்னியா மட்டும் மத்திய உதவித்தொகையைப் போல் இரண்டு மடங்கு பற்றாக்குறையைக் கொண்டுள்ளது.

முதலாளித்துவத்தின் வரலாற்று முரண்பாடுகள்

33. தற்போதைய நெருக்கடியை சாதாரணமாக அல்லது அடிப்படையாக சமீப பங்குச் சந்தை வித்தைகள், பெரு நிறுவன நிர்வாக அதிகாரிகளின் குற்றங்கள், ஏன், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள், ஆகியவற்றின் விளைவு என்று கூட கருதுவது தவறாகிவிடும். இக்காரணிகள்தாமே ஆழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளின் விளைவாகும். கலிஃபோர்னிய அரசு அமெரிக்காவின் பல அரசியல் அதிகாரவரம்பினுள் ஒன்று மட்டும் அல்ல; அது மிகவும் செறிவான முறையில், அமெரிக்க, மற்றும் உண்மையில் உலக முதலாளித்துவ முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகளின் வெளிப்பாடு ஆகும்.

34. கலிஃபோர்னியா என்பது என்ன? இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கனவை எந்த மாநிலமானது வெளிப்படுத்தியது என்றால், அது கலிஃபோர்னியாதான்; அமெரிக்காவின் தொலை மேற்கத்தியப் பகுதியில் எழுச்சியுற்ற இம்மாநிலம், நாட்டிலேயே அதிக மக்கள் தொகையையும், திறனாற்றல் மிக்கதாயும், செல்வாக்குடையதாகவும் ஆகியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பலகாலம் அமெரிக்க மக்கள் மேற்கு கடற்கரைப் பகுதிக்கு சளைக்காமல் வந்தனர், கலிஃபோர்னியா முக்கிய இலக்காக இருந்தது. ஹாலிவுட், சிலிகான் பள்ளத்தாக்கு, மிகப்பெரிய விண்வெளி தொழில்துறை, உலகிலேயே கூடுதலான வேளாண்மை உற்பத்தி நிறைந்த இடம், பசிபிக்கைத் தாண்டி வளரும் அமெரிக்க வர்த்தகத்திற்கு குவிப்புத்தானம் என பல துறைகளுக்கு இது இருப்பிடமாகும். ஒரு தனி நாடெனக் கருதினால், அதன் பொருளாதாரம் உலகின் ஐந்தாம் இடத்தில், பிரான்சைவிட அதிகமாக இருக்கும்.

35. கலிஃபோர்னியா, அமெரிக்க சனத்தொகையின் பல்வேறுவகைப்பட்ட தன்மையின் எடுத்துக்காட்டாகவும் உள்ளது; 1980களிலும் 1990களிலும் புதிய புலம்பெயர்ந்தோர் அலைகள் இலத்தீன் அமெரிக்க, ஆசியப் பகுதிகளிலிருந்து வந்தன. 19ம் நூற்றாண்டில் சீன எதிர்ப்புக் கலகத்தைக் கண்ட இப்பகுதி, இரண்டாம் உலகப்போரின் பொழுது அமெரிக்க ஜப்பானியர்கள் ஏராளமாக காவலில் வைக்கப்பட்டதைக் கண்ட இப்பகுதி, இப்பொழுது கறுப்பர்கள், ஹிஸ்பானிக்குகள், ஆசியர்கள் ஆகியோரைப் பெரும்பான்மையாகக்கொண்டுள்ளது, அமெரிக்காவில் பிறந்த வெள்ளையர்கள் சிறுபான்மையாக உள்ளனர்.

36. அமெரிக்க முதலாளித்துவத்தின் பேராற்றல் போக்குகளையும், அதன் உள்முரண்பாடுகளையும் செறிவான வகையில் கலிஃபோர்னியா வெளிப்படுத்துகிறது. ஜப்பானுடன் போராட்டம் நடத்துவதற்காக மாபெரும் செலவில் ஏற்படுத்தப்பட்ட போர்க்கப்பல் தளங்களும், ஆயுதக்கிடங்குகளும் நிறைந்து, பின்னர் உலகப்போர் முடிந்த சில பத்தாண்டு காலங்களில் உற்பத்தித்துறையில் பெரிய மையமாக மாறி, குறிப்பாக வாகனத்துறை, எஃகு, கப்பல் கட்டுதல், ஆகாய விமானத்துறை ஆகியவற்றிலும் உயர்ந்தது. அமெரிக்கா முழுவதிலும் போலவே இங்கும் 1970களில் இந்தத் தொழில்கள் நலிவுறத் தொடங்கின. 1990களில் ஒரே ஒரு (ஜப்பானுக்குரிமையான) மோட்டார் உற்பத்தி ஆலை கலிஃபோர்னியாவில் இருந்தது, கப்பல் கட்டுமானம் குறிப்பிடத்தக்க அளவு இல்லாமற்போயிற்று, விமானத்துறையில் உற்பத்தி கடுமையான குறைப்பிற்கு உட்பட்டது.

37. இந்த உற்பத்தித் தொழில்துறை, உற்பத்தியை கடல் கடந்த இலத்தீன் அமெரிக்க, ஆசியப் பகுதிகளில் மாற்றிவிட்டாலும், எழுச்சிபெற்றுவரும் கணினி, மென்பொருள் தொழில் அவற்றிற்குப் பதிலாகக் கலிஃபோர்னிய பொருளாதாரத்தை இயக்கும் இயந்திரமாயிற்று. இரண்டாம் உலகப்போருக்குப்பின் கணினிமயத்திற்கான விஞ்ஞான அஸ்திவாரங்கள் போடப்பட்டாலும், பின்னர் டிரான்ஸிஸ்டர் வளர்ச்சி பெற்றதை அடுத்து, தீவிரமான பெருநிறுவன அக்கறை 1960களிலும் 1970களிலும்தான் அதிக அளவு வலுப்பெற்றது, அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்ட ஆழ்ந்த பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஒரு பதிலாக வெளிப்பட்டது. உற்பத்தித்துறையில் குறைந்த இலாபவிகிதம் 1970களில் மிகுந்ததை அடுத்து, கணினிமயம் ஒரு பதிலாக வந்தது. உழைப்பின் உற்பத்தித்திறனைப் பெருக்குதற்கு இந்த வாய்ப்பு பற்றியெடுக்கப்பட்டு, தொழிலிடத்தில் கணினிமய மறு ஒழுங்கமைப்பின் மூலம் வேலைகளை வெட்டி அதேவேளை உற்பத்தியை அதிகமாக்கி வளர்ச்சியுறலாயிற்று.

38. முந்தைய தொழில்நுட்ப புது கண்டுபிடிப்புகளின் காலங்களைப்போல் அல்லாமல், அமெரிக்க வேலைகள் அழிப்பு கணினி முறை மூலமாக மறு ஒழுங்கமைப்பு நடந்ததால், புதிய பெருமளவிலான உற்பத்தித் தொழில்களில் வேலைவாய்ப்புக்களை அதிகமாகவில்லை. தொடர்பு, போக்குவரத்துத்துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்கள், கணினி தொடர்புடைய தொழில்நுட்பங்களோடு இணைந்து இருந்ததால், மூலதன நகர்வை பரந்த அளவில் அதிகரித்தது. பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கு அமெரிக்க பெருநிறுவனங்களை நாடுகடந்த பெருநிறுவனங்களாக உயர்த்தி, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலையை தீவிரமாகவும் மற்றும் நிரந்தரமாவே மாற்றிவிட்டன. பிரதானமான அமெரிக்க, வெளிநாட்டு பெருநிறுவனங்கள் உலகம் முழுவதும் குறையூதியத் தொழிலாளரை நாடுகின்ற மற்றும் மலிவான செலவில் மூலப்பொருட்களை நாடுகின்ற புதிய நிலையை தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்

39. பெருநிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை குறைவூதியப் பகுதிகளுக்கு மாற்றிவிட்டதால், மில்லியன் கணக்கில் உற்பத்தித்துறை வேலைகள் இங்கு அழிந்துவிட்டன. இந்த இடையறா முயச்சியின் தாக்குதலுக்கு எதிர்த்து நிற்கும் சுமை தொழில்துறை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது; உழைக்கும் மக்களின் மற்ற பரந்த பகுதிகளிலும் இது ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. கணினியில் மிகத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர் தேவைப்படும் உழைப்பு நிகழ்ச்சிப்போக்குகள் வழிவகை கூட --கணினி மொழி திட்டப்படி செயல்படுதல் (computer programming) போன்றவை-- அயல்நாடுகளுக்கு மாற்றப்படுகின்றன.

40. இந்தச் சூழ்நிலைக்கான விடை தொழிலாள வர்க்கத்திற்கான முற்றிலும் புதிய மூலோபாயத்தை இன்றியமையாததாக்கி உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி தொழிற்சங்க அதிகாரத்துவம் முன்மொழிந்துள்ளவை போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை நிராகரிக்கின்றது. அனைத்துப் பொருளாதார அபிவிருத்திகளையும் தேசம் என்ற பிடிக்குள் தடை செய்து வைக்கும் முயற்சிகள் பிற்போக்கானவை மற்றும் தோல்வியைத்தான் சந்திக்கும். இதையும்விட மோசமான அளவில், அமெரிக்கத் தொழிலாளரிடையே அழிவைத்தரும் பேரினவாத பிரமையை வளர்த்து வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் விரோத மனப்பான்மையை ஏற்படுத்தும். உண்மையில், அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரே பொது எதிரியை: சர்வதேச முதலாளித்துவ அமைப்பை எதிர்கொண்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பகுதி ஆவார்.

41. பூகோள ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவ அமைப்பின் யதார்த்தம் தொழிலாள வர்க்கம் உலக மூலோபாயத்தை கைக்கொள்ளவேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. வட அமெரிக்காவிலுள்ள தொழிலாளர்கள் உலகின் மற்ற பகுதிகளிலுள்ள தொழிலாளர்களின் சமுதாய நிலை பற்றி அசட்டையாக இருக்க முடியாது. தங்கள் வேலைகளைப் பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் "சொந்த" நாட்டு பெருநிறுவன முதலாளிகளுக்கு எதிராக திறமையுடன் போராட்டம் நடத்தவும், முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக ஒரு போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பகுதியையும் ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேச மூலோபாயத்தை அவர்கள் அபிவிருத்தி செய்தாக வேண்டும்.

42. சர்வதேசியம் என்பது அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்ற நாட்டுத் தொழிலாளர்களுடன் ஐக்கியம் கொள்வது மட்டும் அல்ல என்பது வலியுறுத்தப்படவேண்டும். அனைத்து அமெரிக்க தொழிலாள வர்க்கப் பகுதிகளின் ஒற்றுமையை வளர்த்தெடுக்க அது ஒரு முன்நிபந்தனையாகும். கலிஃபோர்னியா, அமெரிக்காவைப் போலவே, அசாதாரணமான வேறுபட்ட மக்கள் தொகையினருக்கு இல்லமாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடி தீவிரமடையும்போது, பிற்போக்கு அரசியல்வாதிகள் அதிக அடாவடித்தனத்துடன் வெவ்வேறு நாடுகள், இனங்கள் பின்னணியில் வந்த தொழிலாளர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளைச் சுரண்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இனவழி வேண்டுகோளோ, அல்லது புலம்பெயர்ந்தோர் மீது பாதிப்பு ஏற்படுத்துதலோ- சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய முயற்சிகளைக் கண்டனம் செய்கிறது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பகுதிகளின் ஒற்றுமைக்காக அழைப்பு விடுக்கிறது.

43. மில்லியன் கணக்கிலான தொழிலாளர்களது வாழ்க்கை நிலைமைகளின் வீழ்ச்சியானது, கொள்ளைக் கூட்டத்தினர் காலத்தில் கூட காணப்படாத அளவு செல்வக்கொழிப்பை அதிகரிப்போர் கூட்டத்துடன் அருகருகே நிகழ்கிறது. இந்த மாபெரும் சமூக துருவமுனைப்படல், திட்டவட்டமான சமுதாய மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும், பழைய தொழிலாளர் அமைப்புக்கள் அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்த முன்னோக்கை கீழறுக்கிறது மற்றும் இதனோடு இணைந்தவகையில் ஆளும் செல்வத் தட்டிற்குள்ளேயே மிகவும் பிற்போக்கான மற்றும் ஒட்டுண்ணி சக்திகள் தோன்றுவதற்கு வகைசெய்யும்.

44. இந்த சக்திகளின் இலக்கு, உழைக்கும் மக்களின் உழைப்பிலிருந்து மிக உச்ச அளவு இலாபத்தை கறந்தெடுக்கத் தடையாயிருக்கும் அனைத்தையும் அகற்றுவதாகும்: தொழிற்சங்க நிலைமைகள், எந்த அளவிற்கு நன்மையை இன்னமும் கொடுக்கின்றன; சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள், வணிக வருமானத்தின் மீதான மற்றும் பாரம்பரிய சொத்தின்மீது வரிவிதிப்பு, முன்னேற்றகரமான வருமான வரி; எட்டு மணிநேர வேலை; குழந்தைத் தொழிலாளர் தடை கூட அகற்றப்பட இலக்குவைத்தல். இலாப அமைப்பைத் தக்க வைப்பதற்காக, செல்வத்தை கீழ்ப்புறத்தே மட்டுப்படுத்தப்பட்ட அளவு பகிர்விற்கு உட்படுத்த வேண்டும் என தாராண்மைவாதத்தால் முன்பு கூறப்பட்டதன் இடத்தில், வலதுசாரி அணி செல்வமானது மேல்நோக்கில் பகிர்வுக்குட்படவேண்டும் எனக் கூறுகிறது: சலுகை பெற்ற சிலரின் தனிப்பட்ட செல்வத்தை அதிகரிக்கும் பொருட்டு, அடிப்படை பொது சேவைகளையும், சமுதாய உள்கட்டுமானங்களையும் அழிப்பதன் மூலம் உழைக்கும் மக்களைக் கொள்ளையிடல் ஆகும்.

45. இரு பெரு வர்த்தக கட்சிகளும், அமெரிக்க முதலாளித்துவ அமைப்பின் அடிப்படைச் சமூகக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு பாதுகாக்கின்றன: வாழ்வின் அனைத்து அம்சங்களும் தனியார் சொத்து மற்றும் இலாபத்திற்கான உற்பத்தி இவற்றினால் மேலாதிக்கம் செய்யப்பட வேண்டும் என்பதாகும். குடியரசுக் கட்சியில் ஆளும் வர்க்கத்தின் தடையற்ற குருதிக்குரலைக் கேட்கிறோம் - வெறிபிடித்த, பகுத்தறிவுக்கு ஒவ்வாத தனிநபர் செல்வத் திரட்சியின் மீது ஆர்வம்: அதற்காக தொழிலாளரைச் சுரண்ட அனைத்துச் சட்ட, சமுதாய, ஒழுக்கநெறித் தடைகளையும் நீக்குதல். ஜனநாயகக் கட்சி மற்ற இடங்களைவிட கலிஃபோர்னியாவில், இங்கு அது தாராண்மைக் கொள்கையின் பிரதிநிதி என்றும், சுகாதாரம், கல்வி போன்ற சமூக சேவைகளின் பாதுகாவலன் என்றும் கூறிக்கொள்கிறது. ஆனால் டேவிஸ் நிர்வாகம் கொடுக்கும் சான்று, ஜனநாயகக் கட்சியினர் நலன்புரி அரசின் செலவினங்களை, அமெரிக்க பெருநிறுவன கோரிக்கைகளுடன் இனியும் இணைத்துச் செயல்படமுடியாது என்பதை விளக்கிக் காட்டுகிறது.

சமுதாயத் தேவைக்கு, இலாபநோக்கிற்காக இல்லாத திட்டம்

46. கலிஃபோர்னியாவிலுள்ள சமுக சிக்கல்கள், அனைத்து தொழில்துறை வளர்ச்சியுற்ற மக்கட் சமூதாயத்திலும் காணப்படும் சிக்கல்களாகும். பெரும்பாலான மக்கள் எல்லா இடங்களிலும்: போதுமான வருமானம் கொடுக்கும் பாதுகாப்பான வேலைகள்; கல்வி, மருத்துவ வசதி போன்ற சமுதாயப்பணிகள்; இயலக்கூடிய வீட்டு வசதி; பாதுகாப்பான ஓய்வு காலத்திற்கு வழிவகை; தற்கால வாழ்வின் அடிப்படை வசதிகளான தண்ணீர், மின் வசதி, சாலைகள், போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்ற ஒரே மாதிரியான பிரச்சினைகளைத்தான் சந்திக்கிறார்கள்.

47. சோசலிச சமத்துவ கட்சி சமுதாய உரிமைகளுக்கான சட்டம் ஒன்று தொழிலாளர்களுக்காக தேவை என வற்புறுத்துகின்றது: நாங்கள் கேட்பது:

* வேலை செய்ய முடிபவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, நல்ல ஊதியம் கூடிய வேலைக்கு அரசாங்க உத்திரவாதம்.

* குறைந்தபட்ச ஊதியம் மணி ஒன்றுக்கு 15 டாலர்களையும், பணவீக்கத்தோடு இணைக்கப்பட்டவகையில் உயர்த்தப்படவேண்டும்.

* வரிச்சுமையை தொழிலாள வர்க்கத்திலிருந்து பெருஞ்செல்வமுடையோருக்கும், பெருவர்த்தக நிறுவனங்களுக்கும் மாற்றுதல். தொழிலாள வர்க்க குடும்பங்களின் மீதான சொத்துவரிகள் மற்றும் விற்பனை வரிகள் ரத்து செய்யப்பட்டு, அவற்றின் இடத்தில் மிகப் பணம்படைத்த குடும்பங்களின் செல்வம் மற்றும் வருமானங்கள் மீதான கடும் முன்னேற்றகரமான வரிகளால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

* இலவச, உயர்தர k-12 பொதுக்கல்வி; உயர்கல்விக்கு விருப்பமுடையோர் அனைவருக்கும் இயலக்கூடிய கட்டணத்தில் கல்வி கிடைக்கச் செய்தல்.

* தேவைப்படுவோர் அனைவருக்கும் பொதுச்செலவில் மருத்துவப் பாதுகாப்பு.

* பொதுப்பணிகள் திட்டத்தின் மூலம் வேலையில்லாதவருக்கு வேலையளித்தல், பள்ளிகள், சாலைகள், பொதுப் போக்குவரத்து, தண்ணீர், மின் வசதி, வடிகால் வசதி உட்பட சமுதாய அடிப்படை உள்கட்டுமானத்தை மீண்டும் சீரமைத்தல்

* அரசாங்க மானிய உதவியுடன் வீடு கட்டுதலுக்கு ஊக்கம் அளித்து, தொழிலாளர்களின் சக்திக்கு வாங்க முடியும் என்ற அளவிற்கு மில்லியன் கணக்கில் வீடுகளை கட்டுதல்.

* சுற்றுச்சூழல் பாதுகாப்பு - பெருநிறுவனச் சுரண்டல், இலாப முறைக்காக சுற்றுப்புறத் தூய்மையை அழித்தல் இவற்றிலிருந்து காப்பாற்றி, ஆகாயம், காற்று, தண்ணீர் மாசுக்கட்டுப்பாட்டை கடுமையாக செயல்படுத்துதல்.

* தொழிற்சங்கத்தில் தொழிலாளி சேரும் உரிமையை உத்திரவாதப்படுத்துதல் மற்றும் ஜனநாயக மரபில் சங்கங்களைக் கட்டுப்படுத்துதல்; சங்கங்களைத் தகர்ப்பது, ஊதியங்களைக் குறைப்பது இவற்றைச் சட்டவிரோதமாக்குதல்.

* சட்டப்படி ஆயினும் அல்லது "சட்டவிரோதம்" ஆயினும் புலம்பெயர்ந்த தொழிலாளருக்கு குடியுரிமை உட்பட, முழு ஜனநாயக உரிமைகளை வழங்கல்; அவர்கள் கல்வி, மருத்தவ வசதி, மற்ற பணிகளைப் பெற அனைத்துத் தடைகளையும் அகற்றல்.

* அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஓய்வு காலத்தில் கௌரவமான வருமானத்திற்கான பாதுகாப்பை செய்தல்.

* சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அரசாங்க ஆதரவு கொடுத்தல்.

48. அரசியல் ஸ்தாபனங்களின் நிர்வாக செய்தித் தொடர்பாளர்கள் இவற்றையெல்லாம் மிகுந்த பேராசையுடன் கூடியவை என்றோ செய்ய இயலாத நிலை என்றோ கூறிவிடலாம். ``இதற்கெல்லாம் யார் பணம் கொடுப்பது?`` என்று அவர்கள் கேட்கலாம். இதற்கு விடை கூறுவது கடினமல்ல; நாம் மனிதகுல வரலாற்றிலேயே பெரும் செல்வச் சமுதாயத்தில் வாழ்கிறோம். உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பணி என்னவென்றால், டிரில்லியன் டாலர்கள் கணக்கில் அவர்கள் கூட்டு உழைப்பினால் உருவாக்கப்படும் செல்வத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்குப் போராடவேண்டும், ஆனால் அது இன்று ஒரு கையளவான பெருநிறுவனங்கள், செல்வந்தர்கள் கட்டுப்பாட்டிற்குள் ஏகபோக உரிமையாகி இருக்கிறது. இந்த பெருஞ்செல்வம் பொதுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தால், அனைத்து மக்களுடைய நன்மைக்கும் பயன்படுத்தப்பட்டால், ஒரு சலுகை பெற்ற சிறிய கூட்டத்தினருக்குப் பதிலாக, இந்த அனைத்துத் தேவைகளும் எளிதில் நிறைவேற்றப்பட முடியும்.

49. இலாப அமைப்பின் கீழ் அனைத்து சமுக தேவைகளும், தனிப்பட்ட செல்வம் ஒப்பீட்டளவிலான ஒரு சிறு அடுக்கு மக்களால் குவிக்கப்படும் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதார ஒழுங்கிற்கு கீழ்ப்படுத்தப்படுகிறது. சமுக தேவைகளின் அளவு பரந்தது: இடிந்து கொண்டிருக்கும் பள்ளிகள், தகர்ந்திருக்கும் சாலைகள், செயல்படாத பயன்பாட்டு அமைப்புக்கள், சீரழிந்து கொண்டிருக்கும் நகர்ப்புற, கிராமப்புற வீடமைப்பு வசதிகள், மாசுபடுத்தப்பட்ட சுற்றுப்புறம் ஆகியன. ஆளும் செல்வத் தட்டு இதற்கு பொறுப்பு ஏற்க மறுக்கிறது, ஆனால் அதேவேளையில் சமுதாயத்தின் செல்வத்தின் மீது ஏகபோக உரிமை செலுத்துகிறது.

50. கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தல் வரி விதிப்புப் பிரச்சினையில் குறிப்பான கவனத்தைக் காட்டுகிறது. மாநில வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை, இறுதிப் பகுப்பாய்வில், உழைக்கும் மக்களின் உழைப்பின் மூலம் பெருகும் வளங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளவர்கள், அதை மக்களுடைய தேவைக்கு பயன்படுத்த மறுப்பதன் விளைவேயாகும். தவறானவகையில் வளங்களை ஒதுக்கும்முறை தடுக்கப்படவேண்டும் என்றால், தன்னலம், பேராசை ஆகியவை கொண்ட மிக உயர்ந்த பணக்காரருடைய தன்மைகளைத் தகர்க்கும் வண்ணம், வரி விதிக்கும் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டு, பள்ளிகள், சுகாதார நலம், வீட்டு வசதி, மற்ற சமுதாய முன்னுரிமைகள் இவற்றிற்குச் செலவிடப்படவேண்டும்.

51. இப்பொழுதுள்ள அரசாங்க வரிவிதிக்கும் முறை, எவரால் இயலாதுள்ளதோ அவர் தலையில் மிக அதிகப்படியான பளுவை வைக்கிறது. உழைக்கும் மக்கள் தான் அரசாங்கத்திற்கான கட்டணங்களையும், சொத்து வரியையும் அதிக அளவில் செலுத்துகின்றனர். இது நிறுத்தப்பட்டு, பெரும்பாலான மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும் கொள்கை கொண்டுவரப்பட்டு, உயர்ந்த சொத்துக் குவிப்பு, மிகுந்த வருமானம் கொண்டுள்ளோர் மீது, படிப்படியான கூடுதலான வரி வசூல் செய்யும் முறை கொண்டுவரப்பட வேண்டும். அத்தகைய கொள்கை பெருவர்த்தக நிறுவனங்கள் சொத்து வரி கொடாமல் இருப்பதை நிறுத்துவதோடு, வரிவிதிப்பிலுள்ள குறைகளை அகற்றும் பெருவர்த்தகத்திற்கு செயலூக்கம் தருவதை நிறுத்தும்.

52. ஒரு சோசலிச வேலைத்திட்டம் என்றால் அனைத்துமே தேசிய மயமாக்கப்படுதல் என்ற பொருளல்ல அல்லது சிறு, நடுத்தர மட்ட வர்த்தகத்தை அகற்றுதல் என்பதும் இல்லை; இவையே தொடர்ந்து பெருநிறுவனங்களாலும், வங்கிகளாலும் பாதிப்பிற்கு உட்படுகின்றன. திட்டமிட்ட பொருளாதாரத்தை ஏற்படுத்தினால் இவற்றிற்கு எளிதில் கடன் வசதிகளும், கூடுதலான, உறுதியான சந்தை நிலைகளும், நல்ல ஊதியமும் வேலை நிலையும் கொடுக்கும் வரை அவர்களுக்கு கிடைக்கும்.

53. மிக முக்கியமான, இன்றியமையாத தொழில்களைப் பொறுத்தவரையில், பயன்பாடுகள், எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள், பெரு வர்த்தக அமைப்புக்கள் இவற்றைப் பொதுப் பயன்பாடுகளாக அறிவித்து, பொது சொத்துஉடைமைக்கு உட்படுத்தி, ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தவேண்டும். கலிஃபோர்னியா எதையாவது நிரூபிக்கிறது என்றால், அது உள்ளடங்கிய அராஜகத்தையும், முதலாளித்துவ முறையின் பெருங்குழப்பத்தையும்தான். ``சந்தை நல்ல தேர்வுகளைக் கொடுக்கிறது`` என்பது அப்பட்டமான பொய் ஆகும், எவருடைய முடிவுகளால் சந்தையின் இயக்கம் முடிவெடுக்கப்படுகிறதோ, அவர்களால் உதாரணமாக பெருநிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிகள் (CEO), தங்களுக்கு எட்டு மற்றும் ஒன்பது இலக்கங்களில் வருமானம் கொடுத்துக்கொண்டு, தங்கள் நிறுவனத்தைத் தாங்களே கொள்ளையடிப்பதுதோடு, அவை பொதுவில் இல்லாத சந்தைச் சக்திகளால் என பிரகடனம் செய்வதும் ஆகும்.

54. இராணுவ வாதத்துக்கு எதிரான போராட்டம் பரந்த வளங்களை சமுக தேவைகளுக்காக திறந்துவிடும். அமெரிக்க ஆளும் வர்க்கம், கடந்த 50 ஆண்டுகளில், முதலில் சோவியத் ஒன்றியத்துடன் மோதல் என்ற குளிர்யுத்தத்திலும், பின்னர், இப்பொழுது ``பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்`` என்ற சாக்கிலும் டிரில்லியன்கள் டாலர் கணக்கில் பணத்தை வீணடித்துள்ளது. ஆனால் அமெரிக்க மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு வரும் முக்கிய ஆபத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலோ, வேறு எந்த அயல்நாட்டு மூலத்தினாலோ அல்ல; அது அமெரிக்காவில் உள்ள ஆளும் தட்டினர் தங்கள் செல்வங்களையும், சலுகைகளையும் பெருக்கி, தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியினால்தான் ஏற்படுகிறது.

55. புஷ் நிர்வாகத்தால், காங்கிரசில் ஜனநாயகக்கட்சியின் கூட்டோடு இயற்றப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளைத் திரும்பப்பெறமாறு சோ.ச.க கோருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு துறை (The Homeland Security Department)) எனும் அமைப்பு, பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதைவிட, அமெரிக்க மக்களை தீவிரமாக ஒற்று அறியவும் அடக்கவும் குவிமையம் கொண்டுள்ளது, இது கலைக்கப்படவேண்டும். அமெரிக்க தேசபக்த சட்டம் (The USA Patriot Act) கட்டாயம் கைவிடப்படவேண்டும், காலவரையற்ற அடைத்து வைத்தல், சட்டபூர்வமான வழக்குரைஞர் கொள்ளும் உரிமையை போன்ற போலீஸ் அரசு நடவடிக்கைகள் தடை செய்யப்படவேண்டும். ஜனநாயக உரிமைகள் - வாக்களிக்கும் உரிமை, ஒவ்வொருடைய வாக்கும் எண்ணப்படுதல், அந்தரங்க உரிமைகள் பாதுகாப்பு, அரசாங்கத்தையும் திருச்சபையையும் பிரித்துவைத்தல், ஓரிடத்தில் கூடும் உரிமை, பேசும் உரிமை, கருத்துக்களை வெளியிடும் உரிமை உட்பட பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் விரிவாக்கப்படவேண்டும்.

56. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, வரலாற்றளவில் மிகப்பெரிய சொத்துக்களை மாற்றும் கொள்ளை முறை, அகற்றப்பட்டால்தான் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பது பற்றி பேசுவதில் ஒரு அடியை முன்வைக்க முடியும். குடியரசுக்கட்சி, ஜனநாயகக்கட்சி, இரண்டின் கீழுமே, சொத்துக்கள் பெரிய அளவில் உயர்மட்டத்திற்கு மாற்றப்படுகின்றன; அதாவது மேல் ஒரு சதவிகிதம் மட்டும் அமெரிக்கச் சமுதாயத்தின் மொத்த செல்வத்தில் 40 சதவிகிதத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது. 1990களில் நடைபெற்ற ஊகவாணிப நடவடிக்கைளினால், குற்றஞ்சார்ந்த முறையில் பெருநிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிகள் (CEO), தொழிலாளர்கள், சிறு பங்குதாரர்கள் பணத்தைக் கொள்ளையடித்தது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டும். இந்தத் திருடப்பட்ட சொத்துக்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டுச் சமுக நலன்களை முன்னேற்றவும், தொழிலாளர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல்

57. நேரடி ஊழலைத் தவிர முக்கியமானது, ஆளும் செல்வந்த தட்டின் வர்க்க நலன்கள், அது சமுக பிரச்சனைகளுக்கு பகுத்தறிவுபூர்வ முடிவு காண்பதை முடியாமல் செய்துவிடும். அமெரிக்க அரசியல் மிக மோசமான முறையில் இழிந்து, மட்டமான பொதுக்காட்சியாக ஒருவர் மீது ஒருவர் சேற்றையிறைத்தல், இழிந்த அவதூறுகளைப் பேசுதல் ஆகியவற்றால் பண்பிடப்படுகிறது; சமுக தேவைகளுக்கான எந்த அக்கறையான அணுகுமுறையையும் தடுப்பதில் தனிநபர்கள் சொத்துக் குவிப்பின் பங்கு பற்றி விவாதம் கூடவே கூடாது என்பது ஒரு விஷயமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துக் கொள்கைகள் மீதும், அரசியல் முறையிலும் கூட தனியார் செல்வத்தின் பிடியை உடைக்காவிட்டால், உழைக்கும் மக்கள் நெருக்கடியைத் தீர்க்க முடியாது.

58. இம்முயற்சிகளில், பெரு நிறுவனங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தும் வகையில் சட்டபூர்வமாக லஞ்சத்தைப் பெயர் மாற்றி, தேர்தல் நிதி அளித்தல் போன்றதோ அல்லது பெருநிறுவன ஆதரவு வடிவிலோ தனியார் செல்வம் அரசியலில் பயன்படுத்துவதை முறியடிக்க கடுமையான நடவடிக்கைகளை இது உள்ளடக்கும். கலிஃபோர்னியத் திருப்பியழைத்தலே அரசியல் அமைப்பு முறையில் ஒரு கோடிஸ்வரர் செலுத்தக்கூடிய தீய செல்வாக்கிற்கு உதாரணமாகும். இத்தகைய மாபெரும் செல்வக்குவிப்பும், அதையொட்டிய அதிகாரச் செல்வாக்கும் ஜனநாயக மரபுகளோடு இணைந்து செயலாற்ற முடியாது. அமெரிக்க அரசியல் பிரச்சாரத்திற்கு எளிதில் நிதி கொடுக்கும் ஒரு மில்லியன் பெறுமான சிணிளி, அல்லது முதலீட்டாளருக்கும் ஒரு தொழிலாளி அல்லது சிறு வணிகருக்கும் இடையில் ஒரே மாதிரியான அரசியல் சமத்துவம் இருக்க முடியாது.

59. தாராண்மை வாத கட்டுரையாளர் அரியன்னா ஹஃபிங்டன், பசுமை கட்சித் தலைவர் பீட்டர் காமெஜோ போன்றோர் இரண்டு பெரு வர்த்தக கட்சிகளுக்கான அரசியல் மாற்றீட்டை பிரதிநித்துவப்படுத்தவில்லை. இருவருடைய பிரச்சாரங்களுமே இலாப அமைப்பு முறையை ஏற்றுக் கொள்வதோடு, மிகக்குறைந்த அளவு சீர்திருத்தத்தையே முன்மொழிகின்றன. (காமெஜோவின் வரவு செலவுத் திட்டக்கொள்கை ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நிக்கரைப் போன்றதேயாகும்: மாநிலக் கணக்கு வழக்குகளை ஆராயத் தனி கணக்கு ஆய்வாளரை கொள்ளுதல்). அரசியலளவில் ஹஃபிங்டன், காமெஜோ இருவரும், ஜனநாயகக்கட்சி, குடியரசுக்கட்சி ஆகிய இரண்டிற்குமே கீழ்ப்பணிந்து நிற்பவர்கள் ஆவர். அக்டோபர் 7 தேர்தலில் மிக முக்கியமான வினாவான ஜனநாயக விரோதத் திருப்பியழைத்தல் தன்மையைப் பற்றிய விஷயத்தில் இருவருமே குடியரசுக் கட்சியின் வலதுசாரிக்குத்தான் ஒப்புதல் கொடுக்கிறார்கள். வாக்கின் மூலம் டேவிசை வெளியேற்றி, மில்லியனர் டரெல் இசர் (Darrell Issa)) செலவழித்து மேற்கொள்ளப்பட்ட திருப்பிழைத்தல் முயற்சியை ஏதோ அடித்தளத்தில் இருந்து தோன்றிய உண்மையான மக்கள் இயக்கம் போல் நியாயப்படுத்துகின்றனர். மாற்று ஆளுநருக்கான வாக்கெடுப்பில், தான் ஏற்கக்கூடிய ஜனநாயக வேட்பாளர் செனட்டர் Dianne Feinstein போட்டியிட்டால், தான் விலகிக்கொள்வதாக ஹஃபிங்டன் அம்மையார் அறிவிக்கிறார். தன்னுடைய பங்கிற்கு காமெஜோ, ஹஃபிங்டனுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் எனத் தோன்றினால், தான் அந்த அம்மையாருக்கு ஆதரவாக விலகத் தயார் எனப் பேசுகிறார்.

60. சோசலிச சமத்துவக் கட்சியின் பணியானது உழைக்கும் மக்களிடையே ஒரு புதிய அரசியல் தலைமையினை கட்டி எழுப்புவது ஆகும். தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியூட்டவும், இலாப அமைப்பு முறையை எதிர்த்து பெரும்பான்மை மக்கள் இயக்கம் எழுச்சிபெறவும், எங்களுடைய சர்வதேச நாளிதழின் அரசியல் பகுப்பாய்வு மற்றும் கருத்துக்கள் மூலம், உலக சோசலிச வலைத் தள த்தின் மூலம் இதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய கவர்னர் பதவிக்கான வேட்பாளர் ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன் ஒரு நீண்டகால குடியுரிமை வழக்குரைஞரும், போலீஸ் முறைகேடுகளால் பாதிப்புற்றோருக்கு பாதுகாப்பாளரும் ஆவார். நாங்கள் கீழ்க்காணும் அடிப்படைக் கொள்கைகளுக்காக நிற்கிறோம்:

தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம்: பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் என்ற நிலைமையில், எந்த மாநில, நாட்டின் தொழிலாளர் பிரிவும், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்து பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. உதாரணமாக சீனாவில் தொழிலாளர்களை மிருகத்தனமான முறையில் நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள் சுரண்டுவது கலிஃபோர்னியாவிலும் அமெரிக்கா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கு நேரடி விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த பூகோளமயப்பட்ட பொருளாதாரத்திற்கான விடை, பொருளாதார பாதுகாப்பு வாதமோ அன்றி வர்த்தகப் போரோ அல்ல; மாறாக, சர்வதேச தொழிலாளர்களின் ஐக்கியமும் உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான மூலோபயமும்தான்.

* தொழிலாள வர்க்கத்தின் சுயாதினமான அரசியல்: அமெரிக்காவின் பெரும்பான்மையான மக்களாகிய உழைக்கும் மக்கள், அரசியல் அமைப்பு முறையில் இருந்து வெகுவாக அந்நியப்பட்டுள்ளனர்; ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்குள்ளும் அவ்வாறே எந்த ஆளுமையையும் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் பெருநிறுவன நலன்கள் அவற்றைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளன. தொழிலாளர்களின் நலன்கள் தற்போதுள்ள தொழிலாளர் அமைப்புக்களினாலும் பாதுகாக்கப்படவில்லை; ஏனெனில் அவை நெருக்கடிக்கு ஒத்திசைவான தீர்வை விபரிக்க முடியாமல், அரைப்பிணமான ஜனநாயகக் கட்சியோடு தொங்கிக் கொண்டுள்ளனர். உழைக்கும் மக்களை அரசியல் ரீதியாக சுயாதினமான ஒரு சக்தியாக திரட்டக்கூடிய புதிய தொழிலாளர் அமைப்புக்கள் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த அரசியல் கட்சியாக கட்டி எழுப்பப்பட்டாகவேண்டும்.

*தனியார் லாபத்தைவிடச் சமுக தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். சமுக தேவைகள், தனியார் இலாபமுறையைவிட முன்னுரிமை பெறவேண்டும் என்பதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அங்கு இரண்டு மாற்றீடுகள் உள்ளன: ஒன்றில் தொழிலாளர்கள் நெருக்கடியின் பாதிப்பிற்கு விலை செலுத்தநேரிடும் மற்றும் கூடுதலான வேலை இழப்புக்கள் ஏற்படும், குறைவான ஊதியங்களும் நிலைமையில் இழிந்த தன்மையும் தோன்றும், அது சமூக அழிவுக்கு இட்டுச்செல்லும்; அல்லது வர்க்கச் சுரண்டலின் விளைவாக ஆளும் தட்டினர் குவித்துவைத்துள்ள செல்வத்தை பகிர்விற்கு உட்படுத்தவேண்டும் என அவர்கள் ஆளும் தட்டை நிர்பந்திப்பார்கள்.

61. மேற்கண்ட கொள்கைகளோடு ஒத்துப்போகும் போக்குடையவர்களை அக்டோபர் 7 தேர்தலில் ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுக்கு வாக்களிப்பதோடு மட்டுமல்லாமல், உலக சோசலிச வலைத் தள வளர்ச்சிக்காக செயலூக்கத்துடன் பங்கு தருமாறும், அதில் இணைந்து சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புமாறும் நாம் அழைக்கிறோம்.

Top of page

வாசகர்களே; உலக சோசலிச வலைத்தளம் (wsws) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது.
தயவு செய்து மின்னஞ்சல் அனுப்பவும்


World Socialist Web Site
All rights reserved