World Socialist Web Site www.wsws.org


The political economy of American militarism

ܪñK‚è Þó£µõõ£îˆF¡ ÜóCò™ ªð£¼÷£î£ó‹

1‹ ð°F

By Nick Beams
10 July 2003

Back to screen version

இது ஆஸ்திரேலியாவில் சிட்னியில் ஜூலை 5-6 ,2003 தேதிகளில் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய "ஈராக்கியப் போரின் அரசியல் படிப்பினைகள்: சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தற்கான பாதை" என்ற மாநாட்டின் தொடக்க அறிக்கை, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினரும், ஆஸ்திரேலியாவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான நிக் பீம்ஸ ஆல் வழங்கப்பட்டது.

அமெரிக்கா பாக்தாதை வெற்றிகொண்டு மூன்று மாதங்கள் ஆகியுள்ள பின்னர், உலகம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்ற புதிய உணர்வு வளர்ந்து வருகிறது. ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பினது, பெரிதும் பரந்த மூலோபாயமானது: உலக அரசியலை முழுமையாக மாற்றியமைப்பதை பொறுப்பு எடுப்பதற்கு, புஷ் நிர்வாகத்தின் மூலமாக, அமெரிக்க ஆளும் மேல்தட்டுக்களால் செய்யப்படும் உந்துதல் என்பதன் ஒரு அம்சம் அல்லது ஒரு பகுதியாக இருந்தது என்பது மிகத் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

பூகோள மேலாதிக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ள மூலோபாயத்தின் ஒரு பகுதி தான் ஈராக்கின் மீதான வெற்றியாகும். ட்ரொட்ஸ்கி ஒரு முறை குறிப்பிட்ட "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான எரிமலை வெடிப்பை" நாம் இப்பொழுது உணர்ந்து கொண்டு வருகிறோம். இந்த மாநாட்டின் நோக்கம், உலக வரலாற்றில் புதிய சகாப்தத்தை உண்மையிலேயே தோற்றுவிக்கும் இவ்வியல் நிகழ்ச்சியின் பின்னே இருக்கும் இயக்கு சக்திகளை வெளிப்படுத்துவதுதான், மேலும் இப்பகுப்பாய்வின் அடிப்படையில், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கையும் மூலோபாயத்தையும் வளர்த்தெடுப்பதுமாகும்.

இவ் அறிக்கையின் பிற்பகுதியில் அடிப்படைப் பொருளாதார சக்திகளைப் பற்றி நான் ஆய்வு செய்வேன். ஆனால் நாம், தொடக்கத்தில் ஈராக்கின் மீதான தாக்குதலுக்கு அடிப்படையாக இருந்த பொய்களின் தன்மை, ஆழம், அளவு இவற்றினை ஆய்வு செய்வதன் மூலம், அவற்றின் வலிமையின் அளவைப் பெற முடியும் அல்லது ஓரளவு அளவிட்டு அறிந்துகொள்ள முடியும்.

உலகம் முழுவதும் அதன் கூட்டாளிகளான, பிரதானமாக பிரிட்டனில் உள்ள பிளேயர் அரசாங்கத்தாலும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோவார்ட் அரசாங்கத்தாலும் மீண்டும் மீண்டும் மெருகேற்றி திருப்பிக் கூறப்பட்ட புஷ் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அத்தனை பொய்களையும் விரித்துக்கூற இயலாது. ஆயினும்கூட அதைப் பற்றிய சுருக்கமான பார்வைகூட அடோல்ப் ஹிட்லர் ஆட்சிக்குப் பின்னர் இது போன்ற எதையும் கண்டதில்லை என்பது உறுதிப்படுத்தப்படும்.

13 ஆண்டுகளில் பெரும்பாலான கால அளவில், அமெரிக்கா ஈராக்கை எதிர்த்து இராணுவ நடவடிக்கைகளில் ஏதேனும் ஒரு வகையைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது. செப்டம்பர் 11ஐ உடனடியாகத் தொடர்ந்துதான், நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினர்களால், குறிப்பாக பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்டும், அவருடைய துணையாளர் போல் வொல்போவிட்ஸும், சில காலமாகவே கருதப்பட்ட ஈராக்கின் மீதான முழு அளவு இராணுவப் படையெடுப்பிற்குச் சூழ்நிலைகள் கனிந்து விட்டன என்பதைத் தெளிவாகக் கூறியபொழுதுதான், இதன் கடைசிப் பகுதி வெளிப்பட்டது.

ஆயினும், இதில் ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டு, ஆப்கானிஸ்தான் முதல் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் 2002 கோடையில் ஈராக்கின் மீதான படையெடுப்பிற்கு முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படலாயின. ஆப்கானிஸ்தானின் மீது கொள்ளப்பட்ட முறையிலேயே ஒரு ஆக்கிரமிப்பை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்றும், அதாவது அமெரிக்க விமானப்படை, சிறப்புப் படைகளின் வலிமையும் தரைப்படைகளின் எதிர்ப்புகளுக்குத் தக்க முறையில் பாவிக்கப்படவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. எனவே முழு அளவிலான அமெரிக்க துருப்புக்களின் ஆக்கிரமிப்பாக இருக்கும் என்றும் அதற்கு சில மாதங்கள் தயாரிப்புத் தேவைப்படும் என்றும் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், படைகள் செலுத்தப்படவேண்டிய வியூகமுறைகள் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது போலவே, ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பிரச்சாரத்தின் மூலம் அரசியல் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது. இது மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது: ஈராக் கொண்டிருக்கும் இரசாயன, உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு அப்பகுதியையோ, அமெரிக்காவையோ கூடத் தாக்கப் பயன்படுத்த முடியும்; ஈராக்கிடம் அணு ஆயுதங்கள் உள்ளன அல்லது அவற்றைத் தயாரித்து பயன்படுத்தும் வழிவகையில் மிக முன்னேறிய நிலையிலுள்ள திட்டம் தயாராக உள்ளது; மூன்றாவதாக, ஈராக், சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன், குறிப்பாக அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்டு அவற்றிற்குப் பேரழிவு ஆயுதங்களைத் வழங்கத் தயாராக உள்ளது என்பவையாகும்.

துணை ஜனாதிபதி டிக் செனி, 2002 ஆகஸ்ட் 26ம் தேதி சதாம் ஹூசேன் ''பயங்கரமான ஆயுதக்குவிப்புக்களைக் கொண்டுள்ளதாகவும்'' அவை ''இப்பகுதியிலுள்ள அமெரிக்க நண்பர்களை அச்சுறுத்த நேரடியாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்காவையோ மற்ற நாடுகளையோ அணுவாயுத அச்சுறுத்தலுக்கு உட்படுத்தக்கூடும்'' என்றும் எச்சரித்தார். செப்டம்பர் 26, 2002ல் ரம்ஸ்பெல்ட் தன்னிடம் சதாம் ஹூசேன், அல்கொய்தா தொடர்பு பற்றிய "குண்டாலும் துளைக்க முடியாத" சான்று இருப்பதாக அறிவித்தார்.

அக்டோபர் 7ம் தேதியன்று காங்கிரசிடமிருந்து அதிகாரம் கோரி, புஷ் போருக்கான வாதத்தை முன்வைத்து உரையொன்றை நிகழ்த்தினார். ஈராக், யூரேனியச் செறிவு வளர்ச்சி வகைக்குத் தேவையான, அதிக அடர்த்தியுள்ள அலுமினியக் குழாய்கள் வாங்க முயற்சி செய்துள்ளதாகவும், இச்செயல் அதனுடைய ''அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் அமைத்துக்கொள்ளும் வழிவகைக்கு" சான்றாக உள்ளது என்ற கூற்றையும் முன்வைத்தார்.

இதோடு விஷயம் நிற்கவில்லை; ''ஈராக், ஆள் இல்லாமல் இயங்கும் வான்வழி ஊர்திகளையும் (Unmanned aerial vehicles -UAVs), மனிதர்களால் இயக்கப்படும் வான்வழி ஊர்திகளையும், இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் குவிப்பை, மிகப்பரந்த நிலப்பரப்பில் தூவ முடியும் என்றும் நாம் கண்டுபிடித்திருக்கிறோம். ஈராக் UAVs களைக் கொண்டு அமெரிக்காவின் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து வருவதாக அறிகிறோம்'' என்றும் கூறினார்.

''அலுமினியக் குழாய்கள்'' பற்றிய மதிப்பீடுகள் அனைத்தும் வாயு செலுத்தும் பயன்பாட்டிற்கு அவை உதவாதவை என்றே தெரிவிக்கின்றன. அரசுத்துறை, ஆற்றல் துறை மற்றும் சர்வதேச அணு சக்தித்துறை நிறுவனம் (IAEA) ஆகியவற்றின் ஆய்வாளர்களும் இந்தக் கருத்தைத்தான் முடிவாகக் கொண்டுள்ளனர்.

இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பொறுத்தவரையில், பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பு செப்டம்பர் 2002ல்: ''1991க்கும் 1998க்கும் இடையே ஈராக்கின் இரசாயனப் போர் முறையின் விளைவு ஊக்கிகள், அவற்றின் முன்னோடிப் பொருட்கள், வெடிமருந்துகள், உற்பத்தி இயந்திரங்கள் ஆகியவை கணிசமான அளவில் அழிக்கப்பட்டுவிட்டன.... ஈராக் இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்துவருகிறதா, குவித்து வருகிறதா என்பது பற்றியும், அல்லது எங்கு ஆலைகளை அமைத்துள்ளது அல்லது அமைக்க உள்ளது என்பது பற்றியும் நம்பிக்கையான தகவல்கள் கிடைக்கவில்லை.'' என அறிவித்தது.

ஆபிரிக்க நாடான நைகரிடமிருந்து யூரேனியம் வாங்கப்பட்டது என்பதுதான் எல்லாப் பொய்யுரைகளிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 2002ம் ஆண்டு முடிவில் "அலுமினியக் குழாய்கள்" பற்றிய கதை நம்பகத்திற்குட்படாமல் நலிந்துவிட்டது. கூடுதலான அளவு ஏற்கப்படும் தன்மை கொண்ட தகவல் தயாரிக்கப்பட்டாகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே, இந்த ஆண்டு ஜனவரி 28-ல் நாட்டின் நிலை பற்றிய உரையில் புஷ் அறிவித்தார்: ''சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவு யூரேனியத்தை ஆபிரிக்காவில் சதாம் ஹூசேன் கேட்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் அறிந்துள்ளது..... சதாம் ஹூசேன் இந்த நடவடிக்கைகளைப் பற்றி நம்பத்தகுந்த வகையில் விளக்கம் கொடுக்கவில்லை. பலவற்றை அவர் தெளிவாக மறைக்க வேண்டியுள்ளது''.

உண்மையில் அவரிடம் விளக்கம் கூறுவதற்கு எதுவும் இல்லை, புஷ் நிர்வாகத்திற்கும் அது நன்கு தெரியும். ஓராண்டுக்கு முன், ஜனவரி 2002ல் நைகரிலிருந்து யூரேனியம் வாங்கியதற்கான பத்திரங்கள் என்று சில ஆவணங்கள் துணை ஜனாதிபதி செனியின் அலுவலகத்திற்கு வந்தன. அவர் ஒரு விசாரணைக்கு உத்தரவு இட்டார். மூன்று ஆபிரிக்க நாடுகளில் தூதராக இருந்த ஒருவரால் அது நடத்தப்பட்டது. இந்த ஆவணங்கள் போலியானவை என்று பெப்ரவரி 2002ல் அரச திணைக்களத்திற்கும், சிஐஏக்கும் அவர் தெரிவித்துவிட்டார். துணை ஜனாதிபதிக்கும் இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது.

ஜூன் 30ம் தேதி New Republic ல் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்தப் பழைய தூதர் எழுதுகிறார்: ''அவர்களுக்கு நைகர் கதை அப்பட்டமான புளுகு என்பது நன்கு தெரியும். அலுமினியக் குழாய்க்கதை அவர்களுக்கு ஊக்கமளிக்கவில்லை, எனவே கூடுதலாக ஏற்கும் முறையில் இந்தக் கதையை அவர்கள் வாதத்திற்காகச் சேர்த்தனர்.''

பவல் தன்னுடைய பெப்ரவரி 5ம் தேதி ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையை முடித்த பின்னர், IAEA இந்த ஆவணங்களை இறுதியாகப் பெற்றது; வெகுவிரைவில் அவை போலியான பத்திரங்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டது. அது பற்றிக் கவலையில்லை. மார்ச் 16ம் தேதி செனி ''செய்தி ஊடகத்தைச் சந்தியுங்கள்'' என்ற நிகழ்ச்சியில் IAEA- வை தாக்கி: ''நாங்கள் உண்மையில், (சதாம்) அணு ஆயுதங்களை மீண்டும் உருவாக்கிக்கொண்டுவிட்டார் என்று நம்புகிறோம்'', என பேசினார்.

கோயெபல்ஸ் மாதிரியில் அமைந்த, பெரும் பொய் பிரச்சாரத்தை புஷ் ஆட்சியும் அதன் கூட்டாளிகளும் முன்னெடுத்திருந்தனர் என்பதில் கேள்விக்கே இடமில்லாமல் போயிற்று.

இந்தப் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை ஆயும்பொழுது, அரசாங்கத் தயாரிப்புப் புளுகுகளை நாம் எதிர்கொள்ளும்போது, அறநெறி அல்லது நியாய நெறி சார்ந்த பிரச்சனைகளைப் பார்க்கவில்லை, ஒர் அரசியல் நிகழ்வுப்போக்கை காண்கிறோம் என்பதை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

பொய்யைப் பயன்படுத்துதல், அரசின் இயல்பில் இருந்தே எழுகின்றது. முதலாளித்துவ அரசானது தன்னை முழு சமுக நலன்களையும் உள்ளடக்கி கொண்டதாகக் காட்டிக்கொள்கிறது. ஆனால் சமரசம் காணமுடியாத நலன்களைக் கொண்ட, வர்க்கங்களாக பிளவுண்ட ஒரு சமுதாயத்தில் அப்படிப்பட்ட அரசாங்கத்தின் கூற்று, ஒரு கட்டுக்கதையேயாகும். ஆளும் வர்க்கம் சமரசப்போக்கையும் சமூக சீர்திருத்தக் கொள்கையையும் பின்பற்றியிருக்க முடியுமானால் அப்பொழுது, அதனது கூற்றின் நம்பத்தகுந்த தன்மையை ஓரளவு காக்க இயலும்.

ஆனால் அரசின் செயல்வகையே பொய் கூறுவது என்பது அதன் இணைந்த பகுதியாக இப்பொழுது ஆகி இருக்கிறது என்ற உண்மை, ஆளும் வர்க்கத்தின் நலன்கள், அவற்றை செயல்படுத்துவதற்கான கொள்கைகள், பரந்த அளவிலான மக்களின் தேவைகளுடனும் நலன்களுடனும் நேரடி மோதலுக்கு வந்திருக்கிறது என்பதைக் குறித்துக் காட்டுகிறது.

புஷ் ஆட்சி, அதன் செயல்களைப்பற்றிய உண்மையைக் கூறவேண்டுமானால் அது என்ன கூறும்? அமெரிக்கா பூகோள அளவில் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது, அதன் குறிக்கோள்களை அடைவதை எவர் தடுத்து நிறுத்த முயன்றாலும் அவர்களுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் உட்பட அனைத்து முறைகளும் கையாளப்படும்; "பயங்கரவாதத்தின் மீதான போரின்" நோக்கம் அமெரிக்க மக்களை அழுத்தும் ஆபத்துக்களை அகற்றுவதற்கு அல்ல, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கே ஆகும்.

புஷ் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு அணுகுமுறை

அத்தகைய இலக்குகள் பொது மக்கள் முன்பு வெளிப்படையாக விவாதிக்க முடியாதவை. அங்குதான் பொய்யின் தலையுயர்ந்த ஆதிக்கம் இருப்பிடங்கொண்டுள்ளது. ஆனால் ஆளும் தட்டினரிடையே விவாதிக்கப்பட்டுத் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவேதான் அரசாங்க ஆவணங்களுள்ளும் பல சிந்தனைக்குழுக்களின் வெளியீடுகளிலும், அமெரிக்க மூலோபாயம் பற்றிய வெளிப்படையான மதிப்பீட்டைப் பார்க்கிறோம்.

புஷ் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு மூலோபாயம், வெளிநாட்டுக் கொள்கை முன்னோக்கின் மையத்தளம், கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது; உலகின் வளங்கள் அமெரிக்கப் பொருளாதார நலன்களுக்குப் கீழ்ப்படுத்தப்படவேண்டும் என்றும் ஏறத்தாழ ஒரு உலகப் பேரரசை நிறுவி காத்திடுவதற்கு இராணுவத்திறன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அது தெளிவுபடுத்துகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் போராட்டங்கள் சுதந்திரத்தின் வெற்றியில் முடிந்திருக்கிறது என்று, தொடங்கும் ஆவணம், வெற்றிக்கான ஒரே ஒரு நீடித்த மாதிரியை ஏற்படுத்தி உள்ளது: "சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சுதந்திர நிறுவனங்கள்." அதன்படி, புஷ் நிர்வாகம், "ஜனநாயகம், வளர்ச்சி, சுதந்திர சந்தை முறை, உலகத்தின் எப்பகுதிக்கும் தடையற்ற வணிகம்" என்ற நம்பிக்கையை எங்கும் ஏற்படுத்தத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

இந்த பூகோள மேலாதிக்க இலக்கு முதல் பக்கத்திலேயே கூறப்பட்டுள்ளது. "அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், நம்முடைய மதிப்புக்களையும் நம்முடைய தேசிய நலன்களையும் பிரதிபலிக்கின்ற தனித்துவமான அமெரிக்க சர்வதேசியத்தின் மீது அடித்தளமாக கொள்ளும்."

ஆயினும், அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதில்லை. இது உலக நன்மைக்காகச் செய்யப்படுகிறது; ஏனென்றால் அமெரிக்க "சுதந்திர சந்தை முறை" தான் பூகோள வளர்ச்சிக்கு "நீடித்த முன்மாதிரி" யாக உள்ள ஒரே முறை - இதுவும் ஒரு மகிழ்ச்சிகரமான எதிர்பாரா நிகழ்வு ஆகும்.

இதைப்போன்ற "மகிழ்ச்சியுறும் தற்செயல் நிகழ்வுகளை" (Happy coincidents) வரலாறு முன்னரே சந்தித்துள்ளது. "தடையற்ற வணிகத்தின் பேரரசு" என்று பிரிட்டன் 19ம் நூற்றாண்டில் அமைத்த அதன் உலக மேலாதிக்கம் நாளடைவில் அது கொண்டிருந்த "நாகரீகப்படுத்தும் பணி" யில் கட்டுண்டிருந்தது. இப்பொழுது நாம் "சுதந்திர" பேரரசைக் காண இருக்கிறோம், அதில் "தடையற்ற சந்தை" தான் ஒழுக்கப் பண்புக்கே (morality) அடிப்படை என்று இப்பொழுது விளக்கப்படுகிறது.

தேசியப் பாதுகாப்பு மூலோபாய வார்த்தைகளில்: 'தடையற்ற வணிகம்' என்ற கருத்துரு அது பொருளாதாரத்தில் ஒரு தூணாக வருவதற்கு முன்பே, ஓர் ஒழுக்க கோட்பாட்டின் அடிப்படையில் தோன்றியதாகும். உன்னால் பிறர் மதிப்பிடும் ஒரு பொருளைச் செய்ய முடியும் என்றால், அதை அவர்களுக்கு விற்க கூடியதாக இருக்கவும் வேண்டும். மற்றவர் நீ மதிப்பிடும் பொருள்களைச் செய்கின்றனர் என்றால் நீ அதை வாங்க முடியவும் வேண்டும். இதுதான் உண்மையான சுதந்திரம், ஒரு தனி நபரோ, நாடோ வாழ்வதற்கான உண்மையான சுதந்திரம்." (p.18).

இதற்கு முன் எப்பொழுதாவது "சுதந்திரம்" என்பது இவ்வளவு வெளிப்படையாக "பணம் பண்ணுவதற்கான சுதந்திரம்" என்றோ, அது ஒழுக்க கோட்பாட்டிற்கே அடிப்படை என்றோ வரையறுக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகத்திற்குரியதுதான். இந்த ஆவணம் வாங்கும் விற்கும் நபர்களை பற்றி குறிப்பது, ஜோன் லொக் பதினேழாம் நூற்றாண்டில் மனதில் கொண்டு பேசிய "தனி மனிதர்கள்" பற்றித்தான் குறிக்கிறது என்று நினைத்துவிடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், அதில் உள்ளடங்கியிருப்பது பேராற்றல் வாய்ந்த "சட்டபூர்வமான நபர்களான" தனிமனிதர்களினது மட்டுமல்லாது முழுநாடுகளினதும் அளவிற்கு அப்பால் செல்வத்தையும் வளங்களையும் கட்டுப்படுத்தும் நாடுகடந்த நிறுவனங்கள் ஆகும்.

ஆனால் ஆவணம் வலியுறுத்தும் "சுதந்திர சந்தைகளும்", "தடையற்ற வணிகமும்" "நம்முடைய தேசிய பாதுகாப்பின் முக்கிய முன்னுரிமைகளாக விளங்குகின்றபோதிலும்", அவையே அமெரிக்காவின் தன்னிகரற்ற நிலைக்கு உறுதியளிக்க முடியாது. போட்டியிடும் திறனுடைய நாடுகளை என்ன செய்ய வேண்டும்?

இந்த இடத்தில் ஆவணம் வெகு தெளிவாக உள்ளது. பிரம்மாண்டமான அளவில் அமெரிக்க இராணுவ ஆற்றல் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்க ஆதிக்கம் பாதுகாக்கப்படும்.

"அமெரிக்க இராணுவ பலத்தின் உறுதியான பங்கை வலியுறுத்த வேண்டியது மீண்டும் கட்டாயமாகிறது. நம்முடைய பாதுகாப்பை எவராலும் சவால்விட முடியாத வகையில் கட்டி அமைத்து, பராமரிக்க வேண்டும்." (p.29). வேறு விதமாகக் கூறினால், வருங்காலத்தில் கூட மற்றைய முதலாளித்துவ நாடுகள் அதிகார சமநிலையை எதிர்க்க நினைக்கவும் மாற்ற நினைக்கவும் கருத முடியாதபடி இருக்க வேண்டும். "திறனுடைய எதிராளிகள் இராணுவ வலிமையைப் பெருக்கி அமெரிக்க படைகளின் தரத்தை மிஞ்சும் அளவிற்கோ, அதற்கு இணையாக வருவதற்கோ கூட நம்பிக்கையற்ற வகையில் நம்முடைய படைவலிமையின் ஆற்றல் இருக்க வேண்டும்." (p.30)

இத்தகைய கோட்பாடு பத்தாண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்புத் திட்ட வழிகாட்டி (Defence Planning Guidance -DGP), என்ற பெயரில், பென்டகனில் போல் வொல்போவிட்ஸ், பாதுகாப்புச் செயலர் டிக் செனி இருவராலும் முந்தைய புஷ் நிர்வாகத்தின் போது ஆவணமாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஆவணத்திலுள்ள விவரங்கள் கசியத் தொடங்கிய பொழுது மிகப் பெரிய எதிர்ப்பு ஆரவாரம் எழுந்த அளவில் அது திருப்பப் பெறப்பட்டு, திருத்தி எழுதப்பட்டது. அங்கு இரு பிரதான ஆட்சேபனைகள் இருந்தன: DGP அமெரிக்கா அதன் போருக்குப் பிந்தைய கூட்டாளிகளை புறந்தள்ளி செயல்படுவதற்கு தயாரிக்கப்பட்டிருந்தது மற்றும் அது உலக மேலாதிக்கம் என்ற நிகழ்ச்சி நிரலை பின்பற்றிக் கொண்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்தியது.

ஆவணம் திரும்பப் பெறப்பட்டது; ஆனால் அதன் பின்னே அமைந்திருந்த முன்னோக்கு திரும்பப் பெறப்படவில்லை; அம்முன்னோக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அது ஒரு நிலத்தடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்தது. தன்னுடைய பெயரை வெளியிட விரும்பாத நிலையில் அது இருந்தது. உலக வர்த்தக மையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்கும் வரை அந்நிலை நீடித்தது.

தேசியப் பாதுகாப்பு மூலோபாய ஆவணம்: "செப்டம்பர்11, 2001 நிகழ்ச்சிகள்" அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் மற்றைய உலக அதிகார மையங்களுக்கும் இடையிலான உறவுகளின் உள்ளடக்கத்தை மாற்றிவிட்டதுடன் புதிய, பரந்த வாய்ப்புக்களை வெளியே கொண்டுவந்து விட்டன." என கூறுகிறது. (P.28)

எந்தப் பார்வையில் படித்தாலும் இது ஒரு வியப்பிற்குரிய அறிவிப்பாகும். முதலில் செப்டம்பர் 11 தாக்குதல்கள் எவ்வாறு அமெரிக்காவிற்கும் மற்ற முக்கிய நாடுகளுக்கிடையேயான "உறவின் பின்னணிகளை" மாற்றின? மொத்தத்தில் இந்த நாடுகள் அனைத்துமே அமெரிக்காவுடன் முழு ஒற்றுமையை பிரகடனப்படுத்தியுள்ளன, NATO உடன்பாட்டில் இதுவரை பயன்படுத்தாத விதிமுறைகளைப் பயன்படுத்துவதையும் ஆதரித்தன. 1992, DGP ன் மூலோபாயத்தின் மையத்தில் இருந்தவந்த ஒருதலைப்பட்ச முறையை ஊக்கப்படுத்துவது இப்போது சாத்தியமாகியுள்ளது என்பதே ஆவணத்தின் கருத்தாகும்.

இரண்டாவதாக என்ன "புதிய பரந்த வாய்ப்புக்கள்" திறந்துவிடப்பட்டுள்ளன? இத்தகைய தாக்குதல்கள் எவ்வாறு நன்மை அளிக்கும்? ஒரு தீர்க்கமான வழியில்: "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பதாகையின் கீழ் பூகோள மேலாதிக்கத்திற்கான அவர்களின் நிகழ்ச்சி நிரலை அழுத்தமாய் முன்னெடுக்கவும், உள்நாட்டில் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு நடவடிக்கைகளை அபிவிருத்தி செயவும் அமெரிக்க ஆளும் மேல்தட்டுக்களுக்கு அவை வாய்ப்பை வழங்கின.

இத்தகைய ஒருதலைப்பட்சமான கருத்துக்களையும், மிகைப்படுத்தப்பட்ட வாதத்தையும் நான் கொண்டுள்ளேனோ என்ற ஐயப்பாடு எவருக்கேனும் எழுமாயின், புஷ் கோட்பாடு மற்றும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி, அமெரிக்க தொழில் நிறுவன அமைப்பின் வலதுசாரி ஆதரவாளரால் வழங்கப்பட்ட ஆய்வைப்பற்றிச் சுருக்கமாக கூறுகிறேன்.

மேற்கூறிய அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான தோமஸ் டொனெல்லி (Thomas Donnelly) ஜனவரி 31, 2003ல் வெளியிடப்பட்ட கட்டுரையில்: "... புஷ் கோட்பாடு, (doctrine) அமெரிக்க பாதுகாப்பு மூலோபாயத்தின் முதற்கோட்பாடுகளுக்கு திரும்புவதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது எனத் தெரிவிக்கிறார். புஷ் கோட்பாடு, குளிர் யுத்தத்திற்கு பிந்தைய கால சர்வதேச அரசியல் யதார்த்தங்களில் ஒரேயொரு மேலாதிக்க வல்லரசு என்பதையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. மேலும், அமெரிக்காவின் உலகந்தழுவிய அரசியல் கோட்பாடுகள் மற்றும் இதுவரையில்லாத பூகோள பலமும் செல்வாக்கும் என்ற இந்த இரு காரணிகளின் சேர்க்கை புஷ் கோட்பாட்டை, அதன் பகுதிகளின் கூட்டைவிட பெரியதாக்கிவிட்டது; இதுவே இனிவரும் தசாப்தங்களுக்கு அமெரிக்கப் பாதுகாப்பு மூலோபாயத்தின் அடிப்படையாக இருக்கும்." (Thomas Donnelly, The Underpinnings of the Bush Strategy)..

இதனுடைய தாக்கங்கள் என்ன என்பது பற்றிப் பின்னர் டொன்னெல்லி விளக்குகிறார். "அமெரிக்க சுற்றளவின்" விரிவாக்கம், "தொடர்ந்து பெருகக் கூடும், ஏன் இன்னும் விரைவாகவும் கூட செயல்படலாம்". மத்திய கிழக்கின் அரசியலைச் "சீர்திருத்த" ஆரம்பித்த முயற்சிகள் "அறைகுறை நடவடிக்கைகளோடு அவற்றை விட்டுவிடுவது கடினம் மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட". (Ibid).

அவர் வலியுறுத்தும் இந்தக் கோட்பாடு மனமாறாட்டமானது அல்ல. "அமெரிக்கர்கள் எப்பொழுதுமே தங்களுடைய பாதுகாப்பு நலன்களைப் பற்றிக் கூடுதலான பார்வையையே செலுத்தியுள்ளனர், சக்தியின் இணைப்புக்கள் ஆதரவாக இருக்கும் இடத்தில் இராணுவ வலிமையைப் பயன்படுத்த சாதாரண விருப்பத்தையும் விடக் கூடுதலான அளவு விருப்பம் காட்டியுள்ளனர் என்றும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது "வெறும் தேசியப் பெருமைக்கான சக்தியின் வெளிப்பாடல்ல, மனித விடுதலைக்கானது" என்றும் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்க கொள்கைகள், நலன்கள், முறையான பொறுப்புக்கள் இவற்றை ஒன்றாக எடுத்துக் கொண்டால், இயக்கபூர்வமான மற்றும் விரிவாக்க நிலைக்கான மூலோபாய முதன்மைக்கும், இராணுவ பலத்தைப் பயன்படுத்த தொடர்ந்த விருப்பத்திற்கும் ஆதரவாக பலமாய் வாதிக்கிறது என அவர் தொடர்ந்து கூறுகிறார். அந்த உள்ளடக்கத்திற்குள்ளே, எப்படி அணுவாயுத, மற்றும் பேரழிவு ஆயுதப் பயன்பாடுகள், சாதாரண சர்வதேச உறவுமுறை பற்றிய கணக்குகளை சிதைக்க முடியும் என்ற வழிகளை எடுத்துக் கொண்டால், உண்மையில், முன்னரே தாக்கும் நடவடிக்கைகளை (Preemptive strike actions) நடாத்தக்கூடிய, அதற்கான ஆற்றலுள்ள படைபலத்தைக் கட்டி எழுப்பும் நோக்கத்தை எப்போதும் ஒரு வழிமுறையாக திறந்தபடி வைத்திருக்கும் கட்டாயம் இருக்கிறது."

அத்தகைய முன்கூட்டிய தாக்குதல்களைத் தொடக்க எப்படிப்பட்ட காரணங்கள் வேண்டும்? அமெரிக்க நாட்டின் நன்மைகளுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடிய அல்லது எதிர் விளைவுகளைத் தரக்கூடிய நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அது காரணமாக அமையும்.

டொனெல்லி வலியுறுத்துகிறார்: "அமெரிக்கா மரபுவழியிலுள்ள 'தவிர்க்கமுடியாத உடனடி ஆபத்தை' ப் பரந்த அளவில் பார்த்தல் வேண்டும்; எப்படி அவை நாட்டின் நலன்களை நேரடியாக அச்சுறுத்தக்கூடும் என்பதை மட்டுமே பாராமல் அதன் நண்பர்கள், தாராளவாதக் கொள்கைகளிலான சர்வதேச ஒழுங்குமுறை, உலகத்தில் கூடுதலான சுதந்திரத்திற்கான வாய்ப்புக்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்." (Ibid)

மார்ச் 25 அன்று படையெடுப்பு தொடங்கியவுடன் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் டொனெல்லி, இதற்கு முன் ஐ.நா பாதுகாப்புக் குழுவில் நடந்த மோதலை வரவேற்று எழுதியுள்ளார்.

"ஈராக் போருக்கு முன் நிகழ்ந்த ராஜதந்திர சூழ்ச்சிகள் பனிப்போருக்குப் பிந்தைய உலகின் தெளிவான முடிவை குறிக்கிறது. எவரும் முழு உறுதியுடன் போருக்குப் பிந்தைய ஈராக் உலகம் எப்படி ஒழுங்கமைக்கப்படும் என்பதைக் கூற முடியாது; ஆனால் 1989 முதல் 2003 வரையிலான காலத்தின் அடிப்படை முரண்பாடு -- அமெரிக்க பூகோள முதன்மையின் யதார்த்தத்திற்கும் மற்றைய முறைசார்ந்த பன்முக அடிப்படையிலிருந்த பல்வேறு சர்வதேச அமைப்புக்களின் தன்மைக்கும், மிகவும் சான்றாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேட்டோ இவற்றுக்கும் இடையிலான வேறுபாடு -எத்தகைய போலித்தனம் என்பது அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. வினோதமான அளவில், விஷயத்தின் உண்மைகளை எதிர்கொள்ளுமாறு உலகை நிர்பந்தித்ததன் மூலம் பிரான்ஸ் நன்மையையே செய்துள்ளது" (Thomas Donnelley,An Enduring Pax Americana).

மே 21 அன்று வெளியிடப்பட்ட மேலும் ஒரு கட்டுரையில் அவர் புஷ் கோட்பாட்டை சாதகமாய்க் கொண்டாடுகிறார், அது குளிர் யுத்தம் மற்றும் குளிர் யுத்தத்திற்குப் பிந்தைய சகாப்தங்களின் நீண்டநாள் நிலவிவந்த அதிகாரச் சமநிலை பற்றிய சிந்தனைகளிலிருந்து எம்மை விடுவித்தது" மற்றும் " கட்டுப்படுத்தல் மற்றும் சாக்குக்காட்டித் தடுத்தல் சம்பந்தமாய் அதன் நிராகரித்தல்......அதுபோல அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கொள்கையின் -- : ஒரு செயலூக்கமான பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை வலிய விரிவுபடுத்தல் -- வரலாற்று சிறப்பியல்புகளுக்கு முக்கியத்துவத்தை மீட்டுக்கொடுத்தது."( Thomas Donnelly, The Meaning of Operation Iraqi Freedom).

கிளின்டனின் கீழ் அயலுறவுக் கொள்கை

மேற்கூறிய சொல்லதிகாரம் மிகப்பெரிய சக்திகள் ஈடுபட்டுள்ளதைக் குறிக்கின்றன. ஆனால் இந்த ஏகாதிபத்திய வெடிப்புக்கு, அதன் நிகழ்ச்சி நிரலைத்லைத் தயாரிக்க முக்கிய பங்காற்றிய புஷ் நிர்வாகமோ, நவீன பழமைவாதிகள் என அழைக்கப்படுவோரோ, இவர்கள் மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறாகிவிடும்.

சொல்லப்போனால் சோவியத் யூனியன் சரிந்த 10-15 ஆண்டுகளாகவே எழுச்சி பெற்று வளர்ந்து வந்துள்ள சில போக்குகளின் உச்சக்கட்டமே புஷ் ஆட்சியின் கொள்கைகளாக உருவெடுத்துள்ளன. கிளின்டனின் வெளியுறவுக் கொள்கையிலேயே அவற்றைக் காண முடியும்.

மூத்த புஷ்ஷின் கோட்பாடான "புதிய உலக ஒழுங்கை" ஏற்க வேண்டும் என்று கூறாவிடினும் கிளின்டன் நிர்வாகம் அமெரிக்க நலன்களை ஆக்ரோஷத்துடன் தொடர்வது என்பதற்கு அர்ப்பணித்துக் கொண்டிருந்தது, தேவையானால் அதனுடைய நண்பர்களென்று கூறப்படுபவர்களின் இழப்புக்களில் கூடச் செயலாற்றத் தயாராக இருந்தது என்பதைத் தெளிவுபடுத்தியது.

ஜனாதிபதியானதும் ஆற்றிய முதலுரைகளுள் ஒன்றில் கிளின்டன் "வர்த்தகம் அமெரிக்கப் பாதுகாப்பில் ஒரு முன்னுரிமையாகக் கொள்ளப்படும்" என்று வலியுறுத்தினார். அமெரிக்கா "மற்ற நாடுகளின் சந்தைகளைத் திறக்க முயற்சிக்க" வேண்டி இருந்தது மற்றும் வர்த்தகத்தைப் பெருக்க தெளிவான, செயல்படுத்தப்பட வேண்டிய விதிமுறைகளை வகுக்க வேண்டி இருந்தது" என்றும் கூறினார். (Remarks by President Clinton at the American University Centenary Celebration, February 26, 1993).

மூத்த புஷ்ஷின் நிர்வாகத்தினுடைய கடைசி நாட்களில் வொல்போவிட்சால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் திட்ட வழிகாட்டி, பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய அளவில் அயலுறவுக் கொள்கைச் செயல் பட்டியலைத் தயாரிப்பதில் சற்று எச்சரிக்கை காட்டப்பட்டது. ஆனால் அந்த ஆவணத்திலிருந்த இன்றியமையாத பிரச்சனைகள் -சோவியத் யூனியனின் பொறிவையொட்டி ஆதிக்க வெறி கொண்ட அயல் நாட்டுக் கொள்கையை அமெரிக்கா ஏற்க வேண்டிய தேவை - கிளின்டனின் நிர்வாக செயல்பட்டியலில் பிரதானமானதாக அமைக்கப்பட்டது.

1993ல் செப்டம்பர் மாதம் நிகழ்த்திய உரையொன்றில் கிளின்டனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அந்தோனி லேக் அமெரிக்கா வரலாற்றுச் சந்தியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "வரலாற்றின் முடிவிற்கோ, நாகரீகங்களின் மோதல்களிடையேயோ (நாம்) வந்துவிடவில்லை; ஆனால் மிகப் பெரிய அளவிலான ஜனநாயக மற்றும் நிறுவனமயமாக்கலுக்கான வாய்ப்பின் கணம் ஒன்றில் உள்ளோம். நாம் அதைக் கட்டாயம் வீணடித்துவிடக் கூடாது" என்றார்.

இந்தப் புதிய சகாப்தத்தில் அமெரிக்கா மிகுந்த மேலாதிக்க சக்தியுடைய நாடு என்றும், உலகிலேயே பெரிய பொருளாதாரத்தையும் வலிமை பொருந்திய இராணுவத்தையும் கொண்டுள்ளது என்றார். "எதிரியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையின் பின் வழி பரந்த அளவில் செயல்பட வேண்டும் என்ற மூலோபாயமாகத்தான் இருக்கும் - சந்தை ஜனநாயகங்களின் சுதந்திர சமுதாயங்களின் விரிவாக்கமாகத்தான் அது அமையும்."

அமெரிக்காவின் மற்ற வல்லரசுகளுடன் உள்ள உறவுகளைப் பொறுத்த வரையில், அமெரிக்க நலன்கள்தான் செயல்பட்டியலை நிர்ணயம் செய்யும் என்று லேக் தெளிவாக்கி விட்டார். "அமெரிக்கா தன்னிச்சையாக செயல்பட வேண்டுமா அல்லது பலரைக் கலந்து ஆலோசிக்க வேண்டுமா என்பதைப் பற்றி மற்றெல்லாவற்றையும் விட தீர்மானிக்கும் காரணி அமெரிக்க நலன்கள்தாம். பலரைக் கலந்து ஆலோசிப்பதன் மூலம் நம்முடைய நலன்கள் முன்னேற்றம் அடையும் என்றால் அங்கு அவ்வாறு செய்யலாம்; நம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற அது பயன்படும்பொழுது ஒருதலைப்பட்சமாய் செயல்பட வேண்டும். ஒவ்வொரு எடுத்துக் காட்டிலும் எழும் எளிய கேள்வி இதுதான்: நமக்கு எது அதிக நன்மையை அளிக்கும்?" (Anthony Lake, "From Containment to Enlargement", John Hopkins University, September 21,1993.)

கூடுதலான இராணுவ சக்திதான் அதிக நலன்களை நாடித் தரும். சமீபத்திய ஆய்வு ஒன்று குறித்தவாறு, "செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வலிமை அல்ல, விரிவாக்கப்பட்ட வலிமை ஒன்றுதான் 1990களில் கிளின்டனின் அயலுறவுக் கொள்கையின் தரக்குறியீடாக இருந்ததுடன், கிளின்டனின் இரு முறை பதவிக்காலங்களும் "இதற்குமுன் கண்டிராத அளவு இராணுவ செயல்முறைவாதத்தை" உருவாக்கியது. 1999ல் நடத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆய்வு ஒன்று, "குளிர் யுத்தத்தின் முடிவிற்குப் பின் அமெரிக்கா கிட்டத்தட்ட 48 தடவை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ... குளிர் யுத்த காலம் முழுவதிலும் இது 16 தடவைதான் எதிர்க்கப்பட்டது" எனத் தெரிவிக்கிறது. (Andrew Bacevich, American Empire, 2002, pp. 142-143).

இக்கால கட்டத்தில், குறிப்பிடத்தக்க முறையில் நடைபெற்ற இரண்டு இராணுவச் செயற்பாடுகளைப்பற்றி ஆராய்தல் நல்ல படிப்பினையைத்தரும். கொசோவா மீதாக யூகோஸ்லாவியாவிற்கு எதிரான போர், ஈராக்கிற்கு எதிராகத் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் மற்றும் அதிகரித்துக் கொண்டிருக்கும் தாக்குதல்கள்.

1999ல் நான்கு ஆண்டுகளுக்குப்பின் ஈராக்கியப் படையெடுப்பில் கையாளப்பட்ட முறைகள் அனைத்தினதும் வளர்ச்சியுற்ற தன்மையைக் கொசோவோப் போரில் பார்த்தோம். இங்கு பெரிய பொய், "பேரழிவு ஆயுதங்கள்" அல்ல, அதற்குப் பதிலாக சேர்பிய ஜனாதிபதி மிலோசிவிக்கால் மேற்கொள்ளப்பட்ட "இனச்சுத்திகரிப்பு" ஆகும். சேர்பிய ஜனாதிபதி மிலோசிவிக் இதைக் கையாண்டு தன்னை ஐரோப்பாவின் புதிய ஹிட்லராக மாற்றிக் கொண்டார். இனச்சுத்திகரிப்பு என்று அழைக்கப்பட்ட பிரச்சாரத்தைவிட புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை வெள்ளமாகப் பெருக்கெடுத்ததற்குக் காரணம் நேட்டோவின் குண்டு வீச்சுக்கள்தாம் என்பது இப்பொழுது உறுதி செய்யப்பட்டு விட்டது.

அப்பொழுதோ பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தன. அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி வில்லியம் கோஹென் கிட்டத்தட்ட 100,000 இராணுவ சேவை புரியும் வயதுடையவர்கள் காணப்படவில்லை என்றும் கூறினார். 1999ல் கொசோவாவில் 10,000 மக்கள் இறந்ததாகவும், 2000 மரணங்கள் குண்டு வீச்சுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும், அவற்றுள் பெரும்பாலானவை யூகோஸ்லோவிய இராணுவம் மற்றும் கொசோவோ விடுதலைப்படைகளுக்கு இடையிலான சண்டையால் இறந்தனர் எனவும் போருக்குப்பின், பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.

NATO படைகள் யூகோஸ்லோவியாவில் எங்கும் செல்லலாம் என்ற விதியைக் கொண்டிருந்த Rambouillet ஆவணம் என்று அழைக்கப்பட்ட பத்திரம் சேர்பியாவால் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்டது. யூகோஸ்லாவியாவில் இருந்த முன்னாள் கனேடியத் தூதர் இதைப்பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் கூறினார்: "நேட்டோ படைகள் யூகோஸ்லாவியா எங்கும் செல்வதற்கு அணுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது ... சேர்பிய நிராகரிப்பிற்கு உறுதியளித்தது." அந்நேரம் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி விளக்கியதுபோல், "நாங்கள் வேண்டுமென்றே சேர்பியர்கள் கடக்க முடியாத அளவு குறுக்குக் கட்டையை உயர்த்தி வைத்துள்ளோம்". (Mark Curtis, Web of Deceit, 2003 P.147)

ஈராக்கிய போரைப் போலவே, யூகோஸ்லாவியப் போரும் ஐ.நா வின் ஒப்புதல் பெறாமல் தொடுக்கப்பட்டது ஆகும். ஆனால் இது சர்வதேச சட்டங்களின் விதிகளை மீறியதற்காக ஏன் அமெரிக்காவை கண்டனத்துக்கு உட்படுத்தவில்லையென்றால், இனச்சுத்திகரித்தலைத் தடுப்பதற்கு தலையீடு செய்வது தேவையாக இருந்தது என்ற அடிப்படையில் 'இடதுசாரி', சமூக ஜனநாயகப் பொதுக் கருத்தின் ஆதரவு இருந்ததுதான். சில மாதங்கள் கடந்த பின்னர், இதே வாதங்கள், ஆஸ்திரேலிய மத்தியதர வர்க்க தீவிரவாத இயக்கம் முழுவதும், ஆஸ்திரேலிய துருப்புக்கள் கிழக்கு திமோரில் தலையீடு செய்யவேண்டுமென்று கோரி எதிர்ப்பு ஊர்வலத்தில் வீதிக்கு வந்தபொழுது, மீண்டும் கூறப்பட இருந்தது.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயரினால் சிகாகோவில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றில், இந்தப் புதிய ``நல்லொழுக்க ஏகாதிபத்திய`` க் கோட்பாடு தெளிவாக வைக்கப்பட்டது. எந்தச் சூழ்நிலையில் வல்லரசுகள் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளவேண்டும் என்பது கண்டறியப்படவேண்டும் என்பதுதான் முக்கியமான, அழுத்தும் பிரச்சினை என்று பிளேயர் குறிப்பிட்டார். ``தலையிடாக் கொள்கை`` என்பது சர்வதேச ஒழுங்கின் ஒரு முக்கியக் கோட்பாடாக பல காலமாக கருதப்பட்டு வந்திருக்கிறது. காப்பாற்றுவதற்காக தூக்கி எறிவதற்கு ஆயத்தமாக வைத்திருக்கும் ஒன்றல்ல அது. ஒரு நாடு மற்றொரு நாட்டின் அரசியல் முறையை மாற்ற தனக்கு உரிமை இருப்பதாகக் கொள்ளக்கூடாது; அதுபோல் வேற்று நாட்டில் நாச நடவடிக்கைகளுக்குத் துணைபோகக் கூடாது அல்லது எல்லைப் பகுதிகளில் சில பகுதிகளைக் கைப்பற்றி உரிமை இருப்பதாகக் கோரக்கூடாது. ஆனால் தலையிடாக் கொள்கை முக்கியமான அம்சங்களில் சிறிதே மாற்றி அமைக்கப்பட்டாக வேண்டும். இனவெறிக் கொலைகள் ஒருபோதும் ஒரு நாட்டின் உள்விவகாரம் ஆகாது.`` (Tony Blair, Speech to the Chicago Economic Club, April 22, 1999).

பிளேயரின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்யுரைகள் கோசோவா மீதான பொய்யுரைகளின் தொடர்ச்சியே ஆகும்.

அமெரிக்காவில் போரை ஆதரித்த ``இடதுசாரி`` மற்றும் ``தாராண்மை`` என்று அழைக்கப்படும் சக்திகள், அதில் பொருளாதார நலன்கள் சம்பந்தப்படவில்லையென்று வலியுறுத்தின. இது ஒழுக்கவியலின் உந்துதலினால் இயக்கப்படும் போர் - இங்கு இனச்சுத்திகரித்தலைத் தடுத்து நிறுத்தல் தேவை.

குண்டு வீச்சிற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுக் கொண்டிருந்த அளவில், கிளின்டன் மற்ற பொருளாதார மற்றும் மூலோபாய காரணங்களை சுட்டிக்காட்டி உரையொன்றை நிகழ்த்தினார். இரண்டாம் உலகப்போரும், குளிர் யுத்தமும் நமக்கு ஏதாவது படிப்பினையைத் தந்திருந்தால் அது, ``நம்முடைய நாடு வளம் பொருந்தியதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டுமென்றால், நமக்கு, சுதந்திர, பாதுகாப்புடைய, அச்சமற்ற, ஒன்றிணைந்த, நல்ல பங்காளியாக ஐரோப்பா இருக்கவேண்டும் என்பதுதான், வர்த்தகத்தின் பொருட்டு.... உலகம் முழுவதும் விற்பனை செய்யக் கூடிய திறன் உட்பட நாம் நல்ல வலுவான பொருளாதார உறவைக் கொள்ளப்போகிறோம் என்றால், ஐரோப்பா ஒரு திறவுகோலாக இருக்கும். தவிர்க்க முடியாது எதிர்பாரமல் தோன்றும் அனைத்துச் சிக்கல்களையும் தீர்க்க நம்முடைய தலைமையின் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்கு நாம் விரும்பினால், நம்முடைய பங்காளியாக ஐரோப்பா தேவைப்படும். அதுதான் இந்த கொசோவாவைப் பற்றிக் கூறவேண்டியதெல்லாம்.`` (Speech to AFSCME Biennial Convention, March 23, 1999).

அத்தருணத்தில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதுபோல், யூகோஸ்லாவியாவின் முக்கியத்துவம் அது பரந்த நிலப்பகுதியின் மேற்கு விளிம்பில் இருப்பதால் சோவியத் ஒன்றியத்தின் பொறிவால் ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு கதவு திறந்து விடப்பட்டிருந்தது. அப்பகுதி எந்த அளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்பதைப் பின்னர் அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகள்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர், மத்திய ஆசியா முழுவதிலும் அமெரிக்க இராணுவத்தளங்கள் ஏற்படுத்தப்படுதல், இப்பொழுது ஈராக் ஆக்கிரமிப்பு மற்றும் முழு மத்திய கிழக்கையும் மறு ஒழுங்கு செய்ய உந்துதல் என ஒவ்வொன்றும் உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையேயான மோதல்கள் தற்போதைய புஷ் நிர்வாகத்தில் தொடங்கவில்லை, ஆனால் கிளின்டனின் கீழ் ஈராக் மீதான அமெரிக்க கொள்கையின் முக்கிய பகுதியாக இருந்தன. முதல் வளைகுடாப் போருக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகள் பின்னர் உருவாக்கப்பட்ட ஆட்சியில் இரண்டு காரணங்களுக்காக விட்டுவைக்கப்பட்டது.

முதலாவதாக, ஈராக் முழுமையாக ஆயுதங்களைக் களைந்துவிட்டது என்று உறுதிபடுத்தப்பட்டால், அமெரிக்கா அப்பகுதியில் தொடர்ந்து இராணுவத்தை நிறுத்திவைப்பதற்கான காரணம் இல்லாமற்போய்விடும். எனவே ஈராக் ஐ.நா. தீர்மானங்களைச் செயல்படுத்தவில்லை என்ற வலியுறுத்தலும் தொடர்ந்து ஆத்திர மூட்டல்களைத் தூண்டிவிடும் செயற்பாடுகளும் நிகழ்ந்தன.

இரண்டாவதாக பொருளாதாரத் தடைகள் ஆட்சி அகற்றப்பட்டுவிட்டால் ஈராக்கிய எண்ணெய் சந்தைக்கு வரும், நிறைய வருமானம் உற்பத்தியாகும், புதிய பகுதிகளைக் கண்டறிவதற்கான ஆய்வுக்கு கதவு திறந்துவிடும்.

இவை அமெரிக்காவிற்குப் பலன் தராதவை. எண்ணெய் ஆய்வு, புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டுதல் ஆகியவை, பிரான்ஸ், ரஷியா, சீன நிறுவனங்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்பட்டு இருந்தன. மேலும் எண்ணெய் வருமானத்தைக் கொண்டு தொடக்கப்படும் மறு கட்டுமான செயல் திட்டங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு இல்லாமல் ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சென்றிருக்கும். வேறுவிதமாகக் கூறினால், பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்த அளவில் வைத்திருந்ததும், பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய கூற்றுக்களும் ஈராக்கின் உண்மை நிலை பற்றிய அக்கறையில் அல்ல; இப்பிராந்தியத்தைச் சுரண்டுவதற்கு அமெரிக்காவிற்கும் அதனுடைய போட்டியாளர்களுக்கும் இடையே எழுந்த ஆழ்ந்த மோதலில் இருந்தே எழுகிறது.

அமெரிக்காவின் இந்தப் பொருளாதார மற்றும் இராணுவ நலன்களுக்கு இடையிலான இணைதிற (symbiotic) உறவுதான், கிளின்டன் நிர்வாகத்தின் பாதுகாப்பு மந்திரி வில்லியம் கோஹனால் தெளிவாகக் கூறப்பட்டது. பொருளாதார வல்லுநர்களும் படை வீரர்களும் உறுதி காப்பதில் ஒரே நலன்களைக் கொண்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்கப் படைகள் ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா இவற்றில் முன்னணியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, ``நமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதிலும், அப்பகுதியில் படைகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் உறுதித் தன்மை ஏற்படும் அளவில் அதன் மூலம் முதலீடு செய்யவும் முன்னேற்றம் பெறவும் உதவும், நலன்கள் பெருகும், ஆகவே அமைதி, ஜனநாயக சக்திகளும் உரம்பெறும்.`` அல்லது, இன்னும் எளிமையான முறையில் அவர் கூறியுள்ளபடி ``கொடிக்குப் பின்னாலேயே வர்த்தகம் வரும்.`` (See Andrew Bacevich, American Empire, p.128).

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று அபிவிருத்தி

சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, அமெரிக்கா தன்னுடைய இராணுவ வலிமையை பல இடங்களிலும் நிறுத்த உடனடி வாய்ப்பைக் கொடுத்துவிட்டது. இந்தப் பின்னணியில் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை முழுமையாகப் பார்க்கும்போது இந்த நிகழ்ச்சியின் தாக்கம் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதைவிட அதற்கு முந்தைய எழுபது ஆண்டுகள் அதன் மீது திணிக்கப்பட்டிருந்த கட்டுப்படுத்தல்கள் அகற்றப்பட்டது என்றே கூறலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோற்றம் மற்றும் வரலாற்று வளர்ச்சியை ஆராய்ந்து பார்க்கும்பொழுது இது தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்க உள்நாட்டுப் போரை மற்றும் எழுந்து கொண்டிருந்த வடபகுதி தொழில் துறை முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி இவற்றை அடுத்து உடனடியான தசாப்தங்களில், பூகோள முதன்மை பெறுவதற்கான அமெரிக்க முதலாளித்துவத்தின் எழுச்சிக்கான அடித்தளங்கள் பாதுகாப்புடன் ஏற்படுத்தப்பட்டன. அடுத்த முப்பது ஆண்டுகள் பெரிய கார்ப்பொரேஷன் ஏற்படுத்தப்படலைக் கண்டன --இந்நிறுவன அமைப்பு- தனி ஒரு உரிமையாளர் அல்லது ஒரு குடும்ப வணிகத்திலிருந்து பொருளாதார அபிவிருத்தியில் முன்னணிப் பாத்திரம் ஆற்றிக் கொண்டு, ஒரு பெரிய கண்டத்தினை முதலாளித்துவ தொழிற்சாலை மற்றும் பண்ணை முறையின் அபிவிருத்திக்கும் தொழில்துறை உற்பத்தியின் புதிய வடிவங்களின் அபிவிருத்திக்கும் கதவு திறந்து விட்டது--20ம் நூற்றாண்டுப் பொருளாதாரத்திற்கு உருக் கொடுத்த வரிசை இணைப்பு முறைகளின் ஆரம்பங்கள் --அதைப்போலவே முக்கியமாக புதிய வடிவிலான கார்ப்பொரேட் நிர்வாகத்தை அபிவிருத்தி செய்தது.

நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஏனைய பெரும் வல்லரசுகளுடன் சேர்ந்து 'சூரியனில் அதன் இடம்' எனப்படும் முக்கியத்துவ நிலையை எடுக்கத் தயாராக இருந்தது. 1898ல் நிகழ்ந்த ஸ்பானிய - அமெரிக்கப் போர் அதன் வருகையை அறிவித்தது; இதை அடுத்து பிலிப்பைன்ஸ் 200,000 பிலிப்பினோக்களின் உயிர்களின் இழப்பில் காலனிமயமாக்கப்பட்டது.

பிலிப்பைன்சை வெற்றிகொண்ட பின்னரும்கூட அமெரிக்கா பெயரளவிலான பேரரசு என்ற நிலையை விரும்பவில்லை; ``திறந்த கதவு``க் கொள்கை வேண்டுமென்று -அமெரிக்கப் பொருளாதார நலன்கள் தடையின்றி உலகெங்கும் ஊடுருவுவதற்கு சுதந்திரத்தை கேட்டது. இந்தக் கொள்கையே அமெரிக்காவின் உலக நிலையை உணர்த்தியது: அது உலக அரங்கில் தன்னுடைய இடத்தைப் பெறத்தயாரான கால கட்டத்தில், உலகம் பெரிய முதலாளித்துவ வல்லரசுகளிடையே - பிரான்ஸ், ஜேர்மனி, எல்லாவற்றிற்கும் மேலாகப் பிரிட்டிஷ் பேரரசு இடையே- கூறுபோடப்பட்டிருந்தது. எழுச்சி பெற்றுவந்த அமெரிக்க அரசால் பறைசாற்றப்பட்ட விடுதலை மற்றும் சுதந்திரம் பற்றிய கோட்பாடுகள் போன்றவை திறந்த சந்தைகள், வர்த்தகம் இவற்றின் மீதான அதன் உடனடி நலனில் பிரதிபலித்தது.

இராணுவத் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டால், அவை குறிப்பிட்ட அமெரிக்க நலன்களுக்காக அல்லாமல் உலக நாகரிகக் கொள்கைகளை ஆதரிப்பதற்காக நோக்கங்கொண்டு இருந்தன.

ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட் டிசம்பர் 1904ல் பனாமா கால்வாயை கட்டுப்படுத்துவதை உத்திரவாதப்படுத்துவதற்கான போராட்டத்தின்போது கூறியவாறு: ``அமெரிக்கா நிலப்பசி கொண்டோ, அதுபோன்றவை தங்களின் நலன்களுக்காக என்று உலகின் மேலைப் பகுதியின் மற்ற நாடுகள் கூறுவதுபோல் எந்த செயல்திட்டமும் தொடர்பாக மேற்கொள்ளும் கொள்கையைக் கொண்டுள்ளது என்று கூறுவது உண்மையாகாது. இந்த நாடு விரும்புவதெல்லாம் அண்டை நாடுகள் வளமாகவும், ஒழுங்காகவும், செல்வச் செழிப்புடனும் இருக்கவேண்டும் என்பதுதான்.``

எந்த நாடு கொளரவத்துடன் நடந்துகொள்கிறதோ, ஒழுங்கைப் பராமரிக்கிறதோ, தன்னுடைய கடமைகளைச் சரிவரச் செய்கிறதோ, அது அமெரிக்காவிடம் பயப்படத் தேவையில்லை. ஆயினும் "நாட்பட்ட தவறிழைத்தல்களும் அல்லது இயலாமையின் காரணமாக "நாகரிக உறவுகள்" தளர்ந்தாலோ இறுதியில் "மற்றைய நாகரிக நாட்டினால் தலையீட்டைச்" சந்திக்க நேரிடும். மேலும் சுதந்திரம் என்ற பெயரில் எதையும் செய்துவிடும் உரிமை கிடையாது. ரூஸ்வெல்ட் கருத்தின்படி, "ஒவ்வொரு நாடும் உண்மையை நாடுகிறது என்று கூறப்படுவது.... தன்னுடைய விடுதலை, தன்னுடைய சுதந்திரம் போன்றவற்றைக் காக்க நினைப்பது நல்ல முறையில் அவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்ற பொறுப்பிலிருந்து பிரிக்கப்பட முடியாதது." (See Oscar Barck ed. America in the World, Meridian Books, 1961, p.80).

இந்த உணர்வுகள் பெரும்பாலும் ஆளும் மேல்தட்டினரால் பரந்த அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பிற்கால ஜனாதிபதியான வூட்ரோ வில்சன் 1907ல் ஓர் உரையில்: ``வர்த்தகம் நாட்டு எல்லைகளைக் கவனிக்காமல், உற்பத்தியாளர் உலகமே சந்தையாக வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையில் அவருடைய நாட்டுக்கொடி அவருக்குப் பின்னால் வரவேண்டும், அதைத் தடுக்க நினைக்கும் நாடுகளின் மூடப்பட்ட கதவுகள் தகர்த்து உடைத்தெறியப்பட வேண்டும்." எனக் கூறினார்

இதையும்விடக் கூடுதலாக உள்ளது. ``நிதியாளர்களால் பெறப்பட்ட சலுகைகள் அரசின் அமைச்சர்களால் பாதுகாக்கப்படவேண்டும், இதற்கு இணங்காத நாடுகளின் இறைமைகூட இந்த வழிவகையில் அத்துமீறப்படலாம்.`` என வருங்காலத்தில் நாடுகளின் சுய நிர்ணயம் பற்றி வாதாட இருந்தவர் கூறினார். (Cited in William Appleman Williams, The Tragedy of American Diplomacy, p.72).

உலக அரங்கில் அமெரிக்காவின் நுழைவு சக்திவாய்ந்த பொருளாதாரப் பெருக்கத்தால் உந்தப்பட்டது. முதல் உலகப்போர் ஏற்பட்ட அளவில், அமெரிக்கப் பொருளாதாரமானது சர்வதேசப் பொருளாதாரத்தை முழுமையாகச் சார்ந்திருந்தது. அதனுடைய தொழில்கள் பெருகி, வளர்ந்த நிலை ஒரு கட்டத்தில், வில்சன் தன்னுடைய 1912 தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியதுபோல், ``உலகச் சந்தைகளில் தடையற்ற நுழைவிடத்தை அவை காணாவிட்டால் தங்களுடைய உடைகளை அவை கிழித்துக்கொண்டு வந்துவிடும்`` உள்நாட்டு வர்த்தகம் இக்காலத்தில் போதவே போதாது என்று அவர் வலியுறுத்தினார். அமெரிக்காவிற்கு வெளிநாட்டு சந்தைகள் தேவைப்படும். போரின் தேவைகள், இந்தச் சந்தைகளை அதற்கு அளித்து, கடன்பட்டுள்ள நாடு என்ற நிலையிலிருந்து கடன் கொடுக்கும் நாடு என மாற்றிவிட்டது.

உலகந் தழுவிய கொள்கைகளான விடுதலை, சுயநிர்ணய உரிமைக்கான நாடுகளின் உரிமை, எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகம் என்ற கருத்துக்களை ஆதரித்து, அமெரிக்கா போரில் இறங்கியது. உண்மை என்னவெனில், அமெரிக்கத் தொழில் நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் கூட்டாளி நாடுகள் தோற்றால் ஏற்படக்கூடிய இழப்புக்களைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அவற்றின் நிதிப் பிணைப்பில் இருந்தன.

1917ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் பழைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட் குறிப்பிடத்தக்க வெளிப்படையான உரையில் அமெரிக்க குறிக்கோள்களைச் சுருக்கிக் கூறினார். "ஜனநாயகத்தைக் காத்திடலுக்காக" அமெரிக்கா போருக்குச் செல்லவில்லை என்று அவர் வலியுறுத்தினார். இன்னும் சொல்லப் போனால், அமெரிக்கா, ``உலகம் நமக்காகப் பாதுகாக்கப்படவேண்டும்`` என்று கருதியது என்றார். ``இது நம்முடைய போர், அமெரிக்காவின் போர், நாம் இதில் வெற்றிகொள்ளாவிட்டால் ஜேர்மனியின் வலிமையைத் தனியாகச் சந்திக்க நேரிடும். எனவே நம்முடைய நலனுக்காகவே ஜேர்மனியை அடித்து வீழ்த்துவோம்.``( cited in Arno Mayer, The Political Origins of the New Diplomacy, pp. 344-345).

அமெரிக்க ஏகாதிபத்தியமும் சோவியத் ஒன்றியமும்

போர், அதிகார சமபல நிலையில் ஒரு வேகமான மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் பேரரசின் நிழலில் இனியும் நிற்காமல், அமெரிக்கா உலக முதலாளித்துவ அமைப்பின் மேலாதிக்கத்தை எடுத்துக்கொண்டுவிட்டது. ஆனால் அது தலைமையேற்ற அளவிலேயே, முதலாளித்துவ முறை ஓர் ஆழ்ந்த நெருக்கடிக்குள் நுழைந்தது.

மார்க்சிச தத்துவம் ஏற்கனவே நிறுவியிருந்த கருத்தைத்தான் - பெருமளவு உயிர்ச்சேதம், அழிவு, பசி, குளிர் ஆகியவை வடிவில் -- போர் உறுதிப்படுத்தியது என்ற உண்மையில் போரின் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. தனிச்சொத்துரிமையும், முதலாளித்துவ தேசிய அரசு முறையும் 19ம் நூற்றாண்டில் மனித வளர்ச்சிக்கு உந்துதல் கொடுத்தபோதிலும், இப்பொழுது வரலாற்று ரீதியாக காலத்திற்கு ஒவ்வாததாகி விட்டன. முதலாளித்துவத்தின் கீழ், தேசிய அரசுக்கு எதிரான பூகோள உற்பத்தி சக்திகள் உலகைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துவதற்கான வல்லரசுகளின் ஈவிரக்கமற்ற போராட்ட வடிவத்தை எடுத்தது. லெனின் கூறியவாறு இந்தப் பூசலுக்கு அமைதியான தீர்வு கிடையாது. எந்த அமைதியும், எத்துணைகாலம் அது நீடித்திருந்தாலும், பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மாற்றுகின்ற பொருளாதார அபிவிருத்தி வரைக்கும் ஒரு இடைவேளையாக மட்டுமே இருக்கும், அது மீண்டும் புதிய போராட்டத்தை ஆரம்பித்து வைக்கும்.

முதலாளித்துவ ஒழுங்கின் உலக மேலாதிக்கம் அட்லான்டிக் இற்கு மேற்காக நகர்ந்துகொண்டிருந்த நிலையில், முழு ஏகாதிபத்திய முறைக்கும் ஒரு சவால் கிழக்கில் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியம் நிறுவப்படல் என்ற வடிவத்தில் வெளிப்பட்டது.

இந்தப் புரட்சி, அமெரிக்கா மற்றும் ஏனைய முதலாளித்துவ நாடுகளில் இயல்புணர்வாய் பதிலைக் கொண்டு வந்தது. பிறந்தவுடனேயே அதன் கழுத்தை நெரிக்க அவர்கள் முனைந்தனர்; உள்நாட்டுப் போரில் வெள்ளைப் படையினருக்காக ஆயுதப்படைகள் அனுப்பப்பட்டன; வின்ஸ்டன் சேர்ச்சில் அப்போது குறிப்பிட்டதுபோல வெளியாதரவு இல்லாவிட்டால் அவை முதலிலேயே முறியடிக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா உள்ளே நுழையாமல் நின்றது; தன்னுடைய வீரர்களே போல்ஷிவிசத்தால் "தொற்றுப்பட்டு" விடுவார்களோ என்ற அச்சமும் அதற்கு இருந்தது.

அடுத்த பத்தாண்டுகளில் சோவியத் யூனியன் மாபெரும் இழிநிலைக்கு மாறியது, 1927ல் இடது எதிர்ப்பு தோற்கடிக்கப்பட்டதில் தொடங்கி 1936-38 மொஸ்கோ விசாரணைகளில் முடிந்த வரை; இதன் விளைவாக ஸ்ராலின் தலைமையில் எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவத்தால் அதிகாரம் ஒருங்கு குவிக்கப்பட்டது .

ஆனால் அது நிலைத்து நின்ற அளவில், உலகத்தில் பெரிய சமுகப் புரட்சியால் ஏற்படுத்தப்பட்ட சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்க அரசுகள் தன்னுடைய பூகோள அபிலாஷைகளை அடைவதற்கு தடையாக அமைத்திருந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், சோவியத் ஒன்றியம் தொடர்பாக "முன்னைய நிலைக்கு செல்லும்"(மோதல் நிலைக்கு) முன்னோக்கு மீண்டும் தலைதூக்கியது. இன்று காற்றலைகளில் எப்படி பேரழிவு ஆயுத அச்சம் அமெரிக்காவை தவிர்க்கமுடியா போரைத் தொடக்க உந்தியது என்பது பற்றிய பிரச்சாரத்தின் முழக்கத்தைக் கொண்டுள்ளதோ, அதேபோல் அப்படிப்பட்ட இரு பேரழிவு ஆயுதங்கள் -இரண்டு அணுகுண்டுகள்-- ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்டன -ஜப்பானைத் தோற்கடிக்கவேண்டிய விருப்பத்தால் அல்ல- அது ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது -சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக ஒர் அச்சுறுத்தலை வெளியிடும் வகையில் என்பது ஞாபகத்தில் கொள்ளப்படவேண்டும்.

போருக்குப் பிந்தைய காலம் முழுவதும் அமெரிக்க இராணுவமும் ஆளும் வட்டங்களும் அமெரிக்கா சோவியத் ஒன்றியம் தொடர்பாக "கட்டுப்படுத்தும்" கொள்கையைக் கையாளலாமா அல்லது "முன்னைய நிலைக்கு செல்லும்" கொள்கையைக் கையாளலாமா என்ற ஆலோசனையில் பூசல் கொண்டிருந்தன. "கட்டுப்படுத்தல்" என்றழைக்கப்பட்ட கொள்கை மேலாதிக்கம் பெற்றது -கொரியப் போரின்போதும், கியூபா போரின்போதும் முழு அளவு தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இல்லை .

ஒரு பரந்த பொது விளக்கத்தையளிக்கும் முறையில், போருக்குப்பின் ஏற்பட்ட பொருளதார செழிப்பு இருந்த நேரத்தில், அமெரிக்கா சமுக சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்றி வந்த அதேவேளை கட்டுப்படுத்தல் கொள்கை நிலைபெற்றிருந்தது. ஆனால் செழிப்பு முடிவுக்கு வந்து, நிலைமை மோசமான பொருளாதாரத்தை 1970களில் கண்டபோது அமெரிக்கா மிக வலியத்தாக்கும் நிலையை மேற்கொண்டது. ஒன்றோடொன்று மோதாமல் நிற்கும் நிலை 1970களில் கைவிடப்பட்டு சோவியத் ஒன்றியத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சிகள் மிகப்பெரிய அளவிலான நிதியங்களுடன் ஆப்கானில் ஆயுதமேந்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனும் மேற்கொள்ளப்பட்டன. இதன் நோக்கம், கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கி (Zbigniew Brzezinskei) - இக்கொள்கையை வடிவமைத்த சிற்பி -ஒப்புக்கொண்டபடி சோவியத் ஒன்றியத்தை வியட்நாம் வழி புதைகுழிக்கு இழுப்பதாகும்.

1980களில் றேகன் நிர்வாகத்தில் போர் ஆயுதச் செலவினங்கள் மாபெரும் அளவில் அதிகரிக்கப்பட்டன; ஐரோப்பாவில் ஏவுகணைகள் தளம், நட்சத்திரப் போர் திட்டங்கள் அனைத்தும் சோவியத் ஒன்றியத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி அதைத் தகர்க்கும் முயற்சிகளேயாகும். ஆயினும், இந்த நடவடிக்கைகள் பலனளிக்கும் முன்பே, சோவியத் அதிகாரத்துவம் கோர்பச்சேவின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்துவிடவும் முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வரவும் முடிவெடுத்தது. கட்டுப்பாடு எதுவுமின்றி அதன் இலக்குகளை அடைவதற்கு அதன் இராணுவ சக்தியைப் பயன்படுத்துதற்கு, அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் இதுதான் உலக அரங்கில் மேலாதிக்கம் கொண்டதிலிருந்து கிடைத்த முதல் வாய்ப்பாக இருந்தது.

எனவே 20ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் -அமெரிக்கா அப்பொழுதுதான் பேராதிக்கப் பணியில் கால் வைத்த நேரம்- தோன்றிய பாணி மீண்டும் புஷ் நிர்வாகத்தின் பல்வேறு அதிகார அறிவிப்புக்களில் எதிரொலிப்பது வியப்பு அல்ல.

1917 ஜனவரியில், அமெரிக்க முதலாம் உலகப்போரில் நுழையும் போது நியாயமான அமைதிக்காக வில்சன் கூறிய கருத்துக்கள், "அமெரிக்க கோட்பாடுகளும், கொள்கைகளும் வேறெதுவும் கிடையாது, ஏனெனில் அவையே வருங்காலத்தைப் பிரகாசத்துடன் நோக்கும் ஆண்கள் பெண்கள் எங்கிருந்தாலும் கொள்ளும் அரிய அடிப்படைகள், ஒவ்வொரு நவீன நாட்டின், ஒவ்வொரு ஒளி வீசும் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள். இவை மனித குலத்தின் அரிய கோட்பாடுகள், வெற்றியடைந்தே தீரும்" என்பதாகும்.

அல்லது புஷ் கூறியுள்ளதுபோல், ``இருபதாம் நூற்£ண்டு ஒரே ஒரு மனித முன்னேற்ற மாதிரியுடன்தான் முடிவடைந்தது. பொது உரிமைகளுக்கும், ஆடவர், பெண்டிர் இவர்களுடைய தேவை என்று வரும்போதும் நாகரீகங்களிடையே பூசல்கள் கிடையாது.`` (Bush Graduation Speech at West Point, June 1, 2002).

அமெரிக்கா போரில் நுழைவதை ஏப்பிரல் 1917ல் அறிவித்தபோது வில்சன் அமெரிக்கா ``மனக்காழ்ப்பு இல்லாமலும், தன்னல நோக்கம் அற்றும், தங்களுக்கு எதுவும் வேண்டும் என்ற விழைவு இல்லாமலும் போரில் இறங்குவதால் நம்மிடம் இருப்பதை விடுதலை பெற்ற மக்களுடன் பகிர்ந்துகொள்வோம்`` என்று கூறினார்.

அதேபோல் புஷ்ஷும் தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்தில் கூறுவதாவது: "இன்று அமெரிக்கா இணையற்ற இராணுவ பலத்தையும் மிகப்பெரிய பொருளாதார அரசியல் செல்வாக்கையும் பெற்று விளங்குகிறது. நம்முடைய மரபையும் கோட்பாடுகளையும் வைத்துக்கொண்டு, ஒருதலைப்பட்ச நன்மைக்கு நாம் நம் வலிமையைப் பயன்படுத்தமாட்டோம். பதிலாக மனித விடுதலைக்கு ஆதரவாக அதிகார சமபல நிலை ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறோம்: அதில் அனைத்து நாடுகளும் சமுதாயங்களும் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரங்களின் சவால்களையும் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்ளும் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்." (Bush preamble to the National Security Strategy).

(ªî£ì¼‹)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved