இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள்: உடைமையைப் பறித்து இனச் சுத்திகரிப்பு செய்து உருவாக்கப்பட்ட ஒரு நாடு

பகுதி ஒன்று

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தக் கட்டுரையானது இரண்டு பகுதி தொடரின் முதலாவது ஆகும். ( பகுதி ஒன்று | பகுதி இரண்டு )

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அதி-வலது அரசாங்கம், அனைத்து ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் சொன்னதை திருப்பிச் சொல்லும் அவற்றின் ஊடக நிறுவனங்களினதும் அதிகபட்ச ஆதரவுடன், இஸ்ரேலுக்குள் கமாஸின் அல் அக்ஷா வேகமான ஊடுருவல் தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட 1,400 உயிரிழப்புகளை, ஒரு கலப்படமற்ற பயங்கரவாத செயல் என சித்தரிக்கிறது. பாரிய பிரச்சார பொழிவின் படி, இது எந்த நியாயப்படுத்தலும் இல்லாத ஒரு “தரைமட்டமாக்கும்” சம்பவமாகும், அதனால் அதற்கு பதிலடியாக காஸாவின் இரண்டு மில்லியனுக்கும் மேலான மக்களுக்கு எதிராக தற்போது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிடும் எத்தகைய குற்றங்களும் தேவையான தற்காப்பு-நடவடிக்கையாக நியாயப்படுத்த முடியும்.

15 நவம்பர் 2022 ஜெருசெலேமில் உள்ள இஸ்ரேல் பாராளுமன்றமான நெசெஸ்டில் சட்டமியற்றுபவர்களுக்கான சத்தியப்பிரமான நிகழ்விற்குப் பின்னர் லிகுட் கட்சித் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) அதி-வலது இஸ்ரேலிய சட்டவாக்கர் பெசலெல் ஸ்மொறிச் (இடது), இஸ்ரேல் பிரதமர் ஜைர் லபிட் மற்றும் அனைது அரசியல் கட்சி தலைவர்களின் குழுவின் படம் [AP Photo/Tsafrir Abayov]

உண்மையில் இது, காஸா பகுதி மற்றும் முடிந்தளவு மேற்கு கரைக்கும் எதிராக நீண்ட-காலமாகத் திட்டமிடப்பட்ட இன அழிப்பு பிரச்சாரம் மற்றும் இனச் சுத்திகரிப்பையும் ஈரான் மற்றும் லெபனான் மற்றும் சிரியாவிலும் உள்ள அதன் கூட்டாளிகளுக்கு எதிரான போரையும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு நியாயப்படுத்தும் செயல் ஆகும். ஏகாதிபத்திய மையங்களில் நூறு சதவீதம் அவருக்குப் பின்னால் உள்ள நெதன்யாகுவின் கூட்டாளிகள், இஸ்ரேலின் பாசிச கொள்கைகளுக்கு எதிரான எந்த எதிர்ப்பையும் யுத-எதிர்ப்பு நடவடிக்கைகளாக பூதாகரமாக்கி அவை தடைசெய்யப்பட வேண்டியவையாக காட்டுகின்றன.

ஆனால், இஸ்ரேல் இரண்டாவது நக்பாவைத் திட்டமிடுகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா? நெதன்யாகு இதை முற்றிலும் தெளிவாக்கியுள்ளார். அவர் வட காசாவில் உள்ள 1.1 மில்லியன் மக்களை ”இப்போதே வெளியேறுமாறு” கூறும் அதே வேளை, ”நாம் சொல்லும் வரையில்” அவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார். அவர்கள் எங்கே போக வேண்டும் என யாரும் கூறவில்லை. அவர்கள் எங்கு தப்பி ஓடினாலும் அங்கும் இஸ்ரேல் அதன் குண்டுத் தாக்குதலை நிறுத்தாது.

பாதுகாப்பு அமைச்சர் ஜோ கலன்ட், “காஸா மீதான முழுமையான முற்றுகையை” ஆரம்பித்து, மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் உட்பட வாழ்வதற்கு அத்தியாவசியமான அனைத்தையும் முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு கிடைப்பதை தடுத்துவிட்டு, ”நாம் மனித விலங்குகளுடன் போரிடுவதோடு அதற்கேற்றவாறே செயற்படுகிறோம்” என்ற பாசிச வெறித்தனத்தை கக்கினார்.

நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மொட்ரிச், “ஹமாசை கொடூரமாக தாக்குங்கள், கைதிகளின் விசயத்தை முக்கியமாகக் கருதவேண்டாம்” என இராணுவத்துக்கு கூறினார்.

“ஹமாசைத் தாக்குவதன்” யாதார்த்தம் என்னவெனில், காஸா மீது தரைவழி படையெடுப்பை நடத்தி வரும் வேளையில், அதன் மீது சரமாரியாக குண்டுத் தாக்குதல் நடத்தி, அரைவாசிப்பேர் சிறுவர்களாக இருக்கின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொலை செய்தல் ஆகும். “காஸாவில் கொல்லப்பட்டவர்களுக்குப் போதுமானளவு சடலப் பைகள் இல்லை” என்று ஐக்கிய நாடுகளின் பலஸ்தீனிய அகதிகள் முகவர் அறிவிக்கும் அளவிற்கு, விமானத் தாக்குதலிலான படுகொலைகள் நடக்கின்றன. ஒட்டுமொத்த சுற்றுப்புறமும் இடிபாடுகளாக மாறிவிட்டன.

காஸா ஆரம்பம் மட்டுமே. “பலஸ்தீனியர்களைக் தாக்கவும் கொலை செய்யவும் மற்றும் அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றவும் ஆயுதம் ஏந்திய குறியேறிகளுக்கு தங்குதடையற்ற சுதந்திரமளித்து இஸ்ரேலிய துருப்புகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் அனைத்து சுதந்திரமான நடமாட்டத்தையும் தடுக்க புதிய சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளன.

.இஸ்ரேலுக்குள், அதிதீவிர-தேசியவாதிகள் மற்றும் பாசிசக் கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையான ”மக்கள் தொகை இடமாற்றங்கள்” என்பதன் வழியே இனச் சுத்திகரிப்புக்கு தாம் உள்ளாக்கப்டுவோம் என பாலஸ்தீனியர்கள் அஞ்சுகிறார்கள். அதி-வலது உளவாளிகள், 1948 இல் கட்டாய வெளியேற்றங்களை கண்ட லோட் போன்ற கலப்பு மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களுக்குள், அவர்களை யூதர்களாக மாற்றும் பிரகடனப்படுத்தப்பட்ட நோக்கத்துடன் நகர்ந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் இந்த பாசிச குழுக்களை ஆயுதபாணியாக்கவே 10,000 துப்பாக்கிகளை வாங்கியதாக அறிவித்தார். பொலிஸ் தலைமை அதிகாரி கோபி சப்டை, இஸ்ரேலில் காஸாவுக்கு ஆதரவான போராட்டத்திற்கு ”எந்த அனுமதியும்” இல்லை எனவும் போர்-எதிர்ப்பு போராட்டக்காரர்களை முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு அனுப்புவதாகவும் எச்சரித்தார்.

அரசின் சட்டபூர்வ அடித்தளமாக யுத மேலாதிக்கத்தை உயர்த்துகின்ற இஸ்ரேலின் 2018 தேசிய-அரசு சட்டத்தின் முழுமையான அமுல்படுத்தலானது அராபியர்களை இரண்டாந்தர பிரஜைகளாக கூட இல்லாமல், அவர்களை யூத அரசில் இருந்து முழுமையாவே வெளியேற்றுவதே என்பது இப்போது தெளிவாகின்றது.

இஸ்ரேல் அரசின் ஸ்தாபகம்

இது, பாலஸ்தீனத்தில் தற்போதுள்ள அரேபிய மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது, 1948 இல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்த மூன்று-தசாப்த கொடூரம் மற்றும் வெகுஜனப் படுகொலைகளின் உச்சமாகும்.

பாலஸ்தீனிய அரசுடன் சேர்ந்த பாலஸ்தீன மண்ணில் ஒரு யூத அரசாங்கம் என்ற பிரிவை வலியுறுத்தி 1947 நவம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் நடத்தப்பட்ட பிரிவினையை வலியுறுத்தும் வாக்கெடுப்பானது அத்தயைதொரு முக்கியமான புவிசார் மூலோபாய பகுதியில் கட்டுப்பாட்டைப் பேண தீரமானித்த போட்டிச் சக்திகளின் சூழ்ச்சியின் விளைவு ஆகும். இது, நாஜி ஜேர்மனியின் கைகளில் படு மோசமாக பாதிக்கப்பட்ட மற்றும் இப்போது மேற்குக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்களுமான ஐரோப்பிய யூதர்களுக்காக காணப்பட்ட பாரியளவிலான வெகுஜன அனுதாபத்தை பயன்படுத்தி கையாளப்பட்டது.

சியோனிஸ்ட் மற்றும் ஏகாதிபத்தியவாத பிரச்சாரத்தின் மிக இழிவான கூற்றுக்களில் ஒன்று, மத்திய கிழக்கில் இஸ்ரேலை ”ஒரேயொரு ஜனநாயகம்” என்று அடிக்கடி அறிவிப்பதே ஆகும். ஆனால் 1947 இல், இடம்பெயர்வுக்குப் பிறகும் மக்கள்தொகையில் வெறும் மூன்றில் ஒரு பகுதியாக இருந்த யூதர்களைக் கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு நாட்டில் இஸ்ரேலிய அரசை ஸ்தாபித்தமை ஜனநாயகரீதியாக நடக்கக்கூடிய ஒன்றல்ல.

டெல் அவிவ், 1952 இல் ஜேர்மனியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் ஹெருட் கட்சித் தலைவர் மெனச்செம் பெகின் உரையாற்றுகிறார்.   [Photo: Hans Pinn, National Photo Collection of Israel]

இஸ்ரேலின் சொந்த வரலாற்றாசியர்கள், அரசு ஆவணக் காப்பகங்களைப் பயன்படுத்தி, வலது-சாரி தேசியவதிகள், மத வெறியர்கள் மற்றும் இந்த நாட்டை இப்போது ஆளும் தளபதிகளின் அரசியல் முன்னோடிகளால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளனர். நெதன்யாகுவின் லிகுட் கட்சியானது 1977 இல் இருந்து 1983 வரையில் பிரதமராக இருந்த மெனசெம் பெகின் தலைமையிலான இர்குன், 1983 இல் பிரதமரான ஜிட்சாக் சமிர் தலைமையிலான ஸ்ரேன் கும்பரின் ஆகிய இயக்கங்களின் அரசியல் தொடர்ச்சி ஆகும். இந்தப் பயங்கரவாதக் கும்பல்கள், முதலாம் உலகப் போருக்கு பின்னரான காலத்தில் பாலஸ்தீனியர்கள் மீதும் மற்றும் நாடுகளின் கழகத்தின் ஆணையின் கீழ் பாலஸ்தீனத்தை ஆண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மீதும் கொடூரமான போரை நடத்தின. 1948 வரையிலான சுமார் 30 ஆண்டுகளில் 1300 யூதர்களின் மரணத்துக்கு பதிலடியாக பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை கொன்றனர்.

1948ல் டெய்ர் ஜசினில் இருநூறுக்கும் அதிமான ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டமை மிகச் சிறந்த உதாரணம் ஆகும். பாலஸ்தீனிய அகதிகள் பிரச்சனையின் பிறப்பு 1947-49 என்ற மிக முக்கியமான தனது புத்தகத்தில், வரலாற்றாசிரியர் பென்னி மொரிஸ், “பாலஸ்தீனத்தில் இருந்து அரேபிய கிராமத்தவர்களின் வெளியேற்றத்தைத் துரிதப்படுத்தியதில்“ மிக முக்கியமான காரணிகளில் இதுவும் ஒன்றாகும் என விளக்கியுள்ளார். 1947 நவம்பருக்கும் 1948 மேயில் பிரிட்டிஷ் ஆணையின் முடிவுக்கும் இடையில் பலவந்தம், அட்டூழியங்கள் மற்றும் கொலைகள் உட்பட பயங்கரவாத பிரச்சாரம் போன்றவற்றின் சேர்க்கையால் வெளியேற்றப்பட்ட 375,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் அகதிகளாக மாறியுள்ளனர்.

டெயிர் யசினில் இஸ்ரேலிய இராணுவப் படைகளுக்கு சுருக்க விளக்கமளிக்கப்பட்ட போது [Photo: Hans Pinn, National Photo Collection of Israel]

இஸ்ரேலின் பிரதமரான டேவிட் பென் குரியன், இஸ்ரேல் அரசை நிறுவுவதாக அறிவித்ததை அடுத்து, 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர், சுமார் 13,000ம் பாலஸ்தீனியர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. இதில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் முதல் 7,000ம் வரையான சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை இஸ்ரேல் மறுத்ததால், பெரும்பாலானவர்கள் காஸா பகுதி, மேற்குக் கரை, ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் ஒரு மோசமான நிலையில் தஞ்சமடையத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு ஜோர்தான் தவிர, அரபு நாடுகளில் குடியுரிமை பெருமளவில் மறுக்கப்பட்டதால் அவர்களும் அவர்களது சந்ததியினரும் பதிவு செய்யப்பட்ட அகதிகளாக ஆனார்கள். பலர் இப்போது மத்திய கிழக்கில் வேறு இடங்களில் வாழ்கின்றனர், மற்றவர்கள் மேற்கு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

பெரும்பாலும், பின்னர் தொழிற் கட்சியாக மாறிய, ஹஸ்ட்டட்ருட்/மாபய் (Histadrut/Mapai) கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் முன்னோடியான ஹகானாவை, பென் குரியன், பாலஸ்தீனியர்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கு தானே ஊக்குவித்தார். தெற்கு நகரமான ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள அல்-தவாய்மா கிராமத்தில் 100 முதல் 120 பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டதோடு, முன்னாள் இர்குன் மற்றும் லெஹி படைகளால் உருவாக்கப்பட்ட ஹகனா பட்டாலியன் 1948 அக்டோபரில் நடத்திய கொடூரமான படுகொலை உட்பட, குறைந்தது 31 படுகொலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் யோவ் இராணுவ நடவடிக்கையின் (15-22 அக்டோபர் 1948) ஒரு பகுதியான நிகழ்வுகளை நேரில் பார்த்த ஒரு சிப்பாய், “அங்கு போர் நடக்கவில்லை, எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. முதல் வெற்றியாளர்கள் 80 முதல் 100 அரபு ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளைக் கொன்றனர். பிள்ளைகளின் மண்டையை கட்டையால் அடித்துக் கொன்றனர். எவரும் கொல்லப்பட்டிருக்காத வீடே இருக்கவில்லை,” என விளக்கினார்.

அக்டோபர் 1948 ஆம் ஆண்டு யோவ் நடவடிக்கையின் போது, பெய்ட் குர்வினுக்கு வெளியே இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் 89வது படையணியின் உறுப்பினர்கள் [Photo: Beit Gidi Exhibits]

இந்தப் படுகொலைச் சம்பவத்திற்காக யாரும் குற்றஞ்சாட்டப்படவில்லை. ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிவாரணத் திட்டத்தின்படி, தெற்கு பிராந்தியத்தின் இனச் சுத்திகரிப்பு காரணமாக காஸா பகுதியின் அகதிகளின் எண்ணிக்கை 100,000 இலிருந்து 230,000ம் ஆக உயர்ந்துள்ளது.

போரின் முடிவில், 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 1,157,000 பாலஸ்தீனியர்களில் சுமார் 200,000 பேர் மட்டுமே இஸ்ரேலாக மாறிய பாலஸ்தீனத்தின் பகுதிகளில் இருந்தனர். பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவது இன்னும் வியத்தகு முறையில் முன்னெடுக்கப்பட்டது. 1946 இல், இஸ்ரேலாக மாறிய இடத்தில் யூதர்கள் 12 சதவீதத்திற்கும் குறைவான நிலத்தையே வைத்திருந்தனர்; 1948-49 போருக்குப் பிறகு, வெளியேற்றப்பட்ட அல்லது தப்பி ஓடிய பாலஸ்தீனியர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்துவதன் பேரில் இஸ்ரேலிய அரசாங்கம் கைவிடப்பட்ட சொத்து கட்டளைச் சட்டத்தை இயற்றியபோது இது 77 சதவீதமாக உயர்ந்தது.

பயங்கரவாதம் மற்றும் இனச் சுத்திகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட இஸ்ரேலால், தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் போரின் மூலம் வெளியேற்றுதல் மற்றும் அகற்றுதல் என்ற இரட்டைக் கொள்கைகளை மட்டுமே தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியும். பென் குரியனின் தொழிற்கட்சி இஸ்ரேலில் தங்கி குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியர்கள் மீது 1966 வரை இராணுவ ஆட்சியை விதித்தது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்கள் மீது, இன்றுவரை தொடரும் இராணுவ ஆட்சியை சுமத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பே இது இடம்பெற்றது.

1949 க்குப் பிறகு தங்கள் முன்னாள் வீடுகளுக்குத் திரும்ப அல்லது அவர்களது குடும்பங்களைப் பார்க்க முயன்ற பாலஸ்தீனியர்களுடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படை மீண்டும் மீண்டும் ஒருதலைப்பட்சமாகப் போரிட்டது. 1956 இல் ஏரியல் ஷரோனின் கிபியா படுகொலையில் 69 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இது மிகவும் இழிபுகழ்பெற்ற சம்பவங்களில் ஒன்றாகும். 1949 மற்றும் 1967க்கு இடையில், ஒருபுறம் இஸ்ரேல் மறுபுறம் எகிப்திய ஆயுதப்படைகள் மற்றும் பாலஸ்தீனிய போராளிகளுக்கு இடையே நடந்த ஃபெடாயீன் போரில் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாக 2,800 முதல் 5,000 பாலஸ்தீனியர்கள் வரை கொல்லப்பட்டனர்.

1953 அக்டோபரில் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலுக்குப் பிறகு கிபியாவில் வசிப்பவர்கள் தங்கள் கிராமத்திற்குத் திரும்பி வருகிறார்கள்.

1967 ஜூனில், ஜனாதிபதி கமல் அப்துல் நாசரால் எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா பகுதியிலிருந்தும் அவர்கள் பாதுகாத்து வந்த டிரான் நீரினையான ஷர்ம் எல் ஷேக்கில் இருந்தும் ஐ.நா படைகளை வெளியேற்றியதையும் மற்றும் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்திற்கு ஜலசந்தியை மூடியதையும் பயன்படுத்திக்கொண்ட இஸ்ரேல். முன்கூட்டியே தாக்கி அழிக்கின்ற, ஆனால் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்தது. ஒரு மதிப்பீட்டின் படி, ஆயிரத்துக்கும் குறைவான இஸ்ரேலிய மரணங்களுடன் ஒப்பிடுகையில் 20,000ம் அரேபிய படையினர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஐந்து நாள் போரின் போது, இஸ்ரேல் சிரியாவின் கோலன் குன்றுகள், ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்குக் கரை மற்றும் அது இணைத்துக்கொண்ட கிழக்கு ஜெருசலேம் மற்றும் எகிப்தின் சினாய் தீவு மற்றும் எகிப்து ஆக்கிரமித்திருந்த காஸா பகுதியையும் கைப்பற்றியது. இது, ஜோர்தானின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்குக் கரையில் இருந்த 900,000 பாலஸ்தீனியர்களில் மேலும் 250,000 முதல் 325,000 வரையானோரை ஜோர்டானுக்கும் 100,000 சிரியர்கள் சிரியாவிற்கும் தப்பிச் செல்ல நிர்ப்பந்தித்தது.

1967 போரானது 1973 அக்டோபரில் மற்றொரு போருக்கு வழிவகுத்தது, எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திரும்பப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் மீது திடீர் இராணுவத் தாக்குதலை நடத்தின. அது இறுதியில் தோல்வியுற்றது. அவர்களது தோல்வியானது இஸ்ரேலுடன் ஒரு சமாதான உடன்படிக்கையில் எகிப்து கையெழுத்திடவும் அனைத்து அரபு முதலாளித்துவ ஆட்சிகளும் பாலஸ்தீனியர்களுக்கு எந்த ஆதரவையும் வழங்காமல் கைவிடுவதையும் விளைவாக்கியது.

1967 ஆம் ஆண்டு அரபுப் படைகளின் தோல்வி, யாசீர் அராபத் மற்றும் அவரது அல் ஃபத்தா அமைப்புக்கு, ஆயுதப் போராட்டத்தின் மூலம் பாலஸ்தீன அரசை அடைவதற்கான அதன் அர்ப்பணிப்புடன், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைமைப் பொறுப்பை ஏற்கும் சூழ்நிலையை உருவாக்கியது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் ஆதரிக்கப்பட்டு ஆயுதபாணியாக்கப்பட்ட இஸ்ரேலுக்கும், இப்போது அரபு ஆட்சிகளால் தனிமைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு பரந்த சமத்துவமற்ற இராணுவப் போராட்டத்தைத் தொடங்கியது.

தொடரும்

Loading