ரஃபா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாரிப்பு செய்கையில், பாலஸ்தீனிய மருத்துவமனைகளில் பாரிய புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்  

தெற்கு காஸாவில் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் நான்கு பாரிய புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை செவ்வாயன்று குறைந்தது 310 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் கிடைத்த இந்த கொடூரமான கண்டுபிடிப்பு, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவிலான இனப்படுகொலைக்கு கூடுதல் ஆதாரத்தை வழங்குகிறது, இது ரஃபாவில் உயிர்வாழ போராடும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நெருங்கி வரும் தாக்குதல்கள் உடனடியாக அதிகரிக்க உள்ளது. 

ஏப்ரல் 23, 2024 செவ்வாய்க் கிழமை, காஸாவில் உள்ள டெய்ர் அல் பலாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்குப் பிறகு புகை எழுகிறது. [AP Photo/Abdel Kareem Hana]

செவ்வாய்க்கிழமை பாலஸ்தீனிய சிவில் பாதுகாப்புப் படையினர், பெண்கள், முதியவர்கள் உட்பட பலரின் உடல்கள் குப்பைக் குவியல்களுக்கு அடியில் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். மேற்குக் கரையை தளமாகக் கொண்ட அல்-ஹக் பாலஸ்தீனிய உரிமைகள் குழுவின் பிரதிநிதியான ஜைனா ஹரூன், அல் ஜசீராவிடம் கூறுகையில், இந்த கொடூரமான கண்டுபிடிப்பு “போர்க்குற்றங்கள் மற்றும் நிச்சயமாக காஸாவில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேலால் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கான அப்பட்டமான சான்று” என்று கூறினார். 

காஸா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் பல வாரங்களுக்கு முன்னர் இதேபோன்ற பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், “ஒரு குடும்ப உறுப்பினர் தனது மாமாவின் தடயத்தை மட்டும் கண்டுபிடிக்க ஆசைப்பட்டார். அவர் அவரது செருப்பைக் கண்டுபிடித்தார். ஆனால், அவரது ஒரு உடல் உறுப்பு, ஒரு கை அல்லது ஒரு கால் கிடைத்தாலும், அவர்கள் குறைந்தபட்சம் அதை எடுத்து அவரை புதைக்க முடியும், அதனால் அவர்கள் இரவில் தூங்க முடியும் என்று கூறினார்.

20 ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலைகளை நினைவூட்டும் கான் யூனிஸ் மற்றும் காஸா நகரத்தின் மனிதாபிமானமற்ற காட்சிகள், ஏகாதிபத்திய ஆதரவிலான இஸ்ரேலிய ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின்  பாசிசவாத அரசாங்கம், காஸா பகுதியை இனரீதியில் சுத்திகரிக்கும் அதன் நோக்கத்தை பகிரங்கமாக அறிவித்து, பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று கண்டனம் செய்துள்ளது. அப்பகுதியின் வடக்கில் சிக்கித் தவித்த நூறாயிரக் கணக்கானவர்களுக்கு திட்டமிட்டு உதவிகளை வழங்க மறுத்துள்ளது. அத்துடன் 200 நாட்கள் இடைவிடாத குண்டுவீச்சுக்களை மேற்கொண்டு 34,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளது. 

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் முழு ஆதரவுடன் இஸ்ரேலிய ஆட்சி, தென்னாபிரிக்காவால் சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளி, காஸாவில் பஞ்சம் தலைவிரித்தாடுகையில் அதன் தாக்குதலைத் தொடர்கிறது. 

செவ்வாயன்று, மனிதாபிமான பிரச்சினைகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் டேவிட் சாட்டர்ஃபீல்ட் காஸாவில் பஞ்சத்தின் அச்சுறுத்தல் “மிக அதிகம்” என்று விவரித்தார். காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் இதுவரை 30 குழந்தைகள் “பஞ்சத்தின் விளைவாக” இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

காஸா பற்றிய அதன் சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் (UNRWA), சமீபத்திய வாரங்களில் காஸாவிற்கு வரும் உதவியின் அளவு அல்லது வடக்கு காஸாவிற்கான உதவித் தொடரணிகளுக்கு இஸ்ரேலின் ஒப்புதலில் “மிகக் குறைவான குறிப்பிடத்தக்க மாற்றம்” இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்னர், உலக மத்திய சமையலறை (World Central Kitchen organization) அமைப்பைச் சேர்ந்த ஏழு உதவிப் பணியாளர்களை இஸ்ரேல் இலக்கு வைத்து கொன்ற பின்னர், நெத்தன்யாகு அரசாங்கம் வடக்கு காஸாவிற்குள் ஒரு நில எல்லையை கடக்கும் பாதையைத் திறக்கவும், அப்பகுதிக்குள் டிரக்குகளின் ஓட்டத்தை நாளொன்றுக்கு 300 க்கும் அதிகமாக அதிகரிக்கவும் தயாராக இருப்பதாக கூறியது. UNRWA தலைவர் Philippe Lazzarini செவ்வாயன்று காஸாவிற்குள் 310 டிரக்குகள் கடந்து சென்றன என்று தெரிவித்தார், காஸா மக்களுக்கு போதுமான உணவு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதற்கு 500 முதல் 600 டிரக்குகள் தேவை என்று பெரும்பாலான உதவி அமைப்புக்கள் ஒப்புக் கொண்டுள்ள எண்ணிக்கையை விட இது மிகக் குறைவாகும். 

UNRWA அறிக்கை, இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள் அல்லது நிறுவனங்கள் மீது குறைந்தபட்சம் 435 தாக்குதல்கள் இஸ்ரேலால் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கிறது. இது மாதாந்திர விகிதத்தில் வேறு எந்த சமீபத்திய மோதலையும் விட அதிகமாகும். அக்டோபர் 7 முதல், 180 UNRWA ஊழியர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். 

காஸா மீதான இஸ்ரேலின் அழிப்பு நடவடிக்கை, அங்குள்ள மக்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை இடம்பெயரச் செய்துள்ளது, 1.7 மில்லியன் மக்கள் “பல முறை” தப்பி ஓட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் தொற்று நோய்கள் பரவுவதற்கு பங்களித்துள்ளது. இது சுமார் 1.09 மில்லியன் மக்களை அல்லது மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை பாதித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் Volker Turk இன் கூற்றுப்படி, காஸாவில் “ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும்” ஒரு குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைகிறது.  

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அனைத்து சிவிலியன் உள்கட்டுமானங்களையும் திட்டமிட்டு தகர்த்திருப்பது, தினசரி விமானத் தாக்குதல்களை விட விரைவில் நோய்களும் பஞ்சமும் அதிக உயிர்களைப் பறிக்கும் ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளது. யுத்தத்திற்கு முன்னர் சூழப்பட்ட பிரதேசத்தில் இருந்த 36 ஆஸ்பத்திரிகளில் 10 மட்டுமே இன்னமும் சுகாதார வசதிகளாக இயங்கி வருகின்றன. அல்-ஷிபா அல்லது நாசர் மருத்துவமனைகளில் உள்ளது போல் பல மருத்துவமனைகள் கொலைக்களங்களாக மாற்றப்பட்டுள்ளன அல்லது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. முன்னர் காஸாவில் ஒரே சிறப்பு புற்றுநோய் பிரிவின் இருப்பிடமாக இருந்த, காஸா நகரத்திற்கு தெற்கே உள்ள துருக்கிய-பாலஸ்தீனிய நண்பர்கள் மருத்துவமனை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் ஒரு இராணுவ தளமாக மாற்றப்பட்டுள்ளது. 

“உற்பத்திக்கு பஞ்சம்: காஸா பகுதியில் பட்டினி என்ற போர்க்குற்றத்தை இஸ்ரேல் செய்கிறது” என்ற தலைப்பில் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் மனித உரிமைகளுக்கான இஸ்ரேலிய மையமான B’Tselem அந்த பகுதியின் பட்டினி நெருக்கடியில் இஸ்ரேலின் உடந்தையையும், அதன் குறுகிய மற்றும் நீண்டகால தாக்கங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு கட்டங்களின் ஒருங்கிணைந்த வகைப்பாட்டின் அடிப்படையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் காஸா 4 ஆம் கட்டத்தில் இருந்தது, இது கட்டம் 5 க்கு சற்று கீழே இருந்தது, அதாவது பஞ்சத்திற்கு ஒத்திருக்கிறது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. 

இந்த மாதங்களில், வடக்கில் 55 சதவீத குடும்பங்களும், மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 25 சதவீத குடும்பங்களும் ஏற்கனவே 5 ஆம் கட்டத்தில் இருந்தன. இந்த புள்ளிவிவரங்கள் வடக்கில் 70 சதவீதமாகவும், மத்திய காஸாவில் 50 சதவீதமாகவும், தெற்கில் 45 சதவீதமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காஸா முழுவதையும் பஞ்சத்தில் ஆழ்த்தும். USAID உடைய தலைவரான சமந்தா பவர், ஏப்ரல் தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் விசாரணையில் வடக்கு காஸாவில் ஏற்கனவே பஞ்சம் பற்றிக் கொண்டுள்ளது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட முதல் அமெரிக்க அதிகாரி ஆவார் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. 

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமின் ஃபலூஜா சுற்றுப்புறத்தில் வசிக்கும் 52 வயதான காமிஸ் அல்-அராஜ், அங்குள்ள கொடூரமான வாழ்க்கை நிலைமைகளை தனது அறிக்கையில் விவரித்தார்: 

இங்கு உணவோ, தண்ணீரோ இல்லை. உண்மையில், இங்கே எதுவும் இல்லை. நீங்கள் சந்தையில் உணவு பெற முடியாது - பதிவு செய்யப்பட்ட உணவு, மாவு அல்லது அரிசி எதுவும் இல்லை. வாற்கோதுமை கூட மிஞ்சவில்லை. சில நேரங்களில் சாலையின் ஓரத்திலோ அல்லது வயல்வெளிகளிலோ குபீசா (உண்ணக்கூடிய பூச்செடி) வளர்வதைக் கண்டுபிடித்து அதை நாங்கள் பறிப்போம். நெருப்பு மூட்டுவதற்கு ஏதாவது அட்டை அல்லது விறகு கிடைத்தால், அதை தண்ணீரில் சமைத்து ஓரிரு நாட்கள் சாப்பிடுவோம், இது குறைந்தபட்சம் இரவில் நன்றாக தூங்க அனுமதிக்கிறது. நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை குபீசாவை சாப்பிடுவோம், இப்போது அது எங்கள் ஒரே உணவு ஆதாரமாக உள்ளது. கடந்த நான்கு நாட்களாக, நாங்கள் மிகவும் பசியுடன் இருந்ததால் தூங்கவில்லை. நாங்கள் ஒன்றும் சாப்பிடவில்லை. எங்களுக்கு எந்த உணவும் கிடைக்கவில்லை. நான் எல்லா நேரத்திலும் உணவைத் தேடுகிறேன், இரவிலும் அதைப் பற்றி சிந்திப்பதை என்னால் நிறுத்த முடியாது. முகாமில் உள்ள ஒவ்வொருவரும் பசியால் வெளிறிப் போயிருப்பதோடு அவர்களால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. 

இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்கு 26 பில்லியன் டாலர் கூடுதல் உதவியை வழங்க சனிக்கிழமை அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் செவ்வாயன்று செனட்டிலும் நடந்த இருகட்சி வாக்களிப்பால் பலப்படுத்தப்பட்ட இஸ்ரேலின் அதிவலது அரசாங்கம், வடக்கு மற்றும் அதற்கு முந்தைய கான் யூனிஸைப் போலவே ரஃபாவையும் தரைமட்டமாக்க தயாரிப்பு செய்து வருகிறது. 

செவ்வாயன்று Associated Press (AP)  கான் யூனிஸிற்கு மேற்கே ஒரு கூடார நகரம் கட்டப்படுவதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது, இது ரபாவின் மக்களை இடம்பெயரச் செய்வதற்கான தயாரிப்புக்களின் அறிகுறியாகும். கூடார வளாகத்தை நிறுவுவதில் அது சம்பந்தப்படவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை AP யிடம் கூறியது. இஸ்ரேலிய நாளேடான Haaretz, பாலஸ்தீனியர்கள் எல்லையைக் கடந்து சினாயில் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு எகிப்திய அரசாங்கம் அந்த இடத்தை நிர்மாணித்து வருவதாக தகவல் கொடுத்துள்ளது. 

விடயம் என்னவாக இருந்தாலும், 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான ஒரு கூடார வளாகம் நடைமுறையில் காஸாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்களுக்கு ஒரு பாரிய சித்திரவதை முகாமாக இருக்கும் என்பதோடு, நோய்கள் இன்னும் கூடுதலாக பரவுவதற்கான நிலைமைகளை உருவாக்கும். 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குனர் Fabrizio Carboni AFP இடம் கூறியுள்ளபடி, மனிதாபிமான பணியாளர்களுக்கு ரஃபா மக்களை வெளியேற்றும் திட்டம் பற்றி எதுவும் தெரியாது, அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது. “[காஸாவின்] மத்திய பகுதியிலும் வடக்கிலும் அழிவின் அளவைப் பார்க்கும்போது, மக்கள் எங்கு இடம்பெயர்வார்கள் என்பதை நாங்கள் தெளிவாகக் காணவில்லை... அங்கு அவர்களுக்கு கண்ணியமான தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதற்கும், இன்று, எங்களிடம் உள்ள தகவல்களைக் கொண்டு, நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து, இது [பாரிய வெளியேற்றம்] சாத்தியம் என்று நாங்கள் காணவில்லை” என்று அவர் கூறினார்.

காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் காட்டுமிராண்டித்தனத்தை இயல்பாக்குவது வாஷிங்டனால் முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அது, இனப்படுகொலையை ஈரானை இலக்காகக் கொண்ட பிராந்திய அளவிலான போரைத் தீவிரப்படுத்துவதில் ஒரு முக்கிய கூறுபாடாக காண்கிறது. எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கு மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தை பலப்படுத்த நோக்கம் கொண்டுள்ள இந்த மோதல், உலகை மறுபங்கீடு செய்வதற்காக பிரதான சக்திகளுக்கு இடையே வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் மூன்றாம் உலகப் போரில் ஒரு போர்முனையாகும். 

காஸா இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். ஏகாதிபத்திய சக்திகள் போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பின் அனைத்து வடிவங்களையும் அதீத ஈவிரக்கமின்றி ஒடுக்கி வருகின்ற நிலைமைகளின் கீழ், 20 ஆம் நூற்றாண்டின் அனைத்து கொடூரங்களையும் புதுப்பிக்கும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் அரசியல்ரீதியாக அணிதிரள்வதன் மூலமாக விடையிறுக்க வேண்டும். 

Loading