World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US imposes sanctions on Pakistani nuclear firm

பாகிஸ்தானிய அணுசக்தி நிறுவனத்தின்மீது அமெரிக்கப் பொருளாதாரத்தடை

By Vilani Peiris
21 April 2003

Back to screen version

வடகொரிய சாங்வாங் ஸின்யாங் கப்பொரேஷன் (Changgwang Sinyong Corp of North Korea -CSCNK) என்ற அரசுடைமை நிறுவனத்திலிருந்து ஏவுகணைகளை இறக்குமதி செய்ததாகக் குற்றம் சாட்டி கான் ஆய்வு சோதனைக்கூடம் (Khan Research Laboratries) என்னும் பாகிஸ்தான் நிறுவனத்தின் மீது அமெரிக்கா எதிர்பாராவிதமாக இரண்டாண்டு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் இதுபோன்ற தடைகள் வடகொரிய நிறுவனத்தின்மீது விதிக்கப்பட்டன; அவை இப்பொழுது மார்ச் 2005 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 31ம் தேதி பொது அறிவிப்பாகச் செய்யப்பட்ட இத்தடைகள் அமெரிக்க அரசாங்கம் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் எவ்வகையிலும் KRL உடன் வணிக அல்லது தொழில்நுட்ப பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாதென ஆணையிடுகின்றன. இவை, 1998ல் அணுஆயுதப் பரிசோதனைகளை பாகிஸ்தான், இந்தியா ஆகியவை நடத்திய அளவில் அறிவிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பின்னர் சுமத்தப்படும் முதல் புதிய தடைகளாகும்.

ஏப்ரல் 1ம் தேதி பத்திரிகையாளர் கூட்டத்தில் அமெரிக்க அரசுத்துறை சார்ந்த ரிச்சர்ட் பெளச்சர், பேரழிவு ஆயுதங்கள், ஏவுகணைகள் என்றழைக்கப்படுவதை பெற்றுக்கொள்ளவோ உருவாக்கவோ ஆன "அயல்நாடு, அயல்நாட்டான் அல்லது நிறுவனத்தின் கணிசமான முயற்சிகளுக்கு ஒரு சடரீதியான பங்களிப்புக்காக", KRL மீது இந்த தண்டனைகள் சுமத்தப்பெறும் எனக் கூறினார். இதைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டபொழுது KRL மீதான குற்றச்சாட்டுக்களை விரிவாக எடுத்துரைக்க அவர் மறுத்துவிட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின்பொழுது வடகொரியா பன்னாட்டு ஒப்பந்தங்களை மீறி யூரேனிய வளர்ச்சித் திட்டத்தைத் தொடக்கியதை ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறுகிறது. இக்குற்றச்சாட்டையொட்டி அமெரிக்க வடகொரிய நாடுகளுக்கிடையே விரைவில் இணக்கம் அற்ற பதட்டநிலை வளர்ந்தது; இதையொட்டி அணு ஆயுத அதிகரிப்புத்தடை (Nuclear Non-Prohiterion Agreement) உடன்பாட்டிலிருந்து பியோங்யாங் விலகிக்கொண்டதுடன், பன்னாட்டு ஆய்வாளர்களை நாடு கடத்தியபின் 1994ல் அமெரிக்காவுடன் கொண்ட ஏற்பாட்டின்படி உறைந்துபோயிருந்த அணு சக்தி ஆயுத வளர்ச்சியை மீண்டும் தொடக்கியது.

அந்த சமயத்தில் ஏவுகணை மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்ப அறிவிற்காக பாகிஸ்தான் வடகொரியாவிற்கு யூரேனிய வளர்ச்சியூட்டத் திட்டத்திற்கு உதவியளித்தது என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஒரு அமெரிக்க உளவு செயற்கைக்கோள் பாகிஸ்தானிய இராணுவப் போக்குவரத்து கடந்த ஆண்டு வடகொரியாவிற்கு யாருமறியாமல் கொண்டு சென்றதை கண்டது என்ற, அண்மையில் செய்தி ஊடகத்திற்கு ரகசியமாக கொடுக்கப்பட்ட செய்தியைத்தவிர வேறு எந்த ஆதாரமும் அமெரிக்காவில் காட்டப்படவில்லை. பாகிஸ்தானிய அதிகாரிகள் இக்குற்றச்சாட்டைப் பலமுறை மறுத்துள்ளனர்.

KRL பாகிஸ்தானின் முக்கிய அணு ஆயுத நிறுவனமாகும். இது அரசு உடைமையான நிறுவனம்; நாட்டின் அணு ஆயுத வளர்ச்சியில் முக்கிய பங்கு கொண்ட அதன் முன்னாளைய தலைவர் அப்துல் காதிர்கானின் (Abdul Qadeer Khan) பெயரே இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. தற்பொழுது கான், அரசு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். 1993ம் ஆண்டு சீனாவிடமிருந்து ஏவுகணைகள் தருவித்துக்கொண்ட குற்றச்சாட்டுக்களுக்காகவும், பின்னர் 1998ல் பாகிஸ்தான் நடத்திய அணு ஆயுதச் சோதனைகளை அடுத்தும் இந்நிறுவனம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாயிற்று.

1998ல் போடப்பட்ட KRL மீதான தடைகள் ஏப்ரல் 2000ல் காலாவதியான போதிலும் பாகிஸ்தான் அமெரிக்கப் பொருளாதாரத் தடையின் கீழ் இருந்துவந்தது. செப்டம்பர் 11, 2001 அமெரிக்கா மீதான தாக்குதலிற்குப்பின், புஷ் ஆட்சியின் "பயங்கரவாதிகளின் மீதான பூகோள போருக்கு", குறிப்பாக ஆப்கானிய நாட்டின் மீதான படையெடுப்பிற்குப்பிற்கு, பாகிஸ்தானின் இராணுவப்புகழ் பர்வேஸ் முஷாரப்பின் ஆதரவிற்குப் பின்னர், பெரும்பாலான தடைகள் அமெரிக்காவில் நீக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் கொலின் பவல் இதைப் பற்றிப் பேசியபொழுது முஷரப், கொரியாவுடனான கூட்டுமுயற்சி ஏதுமில்லை என மறுத்துவிட்டார். ஆனால் பாகிஸ்தான் வடகொரியாவுடன் "மேலும் தொடர்புகள் கொள்ளாது" என்ற உறுதிமொழியை அவர் அளித்தார். அமெரிக்காவிடம் அரசியலளவிலும் பொருளாதார அளவிலும் சார்ந்திருக்கும் பாகிஸ்தானிய இராணுவ ஆட்சி அதனுடன் எந்தப் பிளவையும் தவிர்க்க தீவிரமாகவே உள்ளது.

KRL மீதான இக்கடைசித்தடை முக்கியமாக அலங்காரத் தடையேயாகும்; ஏனெனில் இந்நிறுவனம் அமெரிக்காவிடம் எந்த வணிகமோ மற்ற தொடர்போ கொண்டிருக்கவில்லை. பல மாதங்களுக்கு முன்னால் பாகிஸ்தானுக்கும் வடகொரியாவிற்குமிடையே நிகழ்ந்ததாகக் கூறப்படும் இராணுவ ஒத்துழைப்பு என்ற குற்றச்சாட்டைக் காரணம் கூறி பொருளாதாரத்தடை மீண்டும் சுமத்தப்பட்டுள்ளது, பாகிஸ்தானில் அண்மையிலுள்ள அரசியல் சூழ்நிலையில் அதிருப்தி கொண்டிருக்கும் அமெரிக்காவின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதற்கே வடிவமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

தலிபான் அரசுக்குக் கொடுத்த ஆதரவை முஷாரப் துறந்ததும் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தது உட்பட அமெரிக்காவின் ஆப்கானியப் போருக்கான ஆதரவும் பாகிஸ்தானில் பொதுவான பரவலான எதிர்ப்பைத் தோற்றுவித்தன; இதைப் பல இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் பயன்படுத்திக்கொண்டன. கடந்த அக்டோபர் மாதம் ஆறு இஸ்லாமிய அமைப்புக்களின் கூட்டணியாகிய முத்தாஹிதா மஜ்லிஸ் அய்-அமல் (Muttahida Majlis-i-Amal-MMA) தேசியப் பாராளுமன்றத்தில் 53 இடங்களைக் கைப்பற்றியது; மேலும் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான பலாச்சிஸ்தானில் பிராந்திய ஆட்சியையும் கைப்பற்றியது.

ஈராக்கின் மீதான அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் போரின் தொடக்கத்தையொட்டிய சூழலில் பாகிஸ்தான் நகரங்களில் பெருமளவிலான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன; இவற்றில் சில MMA ஆல் ஏற்பாடு செய்யப்பட்டன. மார்ச் மாத இறுதியில் வடமேற்கு மாநிலத்தில் பெஷாவர் நகரத்தில் ஈராக்கிற்கு எதிரான ஓர் பேரணியில் 3,00,000 மக்கள் பங்குகொண்டனர். MMA ஒரு முக்கிய பங்குவகித்தபோதிலும் எதிர்புப் ஆர்ப்பாட்டமானது, ஈராக்கின் மீதான கொடூரத் தாக்குதலுக்கு பரந்த மக்களின் குரோதத்தையும் அதேபோல இந்தியத் துணைக் கண்டத்தில் அமெரிக்காவின் தலையீட்டிற்கும் முஷாரப்பின் ஜனநாயக விரோதப்போக்கிற்கும் பரந்த மக்களின் குரோதத்தையும் எதிரொலித்தன.

"இஸ்லாமாபாத்தின் இராக்கின் மீதான கருத்து 140 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை" என MMA தலைவர் பஸ்லுர் ரெஹ்மான் (Fazlur Rehman) மார்ச் 30 பேரணியில் "உலகத்திற்கான செய்தியாக" விடுத்தார். மெளலானா சமி-உல்-ஹக், (Maulana Sami-ul-Haq) என்ற பிறிதொரு MMA பேச்சாளர் அமெரிக்க எப்பிஐ உளவுத்துறையினரை நாடு கடத்தும்படி அரசைக் கேட்டுக்கொண்டார்; ஏனெனில் அவ்வமைப்பு அல் கொய்தா உறுப்பினர்களை அச்சுறுத்தி அகற்றிவருகின்றன. மேலும் அமெரிக்கப் படைகளுக்கு நாட்டின் இராணுவ தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த எதிர்ப்புக்கள் சற்றே வாஷிங்டனிடமிருந்து விலகியிருக்குமாறு முஷாரப்பை நிர்ப்பந்தப்படுத்தின. பாராளுமன்ற பெரும்பான்மைக்காக MMA ஆதரவை நம்பியுள்ள பாகிஸ்தான் பிரதம மந்திரி மீர் ஜபருல்லாகான் ஜமாலி (Mir Zafarullah Khan Jamali) மார்ச் மாத நடுவில் மேற்கொள்ளவிருந்த வாஷிங்டன் பயணத்தை ஒத்திவைக்கும்படி நிர்பந்திக்கப்பட்டார். சென்ற மாதம் பாகிஸ்தானின் அயல்நாட்டு அமைச்சர் குர்ஷீத் மெஹ்முத் கசூரி இஸ்லாமாபாத் "ஈராக் மீதான தாக்குதலுக்காக வருத்தம்" கொண்டதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் ஹூசைன் "ஆயுதக்களைவில் ஈடுபட தவறியதற்காக" குறைகூறினார்.

இந்த அரசியல் நிலையை வாஷிங்டன் கவனத்தில் கொண்டிருக்கும், அதிலும் ஐ.நா.வில் அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பை முறையாக்கும் தீர்மானத்திற்குப் பாகிஸ்தான் ஆதரவு தரத்தவறியதை கவனத்தில் எடுத்திருக்கும். சமீபத்திய செய்திக் குறிப்புக்கள் எவ்வாறு ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் மீண்டும் தலையெடுத்துள்ளன என்பது வாஷிங்டனின் கவனத்தில் உள்ளதாகக் கூறுகின்றன; ஏனெனில் அவ்வமைப்புக்கள் முஷாரப்பினால் தடை செய்யப்பட்ட போதிலும் புதிய பெயரில் உருவெடுத்துள்ளன என்பது அமெரிக்காவின் கூற்று. இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷே முகம்மது, லஷ்கர்-இ-தொய்யபா என்ற அமைப்புக்கள் இவற்றுள் உள்ளடங்குவன.

போன வார இறுதியில் அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஜால்மே கலில்ஜாத் (Zalmay Khalilzad) ஆப்கானிய உறுதி நிலைக்கு பாகிஸ்தான் ஏதேனும் பங்கம் விளைவித்தால் அது "அமெரிக்க நலன்களுக்குச் சவாலாகும்" என வெளிப்படையாக எச்சரித்தார். அமெரிக்கப் படைகளுக்கும் எதிர்ப்பு இராணுவத்திற்கும் ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைப் புறத்தில் நடந்த கைகலப்பிற்குப் பின்னர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானிய அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து அவர் காபூலில் இவ்வாறு கூறினார். ஆப்கானில் அமெரிக்காவிற்கும் அதன் பொம்மையாட்சிக்கும் குரோதமாக செயல்படும் பாகிஸ்தான் பகுதியிலிருந்து செயல்படும் பழைய ஆப்கன் குழுக்களை நசுக்கவேண்டும் என்று அவர் முஷாரப்பிற்கு தெளிவுபடுத்தினார்.

KRL க்கு எதிரான பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டபின் MMA நிர்வாகி காசி ஹிசைன் அகமது (Qasi Hussein Ahmed) "அமெரிக்கா ஈராக்கையடுத்து பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கும்" என்பதற்கு இது ஒரு சான்றாகும் எனக் கூறினார். அதன் இராணுவ நிகழ்ச்சி நிரலில் அடுத்த விஷயமாக இஸ்லாமாபாத்தில் "ஆட்சி மாற்றத்தை" செய்ய புஷ் நிர்வாகம் நோக்கங்கொண்டிருக்கிறது, இந்தக் கட்டத்தில் எந்த ஆதாரமும் இல்லை. ஆயினும் கலில் ஜாத் கூற்றுக்களைப் போல, பொருளாதாரத் தடைகள், முஷாராப்பிற்கு அவர் அமெரிக்காவின் நிபந்தனைகளையும் எச்சரிக்கைகளையும் ஏற்காவிடில் கடுமையான அளவில் எதிர்பாரா முடிவைச் சந்திக்க நேரிடும் என்பதற்காகக் கூறப்படும் எச்சரிக்கை ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved