World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Why are troops really deployed in London?

லண்டனில் துருப்புகள் ஆயத்தமாய் நிறுத்தப்பட்டிருப்பது ஏன்?

By Chris Marsden and Julie Hyland
14 February 2003

Back to screen version

அல்கெய்டா பயங்கரவாதிகளின் மிரட்டலைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலும், இதர பகுதிகளிலும் 450 க்கு மேற்பட்ட துருப்புக்களையும், 1.700 போலீஸ் அதிகாரிகளையும் பாதுகாப்பு பணியில் பிரிட்டனின் தொழிற்கட்சி அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது. ஆனால் இந்த முடிவிற்கு வந்ததற்கான காரணம் என்ன என்பதை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையில் விளக்கம் தருவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

பல பிராந்திய விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், கவனம் முழுக்கத் தலைநகரின் பக்கமே திரும்பியிருக்கிறது. இயல்புக்கு மாறான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, விமான நிலைய ஒடு பாதைகளிலும் ஹீத்ரோ விமான நிலைய நுழைவு வாயில்களிலும் டாங்கிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மிகக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதற்கு இது ஒரு உதாரணமாகும். விமானப்படை லண்டன் நகருக்கு மேலே பறந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. லண்டனில், போலீஸ் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுரங்க ரயில் நிலையங்களில் வாகனங்களையும், தனிநபர்களையும் வழியில் தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அத்துடன் நடமாடுகின்ற மக்கள் அடையாளச் சான்றுகள் வைத்திருக்க வேண்டுமென்று போலீஸார் கோருவதுடன், கார்களையும் வழியில் நிறுத்தி சோதனை செய்து வருகின்றார்கள்.

அரசாங்கத்தின் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் நோக்கத்தில் பொதுமக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எந்ந அளவிற்கு இந்த நம்பிக்கையின்மை சென்று விட்டதென்பதை, எதிர்கட்சிகளான பழமைவாதிகள் (Conservative) மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகள் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இது தெரிகின்றது. அரசாங்கம் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் ''வெறும் பகட்டுவித்தை'' என்று குற்றம் சாட்டப்பட்டு வருவதை மறுக்கும் வகையில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும் என்று இக்கட்சிகள் கோரியுள்ளன. பி.பி.சி நிருபர்கள் கூட அரசாங்க அதிகாரிகளிடம் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்விகளை தொடுத்து வருவதுடன், ஈராக்கிற்கு எதிராகப் போர் புரிவதற்கான திட்டத்தை நியாயப்படுத்தும் நோக்கில் பீதி சூழ்நிலையை உருவாக்குவதற்காக இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா? என்ற கேள்வியையும் இந்த நிருபர்கள் கேட்டனர். ஆனால் அரசாங்கமானது பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று பதில் தருவதற்கு மறுத்துவிட்டது.

அத்துடன் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் புலனாய்வுத் தகவல் என்ன என்பதை வெளியிடுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. நிர்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டதற்கு பதிலளிக்கின்ற வகையில் தொழிற்கட்சித் தலைவர் ஜோன்ரீட் முதலில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதாவது, ''நியூயோர்க்கில் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது போன்ற'' ஒரு மிரட்டலைத் தொடர்ந்து தான் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக தனது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்த அறிக்கையில் கூறியபோதும், பின்னர் அவர் அதனை வாபஸ்பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.

இது போன்ற விளக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக வந்து கொண்டிருக்கின்றன. கையினால் வீசக்கூடிய வெடிகுண்டு, அல்லது ரொக்கெட் ஏவும் கருவி, அல்லது உயிரியல் இரசாயன ஆயுதங்களை எப்படி போர் டாங்கிகள் தடுத்து நிறுத்த முடியும் என்பதை இவர்கள் எவரும் விளக்கவில்லை.

நியூயோர்க்கிலும், வாஷிங்டனிலும் புஷ் நிர்வாகம் போருக்கான ஆயத்தங்களை இறுதிக் கட்டங்களுக்கு கொண்டு செல்வதால், லண்டனில் எடுக்கப்பட்டிருப்பது போன்ற நடவடிக்கைகளை அதுவும் மேற்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு நாடுகளிலுமே இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு கோருகின்ற ஒரே காரணம், பிப்ரவரி 15ந் தேதி சனிக்கிழமையன்று முஸ்லீம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டம் முடிவடையும்போது, பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்பதாகும்.

ஸ்கொட்லாந்து யார்ட் (Scotland Yard) மற்றும் MI5 புலனாய்வுக் குழுவினர் பிரிட்டனில் 40 இஸ்லாமிய தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் அல்கெய்டா அமைப்போடு தொடர்புள்ளவர்கள் என்றும் தகவல் தந்திருக்கின்றன. எல்லா முஸ்லீம்களையும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளோடு ஆத்திரமூட்டுகின்ற வகையில் சம்மந்தப்படுத்துவது பத்திரிகை செய்திகளிலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை வழியில் நிறுத்தி சோதனையும் செய்து வருகிறார்கள்.

பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்ற அடிப்படையில் அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது பொதுவான அரசியல் நோக்கம் கொண்டதாகும். ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மற்றொரு திட்டவட்டமான பரிணாமமும் உண்டு. முஸ்லீம்களின் ஈத் விழா முடிகின்ற நேரத்திலேயே உலகம் முழுவதிலும் போருக்கு எதிரான கண்டனப் பேரணிகள் நடந்து வருகின்றன. லண்டனில் நடைபெற்ற பேரணி மிகப் பிரம்மாண்டமானது. 500.000 முதல் 1 மில்லியன் வரையான மக்கள் அதில் கலந்து கொண்டனர். பல ரயில்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தனியாக கட்டணம் செலுத்தி வந்தனர். ஆயிரக்கணக்கான வண்டிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை தலைநகருக்கு கொண்டுவர இத்தகைய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் பேரணி அரசின் செல்வாக்கிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் பிரதமர் டோனி பிளேயர் தொலைக்காட்சியில் தோன்றியபோது, ஈராக்கிற்கு எதிரான போரை பிரிட்டனில் ஆதரிக்கிற ஒரு நபராக மட்டுமே தெரிந்தார். இருந்தாலும் தான் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து விலகாமல் அதில் உறுதியாக நிற்கப்போவதாக காட்டிக்கொண்டார்.

அவரது இந்தப் போக்கு பிரிட்டனின் மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கிவிட்டுள்ளது. கடந்த மாதங்களில் பிளேயர் உலகின் பல நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து பிரிட்டன் புஷ் நிர்வாகத்தின் மிக உறுதியான நண்பன் என்று வலியுறுத்திக் கூறிவந்ததுடன், பிரிட்டனை அமெரிக்கா நம்பி செயல்பட முடியும் என்றும் பிளேயர் உறுதியளித்திருந்தார். சனிக்கிழமையன்று நடைபெறும் கண்டனப் பேரணி உலகிற்கு தெளிவாக பிளேயர் அரசாங்கம் எந்த அளவிற்கு மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும், எந்த அளவிற்கு புஷ் தொடுக்கும் போரை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதையும் தெளிவாகக் காட்டிவிடும்.

இதனால் தான் ஆர்ப்பாட்டங்கள் இறுதியாக சென்றடையும் பொதுக்கூட்ட மேடையான ஹைட்பார்க் பகுதியில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதித்து விடலாமா என்பது குறித்து அரசாங்கம் பலவாரங்கள் ஆலோசனை செய்து வந்தது. இப்படி பகிரங்கமாக ஜனநாயக உரிமைகளை நசுக்குவது எதிர்ப்பை ஒரு முகப்படுத்திவிடும் என்ற காரணத்தினால்தான் இறுதியில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு தடைவிதிக்கவில்லை.

அண்மையில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களது எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களது ஆத்திரத்தையும் உருவாக்கியிருக்கிறது. லண்டன் நகரப் போலீசார் பொது மக்கள் தலைநகருக்கு வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். அத்துடன் பல சுரங்க ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகள் மூடப்படலாம்.

தனியார் பஸ் வண்டிகளை மற்றும் இதர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து கைதுகள் நடக்கும் வாய்ப்புகளும் உண்டு. பயங்கரவாதிகளின் மிரட்டலை காரணம் காட்டி கடைசி நேரத்தில் கூட ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து விடவும் முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வதற்கு தேவைப்படுகின்ற ஒரேயொரு அறிவிப்பு வெடிகுண்டு மிரட்டலாகும்.

தற்போது எது நடந்தாலும் பொதுமக்களின் வாழ்க்கை இராணுவமயம் ஆக்கப்பட்டுவிட்டது. ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சியானது ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்தை உருவாக்கிகொண்டிருக்கிறது. ஏற்கெனவே போலீஸார் மத்திய லண்டனில் துருப்புகள் நிறுத்தப்படும் என்று அறிவித்தும் விட்டனர்.

இதைப்பற்றி யாரும் பீதியடையத் தேவையுமில்லை அல்லது பீதியூட்டுவதற்காக இதைச் சொல்லவுமில்லை. மிகுந்த விரக்தியோடு செயல்படுகின்ற ஓர் அரசாங்கத்தை நாம் சந்திக்கிறோம். எந்த விதமான அரசியல் ரீதியிலான மக்களது கட்டளையையும் பெறாமல் போரில் ஈடுபட அது உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனது சொந்தக் குடிமக்களது ஜனநாயக உரிமைகளை துச்சமாக மதித்து வருவதை திரும்பத்திரும்ப அது தனது நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved