World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israeli elections highlight disaster facing Middle East

இஸ்ரேலிய தேர்தல்கள் மத்திய கிழக்கு சந்திக்க உள்ள பேராபத்தை பிரதிபலிக்கிறது

By Ann Talbot
28 January 2003

Back to screen version

மத்திய கிழக்கு முழுவதையும் ஸ்திரமற்றதாக்கும் ஒரு போரை எதிர்நோக்கி உள்ள நிலைமைகளில், இஸ்ரேலியர்கள் இன்று தேர்தலுக்கு செல்லும்போது தங்கள் நாடு அதிகாரபூர்வமான அரசியல் வாழ்வில் முன்னெப்போதுமிராத அளவுக்கு நெருக்கடி நிலையை சந்திக்கிறதை காண்கிறார்கள்.

இஸ்ரேல் 'கடன் வழங்க முடியாத' நாடாக அறிவிக்கப்படவுள்ள நிலைமையை அடையுமளவிற்கு அதன் பொருளாதாரம் சீரழிந்துபோயுள்ளது. இப்போதும், இஸ்ரேலிய மக்களின் சமூக நிலைமை மேல் தாக்கம் உண்டாக்கும் இந்த கடுமையான பிரச்சனையை அணுகித்தீர்க்காமல், இந்த அரசு பாலஸ்தீன மக்கள் மீது கொடூரமாக போர் புரிந்து வருகிறது.

எல்லா கருத்து கணிப்பெடுப்புகளும், ஆரியல் ஷரோனின் அரசின் மேற்கு கரை மற்றும் காசாவில் குரூரமான கொள்கைக்கு மிகச்சிறிய அளவில்தான் ஆதரவு உள்ளதை காட்டுகிறதுடன், பல இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பின்வாங்குவதையே விரும்புகிறார்கள். தேர்தலில் நிற்கும் கட்சிகளில் எதுவுமே ஒரு மாற்று அரசியல் முன்னோக்கை வழங்காததால், இஸ்ரேலிய பாராளுமன்றமான Knesset இல் அவருடைய லிக்குட் கட்சி மிகப்பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றிபெறும் நிலையில் உள்ளது.

1993ல் ஆரம்பித்து ஒஸ்லோ அமைதிச் செயல்பாட்டை ஷரோன் சுத்தமாக நிறுத்திவிட்டதோடு பாலஸ்தீன அதிகாரமட்டத்தையும் அழித்துவிட்டார். அவருடைய அரசு இஸ்ரேலிய இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் மேற்கு கரையின் ஒவ்வொரு நகரத்தையும் கொண்டு வந்ததோடு, பாலஸ்தீன தலைவர்களையும் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் படுகொலை செய்து, விசாரணை இல்லாமலே ஆயிரக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்களை சிறையிலடைத்தும், பாலஸ்தீன பிரதேசத்திற்குள்ளே குடியேறும் சியோனிஸ்டுகளுக்கான நிதியுதவியை அதிகரித்தும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் வளங்களை ஆக்கிரமிக்க உள்ள போக்கோடு இஸ்ரேலிய அரசியலை அவர் இணைத்துள்ளார்.

சென்ற வார இறுதியில் காசா நகரத்தின் மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் நடக்காத அளவில் பெரியதொரு ஆழமான இஸ்ரேலிய படையெடுப்புக்கு அரசாங்கம் ஆணையிட்டது. இதில் 12 பேர் கொல்லப்பட்டும், குறைந்தது 67 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலிய பீரங்கிகளும், ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளும் பாலஸ்தீன வீடுகளையும் கடைகளையும் அழித்தன. இராணுவ புறக்காவல் நிலையத்திற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுவனும் சுடப்பட்டு இறந்துபோனான். மேற்கு கரையும், காசா பிரதேசமும் தேர்தல் நடப்பதை ஒட்டி மூடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு அமைச்சரான Shaul Mofuz, காசாவில் மறு ஆக்கிரமிப்பு நடக்காது என்பதை மறுத்துவிட்டார்.

சந்தேகமில்லாமல், வன்முறையை அதிகப்படுத்துவதால் வாக்காளர்களை அச்சுறுத்தி தனக்கே வாக்களிக்கச் செய்யலாம் என்று ஷரோன் நினைத்துள்ளார். விரக்தியடைந்த பாலஸ்தீன இளைஞர்கள் மனித வெடிகுண்டாகி பதில் தற்கொலை தாக்குதலில் ஈடுபடுவது அதிகமாகியுள்ளதால், இது ஒடுக்குமுறையை நியாயப்படுத்த பாவிக்கப்படும். இதுதான் ஷரோனின் சுயநலமிக்க வழமையான நடைமுறையாகும்.

உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளுக்கு எந்த ஒட்டுமொத்த ஆதரவும் கிடைக்காததைப் பார்த்தால், அரசியலில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் நேரடியாகவே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஷரோன் தன் பிரச்சாரத்திற்காக சட்ட விரோதமான நன்கொடையாக 1.5 மில்லியன் டொலர்களை தென்ஆபிரிக்க வியாபாரியிடமும், குடும்ப நண்பர் சிரில் கெர்னிடமும் (Cyril Kern), லிக்குட் தேர்தல் பட்டியலில் இடத்தையும் பெற்றுக்கொண்ட அடியாட்கள் கூட்டத்திடமிருந்தும் பெற்றுள்ளார். இந்த தீவிர குற்றச்சாட்டுகளை விசாரிப்பதை விட்டுவிட்டு, அதனை வெளியிட்டமைக்காக அரசு வழக்கறிஞர் Liora Glatt Berkowitz இனை ஷரோன் தற்காலிக பதவி நீக்கம் செய்தார். இப்போது விசாரணையை எதிர்நோக்கியுள்ள அந்த பெண்மணிக்கு அநேகமாக மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

தொழிற் கட்சி

இந்த குற்றங்கள் அம்பலமாகிய பின்னாலும், தொழிற்கட்சியானது அரசியலில் எந்த முன்னேற்றத்தையும் பெற முடியவில்லை. தேர்தலில் அதிர்ஷடத்தை சோதிக்க சிறிது முயற்சிக்குப்பின் தன் புதிய தலைவர் அம்ரம் மிஸ்நாவின் (Amram Mitznah) கீழ் முயன்றும், தொழிற்கட்சியின் ஆதரவு வீழ்ச்சியடைந்தது. கருத்துக்கணிப்புகள் 19 ஆசனங்களையே இந்தக்கட்சி பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கிறது. சில தொழிற்கட்சி உறுப்பினர்கள் ஷரோன் தலைமையிலான கூட்டாட்சி அரசில் சேர விழுப்பம் தெரிவித்துள்ளனர், மற்றைய பலர் எதிர்த்துள்ளனர். இதனால் இக்கட்சி பிளவுபடலாம்.

ஷரோனுக்கு மாற்றாக தன்னை ஒரு தீவிர பழைமைவாதியாக மிஸ்நா (Mitznah) காட்டிக்கொள்ளவில்லை. பாலஸ்தீனத்தோடு மீண்டும் அமைதிப் பேச்சுக்களை தொழிற்கட்சி அரசு ஆரம்பித்து அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைக்கும் என அவர் அறிவித்துள்ளார். உண்மையில், லிக்குட்டை விட அடிப்படையில் வித்தியாசமான ஒரு அரசியல் முன்னோக்கையும் தொழிற்கட்சி முன்வைத்ததில்லை. தொழிற்கட்சி பிரச்சாரத்தில் ஏற்பட்ட விரைவான பிளவுகள், உத்தியோகபூர்வமான அரசியலின் மத்தியில் லிக்குட் கட்சிக்கு ஒரு மாற்றாக தோற்றமளித்ததையும் நீக்கிவிட்டது. தேர்தலில் வாக்களிக்க வருவோரின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விட குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்அரசியல் போக்கில் இருந்து அதிகளவில் அந்நியப்படும் வெளிப்பாடாகும்.

பாலஸ்தீன கேள்விக்கு மிஸ்நாவின் அணுகுமுறை வித்தியாசமாக இருப்பதற்கான காரணம் என்னவெனில், இஸ்ரேலின் அண்டை அரபு நாடுகளுடனான வர்த்தகத்தின் மூலம் செல்வம் சேர்க்க முனையும் ஒரு பணக்கார தட்டினையே அவர் பிரதிநிதித்துவப்படுத்ததுகின்றார். அரேபியர்களுடன் ''நல்ல உறவுகள்'' என்று பிரபலபடுத்தப்படும் ஹைஃபாவின் மாநகரத் தந்தையான அவரின் உறவு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களோடு மட்டும்தான். மாநகரத்தந்தை மிஸ்நா பணக்கார அரேபியர்களுடன் தேநீர் குடிக்கும்போது, ஏழை அரேபியர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுகின்றன.

அரேபிய மற்றும் இஸ்ரேலிய வர்த்தக பிரிவினரிடம் உள்ள ஒரு பொதுவான விருப்பம் என்னெவெனில், உருவாக்கும் ஒரு பாலஸ்தீன நாட்டை உற்பத்திக்கும், விவசாயத்துக்கும் குறைந்த ஊதிய உழைப்பின் மூலமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் அது. மேற்கு கரையிலும், காஸா பரப்பிலும் நீடித்த ஆக்கிரமிப்பானது இவ்வாறான பொருளாதார அபிவிருத்தியையும், இஸ்ரேலின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதித்துள்ளது.

ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து இஸ்ரேலி படைகளை திரும்பப்பெறுவதற்காக மிஸ்நா விடுத்த அழைப்பில் எவ்விதமான முற்போக்கான உள்ளடக்கமும் இல்லை. இஸ்ரேலிய இராணுவத்தில் ஒரு ஜென்ரலாக உள்ள அவர், எந்த ஒரு இராணுவ தளபதியைப் போலவே பாலஸ்தீனர்கள் மீது கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட ஆர்வத்துடனே உள்ளார். Noam Chomsky தன் புத்தகமான Fateful Triangle (அழிவுகரமான முக்கோணம்) இல், முதல் இன்டிபாடா எழுச்சியின் மிஸ்நா மேற்கு கரை தளபதியாக இருந்தபோது கல்லெறிந்தது போன்ற சந்தேகத்திற்குரிய சிறிய குற்றங்களை சாட்டாக கொண்டு அதை செய்தவர்களின் குடும்பத்தினரின் 3,000 பாலஸ்தீன வீடுகளை இராணுவம் அழித்ததை குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 1987 முதல் மார்ச் 1989 வரையிலான காலத்தில், மிஸ்நா தலைமையில் இராணுவ படைகள் 302 பாலஸ்தீனர்களை கொன்றும், 3252 இனரை காயப்படுத்தியுள்ளது.

மிஸ்நாவின் ''அமைதி பேச்சுவார்த்தை'' என கூறப்பட்டதற்கான ஆதரவுக்கான அழைப்பு, 1993ல் ஒஸ்லோவிலும், 2000ல் கேம்ப் டேவிட்டிலும் ஆரம்பித்தது. இது, மேற்கு கரை மற்றும் காஸாவில் பந்துஸ்த்தான் (தென்ஆபிரிக்காவில் ஆதிகுடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோன்ற) உடன்பாட்டுமுறையில் காலனி ஆதிக்கத்தை உருவாக்கிடவே முன்வைத்த யோசனைக்காகும். முன்னர் வைக்கப்பட்ட நிபந்தனைகளையெல்லாம் ஏற்ற பாலஸ்தீன தலைவர் யாசீர் அராபாத் இதனை ஏற்க மறுத்துவிட்டார், ஏனென்றால் இதன்படி வெளிப்படையாகவே பாலஸ்தீன நாடு இஸ்ரேலின் அதிகாரத்தின் கீழ் வந்துவிடும் என்பதாலாகும்.

முந்தைய லிக்குட் ஆட்சியாளர்கள் முன்வைத்த தன் தொடர்ச்சியாகத்தான் பாராக்கின் (Barak) திட்டங்கள் அமைந்தது. அவர்களைப்போல் இவரும் சட்டவிரோத குடியிருப்புகளை தொடர அனுமதித்தார். செப்டம்பர் 2000ல் Temple Mountக்கு ஆத்திரமூட்டும் விஜயத்தை ஷரோன் மேற்கொள்ள பாரக் அனுமதித்ததோடல்லாமல், அங்கு பாலஸ்தீன எதிர்ப்பாளர்களை சுடவும் உத்தரவிட்டார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் முடிய வேண்டும் என்ற எண்ண அலைகளின் விளைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக் அரசுடனான கசப்பான அனுபவங்கள், அரசியலுடனான ஆழமான அவநம்பிக்கை தோன்றுவதற்கு கூடிய பங்குவகித்தது என்பது தற்போதைய தேர்தலில் காணக்கூடியதாக உள்ளது.

அவர்கள் ஆட்சியை இழந்ததும், ஷரோனின் தேசிய ஐக்கிய கூட்டணி அரசில் தொழிற்கட்சி இணைந்துகொண்டு, சிமோன் பெரசின் சர்வதேச மதிப்பை பயனபடுத்தி ஒஸ்லோ ஒப்பந்தத்தை சட்டபூர்வமாக்கி பாலஸ்தீனர்களை நசுக்கிடவே முனைந்தது. ஷரோனின் அமைச்சரவையில் மற்ற தொழிற்கட்சி உறுப்பினரான பென் எலிசர், லிக்குட் உறுப்பினர்களைவிட தீவிர வலதுசாரியாக இருந்தார்.

இது தொழிற்கட்சியின் கொள்கைகள் மட்டும் வங்குரோத்தாகிவிட்டதை காட்டவில்லை. Peace Now, மெரட்ஸ் (Meretz) மற்றும் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட போர் இயக்கம் போன்ற அனைவருமே பகிர்ந்துகொள்ளும், அமைதியும் ஜனநாயகமும் இஸ்ரேலிய நாட்டின் இருப்புடன் ஒத்துப்போகும் என்ற அடிப்படை நோக்கத்தினது வங்குரோத்தாகும்.

எவ்வாறிருந்தாலும், லிக்குட் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தமை இராணுவ பலத்தாலும், அச்சுறுத்தலாலும் மட்டுமே சியோனிஸ்டுகளின் திட்டத்தை பராமரிக்கலாம் என்பதன் புறநிலை தன்மையை பிரதிபலிக்கின்றது. அதன் அரசியல் ஓட்டமானது, முன்னரைவிட இனச்சுத்திகரிப்பிற்கான கூடுதலான பகிரங்கமான ஆதரவு வழங்கியதுடன், அதிகரித்த ஊழல் மற்றம் அனைத்து ஜனநாயக வடிவங்களையும் அழிவுக்குள்ளாக்கும் நிலைமையானது இஸ்ரேலிய நாட்டின் வன்முறைமிக்க உருவாக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மாற்றமுடியாத வரலாற்று விதிமுறையின் வெளிப்பாடாகும்.

அமெரிக்காவின் பங்கு

தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்த அரசியல் போக்கில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியுள்ளது. பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்டு மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் புதுப்பித்து வரைய உள்ள அமெரிக்காவின் நோக்கம் குறித்து மிகவும் வெளிப்படையாகவே பேசி வருகிறார். நிர்வாகத்திலுள்ள சமாதானப்புறாக்கள் எனப்படுபவர்கள் கூட, ஆக்கிரமித்த பிரதேசங்களில் தொடர்ச்சியாய் நடத்திவரும் அட்டூழியங்களைக் குறித்து மிக லேசான விமர்சனங்களையே தெரிவித்துள்ளன.

நடப்பாண்டில் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் அதிகாரபூர்வமான நிதியுதவி 2.7 பில்லியன் டொலர்கள், இதில் 2.1 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவியாகும். இருப்பினும், இஸ்ரேல் அவசரகால உதவியாக இன்னும் 8 பில்லியன் டொலர்கள் கடன் உத்தரவாதங்களாகவும், 4 பில்லியன் டொலர்கள் பிரத்தியேக இராணுவ உதவிகளாகவும் கோரியுள்ளது. ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரினதும் பிராந்திய ஸ்திரத்தன்மையினதும் பொருளாதார தாக்கம் இஸ்ரேலின் மேல் உள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதன் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அமெரிக்காவால் ஆற்றவேண்டிய பங்கு பற்றி பரிசீலித்து வருகிறது'' என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் சீன் மெக்கார்மக் (Sean McCormack) கூறியுள்ளார்.

பல செய்தியாளர்கள் புஷ் நிர்வாகத்திற்கும், லிக்குட் கட்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்கள். பாதுகாப்பு கொள்கையின் உதவிச்செயலாளர் டக்ளஸ் ஃபெயித் (Douglas Feith) மற்றும் பாதுகாப்பு கொள்கை குழுவின் தலைவர், ரிச்சர் பேர்ல் (Richard Perle) ஆகியோர் 1996 எழுதிய ஆலோசனை கடிதத்தில், புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட லிக்குட் அரசை ஒஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை ''உடைத்து எறிய'' அழைப்பு விடுத்ததோடு, மேற்குகரை மற்றும் காசாவில் மறு ஆக்கிரமிப்பு செய்யுமாறும் குறிப்பிட்டிருந்தார்கள். யூதர்களுக்கான தேசிய பாதுகாப்பு மைய (JINSA) த்தின் வலதுசாரி உறுப்பினர்களும், பாதுகாப்பு கொள்கைக்கான மையமும் (CSP) பென்டகன் மீதும், வெளிநாட்டு அமைச்சக குழுவின் மீதும், பேர்லின் பாதுகாப்பு கொள்கை அமைப்பின் மீதும் லிக்குட் கொள்கைகளை தீவிரமாக முன்தள்ளி வருகின்றனர்.

தந்திரோபாய காரணங்களுக்காக ஆக்கிரமித்த மாநிலங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை தடுக்க அமெரிக்க அதிகாரிகள் சில நிர்பந்தங்களை விதிக்க முயற்சி செய்கின்றனர். ஈராக் மீதான தன்னுடைய போருக்கு, வாஷிங்டனுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவை காப்பாற்றிக்கொள்ள முனைகின்றது. புஷ்ஷை சுற்றியுள்ள வலதுசாரி பிரிவுகள், இஸ்ரேலை பயன்படுத்தி அந்த பகுதியையே வெடித்துச் சிதறியடிக்கவும், யூதர்கள் மீதும் அராபியர்கள் மீதும், வரப்போகும் பயங்கரமான விளைவுகள் பற்றி சிறிதும் எண்ணாமல் தயாராக உள்ளது.

வாஷிங்டன் உடனான இஸ்ரேலின் மூலோபாய கூட்டானது, பாரம்பரியமாக இந்நாட்டின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் ஐரோப்பா மீதான ஆத்திரமூட்டும் அணுகுமுறையில் அதிகரித்தளவில் பிரதிபலிக்கிறது. Newsweek இற்கு அளித்த பேட்டியில், ஷரோனிடம் நால்வர் அணியான ஐ.நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் ரஷ்யா முன்வைத்துள்ள அமைதி திட்டங்கள் பற்றி கேட்டபோது, அவர் ''அந்த நான்கும் ஒன்றுமில்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்'' என்று பதிலளித்து ஒதுக்கித்தள்ளிவிட்டார்.

ஒரு அமைதி மாநாட்டுக்கு ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்ய பிரிட்டன் எடுத்த முயற்சிகளுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள் வெளிப்படையாக இடையூறுகளை ஏற்படுத்தினர். பாலஸ்தீன அதிகாரமட்ட பிரதிநிதிகள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளுவதை மறுத்துவிட்டனர்.

முதலாளித்துவ தேசியவாதத்தின் பங்கு

பாலஸ்தீனர்களும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், சியோனிஸ்டுகளின் கூட்டணியின் தாக்குதல்களுக்கும் ஆளாவதற்கு அரேபிய தேசியவாதம் ஒரு முக்கியமான பங்காற்றியுள்ளது. பனிப்போரின்போது அரபு தேசியவாதிகளின் ஆட்சிகள், சோவியத் யூனியன் பக்கம் சாய்ந்துகொண்டு ஒரு தீவிரவாத தோற்றத்தை காட்டினர். ஆனால் அடுத்து நிகழ்ந்த அபிவிருத்திகளில், அரேபிய முதலாளித்துவமானது அராபிய மக்களுக்கு எதிராக ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாடு செய்துகொள்வதையே விரும்பினர்.

மிஸ்நா தேர்தலில் வெற்றிகொள்வதற்கும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் ஏதுவாக, போர் நிறுத்தத்தை கொண்டுவர ஒரு நடுவராக இருந்து முயற்சி செய்வதற்காக, பாலஸ்தீன குழுக்களை கெய்ரோவுக்கு வருமாறு எகிப்து அண்மையில் அழைப்புவிடுத்தது. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் இரண்டுமே தங்களுடைய எதிர்ப்புகளை எல்லாம் கைவிடவேண்டும் என்று கோருவார்கள் என்பதை ஊகித்து மாநாட்டிலிருந்து விலகினர். இவ்வாறு செய்வதால் தாம் பாலஸ்தீன மக்கள் மத்தியில் ஆதரவை இழப்போம் என அவர்கள் பயந்தனர்.

பாலஸ்தீனர்கள் அனுபவித்த ஒடுக்குமுறையின் அளவுவே, பல இளைஞர்கள் மனித வெடிகுண்டாய் மாறி செயல்பட விரும்புவதற்கும் மற்றும் இத்தகைய அழிவுகரமான தந்திரோபாயம் பரந்த ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் காரணமாகும். அத்துடன் இஸ்ரேலிய ஆட்சியை எதிர்க்க பாலஸ்தீன இளைஞர்களுக்கு தேசியவாத இயக்கத்தினால் இப்படியான ஒரேயொரு முன்னோக்குதான் வழங்கமுடியும் என்பதற்கான தீர்ப்புமாகும்.

தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் இஸ்ரேலில் அமைதி இருக்கப்போவதில்லை, இன்னும் மத்திய கிழக்கு முழுவதும் அமைதியற்றதாகவே இருக்கும். இஸ்ரேலிய மக்களுக்கும், அப்பிராந்தியம் முழுவதுமுள்ள மக்களுக்கும் உள்ள முற்போக்காகன ஒரேயோருவழி, அரேபிய, யூத தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராடுவதேயாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved