World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்

Long-term environmental damage due to NATO bombing in Yugoslavia

யூகோஸ்லாவியாவில் நேட்டோ குண்டுவீச்சினால் நீண்டகால சுற்றுசூழல் சீர்கேடு விளைந்துள்ளது
By Tony Robson
10 December 2002

Back to screen version

1999ஆம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் NATO நடத்திய குண்டு வெடிப்பு, சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தை முறித்தது மட்டுமல்லாமல், நீண்டகால சுற்றுச்சுழல் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று, அமெரிக்காவில் உள்ள ஆய்வுக் குழுவான எரிசக்தி மற்றும் சுற்றுசூழல் ஆய்வு மையம் (IEER) வெளியிட்ட ஓர் அறிக்கையில் காணப்படுகின்றது.

கூட்டுப் படை தாக்குதல் (Operation Allied Force) இல் NATO வினால் இலக்காக்கப்பட்ட இரண்டு தொழிற்துறை நகரங்களில் IEER ஒரு ஆய்வினை மேற்கொண்டது. பெற்றோலிய இரசாயனம், உரத்தொழிற்சாலை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை கொண்டுள்ள பான்சிவோ (Pancivo) தொழிற்துறை நகரம் பெல்கிரேட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் (12 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. க்ராஜுவாக் (Kragujevac) நகரில் அமைந்துள்ள Zastava கார் தொழிற்சாலை பெல்கிரேடிற்கு தெற்கே 100 கி.மீ. (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

தாமிஸ் மற்றும் டானுயூப் நதிகளின் சங்கமத்தில் பான்சிவோ தொழிற்துறை அமைந்துள்ளது. டான்யூப் நதியின் நீரோட்டத்திசையில் 60 கி.மீ. தொலைவில் இணைந்திடும் வெலிக்கா மொராவா நதியின் கிளை நதியான லெபினிக்கா ஆற்றினருகே ஜஸ்டவா நகரம் அமைந்துள்ளது. ஐரோப்பாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஆற்றின் நீரில், குண்டு வீச்சுக்களுக்குப் பின் நச்சு இரசாயனப் பொருட்கள் கலந்தன. அத் தொழிற்துறைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் குடிமக்கள் உடல் நலம் பாதிக்கக்கூடிய மாசடைந்த காற்று, உள்ளூரில் தயாராகும் உணவுப் பொருட்கள் மற்றும் விநியோகிக்கப்படும் நீர் ஆகியவற்றால் பெரும் உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

``நவீன போர் உத்திகள் சிறந்த தொழில்நுட்பத்துடன், இலக்கினை துல்லியமாக மதிப்பீடு செய்தாலும், தரையில் ஏற்படும் சேதங்களும் துல்லியமானதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும்தான் இருக்கும் என நிர்ணயிக்கமுடியாது`` என அறிக்கையில் எச்சரிக்கின்றனர். சில சூழ்நிலைகளில் அவ்வாறு இருந்தாலும், துல்லியமான அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சேதத்தினை எந்நேரமும் விளைவித்துவிட முடியாது. இந்த ஆய்வு கூறுவது போல், துல்லியமான குண்டுவீச்சினால், உடல் நலம் மற்றும் சுற்று சூழல் பாதிப்புக்கள், எதிர்காலத்தில் உலகில் இன்னும் பிறக்காத தலைமுறைகளையும் பாதிப்புக்களை விளைவாக்கமுடியும், குண்டுகள் தமது இலக்குகளை பூரண வெற்றிகரமாக கண்டுபிடிக்க முடிந்தாலும்கூட இது நிகழமுடியும்.

இவ்விரண்டு தொழில் நகரங்களை தனது ஆய்விற்காக ஏன் IEER தேர்ந்தெடுத்தது என்றால், அவற்றை மிகுந்த கவனத்துடன் NATO தனது இலக்குகளாகத் தெரிவுசெய்திருந்தது. போருக்கு பின் மேற்கொள்ளப்படும் துப்புரவு நடவடிக்கைகளை மேற்பார்வையிட நியமனம் செய்யப்பட்ட சர்வதேச அமைப்பான UNEP/BTP (United Nations Environmental Program Balkan Task Force) அமைப்பு, சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படக் கூடியதாகக் கருதப்பட்ட நான்கு நகரங்களில், பான்சிவோ மற்றும் க்ராஜுவாக் ஆகிய இரண்டு நகரங்களும் இருக்கின்றன. அறிக்கையில் காணப்படும் மாசு பற்றிய விவரங்கள், ஒருங்கிணைந்த படை தாக்குதல் நடந்து முடிந்தவுடன் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை. இவ்வறிக்கையில் கூறப்பட்ட பெரும்பான்மையான மாசு உண்டாக்கும் பொருட்கள், ATSDR (Agency for Toxic Substances and Disease Registry) அமைப்பினால் அடையாளம் காணப்பட்டுள்ள முதல் இருபது அபாயமான பொருட்களில் காணப்படுகிறது.

பான்சிவோ

ஏப்ரல் 1999ஆம் ஆண்டு, பல முறை நடத்தப்பட்ட NATO குண்டுவீச்சினால், நேரடியாக மூன்று பேர்கள் கொல்லப்பட்டனர். NIS எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மிக அதிக குண்டுகளுக்கு இலக்காகி, கடந்த ஜூன் மாதம் தகர்க்கப்பட்டது.

இவ்வறிக்கை முக்கிய மாசுபடுதலை உருவாக்கும் பொருட்களாக பாதரசம் மற்றும் 1,2-டைக்ளோரீதேன் ஆகியவற்றை 8 மெட்ரிக் டன்கள் மற்றும் 2,100 மெட்ரிக் டன்கள் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் நச்சுப் பொருள் மூளை மற்றும் ஜீரண உறுப்புகளின் கோளாறுகள் மற்றும் பிறப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், இரண்டாவது நச்சுப் பொருள் மனித புற்று நோய் காரணியாகிடும் சாத்தியமானதாகவும், நரம்பியல் மண்டலத்தைத் தாக்கக்கூடியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது, இவ்விரண்டு நச்சுப் பொருட்களும் மண்ணில் வெளியேற்றப்பட்டால், மெதுவாக நிலத்தடி நீரினில் பரவி ஊடுருவினால், மாசற்ற நீர் கிடைப்பதையே அச்சுறுத்துகிறது. ஆனால் இன்றுவரை பாதரச சிதறல்கள் உடனடியான கவனிப்பினைப் பெற்றுள்ளது. ஏனென்றால் அதிகமாக மிக விரைவில் ஆவியாகின்ற தன்மைப் படைத்திருப்பதால், உடனடி அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. மிகப் பெரிய அளவில் மாசுப்படுத்தப்பட்ட மண் அகற்றப்பட்டிருந்தாலும், நிலத்தடி நீரில் எஞ்சிய நச்சுப் பொருட்கள் ஊடுருவியுள்ளது.

மேலும் இந்த அறிக்கை 1,2-டைக்ளோரீதேன் சிதறல்களை அகற்ற உடனடியாகத் துப்புரவாக்கும் பணி மேற்கொள்ளப் படாததைப் பற்றியும் எச்சரித்துள்ளது. 50 சதவிகிதம் மண்ணில் வெளியேற்றப்பட்டாலும், மீதமுள்ளவை ஆலையின் கழிவு நீர் கால்வாயில் உள்ளது. மேலும், அந்த அறிக்கை விவரிக்கின்றது; ``மாசுப்பட்டுள்ள பரப்பினில், 1,2-டைக்ளோரீதேன் அவ்வளவாக பரவிடவில்லையெனினும், மேற்பரப்பில் காணப்படும் நச்சு சிதறல்களின் எந்தவொரு அசைவும், அவற்றைக் கீழ் நோக்கி நகரச் செய்து, உள்ளூர் நீர் நிலைகளைப் பாதிக்கக்கூடும் என்பதே உண்மை. முன்னர் விவரித்துள்ளபடி, உள்ளூர் நீர் நிலைகளை நச்சுப் பொருட்கள் சென்றடையும் வேளையிலிருந்து அவை நேரடியாக நிலத்தடி நீரில் செங்குத்தாகப் பரவிடக்கூடும்.`` (துல்லியமான குண்டு வெடிப்புகள், மிகப் பரவலாயுள்ள தீங்குகள். ஸ்ரீராம் கோபால், நிக்கோல் டெல்லர், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், பக்கம் 38).

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் விதிமுறைகள் குடிநீரில் காணப்படும் 1,2-டைக்ளோரீதேன் அடர்த்தி அளவு, ஒரு லிட்டருக்கு 5 மைக்ரோகிராமாக நிர்ணயித்துள்ளது. ஆனால் பான்சிவோ நகரத்தினைச் சுற்றுக் காணப்படும் நிலத்தடி நீரில் இவ்வடர்த்தி பல ஆயிரம் மடங்குகள் மிகையாக சில நேரங்களில் இருந்தது. இது நீண்டகால பாதிப்பினை உரைக்கின்றது. ஏனெனில் அத்தகைய இரசாயனப் பொருள்களின் அரை ஆயுட்காலமே முப்பது வருடங்களாக உள்ளது.

மேலும் கூடுதலாக அங்கு காணப்படும் நச்சுப் பொருட்கள், NATO குண்டுவீச்சினால் ஏற்பட்ட நெருப்பினால் வெளியிடப்பட்டவையாகும். பெட்ரோலிய வேதியல் தொழிற்சாலையில், 460 மெட்ரிக் டன் அளவுள்ள வினைல் க்ளோரைடு எரித்து சாம்பலாக்கப்படுகிறது. மேலும் 62,000 மெட்ரிக் டன் அளவுள்ள எண்ணெய் மற்றும் எண்ணெய் சார்ந்த பொருட்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் எரியுண்டுளள்து. இதன் விளைவாக ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தின் புகை மற்றும் நைட்ரஜன், கந்தக கூட்டுப் பொருள்கள், சுவாச உறுப்புகளின் கோளாறுகளை ஏற்படுத்துகிறன. மேலும் இவ்வறிக்கை கூறுகையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் எரிவினால் குறிப்பிடத்தக்க அளவில் கந்தக டை-ஆக்ஸைடு மட்றும் நைட்ரேட்டுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. "இவ்விரண்டு கூட்டுப் பொருட்களும், தொழிற்சாலை செயற்பாடுகளினால் ஏற்படும் அமில மழையுடன் சம்பந்தமுடையதாகக் காணப்படுகின்றன".

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட ஒரு பத்திரிகை நிருபர் கூறுகையில், "பல ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் தொழிற்துறைப் பிரிவுகளின் மீது பலமுறை நடந்த வான்வழித் தாக்குதல்கள் ஏப்ரல் 18ஆம் தேதியன்று காலை 1.00 மணி அளவில், மூன்று மிகப் பெரிய தாக்குதல்களினால் உச்ச நிலையை அடைந்தது. குண்டுகள் வான்வெளியில் அனுப்பிய நெருப்புப் பிழம்புகளினால் உருவான கறுப்பு நிற புகை மண்டலமும் பால் போன்ற வெண்ணிற வாயு மண்டலமும் பான்சிவோ-வினை சூழ்ந்திருத்தது. 10 நாட்களுக்கு இத் தொழிற்சாலைகளில் இருந்து எரி தழல் மிகுந்துகொட்டிந்தது".

பான்சிவோ நகராட்சி அலுவலர்கள் கருத்துப்படி, ஏறத்தாழ 1500 டன் அளவுள்ள வினைல் க்ளோரைடு, அனுமதிக்கப்பட்ட அளவினைவிட 3,000 மடங்கு அதிகமாக, காற்றில் எரிந்தது அல்லது மண் மற்றும் ஆற்றில் கொட்டப்பட்டது. இவற்றினால் ஆற்றின் கரையோரங்கள் வெண்ணிற நுரைகள் நிறைந்து ஊரைச் சுற்றியுள்ள கால்வாய்களில் இன்னும் அடைத்துக்கொண்டிருக்கிறன. 15,000 டன்கள் அமோனியா, 800 டன்கள் ஹைட்ரோ க்ளோரிக் அமிலம், 250 டன்கள் திரவ நிலை க்ளோரின், மிகவும் ஏராளமான டையொக்சின் (dioxin) (ஆரஞ்சு இயக்கி மற்றும் பிற டிபோலியண்ட்டுகள் நிறைந்த கலவை) மற்றும் 100 டன்கள் பாதரசம் முதலான நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனப் பொருட்கள் எரிக்கப்பட்டன அல்லது சேமிப்பு நிலையங்களிலிருந்து மிக அதிகமான அளவில் வெளியேற்றப்பட்டன.

இரவு நேரத் தாக்குதலுக்குப் பின் தொடர்ந்த அதிகாலைப்பொழுதில், டசின்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மூச்சு திணறல் அல்லது தற்காலிக பார்வையற்ற நிலை அல்லது உணவினை செரிக்க இயலாமலோ இருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். உச்ச நிலையாக, ஏப்ரல் 18ஆம் தேதி இரவு, அவ்வூரிலும், அவ்வூரைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,000 எட்டியது இது ஏறத்தாழ மொத்த ஜனத்தொகையில் பத்தில் ஒன்றாக இருந்தது.

க்ராஜுவாக்

ஜாஸ்டவா (Zastava) கார் தொழிற்சாலை உள்ள க்ராஜுவாக் நகரம், 150,000 மக்கள் ஜனத்தொகை கொண்டுள்ளது. இது இரண்டு முறை, ஏப்ரல் 9ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 12ஆம் தேதி, 1999ஆம் ஆண்டு குண்டு வெடிப்புகளுக்கு ஆளானது. 12க்கும் மேற்பட்ட குண்டுகளால் அது தாக்கப்பட்டது. தடைகள்(sanctions) விதிக்கப்படும் முன்பு, இது பால்கனிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக இருந்தது.

NATO வின் வான்வெளித் தாக்குதல்களைத் தடுத்திடும் முயற்சியாக, கூட்டு படை தாக்குதல் (Operation Allied Force) தொடங்கிய மூன்று நாட்க்களின் பின்னர் அவர்கள் மனித தற்காப்புக் கேடையத்தை அவ்விடத்தைச் சுற்றிலும் அமைப்பாதாக விளக்கமளிக்கும் ஓர் பகிரங்க கடிதத்தை அத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வெளியிட்டனர். NATO அதனது திட்டங்களை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து நடாத்திய குண்டுவீச்சில் 124 பேர் காயமடைந்தனர்.

மேலும் மேற்கொண்ட மற்றுமொரு முறையீட்டில் தொழிலாளர்கள் விளக்கமளிக்கையில்; "இன்றிரவு, ஏப்ரல் 9ம் நாள், க்ராக்ஜுவாக்கில் உள்ள ஜாஸ்டவா தொழிற்சாலை பிரிவுகள் குண்டு வெடிப்பிற்கு உள்ளானது. பாதுகாப்பு கேடயம் உடைக்கப்பட்டது. இந்த வெடி குண்டு தாக்குதல் கடுமையான சேதத்தை தொழிற்சாலையின் உபகரணங்களுக்கு உண்டாக்கி, முற்றிலுமாக எரிசக்தி பிரிவினை அழித்துவிட்டது. இப்பிரிவு, ஜாஸ்டவா தொழிற்சாலை மட்டுமின்றி, க்ராக்ஜுவாக் நகரம் முழுமைக்கும், அதன் குடியிருப்பு வீடுகள், பள்ளிகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் வெப்பமளிக்கும் தேவைகளையும் நிறைவேற்றியது...." (உலக சோசலிச வலைத்தளம், ஏப்ரல் 13, 1999, NATO குண்டு வெடிப்புக்குள்ளான செர்ப் கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் உலக மக்களிடம் வைக்கும் வேண்டுகோள். http://www.wsws.org/articles/1999/apr1999/zast-a13.html).

மேலும் இவ்வறிக்கை, 209 தனித்த க்ளோரின் கூட்டுப் பொருள்களின் கலவையான, பாலிக்ளோரினேடட் பை பினைல்ஸ், (PCBs-Polychlorinated Biphenyls) பொதுவாக வெட்டுப்பொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்பத்தைத் தணிப்பதற்காகவும், உராய்வினைத் தடுத்திடவும், மின்னியல் விசைமாற்றமைவுகள் மற்றும் மின்சார உபகரணங்களில் உபயோகிக்கப்படுபவை; அவற்றின் வெளியேற்றத்தினால் ஏற்படும் ஆபத்துகளை விரிவாகக் கூறுகின்றது. மோசமான உடல் நல சீர்கேட்டினை உருவாக்கும் என்று தெரிந்ததால், 1977ஆம் ஆண்டு முதல் அவற்றின் உற்பத்தி அமெரிக்காவில் தடைச் செய்யப்பட்டுள்ளது. ATSDR ன் கூற்றுப்படி, எதிர்பாராமல் வெளியேற்றப்படும் 1 பவுண்ட் அல்லது அதிகமான PCB பற்றி உடனடியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் அது புற்று நோய் காரணியாகவும், நாளமில்லா சுரப்பிகளை நைந்து போகவும் செய்யக்கூடும்.

மின் உற்பத்தி நிலையம், தொகுப்பு இணைப்புகள், பெயிண்ட் நிலைகள் மற்றும் கம்ப்யூட்டர் மையம் ஆகியவை மிகவும் சேதமுற்றோ, முற்றிலும் அழிந்தோ போனது. இரண்டு மின்மாற்றிகள் (ட்ரான்ஸ்போர்மர்கள்) தாக்கப்பட்டு, சுற்றிலும் உள்ள பகுதிகளில் PCB க்களை கசியச் செய்தது. ஒரு மின்மாற்றியிலிருந்து மட்டும் 1400 லிட்டர்கள் பைராலின் எண்ணெய் (``ட்ரைக்`` எனப்படும் PCB மற்றும் ட்ரைக்ளோரே பென்சீன்ஸ் என்னும் மிகுந்த நச்சுத் தன்மை வாய்ந்த பொருளின் கூட்டுக்கலவையான ட்ரான்ஸ்பார்மர் எண்ணெய்) தரை மற்றும் கழிவு பள்ளங்களில் கசிந்தன. ஆரம்ப துப்பரவுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்காப்பு ஆடை அணிந்திடாமல் இருந்ததால், சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மின் உற்பத்தி நிலையத்திலிருந்த (ட்ரான்ஸ்பார்மர்) மின்மாற்றியிலிருந்து அளவிட இயலாத PCBக்கள் கழிவு நீர் இணைப்புகளின் மூலம் லெபினிக்கா நதியில் கொட்டப்பட்டது. மின் கடத்தியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சரளைக்கற்களால் ஆன பள்ளத்தினால் வெளியேற்ற அளவினை தாங்கிட இயலவில்லை. மழைநீர் வடிகால்களைச் சுற்றிக் காணப்பட்ட PCBயின் அடர்த்தி அளவு, தொழிற்சாலைக்குள் காணப்பட்டதை விட அதிகமாகக் காணப்பட்டது. தொழிற்சாலைக்குள் இருந்த மாசுப் பொருட்களை அகற்றிடும் வேலையின் பெரும்பகுதியை UNEP/BTF செய்திருந்தாலும், வெளியேயுள்ள வடிகால் பகுதியிலும் செய்யப்பட்டிருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது. ஜூலை 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளமானது இத்தகைய நச்சுப்பொருட்களை அருகிலுள்ள நீர் நிலைகளிலும், விவசாய நிலங்களிலும் பரவச் செய்தது. மோராவா நதியோரங்களினருகே காணப்படும் கிணறுகளில் PCB மாசுப் பற்றிய சோதனைகளை, அந்நகர மக்கள் சுகாதார நிலையமோ, UNEP/BTF அமைப்போ ஏற்று நடத்தவில்லை.

தேவையான நிதியினை திரட்டுவதைப் பற்றிய பிரச்சனை, ஏற்பட்ட சேதத்தினை சரி செய்வதையே கேள்விக் குறியாக்கின்றது. மேலும் அதற்குப் பொறுப்பேற்றிடவும் NATO மறுத்து வருகின்றது. இப்பிரச்சனையை மேலும் மோசமாக்கிட, பால்கன் நாடுகள், ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்ட ஈட்டினை செர்பியாவிடம் கோரி வருகின்றன. இவ்வறிக்கை மேலும் கூறுகையில், ஹங்கேரி தன்னுடைய தேவைக்காக செர்பியாவின் சேதப்படுத்தப்பட்ட பெட்ரோலிய-இரசாயன ஆலையில் பதிவு செய்த ஒப்பந்தங்களுக்கான தொகையை திரும்பத் தந்திட வலியுறுத்தி வருகிறது.

சர்வதேச மனித உரிமை சாசனத்தினை மீறுதல்

யூகோஸ்லேவியாவிற்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகள் மனிதுரிமைகள் அடிப்படையில் சரியானதே என்ற நிலையை NATO கடைப்பிடித்தது. ஆனாலும், இந்த அறிக்கை ஒருங்கிணைந்த படை தாக்குதல் இன் கொள்கை மற்றும் சட்டரீதியான அதிகாரத்தினை கேள்விக்குரியதாகவே கூறுகின்றது. NATO வின் இராணுவ நடவடிக்கை, ஜெனிவா பேரவையின் உடன்படிக்கை, மற்றும் படைத்துறை சாராத பொதுமக்களின் வாழ்க்கையினை காப்பாற்ற 1949ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டங்கள், மற்றும் 1978ஆம் ஆண்டு சர்வதேச சட்டமாக்கப்பட்ட இரண்டு கூடுதல் உடன்படிக்கைகள் ஆகியவற்றுடன் உடன்படவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு, Amnesty International என்ற அமைப்பு; நீடித்திருக்கும் போர் குற்றங்களுக்கு NATO காரணமாகும் என்பதை எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவுப்படுத்தி, சட்ட மீறுதலை ஸ்தாபித்தது.

IEER அமைப்பின் கணிப்பீட்டின்படி நேசப்படைகளின் செயல்பாட்டினால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 500 எனவும், காட்டோ மையத்திற்காக, கிறிஸ்டோபர் லாயின் எடுத்த விவரப்படி, 1200 முதல் 2000 குடிமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டு படை தாக்குதலின் முன்னேற்றத்தில், கூடுதலான ஆயுதங்களான குண்டு தொகுதிகளும், ஆற்றல் குறைந்த யூரேனியம் (DU) முனைப்பூண் பூட்டப்பட்ட ஏவுகணைகள் ஆகியவை உபயோகப்படுத்தப்பட்டன. யூகஸ்லேவியாவின் இராணுவ திறனைக் குறைப்பதற்காக என்ற ஆதரவின் துணையுடன் நடத்தப்பட்டாலும், இராணுவ மற்றும் படை சாராத துறை நடவடிக்கை ஆகியவற்றின் மாறுபட்ட அர்த்தத்தினை மறைத்தே செயல்பட்டது. மேலும் இவ்வறிக்கை, சர்வதேச சட்டம் பலமுறை NATO வினால் புறக்கணிக்கப்பட்டதை, பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள் காட்டி எடுத்துரைத்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் தவிர எந்தவொரு நிகழ்வுகளும் இராணுவ நடவடிக்கைக்கு காரணமாக இவ்வறிக்கையில் கூறப்படவில்லை. ஜஸ்டவா கார் தொழிற்சாலை இராணுவ தளவாட உற்பத்தியில் அப்பொழுது ஈடுபடவில்லை. மேலும் இராணுவ பயன்பாடு பற்றிய நிரூபணம் கிடைத்தாலும், குடிமக்கள் அழிவது தவிர்க்கப்படுவது உறுதிப்படுத்துப்படவேண்டும் என்பதனை நிராகரிக்க முடியாது.

மேலும் அந்த அறிக்கை குறிப்பிடுகையில், Article 35, கூடுதல் உடன்படிக்கை "மிகுதியான காயங்களோ, தேவையில்லாத துன்பங்களையோ உருவாக்கும்" ஆயுதங்களை தடை செய்வதாகக் கூறுகிறது; மேலும் அது, பரவலான, நீடித்த, அதிக சேதத்தினை இயற்கை சூழலுக்கு ஏற்படுத்தும் போர் நடவடிக்கை திட்டங்களோ, வழிமுறைகளோ தடை செய்யப்படுகிறது என்றும் கூறுகிறது.

குண்டு வெடிப்பில் பங்கேற்ற 19 NATO நாடுகளில், 16 நாடுகள் கூடுதல் உடன்படிக்கை-1ல் கைச்சாத்திட்டுள்ளன. துருக்கி இதனை செய்யவில்லை, பிரான்ஸ் கூட்டு படை தாக்குதல் நடவடிக்கைக்குப் பின் இதில் கைச்சாத்திட்டது; அமெரிக்கா இவ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டாலும், அதை உறுதி செய்யவில்லை. ஆனால் அது 1977ஆம் ஆண்டு உடன்படிக்கையினை உறுதி செய்தது. அவ்வுடன்படிக்கை எந்தவொரு இராணுவ செயல்பாட்டையும் ENMOD ற்கு எதிர்மறையான எத்தகைய உபயோகத்தினையும் தடை செய்தது. வியாட்நாம் போருக்குப் பின் இது நடைமுறைக்கு வந்தது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எத்தகைய போர் நடவடிக்கையையும் இது தடை செய்தது. ஆனால் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நச்சுப் பொருட்களின் சேமிப்பு நிலைகளை குண்டுவீசி அழிப்பது, இரசாயன போர் நடவடிக்கையின் ஒரு வடிவமாகவே இருக்கின்றது..

அமைதிக்கு எதிராக NATO வினால் இழைக்கப்பட்ட மிகப் பெரிய குற்றமாகவே, இவ்வறிக்கை இதனைக் குறிப்பிடுகின்றது. குண்டு வீசுதல் என்பது சர்வதேச சட்டமான "இராணுவ நடவடிக்கை என்பது தற்காத்துக் கொள்ளும் ஒரு செயல்" என்பதை முறித்ததாகவே கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் Charter Article I, Para.I என்பனவற்றை மேற்கோள்காட்டி அவ்வறிக்கை விளக்குகின்றது. ``சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினை நடைமுறைப்படுத்திட, சிறப்பான கூட்டு நடவடிக்கையினை, அமைதிக்கு எதிரான அச்சுறுத்தலை தடை செய்யவும், விலக்கிடவும் மேற்கொள்ள வேண்டும். அமைதியினை மறைக்கவோ, முறித்திடவோ செய்யும் நடவடிக்கையினை தடை செய்திடவும், அமைதி சார்ந்த, சர்வதேச சட்டம் மற்றும் நீதி சார்ந்த கொள்கைகளை ஒத்துபோகும் அமைதி நடவடிக்கைகளும், அமைதியினை முறிக்கக்கூடிய சர்வதேச கருத்து வேறுபாடுகள் மற்றும் நிகழ்வுகளில் இணக்கம்கண்டு கொள்ள வேண்டும்`` என்று கூறுகிறது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை தன் வசப்படுத்தவே அமெரிக்க நாடுகள் தன்னுடைய இராணுவ நடவடிக்கையை NATO மூலம் செயல்படுத்தியது. மேலும் அந்த அறிக்கை கூறுகையில், எந்த நிலையிலும் கொசவோ கருத்து வேறுபாட்டினை தீர்த்திட உதவும் எல்லாவிதமான செயல்பாடுகளும் இல்லாதுபோய்விட்டது என்று கூற இயலாது என வலியுறுத்துகிறது.

கூட்டு படை தாக்குதலில் 1055 விமானங்களில் அமெரிக்காவினது 700 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது 38,000 முறைகள் மேற்க்கொள்ளப்பட்ட விமான தாக்குதல்களில் 29,000 முறைகள் அமெரிக்க விமானங்கள் செயல்பட்டன. ஆனால் அமெரிக்க விமானங்களே, பான்சிவோ மற்றும் க்ரரிஜுவாக் நிலைகளை குண்டு வைத்து தகர்த்தன என்று உறுதியாக கூற இயலாது. குண்டு வெடித்தலின் போது உபயோகிக்கப்பட்ட இலக்குகளின் செயல்முறையினைப் பெற முயன்ற IEER-இன் நடவடிக்கை, தகவல் சுதந்திர சட்டத்தின் (Freedom of Information Act) கீழ் அமெரிக்க பாதுகாப்பு துறையினால் நிராகரிக்கப்பட்டது, அது 42 வெற்றுப்பக்க அறிக்கையினை "கோர்ப்பிட்டது". காங்கிரசின் உளவு அமைப்பின் ஒரு பிரிவான US இன்பொது கணக்கியல்துறை அலுவலகம் மேற்கொண்ட யூகோஸ்லாவியா வெடிகுண்டு தகர்ப்புகள் குறித்த ஆய்வும் மேற்கண்ட கோர்ப்பிடப்பட்டு பேணப்படுகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved