World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The political issues in the struggle against war

போருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

Statement of the World Socialist Web Site Editorial Board
17 January 2003

Back to screen version

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் வெளியிட்டுள்ள கீழ்கண்ட அறிக்கை, ஜனவரி 18, சனிக்கிழமை அன்று வாஷிங்டன் டி.சி மற்றும் இதர நகரங்களிலும் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டங்களில் விநியோகிக்கப்படவேண்டும்.

இந்த அறிக்கையானது உலக சோசலிச வலைத் தளத்தில் PDF கோப்பாகவும் கிடைக்கும். நமது வாசகர்களும் ஆதரவாளர்களும் தங்களது கணினிகளில் இந்த துண்டறிக்கையைப் படி எடுத்து சனிக்கிழமை அன்று வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ மற்றும் பிற இடங்களில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டங்களிலும் மேலும் பணியாற்றும் இடங்களிலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர பொது இடங்களிலும் விநியோகிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவப் படைகள் இடைவிடாது, மிகுந்த விறுவிறுப்போடு குவிக்கப்பட்டு வருகிற பின்னணியில், புஷ் நிர்வாகம் மேலும் மேலும் போர்வெறியோடும் நிதானம் இல்லாமலும் பிரகடனங்களை வெளியிட்டுக் கொண்டு வருவதன் பொருள், போர் தவிர்க்க முடியாதது என்பதுதான். போர் தொடர்பாக இன்னும் "இறுதி முடிவு" எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி புஷ் கூறி வருவதை மறுக்கின்ற வகையில் அமெரிக்க அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. உண்மையில் புஷ் நிர்வாகம் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர், அதன் பிரதான மூலோபாயக் குறிக்கோள் ஈராக் மீது படை எடுத்து அதைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

ஈராக் அரசாங்கம், அமெரிக்கப் படைகள் பாக்தாதைப் பிடித்துக் கொள்ள அழைப்பு விடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றால் அப்போதுதான் புஷ் நிர்வாகத்திற்கு மனநிறைவு ஏற்படும். "பரந்த மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதம்" என சதாம் ஹூசைனின் புனைவுருத் தோற்றத்தை முடிவில்லாது கண்டித்தல்கள் --கடந்த இரண்டு மாதங்களாக மிக ஆழமாக ஐ.நா ஆயுத ஆய்வாளர்கள் சோதனை செய்த பின்னரும், மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதத்தின் சான்று எதுவும் கிடைக்கவில்லை-- அவை நாடு பிடிப்பதற்கான போருக்கான சாக்குப் போக்கை வழங்கும் பிரச்சார உத்தியைத் தவிர வேறு எதாகவும் ஒருபோதும் இருந்திருக்கவில்லை.

போர் நடக்காது என்பது மிகவும் அபூர்வமான ஒன்றுதான், அப்படியே போர் தள்ளி வைக்கப்பட்டாலும் கூட அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். மிகவிரைவாக தாமதம் இல்லாமல் போருக்கு மற்றொரு புதிய சாக்குப் போக்கு உருவாக்கப்பட்டு விடும். ஈராக்கிற்கு எதிராக இல்லாவிட்டாலும், கொரியாவிற்கு, ஈரானுக்கு அல்லது மற்றொரு நாட்டிற்கு எதிராக போருக்கான சாக்குப்போக்கு உருவாக்கப்படும். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சர்வதேச நலன்களுக்கு முட்டுக்கட்டையாக செயல்படுவதாகக் கருதப்படும் எந்த நாட்டின் மீதும் படைஎடுக்கலாம்.

போர் தவிர்க்க முடியாதது என்று ஏற்றுக்கொள்வது, தோல்விமனப்பான்மை அல்ல, மாறாக அதுதான் அரசியல் யதார்த்தவாதம். அத்தகைய யதார்த்தவாதம்தான், உலகம் முழுவதும் வியாபித்து வெடித்து சிதறிப் பரவிக்கொண்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வலுவான வெகுஜன இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான சரியான நீண்டகால மூலோபாயத்தின் அபிவிருத்திக்கான அடிப்படையாகும்.

புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்புக்களைத் தெரிவிப்பது அவசியமனதாகும் மற்றும் சரியானதுமாகும். ஆனால் வாஷிங்டனிலும் இதர நகரங்களிலும் ஜனவரி 18-ம் தேதி நடைபெறும் போர் எதிர்ப்புப் பேரணிகள் இந்த நடவடிக்கைகளில் முதல்படியாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய பொது மக்களது எதிர்ப்பை பரந்த வெகுஜன அரசியல் போராட்டமாக மாற்றுவதற்கு அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். இந்த அடித்தளம் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது புஷ் நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமல்ல, அதற்கு எல்லாம் மேலாக, ஆளும் சமுதாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகள் ஆளும் வர்க்கத்தின் சமுதாய மற்றும் பொருளாதார நலன்களின் ஓர் வெளிப்பாடுதான்.

நடைபெறவிருக்கும் போர் என்பது வெறுமனே ஒரு குறிப்பிட்ட பிற்போக்கு நிர்வாகத்தின் செயலாக்கமல்ல. பெருகிவரும் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஆற்றொணா நெருக்கடிகளிலும் ஆளும் செல்வந்தத்தட்டின் பொருளாதார நலன்களிலும் இந்தப்போர் ஆழமாக வேரூன்றி உள்ளது.

புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை, உள்நாட்டுக் கொள்கையுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. அமெரிக்காவிற்குள் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் அதே அரசியல், பொருளாதார செயல் திட்டங்களின் சர்வதேச அளவிலான வெளிப்பாடுதான், ஈராக்கிற்கு எதிரான போர். உள்நாடாக இருந்தாலும் அல்லது வெளிநாடாக இருந்தாலும், அமெரிக்க அரசாங்கமானது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற நிதி ஆதிக்க செல்வர் குழு ஆட்சியின் நலன்களுக்காகத்தான் பணியாற்றி வருகிறது.

இந்த செல்வர் குழு ஆட்சி ஈராக்கிற்கு எதிரான போரை பின்வரும் காரணங்களுக்காக விரும்புகின்றது: (1) ஈராக்கை வெற்றிகொள்வதன் மூலம் அமெரிக்கர்களுக்கு சொந்தமான கம்பெனிகளின் கட்டுப்பாட்டில், உலகிலேயே இரண்டாவது பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளத்தைக் கொண்டு வரும். (2) ஈராக்கை அமெரிக்கா பிடித்துக் கொள்வதன் மூலம், யுரேஷியாவில் பெரும் பகுதியை அமெரிக்கா தனது கைக்குள் கொண்டு வந்து விடும். அப்போது அரசியல் அடிப்படையிலும் இராணுவ அடிப்படையிலும் தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் உருவாகும் எதிரிகளை அச்சுறுத்த முடியும். மேலும் புதிய அமெரிக்க சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளம் அமைக்க முடியும் என்று வாஷிங்டனின் மூலோபாய வல்லுநர்கள் நம்புகின்றனர். (3) புஷ் நிர்வாகமும் அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் செய்திஊடகங்களும் இராணுவ வெற்றி மூலம் கிடைக்கும் பயன்களை படு பயங்கரமாக சித்தரித்து, அமெரிக்காவிற்குள் வெடித்துச்சிதறும் நிலைக்கு சென்று கொண்டிருக்கும் சமூக முரண்பாடுகளிலிருந்தும் மற்றும் தீர்க்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் மக்களை திசை திருப்பி விட முடியும் என்று நம்புகிறார்கள்.

இறுதியாக ஆராயும்போது ஈராக்குடன் போர் என்பது ஒரு பிற்போக்கு ஏகாதிபத்திய நடவடிக்கை -- ஒரு சூறையாடும் போர்-- அதன் இறுதி நோக்கம் என்னவென்றால், உலகம் முழுவதையும் வோல்ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் காலடியில் கொண்டு வருவதுதான்.

இலட்சக்கணக்கான ஈராக்கிய மக்களை புஷ் நிர்வாகம் கொன்று குவித்து விடுமானால் கூட, அதன் இராணுவ நோக்கங்களில் வெற்றிபெற்று விடுமானால் கூட, ஏகாதிபத்திய படைஎடுப்பின் தர்க்க ரீதியான நோக்கம் ஈரானுடன், பாக்கிஸ்தானுடன், கொரியாவுடன் மற்றும் சீனாவுடன் அதைவிட மோசமான இரத்தம் சிந்தும் இராணுவ மோதல்களுக்கு இட்டுச் சென்று விடும். மேலும் உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு வாஷிங்டனால் மேற்கொள்ளப்படும் முயற்சி, அதிகரித்த அளவில் பதட்டமடையும் அதன் ஐரோப்பிய "கூட்டாளிகளையும்" மற்றும் ஜப்பானையும் நேரடியாக மிகக் கடுமையான மோதலுக்கு கட்டாயம் இட்டுச் சென்று விடும்.

எனவே இருபதாவது நூற்றாண்டைப் போல ஏகாதிபத்தியமானது உலகப் போரை நோக்கி உலக நாடுகளை இட்டுச்சென்று கொண்டிருக்கின்றது. சென்ற நூற்றாண்டில், ஏகாதிபத்தியப் போரினால், கோடிக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். இருபத்தியோராவது நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் தொடக்க இருக்கும் போரை அமெரிக்கா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் தடுத்து நிறுத்தாவிட்டால், பில்லியன் கணக்கில் மக்கள் மடிவார்கள்.

சென்ற நூற்றாண்டின் துயர நிகழ்ச்சிகளில் இருந்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ள விரும்பினால், ஏகாதிபத்தியப் போருக்கு மாற்றான ஒரே ஒரு பதில், சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தில்--அதாவது சமூக சமத்துவத்திற்கும் உண்மையான ஜனநாயகத்திற்குமானது-- சுதந்திரமான அரசியல் அணியாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான்.

இந்த முன்னோக்கு நடவடிக்கைக்கு ஆரம்ப கட்ட முன் நடவடிக்கை ஜனநாயகக் கட்சியை அடியோடு புறக்கணிப்பதுதான், எந்தவிதமான நிபந்தனையுமில்லாமல் ஐயத்திற்கு இடமில்லா வகையில் ஜனநாயகக் கட்சியைப் புறக்கணித்தாக வேண்டும். இந்த பிற்போக்கு முதலாளித்துவக் கட்சியின் "சீர்திருதத்ததை" முன்மொழிபவர்கள் அனைவரும் திறமை உள்ளது போல் பாசாங்கு செய்கிறார்கள் அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் வெகுஜன எதிர்ப்பு இயக்கங்களை இந்தக் கட்சிக்கு அடிபணியச்செய்வது துரோகத்திலும் தோல்வியிலும்தான் முடிந்திருக்கிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஜனநாயகக் கட்சி முழுக்க முழுக்க உடந்தையாக செயல்பட்டு வருகின்றது. கிளிண்டன் நிர்வாகத்தின் கொள்கைகளின் அதி தீவிர பதிப்புதான் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் என்பதை நாம் கட்டாயம் மறந்து விடக்கூடாது. அது மேலும் ஈராக்கிற்கு எதிராக மிகக் கொடூரமான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டது, சோமாலியா, யூகோஸ்லாவியா மற்றும் ஈராக் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியது.

ஜனநாயகக் கட்சியிலிருந்து தனக்குக் கிடைக்கும் ஆதரவு இல்லாமல், புஷ் ஆப்கானிஸ்தானில் போர் புரிந்திருக்கமுடியாது அல்லது நடைபெறவிருக்கும் ஈராக் போரை மேற்கொள்ளவியலாது. ஈராக்கில் போர் புரிவதற்கான நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்காக புஷ்ஷிற்கு தேவையான வாக்குகளைத் தந்து உதவியது ஜனநாயகக்கட்சி ஆகும். புஷ் நிர்வாகத்திற்கு எதிராக எந்த விதமான தீவிர எதிர்ப்பு இயக்கத்தையும் நடத்தும் வல்லமை ஜனநாயகக் கட்சிக்கு இல்லை என்பதற்கு அடையாளம், இடைத் தேர்தலில் ஜனநாயக்க் கட்சி சந்தித்த சரிவு. 2004 ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அல் கோர் முடிவு செய்து அறிவித்திருப்பது மேலும் தீவிரமாக வலதுசாரிப் பாதையில் ஜனநாயகக் கட்சி செல்வதை காட்டும் அடையாளமாகும். ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவி போன்ற உயர் பதவிக்கு வர விருப்பமுள்ள அனைவரும், போர் புரிவதை அங்கீகரிக்கின்றனர், புஷ் மேற்கொள்ளும் உள்நாட்டு ஒடுக்குமுறைக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்றனர்.

அமெரிக்காவின் நிதி ஆதிக்க செல்வர் குழு ஆட்சியின் வர்க்க நலன் சம்பந்தப்பட்ட அவசியமான எல்லாப் பிரச்சினைகளிலும் இரண்டு கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. ஜனநாயகக் கட்சி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஒரு ஏகாதிபத்திய கட்சிதான். புஷ் நிர்வாகத்துடன் அக்கட்சி அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் கொண்டதல்ல, செயல்தந்திர உத்திகளில் மட்டுமே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

போருக்கு எதிரான வெற்றிகரமான இயக்கத்தை நிர்மாணிப்பது ஜனநாயகக் கட்சியிலிருந்து முறித்துக் கொண்டு உறுதியாக, அமெரிக்க மக்களில் மிகப் பெரும்பாலோரான தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டியதைத் தேவையாகக் கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவது என்றால், அதன் பொருள் போருக்கு எதிரான போராட்டத்துடன் வேலைவாய்ப்பு, சமூக சேவைகள், சுகாதாரம், கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கான போராட்டங்களை இணைப்பதாகும்.

இதன்பொருள் இராணுவ மயமாதலுக்கு எதிரான போராட்டம் பகிரங்கமாகவும் தெளிவாகவும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டமாக அமைய வேண்டும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம் ஆளும் செல்வந்தத் தட்டிடமிருந்து உழைக்கும் மக்களுக்கு செல்வத்தைப் மறுபகிர்ந்தளிக்கும் மிகத் தீவிர இயக்கமாக நடத்தப்பட வேண்டும். இதன் பொருள் கார்ப்பொரேட்டுகள், ஒரு சிலர் நிதி ஆதிக்கங்கள் உடைமை கவர்ந்தெடுக்கப்பட்டு பொது நிறுவனங்களாக மாற்றப்படல் உட்பட, தற்போது நிலைபெற்றுவிட்ட செல்வத்தையும் தனி சலுகைகளையும் எதிர்த்து பெரும் தாக்குதல் தொடுக்கப்பட வேண்டும், அவை அறிவியல் அடிப்படையில் திட்டமிடப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்.

அமெரிக்காவில் ஏற்கனவே சமுகப் போராட்டங்கள் வெடித்துக்கிளம்பிவிட்டன. நாடு முழுவதும் உழைக்கும் மக்களிடம் உருவாகி வரும் ஆழமான சமுதாய அதிருப்தியின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அண்மையில் ஜெனரல் எலெக்டிரிக் நிறுவனத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தம். ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக வெகுஜன சோசலிச இயக்கத்தை உருவாக்க முடியாது, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு அக்கறை இல்லை, அது முற்போக்கானது இல்லை மற்றும் புரட்சிகர சக்தி இல்லை என்று கூறுபவர்களுக்கு, மிகவும் திட்டவட்டமான மறுப்புத்தான், உருவாகி வரும் வர்க்கப் போராட்டமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்பது சர்வதேசியத்திற்கு திரும்ப வேண்டும் என்பதாகும். தொழிலாள வர்க்கம் உள்ளார்ந்த ரீதியில் சர்வதேச வர்க்கம் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் நாடு, இனம் மற்றும் மதம் முதலிய எல்லா எல்லைகளையும் கடந்து தொழிலாளர் நலனில் ஒன்றுபட்டு நிற்பதாகும். பூகோள முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான எதிர்ப்பு என்பது பூகோள ரீதியான எதிர்ப்பாக கட்டாயம் இருக்க வேண்டும். இதன் பொருள் போருக்கு எதிரான இயக்கம் ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்களுக்கோ அல்லது பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகளின் கைப்பாவை மற்றும் "கள்வர்களின் குகை" ஆன ஐக்கிய நாடுகள் சபைக்கோ கீழ்ப்படுத்தப்படக் கூடாது.

இந்த வாரக் கடைசியில் வாஷிங்டனிலும் இதர இடங்களிலும் திரண்டுள்ள பல்லாயிரக் கணக்கான மக்களோடு உலக சோசலிச வலைத் தளம் தன்னை இணைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐ.நா ஆகியவற்றின் நம்பகத்தன்மையை பெருக்குவதற்காக, அரசியல் தொலைநோக்கோடு அரசியல் குழுக்களும் தனிமனிதர்களும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை உலக சோசலிச வலைத் தளம் அடியோடு எதிர்க்கிறது. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் இத்தகைய ஏகாதிபத்திய அமைப்புக்களை ஜனநாயக மற்றும் சமாதான அமைப்புக்களாக மாற்றிவிடமுடியும் என்று பிரமைகளைப் பரப்புகின்றன. தொழிலாள வர்க்கமானது எல்லா அரசியல் கட்சிகளிலிருந்தும் முதலாளித்துவ அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் நிபந்தனையற்ற அரசியல் சுதந்திரம் பெற்று செயல்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புதிய, சுதந்திரமான சோசலிச இயக்கம் கட்டப்பட்டாக வேண்டும். அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தில் இடம்பெற்றுள்ள உலகில் பல்வேறு பகுதியில் இயங்கும் அதன் சகோதரக் கட்சிகளும் இத்தகைய இயக்கத்தைக் கட்டி வருகின்றன. நான்காம் அகிலத்தின் அரசியல் அங்கம்தான் உலக சோசலிச வலைத் தளம் ஆகும். போருக்கு எதிரான போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய வேண்டும், உலக சோசலிச வலைத் தளத்திற்கு தங்களது பங்கை செலுத்த வேண்டும், அதன் வெளியீடுகளை விநியோகிக்க வேண்டும், மேலும் அதன் செல்வாக்கு அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் ஆழமாக வேரூன்றிப் பரவுவதற்கு அனைவரும் உதவ வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved