World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US military insists on right of "hot pursuit" inside Pakistan

பாக்கிஸ்தான் எல்லைக்குள் ''விரட்டிச்சென்று பிடிக்கும்'' உரிமையை அமெரிக்க இராணுவம் வலியுறுத்தல்

By Sarath Kumara
22 January 2003

Back to screen version

ஆப்கானிஸ்தான் -பாக்கிஸ்தான் எல்லையில் டிசம்பர் 29-ந் தேதியன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அமெரிக்க இராணுவம் சம்பந்தப்பட்டதைத் தொடர்ந்து பாக்கிஸ்தான் எல்லைக்குள் புகுந்து கொள்ளும் அல் கொய்தா, தலிபான் போராளிகளை "விரட்டிச்சென்று பிடிப்பதற்கு'' தனது படை வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் வலியுறுத்தி வருகிறது.

துப்பாக்கிச்சூடு தொடர்பான விபரங்கள் தெளிவில்லாமல் காணப்படுகின்றன. செய்தி ஊடகங்களின் அடிப்படையில் பார்த்தால் பாக்கிஸ்தானைச் சேர்ந்த எல்லைக்காவலர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா அமைப்பினரைக் கண்காணித்துவரும் அமெரிக்க இராணுவ வீரரை நெருங்கினார். அவர்கள் பாக்கிஸ்தான் எல்லைக்குள் திரும்பிச்செல்லுமாறு கோரியபோது அவர் திரும்புவதுபோல் பாசாங்கு செய்தவண்ணம் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு அமெரிக்க இராணுவ வீரர் காயமடைந்தார். அமெரிக்க படைகள் விமானப்படைக்கு தகவல் தந்தனர். அமெரிக்க F-16 போர் விமானம் 500 பவுண்டு எடையுள்ள குண்டை கைவிடப்பட்டிருந்த இஸ்லாமிய பள்ளியொன்றின் மீது வீசியது அங்கு பாக்கிஸ்தான் எல்லைப் படை வீரர் ஒளிந்திருந்ததாகக் கருதப்பட்டது, அந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கியால் சுட்டவர் எல்லைக்காவல் படையைச் சேர்ந்தவரா அல்லது சீருடை மட்டுமே அணிந்த ஒரு நபரா? என்பது தெரியவில்லை என அமெரிக்க இராணுவ அதிகாரி மேஜர் ஸ்டீபன் குளுட்டர் தெரிவித்தார். பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டது உட்பட மோதல் நடைபெற்ற இடம் ஆப்கான் எல்லைக்குள் உள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்தனர். பாக்கிஸ்தானிய அதிகாரிகள் அதை மறுத்தனர். மாநிலத்திலுள்ள தெற்கு வசிருஸ்தான் மாநிலத்திலுள்ள புறுமொல் கிராமத்தில் குண்டு வீச்சு நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

ஒரு நிருபரின் கேள்விக்கு எலெக்ட்ரானிக் மெயிலில் பதிலளித்த குளுட்டர், அமெரிக்கப் படைவீரர்கள் எல்லையை தாண்டிச்சென்று தப்பி ஓடுபவர்களை பிடிப்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவித்தார். "ஆப்கானிஸ்தானின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற எல்லைகளை அமெரிக்கப் படைகள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் தாக்குதல் நடத்துபவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து கொண்டு தப்பிக்க முயன்றால் அவர்களை விரட்டிச்சென்று அமெரிக்க படைகள் பிடிக்கலாம் அல்லது எதிர்தாக்குதல் நடத்தலாம்'' என்று அந்த அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் சேக் ரஷீட் அஹமத் அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். ''அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை" "தலிபான் மற்றும் அல்கொய்தா இயக்கத்தில் மீதமுள்ளவர்கள் என்று அமெரிக்கர்கள் கருதுகின்றவர்களை பிடிப்பதற்காக அமெரிக்கர்கள் பாகிஸ்தான் எல்லையை கடந்து விடமுடியாது" என்று அந்த அமைச்சர் விளக்கினார். ஆனால் பாகிஸ்தானின் மூத்த புலனாய்வு அதிகாரி தனிப்பட்ட முறையில் இதை ஒப்புக்கொண்டதோடு, தீவிரவாதிகளை எல்லை தாண்டி விரட்டி பிடிப்பதற்கு மறைமுகமாக ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக அந்த புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிற்குள் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகள் பெருகி வருவதை கருதி இந்த சம்பவத்தை இஸ்லாமாபாத் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டது. கொல்லப்பட்ட இரண்டுபேர் தொடர்பான விபரங்களையோ அல்லது அந்த மோதலுக்கான சூழ்நிலைகளையோ பாகிஸ்தான் விளக்கவில்லை, இதுதான் இப்படிப்பட்ட முதல் சம்பவம் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ''இந்தப் பிரச்சனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது, இது போன்ற சம்பவங்கள மீண்டும் நடைபெறாது தடுக்கும் வழிமுறை ஒன்று வகுக்கப்பட்டிருக்கிறது'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதே நேரத்தில் அமெரிக்கப் படைகள் தேடுபவர்களை விரட்டிச் செல்லலாம் என்று பாகிஸ்தான் வாஷிங்டனுக்கு மீண்டும் உறுதியளித்திருக்கிறது. ஜனவரி-6ந் தேதிய டாம் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் பாக்கிஸ்தான் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வீஸ் முஷரப்பும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பாவலும் இது சம்மந்தமாக உடன்பாட்டிற்கு வந்திருப்பதாக விளக்கியிருக்கிறது. "தலிபான் மற்றும் அல் கொய்தா போராளிகளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையை தாண்டியும் விரட்டிச் சென்று பிடிப்பதற்கு இருவரும் உடன்பட்டுள்ளனர் ஆனால் இது அரவம் காட்டாமல் நடக்க வேண்டுமென்றும் முடிவு செய்தனர்" என்றது.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாக்கிஸ்தானின் மலைவாழ் மக்கள் அமெரிக்க இராணுவத்திற்கு குறிப்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மலைப்பகுதிகளில் 50-லட்சம் மக்கள் வாழ்கின்றனர், இவர்களில் மிகப்பெரும்பாலோர் பட்டாணியர்கள், இவர்களுக்கும், ஆப்கனிஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதி மக்களுக்கும் இடையே வலுவான இன உணர்வுகள் நிலவுகிறது. வரலாற்று அடிப்படையில் பார்த்தால் இந்த பட்டாணியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சுதந்திரத்தை கடுமையாக காப்பாற்றி வருகின்றனர். ஓரளவிற்கு அரசியலில் தன்னாட்சி உரிமையுடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

வாஷிங்டன் வற்புறுத்தலை அடிப்படையாக்கொண்டு 2001-டிசம்பரில் தப்பி ஓடிவரும் தாலிபான் மட்டும் அல் கொய்தா போராளிகளை பிடிப்பதற்காக பாக்கிஸ்தான் படைகள் எல்லையை மூடினார்கள். தற்போது ஆப்கான் எல்லையில் 60,000 முதல் 70,000 பாகிஸ்தான் துருப்புகள் உள்ளன. ஆனால் அமெரிக்க இராணுவம் மேலும் படைகள் குவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. அமெரிக்க சிறப்பு படைகளை சேர்ந்தவர்களும் CIA இனரும் பாக்கிஸ்தானின் மலைப்பகுதிகளில் புகுந்து தகவல்களை திரட்டி வருவதாகவும் சந்தேகப்படும் நபர்களுக்கு குறி வைத்துக் கொண்டிருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இப்படி உள்ளூர் மக்கள் அமெரிக்கவின் இராணுவ நடவடிக்கைகள் மீது வெறுப்புக் கொண்டிருப்பதை அடிப்படையாக்கொண்டு சென்ற அக்டோபர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தானின் தேசியத் தேர்தலில், இஸ்லாமிய தீவிரவாத கட்சிகள் பெருமளவில் வெற்றி பெற்றன. முத்தஹிதா- மஸலீஸ் இ -அமல் (MMA) கட்சி தலைமையில் ஆறு கட்சி கூட்டணி வடமேற்கு எல்லை மாகாணத்தில் பலுகிஸ்தானிலும் ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த இரண்டு மாநிலங்களும் ஆப்கனிஸ்தான் எல்லையில் உள்ளன.

ஜனவரி-1ம் தேதி வடமேற்கு எல்லைபுற மாகாண சட்ட சபையில் எல்லைப்புற மோதல் மற்றும் பள்ளிக்கூடத்தின் மீதான குண்டு வீச்சு தாக்குதல்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானின் இறையாண்மையை வாஷிங்டன் மீறி வருவதாகவும் இதை தேசிய அரசு "கடுமையாக கண்டிக்க" வேண்டும் என்றும் சட்டசபை தீர்மானம் வருவதற்கு வலியுறுத்தி கேட்டுக்கொண்டது.

ஜனவரி-3-ல் அமெரிக்காவிற்கு எதிரான ஆர்பாட்டங்கள் லாகூர், மூல்தான், குவைட்டா, பெசாவர் மற்றும் பாக்கிஸ்தானின் இதர நகரங்களில் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்து ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா போர் ஆயத்தங்கள் செய்து வருவதை கண்டித்தனர். அன்றைய தினம் பெஷவர் நகரில் MMA பேரணி ஒன்றை நடத்தியது. அந்தப் பேரணியில் MMA இன் பொது செயலாளர் மெளலானா பசூலுர் ரஹ்மான் உரையாற்றினார். ''எங்களது இறையாண்மையை ஒழித்துக் கட்டுவதற்காக பாகிஸ்தானில் தனது படைகளை நிறுத்திவைத்திருக்கும் அமெரிக்கா மீது நாங்கள் புனிதப்போர் (ஜிஹாத்) பிரகடனம் செய்கிறோம்'' என அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க நடத்தி வரும் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" ஆதரவு காட்டி வருவதால் ஏற்படும். அரசியல் பாதிப்புகள் குறித்து பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்திடையே பீதி வளர்ந்திருக்கிறது. பாகிஸ்தானின் பாதுகாப்பு கேந்திர ஆய்வுகள் அமைப்பின் டைரக்டர் -ஜெனரல் சிரின் மசாரி ஜனவரி-8ம் தேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். ''பாக்கிஸ்தான் அரசு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான வரையறைகளை தெளிவாக அறிவித்துவிட வேண்டும். இந்த வரையறைகளை அமெரிக்க மதிப்பதற்கும் உத்திரவாதம் செய்துதர வேண்டும் இல்லையெனில் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களுக்கு நேரடி மிரட்டலாக ஆகிவிடும்'' என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஜனவரி-5ந் தேதி டான் பத்திரிகை விமர்சனக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் அமெரிக்க பாகிஸ்தான் உறவில் ஏற்கனவே "கொந்தளிப்புகள்" உருவாகி விட்டதாகவும் "அமெரிக்காவின் நிதானமற்ற அகங்கார அறிக்கைகள் இந்த நெருக்கடியை மேலும் அதிகரித்துவிடும்" என்று எச்சரித்திருக்கிறது. ஜனவரி-12ந் தேதி அதே பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆசிரிய தலையங்கத்தில், வாஷிங்டனிலிருந்து சலுகைகளை பெறுவதற்கு தனது பூகோள அடிப்படையிலான நிலையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பாக்கிஸ்தான் ஆட்சியை வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. ''மத்திய ஆசியாவிற்கும் வளைகுடா மண்டலத்திற்கும் மிக அருகாமையில் பாகிஸ்தான் அமைந்திருப்பதால் இந்த மண்டலத்தின் நிலையான தன்மைக்கும் அமைதிக்கும் பாகிஸ்தான் தனது பங்கை செலுத்த முடியும். இந்த மண்டலத்தில் அமெரிக்காவிற்கு உயிர் நாடியான பொருளாதார மற்றும் அரசியல் நலன்கள் உள்ளன'' என்று அந்தப் பத்திரிகை தனது தலையங்கத்தில் கூறியிருக்கிறது.

முஷ்ராப் பேரம் நடத்துகின்ற அளவிற்கு வலுவான நிலையில் இல்லை. வாஷிங்டன் நிர்ப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு தலிபான் அரசிற்கு தனது ஆதரவை பாகிஸ்தான் விலக்கிக் கொண்டது. 2001 செப்டம்பர்-11 அன்று பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படை எடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முஷ்ராப் நிர்வாகம், அமெரிக்க இராணுவம் பாகிஸ்தானின் இராணுவத் தளங்கள் பலவற்றை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது. தனது எல்லையில் போர் விமானங்கள் பறப்பதற்கு அனுமதி கொடுத்தது. FBI, அல் கொய்தா உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை பாகிஸ்தான் வேட்டையாடி பிடிப்பதற்கும் அனுமதி வழங்கியது.

இதற்கு கைமாறாக பாக்கிஸ்தான் மிகக்குறைந்த அளவிற்கு அமெரிக்காவின் நிதி உதவியைப் பெற்றது. பாக்கிஸ்தானின் நொடிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக அமெரிக்கா அங்கீகரித்த கடன்களையும் சர்வதேச அமைப்புகளில் இருந்து பாகிஸ்தான் பெற்றது. ஆனால் முஷ்ராப் வாஷிங்டன் கட்டளைகளை ஏற்று நடப்பது அவரை மிகப்பெருமளவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுவருகிறது. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிரான ஆத்திரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ''பாக்கிஸ்தானின் புகைந்துகொண்டிருக்கும் அதிருப்தி மற்றும் ஒட்டுமொத்த கொந்தளிப்பிற்கு இடையே கத்தி முனையில் நடமாடிக்கொண்டிருக்கிறது'' என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஜனவரி-5ந் தேதி ரொரன்டோ பல்கலைக்கழக ஆசிரியர் தோமஸ் ஹோமர் டிக்சன் எழுதியிருக்கிறார்.

புஷ் நிர்வாகம் உடனடியாக ஈராக் மீது படையெடுக்க இருப்பது ஏற்கனவே பாகிஸ்தானில் பரவலான ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அதுவே பாக்கிஸ்தானில் ஒட்டுமொத்த எழுச்சிகளுக்கு அடிப்படையாக அமையக்கூடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved