World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US attorney general defends civil liberties abuses

Ashcroft dismisses report on post-911 dragnet

அமெரிக்க சட்டமாஅதிபர் அடிப்படைஉரிமைகள் தவறாகத் கையாளப்பட்டதை பாதுகாக்கின்றார்

911 க்குப்பின் விரிக்கப்பட்ட வலையின் மீதான அறிக்கையை ஆஷ்கிரோப்ட் தள்ளுபடி செய்கிறார்

By Kate Randall
09 June 2003

Back to screen version

செப்டம்பர் 11 க்குப் பின்னர் ''பயங்கரவாதத்திற்கு எதிரான'' வலைப்பின்னலில் பரந்தளவில் கைது செய்யப்பட்ட புலம் பெயர்ந்தோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன, என்று அம்பலப்படுத்திய நீதித்துறை அமைச்சகத்தின் உள்அறிக்கை ஒன்றைப்பற்றி முதன் முதலாக பேசிய அமெரிக்க சட்டமாஅதிபர் ஜோன் ஆஷ்கிரோப்ட் (John Ashcroft) காங்கிரசின் நீதித்துறைக் குழுவின் முன்னர் கடந்த வியாழன் அன்று சாட்சியம் அளித்தார்.

ஜூன் 2ம் திகதி வெளியிடப்பட்ட நீதித்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தை சேர்ந்த உயர் அதிகாரியின் அறிக்கையில், பிரயோகிக்கப்பட்ட வசை மொழிகள், உடல்ரீதியான தாக்குதல்களால் நிகழ்ந்த கொடுமைகள், வழக்கறிஞர் வைத்துக் கொள்ள அனுமதி மறுத்தல், பத்திரத்தில் கையெழுத்திட்டு வெளிவருதல் மறுக்கப்படுதல் போன்ற பல உரிமைகள் எவ்வாறு அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட 762 பெரும்பாலான அரேபிய முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டன என்ற விவரங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய அதிகாரத்தின் கீழ் உள்ள பாதுகாவல் குழு அளித்த அறிக்கையையே மறைக்கப்படாத இகழ்ச்சியுடன் ஆஷ்கிரோப்ட் நோக்குகிறார். காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அவர் கூறுகையில், "நாங்கள் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை" என்றார். இன்ஸ்பெக்டர் ஜெனரல், போலீஸ் ஆட்சிமுறை நடவடிக்கையை ஆதரிப்பதோடு மட்டுமல்லாது மேலும் கடுமையான மற்றும் கூடுதலான பரந்த போலீஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். செப்டம்பர் 11, 2001 இன் தாக்குதலுக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுவோரை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், வழக்குத் தொடுக்கவும் போன்ற இதுவரையில்லாத அளவு அதிகாரங்களை வழங்கிய அமெரிக்க நாட்டுபற்று சட்டத்தின் (USA Patriot Act) சரத்துக்கள் மேலும் நீடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தீவிரவாத சந்தேகத்திற்கு உட்படுவோர் வழக்கு நடைபெறுவதற்கு முன் பிணையில் வெளிவராமல் இருக்கவும், சில பயங்கரவாதத் தொடர்புடைய குற்றங்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படும் அளவில் சட்டத்தில் இட வகை செய்ய வேண்டும் எனவும் ஆஷ்கிரோப்ட் அமெரிக்க காங்கிரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆஷ்கிரோப்ட் பாணியிலான இவ்வாறான, அரசியல் உரிமைப் பாதுகாப்புக்களின் அத்துமீறலுக்கு இந்த அளவு உட்படுத்துவது ஆதரிக்கப்பட்ட போதிலும், காங்கிரஸ் நீதித்துறைக் குழுவின் உள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கோழைபோல் ஊமைத்தனமாக இதற்கெல்லாம் இணக்கம் தெரிவித்து இருந்தனர். ஒருவர் கூட, இந்த சட்டமாஅதிபராக உள்ளவர் இப்படி ஜனநாயக உரிமைகளைத் தாக்குவது அவருடைய காலத்திற்கே கேள்விக்குறியை ஏற்படுத்தும் என்று கூறும் தைரியம் பெற்றிருக்கவில்லை.

புஷ் நிர்வாகத்தின், ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்ட விதிகளின் தன்மையை விமர்சனத்திற்கு உட்படுத்தாமலே அனைவரும் ஏற்றுக் கொண்டனர், அதனூடு அவர்கள் நாட்டின் உரிமைகளை போலீஸ் அதிகாரம் பறித்துக் கொள்ளும் செயல் முறையை தனிமனித விருப்புக்களின் செலவில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஏற்றுக் கொண்டனர். பிரதிநிதிகளின் மன்ற உறுப்பினரான கலிபோர்னிய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹோவர்டு எல். பெர்மன் (Howard L. Berman), "இந்தப் போரில் கூட்டு இழப்பு (Collateral Damage) தேவையை விட அதிகமாக உள்ளதோ என்ற கருத்து எங்களில் சிலருக்கு தோன்றியுள்ளது" எனும் கருத்தை தெரிவித்துள்ளார்.

மற்ற ஜனநாயக கட்சியினரை விட அதிகமாகப் பேசிய பிரதிநிதிகள் மன்ற வேர்ஜினியாவின் (Virginia) உறுப்பினர் ரொபேர்ட் எஸ். ஸ்கொட் (Robert S. Scott) அடிப்படை உரிமைகள் (நீதித்துறை அமைச்சகத்தின்) தன்மை பற்றி உள்ள சான்றுகள் குற்ற நடவடிக்கைகளாகக் கூடும் என்றும் இதையொட்டி ஒரு தனித்த வழக்கறிஞர் நியமிக்கப்பட வேண்டுமோ என்ற கருத்து தோன்றுகிறது என்றார். தனி வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் சட்டமாஅதிபருக்கு தான் உண்டு; "இப்பொழுது இந்த விஷயத்தில் தனி வழக்கறிஞர் நியமனம் தேவையற்றது என நான் கருதுகிறேன்" என்று ஆஷ்க்ரோப்ட் கூறியதை எவரும் எதிர்க்கவில்லை.

நீதித்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், க்ளென் பைனின் (Glenn Fine) அறிக்கை, 198 பக்கங்கள் கொண்டது; இதில் ஆஷ்கிரோப்ட் மற்றைய நீதித்துறை அமைச்சரக அதிகாரிகள் மீது விசாரணை நடத்தவும் கிரிமினல் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரவும் போதுமான ஆதாரங்கள் உள்ளன. நேரடியான குற்ற நடத்தை என்று குறிப்பிடவில்லை என்றாலும் இந்த அறிக்கையில் அதிகாரிகள் எவ்வாறு விதியை மீறி கைது செய்யப்பட்டோர் நூற்றுக் கணக்கானவர்களை உரிமைகளைப் பறிக்கும் அளவில் சிறைப்படுத்தியும், வசைமொழிகளால் திட்டியும், உடலளவிலும் காயப்படுத்தினர் என்றும் புலனாகிறது எனத் தெரிவிக்கின்றன, மேலும் ப்ரூக்லின் (Brooklyn) நியூயோர்க்கில் உள்ள Metropolitan Detention Center எனும் சிறையிலும், நியூ ஜெர்ஸியிலுள்ள Passic சிறையிலும் திட்டமிட்ட அத்துமீறல்கள் இருந்தன என்பதும் கூறப்பட்டுள்ளன.

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் "பிணை கிடையாது" என்ற கொள்கையை நீதித்துறை அமைச்சரகம் பலபேரை வளைத்துப் பிடித்தபோது ஆரம்பமாகிவிட்டது. சந்தேகத்திற்குட்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படாத அளவில் சிறையில் சராசரி 80 நாட்கள் வைக்கப்பட்டிருந்தனர். சிலர் ஆறு மாத காலம் கூட அடைக்கப்பட்டிருந்தனர். அறிக்கையின்படி நீதித்துறை அமைச்சரக உயரதிகாரிகளின் கட்டளைப்படி ''மறு உத்தரவு வரும் வரை சிறையில் வைக்கவும்'' என்ற முறையும் கொண்டு வரப்பட்டது.

இந்தக் கொள்கையின்படி, FBI கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கப்படலாமா, கூடாதா எனக் கூறும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது. நீதித்துறை அமைச்சரவை வழக்கறிஞர் ஆய்வாளர்களிடம் இந்தக் கொள்கை மாறுதல், சட்ட நெறியான "நிரூபிக்கப்படும் வரை நிரபராதி" என்பதை மாற்றி "சரியென்றால்தான் நிரபராதி" என்பதையும் மாற்றி, "FBI சரியென்றால்தான் நிரபராதி" என்ற அடிப்படை மீறலைக் கொண்டுள்ளது என்றும் ''நிரபராதி என நிரூபிக்கும் வரைக்கும் பயங்கரவாதத் தொடர்புடையவர்'' என்றே கருதப்படுவார் என்ற நிலையும் தோன்றி விட்டதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

சந்தேகத்திற்குட்பட்டு சிறை பிடிக்கப்பட்டவர்களுடைய எந்த பிணைமனுவையும் ''பொது நலன் கருதி'' எதிர்ப்பதாக நீதித்துறை அமைச்சரகம் தெரிவித்ததுடன் பெரும்பாலாக கைது செய்யப்பட்டவர்களையும் இப்பிரிவினுள் உட்படுத்தி விட்டது. பல நேரங்களில் குடியேறியவர்களும், மக்கள் பதிவுக்குமான சேவையானது, (Immigration and Naturalization Service - INS) குறிப்பிட்ட 72 மணி நேரத்திற்குள் குற்றச்சாட்டுக்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை மாற்றி அவற்றை கொடுப்பதற்கே ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டனர்.

இந்தக் கொள்கையினால் நீதித்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் INS அதிகாரிகளுக்கும் இடையே மனக்கசப்புக்கள் ஏற்படலாயின. INS வழக்கறிஞர்கள் சில வழக்குகளில் இந்தக் காலதாமதம் கூடுதலான வழக்குத் தொடரல்களை ஏற்படுத்தும் நிலையைக் கொண்டுவரும் என்று எச்சரித்தனர். சிறைபிடிக்கப்பட்டவர்களை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன் நீதித்துறை அமைச்சரகம் விரைவில் செயல்பட்டு FBI யிலிருந்து சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக விருப்பக் கடிதத்தை (Clearance) பெற்று விடுகின்றனர் என்றும் அவ் அறிக்கை தெரிவிக்கிறது.

குடியேற்றச் சட்டத்தை மீறிய பல சிறைபிடிக்கப்பட்டோரை நீதித்துறை அமைச்சகம் விடுவிக்க மறுத்து விட்டது, ''அமெரிக்காவிற்கு அவர்களால் எந்த ஆபத்தும் வராது'' என்று FBI கூறும் வரை இது நடைபெறும் என அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் குடியேற்றச் சட்ட நீதிபதிகள் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பித்த பிறகும் சிலர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அடைக்கப்பட்டிருந்த 762 நபர்களில் பெரும்பாலானவர்களுக்கு, சூழ்நிலைக் கருத்தைக் கொண்டு ஆராய்ந்தாலும், தீவிரவாதத்தோடு எந்தத் தொடர்புமில்லாமல்தான் இருந்தனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது. ''தற்செயலான சந்திப்பிலோ, சிலவேளை தொடர்பு இருந்ததாகக் கருதப்பட்டுத்தான் சிலர் அடைத்து வைக்கப்பட்டனரேயொழிய தீவிரவாதச் செயலுடன் உண்மையான தொடர்புக்கான அறிகுறிகள் ஏதும் கிடையாது.``

இதே அறிக்கையின்படி, FBI ன் வழக்கு குறிப்பு ''பொதுவான தன்மையுடையதாக'' உதாரணமாக, ''வீட்டுச் சொந்தக்காரர் அரேபியரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு உரியவை'' என்று கருதுவதையடுத்து எடுக்கப் பட்டதாகத்தான் தெரிகிறது.

செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக 762 பேரில் ஒருவர் மீதுகூடக் குற்றச்சாட்டு கிடையாது. புஷ் நிர்வாகம் அடைக்கப்பட்டோர் பற்றிய அடையாள விவரங்களை இன்னும் வெளியிட மறுத்த போதிலும், பெரும்பான்மையானவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், சிலர் மட்டுமே விடுவிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் பிடியில் துன்புற்றோர் பலரும் இப்பொழுது அமெரிக்காவில் இல்லை. ஆனால் இன்ஸ்பெக்டர் ஜெனரல், அலுவலக அதிகாரிகள் அவர்களுடைய குற்றச்சாட்டுக்கள் நம்பத்தகுந்தவையே எனக் கூறுகின்றனர்.

பலர் அறையிலே 24 மணிநேரமும் வெளிச்சம் எரியவிடப்பட்ட நிலையில் அடைக்கப் பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். சிலர் கைகால்விலங்குடனே 23 மணிநேரம் அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து கைவிலங்குகள், காலில் இரும்புத் தளைகளுடனும், இடுப்பில் கட்டப்பட இருப்புச் சங்கிலிகளுடனும் வெளியேவிடப்பட்டனர்.

அடைக்கப்பட்டவர்கள் மோசமான வசைமாரி திட்டித் தீர்த்தல்களுக்கு உட்படுத்தப்பட்டனர், சிலர் பட்டினிப் போராட்டம் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

புரூக்லினில் (Brooklyn - MDC) அடைக்கப்பட்டவர்கள், தாங்கள் சுவரின் மீது மோத விடப்பட்டதாகவும், இவற்றை, பாதுகாவலர்கள் அவர்களுடைய அறிக்கையை ஒலி/ஒளி நாடாக்களில் பதிவு செய்வதற்கு முன்னர் செய்தார்கள் எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். கை விலங்குகள், கால் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சிலர் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், ''இப்பொழுதுதான் உங்களால் வலியை உணர முடியும்'' என்று காவலர்கள் கூறினர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மற்றவர்கள், தோள்பட்டை, கைகள், மணிக்கட்டுக்கள், விரல்கள் முதலியவை காவலர்களால் வளைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

MDC யில் அடைக்கப்பட்ட 19 பேர்களை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தினர் பேட்டி கண்டனர். 12 பேர் உடல்ரீதியான தாக்குதல்களுக்கும், 10 பேர் வசை மொழிகளால் திட்டித் தீர்க்கப்பட்டதாகவும் கூறினர். பேட்டி கண்ட 12 சிறை அதிகாரிகளும் (Correctional Officers) இப்படிப்பட்ட சம்பவங்களில் தாங்கள் பங்குபற்றியதாகவோ, பார்த்ததோ கிடையாது என மறுத்து விட்டனர். அவர்களை அடைத்து வைக்கப்பட்டடிருந்த MDC யில் உள்ள விசேடமான ஒரு பிரிவில் எடுக்கப்பட்ட நூற்றுக் கணக்கான வீடியோ டேப்புக்களும் ஆச்சரியப்படத்தக்க அளவில் அழிக்கப் பட்டுவிட்டன.

இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல்களில் மிக முக்கியமானது வழக்கறிஞர் உதவி மறுக்கப்பட்டதாகும். செப்டம்பர் 11, 2001 ஐத் தொடர்ந்து பல வாரங்களாக சிறைகளில் (Bureaua of Prisons) தொடர்புகளை மேற்கொள்ளல் இருட்டடிப்பு செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்களையோ வழக்கறிஞரையோ அங்கே காணமுடியாது. இருட்டடிப்பு நீக்கப்பட்ட பின்னரும், பலரும் ''பாதுகாப்புச் சாட்சிகள்'' (Witness Security) என்று பெயரிடப்பட்டு உள்ளடக்கப்பட்டோர் எங்கு உள்ளார்கள் என்பது பற்றி குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள் ஆகியோர் கூட முயற்சியில் துவண்டு போகும் அளவுக்கு அறியாத நிலையிலே தள்ளப்பட்டனர் என்று மேலும் அவ் அறிக்கை கூறுகிறது.

அடைக்கப்பட்ட சிலருக்கு, வக்கீல்களின் பெயர்களை அழைப்பதற்காக தவறான தொலைபேசி எண்கள்தான் கொடுக்கப்பட்டன. சிலருக்கு அவர்கள் சார்பாக வாதாட விருப்பம் இல்லாத வக்கீல்களுடைய பெயர்களும், தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டன. சில பேருக்கு வாரத்திற்கு ஒரு முறைதான் வழக்கறிஞர் உடன் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டு, அந்த ஒரு முறையிலும் தவறான எண்ணோ அல்லது அந்நேரம் தொலைபேசி பாவனையில் இருந்தாலோ அதுவும் ஒரு தடவை என எண்ணப்பட்டு அவர்களுக்கான சந்தர்ப்பம் இல்லாது செய்யப்பட்டது.

அறிக்கையின்படி 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் வலைவீசிப் பிடித்தலில் அகப்பட்டுள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையான 254 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அதிகபட்சம் சாதாரண குடிவரவு விதிகளையே மீறியவர்களாவர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved