World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

Burmese junta refuses to release opposition leaders

எதிர்கட்சி தலைவர்களை விடுதலை செய்ய பர்மா இராணுவ ஆட்சிக் குழுவினர் மறுப்பு

By Sarath Kumara
27 June 2003

Back to screen version

சர்வதேச அளவில் பர்மா இராணுவ ஆட்சிக் குழுவினருக்கு நிர்பந்தங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் ஆங் சான் சுகியை (Aung San Suu Kyi) விடுதலை செய்வதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் சுகியும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (NLD) தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பிரதான எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து தனிமைச் சிறையில் வைத்திருப்பதும், அவரது ''சொந்த நலன் கருதியே தடுப்புக்காவலில்'' வைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறுவதும், அதிகாரப்பூர்வமாக பர்மா இராணுவ ஆட்சியாளர்கள் கூற்றை எள்ளி நகையாடுவதாக அமைந்திருக்கிறது.

பர்மாவின் வடக்கு பகுதியில் உள்ள தொலைதூர இடத்தில் சுகி சென்ற வாகனங்கள் மே 30 ஆம் தேதி இரவு தாக்கப்பட்டதுடன் அவரும் கைது செய்யப்பட்டார். அவருக்குப் பாதுகாப்பாகச் சென்ற வாகனங்களில் இடம் பெற்றிருந்த அவரது ஆதரவாளர்கள் 70 பேர் அத்தாக்குதலில் மாண்டனர். அரசாங்கத்திற்கு ஆதரவான கும்பலில் நூற்றுக்கணக்கானோர் தடிகள் கற்களோடு திரண்டு வந்து அந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இராணுவம் தயாரித்துள்ள ஐக்கிய ஒற்றுமை அமைப்பைச் (USDA) சேர்ந்த பல உறுப்பினர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதுடன், சிலர் புத்தத் துறவிகளைப் போல் வேடமணிந்தும் வந்தனர்.

தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு சென்ற BBC பத்திரிகையாளர் ஒருவரிடம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியபோது, கிராம மக்களை நிர்பந்தம் செய்து அவர்களைத் திரட்டி இலக்கு என்ன என்று கூறாமல் தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். அத்துடன் மாண்டலே சிறையில் இருந்த சில கைதிகள் கொண்டுவரப்பட்டு அருகாமையில் உள்ள இராணுவ முகாமில் அவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டு தாக்குதல் நடாத்த அருகாமையில் உள்ள ஒரு வீட்டிற்கு பிற்பகலில் கொண்டு வரப்பட்டதாக மற்றவர்கள் இந்த நிருபரிடம் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று இராணுவ ஆட்சிக்குழு அறிவித்தது. இந்த சம்பவத்தை பயன்படுத்தி உடனடியாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் குழுக்கள் மீது இராணுவக் குழுவினர் நடவடிக்கை எடுக்கத் துவங்கி விட்டார்கள். கண்டனங்கள் எழக்கூடும் என்று பயந்து ஆட்சியாளர்கள் தாக்குதல் நடந்த பின்னர் இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழகங்களை மூடிவிட்டனர். நாடு முழுவதிலும் உள்ள NLD அலுவலகங்களை மூடிவிட்டதுடன் அதன் கட்சி உறுப்பினர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுகி அவரது சொந்த நலன் கருதியே கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டாலும் அந்நாட்டு கொடூரமான அரசு பாதுகாப்புச் சட்டப்படி விசாரணை இல்லாமல் வக்கீல்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ சந்திக்க முடியாமல், 180 நாட்கள் வரை விசாரணை எதுவும் இல்லாமல் காவலில் வைத்திருக்க முடியும். இந்த சட்டப்படி கைது செய்யப்படுபவர் 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.

ஐ.நா. வின் சிறப்புத்தூதர் ரஷாலி இஸ்மாயில் ஒருவர் மட்டுமே சுகியைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். ''நான் அவரைச் சந்தித்த போது மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருந்தார். ஆனால் அவர் நிலைகுலைந்து விடவில்லை. உற்சாகமாகவே காணப்பட்டார். தனக்கு இவ்வாறு நடந்துவிட்டதே என்று ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார்'' என்று ரஷாலி இஸ்மாயில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் மற்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் மைக் ஒபரியன் உள்பட பலரிடமிருந்து சுகிக்கு வந்த தொலைபேசித் தொடர்புகள் மற்றும் தகவல்களை அனுமதிக்க இராணுவ ஆட்சியாளர்கள் மறுத்துவிட்டனர். சென்ற வெள்ளிக்கிழமை இராணுவ அதிகாரிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளை NLD தலைவர்களைச் சந்திக்க அனுமதித்தபோதும், சுகியை சந்திப்பதற்கான அனுமதியை மறுத்துவிட்டனர்.

இராணுவ ஆட்சியாளர்கள் மே மாதம் 30 ந் தேதி நடாத்திய இந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் முன்னர், 1988 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடு முழுவதிலும் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டபோது மிகக் கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். தலைநகர் ரங்கூனில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது இராணுவம் சுட்டதால் இவ்வளவு பேர் பலியானார்கள். இராணுவத்துடன் சமரசம் பேரம் நடத்தி சுகி 1988 ஆம் ஆண்டு கண்டனக் கிளர்ச்சியை திரும்பப் பெற்றார். அந்த ஒப்பந்தப்படி 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுகியின் NLD கட்சி மிகப்பெரும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இராணுவ ஆட்சியாளர்கள் இந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

சர்வதேச அளவில் கணிசமான அளவிற்கு நிர்பந்தங்கள் கொடுக்கப்பட்டதால் சுகி மற்றும் எதிர்கட்சிகளுடன் அரசியல் சமரசத்திற்கு வர இராணுவம் முன் வந்தது. ஆனால் இந்த நிலைப்பாட்டிலிருந்து விலகும் வகையில் தற்போது எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. 19 மாதங்கள் வீட்டுக்காவலில் இருந்த சுகி சென்ற ஆண்டு மே மாதம் விடுதலை செய்யப்பட்டார். சில வரையறைக்கு உட்பட்ட, நடமாடும் சுதந்திரம் அவருக்கு தரப்பட்டதுடன், NLD தனது அலுவலகங்கள் சிலவற்றை மீண்டும் திறப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அத்துடன் 1990 தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இராணுவ ஆட்சியாளர்கள் திட்டவட்டமாக அறிவித்தும் விட்டனர்.

அமெரிக்காவும், ஐரோப்பிய அரசுகளும் விதித்திருந்த பொருளாதாரத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியின் காரணமாக எதிர்கட்சிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை இராணுவ ஆட்சியாளர்கள் தளர்த்தினர். இருந்தபோதிலும் கடந்த ஓராண்டிற்கு மேலாக சுகியுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகமாக விடுக்கப்பட்டன. அத்துடன் பர்மாவிற்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற மிரட்டலும் வந்தன.

சென்ற நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் கெல்லி கீழ்கண்ட எச்சரிக்கை விடுத்திருந்தார்: ''பர்மாவின் முன்னேற்றப்பாதை கானல் நீராக இருக்குமானால் அமெரிக்காவுடன் இதர நாடுகளும் இணைந்து புதிய முதலீடுகளுக்கு தடைவிதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும் என்பதை பர்மா அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்'' என்றார். ஏப்ரல் மாதம் ஐரோப்பிய யூனியன் பர்மா அரச அதிகாரிகளுக்கு விசா மறுப்புப் பட்டியலை அதிகரித்தது மற்றும் பொருளாதார மற்றும் ஆயுதத் தடைகளை மேலும் ஓராண்டிற்கு நீடித்தது.

பர்மா அரசாங்கப் பிரதிநிதி கேனல் ஹிலாமின் பொருளாதாரத் தடைகளால் இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியை ஜூன் 20 ஆம் தேதி BBC க்கு அளித்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார். ''எங்களுக்கு கால அவகாசம் தருவதற்கு பதிலாக எங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, தட்டிக்கொடுப்பதற்கு பதிலாக எப்போதுமே தடைகள் மேலும் பொருளாதாரத் தடைகள் என்று எப்போதுமே அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார். இராணுவ ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை NLD மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியதால் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எந்த பயனுமில்லை. அதற்கு மாறாக NLD மக்களது ஆதரவை பெருமளவுக்குப் பெறத் தொடங்கியது.

துவக்கத்தில் வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சுகி மிகவும் கவனமான அணுகுமுறையை மேற்கொண்டதுடன், இராணுவ ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்துகொள்ளவும் விரும்பினார். மார்ச் 14 தேதி ஜனநாயக வாய்ஸ் ஆஃப் பர்மா விற்கு பேட்டியளித்த சுகி பேச்சுவார்த்தைகள் மூலம் மேலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை தான் விரும்புவதாக குறிப்பிட்டார். அத்துடன் அவரது பேரணிகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கிராமப்பகுதிகளில் மக்களது ஆதரவு அவருக்கு அதிகம் இருந்தது. இராணுவ ஆட்சியாளர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக பொதுமக்கள் அதைப் பயன்படுத்தி அவரது பேரணியில் திரண்டு வர ஆரம்பித்தனர்.

அவரது வாகனங்கள் தாக்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் மே 29 அன்று சுகி மணிவாப் (Monywa) பகுதியில் பேரணி ஒன்றை நடத்தினார். அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மே 27 அன்று அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர் முதல் தடவையாக அவர் பகிரங்கமாக 1990 தேர்தல் முடிவுகளை செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். NLT கட்சிக்கு பொதுமக்களது ஆதரவு ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருப்பதால் மற்றொரு பக்கம் சுகி தனது ஆட்சி அமைக்க வேண்டுமென்று வற்புறுத்தி வருகிறார். இதன் காரணமாக இராணுவ ஆட்சியாளர்கள் எதிர்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

சுகி கைது செய்யப்பட்டதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஜூன் 2 ந் தேதி ஜனாதிபதி புஷ் தனது கவலையை தெரிவித்ததுடன் சுகி விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பவல் ''Wall Street Journal'' பத்திரிகையில் ஜூன்12 ந் தேதி எழுதியுள்ள கட்டுரையில் ''பர்மாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கின்ற குண்டர்கள் ஜனநாயகத்தை மீட்டுத் தருவதற்கு தவறுவார்களானால் அவர்களுக்கு எதிராகவும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராகவும் மேலும் மேலும் நிர்பந்தங்கள் அதிகரிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்'' என்று எச்சரிக்கை விடுத்தார்.

பர்மாவில் தயாரிக்கப்படும் பண்டங்களுக்கு தடைகள் விதித்து அமெரிக்க நாடாளுமன்றம் பொருளாதாரத்தடை நடவடிக்கையை வலுப்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவில் உள்ள பர்மாவின் அரசாங்க சொத்துக்களை முடக்கிவிட வாஷிங்டன் கருதுகிறது. பர்மாவின் கடந்தகால இன்றைய ஆட்சித் தலைவர்களுக்கு விசா வழங்குவதில்லை என்று அமெரிக்கா கருதியுள்ளது. அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பு (ASEAN) பர்மா ஆளும் இராணுவ குழுவினருக்கு மிதமான கண்டனத்தை தெரிவித்துள்ளது. கம்பொடியாவில் அண்மையில் நடைபெற்ற ASEAN மாநாட்டில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், புஷ் நிர்வாகம் பர்மாவில் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக கவலை தெரிவித்து வருவது முற்றிலும் இறுமாப்போடு கூடிய ஓர் கருத்துதான். சுகியை அமெரிக்கா ஆதரித்து வருவது இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காகத்தான் ஆகும். வெளிநாட்டு முதலீடுகளுக்கு இராணுவ ஆட்சிக் குழுவினர் சகித்து கொள்ள முடியாத தடைக் கல்லாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பர்மாவின் மூலப்பொருள் வளங்களையும் மலிவான கூலித் தொழிலாளர்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கும் இராணுவ ஆட்சி தடைக்கல்லாக உள்ளது.

இந்தோனேசியாவின் முந்தைய சுகார்ட்டோ சர்வாதிகாரத்தைப் போன்று பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களும் நாட்டு பொருளாதாரத்தின் மிகப்பெரும் பிரிவுகளில் தங்களது நேரடி ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். சிறிய அளவிற்குதான் சந்தை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டுத் தொழில்களை கண்காணிப்பதற்கு 1990 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசிற்கு சொந்தமான மியான்மர் ஏகானாமிக் ஹோல்டிஸ் யூனியன் நிறுவனம் மூலமாக 40 வீதமான முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. சுகி மற்றும் அவரது NLD கட்சியினர் பொருளாதார சீரமைப்புத் திட்டத்தை மேற்கொண்டு பர்மாவின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப் போவதாக உறுதியளித்துள்ளனர்.

சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டுள்ள பர்மா இராணுவத் தளபதிகள் மீது வாஷிங்டன் பகை கொண்டிருப்பதன் விளைவாக இராணுவ ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. ரங்கூனில் அமெரிக்காவிற்கு ஆதரவு காட்டும் ஆட்சி பதவிக்கு வருவது சீனாவை தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளை வலுப்படுத்துவதாக அமையும். 2000 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் புஷ் அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ள நாடு சீனா என்று வர்ணித்தார். ''பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச போர்'' என்ற பதாகையின் கீழ் சீனாவின் எல்லைகளை சுற்றி அமெரிக்கா நெருக்கமான இராணுவ உறவுகளை உருவாக்கி வருகிறது. வடகிழக்கு ஆசியாவில் துவங்கி தென்கிழக்கு ஆசியா வழியாக இந்திய துணைக்கண்டம், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் நெருக்கமான இராணுவ உறவுகளை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பர்மாவில் ஆட்சி புரியும் இராணுவ ஆட்சியாளர்கள் ஒரு மூலையில் முடக்கப்பட்டு விட்டனர். அத்துடன், நாட்டின் மிகப்பெரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை தீர்த்து வைக்கிற வல்லமை இல்லாமல் வளர்ந்து வருகின்ற சமூக கொந்தளிப்பை கொடூரமான அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கி வருகிறார்கள். மே 30 ந் தேதி நடைபெற்ற கைதுகளுக்கு பின்னர் இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜெனரல் கின் நையோன்த் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோடிட்டு காட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு தேவையான நடவடிக்கையாகத்தான் 1988 ம் ஆண்டில் இராணுவம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள நேர்ந்ததாகவும் குறிப்பிட்டார். இராணுவ ஆட்சியாளர்களில் இவர் அதிகமான ''தாராளவாத'' போக்குள்ளவர் என்று கூறப்படுவதுடன் சுகியுடன் சமரசம் செய்து கொள்வதற்கான முயற்சியில் பிரதானமானவராகவும் கருதப்படுகின்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved