World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Imperialism and Iraq: Lessons from the past

ஏகாதிபத்தியமும் ஈராக்கும்: கடந்தகாலப் படிப்பினைகள்

Part One

By Jean Shaoul
29 May 2003

Back to screen version

இன்றைய ஈராக் நடப்புகளை அவதானிக்கும் எவருக்கும் சட்டென்று பழைய வரலாற்று நிகழ்ச்சிகள்தான் நினைவிற்கு வரும். 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஈராக்கில் நடைபெற்ற சம்பவங்கள் இன்றைய நிகழ்ச்சிகளுக்கு இணையானவையாக தோன்றுவது தெளிவானதே.

இந்த பிராந்தியத்தில் ஏகாதிபத்திய அரசுகளின் நலன்களின் அணிவகுப்பு ஒரே மாதிரியாக இருந்தன. அந்த நேரத்தில் மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக பிரிட்டன் இருந்தது, அமெரிக்கா அல்ல; 1914-ம் ஆண்டு அன்றைக்கு மெசப்பட்டோமியா (Mesopotamia) என்று அழைக்கப்பட்ட ஈராக் மீது பிரிட்டனின் ஆயுதப்படைகள் படையெடுத்து வந்தன. துருக்கியர்களிடம் இருந்து ஈராக்கியர்களுக்கு சுதந்திரம் பெற்று தருவதாக உறுதிமொழி வழங்கப்பட்டு அந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அந்த உறுதிமொழிகள் பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்பட்டு அவை உறுதிமொழியோடு நின்றுவிட்டன. எப்போதும்போல், இந்த ஆவேச உரைகளுக்கு பின்னால் சடரீதியான நலன்கள் --எண்ணெய் வளம் இருந்தது. இன்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்து வருவதைப்போல் அன்றைய பிரிட்டன் தனக்கு எண்ணெய் வளத்தின் மீது எந்தவிதமான அக்கறையுமில்லை என்றே கூறிவந்தது.

அந்த நேரத்தில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு சாதகமான சூழ்நிலை நிலவியது; துருக்கியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து "அரபுக்களை விடுவிப்பதற்கு" நடத்தப்பட்ட போரில் அரபுக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை, ஆனால் பிரிட்டன் அந்த நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டது.

அந்த காலத்திலே கூட, மிக பயங்கரமான விமானப்படை குண்டு வீச்சு தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த நேரத்திலும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கிடையில் - அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி-- இவற்றுக்கிடையில் மிகுந்த கீழ்த்தரமான பேரங்கள் நடைபெற்றன. இப்போது, நட்பு நாடுகள் என்று அழைக்கப்பட்ட நாடுகளுக்கு மேலாக பிரிட்டன் லீக் ஆஃப் நேஷன் (ஐ.நா.வின் முன்னோடியான) அமைப்பின் உதவிகளுடன் ஆதிக்கம் செலுத்த முயன்றது. நாடுகளின் கழகம் (லீக் ஆஃப் நேஷன்) வெட்கக்கேடான முறையில் மெசப்பட்டோமியாவை பங்குபோட்டுக்கொள்வதற்கு உடன்பட்டது.

மிக முக்கியமாக பிரிட்டன் தனது எண்ணெய்வள நலன்களை காப்பதற்காக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டது. பெயரளவிற்கு 1932-வரை, லீக் ஆஃப் நேஷன்ஸ் கட்டளை என சொல்லிக்கொண்டது. ஆனால், ஆட்சி அதிகாரம் முழுவதும் பிரிட்டன் வசம் இருந்தது. ஈராக் மக்கள், பிரிட்டனின் போருக்கான ஆக்கிரமிப்பிற்கான மற்றும் ஆட்சி செலுத்துவதற்கான நிதிச் சுமை முழுவதையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

1958-ம் ஆண்டு, பிரிட்டனின் ஆட்சி இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தது. அப்போது மிகப்பெரும் அளவில் தெருக்களில் நடைபெற்ற பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்படுத்தமுடியாத அச்சுறுத்தலை உருவாக்கியது. அப்போது இராணுவம் தலையிட்டு மன்னராட்சியைத் தூக்கி எறிந்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது மற்றும் ஈராக் எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தது.

இந்த ஆரம்பக்கட்டத்தில், ஏகாதிபத்திய வல்லரசுகள் ஈராக்கின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலவரங்களை உருவாக்குவதில் எடுத்துக்கொண்ட பங்குபணி குறித்து ஆராய்வது பயனுள்ளது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள எல்லா வல்லரசுகளும் முயன்ற அதேவேளை, முதலாவது ஏகாதிபத்தியப் போரில் பத்துலட்சக் கணக்கான தொழிலாளர்கள் பலியான பின்னர் மற்றும் எண்ணிறைந்த சதிச் செயல்கள் நடந்து முடிந்த பின்னர் மட்டுமே பிரிட்டன் தனது மேலாதிக்கத்தை ஈராக்கில் நிலைநாட்ட முடிந்தது.

அத்தகைய ஆய்வு நமக்கு உறுதிப்படுத்துவது என்னவெனில், மக்களை விடுவிப்பது மற்றும் எதிர்கால முன்னேற்றப் பாதை என்பதிலிருந்து விலகி, மிக அண்மையில் நடந்த வளைகுடாப் போரின் பின்னர் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டமை உணர்த்துவது ஏகாதிபத்தியம் அந்நாட்டை நேரடியாக தனது ஆதிக்கத்தில் கொண்டுவரவும் எண்ணெய் வளத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதுதான். இந்த நேரத்தில் அமெரிக்கா அதைச் செய்கிறது. பிரிட்டன் அதற்கு இளைய பங்குதாராக ஆகிவிட்டது.

முதலாவது உலகப் போருக்கு முன்னர் மெசபடோமியாவில் ஏகாதிபத்திய நலன்கள்

மத்திய கிழக்கில் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட முதலாவது ஏகாதிபத்திய வல்லரசு பிரிட்டன். அந்த பிராந்தியத்துடன் பிரிட்டனுக்கு இருந்த ஆரம்பக்கட்ட உறவு இந்தியாவிற்கான கடல் வழியையும் இந்திய வர்த்தகத்தையும் பாதுகாப்பதுதான். இந்த அடிப்படையில் பிரிட்டனின் கடற்படைகள் அரபு நாடுகளின் கடலோரங்களில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தன. 1840-கள் வாக்கில் பாரசீக வளைகுடாவிலும் மற்றும் ஏடனிலும் (Aden) தனது காலனி ஆதிக்கங்களை நிலைநாட்டின. கடற்கரைப் பகுதிகளில் பிரிட்டன் மேலாதிக்கம் செலுத்தியதன் விளைவாக அந்த நாடுகளின் உட்பகுதிகள் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கு திறந்துவிடப்பட்டன.

அன்றைய மெசபடோமியா மூன்று மாகாணங்களை-- பாஸ்ரா, பாக்தாத் (Basra, Baghdad) மற்றும் பிரதானமாக குர்து இனத்தவர் வாழும் மோசூல் (Mosul) ஆகியவற்றைக் கொண்டது. அவை பின்னர் அறியப்பெற்ற நவீனகால ஈராக்கை உருவாக்கின. பல நூற்றாண்டுகள் வரை ஒட்டோமான் (Ottoman) சாம்ராஜ்யத்தின் கிழக்கு ஓரப் பகுதியாக இன்றைய ஈராக் விளங்கியது. அப்பகுதி பின்தங்கிய கிராமப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது மற்றும் அந்த மக்களில் பலர் அரை-நாடோடிகளைப் போன்றே வாழ்ந்துவந்தனர். 19-ம் நூற்றாண்டு இறுதி வாக்கில் சூயஸ் கால்வாய் (Suez Canal) திறக்கப்பட்டது. மற்றும் பிரிட்டன் ஆற்று வழிப் போக்குவரத்தை மேம்படுத்தியது. இதன் மூலம் விரிவான முதலாளித்துவ பொருளாதாரத்தில், மெசபடோமியா அதிகரித்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்டது. பாஸ்ரா மாகாணம் மான்செஸ்டருக்கும் பம்பாய்க்கும் உணவுத் தானியங்களையும் பருத்தியையும் ஏற்றுமதி செய்கிற மிக முக்கியமான துறைமுகப் பகுதியாக உருவாயிற்று.

அதே நேரத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தின் மீது அக்கறை அதிகரித்துக் கொண்டிருந்தது. மெசபடோமியாவிலும் பாரசீகத்திலும் சில பகுதிகளில் எண்ணெய் ஊற்றுக்கள் இருப்பதும் எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுவதும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தெரிந்திருந்தாலும் பூர்வகுடிகள் தங்களது உள்ளூர்த் தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தி வந்தார்களே தவிர, அங்கு வளர்ச்சி அடைந்த தொழில்துறை இருந்திருக்கவில்லை.

அந்த பிராந்தியத்தில் மெசபடோமியாவிலும் பாரசீக வளைகுடாப் பகுதியிலும் வணிக ரீதியில் எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்கான ஐரோப்பியர்களின் ஆர்வம் 19-வது நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து ஆண்டுகளில், மூலதனம் இந்தப் பிராந்தியத்தில் பாயத்தொடங்கியபொழுதே உருவானது. தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் கொன்ஸ்டாண்டிநோபிலிடம் (Constantinople) பல்வேறு அகழ்வாராய்ச்கிக்கான அனுமதிகள் கோரப்பட்டன. ஆங்கில பாரசீக எண்ணெய் நிறுவனம் 1908ம் ஆண்டு பாரசீகத்தின் தெற்குப் பகுதியில் எண்ணெய் வளத்தை முதலில் கண்டுபிடித்தது. அதுதான் வர்த்தக அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்த முதலாவது எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பாகும்.

அந்த பிராந்தியத்தில் பிரிட்டன் மற்றும் இந்திய வர்த்தகம், மொத்த வர்த்தகத்தில் 75 சதவீதம் மேலாதிக்கம் செலுத்திய அதேவேளை, ஜேர்மன் முதலீடு மெசபடோமியாவிற்கு பாயத்தொடங்கியது-- குறிப்பாக 1903ம் ஆண்டு துருக்கியிலிருந்து பாக்தாத்திற்கு இரயில்வே தொடர்பு ஏற்படுத்துவதற்காக ஜேர்மனி சலுகை பெற்றபின்னர் ஆகும். அந்த நோக்கம் பாஸ்ராவிற்கும் குவைத்திற்கும் இரயில் தொடர்பை ஏற்படுத்துவதாக இருந்ததால், அது மத்தியதரைக் கடல் பகுதிகளுக்கும் பாரசீக வளைகுடாப் பகுதிகளுக்கும் இடையில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி இருக்கும். அதன் மூலம் இந்தியாவில் பிரிட்டனின் நிலைக்கு மூலோபாய அச்சுறுத்தலை முன்வைத்திருக்கும்.

இந்த இரயில் திட்டம் மற்றொரு வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. பாரசீக நாட்டில் எண்ணெய்க் கிணறு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இரயில் தண்டவாளத்தின் இரண்டு ஓரங்களிலும் அறுபது கி.மீ. தூரம் வரை கனிம வளங்களைக் (Minerals) கண்டுபிடிக்கும் தனி உரிமைகளும் இரயில்வே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

1904ம் ஆண்டு பிரிட்டனின் கப்பற்படை நிலக்கரிக்குப் பதிலாக எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் மூலம் போக்குவரத்து மிக வேகமாக நடந்தது; செலவும் குறைந்தது. அரசாங்கத் தரப்பு மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico) போன்ற தொலைதூரத்தில் இருந்து எண்ணெய் பெறுவதற்குப் பதிலாக, அருகாமையில் எண்ணெய் அளிப்பைப் பெற முயன்றது. மேலும் அருகாமையில் இருந்து எண்ணெய் அளிப்பைப் பெறுவது நீண்டகால அடிப்படையில் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும் எனக் கருதியது. பிரதான எண்ணெய் உற்பத்தியாளர்கள் நடத்துகின்ற ஏற்றுமதிகள் குறைகின்றபோது, பெரிய எண்ணெய் நிறுவனங்கள் பிரிட்டனின் கப்பற்படைக்கு எண்ணெய் விலையை நிர்ணயித்து கட்டளையிடுவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கே கட்டளையிடும் நிலையில் வைக்கும் என பிரிட்டிஷ் அரசாங்க ஆலோசகர்கள் நம்பினர். எனவே, அடுத்த 20 ஆண்டுகளில் பிரிட்டனுக்கு எண்ணெய் வழங்குகின்ற ஆதாரங்களையும் எண்ணெய் வழங்குபவர்களையும் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை மீது அரசாங்கக் கொள்கையை அதிக அளவில் குவிமையப்படுத்தியது. எனவே, மெசபடோமியாவில் பிரிட்டஷ் பிரஜைகள் எண்ணெய் வள சலுகைகளைப் பெறுவதற்கு முழுமையான ராஜீயத்துறை ஆதரவுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கியது.

1911ம் ஆண்டு இங்கிலாந்து - ஜேர்மனி நிறுவனங்கள் இணைந்த ஒரு கூட்டு நிறுவனம் துருக்கியிடமிருந்து பேரரசின் எல்லைக்குள் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிப்பதற்கான தனிச் சலுகையைப் பெற்றன. இந்த கூட்டு நிறுவனங்களில் ரோயல் டச்சுஷெல், (பிரிட்டிஷ்) துருக்கி தேசிய வங்கி மற்றும் ஜேர்மனி வங்கி (Deutsche Bank) ஆகியவை இடம்பெற்றன. துருக்கி பெட்ரோலிய கம்பெனி (TPC) 1913ம் ஆண்டு ஆங்கிலோ-பாரசீக எண்ணெய் நிறுவனத்துடன் (APOC) இணைக்கப்பட்டது. பிரிட்டன், ஜேர்மனி, டென்மார்க், மற்றும் தொழில் அதிபர் குல்பெங்கியான் (Gulbenkian) ஆகியோர் பங்குதாரர்களாக ஆனார்கள், 1914 ஆகஸ்டு மாதம் நீண்டகால உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆங்கிலோ-பாரசீக எண்ணெய் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளைப் பெற்றது. இந்த நிறுவனம்தான் இன்றைய பிரிட்டனின் மிகப்பெரும் கார்ப்பரேஷனான BP நிறுவனத்தின் முன்னோடியாகும். அது 2.2 மில்லியன் பவுண்ட் தனது பங்கிற்குச் செலுத்தி மெசபடோமியாவில் தனது எண்ணெய் உரிமைகளைப் பெற்றது. மேலும் அந்த பிராந்தியத்தில் தனது நலன்களை வலுப்படுத்திக் கொண்டது.

அதே நேரத்தில், பல்வேறு இதர சர்வதேச குழுக்களும் பாக்தாத் மற்றும் மோசூல் பகுதிகளைச் சுற்றி எண்ணெய் வள உரிமைகளை நாடத்துவங்கின. இத்தகைய வர்த்தக அடிப்படையிலான கொந்தளிப்புகள்தான் முதலாவது உலகப்போரை உருவாக்குவதில் முக்கிய பங்குவகித்தன. துருக்கியின் கிழக்குப் பகுதிகளைப் பிரிப்பது சம்பந்தமான தகராறுகள்தான் முதலாவது உலகப்போருக்கு அடிப்படையாகும். புதிய எண்ணெய்வள ஆதாரங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உயிர்நாடி ஆனவை. அவை பிரிட்டிஷ் சாம்ராஜ்ய எல்லைகளுக்கு வெளியில் அமைந்திருப்பதால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற தவிர்க்க முடியாத முடிவு ஏற்பட்டது.

முதல் உலகப்போரில் பிரிட்டன் மெசபடோமியாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது

19-ம் நூற்றாண்டின் பெரும்பாலான காலங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் "கிழக்கு நாட்டுக்கொள்கை" வெறுமையாகிப் போய்விட்ட ஒட்டோமான் (Ottoman) சாம்ராஜ்யத்தைத் தாங்கிப் பிடித்து ஊக்குவித்து, ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சி விரிவடையாமல் தடுப்பதற்கு அரணாக சாம்ராஜ்யத்தை பயன்படுத்தி வந்தது. ஆனால், முதலாவது உலகப்போர் தொடங்கியதும் துருக்கி, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவின் பக்கம் சேர்ந்துகொண்டதுடன் பிரிட்டனின் கொள்கை முழுமையாக மாறிவிட்டது.

ஜேர்மனியின் தூண்டுதலால் துருக்கி எண்ணெய் விநியோகத்திற்கும் வர்த்தகத்திற்கும் இடையூறு செய்யக்கூடும் என்று பயந்து இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் பாஸ்ராவிற்கு அதிரடி படைப்பிரிவு ஒன்றை அனுப்பினார்கள். வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் நலன்களுக்கு இடையூறு செய்கின்ற வகையில் துருக்கி தலையிடாது தடுப்பதற்காக, குறிப்பாக பாரசீகத்தின் தெற்குப் பகுதியில் இருந்த எண்ணெய்க் கிணறுகளைக் காப்பதற்காக இந்தப் படைப்பிரிவு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டது. இதனால் மத்தியக் கிழக்கு முக்கியமான போர்க்களமாக மாற இருந்தது. ஒட்டோமான் சாம்ராஜ்யத்தைச் சிதைத்து அரபு நாடுகளின் எல்லைகளை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பது வெளிப்படையான கொள்கையாக ஆயிற்று.

பல்வேறு இழிவுதரும் தோல்விகளை சந்தித்த பின்னர், துருக்கியின் எல்லைகளைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல என்பது மிகத் தெளிவாயிற்று. எனவே, பிரிட்டன் பல்வேறு வகையான ஆத்திரமூட்டும், மோசடியான, ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் நிறைந்த சமரசம் செய்துவைக்க முடியாத உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. அவற்றின் நோக்கம் துருக்கியைத் தோல்வி அடையச் செய்வதும் இந்த பிராந்தியத்தில் தனது சொந்த வர்த்தக நலன்களையும் எல்லை பிடிக்கும் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்வதற்காகவும்தான்.

முதலில் பிரிட்டனின் கணிப்பு என்னவென்றால், அரபு மக்களது எழுச்சி மூலம் தெற்குப் பகுதியில் இருந்து துருக்கியை தோல்வி அடையச் செய்துவிட முடியும். அது மட்டும் அல்லாமல், கிழக்குப் பகுதியில் இருந்து ஐரோப்பாவிற்கு வழித்தடம் கிடைக்கும். பிளாண்டர்ஸ் (Flanders) பகுதியில் நிலவிய தேக்க நிலையைத் தகர்த்துவிட முடியும். தொடக்கத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஹெஜ்ஜாஸ்ல் உள்ள Hashemites அரசு வம்சத்தினரைத் தொடர்பு கொண்டது. இந்த பாலைவன பேரரசு மெக்கா மற்றும் மதினாவில் உள்ள முஸ்லிம்களின் புனிதத் தலங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்பகுதிகளில் ஒட்டோமான் ஆட்சிக்குப் பதிலாகத் தங்களது சொந்த ஆட்சியை ஏற்படுத்த முயன்றுவந்தார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய முஸ்லிம்களின் விசுவாசத்தைப் பெறுவதற்கு ஒரு வழி என்று நினைத்து ஹெஜ்ஜாஸ் மன்னர் ஆட்சியுடன் பிரிட்டன் உடன்பாடு செய்துகொண்டது. தங்களது விசுவாசத்தை காட்டுவதற்காக மெசபடோமியா அதிரடிப் படைப்பிரிவில் சேர்ந்த இந்திய முஸ்லிம்களை ஜேர்மனிக்கு எதிரான போரில் பிரிட்டன் பலிக்கடாவாக பயன்படுத்தியது. அவர்கள் பெருமளவில் பலியானார்கள். காலிபோலி (Gallipoli) பகுதியில் படுமோசமான தோல்விகள் ஏற்பட்டன. இதனால் பிரிட்டன் டமாஸ்கஸ் ஒப்பந்தத்தில் கண்டிருந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. துருக்கி ஆட்சியைத் தூக்கி எறிவதற்கு கைமாறாக தற்போது சிரியா, லெபனான், இஸ்ரேல் பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா என அறியவந்துள்ள எல்லைப் பகுதிகளில் அரபு சுதந்திரத்தை பிரிட்டன் ஆதரிக்க வேண்டும் என்பதாகும். துருக்கியருக்கு எதிராக ஆதரவு தருவதற்கு கைமாறாக சுதந்திரத்தை வழங்குவதாக உத்தரவாதம் கூறி, 1915ம் ஆண்டு மெக்காவை ஆண்ட ஹெஷ்மைட் பரம்பரையைச் சார்ந்த ஷெரீப் உசேனுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

அதே நேரத்தில் பிரிட்டன், அரபு மக்களை தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும், வலுப்படுத்திக்கொள்வதற்கும் பயன்படுத்திக்கொண்டது. முதலாம் உலகப்போர் முடிந்ததும், போர்க்கால நட்பு நாடுகள் எழுப்பிவந்த கோரிக்கைகளை சமாளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. போருக்குப் பின்னர் பிரான்ஸும், ரஷ்யாவும், ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் பகுதிகளில் பங்குபெற கோரிக்கைவிடுத்தன. அந்த நாடுகளுடன் உடன்பாடு செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1916-மே-மாதம் பிரிட்டன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் சைக்கஸ்--பிக்கோட் (Sykes-Picot) உடன்படிக்கை என அழைக்கப்படுகிறது, அந்த ஒப்பந்தப்படி ரஷ்யாவிற்கு, இஸ்தான்புல், பாஸ்போரஸ் (Bosphorus) மற்றும் ஆர்மேனியாவின் சில பகுதிகள் வழங்கப்பட்டன. பிரான்சிற்கு, தற்போதுள்ள சிரியாவும், மற்றும் லெபனானும் வழங்கப்பட்டன. பிரிட்டன், பாக்தாத், பாஸ்ரா மற்றும் ஜோர்டானை தன் வசம் வைத்துக்கெண்டது. பிரிட்டன் கவனக்குறைவாக மோசூத் மாகாணத்தை பிரான்சிற்கு கொடுத்துவிட்டது. அடுத்த கட்டத்தில் அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக முயன்றது. சிரியாவிலிருந்து பாலஸ்தீனத்தை பிரித்து சர்வதேச நிர்வாகம் ஒன்றின்கீழ் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. போர் முடிந்ததும், நடைபெறுகின்ற ஒரு சர்வதேச மாநாட்டில் பாலஸ்தீனத்தின் எதிர்காலம் பற்றி இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். அந்த பிராந்தியத்தில் மிகவும் பின்தங்கிய வறுமை நிறைந்த அரபு தீபகற்பத்தில் மட்டும் உள்ள அரேபியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் வழங்கப்படவில்லை, எதிர்காலம் பற்றி முடிவு செய்வதில் அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் இரகசியமாக வைக்கப்பட்டன. ரஷ்ய புரட்சிக்குப் பின்னர், போல்ஷிவிக்குகள் இந்த இரகசிய உடன்படிக்கையை பிரசுரித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஏகாதிபத்தியவாதிகள் கடைபிடித்த சதிகளை அம்பலப்படுத்தினர். ஷெரீப் உசேன் விளக்கம் கோரினார். போர் முடிவிற்கு வரும் வரை, பிரிட்டனும் பிரான்சும் அரபு மக்களுக்கு முழு சுதந்திர உரிமைகளைத் தருவதாக உறுதியளித்துக் கொண்டே வந்தன.

1918-நவம்பர்-7-ந்தேதி, பிரிட்டனும் பிரான்சும் கூட்டாக ஒரு பிரகடனத்தை வெளியிட்டன. அந்த பிரகடனத்தில் கூறப்பட்டிருந்ததாவது: ``ஜேர்மனியின் அபிலாஷைகளால் இந்த கிழக்குப் பகுதி போர் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது, இதில் பிரான்சும், பிரிட்டனும், நீண்டகாலமாக துருக்கியரின் அடக்குமுறையில் உள்ள மக்களை முற்றிலும் மற்றும் உறுதியாய் விடுவிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தேசிய அரசுகளும் நிர்வாகங்களும் உள்ளூர் மக்களது முயற்சி மற்றும் சுதந்திர விருப்பத்தின்படி அமையும்." " பிரான்சும் பிரிட்டனும் தாங்கள் விடுவிக்க விரும்புகிற எல்லைகளில் உள்நாட்டு மக்களது அரசாங்கங்களை மற்றும் நிர்வாகங்களை அமைப்பதில் ஊக்குவிக்க உடன்படுகின்றன.``

1917-நவம்பரில் பிரான்சிற்கு மேலாக பிரிட்டன் தனது அக்கறையை வெளிப்படுத்துகிற நோக்கத்தில் பாலஸ்தீனத்தை நிறுத்தி வைத்துக் கொண்டதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் தனது நலன்களைப் பாதுகாப்பதை உத்தரவாதப்படுத்தி, யூதர்களுக்கான சலுகை ஒன்றையும் அறிவித்தது. மனித நேயம் என்ற போர்வையில் திட்டமிட்டு தெளிவில்லாத பால்போர் பிரகடனத்தை (Balfour Declaration) வெளியிட்டது. அது "பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தாய்நாட்டை உருவாக்குவதை அனுதாபத்துடன் அணுகுவதாக அறிவித்தது."

அரபு மக்களின் உதவியோடு அவர்களது துயரத்தை பிரிட்டன் மாற்றியது. 1917-மார்ச்சில், பாக்தாத்தை பிடித்துக்கொண்டது, பின்னர் துருக்கியரிடமிருந்து, ஜெரூசலத்தையும், டமாஸ்கசையும், பிடித்துக்கொண்டது. ஹெஜாஸ் மன்னர் ஷெரீப் ஹுசைனின் புதல்வர், பைசல் தலைமையில் துருக்கியருக்கு எதிராக அரபு மக்கள் நடத்திய கிளர்ச்சி பிரிட்டனுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது. அம்மானிலிருந்து மதினாவரை 30,000-துருக்கி துருப்புக்கள், ரயிலில் சிக்கிக்கொண்டன. சிரியாவில் உள்ள துருக்கி ஜேர்மன் படைகள் ஏமனிலிருந்த துருக்கி படைப்பிரிவுகளுடன் சேரமுடியவில்லை.

எப்போதும்போல் நம்பிக்கைத் துரோகமாய், 1918-அக்டோபர்-30-ந் தேதி துருக்கியுடன் முட்ரோஸ் (Mudros) பகுதியில் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை புறக்கணித்துவிட்டு, மெசபட்டோமியாவிலிருந்த பிரிட்டிஷ் இராணுவப் படைப்பிரிவுகள், தொடர்ந்து வடக்கு நோக்கி முன்னேறின, சில நாட்களுக்குப் பின்னர் குர்து இனத்தவர் நிறைந்துள்ள, மோசூல் மாகாணத்தை பிடித்துக்கொண்டனர். அது மெசபடோமியாவின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களை எண்ணெய் வளம்மிக்க வடக்கு மாகாணம் இல்லாது வைத்திருப்பதில் குறைவாய் அர்த்தமுள்ளதாக ஆக்கி இருந்தது. ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் வளம்மிக்க காஸ்பியன் மற்றும் காக்காசியன் பகுதிகளுக்கு மோசூல் நடுப்பகுதி இணைப்பு பாலமாக விளங்கியது. பிரிட்டன் அதற்கு பின்னர், துருக்கி பெட்ரோலிய கம்பெனியில் ஜேர்மனிக்கு இருந்த 25 சதவீதபங்குகளை கையகப்படுத்திக்கொண்டது. அப்போது துருக்கி பெட்ரோலிய கம்பெனி எண்ணெய் கிணறுகளை மேம்படுத்த திட்டமிட்டு வந்தது.

ஆக, 1918-முடிவில், கெய்ரோவிலிருந்த பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீனத்தையும் சிரியாவையும் வெற்றிகொண்டன. ஹெஜாஸ் பகுதியிலிருந்து. துருக்கியர்கள் விரட்டப்பட்டனர். இந்தியாவிலிருந்து வந்த பிரிட்டிஷ் படைகள் மெசப்பட்டோமியாவை வெற்றிகொண்டன மற்றும் பாரசீகத்தையும் அரபிய தீபகற்பத்தில் உள்ள நெஜித்தின் இபின்சவுத்தையும் (Ibn Saud) பிரிட்டனின் ஆதிக்க வட்டத்திற்குள் கொண்டு வந்தன. இந்தப் படைகள் துருக்கியர்களுக்கு எதிராக காகச்சைப் பிடிக்க பாரசீகம் வழியாக வடக்கில் புகுந்து சென்றன, அதேவேளை இன்னொரு படைப்பிரிவு வடக்கில் நகர்ந்து, வெள்ளைப் படைப்பிரிவுகள் கட்டுப்பாட்டில் இருந்த, எண்ணெய் வளம்மிக்க மாநிலங்களான் அஜர்பைஜான், ஆர்மீனியா, ஜோர்ஜியா மற்றும் தாகேஸ்தான் ஆகியவற்றின் "சுதந்திரத்திற்காக" செஞ்சேனையுடன் போரிட்டன, 1920-ல் வாபஸ்வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படும் வரைக்கும் போரில் ஈடுபட்டன.

விடுதலை உறுதிமொழி மோசடி என நிரூபணம்

வெற்றி பெற்ற நாடுகள் பழைய ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் மாகாணங்களை, ஆபிரிக்காவிலும் தூரக்கிழக்கிலும் உள்ள ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியாவின் காலனிநாடுகளைக் கைப்பற்ற அணிவகுத்து நின்றன. மத்திய கிழக்கில் பெற்ற வெற்றிகளை இந்தியாவிற்கான தனது வர்த்தக வழித்தடங்களை காப்பாற்றுவதிலும், பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தை உத்திரவாதம் செய்யவும் பிரிட்டிசார் உறுதியாக இருந்தனர். பாலஸ்தீனம், மெசப்பட்டோமியாவின் மூன்று மாகாணங்கள் ஆகியவற்றை பிரிட்டன் தன் கையில் வைத்துக்கொண்டது. அந்த மூன்று மாகாணங்களையும் ஈராக் என்று மறு பெயர் சூட்டியது. ஈராக்கிலிருந்து குவைத்தை ஆட்சி செய்தது, அதேவேளை அதன் செல்வாக்கு பிராந்தியத்தை பாரசீகம் மற்றும் அராபிய தீபகற்பத்தின் தெற்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் நிலைநாட்டி வந்தது. பாரசீக வளைகுடாவும், செங்கடலும் பிரிட்டிஷ் ஏரிகளாக ஆகிவிட்டன.

மெசப்பட்டோமியாவின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்கள் இந்தியாவிலிருந்து நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டன. இராணுவச் சட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டது, சமாதான உடன்பாட்டை கிடப்பில் வைத்திருந்தது. இந்தியாவில் நடைமுறையிலிருந்த நிர்வாக ஏற்பாட்டின்படி, பிரிட்டன் பழைய மலைவாழ் இன தலைவர்களை பயன்படுத்திக் கொண்டது. அவர்களது செல்வாக்கு 19ம் நூற்றாண்டு முடிவில் வீழ்ச்சியடைந்தது. நீண்டகால அடிப்படையில் அவர்களுக்கு பதவி உத்திரவாதம் அளிக்கப்பட்டு வரிகளை வசூலிக்கவும், கிராம மக்களை கட்டுப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இத்தகைய ஏற்பாட்டின் மூலம் நிலப்பிரபுத்துவம் வளர்ந்தது. விவசாயிகளின் ஏழ்மை பெருகியது. பிரிட்டன் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பும் குரோதமும் வளர்ந்தது. பிரிட்டிஷார் சிறிய மற்றும் முக்கியமான சிறுபான்மையினரை ஊக்குவித்தார்கள், வளந்தார்கள், குறிப்பாக, கிறிஸ்தவ மற்றும் யூத சமுதாயம், நிதி விவகாரங்களில் பெரும்பங்கு வகித்தது. இவர்கள் பிரிட்டீஷாருடன் கொண்டிருந்த உறவுகளின் காரணமாக பின்னர் சியோனிச பாலஸ்தீன மோதலில் முக்கியமான தாக்கங்கள் ஏற்பட இருந்தன.

புதிதாக, பிரிட்டன் பிடித்துக்கொண்ட மோசூல் மாகாண குர்து மக்கள், பிரிட்டனின் வார்த்தைகளை உறுதிமொழிகளை அப்படியே எடுத்துக்கொண்டு சுதந்திர நாட்டை உருவாக்கினார்கள். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத பிரிட்டன் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் மற்றும் இந்திய துருப்புகள் மூலம் குர்துகளை மிகக்கொடூரமாக ஒடுக்கினர். கொரில்லாக்கள் மீது குண்டு வீசுவதற்காக விமானப்படை அனுப்பப்பட்டது. அன்றைய யுத்த அரசுத்துறை செயலாளர் சேர்ச்சில் விஷ வாயு பயன்படுத்தப்படுவதற்கு அங்கீகாரம் அளித்தார்.

ஈராக்கில் மோசூலை சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டது. சேவ்ர் (Sevres) ஒப்பந்தத்தில் கண்டிருந்த குர்து தன்னாட்சி கருத்து கைவிடப்பட்டது. ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் வார்த்தைகளில், "அரபு நாடு பற்றிய எந்த கருத்தும் இரத்தக்கறை படிந்ததாகவே இருக்கும், இன்றைக்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது."

அரபு உலகத்தை தனது சாம்ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்ளும் பிரிட்டனின் திட்டங்கள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டன. முதலில் பிரிட்டனின் போர் கால நட்பு நாடுகள் குறிப்பாக அமெரிக்கர்கள் கொள்ளைப் பொருளில் பிரிட்டன் பெரும்பங்கை தன்வசம் வைத்துக்கொள்வதைத் தடுப்பதில் உறுதியாகயிருந்தன. ஜனாதிபதி உட்ரோ-வில்சன் 1917-ம் ஆண்டு, அமெரிக்கா போரில் ஈடுபட்டபோது தனது 14-அம்ச திட்டத்தை பிரகடனப்படுத்தினார். அமெரிக்காவின் ஆதரவிற்கு பிரிட்டனும், பிரான்சும் தந்த விலை அது.

அந்த 14-அம்சத் திட்டங்கள் ஒரு புதிய உலக ஒழுங்கைக் குறிக்கின்றன. அதில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் பழைய ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மேம்பட்டதாக மேலாதிக்கம் செலுத்தும். வெற்றிபெற்ற நாடுகள் தாங்கள் பிடித்துக்கொண்ட நாடுகளை தன்வசம் வைத்துக்கொள்ள முடியாது அல்லது, எந்தவிதமான ரகசிய ராஜ்ஜிய உறவுகளுக்கும் வழியில்லாமல் போய்விட்டது. முன்னாள் காலனிகளில் வாழும் மக்கள் சுயநிர்ணய உரிமை பெற்றாக வேண்டும். இதற்கு எல்லாம் மேலாக வர்த்தகத்தைப் பொறுத்தவரை பகிரங்கமாக வர்த்தகம் நடத்தும் கொள்கை உருவாகவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனுடைய பொருள் என்னவென்றால், வர்த்தகத்தில் மற்றும் வளங்களில் பிரத்தியேக உரிமைகள் எதுவும் இல்லை. மத்திய கிழக்கு மற்றும் ஈராக்கைப் பொறுத்த வரை துருக்கியர்களிடமிருந்து பிரிட்டன் எதிர்கால எண்ணெய் வள உரிமைகள் தொடர்பான சலுகைகளைப் பெற்றது. உட்ரோ-வில்சனது கொள்கை தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது என்று கருதிய பிரிட்டன், 14- அம்சத்திட்டங்கள் அரபு நாடுகளில் பிரசுரிக்கப்படாதவாறு தடுத்துவிட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர்தான் பாக்தாத்தில் அவை பிரசுரிக்கப்பட்டன.

(தொடரும்)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved