World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Imperialism and Iraq: Lessons from the past

ஏகாதிபத்தியமும் ஈராக்கும்: கடந்த காலப் படிப்பினைகள்

Part Three

By Jean Shaoul
30 May 2003

Back to screen version

மூன்று பகுதிகளைக் கொண்ட தொடரில் இது இறுதிப் பகுதியாகும்.

உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை எந்தவிதத்திலாவது கீழ்ப்படிய மறுப்பதற்கு பதில்கொடுக்கும் விதமாக பிரிட்டன் பைசலுக்கு விமானப்படை குண்டு வீச்சு விமானங்களை, ஆயுதம் தாங்கிய வாகனப் பிரிவுகளை, உள்ளூரில் உள்ளூர் கட்டாய இராணுவ சேவைக்கு சேர்க்கப்பட்டவர்களுக்கு தலைமை தாங்குவதற்கு அதிகாரிகளையும் தந்து உதவியது. எந்த எழுச்சியும் குண்டு வீச்சு விமானங்களால் கையாளப்பட்டது. அது முதலில் கல்வியறிவில்லா கிராமப்புற மக்கள் மீது எச்சரிக்கை செய்யும் துண்டறிக்கைகளைப் போட்டது மற்றும் அவர்களது உடைமைகள் மற்றும் கால்நடைகள் மீது குண்டுகளை வீசியது. விவசாயிகளை வரி செலுத்தும்படி அச்சுறுத்துவதற்குக் கூட குண்டுவீச்சு பயன்படுத்தப்பட்டது.

தெற்கு ஈராக்கில் 1923-24ம் ஆண்டு பிரிட்டன் விமானப்படை விமானங்கள் மிகப்பெரும் தாக்குதலைத் தொடுத்தன. நாடோடிகளைப் போன்று வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் செல்வாக்கு மிக்க ஷேக்குகளால் திருப்பிவிடப்பட்டதால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் வறுமையில் பாதிக்கப்பட்டு வரி செலுத்த மறுத்துவிட்டனர். அவர்கள் "அரசாங்கத்திற்கு கீழ்படிந்து நடப்பதை ஊக்குவிப்பதற்காக" அந்தப் பகுதிகளில் பிரிட்டிஷ் விமானப்படை போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.

இரண்டு வாரங்கள் நடைபெற்ற தாக்குதலில் 144-பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இது ஏதோ தற்செயலாக நடந்துவிட்ட ஒரு தனிச் சம்பவமல்ல. மோசூல் மாகாணத்தைச் சேர்ந்த குர்து இனத்தவர்கள் வரி கொடுக்க மறுத்தும் கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட மறுத்தும் கிளர்ச்சி செய்தனர். அவர்கள் மீது 1923-34-ஆம் ஆண்டில் பல முறை பிரிட்டிஷ் விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.

வடமேற்கு எல்லைப் பகுதியில் பணியாற்றிய ஓர் அதிகாரி, பிரிட்டனின் கொடூரமான செயல்களுக்கு அந்நியமானவர் அல்லர், அவர் நிலைமை மேலும் மோசமாக்கும் என அச்சம் தெரிவித்தார்: "அதிகமான அளவு தேவையற்ற கொடுமைகள் தேவையான அளவு சுமத்தப்படுகிறது, அது மலைவாழ் மக்களை அடங்கி ஒடுங்கச்செய்ய முடியாது, ஆனால் அவர்களது உள்ளத்தில் வெறுப்பை விதைக்கும் மற்றும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தும். இந்தக் கொள்கை பிரிட்டிஷார் நியாய உணர்வோடு நடந்துகொள்வார்கள் என்ற அவர்களது நம்பிக்கையை பலவீனப்படுத்தும் ."

ஆனால், பிரிட்டிஷார் எந்த வகையிலும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. லண்டனில் உள்ள காலனி அலுவலகத்திற்கு ஒரு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் விமானப்படை விமானங்கள் நடத்திய ஒரு இயந்திரத் துப்பாக்கித் தாக்குதல் பற்றி விளக்கப்பட்டிருந்தது. ஒரு கிராமத்தில் இருந்து வெளியேறிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இயந்திரத் துப்பாக்கிகளால் சுடப்பட்டது பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவம் பற்றி பிரிட்டிஷ் மக்கள் அறிந்துகொள்ளாது தடுப்பதில் அரசியல்வாதிகள் கவனமாக இருந்தனர்.

லண்டனில் இருந்த காலனித்துவ செயலாளர் லியோ அமெரி உறுதிப்படுத்தியவாறு, பிரிட்டனின் விமானப்படை விமானங்கள் இல்லாமல் ஈராக் ஆட்சி நீடித்திருக்க முடியாது. ``மன்னர் பைசலின் அதிகாரம் அவரது நாடு முழுவதிலும் செல்லுபடி ஆகிறது என்றால், அதற்கு முழுமையான காரணம் பிரிட்டனின் போர் விமானங்கள்தான். நாளை அந்தப் போர் விமானங்கள் நீக்கப்பட்டுவிட்டால், பைசல் ஆட்சியின் முழுக் கட்டுக்கோப்பும் சுக்கு நூறாகச் சிதறுவது தவிர்க்க முடியாததாகிவிடும்`` என்று அவர் கூறினார்.

ஆனால், பிரிட்டிஷ் விமானப்படை வழக்கமான உள்நாட்டு பந்தோபஸ்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால், தனது சொந்த மக்களை ஒடுக்குவதற்கு ஈராக் தனது கஜானாவில் இருந்து செலவு செய்யவேண்டும் என்று பிரிட்டன் கோரியது. எனவே, பைசல் தனக்காக ஒரு இராணுவத்தை உருவாக்க வேண்டி இருந்தது. இப்படி உருவாக்கப்பட்ட இராணுவம் அரசாங்கத்திற்கு முன்னேறுவதற்கு ஒரு சாதனமாக சேவைசெய்தது. மிகப்பெரும் பலாத்கார சக்தியுடன், இராணுவத்தை எவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சமூக அதிகார அடித்தளத்தை வழங்கியது. அவர்கள் 1920களின் இறுதியில், பிரிட்டனின் விமானப்படை தெற்கு ஈராக்கில் பெரும்பாலான கிளர்ச்சிக்கார மலைவாழ் மக்களை ஒடுக்கிவிட்ட நிலையிலும், ஈராக் அரசாங்கம் தனது வருவாயில் 20 சதவீதத்தை இராணுவத்திற்காகவும் மற்றும் 15 சதவீதத்தை போலீசுக்காகவும் இன்னும் செலவிட்டுக் கொண்டிருந்தது என்ற உண்மையால் சமூக அதிருப்தியின் அளவு அளவிடப்படும்.

தனக்கு தேவையான எண்ணெய் வளத்தைப் பாதுகாப்பாக வழங்குகின்ற ஆட்சியை உருவாக்கிய பின்னர், பிரிட்டன் தனது காப்பு ஆட்சி உரிமைகளைக் கைவிட முடிந்தது மற்றும் அடிப்படையை அப்படியே தக்கவைத்துக் கொள்கின்ற உடன்படிக்கையை ஈராக் உருவாக்கிக்கொண்டது. ஆங்கிலோ-பிரிட்டன் உடன்படிக்கையின்படி ஈராக்கிற்கு சம்பிரதாயபூர்வமான அரசியல் சுதந்திரம் வழங்கப்பட்டது என்றாலும் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கையுடன் இராணுவத் தளங்களையும் ஆலோசகர்கள் முறையையும் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் தக்கவைத்துக்கொண்டது. 1930ம் ஆண்டு ஈராக் "சுதந்திர நாடாக" பிரகடனப்படுத்தப்பட்டது மற்றும் நாடுகளின் கழகம் அமைப்பில் முழு உறுப்பினராக 1932ம் ஆண்டு ஈராக் அனுமதிக்கப்பட்டது. ஆனால், காப்பு ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டாலும் ஆளும் தட்டினர் உள்நாட்டிற்குள் தாங்கள் விரும்பியதைச் செய்து முடிக்கும் சுதந்திரம் பெற்றனர். ஆனால், உண்மையான அரசு அதிகாரம் பிரிட்டன் வசம் இருந்தது. ஈராக் மக்கள் அதை அறிந்திருந்தனர்.

தேசியவாத அரசை பிரிட்டன் கவிழ்த்தது

1930களில் சன்னி வகுப்பைச் சேர்ந்த ஆளும் குழுவினர் பிரிட்டனைச் சார்ந்திருக்கும் நிலை மிகவும் சங்கடமான கட்டத்திற்குச் சென்றது. பொதுமக்களது எதிர்ப்பு உணர்வுகளை சமாளிக்க முடியாத சங்கடம் உருவாயிற்று. ஈராக் தேசியவாதிகள், ஈராக் எண்ணெய் வளத்தில் IPC-ன் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே நேரத்தில் விவசாயிகளும், நகர்ப்புறத் தொழிலாளர்களும் பெருமளவில் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். பாலஸ்தீனத்தில் பிரிட்டனின் கொள்கை கொந்தளிப்பை மேலும் தூண்டுவதாக அமைந்திருந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தாய்நாடு மற்றும் யூதர்கள் குடியேற்றம் மற்றும் 1936-39 அரபு கிளர்ச்சியை ஒடுக்கியது-- ஆகிய கொள்கைகள் பதட்டங்களை மேலும் தூண்டிவிட்டது.

இது சில ஈராக் அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் நாஜி ஜேர்மனி பக்கம் திரும்புவதற்கு அரசாங்கங்களை ஆக்கவும் கவிழ்க்கவும் வலிமைபெறுவதற்கு இட்டுச்சென்றது. இது பகுதி அளவில் வெறுப்புக்கு ஆளான பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து ஈராக்கை விடுவிக்க நாஜி ஜேர்மனி உதவும் என்ற நம்பிக்கையின் காரணமாக ஆகும். ஆனால் பகுதி அளவில் பாசிசத்துடன் அரசியல் ஆதரவையும் மற்றும் அது பாலஸ்தீனத்தில் உள்ள நிலையாலும் ஈராக்கில் யூத நிதியாளர்களை பிரிட்டன் வளர்த்தெடுத்ததாலும் தூண்டிவிடப்பட்ட செமிட்டிச எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளுதலையும் வெளிப்படுத்தியது. 1939ம் ஆண்டு பாலஸ்தீனத் தேசியத் தலைவர் ஹாஜி அமீன் அல் ஹுசைனி பாக்தாத் நகருக்கு பிரிட்டன் பிடியிலிருந்து தப்பி வந்து சேர்ந்த்துடன் இந்த கொந்தளிப்புக்கள் மேலும் அதிகரித்தது.

ஜேர்மனிக்கு ஆதரவான கன்னையில் மிக முக்கியமானவர் அரபு முழுமைக்குமான தேசியவாதி ரஷீத் அலி அல் ஹைலானி (Rashid Ali al-Gaylani) மற்றும் தங்க சதுக்கம் என்று அழைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள், அதே நேரத்தில் பிரிட்டனின் முன்னணி ஆதரவாளர்கள் நூரி அல் சையத் (Nuri al-Said) மற்றும் 4 வயது இரண்டாவது பைசல் இளவரசரின் கார்டியனாகச் செயல்படுபவர் ஆவர். பிரிட்டனுக்கு எதிர்ப்பான மன்னர் ஹாஜி சாலை விபத்தில் 1939ம் ஆண்டு காலமானார். எனவே, அவரது புதல்வர் இரண்டாவது பைசலின் மாமாவான நூரி அல் சையத் கார்டியனாக நியமிக்கப்பட்டார். அந்த சாலை விபத்தில் பிரிட்டிஷாருக்கு பங்கு உண்டு என்று பரவலாக நம்பப்படுகிறது.

1930ம் ஆண்டு ஆங்கிலோ-ஈராக்கிய உடன்படிக்கையின் விதிகளின்படி, பிரிட்டனை ஈராக் ஆதரிக்கக் கடமைப்பட்டது ஆகும் மற்றும் பிரிட்டனின் எதிரிகளோடு உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும். 1939ம் ஆண்டு ஜேர்மனி மீது பிரிட்டன் போர்ப் பிரகடனம் செய்தபொழுது, உடனடியாக ஜேர்மனியுடன் பிரதமர் நூரி அல் சையத் ஈராக்கின் உறவுகளை முறித்துக்கொண்டார். இது மக்கள் ஆதவில்லாத நடவடிக்கை ஆகும். ஆனால், ஜேர்மனியுடன் போர்ப் பிரகடனம் செய்வதற்கு அல்லது இத்தாலியுடன் உறவை முறித்துக்கொள்வதற்கு தனது அமைச்சரவையின் சம்மதத்தை அவரால் பெற இயலவில்லை. 1940 மார்ச் மாதம் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ஜேர்மன் ஆதரவு அரசியல் எதிரியான ரஷீத் அலியின் அமைச்சரவையில் பணியாற்றினார்.

1940 வாக்கில் மத்தியக் கிழக்கில் பிரிட்டனின் நிலைப்பாடு எதிரிகளால் சுற்றி வளைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பாசிச அச்சு நாடுகளின் துருப்புக்கள் எகிப்தையும் சூயஸ் கால்வாயையும் மிரட்டிக்கொண்டிருந்தன. பிரான்ஸ் வீழ்ச்சி அடைந்தது. சிரியாவிலும் லெபனானிலும் இருந்த பிரெஞ்சுத் துருப்புக்கள் விச்சி அரசின் கட்டுப்பாட்டில் வந்தன. ஆக, ஈராக்கின் வாயிற் கதவை அச்சு நாடுகளின் துருப்புக்கள் தட்டுகின்ற நிலை ஏற்பட்டது. தனது எண்ணெய் அளிப்புக்கும் செல்வத்திற்கும் ஈராக்கையும் ஈரானையும் சார்ந்திருந்த பிரிட்டன் ஜேர்மனி ஈராக் மீதும் ஈரான் மீதும் படையெடுக்கும் என்று அஞ்சியது.

பிரிட்டனுக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவுகள் மிக வேகமாக சீர்குலைந்தன. ரஷீத் அலி மிகத் தந்திரமாகப் போரில் நடுநிலைக்கு ஈராக்கை கொண்டு வந்து நிறுத்தினார். இத்தாலியில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் ரஷீத் அலி ஆயுதங்களை வாங்கினார். ஒப்பந்தப்படி பிரிட்டிஷ் இராணுவப் படைகள் இறங்குவதற்கும், வேறிடம் மாறுவதற்கும் அனுமதியை மறுத்துவிட்டார். பிரிட்டிஷார் 1941 ஜனவரி மாதம் ரஷீத் அலியை ராஜினாமா செய்யுமாறு நிர்ப்பந்தித்தனர். அவர் ராஜினாமா செய்ததால் ஈராக்கில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஏப்ரல் மாதம் தங்க சதுக்கம் பிரிவைச் சார்ந்த இராணுவ அதிகாரிகள் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர், ரஷீத் அலி மீண்டும் பதவிக்கு வந்தார். நூரி அல் சையதும் பதிலாக ஆள்பவரும் ஜோர்டானுக்குத் தப்பி ஓடினர்.

புதிய ஈராக் அரசாங்கம் பாஸ்ராவில் பிரிட்டிஷ் துருப்புக்கள் இறங்குவதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இதன் மூலம் உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது, பிரிட்டனுக்கு எதிராக "விடுதலைப் போரை" ஈராக் பிரகடனம் செய்தது. அரபு நாடுகள் முழுவதிலும், சிரியாவிலும், லெபனானிலும், பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெறவும் பாலஸ்தீனத்தில் சியோனிச ஆட்சி ஏற்படுவதைத் தடுக்கவும், அரபு நாடுகள் முழுவதற்குமான ஒரு இயக்கமாக இது நடாத்தப்பட்டது.

அரசாங்கத்தின் நடவடிக்கையை கலகமென்று பிரிட்டன் கண்டனம் செய்தது. ஜோர்டானிலும், இந்தியாவிலும் இருந்து பாஸ்ராவிற்கு பிரிட்டன் படைகளை அனுப்பியது. அங்கு ரஷீத் அலி ஆட்சி கவிழ்க்கப்பட்டு நூரி அல் சையதும் பதிலாளுநரும் பதவிக்கு வந்தனர். அதற்குப் பின்னர் தெற்கு ஈராக் பகுதியில் பிரிட்டிஷ் படைகள் ஆக்கிரமித்துக்கொண்டதைத் தொடர்ந்து பிரிட்டனின் போர் முயற்சிகளுக்கு ஈராக் அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தது. அடுத்த ஆண்டு, பிரிட்டன் பாஸ்ராவை தளமாகக் கொண்டு சிரியா மீதும் பாரசீகம் மீதும் படையெடுத்தது. பாரசீகத்தில் பிரிட்டனுக்கு ஆதரவான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியது. 1943-ம் ஆண்டு, நூரி அல் சையத் அச்சு நாடுகள் மீது போர்ப் பிரகடனம் செய்தார்.

ரஷீத் அலியையும் தங்க சதுக்கத்தையும், பிரிட்டிஷார் ஒப்பீட்டளவில் மிக எளிதாக பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்றாலும், குறைந்தகாலம் நீடித்த ஆட்சி முக்கியத்துவமுடையதாய் இருந்தது, ஏனெனில் அது பிரிட்டனுக்கும் அதன் தீவிர ஆதரவாளர்களான நூரி அல் சையத் மற்றும் அரச பரம்பரைக்கு எவ்வளவு குறைவான மக்கள் ஆதரவு இருந்த என்பதை எடுத்துக்காட்டியது. அன்று முதல், பிரிட்டனுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் ஈராக் மக்களைப் பொறுத்த அளவில் கெட்டுவிட்ட பண்டங்களாகவே கருதப்பட்டார்கள். பிரிட்டனின் துப்பாக்கிமுனை மூலம், பதவிக்கு வந்தவர்கள் என்ற களங்கம் அவர்கள் மீது நிரந்தரமாக படிந்துவிட்டது. லூயி, தனது மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம்`என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைப் போல், ``1941-ம் ஆண்டு, ஈராக்கில் பிரிட்டனது, ஆட்சி சகாப்த்தத்தில் ஒரு எல்லைக் கல்லைக் குறிக்கும் ஆண்டாகும் மற்றும் அதன் முக்கியத்துவம் 1948-ல் பிரிட்டனது உறவை தேசியவாதிகள் முறித்துக்கொண்டனர் மற்றும் அதற்கு 10-ஆண்டுகளுக்குப் பின்னர் ஹாஷிமைட் பரம்பரை ஆட்சி முடிவிற்கு வந்தது என்ற அடிப்படைப் புரிதல் ஆகும்.``

மத்திய கிழக்கில் பிரிட்டனது வீழ்ச்சி (1946-1958)

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டன் மத்திய கிழக்கில் தனது சாம்ராஜ்ஜியத்துடன் பழுதுபடாமல் வெளிவந்தது என்றாலும், 1939-ம் ஆண்டிற்கு, முற்றிலும் வேறுபட்ட நிலவரங்களை பிரிட்டன் சந்திக்கவேண்டி வந்தது. எண்ணெய் உற்பத்தி முறை மிகக்கடுமையான அளவிற்கு மாறிவிட்டது. 1951-ம் ஆண்டு வாக்கில் மத்திய கிழக்கு, மேலை நாடுகளுக்கு 70 சதவீத எண்ணெய் வளத்தை வழங்கியது. உலக எண்ணெய் வளத்தின் மிகப்பெரும் பகுதி பாரசீக வளைகுடாவிலும், சவுதி அரேபியாவிலும் செறிந்திருப்பதாக நம்பப்பட்டது.

ஆனால், அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தின் மதிப்பு மேலும் முக்கியத்துவம் பெற்றது. வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கொந்தளிப்பை பிரிட்டன் சந்திக்க வேண்டி வந்தது. பாலஸ்தீனத்தில் சியோனிச நாடு உருவாவதை, சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் இப்பிராந்தியத்தில் பிரிட்டனின் செல்வாக்கைக் கீழறுக்கும் ஒரு வழிமுறையாக ஆதரித்தன. நாஜிக்கள் கையில் யூத மக்கள் சிக்கி பெரும் துயரத்திற்கு உள்ளானதால் ஏற்பட்ட பரவலான பயங்கர விளைவுகளால், ஐ.நா. பாலஸ்தீனத்தை பிரிக்கவும், இஸ்ரேல் என்று ஒரு நாட்டை ஏற்படுத்தவும் தீர்மானம் ஏற்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இது அரபு உலகில் மிகப்பெரிய ஆத்திரத்தை உருவாக்கிற்று. ஈராக்கில், எகிப்தில், மற்றும் ஈரானில் 1942-ம் ஆண்டு பிரிட்டன் மேற்கொண்ட தீவிரமான அடக்குமுறை நடவடிக்கைகள், ரஷீத் அலிக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிரொலித்தன, கிட்டத்தட்ட சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரும் ஏகாதிபத்திய ஆட்சி நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுவதற்கு தீவிரமாக முயன்றனர்.

ஈராக்கில், பிரிட்டனின் ஆதரவாளர்களை மக்கள் மதிக்கவில்லை. மக்கள் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு புதிய முற்போக்கு கைக்கூலியான ஷியா இன முதலாவது பிரதமர் சாலே ஜபாரை (Saleh Jabr) பிரிட்டன் நியமித்தது. இதன் மூலம் அவர் சீர்திருத்தங்களை கொண்டு வருவார், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு தூண்டுதலாக அமைந்திருக்கும் சமுதாய அதிருப்திகளை தடுத்து நிறுத்துவார், மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு இனி நடக்காமல் தடுத்துவிடுவார் என்று நம்பினார்கள். புதிய உடன்படிக்கையில் ஆங்கிலோ-ஈராக்கிய உறவுகளை சீரமைப்பதற்கு கூட அவர்கள் முயன்றனர். அதன்படி, இராணுவத்தளங்களும் எண்ணெய்க் கிணறுகளும் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும், இந்த பிராந்தியத்தில் உறவுகளை சீரமைப்பதில் புதிய ஒப்பந்தம் முன்மாதிரியாக விளங்கும்.

பிரிட்டனில் புதிதாக ஆட்சிக்கு வந்த கிளமெண்ட் அட்லியின் ஆட்சி பாக்தாத்தின் அரசியல் உணர்வுகளை கடும் ஏகாதிபத்தியவாதியான வின்ஸ்டன் சேர்ச்சிலைப் போல் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. 1948ம் ஆண்டு ஜனவரியில் சலே ஜாபர் மற்றும் நூரி அல் சையது பிரிட்டனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை, 1930ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உடன்படிக்கையை மேலும் ஒரு 20 ஆண்டுகள் நீடிக்கச் செய்கிற உடன்படிக்கையாக இருக்கும் என அறிய வந்தபொழுது, ஏற்கனவே வெறுப்புற்று இருந்த மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பட்டினியால் வாடிக்கொண்டிருந்த நகர மக்கள் தெருக்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பெருக்கெடுத்தார்கள். அப்போது நடைபெற்ற கலவரங்களில் ஒரே நாளில் ஏறத்தாழ 400 பேர் கொல்லப்பட்டனர். அந்த அளவிற்கு மிகக் கொடூரமான போலீஸ் அடக்குமுறைகள் நடைபெற்றது. அப்படி இருந்தும் பதிலாளுநர் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சலேஜாபர் பதவி விலகினார். அடுத்த அரசாங்கம் மற்றொரு மிகக் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை யுகத்தை தொடங்கிவைத்தது. மத்திய கிழக்கு நாடுகளில் அதன் கூட்டாளிகளை மறுசீரமைப்பதற்கு பிரிட்டன் உருவாக்கிய முன்மாதிரியான மத்திய கிழக்கு கொள்கை சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது.

1950ம் ஆண்டு எழுந்த தேசிய உணர்வு அலை அமெரிக்காவின் அராம்கோ எண்ணெய் நிறுவனத்துக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஒரு உடன்பாட்டை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்தது. இலாபத்தில் இரு தரப்பும் 50 சதவீதம் சமபங்கு பெறவேண்டும் என்று உருவாக்கப்பட்ட அந்த உடன்படிக்கை மூலம் மத்திய கிழக்கு நாடு முழுவதிலும் சங்கிலித்தொடர் போன்ற பின் விளைவுகள் உருவாகின. அடுத்த ஆண்டு ஈரானில் தேசியவாத மொசாதிக் (Mossadeq) அரசாங்கம் ஆங்கிலோ-பெர்சியன் எண்ணெய் நிறுவனத்தை அரசு உடைமையாக்க நடவடிக்கை எடுத்தது. எனவே, IPC-யின் சொந்தக்காரர்களான பிரிட்டிஷ் கம்பெனிகள் ஈராக் அரசாங்கத்திற்கு இலாபத்தில் 50 சதவீத பங்கு தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படிச் செய்யாவிட்டால் எண்ணெய் வளமும் போய்விடும் மற்றும் பிரிட்டனின் எடுபிடிகளான நூரி அல் சையதும் அவரது அமைச்சர்களும் பதவி விலகவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும்.

1952 வாக்கில் பிரிட்டனது ஏகாதிபத்திய நலன்கள் மத்தியக் கிழக்கில் மிகவும் நொருங்கிப்போகும் நிலையில் இருந்தது. 1951ம் ஆண்டு ஜோர்டானின் ஹாஷ்மைட் மன்னர் அப்துல்லா கொலை செய்யப்பட்டார். அவரது புதல்வர் நிதானமில்லாதவர் என்று கருதப்பட்டதால் 17 வயது மகன் ஹூசேனுக்கு முடிசூட்டப்பட்டது. 1952ம் ஆண்டு ஜூலை பெயரளவு தலைமையான ஜெனரல் முகமது நகீப் மற்றும் உண்மையில் தலைமையான இரண்டாவது லெப்டினென்ட் கமால் அப்துல் நாசர் தலைமையிலான சுதந்திர அலுவலர்கள் எகிப்திய முடியாட்சியைத் தூக்கி எறிந்தனர் மற்றும் ஆங்கிலோ- எகிப்திய உடன்படிக்கையை ரத்து செய்தனர்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஈராக்கில் நூரி அல் சையத் பிரிட்டனுக்கு ஆதரவு காட்டியதால் அவர் அரபு உலகில் துரோகி என்று கருதப்பட்டார். இதன் காரணமாக அவர் ஈராக்கில் வரலாறு காணாத ஒடுக்குமுறைகளை கையாளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. பத்திரிகை அலுவலகங்கள் மூடப்பட்டன. தனது கட்டளைகளுக்கு ரப்பர் ஸ்டாம்பாக (கைப்பொறிப்பு முத்திரையாக) பயன்படும் நாடாளுமன்றத்தை அவர் நியமித்தார். இந்தச் சூழ்நிலைகளில்தான் இறுதிக் கட்டமாக எண்ணெய் உற்பத்தி மிகப்பெரும் அளவுக்கு பெருகியது. போருக்குப் பின்னர் 5 ஆண்டுகளில் எண்ணெய் உற்பத்தி இரண்டு மடங்கு உயர்ந்தது. அதேவேளை 1951-53 ஈரான் நெருக்கடியாலும் IPC உடன் 50-50 இலாபப் பங்கீட்டு உடன்படிக்கை செய்து கொண்டதாலும் ஈராக் அரசாங்கத்தின் வருவாய் பத்து மடங்கு அதிகரித்தது. 1948-ம் ஆண்டு, மொத்த தேசிய உற்பத்தி 10 சதவீதமாகவும் அந்நிய செலாவணி வருவாய் 34 சதவீதமாகவும் இருந்ததிலிருந்து 1958-ம் ஆண்டு, அவைமுறையே 28 சதவீதமாகவும் 59சதவீதமாகவும் உயர்ந்தது. இவ்வளவு வருமானம் உயர்ந்தும் சாதாரண உழைக்கும் மக்களது சமுதாய நிலைமைகள் மாற்றமடைவதற்குப் பதிலாக, வருவாய் முழுவதும் வேளாண்மை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது, அது பெரிய நில உடைமையாளர்களுக்கு சென்றது, ஊழல் மலிந்த அரசியல்வாதிகளின் வங்கி கணக்கில் குவிந்தது.

1955-பெப்ரவரியில், பிரிட்டன் ஏற்பாடு செய்த பிராந்திய பாதுகாப்பு கூட்டணி மாநாட்டிற்கு, நூரி அல் சையத் பிரதம விருந்தினராக செயல்பட்டார். அப்போது உருவாக்கப்பட்ட பாக்தாத் உடன்படிக்கையில், துருக்கி, ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஈராக் சேர்ந்துகொண்டன. சோவியத் யூனியனின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்காக, ஈரோஆசியாவின் தெற்கு விளிம்பு நாடுகள் கூட்டணி இது. மத்திய கிழக்கில் சரிந்துவரும் தனது செல்வாக்கை, பிரிட்டன் நிலைநாட்டும் ஒரு முயற்சியாகவும், மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்களில் தனக்கு ஒரு செல்வாக்கு இருக்கவேண்டும் என்பதற்காகவும், பிரிட்டன் இந்த ஏற்பாட்டை செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தையும், 1948-ஒப்பந்தம் போல், ஈராக் மக்கள், ஏற்றுக்கொள்ளவில்லை. இதர அரபு நாடுகள் அந்த ஒப்பந்தத்தை பொருட்படுத்தவில்லை. பிரிட்டனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், அரபு உலகில் நாயகனாக உயர்ந்து கொண்டுவந்த எகிப்து ஜனாதிபதி நாசர், பாக்தாத் ஒப்பந்தத்தை கண்டித்தார். இந்த பிராந்தியத்தில், பிரிட்டன் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு முயற்சியாகவும் அரபு உலகத்தை பிளவுபடுத்தும் நடவடிக்கையாகவும், பாக்தாத் உடன்படிக்கையை அவர் கண்டித்தார்.

1956-ம் ஆண்டு, இஸ்ரேல் சூயஸ் கால்வாய் மீது படையெடுத்தது. அதற்கு ஆதரவாக பிரிட்டனும், பிரான்சும் தங்களது இராணுவங்களை அனுப்பின. நாசரை ஒழித்துக்கட்டிவிட்டு, சூயஸ் கால்வாயை பிரிட்டன் - பிரான்ஸ் கட்டுப்பாட்டில், மீண்டும் வைத்துக்கொள்ளும் இந்த முயற்சி, ஈராக் மக்களை ஆத்திரமடையச் செய்தது. ஈராக் முழுவதிலும் பிரிட்டனுக்கு எதிராக மிகப்பெரும் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. பிரிட்டனை நூரி அல் சையதும் பதிலாளுநரும் ஆதரிக்கிறார்கள் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. தன்னுடைய பெயரை காப்பாற்றிக்கொள்வதற்காக ஒப்புக்காக, பிரிட்டனிடம் ஈராக் அரசாங்கம் கண்டனம் தெரிவித்தது. அதே நேரத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டது மற்றும் மீண்டும் ஒருமுறை இராணுவ ஆட்சியை செயல்படுத்தியது.

அமெரிக்கர்கள் தங்களது சொந்த தேசியநலனைப் பின்பற்றும்பொருட்டு, பிரிட்டனை விலகிக் கொள்ளுமாறு நிர்பந்தித்தனர். சூயஸ் கால்வாய் நெருக்கடி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மத்திய இப்பிராந்தியத்தில் பிரிட்டனின் மேலாதிக்கத்திற்கு மிக இழிவான முறையில் முற்றுப்புள்ளி வைத்ததை அது குறிக்கிறது. ஈரானில் அதிவிரைவில் மோசாதிக்கிற்கு எதிராக சிஐஏ-நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பின்னர், மத்திய கிழக்கில் தட்டிக் கேட்க ஆளில்லாத மேலைநாட்டு வல்லரசாக அமெரிக்கா ஒன்று மட்டுமே நின்றது. அதன் விளைவு என்னவென்றால் பிரிட்டனின் வாடிக்கையாளர் ஆட்சி ஈராக்கில் ஒரு முடிவிற்கு வந்தது.

எதிர்கட்சிகள், இஸ்திக்லால் (தேசீயவாதிகள்) தேசிய ஜனநாயகக்கட்சி, ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி, சிறிய பாத்கட்சி, சிரியாவில் நிறுவப்பட்ட அகில அரபு கட்சியின் ஈராக்கிய கிளை ஆகிய கட்சிகள் உட்பட தேசிய எதிர்கட்சி முன்னணி அமைப்பதற்கு ஒன்று திரண்டு வந்தன. 1958-ஜூலை மாதம் ஈராக் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களது திரளான ஆர்ப்பாட்டங்களும் கொந்தளிப்பும் முற்றிக்கொண்டிருந்தது. சுதந்திர அதிகாரிகள் என்று அழைக்கப்பட்ட ஒரு இராணுவக் குழு பிரிட்டனின் ஒழுக்கச் சிதைவுள்ள அரசியல் ஏஜெண்டுகளின் ஹெஷ்மைட் முடியாட்சியின் இரண்டாவது பைசல் மற்றும் பிரதமர் நூரி அல் சையத் அரசாங்கத்தை ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் தூக்கி எறிந்தது. மன்னர் குடும்பமும் நூரியும் கொலை செய்யப்பட்டனர். எந்த அளவிற்கு அந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இருந்திருக்குமாயின் நிர்வாண உடலை பாக்தாத் தெருக்களில் மிகுந்த கேவலமான முறையில் அது சிதைந்து நெறுங்கும்வரை இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள். பிரிட்டனும், அவர்களது கூட்டாளிகளும், 40-ஆண்டுகளாக நடத்திவந்த மிகக் கொடூரமான சுரண்டல் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை ஒரு முடிவிற்கு வந்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனிகளின் மக்களது அரசியல் சகிப்புத் தன்மையை பொறுத்தே இயங்கி வந்தது. அரசியல் நிர்வாக முறைகளை காலனி நாடுகளில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தனது ஏகாதிபத்திய எதிரிகளைவிட மேலோங்கி நிற்பதற்கும் அல்லது குறைந்தபட்சம் இணக்குவிப்பதற்கும் காலனிகளை பிரிட்டன் பயன்படுத்தி வந்தது. 1920-களிலும் 1930-களிலும் ஈராக்கில் மிகுந்த கஷ்டத்தோடுதான் பிரிட்டன் தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டியது என்பது வரலாற்று பதிவேடுகளிலிருந்து தெளிவாகிறது. 1940-களின் இறுதியில், பிரிட்டன் இரண்டாவது உலகப்போர் முடிவில், மிக வலுவான இரண்டாம் நிலை இராணுவ வல்லரசாக திகழ்ந்தாலும், அது முற்றிலும் வெற்று அதிகாரம் தான். தனது ஏகாதிபத்திய நலன்களை நிலைநாட்டுவதற்கு முற்றிலுமாக அமெரிக்காவின் ஆதரவையே பிரிட்டன் சார்ந்திருந்தது. 1950-கள் வாக்கில், அமெரிக்காவின் நலன்கள் பிரிட்டனின் நலன்களிலிருந்து விலகிச் சென்றதும், பிரிட்டன் பாலஸ்தீனத்திலிருந்து, ஈரானிலிருந்து, எகிப்திலிருந்து, ஜோர்டானிலிருந்து மற்றும் ஈராக்கிலிருந்து நெருக்கித் தள்ளப்பட்டது அல்லது விரட்டியடிக்கப்பட்டது.

45 ஆண்டுகளுக்கு பின்னர் சதாம் ஹூசேனையும் அவரது பாத் கட்சி ஆட்சியையும், அமெரிக்கா, பிரிட்டனை தனது இளைய பங்காளராகக் கொண்டு முறியடித்திருக்கிறது. இது, நேரடியான ஏகாதிபத்தியம் திரும்புவதை எடுத்துக்காட்டுகிறது. 1958-ம் ஆண்டு ஈராக் மக்கள் ஒழித்துக்கட்டிவிட்டதாக நினைத்த மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகள் சுரண்டல்கள் இப்போது திரும்ப வந்துவிட்டதைக் குறிக்கிறது. முதலாவது ஏகாதிபத்திய படையெடுப்பு ஈராக் மீது நடத்தப்பட்டு, அந்த பதிவேடுகளிலிருந்து எடுக்கப்பட்ட, பல சம்பவங்கள் திரும்பவும் ஈராக்கில் நடந்திருப்பதை கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

வரலாற்றுப் படிப்பினைகள் உணர்த்துவது, எடுத்துக்காட்டுவது என்னவென்றால், முதலாவதாக, அமெரிக்கா ஐ.நா.வின் ஒப்புதலோடு இராணுவ ஆதிக்க ஆட்சியை உருவாக்கும், ஈராக்கிலிருந்து வெளியேறி அல்லது தப்பியோடிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்துள்ள முன்னாள் பாத் கட்சிக்காரர்கள் மற்றும் ஈராக்கின் எண்ணெய் தொழிற்துறையை அமெரிக்க கம்பெனிகள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள உதவுகின்ற, விலை கொடுத்து வாங்கப்பட்ட ஊழல் மலிந்த சிலரை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவார்கள். அந்த நிர்வாகிகள் அமெரிக்காவிற்கு உதவுவார்கள். இரண்டாவது, வரலாற்றுப் படிப்பினை என்னவென்றால், உலகின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார வளங்களை, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் அமெரிக்காவின் உறுதிப்பாடு மேலும் படையெடுப்புகளுக்கும் நாடுகளைக் கைப்பற்றுதலுக்கும் வழிவகுக்கும்.

இப்படி போர்களும் காலனி ஆதிக்கமும் திரும்பவும் வந்துகொண்டிருப்பது, ஏகாதிபத்தியத்திற்கும் இராணுவவாதத்திற்கும் எதிராக பரந்த சர்வதேச அடிப்படையில் விரிவான இயக்கம் ஒன்றைக் கட்டி அமைக்க வேண்டிய அவசியத்தை, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இன்றைய நிகழ்ச்சிகள் மிக வலுவாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன..&ஸீதீsஜீ; ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்கியுள்ள இந்த மனித இனத்தின் நெருக்கடியை ஒரே ஒரு சமுதாய சக்தி தான் தீர்த்து வைக்க முடியும். அதுதான சர்வதேச தொழிலாள வர்க்கம். அது அதன் சொந்த சுயாதீனமான வேலைத் திட்டத்திற்கு -- சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் உலகை மறு ஒழுங்கு செய்தலுக்கு கட்டாயம் போராட வேண்டும்.

புத்தகக் குறிப்புகள்:

1958-முதல் ஈராக்:- புரட்சியிலிருந்து சர்வாதிகாரம் வரை - பரூக் - சிலக்லட், மற்றும் சிலக்லட்.பி - ஐ.பி தாரிஸ் , லண்டன் - 2001.

கல்லகர்.ஜே.,பிரிட்டிஷ் சும்ராஜ்ஜியத்தின் சரிவு , புத்தெழுச்சி மற்றும் -வீழ்ச்சி - போர்ட் விரிவுரைகள் மற்றும் -இதரக் கட்டுரைகள் - கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக அச்சகம், கேம்பிரிட்ஜ், 1982.

ஜேம்ஸ்.எல், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - அபாகஸ்,லண்டன் - 1994.

கென்ட்.எம்., எண்ணெய் மற்றும் சாம்ராஜ்ஜியம் - மாக்மில்லன் அச்சகம், லண்டன் - 1976.

லூயி.டபிள்யு.ஆர்,. 1945 முதல், 51-வரை, மத்தியக் கிழக்கில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம், அரபு தேசீய உணர்வு, அமெரிக்கா மற்றும் போருக்கு பிந்தைய ஏகாதிபத்தியம்` - 1984.

மெல்ச்சர் எச். ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் தேடல்: ஈராக் - 1910-1928 - இத்தாக்கா அச்சகம், லண்டன் - வெளியீடு - 1976.

சிலக்லெட், பி. ஈராக்கில் பிரிட்டன் - 1914-1932 - இத்தாக்கா அச்சகம், லண்டன் - 1972.

ஓர்க்கர்ஸ் லீக் - பாலைவன படுகொலை - ஈராக்கிற்கு எதிரான ஏகாதிபத்திய போர் - தொழிலாளி பதிப்பக வெளியீடுகள் - டெட்ராய்ட் - 1991.

யாப் எம்.இ., முதல் உலகப்போருக்குப் பின், அண்மைக் கிழக்கு - 1995-வரை ஒரு வரலாறு - இரண்டாம் பதிப்பு, லாங்மேன் - லண்டன் - 1996.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved