World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

Britain's Guardian newspaper says US sanctions torture against terrorist suspects

பயங்கரவாதிகளென சந்தேகிக்கப்படுபவர்கள் மீதான சித்திரவதைக்கு அமெரிக்கா அனுமதி, பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை கூறுகிறது

By Kate Randall
3 February 2003

Back to screen version

சென்ற வாரம் ஜோர்ஜ் W.புஷ் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில், சதாம் ஹூசேன் தனது அரசியல் எதிரிகள் மீது சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதுதான் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா போரில் இறங்க வேண்டியதற்கான காரணம் என்று விளக்கியுள்ளார். ஈராக் ஆட்சியானது அத்தகைய முறைகளைக் கடைப்பிடிக்கிறது என்பதைச் சந்தேகிப்பதற்கு எந்தவித இடமும் கிடையாது. ஆனால் புஷ், இந்த தார்மீக நெறி மீறப்படுவது கண்டு வெகுண்டெழுந்து நிற்பதுபோல் நடிக்கிறார். இப்படித்தான் அவரது உரை எல்லா விவகாரங்களிலும் சிடுமூஞ்சித்தனமாகவும், தோல்வி மனப்பான்மை நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

புஷ் உரையாற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனின் கார்டியன் செய்திப் பத்திரிகை புதிய விவரம் ஒன்றைப் பிரசுரித்திருந்தது. அதாவது, செப்டம்பர் 11ந் தேதி நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதற்கு சித்திரவதை மற்றும் சட்ட விரோத விசாரணைகள் நடத்துவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கி இருப்பதாக எழுதியது. அத்துடன் ஜனவரி 25ந் தேதி டங்கன் காம்பல் (Duncan Campbell) என்பவர் கடந்த வருடம் மார்ச் 11 மற்றும் டிசம்பர் 26 ஆகிய இரண்டு தினங்களில் அமெரிக்காவின் சித்திரவதை தொடர்பாக இரு கட்டுரைகளை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் விபரித்திருந்தார். உலக சோசலிச வலைத் தளம் அந்த இரண்டு கட்டுரைகளின் சுருக்கத்தைப் பிரசுரித்திருந்தது ("US oversees abduction, torture, execution of alleged terrorists" and "New account of US torture of Afghan and Arab prisoners" ஆகிய இரண்டு கட்டுரைகளைக் காண்க!).

முன்னாள் அமெரிக்க கடற்படை புலனாய்வு அதிகாரி வெய்ன் மாட்சன் (Wayne Madsen) என்பவர் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இரண்டு வகையான சித்திரவதைகளை அமெரிக்கா கைதிகள் மீது நடத்தி வருவதாக கூறியிருக்கிறார். முதலாவது, கியூபா குடாவிலுள்ள குவான்டனமோ தளத்தில் அமெரிக்கா பிடித்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான கைதிகள் மீது அவர்களைத் தூங்கவிடாது தடுத்து பிரகாசமான வெளிச்சத்தை எரிந்து கொண்டிருக்கச் செய்யும் ஒருவகை ''வெளிச்ச சித்திரவதையை'' செய்து வருகிறார்கள் என்று அவர் விளக்கியுள்ளார். இத்தகைய இடைவிடாத ''வெளிச்ச'' சித்திரவதை என்று கருதப்படுவதற்கு காரணம் இதில் நேரடியாக உடலை வருத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாதது தான் ஆகும்.

மனித உரிமைகள் தொடர்பான மற்றும் குவான்டனமோ கைதிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்திருக்கும் குழுவைச் சேர்ந்த வக்கீல் ஸ்டீபன் யாக்மான் (Stephen Yagman) என்பவர் கார்டியன் பத்திரிகைக்கு தந்திருக்கும் பேட்டியில், அமெரிக்க விசாரணை அதிகாரிகள் மனோதத்துவ அடிப்படையிலான சித்திரவதையை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இப்படிப்பட்ட சித்திரவதை மூலம், விசாரணை அதிகாரிகளை கைதிகளை முழுமையாக நம்புகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுடன், இதற்காக உணர்வுகளை மங்கச் செய்கின்ற நடைமுறைகளை விசாரணை அதிகாரிகள் கடைப்பிடிக்கின்றனர். ''இதன் விளைவு எந்த மனிதர்கள் தங்களோடு தொடர்பு கொண்டாலும் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கின்ற மனப்பான்மையை'' உருவாக்கிவிடுவதாக யாக்மன் கூறுகிறார்.

இரண்டாவது வகை சித்திரவதை என்பது, மூன்றாம் தரப்பு நாடுகளிடம் அமெரிக்கா ஒப்படைக்கும் கைதிகள் மீது பயன்படுத்தப்பட்டு வருவதாக வெயின் மாட்சன் கூறியுள்ள கருத்தை கார்டியன் கட்டுரை மேற்கோள் காட்டியிருக்கிறது. மூன்றாம் தரப்பு நாடுகள் என்று அமெரிக்கா தனது கைதிகளை ஒப்படைக்கும் நாடுகளில் எகிப்து, மொராக்கோ, பாகிஸ்தான், ஜோர்டான் மற்றும் சிரியா ஆகியவை அடங்கியுள்ளன. இவ்வகை சித்திரவதைகளில் அடித்து துன்புறுத்துவது, மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி தருவது மற்றும் இதர சம்பிரதாய முறைகளைக் கையாள்வது ஆகியவை அடங்கும்.

2002 மார்ச் 11 அன்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பிரசுரித்துள்ள ஒரு கட்டுரையில் பயங்கரவாதிகள் என்று ''சந்தேகிக்கப்படும்'' நபர்களை கடத்திச் செல்வதற்கு வாஷிங்டன் பயன்படுத்தும் மறைமுக இயக்கங்கள் குறித்து விரிவான விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்டுரையில் பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தோனேசிய மற்றும் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகள் தனி மனிதர்களை எப்படி அமெரிக்கா கடத்திச் செல்கிறது என்பதை கூறியுள்ளனர். குறிப்பாக இந்தோனேசியா, பாகிஸ்தான், முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் இதர இடங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட கைதிகள் நீதிமன்ற விசாரணைகள் எதுவும் இல்லாமல் இதர நாடுகளுக்கு அமெரிக்கா மாற்றுகிறது. அந்த நாடுகளில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகுவதுடன் இதன் காரணமாக, அதில் சிலர் கொல்லப்படுகின்றனர் என்ற விபரங்களையும் இப்பத்திரிகை கூறியிருக்கின்றது.

ஆட்கடத்தல் முறை மூலம் பிடிக்கப்படுகிற நபர்களைக் கைது செய்து சித்திரவதைக்கு சட்டபூர்வமான தடையில்லாத நாடுகளிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் தெளிவான நோக்கமாகும். இந்த நாடுகளின் அதிகாரிகள் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றதுடன், அமெரிக்க உளவாளிகளும் அடிக்கடி இந்த நாடுகளில் நடமாடிக்கொண்டிருப்தாக போஸ்ட் மேலும் கூறியுள்ளது.

சென்ற மாதம் கார்டியன் பிரசுரித்திருந்த ஒரு கட்டுரையில் சில கைதிகள் இந்து சமுத்திரத்திலுள்ள டிகோ கார்சியா தீவிற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டிருக்கிறது. பிரிட்டனின் வசமுள்ள இத்தீவில் அமெரிக்காவின் விமான மற்றும் கடற்படைத் தளங்கள் அமைந்துள்ளன. ''இந்த அமெரிக்கத் தளங்களில் புலனாய்வு அதிகாரிகள் பிடிபட்ட கைதிகளின் நாட்டு அதிகாரிகளைப்போல் போலி வேடம் போட்டு கைதிகள் வாய் தவறி உண்மையை சொல்லுகின்ற நிலையை உருவாக்குவதற்காக முயன்றனர்'' என்று கார்டியன் பத்திரிகை எழுதியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில், கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும்போது சித்திரவதை செய்யப்படுவதை அமெரிக்கா மேற்பார்வையிட்டது. பிடிபட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் அரபுக் கைதிகள் பக்ராம் விமான தளத்திலுள்ள அமெரிக்க இராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் விசாரிக்கப்பட்டனர். ''சில நேரங்களில் கைதிகள் மணிக்கணக்காக நிற்க வைக்கப்பட்டனர். அல்லது முழங்காலில் நிற்பதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களின் தலைகளில் கறுப்புத் தொப்பியும் அல்லது வர்ணம் பூசிய கண்ணாடிகளும் அணிவிக்கப்பட்டிருந்தன'' என்று வாஷிங்டன் போஸ்ட் டிசம்பர் 26 அன்று இது சம்மந்தமாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. ''சில நேரங்களில் இந்தக் கைதிகள் மிகுந்த அருவருப்பான, வலி எடுக்கின்ற நிலையிலும் அல்லது 24 மணி நேரமும் தூங்க முடியாத அளவிற்கு கடும் ஒளி வெள்ளத்திலும் வைக்கப்பட்டனர். இது நிர்பந்தம் கொடுத்து பயமுறுத்தும் விசாரணை முறை என்று கூறப்படுகிறது'' என்று இப்பத்திரிகை மேலும் எழுதியுள்ளது.

அமெரிக்காவிற்கு வெளியில் அமெரிக்க இராணுவம், புலனாய்வு ஏஜென்டுகள், அவர்களது கட்டளைப்படி செயல்படுகின்ற வெளிநாடுகளின் ஏஜென்டுகள் ஆகியோரின் பொறுப்பில் ஏறத்தாழ 3000 மக்கள் கைதிகளாக உள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்திருக்கின்றன. இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் மீது எந்தக் குற்றம் தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படவில்லை. உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது நடைபெற்ற தாக்குதல்களில் இவர்கள் எவருக்கும் தொடர்பு இல்லை. இத்தகைய 3.000 கைதிகளுக்கும் போர்க் கைதிகளுக்குரிய அந்தஸ்தை வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்து வருவதால், இது சர்வதேச சட்டத்திற்கும் மற்றும் ஜெனீவா உடன்படிக்கைகளுக்கும் முரணானதாக இருக்கின்றது.

இந்தக் கைதிகளின் நிலை குறித்து அமெரிக்க ஊடகங்கள் கவனம் செலுத்துவது கிடையாது. வாஷிங்டன் போஸ்டிலும் மற்றும் கார்டியனிலும் கைதிகள் மீது சித்திரவதை நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா அங்கீகாரம் தந்திருக்கிறது என்று பிரசுரிக்கப்பட்டிருக்கும் செய்திகள் குறித்து அமெரிக்காவிலுள்ள தொலைக்காட்சிகளோ அல்லது இதர செய்தி ஊடகங்களோ எதையும் வெளியிடவில்லை. ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக்கட்சி அரசியல்வாதிகளும் இத்தகைய புகார்களை புறக்கணித்துவிட்டனர். இந்த முறைகேடுகள் குறித்து குறிப்பிடப்பட்டாலும் அதற்கான முடிவுரைகள் எழுதப்படுவதில்லை. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான சட்ட விரோதமான முறைகள் கையாளப்படுவதற்கு எந்தக் கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கின்றன என்பதை இந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதுமில்லை.

வாஷிங்டன் போஸ்ட்டை எடுத்துக்கொள்வோம். இந்தப் பத்திரிகை சித்திரவதைக்கு அமெரிக்கா உடந்தையாகயிருந்திருக்கிறது என்று அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆனால், இதே பத்திரிகை சர்வதேச அளவில் ஆக்கிரமிப்பை நடத்த புஷ் நிர்வாகம் உருவாக்கி வருகிற சாக்குபோக்குகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது. மேலும் ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சிகளுக்கும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved