World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

EU summit agrees on war against Iraq as a "last resort"

போரை ''இறுதி கட்டமாக'' ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் உடன்பாடு

By Peter Schwarz
19 February 2003

Back to screen version

உலகம் முழுவதிலும் ஈராக்கிற்கு எதிரான போரை கண்டித்து நடைபெற்ற பேரணிகளில் இலட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் அணிவகுத்து வந்த இரண்டு நாட்களுக்கு பின்னர், புரூஸல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில், கடைசி கட்ட நடவடிக்கையாகத்தான் போரினை பயன்படுத்துவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் பங்கு கொண்ட எல்லா அரசாங்கங்களும் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. அந்த தீர்மானமானது சில வாரங்களுக்குள் அமெரிக்கா தலைமையில் படையெடுப்பை ஆரம்பிப்பதற்காக ஐ.நாடுகள் ஆயுத சோதனைகளை விரைவில் முடிக்குமாறு வாஷிங்டன் வைத்த கோரிக்கை தொடர்பாக கூர்மையாக பிளவுபட்டு நிற்கும் ஐரோப்பிய அரசாங்கங்களின், அரசியல் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக வார்த்தைகளை இணைத்த ஒரு ''போலியான ஒட்டு வேலையாகும்''.

அமெரிக்காவின் நிலைப்பாட்டை உள்ளார்ந்த கண்டனம் செய்யும் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள அந்தத் தீர்மானம், காலனித்துவ படையெடுப்பிற்கு பிரான்சும், ஜேர்மனியும் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அந்தத் தீர்மானம் அமெரிக்காவின் மோசடியான போர் முயற்சியை எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லாமல் பிரதிபலிக்கின்றது. வாஷிங்டனின் ஏகாதிபத்திய நோக்கங்களை அந்தத் தீர்மானம் மூடி மறைப்பதுடன், ஈராக்கிடம் உள்ள பேரழிவு மிக்க ஆயுதங்களிலிருந்து உலகை காப்பாற்றுகின்ற விருப்பத்தினால் உந்தப்பட்டு அமெரிக்கா செயல்படுகிறது என்ற பொய்யை பரப்புவதற்காக இந்த தீர்மானம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியனின் கிரேக்க நாட்டுத் தலைவர் திங்களன்று சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஐரோப்பிய யூனியனுக்குள் ஈராக் பிரச்சனை தொடர்பாக பரந்த முரண்பாடான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டிருப்பதால் உருவாகியுள்ள இடைவெளியை சமாளிப்பதற்காக இந்த சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டு ஐரோப்பிய வெளியுறவு கொள்கை என்பதில் மிச்சம், மீதியிருப்பதையாவது மீட்டு ஒரு நிலைப்படுத்துவதற்கு ஓர் வாய்ப்பு என்று அந்தக் கூட்டம் கருதப்பட்டது. இந்தத் தீர்மானம், நிலவுகின்ற கருத்து வேறுபாடுகளை மூடி மறைப்பதே தவிர- எந்த வகையிலும் கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைப்பதாக இல்லை.

பொதுவான தீர்மானத்திற்கு வாக்களித்த ஜேர்மன் அரசு குறிப்பாக தனது பழைய நிலைப்பாட்டை கணிசமான அளவிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறது. எந்த விதமான இராணுவ தலையீடும் கூடாது, என்று இதற்கு முன்னர் கூறி வந்த ஜேர்மனி, ஈராக் ''நிபந்தனையற்ற ஒத்துழைப்பு'' வழங்கவேண்டும் என நிர்ப்பந்தித்ததன் ஊடாக இப்புதிய தீர்மானத்தை ஆதரித்ததுடன், இராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கு கதவு திறந்துவிட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபை தான் ஈராக் தொடர்பாக முடிவு செய்வதற்கு அதிகாரம் படைத்த மத்திய அமைப்பு என்பதை அங்கீகரிப்பதுடன் உச்சி மாநாட்டு தீர்மானம் ஆரம்பமாகின்றது. இந்தத் தீர்மானத்தின் வாசகங்கள் பிரிட்டனின் பிளேயர் அரசும் எதிரொலிக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபை அனுமதித்தாலும், அனுமதிக்காவிட்டாலும் ஈராக்கை தாக்குவதற்கு தயாராகயிருப்பதாக திரும்பத் திரும்ப அமெரிக்கா வலியுறுத்தி வருவதற்கு உள்ளார்ந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

''ஈராக் முழுமையாகவும், பயனுள்ள வகையிலும் ஆயுதக் குறைப்பு செய்யவேண்டும்'' என்று தீர்மானம் கேட்டுக்கொள்கிறது. இதை ''சமாதான வழியில், செயல்படுத்த வேண்டும்'' என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூறுகின்றனர். ''போர் தவிர்க்க முடியாதது அல்ல'' என்று தீர்மானம் பிரகடனப்படுத்துகிறது, அதே நேரத்தில், இராணுவ தலையீட்டிற்கான சாத்தியக்கூறு குறிப்பாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், அந்தத் தீர்மானம், ''இறுதிக் கட்ட நடவடிக்கையாகத்தான் பலாத்காரம் பயன்படுத்தப்பட வேண்டும்'' என்று கூறுகின்றது.

கீழ்கண்ட வாசகத்தில், ஈராக் வாஷிங்டன் கட்டளையிட்ட வழிமுறைப்படி இராணுவத் தாக்குதலுக்கான இராஜதந்திர சங்கேதமொழியான ''பயங்கரமான பின் விளைவுகள்'' பற்றி எச்சரிக்கப்பட்டிருக்கிறது. வல்லரசுகளின் கோரிக்கைகளை ஏற்று நிபந்தனை எதுவுமில்லாமல், ஒத்துழைக்க ஈராக் மறுத்தால் தாக்குதல் நடக்கும் என்று பொருள். ''பாக்தாத்திற்கு எந்தவிதமான நப்பாசைகளையும் கொண்டிருக்க வேண்டியதில்லை, உடனடியாக பாக்தாத் முழுமையாக, ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒத்துழைக்க வேண்டும். சமாதான முறையில் நெருக்கடியை தீர்த்துக்கொள்வதற்கு இறுதி வாய்ப்பு ஈராக்கிற்கு கிடைத்திருக்கிறது. ஈராக் சர்வதேச சமுதாயத்தின் கட்டளையை தொடர்ந்து மீறுமானால், மற்றும் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், இந்த ஈராக் ஆட்சி மட்டுமே அதன் விளைவுகளுக்கு பொறுப்பாகும்'' என்று அந்த தீர்மானம் குறிப்பிடுகின்றது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளிலேயே மிக உறுதியாக போரை ஆதரித்து வரும் நாடுகளான பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தங்களது நிலையிலிருந்து விட்டுக்கொடுத்து இறங்கி வந்திருக்கின்றன. இந்த மூன்று நாடுகளும், ஆயுத பரிசோதகர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தன. தற்போது அதை கைவிட்டுவிட்டு ''ஐ.நா. பாதுகாப்பு சபை தேவை என்று நம்புகிற ஆதாரங்களையும் (வசதிகளையும்) கால அவகாசத்தையும் ஐ.நா. ஆயுத பரிசோதகர்களுக்கு வழங்கப்படவேண்டும்'' என்ற வாசகத்திற்கு இறங்கி வந்திருக்கின்றன. இது, வாஷிங்டனிலிருந்து வரும் நிலைப்பாட்டிற்கு வேறுபட்ட தெளிவான ஒரு கருத்தாகும். வாஷிங்டன் அதிகாரிகள் பரிசோதகர்களுக்கு ''மாதக் கணக்கில் அல்ல, வாரக் கணக்கில் தான்'' அவகாசம் தரப்பட வேண்டுமென்று அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். புஷ் தனக்கே உரிய பாணியில் இதுபற்றி கருத்து தெரிவிக்கும் போது, சதாம் ஹூசேனின் ''ஆட்டம் முடிந்துவிட்டது'', ''காலம் நெருங்கிவிட்டது'' என்ற வார்த்தைகளை கூறிவருகின்றார்.

தீர்மானத்தை தொடர்ந்த பிரான்சினதும், ஜேர்மனியினதும் இராஜதந்திர நடவடிக்கை அமெரிக்காவின் தலைமையிலான யுத்தத்திற்கு ஒத்துழைப்பை தெரிவித்துள்ளன. இதில் அமெரிக்கா தலைமையில் போருக்கான நோக்கத்திற்கு இணைந்துபோகும் ''எவ்வாறிருந்தபோதிலும், ஈராக்கின் முழு ஒத்துழைப்பும் இல்லாத பட்சத்தில் பரிசோதனைகள் முடிவற்று தொடர முடியாது'' என தெரிவித்திருக்கின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உச்சி மாநாட்டுத் தீர்மானம் பிரான்சு அரசு எடுத்த நிலைப்பாட்டை மிகப் பெருமளவிற்கு நெருங்கி வருவதாக அமைந்திருக்கிறது. அது போருக்கான சாத்தியப்பாட்டை நிராகரிக்க மறுக்கையில், ஆயுத பரிசோதகர்களுக்கு அவகாசத்தை நீடித்துத் தரவேண்டும் என்று கோருகிறது. மிகவும் அண்மைக் காலத்தில் தான் பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் ''பிரான்ஸ் ஒரு அமைதிவாத நாடல்ல'' என்று கூறியிருந்தார்.

வோல்ஸ்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமையன்று; பிரெஞ்சு அரசாங்கத்தின், எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிகை சிராக்கினது ஆளும் வலதுசாரி மத்திய கூட்டணியின் மூத்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி தகவல் தந்தது. அவர் வார இறுதியில், ''எங்களுக்கு தேவைப்படுவதெல்லாம், அமெரிக்கர்களைவிட ஒரு சில வாரங்கள் கூடுதலாக தேவை. எனவே, அதை வைத்துக்கொண்டு, ஐ.நா பரிசோதகர்களுக்கு தங்கள் பணியைச் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று நாங்கள் சொல்ல முடியும். இது எங்களது முகத்தை பாதுகாக்கும் பிரச்சனை'' என்று அவர் கருத்து தெரிவித்தார்.

தீர்மானத்திற்கு ஜேர்மனி உடன்பட்டிருப்பது ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஷ்ஷரின் நிலைப்பாட்டினை அண்மித்து வருகிறது. மேலும் ஜேர்மன் பிரதமர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கருத்திலிருந்து வேறுபடுகிறது. பிரதமர் ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) எந்த விதமான நிலையிலும் போருக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என அறிவித்துவிட்டார். இக்கருத்திற்கு அவரது சமூக ஜனநாயகக் கட்சிக்குள் பாரிய ஆதரவு உள்ளது.

பிஷ்ஷர் (பசுமை கட்சி) போர் தொடர்பாக திட்டவட்டமான நிலை எடுப்பதைத் தவிர்க்க விரும்புகிறார். ஏனெனில் அப்படிப்பட்ட திட்டவட்டமான நிலையை எடுப்பது தனது இராஜதந்திர முயற்சிகளைக் கட்டுப்படுத்துவதாக அமைந்துவிடுமென அவர் கருதுகின்றார். இம்முரண்பாடு பசுமை கட்சித் தலைவரை பிரமருக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கவேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டிற்கு முன்னர் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் துருக்கிக்கு ''நேட்டோ'' உதவும் பிரச்சனையில் விட்டுக்கொடுத்தன. ஈராக் போர் நடக்கும் பட்சத்தில், துருக்கி பாதுகாப்பிற்கு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்பதில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் மூலம், துருக்கி உடனடியாக அவர்கள் கண்காணிப்பு விமானங்களுக்கும், பட்ரியோட் ராக்கெட்டுகளுக்கும், ஜேர்மன் போர் வீரர்கள் இயக்கும் Fuchs ரக டாங்கிளுக்கும் வினியோக உத்தரவு பிறப்பிக்க வழி வகை ஏற்பட்டிருக்கிறது.

சென்ற வாரக் கடைசிக்கு முன்னர், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் அத்தகைய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டன. அத்தகைய முயற்சி தவறான சமிக்ஞை காட்டிவிடும் மற்றும் ஈராக் மோதலில் சமரச முடிவு காண்பதற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அப்போது அந்த மூன்று நாடுகளும் கருத்துத் தெரிவித்தன. அதன் விளைவாக, அந்த மூன்று நாடுகள் மீது அமெரிக்கத் தரப்பிலிருந்து ஆவேசமான கண்டனங்கள் வரத்தொடங்கின.

இந்த உடன்பாடு ''நேட்டோ'' நாடுகளுக்குள் பகிரங்க மோதல் ஏற்படுவதைத் தவிர்த்ததுடன், அமெரிக்காவின் ஆரம்ப எதிர்ப்புக்கு மத்தியில் துருக்கிக்கு உதவுவது ஈராக் போருக்கு ஆதரவான அனுமதியாகவோ, அல்லது ஈராக்கிற்கு எதிராக நேட்டோ இராணுவ நடவடிக்கையில் இறங்கும் என்றோ எடுத்துக்கொள்ளக்கூடாது என குறிப்பிட்டது. உத்தியோகபூர்வமான வாசகத்தின்படி, நேட்டோ உதவி தற்காப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் போர் ஆரம்பமாகிவிடுமானால், எது தற்காப்பு நடவடிக்கை எது தாக்குதல் நடவடிக்கை என்று பகுத்துப்பார்ப்பது சாத்தியமில்லை என்பது தெளிவாகும்.

மிகக்குறைந்த பொதுவான அடித்தளத்தில் ஒரு உடன்பாடு

ஈராக் பிரச்சனை தொடர்பாக, கூட்டுப் பிரகடனம் ஒன்றை வெளியிட வேண்டிய கடமைப்பாடு ஐரோப்பிய அரசுகளுக்கு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. பேரணிகளை ஏற்பாடு செய்தவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான பெப்ரவரி 15 திகதி போர் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. மக்கள் கண்டனப் பேரணி எல்லா ஐரோப்பிய ஆட்சிகளுக்கும் அதிர்ச்சி தருவதாக அமைந்துவிட்டது. கோடிக் கணக்கான மக்கள், திரண்டு வந்து குரல் கொடுத்ததால் எல்லா முதலாளித்துவ அரசாங்கத் தலைவர்களும் தங்களது கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் நெருங்கி வந்து நட்புறவை உருவாக்கும் கட்டாயம் ஏற்பட்டது.

இலட்சக்கணக்கான மக்கள் ரோம் நகரில் ஆர்ப்பாட்டம் செய்த போர் எதிர்ப்புக் கண்டனப் பேரணிகளுக்குப் பின்னர் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது முந்திய நிலைப்பாட்டிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். இதுவரை ஈராக் மீது போர் தொடுப்பதைத் தீவிரமாக ஆதரித்து வந்தவர் தற்போது இரு தரப்புகளுக்கும் நடுநிலையாகச் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார். பிரான்சும், ஜேர்மனியும் ஒரு பக்கமாகவும் பிரிட்டனும், ஸ்பெயினும் இன்னொரு பக்கமாகவும் நின்று கொண்டிருப்பதில் இத்தாலி நடுநிலையோடு சமரசத்தில் ஈடுபட முயன்று வருகிறது.

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ (Jack Straw) கூட, பொதுமக்களது கருத்திற்குப் புறம்பாக ஒரு நாடு போருக்குச் செல்வது மிகவும் பிரச்சனையானது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய அரசுத் தலைவர்களிடையில், பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயரின் நிலை மிகவும் ஆபத்தான நெருக்கடிக் கட்டத்தில் உள்ளது. அமெரிக்காவின் ஒருதலைப் பட்சமான போரை அவர் ஆதரிப்பாரானால் அவரது எதிர்கால அரசியலே சந்தேகத்திற் குரியதாக ஆகிவிடும். மக்களிடம் இருந்து பாரிய எதிர்ப்பை எதிர் நோக்குவதுடன், தமது செல்வாக்கில் பாரிய சரிவுடன், நாடாளுமன்ற தொழிற் கட்சியிலேயே போருக்கான எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர் பதவியையே இழந்து விடக்கூடும். எனவே பிளேயருக்கு, ஐ.நா. பாதுகாப்பு சபையின் இரண்டாவது தீர்மானத்தை ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கு அங்கீகாரம் தருவதற்கு, நிறைவேற்றுவதற்கு ஆதரவைத் திரட்டியாக வேண்டிய உடனடி அவசரம் ஏற்பட்டுள்ளது.

பிளேயர், இருதலைக்கொல்லி எறும்பு போன்ற நிலையிலிருப்பதைப் பயன்படுத்தி, லண்டனுக்கும், வாஷிங்டனுக்கும் இடையில் பிளவைத் தோற்றுவித்துவிட முடியும் என்று பிரான்சும், ஜேர்மனியும் நம்புகின்றன. அப்படிச் செய்வதன் மூலம், புஷ் நிர்வாகத்தின் நிலையை பலவீனப்படுத்திவிட முடியும் என்றும் இரு நாடுகளும் நம்புகின்றன. சர்வதேச ஆதரவு என்கின்ற முகமூடியை வழங்குவதற்கு புஷ் நிர்வாகம் டோனி பிளேயரை பெருமளவில் நம்பியுள்ளது.

ஜேர்மனி தன்னைப் பொறுத்தவரை அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்ற அஞ்சுவதால் தனது முந்திய நிலையை மாற்றிக் கொள்வதற்கு இதுதான் தக்கதருணம் என நம்புகிறது. வாஷிங்டனின் மிகப் பெருமளவில் நிர்ப்பந்தத்தின் கீழ் ''நேட்டோ'' வின் இருப்பு மட்டுமல்லாது, ஐரோப்பாவினுள்ளும் அதற்கு அப்பாலும் தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பு தொடர்பாகவும் கவலை கொண்டுள்ளது.

மூர்க்கமான முறையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைளைச் சீர்குலைத்தது, பேர்லின் மற்றும் புரூஸல்சில் பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் செய்தி சஞ்சிகையான ''Der Spiegel''' தனது தற்போதைய பதிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் ஜாவியர் சோலானாவின் அலுவலகத்தில் இருந்து வெளிவந்த இரகசிய அறிக்கை பற்றி தகவல் தந்திருக்கின்றது. அதில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை பரவவிடாது அமெரிக்கா இடையூறு செய்து வருவதாக குற்றஞ் சாட்டியுள்ளது. ''அமெரிக்கா, ஒரு ஐரோப்பிய நாட்டை இன்னொரு ஐரோப்பிய நாட்டுடன் மோதவிட தீர்மானித்திருப்பதாக'' அந்தப் பத்திரிக்கை கூறுகின்றது.

ஈராக் பிரச்சனையில், பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் எதிராக அமெரிக்கா கிழக்கு ஐரோப்பிய நாடுகளை பகிரங்கமாகவே தனது பக்கம் திருப்ப முனைகின்றது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் திங்களன்று நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்படாதது, அந்த நாடுகளை மட்டம் தட்டும் தெளிவான நடவடிக்கையாகும். புரூஸல்ஸில் பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் ''வாயை மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டிய மிகக் கடுமையான ஒரு வாய்ப்பை அவர்கள் தவறவிட்டு விட்டார்கள்'' என சற்று சூடாகவே சொன்னார். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் வழியில் தடைக்கற்கள் உருவாகும் என மிரட்டினார். அந்நாடுகள் தாங்கள் ஒன்றியத்தில் சேரும் வாய்ப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றால் ''அதைவிட சிறந்த வழியை அவர்கள் கண்டுபிடித்திருக்க முடியாது'' என்றும் சிராக் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒரு பொதுவான நிலைப்பாட்டை அடைய முயற்சிகளை மேற்கொண்டாலும், புரூஸல்ஸில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முகமூடி மட்டுமே தவிர ஐரோப்பிய யூனியனில் நிலவும் பிளவுகளைத் தீர்த்து வைக்க முடியவில்லை. மிகக் குறைந்த பொதுவான அடித்தளத்தில் இந்த உடன்பாடு உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக, இரண்டு திட்டவட்டமான பிரச்சனைகளை விட்டுவிட்டார்கள். முதலாவது, ஆயுத பரிசோதகர்களை எப்போது, எந்த அடிப்படையில் விலக்கிக்கொள்வது? மற்றும், ''இறுதியாக'' எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கான மாற்றம். அதாவது போர். இரண்டாவது, இறுதியாக ஐ.நாடுகள் சபையின் அனுமதி இல்லாமல் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்குமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பதிலும் திட்டவட்டமான கருத்துத் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கையில் இறங்கினாலும், அதை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக பிரிட்டனும் ஸ்பெயினும் அறிவித்துள்ளன. ஆனால் ஜேர்மனியும், பிரான்சும் ஐ.நாடுகள் சபைதான் போருக்கு அங்கீகாரம் தர முடியுமென்று வலியுறுத்தி வருகின்றன. தற்போது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இரண்டாவது தீர்மானம் வருவதை எவ்வளவு காலத்திற்கு முடியுமோ அவ்வளவு காலத்திற்குத் தாமதப்படுத்த அவர்கள் முயன்று வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக தான் அடுத்த மோதல் உருவாகலாம்.

புதிய ஐ.நா. தீர்மானத்தை இந்த வாரம் தாக்கல் செய்வதற்காக பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இராஜதந்திரதுறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ''தீர்மானங்களை மீறி'' ஈராக் செயல்பட்டதாகவும், எனவே ஈராக்கிற்கு குறுகியகால அவகாசம் தரும் இறுதி எச்சரிக்கை தரவேண்டும் என்றும் நகல் தீர்மானத்தில் வாசகம் அடங்கி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா, தேர்ந்தெடுக்கும் நேரத்தில் இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு அடிப்படையாக அந்தத் தீர்மானம் அமையலாம்.

பிரான்சும், ஜேர்மனியும் இரண்டாவது தீர்மானத்தை எதிர்த்துள்ளன. சென்ற நவம்பரில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட 1441வது தீர்மானத்தின் அடிப்படையிலேயே, சோதனைகள் நீடிக்கப்பட வேண்டுமென இரு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. பிளேயர் மீது நிர்ப்பந்தம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது (ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சாரமில்லாத தீர்மானம் வலியுறுத்தப்படுகிறது). ஐ.நா. பாதுகாப்பு சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு பிரான்சின் எதிர்ப்பை சிராக் வலியுறுத்திக் கூறியுள்ளார். ''இரண்டாவது தீர்மானத்திற்கு, இன்று தேவை எதுவும் இல்லை. அப்படி வந்தால், எதிர்ப்பதைத் தவிர பிரான்சிற்கு வேறு வழியில்லை'' என சிராக் குறிப்பிட்டார்.

ஆனால், புரூஸல்ஸில் பிரான்சும், ஜேர்மனியும் விட்டுக் கொடுத்திருப்பதையும், துருக்கிக்கான ''நேட்டோ'' உதவி பற்றி இறங்கி வந்திருப்பதையும் பார்க்கும்போது, ஈராக் தொடர்பாக எந்த நேரத்திலும் இந்த இரண்டு அரசுகளும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளலாம். இதில் குறிப்பாக ஜேர்மன் அரசாங்கத்திற்கு மிக உயர்ந்த அளவிற்கு ஆபத்து உண்டு.

உள்நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், சமூக நெருக்கடிக்கும் மத்தியில் சமூக ஜனநாயக- பசுமைக் கட்சி கூட்டணி அரசின் செல்வாக்கு அடிமட்டத்திற்குச் சென்றுவிட்டது. புஷ் அரசிற்குப் பின்னால் அணிவகுத்து நிற்கும் பழைமைவாத எதிர்க்கட்சிகளின் கடுமையான அழுத்தங்களின் கீழ் உள்ளது. பிரான்ஸ் தனது நிலையை மாற்றி ஜேர்மனி மட்டுமே தனது வெளிநாட்டுக் கொள்கையில் தனித்து நிற்கவேண்டி வந்தால், ஷ்ரோடர் அரசின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும்.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம், சிக்கல் நிறைந்த சிலந்தி வலை போன்ற சதியாலோசனைகள் கொண்ட முயற்சியாகும். உண்மையான உந்துதலுக்கான நலன்கள், நோக்கங்களை மக்களிடமிருந்து மறைத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு அரசும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்ப்பந்தங்களுக்கிடையில் தனது நலன்களை மட்டுமே நிலைநாட்ட முயல்கிறது. இராஜதந்திர நிர்ப்பந்தங்களையும் மற்றும் முதலாளித்துவ அரசுகளின் தந்திரோபாயங்களையும் ஈராக்கிற்கு எதிரான போருக்கான எதிர்ப்பின் முக்கிய அடித்தளமாக கொள்ளமுடியாது. மாறாக, கடந்த வாரக் கடைசியில் உயிர்த் துடிப்பாக உருவான பரந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதனால் மட்டுமே உழைக்கும் வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved