World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Francee: Former prime minister Jospin resurfaces in th pages of Le Monde

பிரான்ஸ்: முன்னாள் பிரதமர் ஜொஸ்பன் மீண்டும் லு மொன்ட் பத்திரிகை பக்கங்களில் தலைகாட்டுகிறார்.

By Alex Lefebvre
24 February 2003

Back to screen version

முன்னாள் சோசலிச கட்சி பிரதமர் ஜொஸ்பன், தற்போது மீண்டும் பத்திரிகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொதுமக்களது கவனத்திற்கு வந்திருக்கிறார். 2002 -ஏப்ரல் 21- ஜனாதிபதி தேர்தலில், கன்சர்வேட்டிவ் ஜனாதிபதி ஜாக் சிராக், மற்றும் புதிய பாசிச வேட்பாளரான ஜோன் மேரி லுபென் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு மிக வெட்கக்கேடான முறையில் தோல்வியடைந்த ஜொஸ்பன் அரசியல் வாழ்வில் இருந்து விலகிக்கொண்டார். ஏறத்தாழ பொது அறிக்கை எதையும் அவர் வெளியிடாது ''காலம் வரும்போது எனது கருத்துக்களை தெரிவிப்பேன்....'' என்று மட்டுமே தெளிவில்லாமல் கூறியிருந்தார். ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் தொழிற்சாலைகளின் தொடர்ச்சியான மூடல்களால் பிரதமர் ஜோன் பியர் ரஃப்ரன் அரசாங்கத்தின் மீது தோற்றுவித்திருக்கும் தற்போதைய நெருக்கடியை தெளிவாய் புரிந்துகொண்ட ஜொஸ்பன், மக்களது வளர்ந்து வரும் அதிருப்தியை சோசலிஸ்ட் கட்சிக்கு பின்னே திருப்பி விட வாய்ப்புள்ளதாக கருதுகின்றார்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி லு மொன்ட் பத்திரிகை ஜனவரி-31-ந் தேதி இதழில் முன்னாள் பிரதமர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ''பயன்படும் தகவல்கள்'' என்று தலைப்பிட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில், ஒரு சில அரிதாக அனைவருக்கும் தெரியும் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பதோடு, சீர்திருத்தவாத சோசலிசக் கட்சியின் அரசியல் வங்குரோத்து தன்மையை இக்கட்டுரை விளக்குவதுடன், உழைக்கும் மக்களது அக்கறைகளிலிருந்து அது ஒதுங்கிக் கொண்டதையும் படம் பிடித்து காட்டுகிறது.

ஜொஸ்பன் தனது தோல்விக்கான காரணங்களை ஆராய தொடங்குகிறார். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய சமுதாயத்தை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தனது அரசிடம் சரியான தீர்வு எதுவும் இருக்கவில்லை என்பதை மிக விரைவாகவே அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். தனது அரசு எதிர் கொண்ட அடிப்படை பிரச்சனைகளான, "பூகோளமயமாக்கம், ஐரோப்பா மற்றும் தேசிய அடையாளம், தனிமனித உணர்வுகள், சமுதாய வாழ்வு, சுதந்திரம், பாதுகாப்பு" போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை உருவாக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

ஆனால் தனது தேர்தல் தோல்விக்கு இவையே முக்கிய காரணிகள் என ஜொஸ்பன் கருதவில்லை. "ஒவ்வொருவரும் இதே பிரச்சனைகளையே சந்திக்கின்றனர்" எனக் கூறி தோல்விக்கு வழிவகுத்த காரணிகளை வேறெங்கோ தேடுகின்றார்.

ஓரளவிற்கு தான் தோல்விக்கு பொறுப்பு ஏற்றதாக ஒப்புக் கொண்ட ஜொஸ்பன், தனது சோசலிச கட்சி எந்த வகையிலும் தோல்விக்கு காரணமல்ல என்பதை தெளிவு படுத்தியுள்ளார். அரசியல் அணியில் இடம் பெற்றிருந்த மற்றக்கட்சிகளை குற்றம் சாட்டியதுடன், அவர்கள் மீது பழிபோட்டார். முதலில் கன்சர்வேட்டிவ்கள் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சிகளால் தோல்வியடைந்ததாக கூறியதோடு அதை பிற்போக்கு அரசியல் சூழ்நிலை என்று வர்ணித்ததுடன், சட்டம் ஒழுங்கு பற்றிய கூச்சலை ஊட்டி வளர்த்தார்கள் என்றும் விளக்கியுள்ளார். (அவரது சோசலிஸ்ட் அரசாங்கம் சட்டம் ஒழுங்கு பற்றிய பிரச்சாரத்தை மிக வேகமாக முடுக்கிவிட்டதில், முழுஅளவில் பங்கு பெற்றது என்பதை எளிதாக புறக்கணித்து விட்டார்)

ஜொஸ்பன் தனது முன்னாள் சகாக்களான, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமை கட்சி (Green) ஜோன் பியர் செவனுமோ இன் மக்கள் இயக்கம் போன்றவை இடதுசாரி வாக்குகளை பிரித்துவிட்டதாக குறை கூறினார். இது போன்ற இடதுசாரி கட்சிகள் அவரது கொள்கைகளில் இருந்து ஏன் அரசியல் அடிப்படையில் விலகிக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை விளக்குவதற்கு தவறிவிட்டார். அவரது அரசாங்கம் வலதுசாரி கொள்கையின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்திருந்த சாதனையானது, மக்களின் பரந்த தரப்பினரின் மத்தியில் ஆதரவை இழந்துவிட்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில் ஏனைய அரசியல் கட்சிகள் ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இறுதியில், தனது தோல்வியைப்பற்றி பகட்டாரவாரமாக பிரகடனப்படுத்துகையில், ''நம்பிக்கை கொள்வதற்கு எனக்கு உரிமை உண்டு, ஐந்தாண்டுகள் வரை நான் எனது நாட்டை கண்ணியமாக ஆண்டுவந்தேன், எனது சக பிரெஞ்சு மக்கள் என்னை தீவிர வலதுசாரியான அதிரடி பேச்சாளருக்கு பின்னால் தள்ளி விடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை'' எனக் கூறி பிரெஞ்சு மக்களின் நன்றி கெட்ட குணத்தின் காரணமாகவே தான் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டினார்.

வாக்காளர்கள் ஆதரவை இழந்ததற்கு தனது சோசலிஸ்ட் கட்சி காரணமல்ல என்பதை தனது கட்டுரை மூலம் விளக்கிவிட்டு ரஃப்ரன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி தனது சோசலிஸ்ட் கட்சியின் மேன்மையை நிலைநாட்ட முயல்கிறார். ரஃப்ரனை ஆதரிப்பவர்களுக்கும், வாக்காளர்களது விருப்பங்களுக்கும் இடையில் மிகப்பெரிய அளவிற்கு முரண்பாடுகள் தோன்றியிருப்பதாக அவர் கூறுகிறார். இந்த முரண்பாடுகளின் விளைவாக இன்றைய பிரதமர் மிகத் தெளிவான ஒருங்கிணைந்த பொருளாதார கொள்கை நிலையை மேற்கோள்ள இயலவில்லை என்று ஜொஸ்பன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ரஃப்ரன் தனக்கு மக்களிடையே செல்வாக்கு உயர வேண்டும் என்பதற்காக சட்டம், ஒழுங்கு பற்றிய கூக்குரலை அதிகமாக கிளப்பிக் கொண்டிருப்பதாகவும், தற்போது ரஃப்ரன் அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் முற்றிக்கொண்டு வருவதால் "இடதுசாரி அணியைச் சார்ந்தவர்கள், ஒரு மாற்றுத்திட்டத்துடன் தயாராக இருக்கவேண்டும்" என்றும் கூறினார்.

"இடது" கட்சிகள் மக்கள் செல்வாக்கை நிலை நாட்டுவதை விட வேகமாக ரஃப்ரன் அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து கொண்டு வருவதாக ஜொஸ்பன் கவலை தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் சோசலிஸ்ட் கட்சிக்கு ஜொஸ்பன் முன்மொழிந்ததாவது, முதலாளித்துவ அரசியல் அமைப்பு ஒட்டுமொத்தமாக மதிப்பிழந்து வருவதை எப்படி தடுப்பது என்பதாகும்.

சிராக்கின் UMP- கட்சியினர் வலதுசாரிகளை ஒன்று திரட்டியிருக்கின்ற பாணியில் பிரெஞ்சு இடதுகள் ஒன்று படவேண்டுமென்று ஜொஸ்பன் அழைப்புவிட்டார். நடப்பு சோசலிஸ்ட் கட்சி தலைவர் பிரான்ஸ்சுவா ஹொலண்டை அவர் ஏற்றுக்கொண்டார். முதலாளித்துவ சார்பான சோசலிஸ்ட் கட்சியினர் "சீர்திருத்த மற்றும் ஜனநாயக சோசலிசத்தை" கடைபிடித்து வருவதுடன், இந்த அணியினர் ''அதிகாரப்பாணியிலான மற்றும் புரட்சிகர சோசலிசத்திற்கு'' எதிராக நடைபெற்ற போராட்டத்தில் திட்டவட்டமாக வெற்றிபெற்றிருப்பதாக ஜொஸ்பன் விளக்கினார். இந்தக் கருத்தை அவர் கூறியிருப்பது சோசலிஸ்ட் கட்சியிலுள்ள சில "இடது" சக்திகளை அடக்குவதற்குத்தான். ஜுலியன் டிரே, மற்றும் ஜோன் லூக் மேலோன்சோன் போன்ற "இடது" சக்திகள் ஹொலண்ட் மற்றும் வர்த்தகர்களுக்கு ஆதரவான லோரோன் ஃபாபியுசின் கொள்கையிலிருந்து வார்த்தையளவில் வேறுபடுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

தனது அரசாங்கத்தின் கொள்கைகள் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ''நான் ஐந்தாண்டுகள் பதவியில் இருந்திருக்கிறேன். என்னுடைய சாதனையை எவரும் ஆட்சேபித்ததில்லை, ஆட்சேபிக்கவும் முடியாது'' என்று ஜொஸ்பன் குறிப்பிட்டார். அவர் தனது மக்கள் செல்வாக்கை இழந்த வாரத்திற்கு 35-மணிநேரம் என்ற சட்டத்தை நியாயப்படுத்தினார். இந்த சட்டத்தின் மூலம் கம்பெனிகள் மிகக்கடுமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அதிகமாக வேலை செய்யும் நேரத்தை உயர்த்தின. வலதுசாரி உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்கோசி இது சம்மந்தமாக கோர்சிகன் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அவர் மேற்கொண்ட முயற்சிகளை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் ''தலைமையின்'' அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். தனது அரசில் "வலுவானதும் ஈர்ப்பு மிக்கவர்களும்" இடம் பெற்றிருந்தார்கள் என குறிப்பிட்டார். தற்போது ரஃப்ரனுக்கு எதிராக நடைபெறும் ஆர்பாட்டங்களில் சோசலிஸ்ட் கட்சி அரசியல்வாதிகள் கேலி செய்யப்படுகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.

தனது சோசலிஸ்ட் கட்சி மேற்கொண்ட வலதுசாரி நோக்குநிலை சரியானவைதான் என்பதை நடப்பு நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டிவருவதாக வலியுறுத்திக்கூறி ஜொஸ்பன் தனது கட்டுரையை முடிக்கிறார். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தமது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவைதான் என்று வாதிட்டிருக்கிறார். போலீஸார் வேவுபார்பதையும், இளைஞர்களுக்கான சிறை நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டதையும், நியாயப்டுத்தினார். அவை சரியான நடவடிக்கைகள் தான் என்பதை பிந்திய நடப்புகள் நிரூபிப்பதாக குறிப்பிட்டார். சமுதாய பிரச்சனைகளில் சற்று அசட்டுத்துணிச்சலோடு நடவடிக்கை எடுத்திருக்கலாம். அரசாங்கம் வகுக்கும் கொள்கைகள் நிறைவேற்ற முடிந்தவையாகவும், பயனுள்ளவையாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். தற்போது ஈராக் பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவுடன் பிரான்ஸ் மோதிக்கொண்டிருப்பதுடன், கொந்தளிப்பு முற்றிக்கொண்டிருக்கின்றது. பிரான்ஸ் நாட்டு பாரம்பரிய இடதுசாரி முதலாளிகள் சுதந்திர ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு தொழிற்துறையை பலப்படுத்தி வருகின்றனர். அதை நியாயப்படுத்துகின்ற வகையில் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஜொஸ்பன் அறிக்கையை வலது மற்றும் இடதுகள் மூடிமறைக்க முயற்சித்தனர். வலதுசாரி தினசரி பத்திரிகையான லு பிகாரோ ஜொஸ்பன் அறிக்கையை மிக நீண்டது, விறுவிறுப்பு இல்லாதது, மிகக் கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான அறிக்கை என்று வர்ணித்திருக்கிறது. ரஃப்ரன் அரசாங்கத்தின் அரசியல் சீரழிவு குறித்து அவர் கூறியிருப்பதில் எதுவும் புதுமையில்லை என்று அந்த பத்திரிகை வர்ணித்திருந்ததுடன், அவரது கட்டுரையை கேலி செய்திருக்கிறது. ''பொருளாதார பிரச்சனைக்கு முகம்கொடுத்துக்கொண்டு பிரெஞ்சு மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை திணிக்கும்" ரஃப்பரின் அரசாங்கம் எப்போது கவிழும், எப்போது செல்வாக்கு குறையும் என்று காத்துக்கொண்டிருப்பதை தவிர புதிய ஆலோசனை எதையும் அவர் கூறவில்லை. 'லியோனல், எம்மை ஆச்சரியப்படுத்து' என கத்திக்கொண்டு கடந்த கோடைகாலத்தில் இருந்து சோசலிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் இதற்குத்தானா காத்துக்கொண்டிருந்தார்கள்'' என்று அந்தப் பத்திரிகை கேலியாக குறிப்பிட்டிருந்தது.

ஜொஸ்பன் அறிக்கையில் இன்றைய அரசாங்கம் உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுச் சென்று கொண்டிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ரஃப்ரன் தரப்பிலிருந்து பதில் அடக்கி வாசிப்பதாக அமைந்திருக்கிறது. இன்றைய பிரதமர், முன்னாள் பிரதமரின் அறிக்கை பற்றி கருத்துத்தெரிவிக்கும்போது ''ஒன்றுமில்லை அல்லது அதில் இடம்பெற்றிருப்பது மிகக் குறைவு'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். லு மொன்ட், அரசாங்கத்தின் ''முன்னெச்சரிக்கை அல்லது முன்கூட்டிய திட்டமிட்ட மெளனம்'' பற்றி குறிப்பிட்டிருக்கிறது.

வலதுசாரி அணியைச் சார்ந்தவர்கள் ஜொஸ்பன் அறிக்கை பற்றிக் கருத்துத்தெரிவிக்கும்போது தொழிலாள வர்க்கத்தோடு வாய்ச்சொற்களில் சமரசம் பேசும் ஜொஸ்பனின் முயற்சி காலம் கடந்துவிட்ட ஒன்று மற்றும் காலாவதியானது என விளக்கியுள்ளனர். பாராளுமன்றத்தில் UMP- குழுவைச்சேர்ந்த துணைத்தலைவர் குளோட் கோஸ்கென், ஜொஸ்பன் தனது "முன்னையகால வார்த்தை பிரயோகங்களின் மூலம் சோசலிஸ்ட் கட்சியை தனிமைப்படுத்துவதாகக்" குறிப்பிட்டார்.

சோசலிஸ்ட் கட்சியில் (PS) ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டிருக்கும், கோஷ்டிகள் ஜொஸ்பன் அறிக்கையை பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் ஜொஸ்பன் தற்போது செல்வாக்கு இல்லாதவர், மற்றும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் ஜொஸ்பன் அறிக்கையை பெரிதுபடுத்துவதால் பாதிப்பு ஏற்படலாம். ஜொஸ்பன் ஆதரவிற்காக ஹொலண்ட் நன்றி தெரிவித்ததுடன், அரசியல் வாழ்வில் இனி அவருக்கு எந்தவிதமான பங்கும், பணியும் இல்லை என்று கருத்து தெரிவித்தார். ஜொஸ்பன் குறிவைத்த சில சோசலிஸ்ட் கட்சி "இடது" அரசியல்வாதிகளான வின்சென்ட் பெய்லோன் போன்றவர்கள் அவரது பகுப்பு ஆய்வை மதிப்பதாகவும் ஆனால் அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டனர். ''தான் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்ததை செய்து விட்டார்'' என பாபியுஸ் கருத்து தெரிவித்தார்.

ஜொஸ்பன் கட்டுரையின் மீது நீண்ட பதிலை வெளியிட்டிருக்கின்ற ஒரே செல்வாக்குள்ள அரசியல் தலைவர் செவனுமோ, லு மொன்ட் இல் அவர் தனது சிந்தனைகளை ஓடவிட்டிருக்கிறார். ''சென்று கொண்டேயிருங்கள், இங்கே ஒன்றையும் காணோம்'', என தலைப்பிட்டு பரவலாக தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தனக்குள்ள கருத்து வேறுபாடுகள் எதையும் மறுக்கவில்லை. ஜொஸ்பன் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்களை புள்ளி விபரங்களுடன் விளக்கியிருக்கிறார். சோசலிஸ்ட் கட்சி இடது சிறிய கட்சிகளை தன்பக்கம் வைத்துக்கொள்வதில் தவறிவிட்டதால் தான் தோல்வி ஏற்பட்டது, தான் போட்டியிட்டதால் அல்ல என்று செவனுமோ விளக்கியிருக்கிறார்.

தொண்ணூறுகளின் கடைசியில் அதிக அளவில் சாதகமான பொருளாதார சூழ்நிலைகள் நிலவியபோதும் ரஃப்ரன் பாணியிலான பரவலான சிக்கன நடவடிக்கைகள் எடுப்பதை ஜொஸ்பன் தடுத்துவந்தார் என்று செவனுமோ மிகச் சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இது நிலை பெற்றுவிட்ட அரசியலின் வங்குரோத்தினைக் (வெற்றுத்தன்மையை) காட்டவில்லை, ''உற்சாகத்தை உருவாக்கக்கூடிய ஒரே திட்டமான'' ''குடியரசு'' தேசிய உணர்வை தூண்டிவிடுவதற்கு அது ஒரு சாக்காகும் என்பதாக செவனுமோ கருத்துதெரிவித்திருக்கிறார்.

ஜொஸ்பனின் கடிதம் பிரான்ஸ் ஆளும் சலுகைபெற்ற வட்டாரங்களில் ஒரு நிகழ்ச்சியாகவே கருதப்படவில்லை. அந்த அளவிற்கு அந்த வட்டாரங்கள் அவரது கடிதத்தை அலட்சியப்படுத்திவிட்டன. ஆனால் பிரான்சிலும், உலகில் எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அந்தக் கடிதம் அமைந்திருக்கிறது. அரசியல் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள அதிகாரபூர்வமான இடதுகளுக்கு நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் எந்த தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்த வழி இராணுவ மயமாக்கம், ஜனநாயக உரிமைகளை கட்டுபடுத்துவது, தேசிய உணர்வைத் தூண்டுவது பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்வது மற்றும் பொது மேடைகளில் விவாதம் நடத்துவதை மறைமுகமான முயற்சிகள் மூலம் அடக்குவது, ஆகியவைதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved