World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Canadian law professors declare US-led war illegal

அமெரிக்கா நடத்தும் போர் சட்ட விரோதமானது:
கனடா சட்ட வல்லுனர்கள் அறிவிப்பு

By Henry Michaels
22 March 2003

Back to screen version

அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் மீது நடத்தப்படும் போர் சட்ட விரோதமானது என கனடாவைச் சேர்ந்த 31 சர்வதேச சட்டப் பேராசிரியர்கள் பகிரங்க கடிதம் ஒன்றை புதன்கிழமையன்று வெளியிட்டனர். 15 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த இந்த பேராசிரியர்கள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் போர் ஆரம்பித்துவிட்டதாக அறிவித்ததற்கு சற்றுமுன்னர் இந்த பகிரங்க கடிதத்தை வெளியிட்டனர்.

அமெரிக்க தாக்குதல், ''சர்வதேச சட்டத்தை அடிப்படையிலேயே மீறுகின்ற செயலாக அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு, பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சட்ட நடைமுறைகளின் கட்டுக்கோப்பை கடுமையாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கின்றது'' - என்று அந்த கடிதம் சுட்டிக்காட்டுகின்றது.

இந்தத் தாக்குதல் ஐ.நாடுகள் சாசனத்தை மீறுகின்ற செயலாகும். தற்காப்பிற்காகவும், அல்லது சர்வதேச அமைதியை காப்பதற்கு அல்லது மீட்பதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை அங்கீகாரம் அளிக்கும் நேரத்தில் இந்த இரண்டு விதிவிலக்குகளைத் தவிர, மற்றபடி எந்த நாடும் போருக்கு செல்வதை ஐ.நா. சாசனம் தடுக்கிறது.

பேராசிரியர்கள் இந்த போரை "மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகத்தால் கண்டித்ததோடு இந்தப் போரின் இராணுவவாத மற்றும் காலனித்துவ தன்மையை சுட்டிக்காட்டி உள்ளனர். ''அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேற்க்கொண்டுள்ள சட்ட விரோத நடவடிக்கை நம்மை மிக எளிதாக ஏகாதிபத்திய அபிலாஷைகள் மற்றும் நிர்பந்த படைப்பல பிரயோக அடிப்படையிலான சர்வதேச நடைமுறைக்கு இட்டுச் சென்றுவிடும்'' என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களும், ஐ.நா பாதுகாப்பு சபையின் 1441-வது தீர்மானப்படியும் மற்றும் இரண்டு முன்னைய தீர்மானத்தின்படியும் தாங்கள் ஈராக் மீது படையெடுத்து செல்வது நியாயம் என்று வாதாடுகின்றனர். முன்னைய இரண்டு தீர்மானங்களும், குவைத்தை ஈராக் பிடித்துக்கொண்டதை முடிவிற்கு கொண்டுவர படைபலத்தை பயன்படுத்த அங்கீகாரம் அளித்தது. மற்றும் இது 1991வளைகுடாப் போருக்குப் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகளை விதித்ததுடன், பாரிய அழிவிற்குரிய ஆயுதங்களை ஒழித்துக்கட்ட ஈராக்கை வலியுறுத்துகிறது.

இந்த பகிரங்க கடிதத்தை எழுதிய பேராசிரியர்களில் ஒருவரான ஒட்டாவா பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் ஜோன் கூரி (John Currie) இந்த விவாதங்கள் அடிப்படையிலேயே தவறானவை என்று குறிப்பிட்டிருக்கிறார். 1991 தீர்மானத்தில், பாதுகாப்பு சபை இந்தப் பிரச்சனையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக விளக்கப்பட்டிருக்கிறது. மற்றும், இன்றைய தீர்மானத்தை செயல்படுத்துவதற்கு வேறு எந்த நடவடிக்கை தேவைப்படுகிறதோ அவற்றை மேற்க்கொள்ளவும் பாதுகாப்பு சபையே முடிவு செய்தது. அமெரிக்காவோ, பிரிட்டனோ அல்லது வேறு எந்த நாடுமோ அவர்களது சொந்த விருப்பத்தில் முடிவு செய்ய முடியாது. பாதுகாப்பு சபைதான் படை பலத்தை பயன்படுத்தி தீர்மானத்தை செயல்படுத்துவதற்கு வழிகாணவேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக பேராசிரியர் ஜோன் கூரி விளக்கம் அளித்தார்.

புஷ் மற்றும் பிளேயரின் அரசுகள் ஐ.நா.பாதுகாப்பு சபையில் உள்ள 15 வாக்குகளில், நான்கு வாக்குகளுக்கு மேல் பெறமுடியாது என்று தெரிந்துகொண்டு அந்த முயற்சியில் தோல்வி கண்டு, ஐ.நா. பாதுகாப்பு சபையில் புதிய தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சியை திங்கள் அன்று கைவிட்டன. அதுமட்டுமல்ல, பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான பிரான்சினதும், ரஷ்யாவினதும் வீட்டோ ரத்து அதிகாரத்தை எதிர்கொண்டதுடன், மற்றும் ஜேர்மனியினதும், இதர பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளினது எதிர்ப்பையும் சந்தித்தது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு, தெரிவிக்கப்படும் எதிர்ப்பில் சட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஏனென்றால், ஐ.நா. சாசனத்தில் தெளிவாக ஒரு விதி இயற்றப்பட்டிருக்கிறது. ''சமாதான முறையில் தீர்வு காண்பதற்கு எல்லாவிதமான வழிமுறைகளையும் பயன்படுத்தி அவை தோல்வியடைந்துவிட்டன என்று தெளிவாக தெரியும்வரை, படை பலத்தை பயன்படுத்தாது உத்திரவாதம் செய்து தருவதற்கான சட்டப்பூர்வ உரிமை பாதுகாப்பு சபை உறுப்பினர்களுக்கு உண்டு'' என்று ஐ.நா. சாசனம் தெளிவுபடுத்துகிறது.

இந்த பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர்களில் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஈர்வின் கோட்லர் (Irwin Cotler) இடம்பெற்றிருக்கிறார். அவர், மேற்கில் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் சர்வதேச சட்டத்தில் கனடாவின் தலை சிறந்த நிபுணர். அவர், ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, ஒன்றை தெளிவாக கூறினார். ''அமெரிக்கா தற்காப்பிற்காக, நடவடிக்கை எடுத்துக்கொண்டதாக, சமாதானம் கூறிவிட முடியாது. ஏனென்றால், ஈராக் தன்னை தாக்கக்கூடும் என்று தெளிவாக தெரிந்தால் மட்டுமே அமெரிக்கா தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியும்'' என விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பேராசிரியர் கனடாவின் பிரதமர் ஜோன் கிரிட்டியனின் (Jean Chrétien) லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்தான் ஆனால், கிரிட்டியனும் அவரது சக அமைச்சர்களும் இந்தப் போரை சட்ட விரோதமானது என்று கண்டிக்க மறுத்துவிட்டனர்.

ஜெனிவாவை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற சர்வதேச நீதி நிபுணர்கள் ஆணைக்குழுவும் (The International Commission of Jurists- ICJ) அமெரிக்காவும், பிரிட்டனும் சட்ட விரோத படையெடுப்பிற்கு திட்டமிடுவதாகவும், அது ஒரு ஆக்கிரமிப்பு போர் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த அமைப்பில் உலகின் முன்னணி சர்வதேச சட்டம் மற்றம் மனித உரிமைகள் தொடர்பான 60 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர், லூயி ரோஸ்வால் பெக் (Louise Doswald-Beck) ஐக்கிய நாடுகள் சபை படைபலத்தை பிரயோகிப்பதற்கும், தடை விதித்துள்ளதுடன், தற்காப்பிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறது. ஒவ்வொரு நாடும் தான் விரும்புகின்ற நேரத்தில் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே ஐ.நா. சாசனத்தில் இந்த விதி இயற்றப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பணியாற்றும் சட்டநிபுணர்கள் இந்தப் போர் சட்ட விரோதமானது என்று அறிவித்திருக்கின்றனர். அமெரிக்கா முழுவதிலும் உள்ள 87 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த 315- சட்ட ஆசிரியர்கள் ஜனவரி மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அமெரிக்காவை தாக்காத ஒரு நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்புதல் இல்லாமல் அமெரிக்கா போர் தொடுக்குமானால் அது சட்ட விரோதமான நடவடிக்கையாக ஆகிவிடும். அந்த நடவடிக்கை அமெரிக்கா கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின் கடமைகளை அமெரிக்காவினதும் மற்றும் சர்வதேச சட்டத்தையும் மீறிய செயல் என்றும் அந்த அறிக்கை கூறியிருந்தன.

அந்த அறிக்கையின் வாசகம் வருமாறு: ''அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டு, அமெரிக்காவின் செனட் சபை தனது ஒப்புதலை அளித்த ஒப்பந்தங்கள் நமது அரசியல் சாசனப்படி நாட்டின் மிக உயர்ந்த சட்டத்தின் ஒரு பகுதியாகும். இவ்வாறு நமது அரசியல் சாசன சட்டமே விளக்கம் தருகிறது. ஐ.நா. அமைப்பு சாசனத்தில் மிகப்பெரும் பகுதி நம் நாடு எழுதியது. மற்றும் இது 1945 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்டு அமெரிக்க செனட் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயுதத் தாக்குதல் நடைபெற்றால் மட்டுமே, தவிர எந்த நாடும் ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம் இல்லாமல் போரில் ஈடுபடவோ அல்லது போர் அச்சுறுத்தலில் இறங்கவோ கூடாது என்று அமெரிக்கா ஒப்புகொண்ட ஐ.நா. சாசன விதி தெளிவுபடுத்துகிறது. ஜனாதிபதி புஷ் நமது அரசியல் சட்டத்தை நிலைநாட்டுவதாகவும், காப்பாற்றுவதாகவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும், நமது ஒப்பந்தங்களின் கடமைகளை மீறுவதற்கு உரிமை உண்டு என்று வாதாடுகிறார். மற்றும் ஐ.நா.வின் ஒப்புதல் உடனோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ ஈராக் மீது போரை- போர் என்கிற பேரழிவை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்'' இவ்வாறு 315 அமெரிக்க சட்ட பேராசிரியர்கள் ஜனவரி மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

பிரிட்டனில் மிகப்பெரும்பாலான சர்வதேச வக்கீல்கள் சென்ற வாரம் பிளேயர் அரசாங்கம் ஐ.நாடுகள் சபையின் 1441ம் தீர்மானத்துக்கு அளித்துள்ள விளக்கத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்த தீர்மானப்படி ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்கு சட்டபூர்வ அதிகாரம் இருப்பதாக பிளேயர் அரசு கூறியிருந்தது.

1441 ஆவது தீர்மானம் ஈராக் ஆயுத களைவு செய்துக்கொள்ள தவறினால் ''கடுமையான விளைவுகள்'' வரும் என்றுதான் எச்சரிக்கை செய்திருக்கிறது. வழக்கமாக ஐ.நா. தீர்மானங்களில் காணப்படும் ''எல்லா வகையான வழிமுறைகளையும்'' கையாண்டு ஆயுதக்குறைப்பு செய்யவேண்டும் என்ற வாசகம் இல்லை. இதே வாசகம் இருந்தால்தான் படைபலம் கொண்டு ஆயுதக்குறைப்பு செய்யாத நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதே வாசகத்தை பிரான்சும் ரஷ்யாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வாசகத்தை அமெரிக்கா தீர்மானத்தில் சேர்த்திருக்குமானால் பிரான்சும், ரஷ்யாவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தங்களது வீட்டோ ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தள்ளுபடி செய்திருக்க முடியும் என்று பேராசிரியர் நிகோலஸ் கிரீப் (Nicholas Grief) கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் பாரிஸ்டர் மட்டுமல்லாது Bournemouth பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை நிதித்துறை தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

அணு ஆயுதங்கள் குறைப்புக்கான சட்டபூர்வ எதிர்ப்பு இயக்கம் நடத்திவரும் பாரிஸ்டர் Rabinder Singh( QC) மற்றும் Charlotte Kilro ஆகிய இருவரும், வேறு இரண்டு முக்கிய காரணங்களால் 1441 ஆவது தீர்மானம் போர் ஆரம்பிப்பதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை என கருத்து தெரிவித்து உள்ளனர். முதலாவது காரணம் சர்வதேச சட்ட கொள்கை அடிப்படையில் எந்தவொரு நாடும் அடிப்படையில் படைபலத்தை பயன்படுத்துவதை தடை செய்கிறது. இரண்டாவது காரணம் ''தெளிவான கூட்டு அங்கீகாரம்'' இல்லாமல் படை பலத்தை பயன்படுத்துவது ஐ.நா. சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும் மற்றும் சர்வதேச சட்டத்துக்கும் முரணானது என்று இரு நிபுணர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஐ.நா. சாசனத்தின் 41 மற்றும் 42வது பிரிவுகள் போர் கடைசி ஆயுதம்தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சர்வதேச சட்டப்படி திடீர் தாக்குதல் நடத்துவதற்கு பாரம்பரியமாக அனுமதி உண்டு. ஈராக் இத்தகைய அச்சுறுத்தலாக இல்லை எனவும் குறிப்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அந்நாட்டில் (ஈராக்கில்) பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சட்ட அறிஞர்கள் இதைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொது சர்வதேச சட்ட பேராசிரியராக பணியாற்றி வரும் வாகன் லோவ் (Vaughan Lowe) திங்கள் இரவு ஜனாதிபதி புஷ் ஈராக்கிற்கு 48 மணிநேர இறுதிக்கெடு விதித்து ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ள இரண்டு இதர ஐ.நா. தீர்மானங்கள் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். 1991 வளைகுடாப் போர் முடிவுற்றபோது ஐ.நா. தீர்மானம் 687 ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது குவைத் போர் தீர்மானம் 678 இனை இரத்து செய்கின்றது. அத்துடன் இத்தீர்மானம் அமெரிக்கா உள்பட பல நாடுகள் அடங்கிய கூட்டினால் உருவாக்கப்பட்டது. இக்கூட்டு இப்போது இல்லை. அது எப்படி இருந்தாலும் 687 ஆவது தீர்மானம் படை பலத்தை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற அதே பேராசிரியர் விளக்கம் தந்திருக்கிறார்.

சதாம் ஹூசேனை பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனக் கூறி புஷ் மற்றும் பிளேயர் ஆகிய இருவரும் சட்டத்தை குளம்பிய குட்டையாக்கிவிட்டனர் என்று பேராசிரியர் வாகன் லோவ கருத்து தெரிவித்துள்ளார். படை பலத்தை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் செய்வதற்கு எந்த விதமான முன்னுதாரணமான சட்டமும் இல்லை. இது ''மிக ஆபத்தானது'' என்று பேராசிரியர் வாகன் லோவ தெரிவித்துள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved