World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The US war against Iraq: the historical issues

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்

By Nick Beams
24 March 2003

Back to screen version

இது சென்ற வாரம் சிட்னியிலும் மெல்போர்னிலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் (அவுஸ்திரேலிய) சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு உறுப்பினருமான நிக் பீம்ஸ் ஆல் நிகழ்த்தப்பட்ட உரை:

ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதலின் வெடிப்பானது உலக வரலாற்றின் திருப்பு முனைகளில் ஒன்றாக தெளிவாக இருக்கிறது. இதுபோல் உலக நடப்புகள் அதே போன்று மீண்டும் அமையாது என்று அந்தப் புள்ளியிலிருந்து ஒருவர் உண்மையாயக் கூற முடியும். இந்தப் போர் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியையும் வெறுப்பையும் அடையச் செய்திருக்கிறது. அமெரிக்காவிலும் இத்தகைய வெறுப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருப்பது குறைவு அல்ல.

ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் இந்த ஏகாதிபத்திய வன்முறை வெடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈராக் மக்களது எதிர்காலம் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் எல்லா மக்களுடைய எதிர்காலமும் இதன் மூலம் பணயம் வைக்கப்பட்டு விட்டது என்று மிகச் சரியாக உணர்ந்துள்ளனர்.

புதிய சகாப்தம் பிறந்துவிட்டது. அல்லது இதை மிக சரியாக சொல்தென்றால், இரண்டு உலகப் போர்களுக்கும், ஏகாதிபத்திய வன்முறைக்கும் காலனி ஆதிக்கத்திற்கும், பாசிசத்திற்கும் இராணுவமயத்திற்கும் வித்திட்ட உலக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்குகள், உலக அரசியலின் மேற்பரப்பில் மீண்டும் வெடித்திருக்கின்றன.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர், மிகப் பெரிய புரட்சியாளரான ரோஸா லுக்சம்பேர்க் அன்றைய நாளின் நடப்பில் உள்ள பிரச்சனை சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என வரையறை செய்தார். முதலாவது உலகப்போர் தொடங்கிய கட்டத்தில் வரையறை செய்த இந்த சொற்கள் நீண்ட காலமாக பழைய வரலாற்று சகாப்தத்தை குறிப்பதாகவே நாம் கருதி வந்தோம். ஆனால் இன்றைய தினம் அதே பிரச்சினைகள் புதிய தலைமுறையை எதிர்நோக்கியுள்ளன. முன்னர் கோடிக்கணக்கான மக்கள் எப்படி மனித குலத்தின் சோசலிச எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்களோ அதே விஷயங்களை இன்றைய தினம் புதிய தலைமுறை எதிர்கொள்வதால், அது தன்நிலைப்பாட்டை விளக்கியாக வேண்டிய நிலையில் உள்ளது.

போர் எதிர்ப்பு இயக்கத்தினுள்ளேயே ஏகாதிபத்திய வல்லரசுகளின் பொய்களும் தவறாக திரித்தல்களும் அம்பலமாதல் --தவறான பதிவேடுகளும் போலி உரைகளை திரும்பத் திரும்ப கூறி வருவதும் இரட்டை வேடமும் அகந்தைப் போக்கும் திரும்பத் திரும்ப தொடர்ந்து கொண்டே இருப்பதால்-- இந்த போருக்கான உண்மையான நோக்கங்களை கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் நமக்கு வந்துவிட்டது. இதன் விளைவாக, இந்தப் போரின் அடிப்படையாக இருப்பது எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என்ற பரந்த அளவில் பரவிய உணர்வு உள்ளது.

இதில் சம்பந்தப்பட்டிருக்கின்ற எண்ணெய் வளம் கணிசமானது. உலகில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் சேர்ம இருப்பில் ஒவ்வொரு மூன்று பீப்பாய்களிலும், ஒன்று சவுதி அரேபியாவிலும் மற்றும் ஈராக்கிலும் இருந்து கிடைக்கிறது. சவுதி அரேபியாவில் மட்டும் 259 பில்லியன் பீப்பாய்கள் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் சேர்ம இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஈராக்கில் 112 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் சேர்ம இருப்பு உள்ளது. ஈராக்கில் கிடைக்கின்ற எண்ணெய் வளம் மிக அதிகமாக இருக்கலாம் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மொத்தம் ஈராக்கில் 432 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11, நிகழ்ச்சி நடப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே அமெரிக்காவின் ஆளும் மேல்தட்டைச் சார்ந்த சிலர், மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈராக் மீது தாக்குதல் நடத்துவது என்று தெளிவாக முடிவு செய்துவிட்டனர்.

2001 ஏப்ரலில், புஷ் நிர்வாகத்திற்கு ஒரு அறிக்கை கிடைத்தது. "எரிபொருள் பாதுகாப்பு" என்ற தலைப்பில், ஜேம்ஸ் ஏ.பேக்கர் பொதுக் கொள்கைக்கான அமைப்பு (James A. Baker Institute for Public Policy) இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறது. மூத்த புஷ் நிர்வாகத்தில் ஜேம்ஸ் ஏ.பேக்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர். இளைய புஷ் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் மூலம் வெள்ளை மாளிகையில் அதிகாரத்தைக் கொள்ளையிட்டு தனதாக்கிக் கொள்ள பெரிதும் உதவியவர். அந்த அறிக்கை தயாரிப்பதற்கு துணை ஜனாதிபதி செனி ஆல் கட்டளையிடப்பட்டிருந்தது. அது கூறியதாவது:

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளில் குழப்பத்தை விளைவிக்கும் சக்தியாக ஈராக் விளங்குகின்றது. மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச நடைமுறைகளிலும் குழப்பத்தை ஈராக் உருவாக்கி வருகிறது. மேலும், சர்வதேச சந்தைகளுக்கு மத்திய கிழக்கிலிருந்து சீராக எண்ணெய் வந்து சேருவதிலும் ஈராக் குழப்பத்தை விளைவிக்கும் சக்தியாக இருக்கின்றது. எனவே அமெரிக்கா உடனடியாக ஈராக் தொடர்பாக தனது கொள்கையை மறுஆய்வு செய்யவேண்டும். இந்த மறு ஆய்வு இராணுவ, எரிபொருள் மற்றும் அரசியல்/ராஜதந்திர மதிப்பீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கவேண்டும்.

ஏற்கனவே 1998ல் புஷ் நிர்வாகத்தில் இடம்பெறவிருந்த முக்கிய அதிகாரிகள் ஈராக்கில் "ஆட்சி மாற்றம்" ஏற்படுத்துவது அமெரிக்க கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவது மிக முக்கியமானதுதான் என்றாலும் அதற்கப்பாலும் அமெரிக்காவின் நோக்கம் நீண்டு செல்கிறது. அது பரந்த பிரச்சினையுடன் கட்டுண்டிருக்கிறது. அமெரிக்கா தனது பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துவதற்கான உந்தல், உலகை தனது நலன்களுக்காக மறுவடிவமைப்பதையும் மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தனது போட்டியாளர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு எதுவும் தோன்றாமல் தடுப்பதையும் மையமாகக் கொண்டது.

அமெரிக்க பேராசிரியர் மைக்கேல் க்ளார், போருக்கான ஆதாரங்கள் (Resource Wars) என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதைப் போல் "ஈராக்கை கட்டுப்படுத்துவது எண்ணெய் வளம் ஒரு ஆதிக்க சக்தி என்ற அடிப்படையில்தான், எண்ணெயை எரிபொருள் என்ற வகையில் அல்ல. பாரசீக வளைகுடா பகுதியினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் சீனாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உள் எண்ணத்தை தெளிவாக விளக்குவதாகும். இது எண்ணெய் விநியோக குழாய்களில் எமது கையை வைத்திருப்பது போலாகும். (Cited in Robert Dreyfuss, "The Thirty Year Itch", Mother Jones, March/April 2003).

இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய வரலாறு பற்றிய ஆய்வானது, மத்திய கிழக்கு எண்ணெய் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரியும். இந்த வெளியுறவுக் கொள்கை மிகத் தொலைநோக்கான அரசியல் விளைவுகளை உள்ளடக்கியுள்ளது.

போருக்குப் பின்னர், அமெரிக்கா சவுதி அரேபியா ஆட்சியுடன் தனது உறவுகளை பலப்படுத்திக்கொண்டது. அந்த பிராந்தியத்தில் தன்னை சார்ந்திருக்கின்ற ஆட்சிகளை உருவாக்க முயன்றது. தேசியவாத மொசாடேக் (Mossadegh) அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 1953ம் ஆண்டு சிஐஏ ஈரானில் தலையிட்டது. 1960களில் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியையும் மற்றும் இதர இடதுசாரி கட்சிகளையும் தாக்குகையில், அமெரிக்கா சதாம் ஹூசேனுக்கும் அவரின் பாத் கட்சியை சார்ந்தவர்க்கும் ஆதரவு அளித்தது. 1970களில் எண்ணெய் விலைகள் மும்மடங்கானபொழுது, அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றி வந்த ஹென்றி கிசிங்கர் (Henry Kissinger) மத்திய கிழக்கு எண்ணெய் கிணறுகளை அமெரிக்கா கையகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தனது கருத்தை வலியுறுத்தி வந்தார்.

ஜேம்ஸ் ஆஸ்கின்ஸ் (James Askins) சவுதி அரேபியாவில் முன்னர் அமெரிக்க தூதராக பணியாற்றியவர். அப்போது ஹார்பர்ஸ் மேகஸின் (Harper's magazine) என்ற அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சஞ்சிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையை நினைவுபடுத்தி இப்போது எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையின் தலைப்பு "அரபு எண்ணெயை கைப்பற்று" என்பதாகும். இதே கருத்துள்ள கட்டுரைகள் வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்தன. அத்தகைய கருத்துக்களை சொல்லுகின்ற எவரையும் பைத்தியக்காரன் என்றோ, ஒரு குற்றவாளி என்றோ அல்லது சோவியத் யூனியனின் ஏஜன்ட் என்றோ கூறி வந்தார்கள் என்பதை தொலைக்காட்சி பேட்டியில் ஆஸ்கின்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். அன்றைய அரசாங்க செயலாளர் ஹென்றி கிசிங்கர் அத்தகைய கட்டுரைகளுக்கான அடிப்படை தகவல்களை தந்திருக்கிறார் என்பது இப்போது தெரிகின்றது.

1979ல் ஈரான் மன்னர் ஷா பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டபோது, அமெரிக்கா தனது நேரடி இராணுவ தலையீட்டிற்கான தயாரிப்புக்களை முடுக்கிவிட்டது. அன்றைய ஜனாதிபதி கார்ட்டர் 1980 ஜனவரியில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போது கீழ்கண்டவாறு கூறினார்.

"நம்முடைய நிலையை மிகவும் தெளிவாகக் கூறிவிடுகின்றோம். வளைகுடா பிராந்தியத்தில் எந்த நாடாவது, எந்த வெளிநாட்டுச் சக்தியாவது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயலுமானால், அது அமெரிக்காவின் உயிர்நாடியான நலன்கள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். அத்தகைய தாக்குதல்களை அமெரிக்கா இராணுவ நடவடிக்கை உட்பட முடிந்த எல்லா வழிகளிலும் ஈடுபட்டு முறியடிக்கும்."

கார்டர் அப்போது விரைவு நடவடிக்கைப் படையை உருவாக்கினார். அந்த படைப்பிரிவு மிக விரைவாக மத்திய கிழக்கிற்கு பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புகின்ற திறமை படைத்தது. 80கள் முழுவதிலும், றேகன் நிர்வாகம் வளைகுடா பிராந்திய நாடுகள் அனைத்தையும், தனக்கு தளங்களையும் அவற்றிற்கான ஆதரவு வசதிகளையும் தந்து உதவுமாறு வற்புறுத்தி வந்தது. ஆனால் நிரந்தரமான அமெரிக்க தளம் எதையும் 1991 வளைகுடா போர் வரை ஏற்படுத்த முடியவில்லை. அந்த வளைகுடா போருக்குப் பின்னர் ஈராக்கில் போர் விமானங்கள் பறக்க தடை மண்டலத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. அப்படி செய்வதன் மூலம் நிரந்தர இராணுவ இருப்புக்கு வழிவகை செய்துகொண்டது.

அதற்குப் பின்னர் செப்டம்பர் 11 நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கப்பட்டது. இவற்றின் விளைவாக அமெரிக்க இராணுவம் மிகப்பெரும் அளவில் குவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இராணுவத்திற்கு திட்டமிட்டவர்கள் கனவில் கூட கண்டிராத அளவிற்கு இராணுவ தளங்களும் இராணுவ பலமும் வளைகுடா பிராந்தியத்தில் அதிகரிக்கப்பட்டது.

இன்றைய தினம் அமெரிக்காவின் இராணுவ வரவு-செலவு திட்டம் 400 பில்லியன் டொலர்கள் ஆகும். இதில் 60 பில்லியன் டொலர்கள் வளைகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடமாடுகிற அமெரிக்க படைகளை பராமரிப்பதற்காக மட்டும் செலவிடப்படுகிறது. வளைகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்கா தற்போது சங்கிலித் தொடர்போல் இராணுவ வசதிகளையும் தளங்களையும் அமைத்துக்கொண்டிருக்கிறது. வளைகுடா சுற்றிலும் மற்றும் ஆபிரிக்க கொம்புமுனையிலிருந்து, இந்தியப் பெருங்கடலில் உள்ள டியகோ கார்சியா வரை மற்றும் முன்னாள் மத்திய ஆசிய சோவியத் குடியரசுகளான உஸ்பெக்கிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் பகுதி வரை பல்வேறு தளங்களை அமெரிக்க இராணுவம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய ஆசியாவில் இப்படி உருவாக்கிக் கொண்டிருக்கும் இராணுவத் தளங்கள் அமெரிக்காவிற்கு கிழக்குப் பகுதியில் வழி அமைத்துக் கொடுக்கிறது. மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் வழியாக ஆசியாவின் உட்பகுதிகளுக்கு அமெரிக்கா நுழைவதற்கு இந்தத் தளங்கள் வாய்ப்பு வசதிகளை வழங்குகின்றன.

ஒரு புதிய அமெரிக்க சாம்ராஜ்யம்

அமெரிக்கா உருவாக்க விரும்பும் புதிய அமெரிக்க சாம்ராஜ்யத்தின் பிரதான அம்சம் ஈராக் ஆகும். ஈராக்கில் அமெரிக்க ஆதரவு பிரதிநிதிகள் ஆட்சி செய்வர் மற்றும் அமெரிக்க தளங்களை ஈராக்கில் உருவாக்குவர். ஈராக்கோடு அந்த ஆதிக்கம் நின்றுவிடாது. மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதையும் திரும்பவும் மறு ஒழுங்கமைப்பதற்கான தேவைபற்றி புஷ் நிர்வாகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியுள்ளனர்.

பென்டகனில் செல்வாக்கு பெற்ற ஆலோசனைக் குழுவான பாதுகாப்பு கொள்கை குழுவின் தலைவர் ரிச்சார்ட் பேர்ள் (Richard Perle), இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய அரசுகளுக்கு அமெரிக்கா, இரண்டே வார்த்தைகளில் தனது கருத்தைச் சுருக்கமாக சொல்லிவிட முடியும். அது "அடுத்து நீங்கள்தான்" என்பதே.

ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவும் அமெரிக்காவின் போர் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது தங்களது சொந்த எண்ணெய் வள நலன்களை அடிப்படையாகக் கொண்டதுதான் என்று அமெரிக்க ஆதரவாளர்கள் கூறுகின்றனர். முன்னாள் லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் மைக்கேல் பவும் (Michael Baume), பெப்ரவரி 24 அன்று பைனான்சியல் ரெவ்யூ என்ற பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:

"பிரான்சுக்கும் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவைவிட சதாம் ஹூசேன் ஆட்சி நீடிக்கவேண்டும் என்பதில் குறிப்பாக எண்ணெய் வளம் சம்பந்தப்பட்ட அதிகமான வர்த்தக நோக்கங்கள் உண்டு. குறிப்பாக அமெரிக்கா, மத்திய கிழக்கு எண்ணெய் வளத்தை சார்ந்து இருப்பதைக் குறைக்க திட்டமிட்டு, பல வருடத்தின் பின்னர் அது பயன்படுத்தி வரும் எரிபொருள்களில் கால் பகுதி மட்டுமே மத்திய கிழக்கினை சார்ந்து இருக்கிறது. அமெரிக்காவானது, ஐரோப்பிய நாடுகளை விடவும், குறிப்பாக பிரான்சும் ஜேர்மனியும் ஈராக் எண்ணெய் வளத்தை நம்பி இருப்பதை விடவும் குறைவாகவே தான் அதில் நம்பியிருக்கிறது..."

தனது எண்ணெய் வளங்களை பெறும் மூலவிநியோகத்தை மாற்றுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் வளைகுடா பகுதியிலிருந்து வழங்கப்படும் எண்ணெயை சார்ந்திருக்கின்றன என்பதும் உண்மைதான். அதுதான் இன்றைய பிரச்சனைக்கான முக்கிய கருத்துமாகும். எந்த நாடு வளைகுடா எண்ணெய் வளத்தை தன்வசம் வைத்துக்கொள்கிறதோ, அந்த நாடுதான் எதிர்வரும் பல தலைமுறைகளுக்கு உலகில் எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருக்கும்.

இந்தப் பிரச்சினையில் மிக முக்கியமான உயிர்நாடியான நிதிரீதியான பிரச்சனைகள் அடங்கியிருக்கின்றன. அமெரிக்காவின் நோக்கத்திற்கு எண்ணெய் சம்பந்தமில்லை என்று கூறி வருபவர்களின் படி, எண்ணெய் வழங்கலை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது பற்றி கவலையில்லை, சந்தைகளில் நிர்ணயிக்கப்படும் எண்ணெய் விலை தான் முக்கியமானது என்கிறார்கள். ஒரு விவாதத்திற்காக அவர்களது கருத்தை ஒப்புக்கொண்டாலும் எந்த நாணயத்தில் அந்த கணக்குகள் தீர்க்கப்படும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை.

இந்த இடத்தில் தான் நாம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் உயிர்நாடியான கவலையைத் தொடுகிறோம். அது அமெரிக்க பொருளாதாரத்தின் நிதி நிலைமையாகும். கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பரந்த அளவிலான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1980களின் ஆரம்பத்தில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளோடு ஒப்பிடும்போது அமெரிக்கா பொருளாதார சரிவு நிலையை சந்திக்கத்தான் செய்தது. அப்போது கூட உலகிலேயே மிகப்பெரும் அளவிற்கு உலகம் முழுவதிலும் கடன்களை வாரி வழங்குகின்ற நாடாகவே அமெரிக்கா விளங்கி வந்தது. பெரும்பான்மை சர்வதேச முதலீடுகளுக்கான கேந்திரமாக அமெரிக்கா விளங்கியது.

ஆனால் இன்றைய தினம் உலகிலேயே மிகப்பெரிய கடன்கார நாடாக அமெரிக்கா மாறிவிட்டது. வெளிச்செலாவணி பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு மொத்த உற்பத்தி அளவில் ஐந்து சதவீதமாக இருக்கிறது. அப்படியென்றால் அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு 1.5 பில்லியன் டொலர்கள் முதலீடு தேவைப்படுகிறது. அமெரிக்காவின் இன்றைய வெளிநாட்டுக் கடன்களின் அளவு 2.8 ட்ரில்லியன் டொலர்கள் ஆகும். இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25 சதவீதத்திற்கு மேற்பட்டதாகும். இதேநிலை தொடருமானால் இந்த பத்தாண்டு முடிவில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதே நிலை நீடிக்குமானால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நெருக்கடி உருவாகும்.

இந்த நிலவரத்தை சமாளிப்பது எப்படி? இவ்வளவு பெருந்தொகை கடனை விரைவாய் சமாளிப்பது சர்வதேச நிதி அமைப்பு முறைக்குள்ளே டொலரின் மதிப்பைப் பொறுத்தே அமையும்.

தற்போது டொலர்தான் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நாணயமாற்று நாணயமாகும். ஒவ்வொரு நாட்டின் நாணய கையிருப்பிலும் 73 சதவீதம் அமெரிக்க டொலர்களாக உள்ளன. எல்லா நாடுகளுக்குமே இத்தகைய டொலர் கையிருப்பு தேவைப்படுகிறது. சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதியூட்டவும் அமெரிக்க சொத்துக்களில் முதலீடு செய்யவும் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் ஐரோப்பிய யூனியன் உருவாக்கியுள்ள யூரோ, அமெரிக்க டொலர்களை மாற்றி சர்வதேச இருப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டால் என்ன நிலவரம் ஏற்படும்? குறிப்பாக அமெரிக்க டொலர்கள் மதிப்பு குறையும் நிலை ஏற்படத் தொடங்கும்பொழுது மிகப்பெரும்பாலான அமெரிக்க டொலர்கள் யூரோக்களாக மாற்றப்பட்டுவிடும். இதன் மூலம் அமெரிக்கா மிகப்பெரும் அளவு நிதி சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டிவரும்.

அத்தகைய ஒரு மாற்றத்தை எது உருவாக்கும்? அதற்கு பல்வேறு காரணங்கள் சாத்தியமாகலாம். ஆனால் குறிப்பாக மிகப்பெரும் மாற்றம் எப்போது உருவாகுமென்றால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் டொலருக்கு பதிலாக யூரோக்களை கோரும்போதுதான் இத்தகைய மாற்றம் ஏற்படும். 2000 நவம்பரில் எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் இனி யூரோ நாணயம் மூலம் தங்களது கணக்குகளை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்துதான் ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்கான உத்வேகம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டது.

அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் போட்டி

செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் மற்றும் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கான உந்தலுக்கும் முன்னரே, கடந்த பத்தாண்டுகளாகவே அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய எதிரிகளுக்குமிடையே போட்டிகள் புகைந்துகொண்டுதான் இருந்தன.

ஐரோப்பிய நாடுகளுக்குள் ஒரே நாணயம் கொண்டு வரவேண்டும் என்ற திட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில் ஜேர்மனியின் முன்னாள் பிரதமர் ஹெல்முட் ஸ்மித் எச்சரிக்கை விடுத்தார்: ''யூரோ நாணயத்தின் சிறப்பு குறித்து அமெரிக்கர்களுக்கு இன்னும் புரியவில்லை. அப்படி அவர்களுக்கு அந்த நாணயத்தின் சிறப்பு புரிகின்ற நேரத்தில் மிகப்பெரும் அளவிற்கு பிரம்மாண்ட மோதல் போக்கு உருவாகும்..... அது உலகம் முழுவதிலும் நிலைமையை மாற்றும், அது எந்த அளவிற்கு இருக்குமென்றால் அதன் பின்னர் அமெரிக்க எந்த விதமான முடிவும் செய்யமுடியாத நிலைமை ஏற்படும்.'' என குறிப்பிட்டிருந்தார். (See "Washington's New Interventionism: US hegemony and inter-imperialist rivalries", David N. Gibbs, Monthly Review, September 2001).

இதே கருத்தை மற்றவர்களும் பகிர்ந்துகொண்டனர். 1997 நவம்பரில் செல்வாக்கு மிக்க Foreign Affairs பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரையை எழுதியிருந்தவர் அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசக குழுவின் முன்னாள் தலைவர் மார்ட்டின் பெல்ஸ்டெய்ன் (Martin Feldstein) ஆவார். ''ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நாணய ரீதியான ஒருங்கிணைப்பு உருவாகுமானால் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தன்மையே மாறிவிடும், அதன் விளைவு நேரடியாக ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவோடு மோதுகின்ற நிலைமை உருவாகும். ஐரோப்பிய நாணயமாற்று ஒருங்கிணைப்பு உலகையே மிக வேறுபட்டதாக மற்றும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவசியம் கருதிவிட முடியாததாக மாற்றி விடக்கூடும்" என்பதாக மார்ட்டின் பெல்ஸ்டெய்ன் கருத்து தெரிவித்திருந்தார்.

முன்கூட்டி தாக்குதல் நடத்தும் கொள்கையின் அடிப்படையில், 2002 செப்டம்பரில் புஷ் ஆல் வகுக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயம், அமெரிக்காவின் சர்வதேச ஆளுமையை சவால்விடுகிற எந்த ஒரு தனி நாடு அல்லது நாடுகள் குழுவையும் தலையெடுக்கவிடாமல் தடுப்பதுதான் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் குறிக்கோள் என தெளிவுபடுத்தியது.

இந்த அறிக்கையை முக்கியமாக தயாரித்தவர் புஷ்ஷின் தேசிய ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் (Condolezza Rice). Foreign Affairs பத்திரிகையில் 2000 ஆண்டு பதிப்பில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், சோவியத் ஒன்றியம் இல்லாத சூழ்நிலையில் அமெரிக்கா தனது "தேசிய நலன்" பற்றி விளக்கம் தருவது மிக சிக்கலானது என்று குறிப்பிட்டிருந்தார்.

2002 ஜனவரியில் New Yorker எனும் இதழ் ஒரு கட்டுரைக்காக அவரை பேட்டி கண்டது. இப்போதும் அதே கருத்துடன்தான் அவர் இருக்கிறாரா என்றும் கேட்கப்பட்டது.

''அமெரிக்காவின் நிலைப்பாட்டை விளக்குகின்ற சங்கடம் இப்போது நீங்கிவிட்டது, என உடனடியாக அவர் பதிலளித்தார். செப்டம்பர் 11 நிகழ்ச்சி மிகப்பெரிய பூகம்பம் போல் தோன்றியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படுள்ளதுடன் மற்றும் கூர்மையாக வெளிப்படுத்தப்படுகின்றது. இன்றைய நிகழ்ச்சிகள் மிகக் கூர்மையான கண்ணோட்டத்திலே ஆறுதலாய் இருக்கிறது."

செப்டம்பர் 11 நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, அவர் தேசிய பாதுகாப்பு குழுவின் மூத்த அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் தத்துவங்களையும் செயல்பாட்டையும் உலகின் அமைப்பையும் அடிப்படையில் மாற்றுதற்கு இந்த வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்து அவர் ஆலோசனை கேட்டார்.

1945-47 நிலவரத்தை ஒட்டியதாக இந்த காலகட்டம் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்த நேரத்தில்தான் கெடுபிடிப்போர் தத்துவம் உருவாக்கப்பட்டது. சர்வதேச அரசியலில் மிகப்பெரிய மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவின் நலன்களையும் அமைப்புக்களையும் பாதுகாக்க வேண்டியது முக்கியமானது" என்றும் அவர் தெரிவித்தார். ( New Yorker January 4, 2002).

செப்டம்பர் 11 நிகழ்ச்சி தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு முன்கூட்டியே எந்தெந்த தகவல்கள் தெரியும் என்பது தொடர்பான பல கேள்விகளுக்கே இன்னும் விடை அளிக்கப்படவில்லை. அவை ஒரு புறமிருக்க, கொண்டாலீசா ரைஸ் கூறியுள்ள இந்த கருத்து ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவுகின்ற ஒரு கருத்தை தெளிவுபடுத்துகின்றது, அமெரிக்காவின் நலன்களுக்கேற்ப உலகத்தையே திரும்பவும் மாற்றி அமைக்கின்ற திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலை மிக வேகமாக நிறைவேற்றி வருகின்ற ஒரு வாய்ப்பாக, பயங்கரவாதிகள் அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டார்கள்.

இப்படி உலகை மறு ஒழுங்கமைக்கும் நோக்கங்கள் என்ன? இவற்றில் இரகசியங்கள் எதுவும் இல்லை. அவற்றை பகிரங்கமாகவே விவாதித்து வருகிறார்கள். புதியதொரு அமெரிக்க சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும். அதற்கு குறைவாக எதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இப்போது அமெரிக்க வெளியுறவுத்துறையின் திட்டமிடும் கொள்கை இயக்குநராக இருக்கும் ரிச்சர்ட் ஹாஸ் (Richard Haass) தாக்கல் செய்துள்ள ஒரு ஆய்வு அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்ட என்னை அனுமதிக்கவும். 2000 நவம்பர், 11ம் தேதி அந்த மாநாடு நடைபெற்றது. அது எளிதாக ''அமெரிக்க பேரரசு'' (Imperial America) என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

ஹாசின்படி, அமெரிக்காவிடம் மேலதிகமாக உள்ள அதிகாரத்தை என்ன செய்வது அவற்றை அமெரிக்காவிற்கு கணிசமான அளவிற்கு நலன் தருகின்ற வகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான் இப்போது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் முடிவு செய்ய வேண்டிய அடிப்படை அம்சமாக இருக்கிறது என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துப்படி, அமெரிக்கா ஒரு தேசிய அரசு என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒரு ஏகாதிபத்திய சக்தி என்ற நிலைக்கு அதன் பாத்திரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். பேரரசு வெளிநாட்டு கொள்கை என்பது ஏகாதிபத்தியத்துடன் இணைத்து குழப்பம் செய்யக்கூடாது என்று அவர் எழுதினார். அது கடந்த காலத்திற்கு உரியது. பேரரசின் வெளிநாட்டுக் கொள்கையை ஆதரிப்பதற்கு அரசுகளுக்கு இடையிலான உளவுகளையும் அவற்றுக்குள்ளேயான நிலைமைகளையும் பாதிக்கும் சில கோட்பாடுகளின் வழியாக உலகை ஒழுங்கு செய்வதற்கான ஒரு வெளிவிவகாரக் கொள்கைக்காக அழைப்பு விடுவதாகும். அமெரிக்காவின் பாத்திரம் 19ம் நூற்றாண்டில் பிரிட்டனை ஒத்ததாக இருக்கும்''.

இப்போது சரித்திரத்தை தெரிந்த எந்தவொரு மாணவர்களுக்கும் ஒரு உண்மை தெளிவாகத் தெரியும். 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரிட்டிஷ் பொருளாதார மேலாதிக்கத்திலேயே தங்கியிருந்தது. அதற்கு பின்னர் மற்றைய முதலாளித்துவ நாடுகளான ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகியவை வளரத் ஆரம்பித்ததும் இந்த நாடுகளும் பிரிட்டனது ''சூரியன் அஸ்தமிக்காத இராஜ்ஜியத்தில்'' பங்கு கேட்டதன் விளைவுதான் வல்லரசுகளுக்கு இடையே மோதல்களும் மற்றும் உலக வல்லரசுகளாக தம்மையே நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டம் தவிர்க்க முடியாதபடி உலகப் போருக்கு வழிவகுத்தது. இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகையே மீள் ஒழுங்கமைக்க முயன்று வருகிறது. முன்னர் நடந்த போர்களைவிட அதிக அளவில் இரத்தம் சிந்தும் போரை சந்திக்க வேண்டி வரும். ஏனெனில் தற்போது அமெரிக்காவுக்கு போட்டியாக முழுமையாக வளர்ச்சி கண்ட முதலாளித்துவ வல்லரசுகள் உருவாகியுள்ளன. அவற்றிற்கென்று தனியாக நலன்களும் திட்டங்களும் உண்டு. அவை அமெரிக்காவின் கொள்கைகளோடு ஒன்றுபட்டு செல்பவை அல்ல. பல சந்தர்ப்பங்களில் நேரடியாக அமெரிக்காவோடு மோதுகின்ற கொள்களைகளை அந்த வல்லரசுகள் கொண்டிருக்கின்றன.

இதுதான் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஈராக் தொடர்பாக நடைபெற்ற மோதல்களின் பொருள் ஆகும். பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இதர நாடுகள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை எதிர்க்கின்றன. ஆட்சி மாற்றத்திற்கு அந்த இராணுவ நடவடிக்கை அல்லது துன்பத்தில் தள்ளப்பட்டுள்ள ஈராக் மக்களுக்காக அக்கறை கொண்டது என்பதை அவை ஏற்றுகொள்ளவில்லை. இந்த நாடுகள் கவலைப்படுவதே ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு எதிர்காலத்தில் முக்கிய வல்லரசுக்கிடையேயான உறவுகளில் எதனை முன்குறி காட்டுகின்றன என்பதைப் பற்றித்தான். இது ஒரு ஆரம்பம்தான், ஈராக்கோடு அமெரிக்காவின் நடவடிக்கை முடிந்துவிடவில்லை என்பது அந்த நாடுகளுக்கு தெளிவாக தெரியும். சுருக்கமாக கூறுவதானால் ஈராக் தொடர்பாக வல்லரசு நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற மோதல் மிக விரைவாக மூன்றாவது ஏகாதிபத்திய போருக்கு கொண்டு சென்றுவிடும் என்பதேயாகும்.

ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம்

இத்தகைய பேரழிவை தடுப்பது எப்படி? மனித இனத்திற்கு எதிர்காலம் எவ்வாறு அமையும்? இவைகள் இந்த போருக்கு எதிரான போராட்டத்தில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகள். இந்தப் பெரும் கேள்விகளுக்கான விடைகளை வரலாற்று ஆய்வு மூலமும் இன்றைய நிலையை ஆராய்வதன் மூலமும்தான் கண்டுபிடிக்கமுடியும். இன்றைய முட்டுச்சந்திலிருந்து வெளிவருவதற்கான வழியை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை புரிந்துகொண்டாக வேண்டும்.

எனக்கு தரப்பட்டுள்ள நேரத்திற்குள் இருபதாம் நூற்றாண்டு வரலாறு முழுவதையும் ஆராய்வது இயலாததாகும். இங்கு நான் சுருக்கமாக சில கருத்துக்களை சொல்லுகிறேன். மார்க்சிச இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டங்களை ஆராய்வதன் மூலம் இவற்றிற்கு சுருக்கமாக விடை கண்டுவிடலாம். எல்லா வரலாற்று கேள்விகளும் உருண்டு திரண்டு அதற்குள் அடங்கியிருக்கின்றன.

முதலாவது உலகப்போர் வெடித்துச் சிதறியது, அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மார்க்சிஸ்டுகள் அந்தப்போர் வரும் என்பதை தொலை நோக்கோடு கூறினார்கள். அந்த நேரத்தில் அந்தப் போரின் விளைவாக சோசலிச இயக்கத்தில் ஆழமாக பிளவு தோன்றியது. இரண்டாம் அகிலத்தின் பெரும்பான்மையான தலைவர்கள் அதற்கு முன்னரே இத்தகைய போர் ஒன்று வரப்போகிறது என்று எச்சரிக்கை செய்திருந்தார்கள். அத்தகைய போரை தடுப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் தங்களது சொந்த ஆளும் வர்க்கங்களை ஆதரித்தவர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அழைப்புவிட்டிருந்தனர்.

சர்வதேசியம் குறித்து அவர்களின் தலைவர் கார்ல் காவுட்ஸ்கி, அத்தகைய சர்வதேசியம் சமாதான காலத்தில் தான் பொருந்துமே தவிர, போரின் பொழுது ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் அந்தந்த நாட்டு தேசிய பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் பொழுது பொருந்தாது என விளக்கம் தந்தார்.

இரண்டாம் அகிலத்தின் சோசலிச சர்வதேச முன்னோக்கைப் பாதுகாப்பது கையளவே ஆன புரட்சியாளர்களிடம் விடப்பட்டது. அவர்கள், போர் என்பது தற்செயலாக நடந்துவிடுகின்ற விபத்து அல்ல அல்லது திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு உருவாகின்ற நடவடிக்கை அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்பில் தீர்க்க முடியாத மற்றும் அமைப்பு ரீதியான முரண்பாடுகளின் வன்முறை வெளிப்பாடுதான் போர் என்று வலியுறுத்தினர்.

இறுதி ஆய்வில், ட்ரொட்ஸ்கி விளக்கினார், இதுநாள் வரையிலும் தேசிய அரசு அமைப்பு முறைக்குள்ளே அபிவிருத்தி அடைந்து, அந்த அமைப்பு முறைக்கு எதிராக சர்வதேச அளவில் விரிவடைந்து கொண்டிருக்கின்ற உற்பத்தி சக்திகளின் கிளர்ச்சி என்றார்.

இந்த முரண்பாடுகளை ஒவ்வொரு முதலாளித்துவ அரசும் தம்மை ஒரு முக்கிய அரசுகள் என்பதிலிருந்து வல்லரசாக மாற்றி பூகோள மேலாதிக்கத்தினை நிறுவுதன் மூலம் தீர்த்துக்கொள்ள முயன்றன. ஆனால் அவ்வாறு ஈடுபடுவதில் ஏகாதிபத்திய வல்லரசுகள் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதிக்கொள்கின்ற நிலைமை ஏற்பட்டதால் அது தவிர்க்கமுடியாதபடி போருக்கு வழிவகுத்தது.

உலக பொருளாதாரம் தொடர்பாக ட்ரொட்ஸ்கி விளக்கம் தரும்போது, உலக பொருளாதாரம் மறுஒழுங்கு செய்யப்பட வேண்டும். அந்த மறுஒழுங்கு உற்பத்தி சக்திகள் எந்தவிதமான மோதலுக்கும் இடமில்லாமல் ஒருங்கிசைவாய் நடைபெற வேண்டுமென்றால் இலாப அமைப்பைத் தூக்கி எறிந்து சோசலிச பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினார். இங்குதான் சோசலிச புரட்சியின் புறநிலை அடிப்படை இருக்கிறது. இதற்கான அவசியத்தை போர் ஆரம்பித்ததும் நமக்கு அறிவிக்கிறது.

ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப்போராக மாற்ற வேண்டியது அவசியம் என்று லெனின் வலியுறுத்திக் கூறினார். இதன் பொருள் என்னவென்றால் தொழிலாள வர்க்கம் சோசலிச புரட்சிக்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். லெனினின் ஆய்வு எல்லாவற்றுக்கும் மேலாக காவுட்ஸ்கிக்கு எதிரான போராட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது.

போரின் ஆரம்பத்தில் காவுட்ஸ்கி ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் இராணுவவாதமும் போரும் முதலாளித்துவ முறையின் தவிர்க்கமுடியாத அம்சங்கள் என எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் பல்வேறு அரசுகளும் எடுக்கின்ற கொள்கை முடிவுகள் அடிப்படையில் தான் போர்கள் நடைபெறுகின்றன என்றார். எனவே அதன் விளைவு என்னவென்றால், போரை முதலாளித்துவ கட்டமைப்புக்குள் தவிர்த்துவிட முடியும் என்பதாகும்.

முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான கடுமையான மோதல்கள் ஏற்படுவதால், ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் கடுமையான போட்டிகள் உருவாகியது. அது இறுதியில் நீண்ட காலமாக முன்கணிக்கப்பட்ட போராக முடிகிறது என்று காவுத்ஸ்கி தனது கட்டுரையில் விளக்கியிருந்தார். முதலாளித்துவத்தின் நீடித்த நிலைப்பாட்டிற்கு ஏகாதிபத்தியத்தின் இந்த கட்டம் அவசியமா? போர் முதலாளித்துவத்தோடு முடிவிற்கு வந்துவிடுமா? நடப்புப் போர் முடிவில் ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் கடுமையான பெரும் போட்டி நிலவுவதற்கான பொருளாதார அடிப்படை அவசியம் எதுவும் இருக்கப்போவதில்லை. அப்படி ஆயுத உற்பத்தி நீடித்தால் கூட அது ஒரு சில முதலாளித்துவ குழுக்களின் நலன்களுக்கு மட்டுமே பயன்படும். அதற்கு மாறாக பல்வேறு அரசுகளுக்கிடையே நடைபெறுகின்ற மோதல்கள் முதலாளித்துவ தொழிற்துறைக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. தொலைநோக்குள்ள எந்த முதலாளியும் தனது சகாக்கள் அனைவரையும் இவ்வாறு தான் அழைப்பு விடுப்பார். உலக முதலாளிகளே ஒன்றுபடுங்கள்! என்பதாகத்தான் இருக்கும்." என காவுத்ஸ்கி குறிப்பிட்டார்.

இதை வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், முதலாளித்துவ பொருளாதாரத்திலிருந்து எழும் ஏகாதிபத்திய போருக்கான புறநிலை அவசியம் இல்லை என்பதுதான். எனவே ஏகாதிபத்தியப் போர் முடிவடையக் கூடியது என்றால், முதலாளித்துவத்தைத் தூக்கி வீச வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவை இல்லை என்பதே இதிலிருந்து வருகின்றது. முதலாளித்துவ அரசுகள் ஒன்றுபட்டு வரமுடியும், தங்களது கருத்துவேறுபாடுகளை சமாளித்துக்கொள்ள முடியும். சமாதான முறையில் பொருளாதார வளர்ச்சி காணமுடியும், அமைதியான அபிவிருத்திக்கான காலகட்டத்தை முன்முயற்சிக்க முடியும், அதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குள் உலகை பங்கு போட்டுக்கொள்வதற்கு உடன்பட முடியும், என்றே அவரின் கருத்து அர்த்தப்படுகின்றது.

காவுட்ஸ்கியின் கருத்துக்களை லெனின் மறுத்தார். பல்வேறு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கூட்டணிகள், அதிதீவிர ஏகாதிபத்திய கூட்டணிகள், ஒரு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இன்னொரு ஏகாதிபத்திய குழுக்களின் கூட்டணி மற்றும் பொதுக் கூட்டணி இவை எல்லாம் ஒரு போருக்கும் இன்னொரு போருக்கும் இடையில் ஏற்படும் போர்நிறுத்தமே ஒழிய வேறில்லை என்றார். இப்படி சமாதான கூட்டணிகள் மற்றொரு போருக்கான அடிப்படையை உருவாக்குகிறது: மற்றும் அவை திரும்ப அடுத்த போரிலிருந்து கூட்டணிகளாய் உருவாகின்றன. ஒன்றையொன்று கட்டுப்படுத்துகிறது. சமாதான மற்றும் வன்முறை போராட்டங்கள் மாறி மாறி வருகின்றன. அவை அத்தனையும் ஏகாதிபத்திய தொடர்புகள் மற்றும் உறவுகள் அடிப்படையில் உருவாகின்ற உலக பொருளாதார உலக அரசியல் நடப்புகள் அடிப்படையில் அமைந்துள்ளன" என்பதை லெனின் தெளிவுபடுத்தினார்.

எல்லா கூட்டணிகளுமே ஏன் தற்காலிகமானவை மற்றும் புதிய போருக்கு ஆயத்தம் மட்டுமே செய்து கொண்டிருப்பவை? இதற்கு காரணத்தை லெனின் விளக்கினார். இதற்கான காரணம் முதலாளித்துவ அமைப்பின் இயல்பினுள்ளேயே அடங்கியிருக்கிறது. முதலாளித்துவத்தின் அடிப்படை இயல்பு ஒரே சீராக வளர்வது அல்ல மாறாக சமச்சீரற்ற நிலையில் வளர்கிறது.

எனவே ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உருவாகும் உடன்பாடு இன்னொரு கட்டத்தில் சீர்குலைந்துவிடுவது தவிர்க்கமுடியாதது, ஏனென்றால் பல்வேறு முதலாளித்துவ பொருளாதாரங்களின் சமச்சீரற்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. ஜேர்மனியை எடுத்துக்கொள்ளுங்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஜேர்மனியை பிரிட்டனோடு ஒப்பிடும்போது மிகவும் ஏழ்மை நிலையில் வாடிக்கொண்டிருந்த ஒரு நாடு. இன்றைய தினம் ஜேர்மனி, ஐரோப்பாவின் மத்திய பொருளாதாரமாக இருக்கிறது.

முதலாவது உலகப்போர், அந்தப் போர் உருவாவதற்கான மோதல் போக்குகளை, அவற்றின் அடிப்படையை கண்டுபிடித்து தீர்த்துவைக்கத் தவறிவிட்டது. அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது உலகப்போர் வெடித்தது.

போருக்கு பிந்திய ஒழுங்கமைப்பு

எவ்வாறாயினும், இரண்டாவது போருக்குப் பிந்திய காலம் இருபதாம் நூற்றாண்டில் சற்று வேறுபட்ட தன்மை கொண்டதாக அமைந்தது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது காவுட்ஸ்கி குறிப்பிட்டதைப் போன்ற தீவிர ஏகாதிபத்திய கூட்டணி உருவானது.

இதற்கான அரசியல் கட்டமைப்பை வழங்கியது கெடுபிடி போர் (Cold War). இந்த கெடுபிடிப் போரை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு முதலாளித்துவ வல்லரசுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் கட்டுப்படுத்தப்பட்டன மற்றும் நெறிமுறைப்படுத்தப்பட்டன. சர்வதேச ரீதியிலான "கம்யூனிசத்திற்கு எதிரான போராட்டம்" ஒரு வகையான அரசியல் மற்றும் கருத்தியல் ஒற்றுமையை உருவாக்க உதவியது. இந்த ஒற்றுமை பெரிய முதலாளித்துவ சக்திகளை ஒன்றாய் இணைப்பதற்குப் பயன்பட்டது.

இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய அரசியல் அங்கங்களில் ஒன்று ஐக்கிய நாடுகள் அமைப்பு. அந்த அமைப்பு ஓரளவிற்கு சுதந்திர தன்மையோடு நடைபோடுவதில் அந்த முக்கியத்துவம் அமைந்திருக்கவில்லை. ஆனால் அந்த அமைப்பை சுற்றியுள்ள கருத்தியலில் சில முக்கியத்துவம் இருக்கின்றது.

ஒரு புதிய அமைதி ஒழுங்கு மற்றும் முன்னேற்றம் ஸ்தாபிக்கப்படும், இனி வெளிநாட்டு கொள்கையின் ஒரு வழிமுறையாய் ஆக்கிரமிப்புப் போர் இடம்பெறாது என, 30 ஆண்டுகளாக வரலாறு காணாத படுகொலைகளுக்குள் மனிதகுலத்தை இழுத்து விட்ட பிரதான முதலாளித்துவ அரசுகளால், தரப்பட்ட உறுதிமொழிகளின் பண்புருவம்தான் இங்கு ஐக்கிய நாடுகள் சபை.

போருக்கு பிந்திய ஒழுங்கமைப்பின் முடிவு

இந்த கொள்கை விளக்கம் தற்போது தலைகீழாக புரட்டப்பட்டுவிட்டது என்ற உண்மை மிகப்பரவலான வரலாற்று தாக்கங்களைக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்திற்கு இன்றைய சர்வதேச உறவுகள் திரும்பிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார அடிப்படைகள் அமெரிக்காவின் பாரிய உற்பத்தியின், உற்பத்தி வழிமுறைகள் இதர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு பரவியதில் அடங்கியிருக்கிறது. உலகப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ இலாப நோக்கு விரிவாவதற்கு ஏற்ப சந்தைகளும் பொருளாதார உறவுகளும் திருத்தி அமைக்கப்பட்டன. இது இரண்டு போர்களுக்கும் இடைப்பட்ட இரு தசாப்தகால மந்த பொருளாதார நிலை என பண்பிட்டுக்காட்டப்பட்ட, சந்தைகளுக்காவும் இலாபத்திற்காகவும், நிறுவனங்களுக்கிடையே ஒன்றை ஒன்று வீழ்த்துகின்ற போராட்டங்கள் நடப்பது ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆயினும், கடந்த முப்பது ஆண்டுகள் போருக்கு பிந்தைய முதலாளித்துவ ஒழுங்கின் இயங்குமுறைகள் முற்போக்கான முறையில் முறிவுற்றதை பண்பிட்டுக்காட்டியது. 1971ம் ஆண்டு இத்தகைய பொருளாதார நெருக்கடியின் முதல் தாக்கம் தாக்கியது. அப்போது ஜனாதிபதி நிக்சன், அமெரிக்க பொருளாதாரத்தில் பற்றாக்குறை செலுத்துகை சமநிலை (Balance of payments) பெருகிவருகின்ற மோசமான நிலவரத்தை எதிர்கொண்டபொழுது, அமெரிக்க டொலருக்கு அளிக்கப்பட்டு வந்த தங்க மாற்றுமுறை ரத்து செய்யப்பட்டதோடு மற்றும் போருக்குப் பிந்தைய சர்வதேச நாயணய அமைப்பின் முக்கிய பகுதியான நிரந்தர நாணய உறவுமுறைகளின் அமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டது.

அதே நேரத்தில், இலாபங்கள் விரிவடைவதை தாங்கி நின்ற உலகப்போருக்குப் பிந்திய மிகப் பூரிப்பான பொருளாதார வளர்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது. 1960 களின் முடிவிலிருந்து இலாப விகிதங்கள் குறையத் தொடங்கின. இதன் விளைவாக 1974-75ல் உலக முதலாளித்துவம் மிகக் கடுமையான பொருளாதார மந்த நிலையில் சிக்கிக் கொண்டது. 1930களுக்குப் பின் இவ்வளவு மோசமான மந்த நிலை ஏற்பட்டதில்லை.

இந்த நிலவரத்தை சமாளிக்க இரண்டு வழிகளில் முதலாளித்துவம் முயன்றது. அதில் ஒரு வழி தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையின் மேல் தாக்குதல் தொடுப்பது. மற்றொரு வகை உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் கணினியை பயன்படுத்தலுடன் தொடர்புடையதாக புதிய தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்ப முறைகளையும் அபிவிருத்து செய்வது. குறைந்து வருகின்ற இலாபங்களின் வீழ்ச்சிகள் மீண்டும் தோன்றுவதை வென்றுவருவதற்கான போராட்டம்தான், 1970களின் பிற்பகுதியில் ஆரம்பமாகிய உற்பத்தி பூகோளமயமாதல் நிகழ்ச்சிப் போக்கின் பின்னால் இருந்த இயக்கு சக்தியாகும்.

இப்படி பொருளதார பிரச்சனைகள் மோசமடைந்து வருகின்றதன் வெளிப்பாடு சோவியத் ஒன்றியம் தொடர்பான அமெரிக்க அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்ததைக் குறித்தது. போருக்குப் பிந்தைய கொள்கையான சோவியத் ஒன்றியத்தை கட்டுப்படுத்தல் என்பது சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை சீர்குலைக்கும் முயற்சி கொண்ட, மிகப் பாரிய ஆக்கிரமிப்பு நோக்குநிலையால் பதிலீடு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. சோவியத் ஒன்றியத்தை வியட்நாம் போர் போன்ற ஒரு சிக்கலில் மாட்டுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டது. அதற்காக அமெரிக்கா 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டது. றேகன் நிர்வாகத்தின் கீழ் மிகப்பெரும் அளவிற்கு ஆயுதங்கள் குவிக்கப்பட்டன.

இத்தகைய அழுத்தங்களின் விளைவாகவும், அத்துடன் உற்பத்தி பூகோளமயமாதல் மற்றும் கணினியை அடிப்படையாக கொண்ட புதிய தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகியவற்றால் கொண்டு வரப்பட்ட விரைந்த பொருளாதார மாற்றங்களுடன் பொருந்தும் வகையில் சர்வாதிகார ஸ்ராலினிச ஆட்சிகளின் இயலாமை, இறுதியில் 1980களில் சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்கு வழிவகுத்தது.

ஆனால் சந்தைகளின் வெற்றியும் மற்றும் புதிய பொருளாதார செழிப்பு யுகம் என்ற கொண்டாட்டங்கள் எல்லாம் இலாபங்களின் பெருக்கத்தை கவனத்தில் கொள்கையில், புதிய தொழில்நுட்பங்களால், உற்பத்தித்திறன் அதிகரித்தும் மற்றும் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்ததுமே தவிர அதனால் முதலாளித்துவத்திற்கு புதிய வாழ்வு கிடைத்துவிடவில்லை.

1990களில் அரசியல் பொருளாதாரத்தைக் குறிக்கும் அனைத்து நிகழ்ச்சிப்போக்குகளையும் விளக்குவது இங்கு சாத்தியம் அல்ல. ஆயினும், பிரதானமான போக்குகள் தெளிவாக உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஜப்பானிய பங்குச்சந்தைக் குமிழி பொறிவுடன் ஆரம்பமான தசாப்தம் அதிலிருந்து மீள முடியாதிருக்கிறது. அதற்குப் பின்னால் ஆசியப் பொருளாதார அற்புதம் என்று வர்ணிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஒரு முடிவிற்கு வந்தது. பங்கு சந்தைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் தற்போது அமெரிக்காவில் நிதிக் குமிழி பொறிந்து போனது. 1930களுக்குப் பின்னர் இப்படிப்பட்ட பொருளாதாரச் சரிவை அமெரிக்கா சந்தித்ததில்லை.

இப்படிப் பெருகிவரும் நிதிப்புயல் (Financial storms) சர்வதேச அளவில் மூலதனம் குவிப்பதில் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன. பெரிய நாடுகளுக்கு இடையில் சந்தைகளுக்கான போராட்டமும் இலாபத்திற்கான போராட்டமும் என்றுமில்லாத அளவுக்கு அதிகமாய் உக்கிரமடைந்து வருகின்றன. இலாபவீதத்தில் மிகப் பெரிய அழுத்தம் வரும்பொழுது, பெரும்பான்மையான மூலதனங்கள் இந்தப் போக்கை தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையின் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் வென்றுவர முயற்சிக்கிறது. இங்குதான் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையின் தோற்றம் அமைந்திருக்கின்றது.

அதேநேரத்தில் செல்வத்தைக் குவிப்பதற்காக ஏமாற்று, நிதிநிறுவனங்களில் மோசடி, ஊகவாணிப மற்றும் அப்பட்டமான குற்றவியல் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள், எல்லாவகையான நடவடிக்கைகளிலும் இறங்குகிறார்கள். ஆளும் வட்டங்களின் போலித்தோற்றத்தில் பிரதிபலிக்கும் இந்த மாற்றங்கள் இடம்பெறும் நிகழ்ச்சிப்போக்குகள், ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னால் கார்ல் மார்க்ஸ் ஆல் நன்கு தெளிவாக விளக்கப்பட்டது.

"நிதி ஆதிக்க மேற்குடியினர் சட்டங்களை இயற்றியதால், அரசு நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கிறது, அரசாங்க அதிகாரங்கள் அத்தனையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, பத்திரிகைகள் மூலமும் மற்றும் உண்மையான அரசு விவகாரங்கள் மூலமும் பொதுக் கருத்தை மாற்றுவதற்கு அதிகாரம் படைத்திருக்கிறது. அதே விபச்சாரம், அதே வெட்கங்கெட்ட மோசடி அதே பணக்காரன் ஆகவேண்டும் என்ற அரிப்பு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அரங்கத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது..... உற்பத்தி மூலம் செல்வந்தன் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை, மாறாக ஏற்கனவே உற்பத்தி செய்து பிறர் வைத்திருக்கும் சொத்தைக் களவாடி தன்பையில் போட்டுக் கொள்வதன் அடிப்படையில் செல்வந்தனாக எண்ணுகின்றனர். அடிப்படையில் எப்போதுமே முதலாளித்துவ சட்டங்களோடு மோதிக் கொண்டும், ஆரோக்கியமற்ற மிக வெறி உணர்வோடு முதலாளித்துவ சமுதாயத்தின் மேல்தட்டு மக்கள் செயல்படுவர்.... நிதி ஆதிக்க சக்திகள் பணம் திரட்டுவதிலும் வாழ்வை அனுபவிப்பதிலும் முதலாளித்துவ சமுதாயத்தின் உச்சத்தில் மீண்டும் லும்பன் சமுதாயம் தோன்றுவதை குறிக்கிறது." (பிரான்சின் வர்க்கப் போராட்டங்கள், கார்ல் மார்க்ஸ், பக்கம் 30-31, மாஸ்கோ (1968)

இதைவிட புஷ் நிர்வாகத்தின் கிரிமினல் கும்பல் நடவடிக்கையை மிக சரியாக விளக்குவதற்கு வேறுயாராலும் முடியாது. புஷ் நிர்வாகத்தில் மிக நெருக்கமாக இருப்போர்கள் என்ரோன், வோல்ட் கொம் (Enron, WorldCom) மற்றும் இதர நிறுவனங்களோடு நெருக்கமான உறவு வைத்திருக்கின்றனர். இந்த நிறுவனங்கள் கடந்த காலத்தில் அந்த நிறுவனங்களின் நிதியை சூறையாடியதில் முக்கியமானவையாக இருந்தன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் விரும்பி அடிக்கடி கூறுகின்ற ஒரு வாசகம் அல் காப்பொன் (Al Capone- அமெரிக்காவின் பிரபல்யமான மோசடியாளன்) இடம் இருந்து வருகின்றது. "ஒரு அன்பான வார்த்தையால் மட்டும் சாதிக்க முடியாததை ஒரு துப்பாக்கியும் ஒரு அன்பான வார்த்தையும் சாதிக்கும்." ஒரு போக்கிரி தன்னுடைய வழிகாட்டும் கொள்கைகளாக இத்தகைய வார்த்தைகளை சொல்லுவானாகில் அரசாங்கத்தின் இயல்பைப்பற்றி இது சுட்டிக்காட்டுவது என்ன?

இந்த ஆட்சி ஏதோ தற்செயலாக ஏற்பட்டுவிட்ட பாதிப்பு என்று நம்பி எவரும் ஏமாற வேண்டாம். இது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் புரையோடிப் போய்விட்ட சீரழிவின் அரசியல் வெளிப்பாடுதான். முப்பதுகளில் ஜேர்மன் முதலாளித்துவத்தின் ஆழமான நலன்களை ஹிட்லர் பிரதிநிதித்துவப்படுத்தியதுபோல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழமான நலன்களை புஷ் நிர்வாகம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அமெரிக்காவின் போர் உந்தலில் அரசியல் பொருளாதாரத்தை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் மோசமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை சமாளிப்பதற்கு இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான ஆற்றொணா முயற்சியைத்தான் அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஈராக்மீது தாக்குதல் பற்றி விளக்கம் அளித்த புஷ் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் இது நடவடிக்கையின் ஆரம்பம்தான் என கூறி உள்ளனர். மீண்டும் ஒருமுறை முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் ஏகாதிபத்தியமாகவும் போராகவும் வெளிப்பாட்டைக் கண்டிருக்கின்றன. இப்பொழுது அபிவிருத்தி செய்தாக வேண்டிய இதற்கான அரசியல் பதில் இந்த நெருக்கடியின் ஆய்விலிருந்து ஊற்றெடுக்கிறது.

போரைத் தவிர்ப்பதற்கு ஒரு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இன்னொரு ஏகாதிபத்தியத்தை அல்லது ஐக்கிய நாடுகள் சபையை ஆதரித்துப் பயனில்லை. பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலக சமாதானத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அந்த நாடுகள் அமெரிக்காவால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள தங்களது சொந்த பூகோள நலன்களைக் கருத்தில் கொண்டுள்ளன. அதே போன்று ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களது இராணுவ வலிமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவை சமாளிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன.

ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையிலான நலன்களின் மோதலை சமரசம் செய்து வைத்த போருக்குப் பிந்திய ஒழுங்கமைப்பு சிதறுண்டு போய்விட்டது. மீண்டும் ஒரு தடவை பூகோளப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசுகளுக்கும் இடையிலான முரண்பாடு, சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் அபிவிருத்திக்கும் மற்றும் இலாப அமைப்பு முறையினூடாக செல்வத்தை தனியார் சுவீகரித்தலுக்கும் இடையிலான முரண்பாடுகள், மனித சமுதாயம் முழுவதையும் பேரழிவில் கொண்டு வந்து நிறுத்தும் அச்சுறுத்தலைச் செய்யும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையிலான மிகவும் ஈவிரக்கமற்ற போராட்டத்தின் வடிவத்தை எடுக்கின்றன.

உலகம் கட்டாயம் மறு ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இதை முற்போக்கான அடிப்படையில் ஒரே ஒரு சமுக சக்தியால்தான் செய்யமுடியும். அந்த சமுக சக்தி உலகத் தொழிலாள வர்க்கமாகும். அந்த தொழிலாள வர்க்கம் சோசலிச முன்னோக்குக்காகப் போராட வேண்டும். இலாப நோக்கிலான கோட்பாடுகள், அனைவரது நலனுக்கான நனவுபூர்வமான திட்டமிடலால் பதிலீடு செய்யப்படவேண்டும். இந்த நோக்கத்திற்காக புதிய சர்வதேச புரட்சிகரக் கட்சி கட்டாயம் கட்டப்படவேண்டும். இதுதான் உலக சோசலிச வலைதளத்தின் முன்னோக்கு ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved