World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோள போர் எதிர்ப்பு கண்டனம்

Australia: Protestors express deep disgust with US war plans

அவுஸ்திரேலியா: அமெரிக்காவின் போர் திட்டங்களுக்கு எதிராக வெளிப்பட்ட ஆர்பாட்டக்காரர்களின் ஆழ்ந்த வெறுப்புணர்ச்சி
By our correspondents
20 February 2003

Back to screen version

அவுஸ்திரேலியாவில் கடந்த வார இறுதியில் நடந்த போருக்கு எதிரான கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்களுடன் உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் பல்வேறு நகரங்களில் பேசினார்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முக்கிய தலைநகரங்கள், பிராந்திய நகரங்கள் மற்றும் நாடு முழுவதும் நடந்த பேரணிகளில் பங்கேற்றனர்.

இந்த நேர்காணல்கள் வெவ்வேறு வகைப்படுத்தப்பட்ட எண்ணங்களின் வெளிப்பாடாக இருந்தது. இப்பேரணியானது வெவ்வேறு வயது மற்றும் சமூகப் பின்னணியிலிருந்து வந்த மிகப்பரந்த மக்கள் தொகுதிகளின் வெளிப்பாடாகவும் இருந்தது. அனைவரிடத்திலும் பொதுவாக காணப்பட்டது என்னவென்றால், அமெரிக்காவின் போர்த் திட்டங்களுக்கு எதிராக உள்ளவர்களின் ஆழ்ந்த வெறுப்புணர்ச்சியே ஆகும். அவர்களது எண்ணங்கள் யாவும் ஹவார்டின் அரசாங்கம், தகவல் தொடர்பு மற்றும் அரசியல் துறைகளினால் புறக்கணிக்கப்பட்ட உணர்வாகவும் இருந்தது.

மெல்பேர்ன்

ஓய்வுபெற்ற ஆசிரியையான காத்ரின் ஸ்கிப்பர் என்பவர் WSWS விடம் பின்வருமாறு கூறினார்: ''நான் போரை எதிர்க்கிறேன். ஏனென்றால் அது ஒரு தீர்வு அல்ல. போரைச் சுற்றி செய்யப்படும் ஏற்பாடுகளால் உண்டாகும் பிரச்சனைகள் மிகவும் தீவிரமானவையென்றே தெரிகிறது. நடப்பவை எதுவுமே அமெரிக்கா கூறுகின்றவற்றுடன் ஒத்துப்போகவில்லை.

''உலகளாவிய தலைமை அதிகாரத்தினைப் பெற்றிட அமெரிக்கா முயலுகிறது. வேறு எந்த வழியிலும் இதனை விளக்கிட எனக்குத் தெரியவில்லை. ஜோர்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில், அவர் கொண்ட அடிப்படைக் கொள்கைகள் தெளிவாக இல்லையென்றாலும் இப்போது அவை தெளிவாக விளங்குகின்றன. பாக்ஸர் எழுச்சிப் போராட்டத்திலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு போரிலும் பங்கேற்ற வரலாறு அவுஸ்திரேலியாவிற்கு உண்டு. ஹாவார்ட் மிக மோசமான தாழ்மை உணர்ச்சி கொண்டுள்ளார். முதலாளித்துவ கோட்பாட்டிற்கு இப்போது போர் தேவையாக இருக்கிறது''.

13 மற்றும் 16 வயதான பாயம் மற்றும் சுவின் இஸ்மயில் (Payam and Avin Ismael) என்ற ஈராக்கைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் கூறுகையில், ''ஈராக்கில் வாழ்க்கை மிகப் பெரியளவில் நாசப்படுத்தப்பட்டுள்ளது. அது இன்னும் கொடுமையானதாக மாறிவிடப்போகிறது. நிச்சயம் இந்த முறை தேசமே முற்றிலுமாக துடைத்துக்கட்டப்படும். 1999 ல் நாங்கள் மீண்டும் அங்கு சென்றபோது மருத்துவமனைகள் முற்றிலும் சேதமுற்றிருந்ததுடன் எந்தவொரு மருந்தும் அங்கில்லை. சென்ற மாதம் 60 வயதான எங்கள் பாட்டி அங்கு இறந்துவிட்டார். அவருக்குத் தேவைப்பட்ட எந்த மருந்தும் அவருக்கு கிடைக்கவில்லை. அவர் இங்கேயிருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்.

''இந்தப் போரானது அதிகாரம் மற்றும் எண்ணெய்க்காக என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அரசாங்கம் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஹாவார்ட் புஷ்ஷினுடைய மிதியடியாக இருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை ஈராக்கின் மக்களுக்கு உதவி செய்யவில்லை. ஹிட்லரைப் போன்றே ஜோர்ஜ் புஷ் இருக்கின்றார். வருங்காலத்தில் மக்கள் அவரைப் பார்க்கையில் அடுத்த ஹிட்லர் என்றே கூறப்போகின்றனர்.

தற்போது வேலைவாய்ப்பு இல்லாத, முன்னாள் மாணவரான அட்ரின் டான்லப் (வயது 30) கூறுகையில் ''நான் ஹாவார்ட் மற்றும் பிளேயர் செயல்படும் முறைகளைப் பார்க்கிறேன். அவர்களை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் குறைந்தளவு ஆர்வத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களிடமிருந்து வரும் போர் என்னும் பொறிக்குள் இவர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே அவர்கள் முடிவு செய்துள்ளபடியால் போரை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் மிகவும் பேராசைப்படுகிறார்கள். தனிமையில் அவர்களிடம் புஷ் மற்றும் அவரைச் சார்ந்தோர் ஏதாவது கூறியிருக்க வேண்டும். இது எனக்கு கெட்ட நோக்கம் உடைய ஒன்றாகவே தெரிகிறது.

''எதற்காக ஹாவார்ட் முன்னதாகவே துருப்புக்களை போருக்கு நிறுத்தி வைத்துள்ளார்? ஏற்கெனவே படைகளைக் குவிக்கும் நடவடிக்கை அங்கு நடந்து கொண்டுதானிருக்கிறது. எத்தகைய மொழியை அவர் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்? இது ஒரு பித்தலாட்டம். இது ஒரு கேலிக்கூத்து. அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிரான போர் குற்ற அமைப்பு எதையும் எங்களால் பார்க்க முடியவில்லை. மாறாக உண்மையில் ஈராக்கில் உள்ள பொதுமக்களை அவர்கள் இலக்காக ஆக்கியுள்ளனர். நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்கள் மூன்று போர்க் குற்றங்களுக்கு பொறுப்பாக உள்ளனர்.''

மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பாட்ரிக் காலாகன் என்பவர்: ''நீண்ட நாள் செயல்பாடுகளினால் மதிப்பீட்டாற்றலுடைய தெள்ளத் தெளிந்தவர்களே போருக்கு எதிராக உள்ளனர். போரினால் ஏற்படும் சிக்கல்களையும், அவை மக்களுக்கு என்ன செய்கிறது என்பதைப் பற்றியும் அறியவே நான் இங்கு வந்துள்ளேன். தீவிர கருத்துக்களை தவிர்க்கும் பத்திரிகை அறிக்கைகள் எனக்குத் தேவையில்லை.

''மிகக் குறைந்தளவு நண்பர்களுடன், மக்களுக்கு போரின் உண்மையான நிலையை சுட்டிக்காட்டிட இயலுகின்ற வழிகளை தேடிக்கொண்டிருக்கிறேன். மிகப் பெரிய கலைவடிவமாகவே நாங்கள் புகைப்படங்கள், உண்மையான போரைப்பற்றிய திரைப்பட துணுக்குகள் ஆகியவற்றை உபயோகித்து அதன் மெய்மை நிலையைக் காட்ட விரும்புகிறோம். மக்கள் இன்னும் தங்களது நிலையை முழுமையாக உணரவில்லை. போரைப் பற்றியும் கலைகள் ஏதாவது கூறவேண்டும்.'' என்றார்.

மூன்று குழந்தைகளை உடைய, பகுதி நேர மாணவரான டிரிசியா ஹாடாம் கூறுகையில் ''நான் இங்கு வந்திருப்பது ஏனென்றால் மற்ற மக்களைப்போலவே நானும் உலகில் அமைதியை விரும்புகிறேன். நான் நினைக்கிறேன் இந்தப்போர் புஷ் பின்லேடனை பிடிப்பதற்காக இல்லை. அதற்கு மாறாக எண்ணெய் வளம் மற்றும் உலகை ஆதிக்கம் செலுத்தவதற்காக அமெரிக்கா முயற்சிக்கிறது.

''நான் நினைக்கிறேன் ஹாவார்ட் புஷ்ஷுடன் நல்ல முறையில் செயல்பட விரும்புகின்றார். ஏனென்றால் அவர்கள் நமது மரபு சார்ந்த உறவு உடையவர்களாக உள்ளனர். இங்குள்ள பழங்குடி மக்களுடனான உறவும் இது போல் இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் இதையே விரும்புகின்றனர் ஆனால் ஹவார்ட் பெரும்பான்மையான மக்களின் கருத்தைப் பொருட்படுத்தவில்லை. தன் விருப்பம் போல் செயல்படுகின்ற தலைமையாசிரியர் போல் அவர் இருக்கிறார்.

மெக்கினான் (McKinnon) செகண்டரி கல்லூரியின் முதுநிலை மாணவரான கூலியான் கூறுகையில் ''நமது அரசாங்கம் பொய் கூறுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் கூறும் எதையும் என்னால் நம்பமுடியவில்லை. ஹாவார்ட் புஷ்ஷுடன் பங்காளியாக செயல்படுகிறார். மேலும் புஷ்ஷிற்கு எண்ணெய் தொழில் அதிபர்களுடன் தொடர்பு உள்ளது. அவர்களது நலனிற்காகவே அவர் பேசுகிறார் என்பதும் ஏற்கெனவே அறிந்ததே.

''போரினால் அமெரிக்காவிலுள்ள தற்போதுள்ள சூழ்நிலையின் கவனம் திசை திருப்பப்படுகின்றது. அங்கு நிலவும் சூழ்நிலையைப் பார்க்கையில் அமெரிக்க குழந்தைகள் தக்க கல்வியை பெறமுடிவதில்லை. அமெரிக்காவில் தற்போதுள்ள சூழ்நிலை பனிப்போர் நடந்த போது ஏற்பட்ட குழப்பமான சூழலைப் போலிருக்கிறது.'' என்றார்

Footscray City செகண்டரி கல்லூரி மாணவர் ஸ்டிவ் பெர்ஸி கூறுகையில் : ''நான் பங்கேற்ற முதல் கண்டனக் கூட்டம் இது. நான் நினைக்கிறேன் ஜோர்ஜ் புஷ் முதலில் எண்ணெய் வேண்டுமென நினைக்கிறார். இரண்டாவதாக அவரது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையாகவும், அமெரிக்காவின் பலத்தை காட்டவும் விரும்புகிறார்''

''ஹாவார்ட் தனக்கென எந்தவொரு எண்ணமும் கொள்ளவில்லை அவுஸ்திரேலியாவிற்கு இது நம்மை தருமென எண்ணுகிறார். வரலாற்றுப் புத்தகங்களில் நிகழ்வுகளாக அமெரிக்க எழுதிட விரும்புவதைப்போல் ஹாவார்ட் அவுஸ்திரேலியாவும் எழுதிட வேண்டுகிறார். ஐ.நா. சபை தவறான பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. நாட்டில் அமைதியைக் கொண்டு வருவதே ஐ.நா. சபையின் குறிக்கோள் என நினைக்கின்றேன். ஆனால் அதன் ஆயுத பரிசோதகர்கள் அமெரிக்காவிற்காக செயல்படுகிறார்கள். உண்மையில் அவர்கள் போர் ஆயதங்களை களைய விரும்பினால் முதலில் அமெரிக்காவின் படைக்கலங்களை அகற்ற வேண்டும்.'' என்றார்.

சிட்னி

ரயன் (வயது 24) என்பவர் கருத்துரைக்கையில், ''உலகமெங்கும் உள்ள போரினை விரும்பாத மக்களுக்காக எனது ஆதரவினைத் தெரிவிக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். இத்தகைய நேரத்தில் நான் சோம்பலாகவோ அல்லது ஏதும் செய்ய இயலாத நிலையிலோ இருக்க விரும்பவில்லை. இந்தப்போர் முழுமையாக எண்ணெய் பற்றியதே. இது முழுமையாக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரத்தைப் பற்றியதே. இச்செயல் மனித வாழ்க்கையினை இழிவு படுத்துகின்றது. இந்தப்போர் நிச்சயமாக நடக்குமென்றால் அது மனித சமுதாயத்திற்கு எதிரான மிக மோசமான நம்பிக்கைக் கேடாகும்.''

''போரில் அவுஸ்திரேலியாவின் தொடர்பு அச்சந் தருகின்றது, ஹாவார்ட் அரசாங்கம் புஷ்ஷினுடைய தீய சூழ்ச்சிகளுக்குத் துணை போவது ஏனென்றால் அவருக்கு என்றும் அவுஸ்திரேலியா ஒரு பலம் பொருந்திய நாடாக உலகில் இல்லை என்ற கவலை உண்டு. அதனால்தான் அமெரிக்காவுடன் இணைந்து நிற்கிறார். ஐக்கிய நாடுகள் சபை இந்தப்போரை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எப்படி ஆதரிக்க முடியும்? இப்போர் முக்கியமாக எண்ணெய் மற்றும் பணத்தைச் சார்ந்தே நடக்கப்போகிறது.'' என்றார்.

கேயிரன் மற்றும் மாத்யூ 17 வயது நிரம்பியவர்கள், தற்போது மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்துள்ளனர். ''நாங்கள் ஏன் வந்தோம் என்றால் கணக்கெடுப்பில் நாங்கள் இருக்கவேண்டும் என்பதே. கணக்கினை அதிகப்படுத்த உதவுவதே எங்கள் எண்ணம். இவ்வளவு மக்கள் இங்கிருப்பார்கள் என்று நாங்கள் எண்ணவில்லை. எப்போதும் போலவே இந்தப்போரும் அதே காரணத்துக்காக அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும். இது எல்லாமே எண்ணெய் பற்றியது. பயங்கரவாதத்திற்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென்றே நான் நினைக்கிறேன்.

''ஐக்கிய நாடுகள் சபையில் நடப்பவை எதைக் காட்டுகிறது என்றால் அதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பதையே. அமெரிக்கா அது என்ன நினைக்கிறதோ அதை இது செய்கிறது. என்ன நடந்தாலும் நாங்கள் எங்கள் வழியே செல்லப் போகிறோம் என்று புஷ் கூறுகிறார். ஐக்கிய நாடுகள் சபை இப்போரை ஆதரித்தாலும் போருக்கு எதிராக எங்கள் மறுப்பைக் காட்டுவோம். வெறும் 23 மில்லியன் மக்கள் உள்ள ஒரு நாட்டிலிருந்து வரும் அச்சுறுத்தல் குறித்து எதற்காக நாங்கள் கவலைப்பட வேண்டும். ஈராக் குர்துஸ் மக்களை சரிவர நடத்தாததே காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் துருக்கி பக்கத்திலேயே இருக்கிறது. அவர்களும் குர்துஸ் மக்களை சரிவர நடத்தவில்லை. ஆனால் அதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. இது வெறும் பொய்யும் புரட்டாகும்.''

தன்னுடைய மனைவியுடன் வந்திருந்த ஓய்வுபெற்ற கணக்காளரான பாப் (வயது 59) கூறுகையில், ''நாங்கள் இங்கிருப்பது ஏனென்றால் இதைத்தவிர வேறு எதுவும் எங்களால் செய்ய முடியாது என்பதே. அதுவும் உண்மையே. அரசாங்கம் சாதாரண மக்களின் கருத்துக்களுக்கு காது கொடுத்து கேட்பதில்லை. நான் நினைக்கிறேன் இந்தப்போர் முற்றிலுமாக எண்ணெய் பற்றியது. மேலும் சிறிதளவான அமெரிக்கர்களின் சித்தப்பிரமை கொண்டது. எப்போதும் அவர்களுக்கு யாராவது விரோதியாக இருக்கிறார்கள். 'டோமினோ தியரி' (domino theory) மற்றும் வியட்நாம் பற்றி நான் இன்னும் ஞாபகத்தில் வைத்துள்ளேன். இதுவும் அதே போலத்தான்.

''ஈராக்கிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருக்கின்றது என்பதில் உறுதியாக இருக்கிறேன். சதாம் ஹூசேன் ஒரு மோசமான சர்வாதிகாரி. மேலும் அவர் செய்வதாக நினைப்பவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் நான் இந்தப் பிரச்சனை அமைதியான முறையில் சட்ட வழிமுறையில் நடைப்பெற்றிடவே விரும்புகிறேன். ஏனென்றால் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில்லாமல் போர்க் குற்றங்களில் அவுஸ்திரேலியா பங்கெடுப்பதை நான் விரும்பவில்லை.

ஐ.நா.சபை போருக்கு அழைப்பு விடுத்தால் அது என்னுடைய எண்ணப் போக்கினைப் பாதிக்கக்கூடும். ஆனாலும் எனக்கு அதற்கான சரியான விளக்கம் தேவையாக உள்ளது. புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை ஆதரிக்கும் மக்கள் மிகப்பெரும் அளவில் இல்லை. ஹாவார்ட் எதற்காக அவர்களை ஆதரிக்கிறார் என்று எனக்குத் தெரியும். அதற்காக எனக்கு சரியான விளக்கமளித்தால் நன்றாக இருக்கும். நான் காணக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அவருடைய முட்டாள்தனமான செயல்களால் ஆட்டிவைக்கப்படுகிறார். மேலும் என்னால் அதைப்புரிந்து கொள்ள முடியவில்லை.''

சிட்னி கண்டனப் பேரணியில் பங்கேற்ற எண்ணற்ற WSWS வாசகர்களில் ராஜர் சிங் என்ற கணினி நிபுணரும் ஒருவர். ''போருக்கு எதிரான என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கவே நான் இன்று வந்திருக்கிறேன். இருப்பினும் இதற்கும் மேலான காரணம் ஒன்றிருக்கிறது. இப்போது நடைமுறையிலுள்ள அமைப்பினை எதிர்த்தும் என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கவும் வந்திருக்கிறேன். இப்போருக்கான அடிப்படை நோக்கம் 'பேரழிவு ஆயுதங்கள்' பற்றியதே என்று கூறலாம். ஆனால், உண்மையான காரணங்கள் என்னவென்றால் முக்கிய பலம் பொருந்திய நாடுகள் உலகிலுள்ள பொருளாதார வளத்திற்கும், லாபத்திற்கும் போட்டியிட்டு தங்களது கைகளில் கட்டுப்பாட்டினை வைத்துக்கொள்ள விரும்புகின்றன. எண்ணெய் இப்போரில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது மட்டுமல்ல போர்த்திறன் நடவடிக்கை சார்ந்த நிலைமையும் தான். மத்திய ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கொரிய தீபகற்பம் ஆகியவற்றில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திட நினைக்கிறது. நாம் அனைவரும் மிகப்பெரிதான உலகலாவிய முரண்பாட்டினை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறோம்.

''இந்நிலையை மாற்றிட ஒரு முன்னோக்கு அனைவருக்கும் தேவைப்படுகிறது. கண்டனக் கூட்டங்கள் இதற்கு போதுமானதல்ல. இந்த இயக்கம், மக்கள் அனைவரும் நடப்பது என்ன என்று புரிந்து கொள்ளும் வகையிலும், அமெரிக்கா மற்றும் உலக அரசியலில் நிலவிடும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் வகையிலும் வழிமுறைகளைக் கொண்டிருக்கவேண்டும். பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் போரினை எதிர்ப்பது போலத் தெரிந்தாலும் அவர்களுக்குள்ளும் செயல் திட்டங்கள் மறைந்தே உள்ளன. அவர்களுக்குரிய பங்கினைப் பெறாததால் அவர்கள் போரினை எதிர்க்கிறார்கள். ரஷியர்கள் அவர்களுக்கு உரியவற்றைப் பெறவில்லை. அவர்கள் வெளியே வருவதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் அமெரிக்காவினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களும் அதே நோக்கத்தைக் கொண்டுள்ளனர். அதுதான் ஆதிக்கம்.

''இந்த இயக்கம் முதலாளித்துவத்தின் பிரதிநிதித்துவம் அனைத்தையும் எதிர்க்க வேண்டும். புஷ்ஷிற்கு எதிரான எதிர்ப்பு மட்டும் போதாது. வர்க்க சக்திகளின் நலன்களையே இப்போது புஷ் பிரதிபலிக்கின்றார். நாம் இப்போது பார்ப்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் நிர்வான முகத்தை மட்டுமே தவிர வேறு எதுவுமில்லை.

''அதிகாரம் ஒரு சில உயர்தட்டினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சோசலிஸ்டுக்கள் இத்தகைய உயர் தட்டினரை தூக்கிவீசி அதிகாரத்திற்கு வர வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் கைகளிலேயே இது தங்கியுள்ளது. தொழிலாள வர்க்கம் தேசியம், இனம் மற்றும் மொழி சார்ந்த வேறுபாடுகளிலிருந்து விலகி உலகமெங்கும் ஒரு கூட்டுறவினை உருவாக்கவேண்டும். சோசலிசம் தனிமைப்பட்ட ஒன்றில் கட்டப்படக்கூடியதல்ல. சோவியத் யூனியனில் நடந்தவற்றிலிருந்து நாம் இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்.'' என்றார்

அடிலயிட்

பிப்ரவரி 16 ஆம் தேதி தென் அவுஸ்திரேலியாவின் தலைநகரான அடிலயிட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ற wsws ன் இரண்டு ஆதரவாளர்களிடமிருந்து கீழ் கண்ட கருத்துரைகளைப் பெற்றோம்.

''நாங்கள் wsws வலைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட SEP பிரசுரங்களை விநியோகித்து பல கருத்துரையாடங்களில் கலந்து கொண்டோம். பேரணியில் பங்கேற்ற பலரும் இத்தகைய ஆர்பாட்டங்கள் மற்றும் முறையீட்டின் உண்மையான பலத்தினை உணரவில்லையென்றாலும், இந்தப்போர் உலகை ஆதிக்கம் செலுத்த விரும்பும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தினர் மற்றும் அவர்களுடன் இணைந்துள்ளவர்களின் செயல்பாடாக இருக்கின்றதே தவிர, பேரழிவு ஆயுதங்கள் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது'' என்பதையும் அறிந்தேயிருந்தனர்.

''ஈராக்கிற்கு எதிராகப் போரில்லை என்ற கொடியின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்திருப்பது மனதிற்கு நம்பிக்கையூட்டுகிறது. நாங்கள் அடுத்த பேரணியிலும் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளோம். அத்தகைய உயர்ந்த சாதனங்களை எமக்கு அளித்ததற்கு உங்களுக்கு நன்றி'' என்றும் கூறினர்.

நியூகாசில்

லியோ உயர்நிலைப் பள்ளி மாணவர் கூறுகையில் : ''வருவதாக அச்சுறுத்துகிற ஈராக் மீதான போர் பற்றி எனக்கு உடன்பாடில்லை. ஆனால் போருக்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருக்கின்ற காரணத்தால் புஷ் போருக்குச் செல்கிறார் என்பதை நான் நம்பவில்லை. அமெரிக்கா, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புகின்றது என்று நான் நம்புகிறேன். தொழிற்கட்சியின் நிலைப்பாடுபற்றி எனக்கு விரிவாகத் தெரியவில்லை என்றாலும் எந்தவொரு சூழ்நிலையிலும் போருக்கு நான் எதிராகவே செயல்படுவேன். ஐக்கிய நாடுகள் சபை போரை ஆதரித்தால் எனக்கு ஏமாற்றத்தையே தரும். மேலும் அது போரை சரியென்று ஆக்கிவிடாது. எந்த ஒருவருக்கும் ஈராக் மீது போர் தொடுக்கும் அதிகாரம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்'' என்றார்.

பெர்த்

தொடக்கப்பள்ளி ஆசிரியரான அலன் பிரவுன் என்பவர் இச்செயல் நோக்கங்கள் பற்றி ஒத்துக்கொள்வதற்கு எனக்கு அதிக நேரமானது என்று கூறினாலும் இக்கண்டனப் பேரணிக்கு வந்ததன் காரணம் அவர் ''பாசாங்கு மற்றும் பொய்க்கூற்று மேல் கொண்ட கோபமே என்றும், இந்தப் போர் நடவடிக்கைகள் ஒரு அவல நிகழ்ச்சி'' என்றும் கூறினார். மேலும், ''எனக்கு மொழியியல் துறையில் ஆர்வமுண்டு. மேலும் மொழி அமைதிக்கான போர் போன்ற தொடர்களால் சின்னாபின்னாப் படுத்தப்படுகிறது. ஆழ்ந்த கேள்விகளைத் கேட்கும் ஏழு வயது மகன் எனக்கு இருக்கிறான். எதிர்காலம் என்னை அச்சமூட்டுகின்றது'' என்றார்.

மெயிட் என்பவர் கூறுகையில் : ''என்றுமே போர் ஒரு தீர்வு அல்ல. எப்போதும் அது தொடரும் பிரச்சனைகளையே உருவாக்குகின்றது. அமெரிக்கா எந்தவொரு பயங்கரவாதிகளைவிடவும் ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையில் இல்லை. தாங்கள் என்றுமே தோற்கடிக்க முடியாதவர்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் தங்களது அகந்தையை வெளிப்படுத்துகின்றனர். பூமி மற்றும் அதில் வாழும் மக்களின் இழப்புக்கள்பற்றி புஷ் மனதைச் செலுத்தவில்லை. ஒரு முறையாவது நாம் அமைதிக்கு வாய்பினைத் தரவேண்டும்'' என்றார்.

இந்த கண்டனப் பேரணியில் தன்னுடைய மகள் மற்றும் பேத்தியுடன் கலந்து கொண்ட மேரி என்பவர் ''புஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்திலிருந்து அவர்களது திட்டத்தில் இந்தப் போர் இருக்கின்றது. மேலும் அதை நியாயப்படுத்திட அவர்கள் காரணங்களை உருவாக்கி கொண்டிருக்கிறனர்'' என்று கூறினார். தான் பிறப்பால் பிரிட்டனிலிருந்து வந்தவர் என்றாலும் மேரி பிரிட்டன் தொழிற்கட்சியின் செயல்களால் வெறுப்படைந்திருப்பதாகக் கூறினார். ''டோனி பிளேயர் பிரிட்டன் தொழிலாள வர்க்கத்தினரின் பிரதிநிதியாக இல்லை. இது பயங்கர காட்டிக் கொடுப்பாகும்'' என்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved