World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands protest in Sri Lanka against Iraq war

இலங்கையில் ஈராக் யுத்தத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

By our correspondents
14 April 2003

Back to screen version

இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம் ஏனைய குழுக்களுடன் சேர்ந்து கொழும்பிலும் நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் ஏப்பிரல் 11ம் திகதி போர் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை ஒழுங்கு செய்திருந்தது.

கொழும்பு நகரின் மத்திய பகுதிக்கு அருகில் உள்ள மருதானை மசூதியின் முன்பாக ஒரு மனிதச் சங்கலியை அமைப்பது உட்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக மாணவர்களும் இளைஞர்களுமாக 3000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். மாலை வரை நீடித்த ஒரு கூட்டமானது மருதானை சாகிரா கல்லூரியில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியிருந்ததோடு, "ஈராக் போரின் மத்தியில் ஆனால் அராபியர்கள் ஆழ்ந்த நித்திரையில்," "புஷ்சும் பிளேயரும் ஈராக்கிய குருதியில் நீச்சலடிக்கின்றனர்," "இன்று ஈராக், நாளை வட கொரியா, ஈரான் அல்லது சிரியா" போன்ற போர் எதிர்ப்பு சுலோகங்களையும் கோஷித்தனர்.

இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்க உறுப்பினர் பாகீர், தனது அமைப்பு "ஈராக் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து" என்ற சுலோகத்துடனான 2000 ஸ்டிக்கர்களை விற்பனை செய்ததாகவும் பிரச்சாரத்தை தொடரப் போவதாகவும் கூறினார். "இது ஒரு சட்டவிரோத யுத்தமாகும். ஒரு சுதந்திர நாட்டை ஆக்கிரமிக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் கிடையாது" என அவர் குறிப்பிட்டார். இதன் அமைப்பாளர்கள் அமெரிக்கப் பண்டங்களை பகிஷ்கரிக்குமாறு கோரினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி, சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றின.

கூட்டத்தில் பேசிய பலர் இந்தப் போர் ஒரு மதம் சம்பந்தப்பட்ட முரண்பாடு என வர்ணிக்க முயற்சித்தனர். வேறு பல சர்வாதிகாரிகளும் இருக்கும்போது, புஷ்சும் பிளேயரும் சதாம் ஹூசேனை வெளியேற்ற முயற்சிப்பது ஏன்? என ஸ்ரீ.ல.சு.க. தலைவர் பவுஸி தர்க்கரீதியில் வினவினார். ஏனெனில் ஹூசேன் ஒரு முஸ்லீம் என்பதனாலாகும் எனக் கூறிய அவர் ஐ.நா. இந்தப் போரை நிறுத்தத் தவறியதையிட்டு கவலையை வெளிப்படுத்தினார்.

வெற்று வாய் வீச்சில் இறங்கிய ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி "புஷ், பிளேயர், நீங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள். உங்ளது புது தொழில்நுட்ப ஆயுதங்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. நீங்கள் இன்று உலகெங்கும் ஆயிரக்கணக்கான ஈராக்கை உருவாக்கிவிட்டீர்கள்! நீங்கள் இலங்கை, போர்த்துக்கல் மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான சதாம் ஹூசேன்களை உருவாக்கி விட்டுள்ளீர்கள்" எனப் பிரகடனம் செய்தார்.

ஆனால் ஹந்துநெத்தியோ அல்லது வேறு பேச்சாளர்களோ போரின் பின்னாலுள்ள அரசியல் பொருளாதார காரணங்களை தெளிவுபடுத்தவோ அல்லது தொழிலாள வர்க்கத்துக்கு பொருத்தமான மூலோபாயத்தை முன்வைக்கவோ முயலவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) "ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்துலக இயக்கத்தை கட்டி எழுப்பு" என்ற தலைப்பிலான உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு அறிக்கையின் பிரதிகளை விநியோகித்தது. அதில் யுத்தத்தைத் தூண்டும் இலாப அமைப்பை தூக்கியெறிவதற்கான சோசலிச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் தேவை வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்களில் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடிய சிலர் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு தமது எதிர்ப்பையும், அமெரிக்க பிரித்தானிய இராணுவங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளையிட்டு தமது விசனத்தையும் வெளிப்படுத்தினர்.

ஒய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தரான சித்திக், உலக சோசலிச வலைத் தளத்திடம் குறிப்பிட்டதாவது: "உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை உங்களுக்கு இருக்க வேண்டும். அதனை ஏற்பதற்கும் மறுப்பதற்குமான உரிமை எனக்குள்ளது. மக்களின் இந்த ஜனநாயக உரிமையை புஷ் நிர்வாகம் மீறுகின்றது. இப்போது இந்த யுத்தத்தை இவ்வாறான ஆர்ப்பாட்டங்களால் மட்டும் நிறுத்தி விட முடியுமா என்ற பிரச்சினைக்கு நாம் முகம்கொடுக்கின்றோம்."

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் 8,000 மற்றும் 5,000 பேர் கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற அதேவேளை கல்முனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 7,000 பேர் வரை பங்குபற்றியிருந்தனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved