World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Law students forum reviews Australia's "shrinking democracy"

அவுஸ்திரேலியாவின் ''சுருங்கிவரும் ஜனநாயகம்'' பற்றி சட்ட மாணவர்கள் மன்றம் ஆராய்கின்றது

By James Conachy
9 October 2003

Back to screen version

''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்ற பெயரால் ஜனநாயகத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை எதிர்க்கின்ற மூன்று பேர்கள் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 4 ந் தேதி நடைபெற்ற சட்ட மாணவர்கள் அரங்கின் தொடக்க கூட்டத்தில் உரையாற்றினர்.

''சுருங்கிவரும் ஜனநாயகம் மற்றும் அரசாங்க நிர்வாகக் குழுவில் பெருகிவரும் அதிகாரம்'' என்ற தலைப்பில் உரைக்கோவை நடைபெற்றது. முதலாவதாக அங்கு, சிட்னியிலுள்ள மேற்கத்திய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் மூத்த விரிவுரையாளரும், உலக சோசலிச வலைத்தள தொடர்பாளருமான மைக்கேல் ஹிட் உரையாற்றினார். இரண்டாவதாக, அவுஸ்திரேலிய இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றி மார்ச் 11 அன்று தனது பதவியிலிருந்து விலகிய ஆன்ட்ரூ வில்கி என்பவர் உரையாற்றினார். அவர் ஈராக்கிடம் ''மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள்'' இல்லை என்பதை அவுஸ்திரேலிய, பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தெளிவாக அறிந்திருந்தும், அந்நாட்டிற்கு போருக்கு சென்றதை பகிரங்கமாக அம்பலப்படுத்துவதற்காக ஆன்ட்ரூ வில்க்கி அரசாங்க பதவியிலிருந்து விலகினார். இறுதியாக ஸ்டீபன் ஹூபர் என்பவர் உரையாற்றினார். இவர், புஷ் நிர்வாகத்தால் சட்டவிரோதமாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவோடும் குவாண்டநாமோ வளைகுடா சிறைமுகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குடிமகனான மம்தோ ஹபீபிற்காக வாதாடுகின்றவர் ஆவர்.

150 மாணவர்கள் மற்றும் இதர மக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் ஹெட், வில்கி மற்றும் ஹூபர் ஆகியோர் சிவில் உரிமைகள் மீது அவற்றை பறிப்பதற்காக அண்மை ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிலும், சர்வதேச அளவிலும் எடுக்கப்பட்டு வரும் பரவலான நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தனர். ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்காக ஒரு அரசியல் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று ஒவ்வொருவரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த உரைக்கோவைக்கு முற்போக்கு சட்ட மாணவர்கள் நெட்வொர்க் ஏற்பாடு செய்திருந்தது. (Progressive Law Students Network) அந்த உரைக்கோவையில் விநியோகிக்கப்பட்ட குறிப்புகளில் இன்றைய சட்டக்கல்வியின் பயனற்றத் தன்மை விரிவாக்கப்பட்டிருந்தது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பல சட்ட மாணவர்கள் சமூக மாற்றத்திற்கான அடிப்படையை உருவாக்கும் வகையில் தொழில்முறை சட்டக்கல்வி அமையவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருப்பதை, உரைக்கோவையில் சுற்றுக்கு விடப்பட்ட அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் UTS ல் இந்த குழு அமைக்கப்பட்டது. தற்போது நியூசெளத்வேல்ஸ், சிட்னி, மக்காரி பல்கலைக்கழகம் மற்றும் மேற்கத்திய சிட்னி பல்கலைக்கழகங்களைச் சார்ந்தவர்களும் இந்த அரங்கில் இடம் பெற்றுள்ளனர்.

மைக்கேல் ஹெட் (Michael Head)

மைக்கேல் ஹெட் ''சட்ட விரோதமாக குடியேறியவர்கள்'' என்று அழைக்கப்படுபவர்களுக்கு அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளின் விளைவுகள், தன்மைகள் ஆகியவற்றின் பூர்வீகத்தை ஆராய்ந்ததுடன், தம்பா விவகாரம் என்று அழைக்கப்படும் விவகாரம் பற்றியும் அவர் குறிப்பாக சுட்டிக்காட்டினார். 2001 ஆகஸ்ட் மாதம் அப்போது நடைமுறையில் இருந்த அவுஸ்திரேலிய சட்டத்திற்கு புறம்பாக ஹோவார்ட் அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தி தம்பா என்கின்ற நோர்வே நாட்டு சரக்கு கப்பலில் வந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் கப்பல் கவிழ்ந்ததால் அவர்களை அவுஸ்திரேலிய கரையில் இறங்கவிடாது தடுத்தது.

இந்த தம்பா விவகாரத்தை ஹெட் மிக விரிவான அடிப்படையில் ஆய்வு செய்தார். 2000 ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய அரசாங்கம் ''மூன்று பிரதான சட்டங்களில் வரலாறு காணாத மாற்றங்களை'' செய்திருக்கிறது. உள்நாட்டு கிளர்ச்சிக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்த வகை செய்யும் சட்டத்தை இயற்றியிருக்கிறது. அவுஸ்திரேலிய எல்லைக்குள் அகதிகள் நுழைந்துவிடாது தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது மற்றும் 2003 ஜூன் மாதம் விசாரணையில்லாமல் பொதுமக்களை சிறையில் அடைக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது. அத்துடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பிற்கு (ASIO) அத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் குவான்டநாமோ வளைகுடா சிறையில் அவுஸ்திரேலிய குடிமக்களை ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு முரணாக சிறையில் அடைக்கப்படுவதற்கு உடைந்தையாக செயல்பட்டுடிருக்கின்றது. மற்றும் ஈராக்கிற்கு எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு போரில் தீவிரமாக பங்கு எடுத்துக் கொண்டிருக்கின்றது என்று ஹெட் குறிப்பிட்டார்.

ஹெட் தனது உரையில் ''இந்த நடவடிக்கைகள் சாதாரண உழைக்கும் மக்களை பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து காப்பாறுவதற்காக எடுக்கப்பட்டவை அல்ல. பயங்கரவாதம் தொடர்பாக நிலவுகின்ற பொதுமக்களது அச்ச உணர்வுகள், அவை உண்மையாகவும் இருக்கலாம் அல்லது கற்பனையாகவும் இருக்கலாம். இவற்றை பயன்படுத்தி பொதுமக்களது எண்ணத்தில் விஷம் தூவி, அவர்களது கவனத்தை திசை தடுமாறச் செய்வதற்காக பொதுமக்களிடையே வளர்ந்து வருகின்ற அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்திகளிலிருந்து அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார கட்டுக் கோப்புகளை காப்பாற்றுவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. தெற்கு பசுபிக் பகுதியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள இராணுவவாதம் மற்றும் மிரட்டல்களுக்கு அமெரிக்கா ஆதரவு தரவேண்டும் என்ற அடிப்படையில்தான் ஹோவார்ட் அரசாங்கம் ஈராக் மீதான ஆக்கிரமிப்பை ஆதரித்தது. ஈராக் போர் முடிந்தவுடன் அவுஸ்திரேலிய துருப்புக்கள் சொலமன் தீவுகளை நோக்கி வந்து கொண்டு இருந்தன'' என்று குறிப்பிட்டார்.

ஹோவார்ட் அரசாங்கம் தனது செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இயன்றது எதனால் என்றால், எதிர்கட்சியான தொழிற்கட்சி மேற்கொண்ட இரட்டை வேடத்தால் தான் ஜனநாயகத்திற்கு விரோதமான மூன்று சட்டங்களுக்கும் ஆதரவாக தொழிற்கட்சி வாக்களித்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஈராக் போர் தொடர்பாக கூறப்பட்ட பொய்களை நடுநிலையோடு நியாயமாக விசாரணை நடத்துவதை தவிர்ப்பதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து எதிர்கட்சியும் ஒத்துழைத்தது.

இத்தகைய இரட்டை வேடம் வியப்பளிப்பதல்ல. ஏனென்றால் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பிரதமர் பால் கீட்டிங் தலைமையில் தான் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை ''கட்டாயமாக காவலில் வைக்கும்'' கொடுமையான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் அதன் மூலம் இன்றைய தினம் அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பல்வேறு சட்ட மற்றும் அரசியல் அடிப்படைகளை உருவாக்கியது என்பது, தொழிற்கட்சி அரசாங்கம் தான் என்பதை ஹெட் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக ஜனநாயகத்திற்கு புறம்பான நடைமுறைகள், சம்பிரதாயங்கள் உருவாக்கப்படுவதற்கான அடிப்படைகளை ஹெட் விவரித்தார். 2001 நவம்பரில் அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றம் தம்பா அகதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட habeas corpus மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது. அவுஸ்திரேலிய கூட்டாட்சியின் கீழ் கோர்ட் கொடுத்த தீர்ப்பிற்கு எதிராக இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது சொந்த குடியேற்ற சட்டத்தையே மீறுகின்ற வகையில் நடவடிக்கை எடுத்ததை பெடரல் நீதிமன்ற பெரும்பான்மை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அரசாங்க நிர்வாகப் பிரிவு தேசிய இறையாண்மையை காத்து நிற்பதற்கு அதிகாரம் படைத்திருக்கிறது என்று பெரும்பாலான நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதால் கீழ் கோர்ட்டில் தீர்ப்பு மாற்றப்படாத நிலையில் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு விரோதமாக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை கிடைத்திருக்கின்றது.

ஹெட் தனது உரையை முடிக்கும்போது உள்நாட்டு உரிமைகளுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் இடைவிடாது போராடுகின்ற வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை சட்ட கட்டுக்கோப்புக்குள் நின்று மட்டுமே ஆராய முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார். பாரம்பரிய ஜனநாயக முறைகள் காலவதியாகிக்கொண்டு வருகின்றன. அவற்றை புறக்கணித்து வருகிறார்கள். எனவே அதற்கு மாற்றாக பொதுமக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். அந்த இயக்கம் நியாயமான ஜனநாயக நடைமுறைகளை சர்வதேச அளவிலும், சோசலிச வழிமுறைகளிலும் உருவாக்கப்படவேண்டும் என்பதை ஹெட் வலியுறுத்தினார்.

ஆன்ட்ரூ வில்க்கி (Andrew Wilkie)

2003 மார்ச் 11 அன்று அரசாங்க தேசிய மதிப்பீட்டு அலுவலகத்திலிருந்து (ONA) தான் ராஜிநாமா செய்வதற்கு அடிப்படையான காரணங்கள் குறித்தும், அதற்கு பின்னர் நடைபெற்ற தற்காப்பு சம்பவங்களையும் அவர் விவரித்தார். ஈராக்கிற்கு எதிராக போர் தொடங்கப்படுகின்ற சூழ்நிலையில், அந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் தான் ராஜிநாமா செய்ததாக அவர் குறிப்பிட்டார். அவுஸ்திரேலியாவிலும் அதற்குப் பின்னர் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் விசாரணைகள் தொடங்குவதற்கு முன்னர் தான் வெளியிட்டிருந்த அறிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி உரையாற்றினார். ஈராக்கில் ''மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள்'' (WMDS) இருப்பதாக கூறப்பட்டதானது அப்பட்டமான பொய் என்றும், அல்லது ஆதாரமில்லாதது அல்லது மிகைப்படுத்தப்பட்டது என்றும், இதுபற்றி பிரிட்டன், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு தெளிவாக தெரிந்திருந்தும் பயங்கரவாதத்திற்கும் ஈராக்கிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிந்த பின்னரும் ஈராக் மீது படையெடுத்துச் சென்றார்கள் என்று அவர் மீண்டும் வலியுறுத்தி கூறினார்.

அரசாங்கம் தனது எதிரிகளை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு நானே முன் உதாரணமாகயிருக்கிறேன் என்று சொல்லி பில்கி விளக்கம் கொடுத்தார். நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும் தன்னை மூளைக்கோளாறு உள்ள மனிதனாக அவதூறு செய்தார்கள் என்று குறிப்பிட்டார். ஜூன் மாதம் Herald Sun பத்திரிகையாளரான ஹான்ட்ரூ போல்ட் ஒரு தகவலை எழுதியிருந்தார். ONA அறிக்கையின் தலைமை ரகசிய குறிப்பு ஒன்றைத் தான் படித்ததாகவும் அதில் ஈராக்கிடம் மக்களைக் கொன்று குவிக்கும் ஆயதங்கள் இருப்பதாக செய்யப்பட்ட மதிப்பீட்டை வில்கி ஒப்புக்கொண்ட விபரம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். போல்டிற்கு ONA அறிக்கை கிடைத்திருக்கக்கூடும், ஆனால் அந்த அறிக்கையை வில்கியை இழிவுபடுத்துவதற்காக அவர் பயன்படுத்தியிருக்கிறார். அந்த அறிக்கை பற்றிய ரகசியங்களை அரசாங்கத்தின் உயர் அதிகார வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரிகளோ, அரசியல் தலைவரோ வெளியிட்டிருப்பாரானால் அதன் மூலம் நிருபர் போல்டிற்கு தகவல் கிடைத்திருக்குமானால் அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள குற்றங்கள் தொடர்பான சட்டத்தை நேரடியாக மீறுகின்ற செயலாக அது அமையும்.

இப்படி தன்னை அவதூறு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அமெரிக்காவில் CIA வின் ரகசிய உளவாளியான முன்னாள் தூதரின் மனைவி மீது கூறப்பட்ட அவதூறுகளோடு ஒப்புநோக்கி உரையாற்றினார். நைஜர் நாட்டிலிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கு ஈராக் முயன்றதாக வெள்ளை மாளிகை கூறிய பொய்யை அந்த CIA ரகசிய உளவாளி அம்பலப்படுத்தினார். பிரிட்டனின் ஆயுதங்கள் தொடர்பான நிபுணர் டேவிட் கெல்லி மரணம் குறித்தும் சந்தேகங்களை தனது உரையில் எழுப்பினார். டாக்டர் கெல்லியை அவதூறு செய்வதற்கு பிளேயர் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியையும் அவர் எடுத்துக்காட்டினார்.

''எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால் அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் அரசாங்கங்கள் தார்மீக நெறிகளுக்கு புறம்பாக கிரிமினல் குற்ற நோக்கோடு செயல்பட்டு தங்களது எதிரிகளை வாயடைத்து நிற்க முயன்று வருகின்றன'' என்று வில்கி தனது உரையில் குறிப்பிட்டார்.

வில்கி தனது அறிக்கையின் தலைப்பாக குறிப்பிட்டிருப்பது ''அரசியல்மயமாக்கப்பட்ட பொது சேவை'' என்பதாகும். பொது சேவையின் மீது தமக்கு "மிகப்பெரிய மரியாதை" உண்டு என்றும் குறிப்பாக தனது முன்னாள் ONA சகாக்கள் மீது பெரும் மரியாதை கொண்டிருப்பதாகவும் வில்கி விளக்கினார். இப்போது அரசாங்கம் தவறான முடிவுகளை எடுக்கும்போது மற்றும் தவறான கொள்கைகளை உருவாக்கும்போது அல்லது அரசாங்கம் தலையிட்டு சில உண்மைகளை திரித்து வெளியிடும்போது, இப்போது உள்ள பொது சேவை அதிகாரிகள் மெத்தனபோக்கில் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்ற நிலை ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். உண்மைகளை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகளுக்கு பயந்துதான் இவ்வாறு அதிகாரிகள் மெத்தனப்போக்கில் நடந்துகொள்கிறார்கள் என்றும் குறிப்பிட்ட அவர் இப்போது பணியாற்றுகின்ற அரசாங்க ஊழியர்களிடையே பெருமளவிற்கு துயர உணர்வு அதிகாரமற்ற நிலை சம்பவங்களின் போக்கை நிர்ணயிக்கின்ற வல்லமையில்லாத போக்கு பற்றி பெரும் கவலை அதிகாரிகள் மட்டத்தில் நிலவுவதாகவும் வில்கி தனது உரையில் குறிப்பிட்டார்.

வழக்கமாக பொதுமக்களை திசை திருப்புவதில் தவறு எதுவும் இல்லை என்று கருதுகின்ற அரசியல் தலைவர்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வில்கி வேண்டுகோள் விடுத்தார். ''அவுஸ்திரேலிய ஜனநாயகத்தில் தற்போது உண்மையான நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. நமக்கு இன்றைய தினம் அதிகம் தேவைப்படுவது என்னவென்றால் நமது நாட்டிற்கு அதன் அதிகார மயங்களில் தார்மீக நெறி கொண்ட ஆண்களும், பெண்களும் அதிகாரத்தில் அமரவேண்டும். அத்தகைய மக்களைத் தான் நாம் நம்ப முடியும். அத்தகைய மக்கள் தான் உண்மையான சமூக நீதி உணர்வுள்ளவர்களாக இருப்பார்கள்'' என்று கூறி வில்கி தனது உரையை நிறைவு செய்தார்.

ஸ்டீபன் ஹூபர் (Stephen Hopper)

வக்கீல் ஸ்டீபன் ஹூபர் தமது உரையின் தொடக்கத்திலேயே அவுஸ்திரேலிய குடிமகனான மம்தோ ஹபீப் எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லாமல் ஏறத்தாழ 2 ஆண்டுகள் 2001 அக்டோபர் 5 ந் தேதியிலிருந்து காவலில் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். பாகிஸ்தானில் அவரை எந்த விதமான குற்றச்சாட்டும் கோராமல் கைது செய்தார்கள். அதற்கு பின்னர் சட்ட விரோதமாக எகிப்தில் அவரை 5 மாதங்கள் காவலில் வைத்து சித்திரவதை செய்தார்கள். அதற்குப்பின்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறை ஒன்றிற்கு அவரை மாற்றி, இறுதியாக அவர் குவாண்டநாமோ வளைகுடா சிறை முகாமிற்கு மாற்றப்பட்டார்.

அவுஸ்திரேலிய குடிமகனான அவரை ஒரு பயங்கரவாதி என்று சித்தரித்துக் காட்டுவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமும், ஊடகங்களும் திட்டமிட்டு அவரது கைது பற்றிய உண்மைகளை திரித்து வெளியிட்டன. அரசாங்கம் தந்த தகவலின்படி ஆப்கானிஸ்தானில் இருந்த ஹபீப் பாகிஸ்தானுக்குள் வருவதற்கு முயன்றபோது கைது செய்யப்பட்டார். ஆனால் உண்மை என்னவென்றால் அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் திரும்புவதற்காக பாகிஸ்தான் விமான நிலையத்திற்கு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த அவரை பாகிஸ்தான் எல்லைக்குள் 700 கீ.மீட்டருக்குள் பாகிஸ்தானுக்குள்ளேயே கைது செய்திருக்கிறார்கள்.

ஹூப்பர் ஹபீப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முயன்றபோது அவுஸ்திரேலியா அரசாங்கம் அவருக்கு முட்டுக்கட்டை போட்டது. வக்கீல் ஹூப்பர் கேட்கின்ற தகவல்களை தந்தால் அது தேசிய பாதுகாப்பிற்கு அல்லது வெளிநாட்டு உறவிற்கு பாதகமாக அமைந்துவிடும் என்று அரசாங்க தரப்பில் அவருக்கு பதில் தரப்பட்டிருக்கின்றது. அவரது கட்சிக்காரரான ஹபீப் சட்டம் என்கின்ற இருட்டறைக்குள் சிக்கித் தவிக்கிறார். அமெரிக்க நீதிமன்றங்கள் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குவாண்டநாமோ சிறை முகாம் தங்களது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட வெளிநாட்டில் இருப்பதாக தீர்ப்பளித்து அவரது வழக்கில் தலையிட மறுத்துவிட்டது. தற்போது அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹூப்பர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஹூப்பர் தனது உரையில் பல இடங்களில் 1930 களில் ஜேர்மனியின் நாஜி ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட்டுகளையும், மற்றவர்களையும் பூதாகரமாக சித்தரித்ததுபோன்று 2001 செப்டம்பர் 11-க்கு பின்னர் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தை பயங்கரவாதத்தின் ஊற்று என்று சித்தரிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக விளக்கினார். ''இந்த இரண்டு நேர்வுகளிலுமே அரசாங்கங்கள் மக்களை காப்பது என்ற பேரில் அதிக அதிகாரங்களை கோரின. திடீரென்று உங்களது உரிமைகள் மறைந்து விடுகின்றன. உங்களது முழுப் பண்பாடும் மாறிவிடுகின்றது. சிப்பாய்கள் உங்களது வீடுகளுக்கு அணிவகுத்து வருகிறார்கள். அவர்களது பூட்ஸ் கால்களால் உங்களது கதவுகளை உடைக்கிறார்கள். நீங்கள் அரசியலில் எதிர்கட்சியாக செயல்படுகிறீர்கள் என்பதற்காக உங்களை பிடித்துக்கொண்டு சென்று விடுகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

''இப்படிப்பட்ட நிலையை எதிர்த்து இதுபோன்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு நிற்பது நமது கடமையாகும். முழு வரலாற்றிலிருந்து நாம் உதாரணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி மக்கள் அணி திரண்டு தலை நிமிர்ந்து தங்களது குரலை ஓங்கி ஒலிக்காவிட்டால் இனி மக்கள் வாய் திறந்து பேச முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுவர்'' என்று வக்கீல் ஹூபர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த மூவரும் உரையாற்றிய பின்னர் மேலும் 40 நிமிடங்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. அங்கு பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மூவரும் தங்களது கருத்துக்களை மிக விரிவாக எடுத்துரைத்தனர். இந்த மாநாடு அக்டோபர் 5-6 ஆகிய இரண்டு நாட்கள் நீடித்தது. பல்வேறு அரசியல் மற்றும் சட்டப் பிரச்சனைகள் குறித்து பூர்வாங்க கூட்டங்களும், பணி பட்டறைகளும் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று மாநாடு நடத்த முடியும் என்று முற்போக்கு சட்ட மாணவர் நெட்ஒர்க் நம்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved